மதியழகன் கவிதைகள்!
                                        
                                        
                                        நல்லதோர் வீணை செய்தே...
                                        
                                        - ப.மதியழகன் (திருவாரூர்)
                                        
                                         கவிதைகளால் 
                                        கட்டிய கல்லறை
கவிதைகளால் 
                                        கட்டிய கல்லறை
                                        கல்லறைச் சமீபமாய்
                                        ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும்
                                        அவன் குரல்
                                        வீட்டில் அவனுடைய சிறு அறையில்
                                        எண்ணற்ற வெள்ளைக் காகிதங்கள்
                                        அவன் கவிதைகளை எழுதியவுடன்
                                        கனக்கக் கண்டிருக்கிறேன்
                                        கல்லூரிக் காலங்களில்
                                        அடைந்துவிட்ட சுதந்திரத்தைப் பற்றி
                                        ஆர்ப்பரிக்கப் பேசுவான்
                                        பாரதி கண்ட சுதந்திரம்
                                        இதுவல்லவென்று
                                        காதலியிடம் ஸ்நேகமிருந்தால்
                                        சிறுநகத் தீண்டல் கூட
                                        பேரின்பம் என்பான்
                                        முக்தி பெற்று
                                        கோவில்களில் சிலைகளாயிருக்கும்
                                        தெய்வத்தில் ஒன்று
                                        என்முன் வந்து வாழ்கிறது
                                        அதுவே என் அம்மா என்பான்
                                        விடியலிலிருந்து
                                        தபால் நிலைய வரிசையில் நின்று
                                        விண்ணபபம் வாங்கி வருவான்
                                        வேலைதேடும் நண்பனுக்காக
                                        காதல் யுத்தத்தில்
                                        அபிமன்யூவாக நான்
                                        கெளரவராக நீ - என்ற
                                        அவன் கவிதை மெய்யாகிப் போனது
                                        பத்ம வியூகத்தில் சிக்கி
                                        உயிரிழந்தான்
                                        இன்னும் அவனுடைய இதயம்
                                        கல்லறையில் உறங்காமல்
                                        துடித்துக் கொண்டேயிருக்கிறது
                                        காதலித்த நாட்களில்
                                        அவன் எழுதிய காதல் வேதங்கள்
                                        இன்று கடற்கரை மணலில்
                                        சுண்டலைச் சுமந்து கொண்டிருக்கிறது.
                                        
                                        புயலுக்கு பிந்தைய இரவு
                                        
                                        பெண் பெயரை வைத்ததாலோ
                                        என்னவோ
                                        இவ்வுளவு காலமாய்
                                        தன் உள்ளத்துக்குள்ளே வைத்துக்
                                        குமுறிக்கொண்டிருந்த
                                        அடக்குமுறைகளும், அவமானங்களும்
                                        எண்ணச் சுழற்சியாக உருக்கொண்டு
                                        கடலின் நடுவே மையம் கொண்டு
                                        சூறாவளியாய் சுழன்றடித்து
                                        உலகை மிரளவைத்துக்
                                        கரை கடந்தது
                                        பிரதேசமெங்கும்
                                        விசும்பல்கள், முனகல்கள், அழுகைகள்...
                                        
                                        வீடிழந்தவர்கள்,
                                        பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள்,
                                        உறவுகளை தொலைத்தவர்கள்... 
                                        -இவர்களனைவரும் தற்காலிகமாக
                                        தங்க வைக்கப்பட்டுள்ள
                                        பள்ளிகளில்
                                        தாய்மையின் கண்ணீர்ப் புலம்பல்கள்
                                        காற்றலைகளில் பரவிக்கிடக்கிறது
                                        புயலுக்குப் பிந்தைய இரவுகளில்...
                                        
                                        பேரழிவைத் தடுத்திட வேண்டுமென்ற
                                        உள்ளக்கிடக்கையைவிட
                                        வேறு ஏதும் செய்ய ஏலாத
                                        கடலன்னை வடித்த
                                        கண்ணீர்த்துளிகள் கடலுடன்
                                        கலந்து நுரைக்கிறது.
                                        
                                        பாட்டுக்கு ஒரு தலைவன்
                                        
                                        சமுதாய நிகழ்வுகளை உள்வாங்கி
                                        கவிதையாய்ப் புனையும்
                                        இவனது கற்பனைத் திறனே
                                        இவனுடைய சொத்து
                                        பத்திரத்தில் பதிய முடியுமா
                                        பலர் மத்தியில் பெருமிதம்
                                        கொள்ள முடியுமா
                                        இவன் இதை வைத்து
                                        உறவுகளின் உதாசீனப்படுத்தலையும்
                                        நண்பர்களின் நையாண்டியையும்
                                        மனைவியின் அன்றாட 
                                        ஏச்சுப் பேச்சுக்களையும்
                                        ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு
                                        கண்ணுறக்கம் கூட முள்படுக்கைதனில் என்ற
                                        இக்கட்டு தொண்டைக்குழியில் உயிர்நோக
                                        இறுக்கிய சூழ்நிலையில்
                                        சுழன்று சுழன்று வீசும்
                                        சூறாவளியிலிருந்து
                                        இவனது உள்ளுக்குள் எரியும்
                                        படைப்புக்கு பிரகிருதியான சுடரை
                                        அணையாமல்
                                        ஜீவன் பிரியும் வரை
                                        தமிழ்ப்பிரவாகம் குறையாமல் 
                                        காப்பாற்றி வந்தான்
                                        தன்னை தமிழுக்கு அர்பணித்து
                                        மகாகவிஞன் மறைவுக்குப்பின்
                                        கல்லறையில் ஏற்றிவைத்த அகல் விளக்கு
                                        காற்றினால் அணைந்த பின்புதான்
                                        இவனுடைய கவிச்சுடர் விளக்கு
                                        இலக்கியவானில்
                                        விடிவெள்ளியாய் ஒளிவீசத்துவங்கியது
                                        காலவெள்ளம் கவிஞனை
                                        அடித்துச் சென்றுவிட்டபோதிலும்
                                        அவனது கவிவெள்ளத்தில் 
                                        சிக்காமல் மீண்டவர் யார்
                                        இங்கு!
                                        
                                        மனப்பதிவுகள்
                                        
                                        என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல்
                                        இப்பொழுது யாரைத் தாலாட்டிக் 
                                        கொண்டிருக்கிறதோ...
                                        நதியில் நேற்று பார்த்த நீரலைகள்,
                                        இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும்
                                        ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும்
                                        என் முகம் தெரிந்தது.
                                        குலை, குலையாய் பனங்காய்கள் உள்ள
                                        பனை மரததை விட, அவற்றுக்கிடையே நிற்கும்
                                        மொட்டைப் பனைமரமே
                                        கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது.
                                        வெகு உயரத்தை அடைந்துவிட்டால்
                                        செயலற்று சும்மா இருக்கலாம்
                                        என்பதை ஆகாயத்தில் மிதக்கும்
                                        கழுகு உணர்த்தியது.
                                        இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளும்
                                        சமீபத்தில் நம்மை விட்டு 
                                        மறைந்து போனவர்களின்
                                        ஞாபகச்சுவடுகளை
                                        மனஅடுக்குகளிலிருந்து தட்டி 
                                        எழுப்புகின்றனவாய்
                                        அமைந்திருக்கின்றன.
                                        சூரியனுக்கு கீழே ஆயிரமாயிரம் மாற்றங்கள்,
                                        வளர்ச்சிகள், கொண்டாட்டங்கள், 
                                        பேரழிவுகள்,
                                        அதிசயங்கள், ஆடம்பரங்கள்
                                        ஆனால் கதிரவன் எவற்றையும் 
                                        பொருட்படுத்துவதில்லை
                                        அப்படி இருப்பதால் தானே அவன் ஆதவன்.
                                        
                                        உள்வெளிப்பயணங்கள்
                                        
                                        வான்வெளியில் மேகங்களின்
                                        அணிவகுப்பைப் போன்றது
                                        மனதில் நினைவலைகள்
                                        உற்றுப் பார்த்தால்
                                        வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்
                                        அம்முகில் கூட்டங்களில்
                                        
                                        கடிவாளமில்லாத புரவியென
                                        ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்
                                        மானிடனை இழுத்துச் சென்று 
                                        சகதியில் அவனை விழவைத்து
                                        சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை
                                        சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்
                                        மனப்பரப்பில் எரியும் 
                                        ஆசையெனும் வேள்வித்தீயில்
                                        ஆகுதியாகும் 
                                        விட்டில் பூச்சியைப் போல்
                                        மனித உடல்கள்
                                        
                                        காலைக் கதிரொளி
                                        பனிப்போர்வையை விலக்கியது
                                        பறவைகள் ‘கீச்’சென்று சத்தமிட்டு
                                        சிறகடித்துப் பறந்தன
                                        மாலையில வாடிப்போய்விடுமோமென்று
                                        வருத்தம் கொள்ளாமல்
                                        மலர்கள் மலர்ந்து நின்றன
                                        தென்றலின் பாடலை
                                        மரங்கள் தலையசைத்து
                                        ரசித்தன
                                        தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை
                                        வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண
                                        கடலலை காத்திருந்தது
                                        வைகறை மெளனத்தில் கீதம் பாட
                                        தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது
                                        கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல
                                        தோகை விரித்தாடியது மயில்
                                        வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக
                                        தேனை சுவைத்தது போன்று
                                        ரீங்காரமிட்டன
                                        புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்
                                        பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது
                                        
                                        இன்றைய பொழுது
                                        நமக்கு இறைவன் அளித்தது
                                        இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது
                                        மனித மனம் ஆதியிலிருந்தே அதனை
                                        மறந்து வந்துள்ளது.
                                        
                                        தொலைந்து போன நிழலைத் தேடி...
                                        
                                        பால்யத்திலிருந்து
                                        எனைத் தொடர்ந்து வந்த நிழல்
                                        இன்று தொலைந்து போய்விட்டது!
                                        
                                        எனது பாதத்தடங்கள்
                                        கடந்துவந்த பாதையை உளவறிந்து
                                        எங்கு போய்ச் சொன்னதோ?
                                        
                                        உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட
                                        ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்
                                        நிழலின்றி இருக்கமுடியுமா?
                                        
                                        மற்றவர்களின்
                                        நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்
                                        விசாரிக்கிறேன்
                                        எனது நிழலின் நலத்தைப் பற்றி!
                                        
                                        :mathi2134@gmail.com
                                        
                                        ********************************
                                        
                                        ராம்ப்ரசாத் கவிதைகள் 
                                        
                                        திசையறியும் சூட்சுமம்...
                                        
                                        
                                        
                                        பரிச்சயப்பட்ட இடத்தில்
                                        திமிருடன் சுற்றித்திரிபவனுக்கான
                                        சமிஞைகள் பற்றி 
                                        சொல்லிக்கொண்டிருந்தான் 
                                        அவன்...
                                        
                                        இருக்கும் இடத்தின் 
                                        திசைகளை அறியும்
                                        சூட்சுமம் பற்றிய
                                        கையேட்டைக்கொண்டிருந்தேன் 
                                        நான்...
                                        
                                        பேரிரைச்சல் ஒன்று
                                        தன்னைத்தானே சமிஞைகளால்
                                        நிரப்பிக் கொண்டிருந்த
                                        வேளையில்...
                                        மெளனமாய் தென்றலுடன்
                                        அளவளாவிக்கொண்டிருந்தன
                                        கையேட்டின் பக்கங்கள்...
                                        
                                        ***
                                        
                                        நடனமாடும் நிழல்கள்...
                                        
                                        மெளனித்திருக்கும்
                                        அறைக்குள்ளாக 
                                        சன்னமாய் முனகிக்கொண்டிருந்தது
                                        நெருப்பு ஜுவாலையொன்று
                                        மெழுகுவர்த்தி முனையில்...
                                        
                                        காற்று அவ்வப்போது
                                        இடையில் கிள்ளப் 
                                        புதுமணப்பெண்ணாய் சினுங்கி 
                                        வெட்கம் உதிர்த்தது
                                        செம்மஞ்சள் நிறத்தில்...
                                        
                                        ஒளியின் தாளத்தில்
                                        நடனமாடிக்கொண்டிருந்தன
                                        சில நிழல்கள்
                                        கருப்பு வெள்ளையில்... 
                                        
                                        ***
                                        
                                        தேனீர் கோப்பைக்குள்...
                                        
                                        வட்ட வாய்
                                        கோப்பைக்குள்ளிருந்து
                                        வெள்ளை தேவதைகள்
                                        மேலெழும்பிப் பறந்தன...
                                        
                                        இனி எழும்ப
                                        தேவதைகள் மிச்சமில்லை
                                        எனும்போது,
                                        அம்மணமாய் கிடப்பதை
                                        உணர்ந்து ஆடை கொண்டு
                                        மூடிக்கொண்டது தேனீர்,
                                        கோப்பைக்குள்...
                                        
                                        காதல்...
                                        
                                        நிலம் பார்த்து நீ
                                        நடக்கிறாய்...
                                        உன் பூ அழகை
                                        நிலம் ஏற்றுக்கொள்கிறது...
                                        உன்னைப் பார்த்து நான்
                                        நடக்கிறேன்..
                                        என் காதலை
                                        நீ ஏற்றுக்கொள்வாயா?...
                                        
                                        உன்னைக் கட்டிக்கொள்ளமுடியாத
                                        ஏக்கத்தைத்தான் கொடியில் காயும்
                                        உன் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
                                        தீர்த்துக்கொள்கிறதோ மழை...
                                        
                                        அனுதினமும்,
                                        எரியும் விளக்கை 
                                        அணைத்துவிட்டு
                                        படுக்க போய்விடுவாய்...
                                        இங்கு நான் எரிய 
                                        தொடங்கிவிடுவேன்...
                                        
                                        சாலையில்
                                        நீ கடந்து போன 
                                        பின்னும் அங்கேயே
                                        திரிகிறேன்...
                                        இந்த கட்டிடங்களின்
                                        நிழலில் தொலைந்து போன 
                                        உன் நிழலைத் தேடியபடியே...
                                        
                                        மனிதர்களின் கால்தடம்
                                        பட்டால் புல் கூட 
                                        முளைக்காதாம்...
                                        உன் காலடித்தடம்
                                        ஒவ்வொன்றுக்கும் என் நெஞ்சில்
                                        ஒரு காதல் முளைக்கிறதே...
                                        நீ தேவதை என்பதற்கு
                                        இந்த சாட்சி போதாதா?...
                                        
                                        பெண்களின் வெட்கம்
                                        அழகானது...
                                        உன்னில்
                                        அழகு வெட்கமானது...
                                        
                                        தலைகுனிந்து
                                        உன் வெட்கத்தை
                                        பூமிக்கே பரிசளிக்கிறாய்...
                                        பூமிக்கு நான் 
                                        என்னையே பரிசளிக்கிறேன்..
                                        ஒரே ஒரு முறை 
                                        நான் பார்க்க
                                        தலை நிமிர்ந்துதான்
                                        வெட்கப்படேன்...
                                        
                                        உன் வெட்கமென்ன
                                        மழைக்கால மேகமா?
                                        ஒவ்வொரு முறை
                                        நீ வெட்கப்படும் போதும்
                                        என் இதயத்தில்
                                        இடி இடிக்கிறதே...
                                        
                                        'இந்த வண்ணத்துப்பூச்சி
                                        பறக்காதா?'
                                        என்று உன்னைப்பார்த்து
                                        ஒரு வண்ணத்துப்பூச்சி
                                        என்னிடம் கேட்டது...
                                        
                                        பூவென நினைத்து
                                        வண்ணத்துப்பூச்சிகள்
                                        உன்னைத் தொடரும்...
                                        வண்ணத்துப்பூச்சியென 
                                        நினைத்து நான்
                                        உன்னைத் தொடருவேன்...
                                        
                                        ***
                                        
                                        இருளும் விளக்கும்...
                                        
                                        பச்சை இலை
                                        தின்னும் இலைப்பூச்சியாய்
                                        என் கவனத்தைத் 
                                        தின்றுகொண்டிருந்தது
                                        குழப்பமான சில சிந்தனைகள்...
                                        
                                        இருள் இறங்கி
                                        உழுது கொண்டிருந்த
                                        எண்ணங்களை
                                        தொந்தரவு செய்ய
                                        விருப்பமின்றி மெளனித்திருந்தது
                                        அந்த மேஜை விளக்கு...
                                        
                                        ***
                                        
                                        இருத்தல் தொலைத்த வார்த்தைகள்...
                                        
                                        மனஸ்தாபத்தின்
                                        நிழற்குடையில் நின்றபடி
                                        பகிர்ந்துகொள்ளப்படும் சில
                                        வார்த்தைகளை
                                        குறிப்பெடுக்கவே செய்கின்றன
                                        நினைவுக்கூடுகள்...
                                        
                                        பகிராத வார்த்தைகளுக்கான
                                        அர்த்தங்கள் கூடுகளுக்குள்
                                        நுழைய முயற்சிக்க,
                                        தடுக்கக் காரணங்கள்
                                        இன்றிப் போகிறது
                                        மெளனத்தின் சாட்சியோடு
                                        ஒரு ஆழ்ந்த அவதானிப்பில்...
                                        
                                        முடிவில்
                                        பகிரப்படாமலேயே
                                        தொலைந்து போகிறது
                                        உறவுகள், பதிலளிக்கப்படாத
                                        கேள்விகளில்...
                                        
                                        இருத்தல் தொலைத்த
                                        வார்த்தைகள் தான்
                                        எத்தனை சுதந்திரமானது...
                                        
                                        ***
                                        
                                        புரவிகள்...
                                        
                                        போர்க்களத்தினின்று
                                        புறக்கணிக்கப்பட்டன 
                                        தோல்விகள்...
                                        
                                        அது தற்காலிகம் 
                                        தானென்று தெரிவிக்கப்படாமல்...
                                        
                                        தோல்விகள் அறிந்தே
                                        இருந்தன தாங்கள்
                                        வெற்றிபெறாத போர்க்களம்
                                        பிரபஞ்சத்தில் இல்லையென...
                                        
                                        சிந்தனைப் புரவியேறி
                                        தோல்விகளை வேவுபார்க்கையில்
                                        தெரிந்தது வெற்றிகளின்
                                        முகங்கள் கவசங்களைத் தாண்டி...
                                        
                                        நான் சந்தேகக்கண்களோடு
                                        புரவிகளைப் பார்க்கத்தொடங்கி
                                        வெகு நாட்களாகியிருந்தது...
                                        
                                        ***
                                        
                                        விடியல்
                                        
                                        இருளடைத்திருந்த வீட்டில்
                                        மெல்ல ஒளி
                                        குடிபுகத்தொடங்குவதுதான்
                                        விடியலோ...
                                        
                                        விடியல்கள் தோறும்
                                        சன்னல் வழியே
                                        வழுக்கி விழுகிறது
                                        வெய்யில்...
                                        
                                        அதனைத்
                                        தாங்கிப் பிடிக்க
                                        முயற்சிக்கையில்
                                        என் கைகளில் நிறைந்து
                                        தளும்பி விழுகிறது
                                        வெய்யில்...
                                        
                                        கண்ணாமூச்சி விளையாட்டை
                                        இன்றும் மறந்திடாத
                                        விடியல் இப்போதுதான்
                                        தேடத்துவங்கியிருக்கிறது
                                        இரவை...
                                        
                                        ஆனால்,
                                        விடியல்களின் வீட்டில்
                                        இருள் தங்குவதே இல்லை
                                        என்பது விடியலுக்குத்
                                        தெரியுமா?
                                        
                                        பனி
                                        
                                        என்னவளை நனைக்க
                                        இறங்கி வந்த மழை
                                        அவளின் பேரழகு கண்டு
                                        சிலையாகி விட்டிருந்தது
                                        விடிகாலைப் பனியாய்...
                                        
                                        ஊடல் கொண்டு 
                                        விலகி இருந்த
                                        குளிரும், தென்றலுடன்
                                        ராசியாவதை பொறாமையுடன்
                                        எட்டிப் பார்க்கின்றன
                                        இந்த ரோமங்கள்
                                        சிலிர்த்தபடி...
                                        
                                        மழை என நினைத்தே
                                        பனியைப் பொழிந்ததாகவும்,
                                        பனி பொழியும் நேரம்
                                        மழையைப் பொழிந்து
                                        ஈடு செய்வதாகவும் மேகங்கள்
                                        வாக்குறுதி தருவது
                                        எனக்குக் கேட்காமலில்லைதான்...
                                        
                                        வெண்ணிற பனிக்கொண்டைகளோடு
                                        இந்தப் புற்களைப் பார்க்கையில்
                                        பூச்சூடினவோ 
                                        இந்தப் புற்கள் எனவும்
                                        தோன்றுகிறது....
                                        
                                        என் பாதச்சுவடுகள் 
                                        கண்டுகொண்டவள்...
                                        
                                        அனுபவக் கரைகளில்
                                        என் பாதச்சுவடுகள்
                                        எவர் கண்களுக்கும் 
                                        புலப்படாதவை என
                                        இருமாந்திருந்தேன்...
                                        
                                        அவற்றுள் ஒன்றிரண்டைக் 
                                        கண்டுவிட்டு நடந்தது
                                        நீயா எனக் கேட்டுவிட்டுப் 
                                        போனாய்...
                                        
                                        பாதச்சுவடுகள் 
                                        கண்டுகொண்டவளை
                                        என் பாதையில் நின்று
                                        எதிர்நோக்கினேன்...
                                        
                                        அங்கே தூரத்தில்,
                                        கரையில் விட்டுவிட
                                        நினைக்கும் அலையை
                                        மீண்டும் மீண்டும் 
                                        பற்றிக் கொண்டிருந்தது
                                        நீ அணிந்த உடையின்
                                        கிழிந்த முனையொன்று....
                                        
                                        நீர்வீழ்ச்சி 
                                        
                                        மேகக் காதலர்கள் 
                                        மலைச்சிகரக் காதலிகளை
                                        கிள்ளிச் செல்ல, 
                                        நாணுகின்ற சிகரங்கள் 
                                        இடைக்கச்சைகளை 
                                        நழுவ விடுகின்றன 
                                        நீரோடைகளாய்... 
                                        
                                        வேகமாய்க் கடந்து போகும்
                                        மேகங்களுடன், 
                                        நீராய் முன்னே விழப்போவது
                                        முதலில் யாரென்று 
                                        போட்டியிடுகின்றன,
                                        மூலைமுடுக்கிலிருந்தெல்லாம்
                                        பாய்ந்தோடிவரும் நீரோடைகள்...
                                        
                                        வயிற்றில் சுமந்த
                                        பிள்ளைகளை 
                                        கீழே இறக்கி விட்டுப் 
                                        பிள்ளைகள் ஓடி விளையாடுவதை
                                        நின்று ரசிக்கிறாள்
                                        தாயானவள் இந்த நீர்வீழ்ச்சி...
                                        
                                        நெடுஞ்சாலையோர புல்வெளிகள்
                                        
                                        யந்திர ஊர்திகள்
                                        நீர் தெளித்து வளர்க்கும்
                                        நெடுஞ்சாலையோர புல்வெளிகளில்
                                        ஊஞ்சல் ஆடும் நீர்த்துளிகளில்
                                        குடிபுகுந்த பகலவனொளிகள்
                                        சன்னல் திறந்து
                                        இன்முகங்காட்டிச் 
                                        சிரிக்கின்றன பிரகாசமாய்...
                                        
                                        அடர்ந்த மரங்களினூடே
                                        பலமாய் வீசத் தொடங்கிய
                                        காற்று தென்றலாய்
                                        பருவமடைந்து தரையிறங்கி 
                                        புற்களைத் தழுவிக்கொள்ளும் 
                                        வேளையில் சலனமற்ற 
                                        பெயர் இல்லா பூவொன்று
                                        தேன்பருகவே வரும்
                                        கந்தர்வக் காதலன்
                                        வரவை எதிர்நோக்கி
                                        காத்திருப்பதை சொல்லாமல்
                                        விட முடியுமா...
                                        
                                        என் இதயம் தொலைந்த தேசம்
                                        
                                        ஒளி பொருந்திய
                                        உன் பூமுகத்தில்
                                        கற்றை முடி
                                        நீர்வீழ்ச்சியென சரிந்து
                                        கிடக்கும்...
                                        
                                        மலைச்சாரலில்
                                        அழகிய செவ்வந்திப்பூவாய்
                                        பூத்திருக்கும் உன்னிதழ்கள்...
                                        
                                        நான் தவறி விழும்
                                        உன் கன்னக்குழிகளில் எனை
                                        தாங்கிக்கொள்ளும் உன்
                                        ரகசியப் புன்னகைகள்... 
                                        
                                        எவரும் அறியாமல்
                                        எனை ஓயாமல் 
                                        படம்பிடிக்கும் 
                                        உன் ஓரவிழிப் 
                                        பார்வைகள்...
                                        
                                        என இப்படியும் 
                                        அடையாளம் காட்டிடலாம்
                                        என் இதயம் தொலைந்த
                                        தேசத்தை...
                                        
                                        (ramprasath.ram@googlemail.com)
                                        
                                        ********************************
                                        
                                        தண்ணீர் சுடுவதென்ன!...சரம்சரமாய் 
                                        பாய்வதென்ன!....
                                        - வேதா. 
                                        இலங்காதிலகம் (டென்மார்க்.). 
                                        
                                        
                                        அலையில் 
                                        அளையும் சிவந்த கரம் காண்கையிலே
                                        ஆலைக் கரும்பாய் அலையுதடி என் மனசு.
                                        மாலையிட எண்ணி மனசு தவிக்குதடி
                                        நாளை நாளையென நாட்கள் ஓடுதடி.
                                        
                                        சிவந்த திராட்சை ரசத்திலும் போதையடி
                                        கருத்த திராட்சை உன் காந்த விழிகளடி.
                                        தண்ணீர் ஓட்டத்தினுள் தகதகக்குமுன் 
                                        கால்கள்
                                        என் செந்நீர் ஓட்டத்தினை தகிக்க 
                                        வைக்குதடி.
                                        
                                        மௌனத்தை விலக்கி விடுஇ நீயாக 
                                        மகிழ்ந்தருகே வா! என்னை மயக்கும் மானே.
                                        மனசைத் திறந்தொரு வார்த்தை பேசிடடி!
                                        மாலை மறையுமுன்னே என் மயக்கம் 
                                        தீர்த்துவிடடி!
                                        
                                        kovaikkavi@gmail.com
                                        
                                        ********************************
                                        
                                        கரும்பலகை..!
                                        
                                        இணுவையூர், க.சக்திதாசன் . டென்மார்க்.
                                        
                                        
                                        ஆறுவயதில்
                                        நான் கண்ட கரியமுகம்.
                                        வாத்தியார் வீட்டு செல்லப்பிள்ளை!
                                        ஒரு வெள்ளைப்பொட்டு
                                        வைத்துவிட்டாலே அது
                                        தனியழகுதான்!
                                        
                                        நான் காதலித்த
                                        முதல் பெண்ணும் நீதான்!
                                        கவிதையெழுத 
                                        கற்றுத்தந்த தளம்!
                                        
                                        உன்னாலே ..
                                        அறிமுகமானவள் தான்
                                        அந்த பூங் கோதை!
                                        அதன் பின்னாலே தான் நீ ...
                                        தூதாக மாறினாய்
                                        அவளுக்கு! 
                                        
                                        என் வாழ்வுக்கும்
                                        உனக்கும் இடையில்
                                        கைச்சாத்தாகாத – ஒரு
                                        இரகசிய உடன்பாடே இருந்தது
                                        
                                        ‘ஞாபகமிருக்கிறதா ?
                                        வகுப்பு முடிந்து நான்
                                        வீடு போகும் போது
                                        கடசி வரை காத்திருந்து
                                        உனக்கு முத்தமிட்டு போவது
                                        இது உனக்கும் அவளுக்கும் மட்டும் தான் 
                                        தெரியும்!¨
                                        
                                        அவளுடன் நேரே..
                                        கதைக்க முடியாத வற்றையெல்லாம்
                                        உன் மூலம் அனுப்பும்
                                        காதல் கடிதம் நீ
                                        
                                        அலுப்புத் தட்டாமல்
                                        அப்படியே ...
                                        அவளிடம் ஒப்புவிக்கும்
                                        காதல் தூது
                                        அவளதை படித்து விட்டு
                                        அழித்திருந்தாலும்
                                        இரகசியமாய்
                                        என் எழுத்தை மீண்டுமெனக்கே
                                        காட்டிச் சிரிப்பாய்!
                                        பொய்க் கோபத்துடன்
                                        மீண்டு முன்னையழிப்பேன்!
                                        
                                        இது நீண்ட .. நாள் 
                                        தொடர் கதையாகி ..
                                        ஒரு நாள் …
                                        கண்ணீரால்; எழுதினாள்
                                        இரு வரி
                                        அதையும் நீதான்
                                        எனக்கு காட்டினாய்
                                        
                                        அன்றிலிருந்து தான்
                                        உன் மீது
                                        எனக்கு வெறுப்பு!
                                        
                                        பாவம் நீ..என்ன செய்வாய்
                                        உனக்கு தானே
                                        எதையும் ஒளிக்கத் தெரியாதே
                                        இல்லையென்றால்
                                        சோக்கட்டியையாவது
                                        ஓளித்திருக்கலாமே
                                        அவள் அந்த முடிவை 
                                        எழுதாமலே இருந்திருப்பாள்!
                                        
                                        sakthy-@hotmail.com>