| மார்ச் மாதக் கவிதைகள்! 
 'ரிஷி ' யின் நீள்கவிதை
 
 அகழ்வு!
 
 1மும்முரமாய் வெட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன குளங்கள்.
 நவீனமானவை.
 சாதாரணக் கண்களுக்கு எட்டாத அளவில்
 செயற்கைச் செம்புலம், மஞ்சள்புலம், ஊதாபுலம்
 இன்னும் எண்ணிறந்த நுண்நிறங்களில் கட்டமைக்கப்பட்டு,
 முன்புலமும், பின்புலமும் கெட்டிப்படுத்தப்பட்டு,
 வெட்டி வேர் பரப்பப்பட்டு, கொட்டி நீர் நிரப்பப்பட்டு,
 குளங்களாக்கப்படும் இவற்றில்
 யாரும் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்
 எல்லோராலும் தம்மைக் கழுவிக் கொள்ள இயலாது.
 குளத்துரிமையாளருக்கு அறிந்தவர், தெரிந்தவர்,
 ஊர்க்காரர், உறவுக்காரர்,
 கார்க்காரர், காப்பித்தோட்டக்காரர், அறிவுச்சொத்துள்ள
 கல்வியாளர், மில் முதலாளி, வல்வினை முடித்துத் தரும்
 தொண்டரடிப்பொடியார்கள், துதிபாடிகள், சாமியாடிகள்,
 ஏமாளிகள், கோமாளிகள், என்பாருக்கே.... என்றாலுமென்ன?
 குளக்கரைக்கண் அனைவருமே சமம்!
 அதில் சிலர் அதிக சமம்.
 
 2
 சுற்றிலுமுள்ள படிக்கட்டுகளில் இறங்கியமர்வது
 சுலபமாகச் செய்யக்கூடியதாகத் தோன்றினாலும்
 உண்மைநிலவரம் அப்படியல்ல.
 மேல்படிக்கட்டில் காலடியெடுத்து வைக்கும்போதே
 வெளிவாயிற்காவலர்கள்
 விவரமாய் அளவெடுப்பார் தோதானவர் தானோ வென..
 மட்டைப்பந்து மைதானம்போல்
 உயர்ந்த கட்டணமும், தாழ்ந்த கட்டணமும்,
 அவற்றிற்கேற்ற தனித்தனி அமருமிடங்களும்,
 இருக்கைகளும், நிழற்குடைகளும், குளிர்பானங்களும்
 வெளிப்படையாய் காணக்கிடைத்தால்கூட
 வியாபாரத் தந்திரங்களாகப் புரிந்து கொண்டுவிட
 முடியும்... ஆனால்
 இந்தக் குளங்களின் வரையறைகளூம், விதிமுறைகளும்
 மறைகுறிப்புகளாய் ஒவ்வொரு படிக்கட்டின் உட்புறமும்
 செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதமாய்
 அவற்றின் நவீனத்துவமும், தனித்தன்மையும்
 அடிக்கோடிடப்பட்டு...
 
 3
 அடிக்கு அடி சங்கேத வாசகங்கள்
 படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருப்பவர்களின் செவிகளுக்குள்
 காற்றுத்தடமாய் இடம்பிடிக்க
 விரைந்தவாறிருக்கிறார்கள் தூய்மையாளர்களும்
 தூய்மையல்லாதோரும்
 தமது எதிர்துருவ நிலைப்பாடுகளை என்றைக்குமாய்
 குளத்தில் கரைத்து விட.
 ஒன்றே குளம் என ஆயத்த சகோதரத்துவம் பாடியவாறு
 செல்லுமவர்கள் வழியெங்கும்
 காலுக்குக் கிடைத்தவரை - குறிப்பாக எளியவரை-
 மிதித்துப் புடைத்தபடி.
 'வாய்மை யெனப்படுவது யாதெனில்' என்ற
 கேள்வியின் குரல்வளை
 நேற்றே நெரிக்கப்பட்டுவிட்டது.
 
 4
 சாலையோரங்களிலெல்லாம் பிச்சைக்காரர்கள்,
 தொழுநோயாளிகள்,
 நடைபாதைவாசிகள்,
 நலிந்த முதியோர்கள்
 கதியற்ற குழந்தைகள்,
 குடிசைவாழ்மனிதர்கள்,
 அதிகதிகமாய் சேர்ந்து
 அப்பிய அழுக்கோடு துருவேறியவாறு...
 அவர்களை மதித்து கைதூக்கிவிட்டு
 குளத்துநீரில் குளிக்கச் செய்து தூய்மையாக்கி
 அருகமர்த்திச் சமமாக்க முன்வந்தாரில்லை
 யெவரும்...
 ஒன்றுமில்லாதானை சொந்தமாக்கிக் கொண்டு
 எந்தக் கோட்டையைப் பிடிக்க...?
 இன்னின்னது கொண்டு வந்து தருபவரே
 கேளிர் காண்.
 பெண்ணை வன்புணர்ச்சி செய்தாரேயாயினும்
 தன்குளத்துறைவாரெனில்
 தண்டனை குறைவு தான்.
 
 5
 வேண்டும்போது வெய்யிலை குளிராகப் பொய்யுரைத்து,
 'மீண்டும் இதோ ஒரு மெய்ப்பார்வை' என்பதாய்
 நீக்குபோக்காகப் பொருள்பெயர்க்கத் தேவையான
 எடைக்கற்கள்
 குளத்தையடையும் கீழ்நோக்கிய பயணத்தில்
 பகுத்தறியும் கைகளிலும் புகுத்தப்பட்டு விடுகின்றன.
 தரநிர்ணயங்களுக்கு 'இரட்டை அளவுகோல்கள்'
 ஏற்கனவே மரபாக்கப்பட்டாயிற்று.
 இந்த நவீன குளங்களின் படிக்கட்டுகளில் சற்றே
 இளைப்பாற வேண்டி அம்ர்ந்து கொள்ளக்கூட
 ஒருவர் தனது சுயத்தை
 தலையைச் சுற்றி வீசியெறிந்துவிட வேண்டும் என்று
 வரியிடைவரிகளாய்த் தெரிய வந்த போது
 அதிர்ச்சியாயிருந்தது.
 அதை வேசியின் கூச்சமின்மையாகப் பகுத்து
 மூர்க்கமாய் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்ட கரங்களின்
 அணில்வரிகள்
 காலத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வரும்.
 
 6
 காரியார்த்தமாய் குளத்திற்கு இருமுறை தமது
 தேரிலழைத்துச் சென்றவர்
 தெய்வப்பிறவியாகிவிட
 கல்லிலும் முள்ளிலும் கூடவந்தாள் தன் கருத்தாய்
 சொன்ன ஒரு சொல்லில்
 அவள் தலைகொய்யப்பட்டு நிலைநாட்டப்படும்
 பேராண்மை இன்றளவும்.
 பெய்யெனப் பெய்யா மழையில்
 பத்தினித்தனம் பிழையாகிவிட _
 பெண்மையைப் போற்றுதும், பெண்மையைப் போற்றுதும்;
 புண்ணாக்கி, புண்மையாக்கி பெண்மையைப்
 போற்றுதும்;
 மண்ணாந்தை யாக்கியும்;
 மண்ணோடுமண்ணாக்கியும்.....
 
 7
 'ஒரு முல்லைக்கு ஈடாமோ மூன்று பில்லியன் டாலர்கள்?'
 என்ற கேள்வி
 வெறுமையாய் அலைந்து கொண்டிருக்கிறது
 பால்வெளியில்.
 குருத்துமூங்கில் தான் அன்பளிப்பாய்த் தரப்படுகிறது-
 ரத்தினக்கல் பொருத்தப்பட்டு வைரத்தில் செய்தது...
 நித்தம்நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன
 நவீனகுளங்களின் முப்பரிமாணக் காட்சிகள்.
 ஆரங்கள் துவாரங்களாய்,
 அரைவட்டங்கள் சேதாரச்சதுரங்களாய்,
 கண்மயங்கிக் கெட
 கீழேகீழே போய்க் கொண்டிருக்கும்
 குளத்திலும் காத்திருக்கும்
 பாழும்
 புதைசேறும்
 மூத்திரக் கழிவுகளும்
 சுறாவும்
 திமிங்கிலமும்
 வேறு
 பல நூறும்...
 
 காலம் மாறும்.
 
 'ரிஷி'யின் நீள்கவிதை
 பொம்மிக்குட்டியின் கதை!
 1
 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
 அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண
 கைநேர்த்தியோடு
 கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
 மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
 எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
 கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம்
 போன போக்கில்; அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
 ஏது தனிப்பட்ட இயக்கம்...?
 குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
 தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
 தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
 அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
 குதூகலிக்கும் குழந்தை...
 "பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
 பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
 பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
 துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
 தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
 ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...
 
 அவனுக்குத் தெரிந்தமெல்லாமும்
 சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.
 
 2
 பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்
 கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
 வீடு திரும்பிய பிறகு
 வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
 கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
 அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
 "அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
 "ஆம், ஆம்". ஆனால்...
 "முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
 அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
 சொன்னபோது
 செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
 பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
 தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
 உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
 திகைத்துச் சினந்தான்.
 தகப்பன்சாமி தான் என்றாலும்
 "எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
 கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
 என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
 பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
 ஆட ஆரம்பித்ததைக் கண்டு
 மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
 பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
 கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
 'பதிலுக்கு புதிய பொம்மைகள்
 காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
 அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
 போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.
 
 ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'
 
 3
 காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
 கிடந்தது பொம்மிக்குட்டி.
 முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
 உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
 தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
 விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
 பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
 கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
 பரிச்சயமான அறை.
 பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
 கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
 எதிரே
 சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
 சல்யூட் அடிக்கும் பொம்மை_
 சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
 சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
 சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
 குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
 சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
 பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
 'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
 பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
 பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
 பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
 வாங்கிவந்த பொம்மை_
 விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
 சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
 அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
 வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
 பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
 பூதாகார கரடி பொம்மைகள்...
 
 அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.
 
 4
 பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
 பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
 பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
 கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
 அருகமர்ந்து கொண்டிருந்தது.
 கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
 ஆயத்தஆடைகள் அணிவித்து
 அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
 சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
 மாற்று குறையாமல்
 ஆடிக் கொண்டிருந்த தலைகள்
 பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
 காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
 கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
 உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
 அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
 காட்டும் அடையாளம் காலம்
 எனப் பின்னேகி
 பஞ்சுப் பிரிகளாய்
 வெளியில் கலந்து திரியும்
 பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
 உன்னை என்னை நம்மை...?
 
 "நீயும் பொம்மை, நானும் பொம்மை,
 நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"
 
 ramakrishnanlatha@yahoo.com
 *****************
 
 தனிமை!
 
 - நாஞ்சில் சாரதி -
 
 அமெரிக்காவின் டிசம்பர் பனி காலம்
 பத்து நாள்கள் விடுமுறை
 பரிதவித்து போனேன்
 பாடி திரியும் பறவைகளாய்
 பறந்து போயினர் பாசமிகு நண்பர்கள்
 பாழும் சிறையானது எனது வீடு
 குளிரின் கொடுமை ஒருபுறம்
 தனிமையின் கொடுமை மறுபுறம்
 தவித்து போனேன் திசை தெரியாமல்
 உயிர் காக்கும் நண்பனாய் தொடை கணணி
 எண்ணிவிடலாம் நான் பேசிய வார்த்தைகளை
 இந்த நாட்களில்
 சிலநேரம் நண்பர்கள் தொலைபேசியில்
 இல்லையேல் மறந்துபோயிருப்பேன் தாய்மொழி
 கற்க நீண்ட நாள் கனவு
 கிடைத்த நேரத்தை கண்ணியமாக செலவு செய்து
 சிறிது கற்றேன் பழந்தமிழ் வரலாறு
 தமிழினம் ஒரு காவியம் அதை கற்க மறந்தவன்
 வாழ்வின் கற்பை இழந்தவன்
 பயன் உள்ளதாய் மாறியது
 தனிமையால் தவித்த நாள்கள்...........
 
 jeyaparthasarathy@gmail.com
 http://jeyaparthasarathy.googlepages.com
 
 *****************
 
 புலம் (பல்) பெயர் வாழ்வு!
 
 - றஞ்சனி -
 
 பனிக்காலத்திற்குள் உறைந்த
 இயற்கையின் ரகசியம்
 இழவேனிற்காலத்தால்
 மீண்டும் வெளிக்கிறது
 மரங்களின் மகிழ்வை பூக்கள்
 சொல்ல
 கொஞ்சித்திரிகிறது
 குறும்புக் குருவிகள்
 மரம்விட்டு மரம்தாவும்
 அழகிய செவ்அணில்
 பச்சைக்கம்பழ புல்தரைமீது
 மஞ்சளும் வெள்ளையும்
 சிவப்பும் நாவலுமாய்
 சூரியனை வரவேற்கும்
 சின்னப் பூக்கள்
 பறந்துதிரியும் வண்ணப்
 பட்டாம்பூச்சிகளாய்
 பல இனச்சிறார்கள்
 காதலர் குதுகலம்
 கைகோத்து நடக்கும்
 இப்படி இழவேனில் சந்தோசங்கள்
 
 இதுவும்
 கண்களுடன் கண்ணாடி
 கழைப்புற்று விழுகிறது
 சிந்தனைக்கும் செயலுக்கும்
 கருத்து வேறுபாடு
 விரும்பாத விரும்பிய
 பொழுதுகளும் மனிதர்களும்
 அம்மாவின் அரவணைப்பை
 தேடிஅழும் மனது
 தனிமையுடன் இழமையும்
 சேர்ந்து கரைய
 வாழ்க்கைத் தத்துவத்தை
 அனுபவம் உணர்த்தும்
 உலகெங்கும் மனிதம்
 மனிதர்களைத்தேட
 
 இப்படி
 தேசமற்று அடையாழமற்று
 தவிக்கும் புலம்பெயர்
 சொகங்கள்
 
 shanranjini@yahoo.com
 
 **********************************
 சௌந்தரி (ஆஸ்திரேலியா) கவிதைகள்!
 
 காத்திருப்பு! யன்னல் வழியே எட்டிப்பார்க்கிறேன்இருண்ட இரவு
 என் மனசைப்போல!
 ஊர் உறங்கியும்
 உறங்க மறுத்தன கண்கள்
 
 கனவுகள் தொடர்கி;றது
 கனவுகளின் வெளிச்சம்
 காலத்தை கடக்கப் போதாது
 நினைவுகள் சுடுகி றது
 நினைவுகளின் காயம்
 கண்ணீரில் கழுவி முடியாது
 
 ஏனிந்த நாட்கள்
 என்தேசம் போல் நீள்கி;றது
 நம்பிக்கையின்மை
 நாற்புறமும் போராடி வெல்கி;றது
 தனிமையின் வெறுமை
 நிஐத்தையும் கேள்வியாக மாற்றியது
 ஓருகணம் அழுகி;றது மனசு
 மறுநிமிடம்
 அடைகாக்கும் தாயாகச் சுரக்கி;றது
 ஏனிந்தப் போராட்டம்?
 
 விடியலுக்கு காத்திருப்பு அவசியமோ?
 கசியும் என் இதயத்தை கட்டுப்படுத்த
 இருண்ட இரவில்
 தோன்றும் வெள்ளிபோல்
 ஏன்னிடம் நீ வந்துசேர்!
 
 விட்டுப்போன இன்னிசை!
 வாழ்வோடும் சாவோடும் போராடும் மனிதர்களை
 வாழவைக்கும் தாய்நாடே
 உறவுகளைத்தேடி
 ஓடுகின்றது என்மனசு.
 
 வரவு செலவுப் பதிவும்;
 கொடுத்து வாங்கும் நட்பும்
 பாதிவாழ்வை கொன்றது
 அனுபவங்கள் வலிக்கி;றது
 ஆயிரம் படிகள் ஏறியும்
 அமைதி கிட்ட மறுக்கி;றது
 அமைதியைத் தேடி
 ஓடு நினைக்கும் ஒரிடம்
 தாயும் தாய்மண்ணுமே!
 
 கொட்டித்தந்த செல்வத்தை
 தத்துக் கொடுத்தது போல்
 கைவிட்டு வந்துவிட்டேன்
 எந்த சுகமும் இனிக்கவில்லை
 விட்டுப்போன இன்னிசை
 புயலாக முட்டி மோதுகிறது,
 காற்றோடு பேசும் நெல்மணிகள்
 தலைசாய்த்து வாஎன்று அழைக்கிறது
 களவாக உறவாடும் முகில்; கூட்டம்
 கவிதையை மழையாக பொழி;கிறது
 நினைவுகளின் தடங்கள் மோதி
 கால்முத்தம் மண்ணில் பதிக்கிறது.
 
 வழமைபோல்
 நெல்மணிகள் கதைபேசும்மாமரங்கள் மூச்சுவிட்டுக் காய்க்கும்
 கட்டிடங்கள் அத்திவாரத்தில் ஏறும்
 கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்
 கண்ணைப்பறிக்கும் நாவற்பழமும்
 ஆட்டிறச்சிப் பங்கும்
 கோழிக்கறி மொச்சையும்
 ஊரெல்லாம் மணக்கும்
 சின்னஞ்சிறு வீதிகளில்
 என் கால்களும் பதியும்;
 சிதறிய உறவுகளும்
 சிணுங்காது வந்திறங்க
 புதியபாலம் திறக்கும்
 எண்ணத்தில் தோன்றும் ஆசையிது
 காலம்தான் காட்டவேண்டும் பாதை
 
 ஓ! என் தாய்நாடே
 சொந்தமண்ணையும்
 இந்தப்பெண்ணையும்
 தொடுத்த தொப்புள்கொடி
 அறுந்தவிதத்தை எண்ணிப்பார்க்கி;றேன்
 மீண்டும் வலிக்கின்றது!
 
 எப்படி புரியவைப்பாய்?
 “நீ” என்ற மையத்தில்சுற்றும் என் உலகம்
 உன்னை மட்டும் வாசிப்பதில்
 தன் காலத்தை கரைக்கும்
 நீ இல்லாதபோது
 உன் மௌனம்; மட்டும்
 என்னோடு வாழும்;
 
 உனது சோகம்
 உனது குறும்பு
 நீ சொல்கின்ற பொய்
 அதில் தெரிகின்ற நேர்மை
 இறுகப் பற்றிக்கொண்டது என்னை
 
 புதிரான உன் உலகில்
 தினம் புதுமையாகும் நீ
 புதையலானாய் எனக்கு!
 வாய்விட்டுச் சொன்னேன்
 வார்த்தைகளை மறுத்து
 “நீ ஒன்றுமே இல்லை” என்றாய்!
 “நீ ஒன்றும் இல்லை” என்றால்
 ஏப்படி புரியவைப்பாய் அதை எனக்கு!
 
 tary22@yahoo.com.au
 
 *********************************
 அனாமிகா பிரித்திமாவின் 
மூன்று கவிதைகள்! 
 
 விதி வசத்தால்...
 உங்களை கைப்பிடிக்கும் வரை...
 தமிழ் தெரியாது...முழுமையாய்...
 
 பிடித்தபின் உங்களை ரசித்ததாலேயே...
 தமிழைக் கற்றுக்கொண்டேன்...
 
 முழுதாய்க் கற்று முடிக்கும்முன்னே...
 விதி வேறு விதமாக இருவரையும் இழுத்துச்சென்றது...
 
 கவிதை எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை...
 கற்று கொடுத்த ஆசான் நீங்கள்...
 கண்ணீருடன் என் நன்றிகள்...
 பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...
 நான் கவிதைக்காரி அல்ல...
 ஆனால் இன்று விதி வசத்தால்...
 எழுதுகிறேன்...
 எழுதுவேன்...
 
 என்னவர்...
 ஆயிரம் கண்களை காட்டுங்கள்...
 என்னவரின் கண்களை கண்டுபிடிப்பேன்
 நான் தினமும் என் கண்களை அவர் கண்ணில் தானே பார்த்தேன்...
 
 ஆயிரம் விரல்களை காட்டுங்கள்...
 என்னவரின் விரல்களை கண்டுபிடிப்பேன்
 பார்த்து பார்த்து வலிக்காமல் நகங்களை நறுக்கியது நான் தானே...
 
 ஆயிரம் மச்சங்களை காட்டுங்கள்...
 என்னவரின் மச்சத்தைக் கண்டுபிடிப்பேன்
 அவர் முதுகின் மச்சத்தை வருடி ரசித்ததும் நான் தானே...
 
 ஆயிரம் மீசைகளைக் காட்டுங்கள்...
 என்னவரின் மீசையைக் கண்டுபிடிப்பேன்
 நேர்த்தியாய் அதை கத்தரித்ததும் நான் தானே...
 
 இவையெல்லாவற்றையும் ஆயிரம் வருடம் கழித்தும்...
 என்னால் கண்டுபிடிக்க இயலும்...
 
 குழந்தையாய்... ஒரு குழந்தையாய்... அவரை பாவித்து...
 உச்சிக்குடுமி போட்டு அழகு பார்த்ததும் நான் தானே...
 
 தூங்கும்போது, சத்தம் கேட்டு முழிக்கக்கூடாதென்று...
 போர்வையை காதுகளின் இருபுறமும் வைத்ததும் நான் தானே...
 
 என் செல்லக் குழந்தை இப்போது எங்கு...
 எப்படி இருக்கிறதோ அறியேன் ?...
 குழந்தை இப்போது பெரிதாகியிருக்கும்...
 என்னை அடையாளம் கூட தெரியாது...
 என்றாவது ஒருநாள்...
 குழந்தையாய் மீண்டும் வருவாரா?
 காத்திருப்பேன் ...
 ஆயிரம் வருடம் ஆனாலும்...
 
 என் வேண்டுதல்...
 மறைந்து போனீர்கள்...
 என் கண்கள் குருடாக வேண்டினேன்
 என்னை நுகரவில்லை...
 என் சுவாசம் நிற்க வேண்டினேன்
 
 என்னுடன் பேச மறந்தீர்கள்...
 என் காதுகள் செவிடாக வேண்டினேன்
 
 நான் பேசுவதை நீங்கள் கேட்கவில்லை...
 என் நாவு ஊமையாக வேண்டினேன்
 
 என்னை முழுமையாக மறந்தீர்கள்...
 என் இதயம் நின்று போக வேண்டினேன்
 
 எனக்காக இனி நீங்கள் இல்லை என்று அறிந்தேன்...
 என் இரத்தம் உறைய வேண்டினேன்
 
 நான் இதுவரை வேண்டியதெதுவும்...
 நடந்ததே இல்லை...
 நடக்கபோவதும் இல்லை...
 என் வேண்டுதலை...
 நான் நிறுத்தப்போவதும் இல்லை...
 
 anamikapritima@yahoo.com
 
 *******************************
 
 காலம் மாறிப்போச்சு:
 
 ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
 
 அம்மிகள் காணாது போனதோடுஅம்மாக்களும் காணாது போனார்கள்!
 மம்மியாய் வாழ்கின்றவர்கள்
 வாடகைக்கும் தாயாக கிடைக்கின்றனர் !
 
 கணினி என்பது மனிதவாழ்வில்
 கணிசமான அங்கமாகிவிட்டது!
 கணினியை கற்போர்
 காமத்தையும் பயிலுகின்றனர்!
 
 மென்பொருள் நிருவனங்களில்
 படுக்கையறைகளும்
 பதுங்கியிருக்கின்றனவாம்!
 திரைப்படங்களெல்லாம்
 திரை யில்லாபடங்களாகவே
 காட்சியளிக்கின்றன!
 
 தமிழ்பாடல்களில்
 ஆங்கிலமே அதிகமாயிற்று!
 அங்கங்களை மறைத்த ஆடைகள்
 அங்கங்கு மறைப்பதால்
 ஆபாசமாகவே இருக்கின்றன!
 
 குட்டிகளுக்கெல்லாம்
 புட்டிகளே பாலூட்டுகின்றன!
 பாலூட்ட படைத்தவையே
 படு கவற்சியாக்கப்படுகின்றன!
 
 ஆ_வின் பாலெல்லாம்
 ஆவி இல்லாபாலாக அங்கங்கே
 பெட்டிகளிலும் பைகளிலும்
 கிடைக்கின்றன!
 வியாபாரத்திற்கு, விளம்பரம்
 என்பது போய் விளம்பரமே
 வியாபாரமாக்கப்படுகின்றன!
 
 அசல் என்ற உண்மை போய்
 பொய் போலிகளே புரள்கின்றன!
 பொன் நகை என்பது
 பெண் நகையாகிவிட்டது !
 குங்குமத்தில் வைத்த பொட்டு
 நிறம் மாறியதோடு வடிவமும் மாறி
 ஒட்டவசதியாய் பசையாக்கப்பட்டுள்ளது!
 
 பெண்கள் ஆண்களின் உடையிலேயே
 அலாதியாய் உள்ளனர்!
 உடன் உறவுக்குள் உடனிருந்து
 மகிழவேண்டியவர்கள்
 உடல் உறவுக்குள்ளே
 உல்லாசமயிருக்கின்றனர்!
 
 துச்சாதனர்களே காவலுக்கு
 களமிறக்கப்படுகின்றனர்!
 லட்சியம் என்பது லஞ்சமாகவும்
 லச்சமாகவும் மாறிவிட்டன!
 பிறக்கும் குழந்தை கூட
 கைவிரலுக்குள் கைபேசியை
 மறைத்துவைத்துள்ளன!
 
 பள்ளிகளிலும்
 பள்ளியறை உள்ளதாம்!
 குடிப்பதும் புகைபதும்
 புனிதமாகிவிட்டது
 இயந்திரதில் கூட
 இதயம் இயங்குகின்றனவாம்
 மனிதனே மனிதனை கொல்லும்
 மனிதாபிமானம் மலிந்துவிட்டது!
 
 உலகம் நாடகமேடையாம் ,மக்கள்
 நடிப்பதையே வாழ்க்கையாக்கிட்டார்கள்
 காலங்கள் மாறலாம், நாகரீக
 கோலங்கள்மாறலாமா?
 இந்தக்கால மாற்றங்களுக்கு
 வரும் காலங்களே!
 பதில்சொல்லட்டும்
 
 - issundarakannan7@gmail.com -
 
 *********************************
 
 என்னோடமொழி செத்துப் போச்சி!
 
 -யோகப்ரபா, புதுச்சேரி -
 
 என்னோடமொழி செத்துப் போச்சி
 அதோட எச்சம் கூட
 இப்ப என்கிட்ட இல்ல,
 ஆனா
 ஏராளமான மொழி
 இன்னக்கி எனக்குத் தெரியும்.
 என்னோடமொழி செத்துப் போச்சே
 இப்ப என் மொழிக்கும்
 செம்மொழி அங்கீகாரம்
 கொடுப்பீங்களா?
 ஆனா
 பதிவேதும் இல்லையே!
 என் மொழியவச்சி
 எனக்கு ராகம் போடத்தெரிஞ்சதே
 தவிர,
 கவிதை பாடத் தெரியல
 எப்படி நிரூபிப்பேன்
 என்னோட மொழிப் பழமைய
 ஒருவேள,
 என் அம்மாவுக்கு நெனவிருக்குமா?
 எங்கபோயி தேடுவன்
 என் மொழிய
 உறவுகளுக்காய்
 உருமாறிக் கொண்டது
 என் மொழியும்!
 எல்லா மொழிய விட
 தமிழ் மொழிதான்
 சிறந்ததுன்னு சிலர்
 சொல்லறாங்க,
 நறைய பணம் சம்பாதிக்கணும்னா
 இங்கிலீசு நல்லா பேச தெரியனும்,
 அப்படி இப்படினு
 எல்லா மொழிக்கும்
 ஏதோ ஒரு அடையாளம், சிறப்பு
 சொல்லறாங்க
 அப்ப என்னோட மொழிக்கு?
 பரிணாம வளர்ச்சியில்
 வால் எலும்பான
 மிச்சம் கூட
 என் மொழியில இல்ல
 எங்க போச்சி?
 என்ன ஆச்சி?
 தெரியல
 ஆனா ஒன்னு
 நான் வளந்துட்டேன்.
 எனக்கும் என் தாய்க்குமான
 கருத்துப் பரிமாற்றத்தில்
 உருக்கொண்ட
 என் மொழி
 கருவிலேயே கருகிடுச்சி!
 ஒருவேள
 இவளுக்குப் பொறந்தது
 பொம்பள மொழியோ?
 
 
 yogaprabha_1985@yahoo.com
 
 **************************
 
 அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!
 
 -அத்திவெட்டி ஜோதிபாரதி
 
 போகியில் தீயன போகி
 யோகமும் போகமும் பொங்க
 
 இல்லம் புதுப்பிப்பு
 இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு
 
 வசதிக்காரர் வீட்டில்
 வண்ண வண்ண சாயங்களும்
 வகை வகையான பொருட்களும்
 
 நடுத்தர குடும்பம்
 நமக்கு வெள்ளை மட்டும் தான்
 நகை போதும் புன்னகை
 
 ஏழை மக்கள்
 ஏங்கி மொழுகினார் சாணத்தால்
 ஏற்றம் வரும் என நம்பி
 
 மதுக்கூர் சந்தையிலே
 மஞ்சள் கொத்து,
 வாழைத்தார்கள்
 வகைவகையாய்
 செங்கரும்பு வாங்கி
 செழிக்க வைப்போம் -நம்
 செவ்வேர் விவசாயியை
 
 வறுத்தெடுக்க வாளை மீனும்
 வகை வகையாய் காய்கறியும்
 
 வண்ண வண்ண கொம்புச்சாயம்
 வசீகரிக்கும் நெத்திசுட்டி
 
 சின்ன சின்ன இதழ் தொடுத்த
 சிங்கார மாட்டு மாலை
 
 தேடித் தேடி வாங்கி வந்து
 தேக்கி வைத்த நன்றிதனை
 தெவிட்ட தெவிட்ட தந்திடுவோம்
 
 அதிகாலை பொங்கலன்று விழித்து
 வீட்டை சுத்தம் செய்து கழுவி
 விதவிதமாய் கோலங்களால் தழுவி
 மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
 மற்றவர்கள் இல்லங்களில் போய்
 மகிழ்ந்து மகிழ்ந்து
 கோலங்களைப் பார்ப்பர்
 கூடிப் பேசி குதூகளிப்பர்.
 
 சரியான நேரத்தில்
 சரமாக கோடு திறந்து
 தளமேடை அமைத்து
 சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
 கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
 வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
 வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
 பொங்கி வரும் நேரந்தனில்
 பொங்கலோ பொங்கல்!
 பொங்கலோ பொங்கல்!
 பொங்கலே பொலிக!!
 பொங்கலே பொலிக!! -என்று
 கூவிக் கூவிக் குதூகளிப்போம்
 
 பொங்கிய பொங்கலுக்கு
 மஞ்சள் கொத்தால்
 மாலையிட்டு
 ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
 நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.
 
 ஆண்டிற்கு ஒருமுறை
 அறுதியிட்டு கூறாவிட்டால்
 அதனையும் மறந்து விடுவோமோ?
 
 மறுநாள் மாட்டுப்பொங்கல்
 மகிழ்வுடனே எதிர்பார்த்து
 வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
 வசதியாய் விடைகொடுக்க
 வந்தது பொங்கலென்று
 வாரி வாரி அறுத்திடுவோம்
 வயல்களிலே வளர்ந்த புல்லை
 
 காலையிலிருந்து கால்நடைகளிடம்
 கனிவுடனே நடந்துகொள்வோம்
 களத்துமேட்டிலே நற்ப் புல்
 கண்ட இடம் மேய்த்து
 கானோடை ஓடை செவந்தான்,
 சாமந்தி பிச்சினி ஒடப்பா
 திரிகுளம் வீரையன்குளம் வன்னார்குளம்
 தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
 வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
 செங்கல் மாவில் கோலமிட்டு
 மங்கையர்கள்
 மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
 குங்குமமும் இட்டிடுவார்
 கோலமிடும் பொற்ச்செல்வி
 சங்கதனைக் கட்டிடுவார்
 சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
 செதுக்கப்பட்ட கூரிய
 கொம்புக்கு வண்ணம் தீட்டி
 
 பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
 ஈச்சை மட்டை கசங்கை
 மெல்லிய சுத்தியால் இழைத்து
 மாவிலை வேப்பிலை பெரண்டை
 ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
 மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
 மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு
 
 பொங்கிய பொங்கலை ஊட்ட
 தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
 தண்ணீரிட்டு கழுவி
 பொங்கலூட்டி வாய் கழுவி
 தாரை தப்பட்டையோடு
 பொங்கலோ பொங்கல்!
 பொங்கலோ பொங்கல்!!
 பொங்கலே பொலிக!
 பொங்கலே பொலிக!! -என்று
 போற்றிடுவோம் மாடுகளை என்றும்...
 
 திட்டியதை சுற்றியும் போட்டு
 மாட்டை தாண்டவிட்டு
 கட்டிடுவோம் புது அச்சில்
 கொட்டிடுவோம் புல்லதனை
 தெவிட்ட தெவிட்ட
 
 பசியறியா விரதம் இன்று
 விருந்தினரை உபசரித்து -பின்
 பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்
 
 கண்ணுப் பொங்கலை
 காணும்பொங்கலாய்
 கன்னிப் பொங்கலாய்
 கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
 களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
 காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்...
 
 jothibharathi@yahoo.com
 ***************************
 
 கடலுக்குச் சரிந்துபோன சூரியன்
 
 - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -
 
 கவிஞனே!உனது
 கவிதைப் பொருள்களை
 நீ பிரிந்த வலிகள்… இந்த
 பனிப்பொழுதில்
 என்னோடும் ஒன்றிப்போய் பரந்து… என்
 மனமடிப்புக்களை
 சுருக்கி விரித்து ஒரு
 அக்கினி வீசும் கனல்
 தேகம் முழுவதும்
 தகிர்த்து வருகிறது கவிஞனே…!
 
 அதிக நேரம் அவதிப்பட்டேன்
 அந்த இளம் காற்று
 கன்னத்தில் பட்டு
 முகம் நாணிச் சிவந்த
 உன் உருவத்தை
 உன் புகைப்படத்தில்
 உருக்கொடுக்க…
 
 மலர் சூழ்ந்த அந்த
 பரந்த பூ வெளியில்
 இருளை மயக்கி
 உலக இயக்கங்களை
 நவீனத்துவ சுருதிகளாக்கிய
 கலைஞர்கள் எவருமே
 இன்றில்லைக் கவிஞனே…!
 
 இடைமறிக்கையில்
 நீயுமா அகால மரணத்துள்…
 அமுக்கங்கள் வந்து அதிர்ந்துபோகின்றேன்…
 அபத்தத்திலும் உன் கவிதை
 என்னோடு பேசுகின்றது கவிஞனே…!
 
 எனது நாட்டின்
 இயற்கை செதுக்கும் சிற்பங்களை
 ரசிக்க முடியாமல்
 நீ மட்டுமல்ல கவிஞனே…அந்த
 வர்ணக் காட்சிகளை
 உச்சிமோர்ந்து முத்தமிட்ட
 தமிழ்ப்பெண்
 நானும்தான் அழுகிறேன்…
 
 நீ அழகானவன்
 உணர்ச்சி மிக்க ஒரு பாஷையினை
 அர்த்தமாக்கி வெளிப்படுத்திவிட்டு
 வான் வெளியில் சிறகடிக்கின்றாய்
 ஆனால் நானோ இந்த
 போதையூட்டும் வீதிகளில் என்
 கவிதைப் பொருள்களை இழந்து
 கடலுக்குச் சரிந்துபோன சூரியனாய்
 செவ்வெளிச்சம் தெரியும் ஓரத்தில்
 தவமிருக்கிறேன்…
 
 6.1.2008
 
 navajothybaylon@hotmail.co.uk
 
 **************************
 
 வேதா இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்!
 
 
 வரம்பழிந்த ஆரோக்கியம்!
 
 முதுமை குவியும்
 இளமை அழியும்,
 இவைகளை நினைக்காத
 இயல்பான வாழ்வு.
 இன்பமாய் சுவைத்து
 இரசித்த உணவு,
 இடைஞ்சலாகும் கொழுப்பு,
 இன்னலாகும் இனிப்பென
 இம்மியும் எண்ணாத
 இகபோக வாழ்வு.
 இது தவறென
 இனம் காண மறந்த
 இடித்துக் கூறாத
 இயல்பு வாழ்வு.
 இறுதியில் ஆவதென்ன
 வரப்பிரசாத வாழ்வின்
 வரம்பழிந்த ஆரோக்கியம்.
 குருதி வாய்க்கால்களில்
 சேரும் சேறு வாரும்
 மருத்துவ நவீனம்.
 நிருத்தம் தவறிய
 ஆரோக்கிய முடிவு.
 
 (பலூன் றீற்மென்ற், அன்iஐனா பற்றி….)
 
 மீன் தொட்டி.
 
 நீல ஒளியுமிழும் மின்னொளி
 நீலப் பின்னணி நீர்த் தொட்டி.
 கோல வண்ண நிற மீன்கள்.
 நிலத்தில் ஒரு வானமோ!
 சலத்துள் இத்தனை அதிசயம்!
 நிலத்தின் கீழ்க் கோலம்.
 நிலம் மறந்தேன் நான்.
 நிலையையும் மறந்தேன் ஆகா!
 
 சுத்தமான பளிங்குத் தொட்டியுள்
 எத்தனை விநோதத் தாவரங்கள்!
 பத்தாயிரம் கரங்களால் மீன்களைப்
 பொத்திச் சுருட்ட அலையும்
 மெத்து மெத்தெனும் தாவரங்கள்
 பித்துப் பிடித்தலையும் உயிரினம் போல்.
 கொத்துக் கேள்விகள், சந்தேகங்கள்,
 சித்தம் கவர்ந்த நீருள் இரகசியங்கள்.
 
 கிலிப்புலி, வரிக் குதிரை
 கிளிப்பச்சை, அக்கினிச் சிவப்பென
 விழி விரிய ரசிக்கும் தங்க மீனும்,
 ஒழிந்திடும் மீன்களுக்கு ஓடுபாதையும்
 கிழித்தட்டு விளையாட்டு மீனழகைச்
 சலித்திடாது ரசிக்க மனிதனால்
 துளிர்த்தவொரு தொழில் நுட்பம்
 அளிப்பது மனிதருக்கு மனநலச் சுகசேமம்.
 
 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
 ஓகுஸ், டென்மார்க்.
 vetha@stofanet.dk
 1-3-08.
 
 ***************************
 
 பாண்டித்துரை கவிதைகள்
 
 புன்னகைளை அனுப்பிய வண்ணமாக
 இருக்கிறாள்
 தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
 வண்ணாத்திப் பூச்சியை
 எட்டிப்பிடிக்க
 மேலே உயரும் கைகள்
 ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
 இசை பிறக்கிறது
 ஆமோதிப்பதாய்
 நீளும் நாவினில்
 உதிக்கும் நீர் குமிழிகள்
 உடைந்து சிதறுகிறது
 கண் சிமிட்டலுடன்
 புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
 உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
 மீண்டு வருகிறாள்
 இம்முறை
 கால்களும் உயர்ந்த வண்ணமாய்
 வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க
 
 *************
 
 என் பேச்சை
 செவிமடுக்க
 யாரும் விரும்புவதில்லை
 நான் சின்னப்பையனாம்
 வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்கள்
 அத்தகு நிலைக்கு
 நானும் வரக்கூடும்
 என்முன் சென்ற
 யாரும் இருக்கப்போவதில்லை
 அப்பொழுது.......
 
 *************
 
 எப்பொழுதும் நமக்குள்
 ஒளிந்து கொண்டிருக்கும் உற்சாகம்
 நாம்- அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை
 நம்மை கடந்து செல்லும்
 துன்பம் மட்டும்
 கட்டாயப்படுத்தலால்
 கொஞ்சமாய் நம்முள் ஒட்டிக்கொண்டு
 முகம்முன் மொழிகிறது
 விசாரிப்புகளுக்கு ஆசைப்பட்டவனாய்
 நானும்.......
 
 *************
 
 அம்மாவிற்கும் அப்பாவிற்குமாக
 விட்டுத்தராத பழக்கவழக்கங்கள்
 புன்னகைகளப் புறக்கணித்து
 உனக்காக காத்திருந்தது
 இருவரும் ஒருவரை விரும்பி
 இடப்பக்கம் வலப்பக்கமாக
 இடைவெளிவிட்டுப் பயணித்தது
 ஜாலிடே மச்சான் என்று
 உள்ளே வெளியே
 உதட்டோர புகை
 புட்டி சப்தம் ஊறுகாய் என
 எல்லாமுமாய் சயனித்த பொழுதுகள்
 பிரியும் தருணத்தில் கண்ணீர் இருந்தாலும்
 மீண்டும் சந்திப்போவல்லவா என்று
 எட்டிப்பார்த்த மிச்சப்புன்னகை
 மின்னஞ்சல்
 தொல்லைத் தொடர்பு என கொஞ்ச காலம்
 பின் எப்போதாவது
 உன் ஞாபகம் இருப்பதாய்
 இறந்துபோன் என்னை நானே உயிர்ப்பித்தல்
 கடந்த மாதத்தில் பாபுவைப் பார்த்தேன்
 என்னை அவன் பார்த்தும் பார்க்காததுமாய்
 பேருந்தை விரட்டிப்பிடித்த நிமிடங்கள் மட்டும்
 இதுவரை 40 முறையாவது
 மறு ஒளிபரப்பாயிருக்கும்
 எல்லோருக்குள்ளும் பிளவுகள்
 முகுமூடியை அணிந்த வண்ணம் கடந்து செல்கிறேன்
 இன்னும் மழைத்தூறல் நின்றபாடில்லை.
 
 *************
 
 நன்றி : பெப்ரவரி 08 யுகமாயினி பக்கம்: 43
 http://pandiidurai.wordpress.com
 http://begiinning.page.tl
 pandiidurai@yahoo.com
 
 *************
 
 இமாம்.கவுஸ் மொய்தீன் கவிதைகள்!
 
 சொர்க்க பூமி!!
 
 வீரத் தலைவனின்
 விவேகத்தில்
 நிகழ்ந்த
 தவறு!
 விலை போனவர்களால்
 வீழ்ச்சியடந்தது
 நாடு!
 
 இன்றோ
 நே(நா)ச நாடுகளின்
 ஆக்கிரமிப்பில்
 கற்பு முதற்கொண்டு
 எல்லாமே கொள்ளை போகிறது
 அல்லது
 விற்பனையாகிறது!
 
 'சொர்க்க பூமி ஆக்குவோம்'
 தம் வாக்குறுதியை
 நிறைவேற்றி இருக்கிறார்கள்
 ஆக்கிரமிப்பாளர்கள்!
 'ஈராக்'
 அவர்களுக்குச்
 சொர்க்க பூமியே!
 சர்க்கரை!!
 
 இனிப்பானது
 சுவையானது
 அனைவருக்கும்
 பிடித்தமானது!
 லட்டு பூந்தி
 மைசூர் பாக்
 அல்வா... எனப்
 பற்பல உருவங்களில்
 உலா வருவது!
 
 விருந்தோம்பலும்
 மங்கல நிகழ்ச்சிகளும்
 இவை யன்றி
 இருப்பதில்லை!
 தன் இனிப்பாலும்
 சுவையாலும்
 தானோர் 'கொடூரன்'
 என்பதை உணராது
 செய்து விடும்
 தன்மை மிக்கது!
 
 ஒருவர்
 தன் வாழ்நாளில்
 உட் கொண்ட
 சர்க்கரைத் துகள்களைக்
 காட்டிலும்
 அது உட்கொண்ட
 மனித உயிர்கள்
 பற்பல மடங்கு!
 
 'இன்சுலின்'
 சுரப்பின் குறைபாடே
 இந் நோய்க்குக் காரணம்!
 உடனே உணர்ந்து
 செயல்படா விட்டால்
 விழிகள்
 சிறுநீரகங்கள்
 இதயம்
 மூளை
 நரம்பு மண்டலமென
 ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!
 
 உடலில் தொன்றும்
 சிறுபுண் பெரிதாகும்
 பீடித்த பகுதியைச்
 சிறுகச் சிறுக
 அரிக்கும்! அழிக்கும்!
 அழிந்த பகுதி
 பகுதி பகுதியாய்
 தவணைகளில்
 வெட்டி எடுக்கப்படும்!
 இறுதியில்
 உயிருக்கே உலைவைக்கும்!
 
 சர்க்கரையுடன்
 பகைமை.....!
 நலம் காக்கும்.
 உறவு......?
 நலமும் வளமும்
 நிம்மதியும் அழிக்கும்!
 ஆன்மாவைச்
 சாந்தி அடைய வைத்தே
 அது சாந்தி அடையும்!!
 
 நாளைய நட்சத்திரங்கள்!!
 
 அன்று....
 தலையைப் படிய வாரி
 எண்ணெய் முகத்தில் வடிய
 சீருடை முழுதாயணிந்து
 சுமக்க முடியாமல்
 புத்தக மூட்டையைச் சுமந்து
 கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்
 சிக்கித் தவித்துப்
 பேருந்தில் பயணம் செய்து
 பள்ளிக்குச் சென்றபோது
 பரிகாசம் பேசியோருண்டு!
 பரிதாபம் கொண்டோருண்டு!
 விமர்சித்தோரும் பலருண்டு!
 
 இன்று....
 படிப்பு முடிந்துவிட்டது
 பட்டம் பெற்றாகிவிட்டது
 பணியும் கிடைத்துவிட்டது
 கை நிறையச் சம்பளம்
 வளங்கள் வசதிகள்
 வாகனங்கள் ஏவலாட்களென
 சொந்த வாழ்வில்....
 என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்
 என்னைப் போன்றே
 வசதிகள் வளமுடன்....
 
 பணிக்குச் செல்லும் நேரம்
 பள்ளிக்குச் செல்வோரைப்
 பார்க்கிறேன்!
 முதுகில் புத்தக மூட்டை....
 அதில் புத்தகங்களுடன்
 அவரவரின் எதிர்காலம்
 பெற்றோரின் கனவுகள்
 கற்பனைகள் உழைப்பு
 நம்பிக்கையென அனைத்தையும்
 சுமந்து செல்லும் சிறார்கள்!
 
 இதயம் பூரிக்கிறது
 நம் நாட்டின்
 நாளைய மன்னர்களைக்
 காண்கையில்!
 இன்று நாம் ஒளிர்வதைப் போல்
 நாளை ஒளிர இருக்கும்
 இந்தியாவின்
 நம்பிக்கை நட்சத்திரங்கள்!!
 
 மனிதாபிமானம் !
 
 சாலை யோரத் திலோர்
 மனிதப் பிணம்!
 ஈக்களும் எறும்புகளும்
 அதனைச் சுற்றிலுமே!
 
 சாலையில் சென்றிடும்
 மனித யினமதைக்
 கண்டும் காணாமல்
 போகுது பார்!
 
 சற்றே தூரத்திலோர்
 காக்கைப் பிணம்!
 அங்கே கூடிக்கரையிது
 காக்கை இனம்!
 
 பசுவதைக் கெதிராய்
 ஓர் இயக்கம்!
 தெரு நாயைக் காக்க
 ஓர் இயக்கமென
 பிராணிகளைக் காக்கப்
 பல இயக்கம்!
 
 மனிதனைக் காக்க
 ஏனில்லை?
 
 சாலையிலே ஓர்
 விபத்தென்றால்
 முதலுதவிக்கு மங்கு
 நாதியில்லை!
 
 தெருவிலே யொருவனுக்குக்
 கத்திக் குத்து....
 அடுத்த நொடியிலங்கு
 எவருமில்லை!
 
 துடிதுடித்துச் சாகும்
 மனிதன் வாயில்
 குவளை நீரூற்றுதற்கும்
 எவருமில்லை!
 
 ஆறறிவு பெற்ற
 மனிதராம் நாம்!!
 எங்கே தொலைத்தோம்- நம்
 இதயத்தை?
 
 drimamgm@hotmail.com
 
 ***********************************
 
 நலமா! நலமே!
 
 - என் சுரேஷ் (சென்னை) -
 
 
 உடலும் மனமும் எண்ணமும் நலமென்றாலே
 நலமென்று சொல்லமுடியும் என்ற நிலையென்றால்!
 
 உடல் செய்வதை சமுதாயம் பார்க்கிறது
 மனம் செய்வதையும் அது பார்த்தால் - என்ற
 கேள்வி எல்லோரிலும் ஜீவன்பெற்றால்!
 
 தனது நிஜநிலையில்
 தன்னைப்போலவே தான் வாழும்
 தன்னை உணர்ந்த நிலையின் சுகம்
 எல்லோருக்கும் மலர்ந்தால்!
 
 கடமைப் பாசியில் வீழாமல்
 மகிழ்ச்சிப் படகில்
 செய்லகள் யாவையும் சென்றால்!
 
 விளைவுகளை உணர்ந்தே
 செயல்கள் மகிழ்ந்து கொண்டால்!
 
 நிறைகள் குறைகள் நிறங்கள்
 இனங்கள் மொழிகள் மதங்கள்
 ஜாதிகள் - என
 பல்லாயிரம் எல்லைக்கோடுகளை
 கடந்த நேசப்பார்வை எங்கும் பொழிந்தால்!
 
 தன்னை மன்னிக்கும் மனநிலை
 எல்லோரிலும் விஸ்தாரமடைந்து
 அடுத்தவர்களை மன்னிக்கும்
 மனநிலையில்
 அன்புள்ளம் வெற்றிகண்டால்!
 
 கடந்தகால நிகழ்வுகளின் விலாசங்களால்
 ஒருவன் இன்னொருவன் மீது
 அடையாள முத்திரை பதிக்காமலிருந்தால்!
 
 கருவரறையிலிருந்து கல்லறை செல்கின்ற
 சிலநாட்களின் வெறும் பயணமே - இந்த
 வாழைக்கையென்ற உண்மை உணர்ந்தால்!
 
 அமைதியும் மகிழ்ச்சியும் தான்
 ஆன்மாவின் நிலையென்ற புரிதல்
 எந்நிலையிலும் சந்தோஷமென்ற
 அழகிய ஆன்மீக பூங்காவிற்குள்
 வாழ்க்கையை அழைத்துச்செல்லும்!
 
 nsureshchennai@gmail.com
 
 *********************************
 |