| என் தாய்! - 
பிச்சி, ஈரோடு -
 
               என் கருவிழியின்நரம்புகளுக்குள்
 திவலை கட்டிய நீரினைக்
 கண்டு கண்டே
 உயிர் பதறும்
 மயிர் நிறைந்த இமைகள் நீ!
 
 கண்களின் பாஷைகளை
 கண்சிமிட்டியே
 கற்றுக் கொடுத்து
 நிலவோடும் மலரோடும்
 இணைய வைத்த
 திருப்புதல்வி நீ!
 
 என் அறை முழுவதும்
 சப்தமின்றி பரவிக் கிடக்கும்
 இறைவனோடு கலந்த
 ஒளிச் சிதறல் நீ!
 
 மேகக் கூடலில்
 வண்ணமில்லா, வன்மையில்லா
 தூய்மையான மழைத்துளியின்
 ஓர் துளி அணு நீ!
 
 தன்மையும், மென்மையும்,
 பெண்மையும், உண்மையும்
 கலந்த இக் காலத்ததின்
 பொருத்தமான காவியம் நீ!
 
 ஆயிரம் கவிதைகள்
 உள்ளடங்கிய
 ஆற்றல் வைரத்தினைவிட
 ஒப்பில்லா
 திருக்குறள் நீ!
 
 நிறமும், சுவையும்,
 உயிரும், விலையும்,
 இல்லா ஜடப் பொருள்களுக்கு
 கண்ணசைவில் உயிர்கொடுக்கும்
 பார்வதியும் நீ!
 
 இந்த யுகங்களின்
 தூய்மையான ராகமாகிய
 தாலாட்டின் தாய்மை நீ!
 
 மலர்ந்து, குலுங்கும்
 பூக்களின் மகிழ்ச்சியில்
 குதூகலிக்கும் புன்னகை நீ!
 
 மேகக் கூட்டங்களில்
 ஆழ்ந்துறங்கும்
 வெண்மதியின் மடியமர்ந்து
 என்னை உறங்கவைத்த
 தியாக சொரூபி நீ!
 
 பூ மொட்டுக்களை
 பார்வைக் கணைகளால்
 ஏற்றி, கனியாக்கம் செய்யும்
 தென்றலின் தலைவி நீ!
 
 எத்தனை தவமிருந்தும்
 எத்தனை வரம் பெற்றும்
 காணக் கிடைக்கா தெய்வமும்
 கிடைக்கக் காணா வரமும் நீ!
 
 (ஆயிரம் வருடங்கள்
 தவம் செய்து, வரம் பெற்ற
 ஞானியர் எவரும்
 காணாத தெய்வம் நீ!)
 
 ஒரு விழியில்
 இரு விழியாக்கி
 ஒரு உயிரினில்
 இன்னுயிர் இட்டு
 வலிபிடுங்க பிச்சியைப்
 பெற்றெடுத்தவள் நீ!
 
 ரம்மியமாக சப்தமிடும்
 ரீங்கார வண்டுகளின்
 சத்தத்தில்
 பிச்சிப்பூ வரவேற்க
 மெளனமே பாடலாய் பாடும்
 இணையில்லா ராகத்தின்
 முதல் வரி நீ!
 
 பல வார்த்தைகள் அடங்கிய
 ஈடில்லா கவிஞனின்
 கவிதைக்குள்,
 மறைமுகமாய்
 மறைந்திருக்கும்
 உட்கருத்து நீ!
 
 சிறு சத்தத்தோடு ஒரு
 முத்தம் நான் கொடுக்க,
 உன் ரத்தத்தை பாலாக்கித்
 தந்த ஸ்ரீதேவீ நீ!!
 
 மல்லிகையும், ரோஜாவும்
 இன்னும் உயிர் வாழ
 கூந்தல் ஏற்றி சூட்டிக்கொள்ளும்
 பூக்களின் கடவுள் நீ!!
 
 தினமும் உன்னைத்
 தொழவே எழுந்திடும்
 சூரியனின்
 தாயும் நீ!
 
 ரதியென்ன, ரம்பையென்ன,
 மூவுலகிலும் இணையில்லா
 சொரூபவதியும் நீ!
 
 கொத்தித் திரியும்
 குயில்களின் விழிகள் ஒத்த
 கண்களைக் கொண்ட
 சீதையும் நீ!
 
 விரிந்து ஆடும்
 மயில்களின் தோகையும் விட
 மென்மை கொண்ட
 கரங்களை உடையவளும் நீ!
 
 
 நீ யின்றி
 இக்கவிதை இல்லை
 நானில்லை
 உலகில்லை,
 மோட்சமில்லை,
 ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?
 
 ஆன்மீக நந்தவனம்...!
 
 தீண்டும் தென்றலின்
 இன்ப ராகங்கள்
 அதைக் குடைந்து குடைந்தே
 உருவாக்கிய கவிஞனின் சிற்பம்
 
 ஆண்டவன் அதிமயங்கி
 தென்னைக் கீற்றுச் சந்துகளில்
 வந்திறங்கி சுவாசம் தேடும்
 ஆரோக்கிய ஸ்பரிசம்
 
 ஆர்ப்பாட்ட கடலடியில்
 ஆழ்ந்துறங்கும்
 தென்றலை
 அடிமனதில் வைத்து
 அழுத்தி
 காலம் இசைக்கும்
 சோகத் தாலாட்டு
 
 கற்பாறை மனதுகளை
 தூக்கி யெறிந்த
 கட்டிலா அலைகளின்
 முக்கிய தருணங்கள்.
 
 இருட்டுகிற பொழுதுகளில்
 இனிய ஓசை எழும்
 இலை உதிர்வுகளைக்
 கேட்டு கேட்டே
 உதயமாகும்
 இன்பச் சூரியன்.
 
 நித்தமும் ஓலைக் கீற்றின்
 உள்வழி ஒளியாக
 பிம்பங்களின் ரூபம் மாற்றும்
 நிழல்களின் சிரிப்பு.
 
 அஃறிணை பொருள்களின்
 சத்துழைக்காத அனுபவங்களை
 ஒத்துழைக்கச் செய்யும்
 சண்டமாருதம்.
 
 வெப்பத்தின் சச்சரவுகளை
 சொக்கியே பார்க்கும்
 H2O உள்ளத்தின் தவனம்
 நீரின்றி உலகேதென
 நமட்டுச் சிரிப்புடன் வாழும்
 ஆன்மீக நந்தவனம்
 
 உயிர்க் காற்றின்
 ஓர்பொழுதுகளில்
 திசையறியா பயணமிக்கும்
 பறவைகளின் சரணாலயம்.
 
 pichiflower@gmail.com
 |