| 
வாழ்ந்ததை 
உணர்த்திய மரணம்- புதியமாதவி, மும்பை. -
 
 (1)
 
 
  
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,ருவண்டாவில், ருசியாவில்,
 ஈரானில் ஈராக்கில்
 இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
 நமக்கு வெறும் செய்தி.
 சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
 தூக்கி எறிந்துவிடும் செய்தி.
 உலகச் செய்திகளில்
 வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
 அதுவே இலங்கையில் நடந்தப்போது....
 செய்திகள் வாழ்க்கையானது.
 அவர்களின் முகம் தெரியாதுதான்.
 தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
 அவர்கள் வாழ்க்கையில்
 அவர்கள் போராட்டத்தில்
 அவர்கள் ரத்தத்தில்
 அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
 நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
 அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
 அவர்கள் மரணம் நம்முடையதானது.
 பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
 தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
 ஆனால்
 அவர்கள் இறப்பில் தான்
 அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
 அவர்கள் மரணத்தில் தான்
 நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
 அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
 நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
 மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
 நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
 உணர்ந்த தருணங்களில் தான்
 முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
 கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
 சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
 யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.
 
 (2)
 
 சித்திரவதை முகாம்களில்
 காணாமல் போனவர்கள் பட்டியலில்
 வன்மத்தின் இரத்த வாடை
 வேட்டைநாயின் இரத்த நெடி
 ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
 மனித ஆன்மாவின் சித்திரங்கள்.
 
 கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
 ரசிக்கும் படி எழுதிக்குவித்த
 எம் கவிஞர்கள்
 எப்போதும் எழுதியதில்லை
 காலம் காலமாய்
 வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
 நம்மை நம் சந்ததிகளைத்
 துரத்திக்கொண்டிருக்கும்
 மரணத்தின் ஓசையை.
 
 (3)
 
 மரணம் மட்டுமே அறிந்த
 எம் விளைநிலத்தில்
 குருதியின் நிறத்தில்
 பூக்கும் மலர்களில் கூட
 வீச்சமடிக்கும்
 இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.
 
 எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
 உங்கள் குழந்தைகளும்
 குழந்தைகளாக வளரவில்லை.
 வெடிகுண்டுகளும்
 பீரங்கி ஓசைகளும்
 பாலூட்டிய
 பதுங்குகுழிகளின்
 மழலை விரல்களில்
 பிறக்கும் போது
 பதிந்துவிட்டது
 ரத்தம் தோய்ந்த
 வன்மத்தின் வாடை.
 
 யுத்த வெறியில்
 உன்மத்தம் பிடித்த
 நாய்களுக்குத் தெரிவதில்லை
 நடுவீட்டிலும்
 புதைக்கப்பட்ட
 கண்ணிவெடிகளின் காட்சி.
 சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
 ஜனிக்கக்கூடும்
 கம்சன்களை வதைச் செய்யும்
 கண்ணனின் அவதாரம்.
 
 (4)
 
 மக்களின் மரணத்தை
 கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
 மனிதம் மரணித்து போனதை
 மவுனமாக பதிவு செய்தது
 அந்த நீண்ட இரவு.
 
 தப்பித்ததாக சொன்னார்கள்.
 நலமாக இருப்பதாக
 நம்பிக்கையுடன சொன்னார்கள்
 இல்லை இல்லை
 எல்லாம் முடிந்ததென்றும்
 எரித்துவிட்டதாகவும்
 சாம்பலைக் கூட
 இந்தியக்கடலின் மடிநிறைக்க
 கரைத்துவிட்டதாகவும்
 காற்றில் கலந்துவிட்டதாகவும்
 மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..
 
 மரணத்தை மீறியும்
 தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
 வாழ்க்கையும் உண்டு
 போராட்டங்களும் உண்டு
 
 தன் பெண்டு தன் பிள்ளை
 தன் மனைவி தன்துணைவி
 தன் பேரன் தன் சுற்றம்
 இவர்களையே மந்திரிகளாக்கும்
 வித்தைகள் அறிந்த
 நம் தலைவர்கள்
 அறிந்ததில்லை
 நிலத்தடியில் உதிக்கும்
 சூரியக்குஞ்சுகளை.
 
 (கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் 
இறப்பும்"
 கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)
 
puthiyamaadhavi@hotmail.com
 இழந்து போனவைகள்…!
 
 - மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை) -
 
 
  
மிச்சமாய் இருக்கும் ஒற்றைக் கால் கூட
 அதிஸ்டம் தான்
 இங்கே
 இரண்டு கால்களும் தறிக்கப்பட்ட
 பலரும் இருக்கையிலே….
 
 பிச்சைக்காரனின் துணிபோல
 முகம் எங்கும் கிழிபட்டு
 ஒட்டுக்கள்.
 அதுகூட கூடுதல் அதிஸ்டமாகிவிட்டது
 ஏன்எனில்
 பலருக்கு இங்கே முகங்களே
 தறிக்கப்பட்டிருக்கையிலே…!.
 
 உலக வரைபடம் போல
 உடலெங்கும் தையல்கள்.
 இதை விகாரமாக யாரும் நினைப்பதேயில்லை
 அனைவருக்கும் பொதுவான
 அடையாளம்
 மாடுகளுக்கு குறிசுடுவதைப்போல
 உடலெங்கம்
 சன்னங்கள் கிழித்த கோடுகள்.
 
 அங்கவீனர்களுக்கு
 மட்டும் தான் இட ஒதுக்கீடு எனில்
 அனைவருக்கும்
 ஒதுக்க வேண்டும்….!
 
 maduvilan@hotmail.com
 
 காதல்
 
 - ராம்ப்ரசாத், சென்னை. -
 
 குளிக்கக் காத்து நிற்கும்
 கரும்பலகையும்,
 கலைந்து கிடக்கும்
 நாற்காலிகளுமாய்
 தன் சீருடையில்
 கலையாமல் கிடந்தது
 கல்லூரி வகுப்பறை...
 
 பழக்கப்பட்ட இடம்தான்
 என்றாலும்,
 வாடாமல்லி அவளின்
 வாசம் காற்றிலே
 கரைந்து போகும்முன்
 என் சுவாசப்பைகளில்
 நிரப்பிக்கொள்ள,
 அவள் எழுந்து
 சென்றுவிட்ட பின்னும்
 அவளின் வெப்பம்
 தாங்கி நிற்கும்
 இருக்கையின் மேல் அமர
 பழக்கப்படாத துடிப்பில்
 துடிக்கிறதென் இதயம்...
 
 வேண்டாமென்று
 தடுத்த நாணத்தை, அவளின்
 மின்னல் புன்சிரிப்பால்
 பிடறியில் குத்திக்
 கொன்றுவிட்டு மெளனமாய்ச்
 சென்றமர்ந்து கொண்டேன்.
 எனது நாணத்தின் மரணத்திற்கு
 துக்கம் அனுஷ்டித்து
 மயான அமைதி காத்தது
 அந்த வகுப்பறை...
 
 நிலைக்கண்ணாடி
 
 குளித்து முடித்து
 அவிழ்த்த கூந்தலை
 அள்ளி முடிந்து
 நிலைகொள்ளா அழகை
 ஆடைக்குள் அடைத்து மறைத்து
 தென்றலாய் மிதந்து
 அன்னமாய் நடந்துவந்து
 சிலையாய் நின்றவளை
 முழுவதுமாய் உள்வாங்கி
 பிரதியெடுத்துப் பிரதிபலிக்கிறது
 அந்த நிலைக்கண்ணாடி...
 
 அவள் திரும்பி நடந்து
 சென்ற பின்னும்
 அவளையே பிரதிபலித்தால்
 எங்கே தன்னையும்
 ரவிவர்மனின் ஓவியம் என்றெண்ணி
 இந்த தொல்லியலாளர்கள்
 எடுத்துச் சென்றுவிடுவார்களோ
 என்றச்சமுறும் நிலைக்கண்ணாடி
 அடுத்து வந்த என்னையும்
 பிரதியெடுத்து பிரதிபலித்துவிட்டுக்
 அவளை மீண்டும்
 தன்னுள் ஏந்திக்கொள்ள
 காத்து நிற்கிறது,
 அதுபோலவே ஏந்தி
 தன்னுள் நிரப்பிக்கொள்ள
 ஏங்கிக் காத்திருக்கும்
 என் நிழல் போல...
 
 வித்தியாசங்கள்
 
 இமைகள் மூட விரியும்
 கனவுத்திரைகளில் அரங்கேரும்
 தேவதை உன்
 நினைவுகளில்,
 மயிலது விரிக்கிறது
 தோகையை அதுபோல்
 மேனகை நீ
 விரிக்கிறாய் உனது
 கூந்தலை...
 உன் விரல் ஸ்பரிசம்
 பட்ட ஒரே காரணத்தால்
 நான் எங்கு சென்றாலும்
 என்னுடனே பயணிக்கும்
 இந்த புத்தகத்தின்
 ஏதோவொரு பக்கத்தில்
 நிரந்தரமாய் தங்கிவிட்ட
 இந்த மயிலிறகிற்க்கும்,
 வருணன் கண்விழித்துவிட்டான்
 என பொய்யுரைக்கும்
 தோகையாய் விரியும்
 உன் கருமேகக்கூந்தலுக்கும்
 வித்தியாசங்கள் ஒன்றே ஒன்றுதான்
 என்றே உரத்துக்கூறுவேன்..
 என்னவென்று கேட்போருக்கு
 பதிலுரைப்பேன் முன்னது
 மயிலுடையது,
 பின்னது என்னவளுடையது
 என்றே...
 
 www.ramprasathkavithaigal.blogspot.com
 
 அதிரூபவதிக்கு....
 
 - மாமதயானை- -
 
 
  இவ்வுலகின்அதிஅற்புதமான கவிதை
 என்
 தோளில் சாய்ந்து
 சிரித்து கொண்டிருக்கிறது
 
 பிறந்த குழந்தையின்
 பிஞ்சு விரல்களின்
 மென்மையை
 தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்....
 உன் வார்த்தைகளில்
 
 மழைக்காலங்களில்
 உனக்கு
 குடை வாங்கித்தர
 பிரியப்படுகிறது
 என் மனசு
 ஆனால்
 எப்பொழுதும் போலவே
 மழையில்
 நனையவே
 பிரியப்படுகிறது
 உன் மனசு
 
 உன்
 திவ்விய தரிசனத்திற்காக
 பவ்வியமாக
 காத்துக்கொண்டிருக்கிறது.....
 அடியேனின் உயிர்
 
 வெட்கத்தால்
 நிரம்பியிருக்கும்
 உன்
 முகத்தைப்போலவே
 காதல்
 சொர்க்கத்தால்
 நிரம்பியிருக்கிறது
 என் அகம்
 
 சகியே
 சமையல் செய்யவும்
 கோலம் போடவும்
 துணிகளைத் துவைக்கவும்
 கூடிய விரைவில்
 கற்றுக்கொள்கிறேன்.....
 நீயும்
 என்னை
 காதலிக்க கற்றுக்கொள்
 
 உன்
 அழுகையைக்கூட
 அதிசயித்தே
 பார்க்கும்
 என் காதல்
 
 கிளியோபாட்ராக்களுக்கும்
 நடுக்கத்தையே தரும்
 உன்
 காலடித்தடத்தின்
 அழகு
 
 manisen37@yahoo.com
 sengodi550.blogspot.com
 
 பெயர்தானென்னவோ!
 
 - வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க் -
 
 
  
என்று பிறந்தான் தமிழன் இலங்கையில்என்ற கேள்வியை வென்றவர் நாம்.
 தொன்றுதொட்டு வாழ்ந்த இனத்தைக்
 கொன்று ஒழிப்பதன் பெயர்தானென்னவோ!
 பத்தாயிரம் மலையகத் தமழர் வாக்குரிமை
 பத்திரமாய் பறித்தெடுத்த வினை,
 கல்லோயாவில் சிங்களக் குடியேற்றம்,
 ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திநான்கு
 தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கலவர வினை
 ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்தொன்றின்
 அரும் தமிழ் நூலக எரிப்பு வினை,
 தந்திரமான ஒரு தரப்படுத்தல் வினை,
 சிங்களம் மட்டும் ஆட்சி மொழி.
 ஆண்டுக்கு ஆண்டு இனக்கலவரங்கள்,
 தமிழர் கிராமங்கள், ஆலயங்கள் அழித்தல்,
 தமிழ் தெருக்களிற்குச் சிங்களப் பெயரிடுதல்,
 தமிழன் தரமிறக்கி அடிமையாக மாற்றுதலிற்குத்
 தந்திடும் பெயர் தானென்னவோ!
 அனைத்தும் இனவழிப்பில் சேராதோ!
 பத்திரமாக ஒரு தமிழன் அமைதி வாழ்விற்கு,
 உத்தரவாதமில்லாத நிலைக்கு நாம்
 வைத்திடும் பெயர் தானென்னவோ!
 மறத்தமிழர் வாழ்வை எம்மண்ணில்
 சிறகறுத்துக் கூட்டில் அடைக்கிறார்!
 திறமுடை ஒளி வழி திறக்குமென்று
 அறவழிப் போராட்டம் புலங்களில்.
 
 vetha@stofanet.dk 2-6-2009.
 |