| தமிழென்னும் தேனாற்றில்! 
 - சக்தி சக்திதாசன் -
 
 
  
  மனமென்னும் 
  வீணைதனில் இசைக்குதிந்த தமிழ் ராகம் மழலைப் பருவத்திலே விளைந்ததிந்த தமிழ் மோகம்
  நினைவென்னும் ஆழ்கடலில் மிதக்குதிந்த கவிதா யாகம்
 நிற்காமல் பொழியும் எண்ணமென்னும் மொழி மேகம்
 விழிமூடும் வேளயிலும் கனவாக மிதக்குமெந்தன் தாய்மொழியே
 வழியெங்கும் தோரணங்களாய் கவிதைப் பூக்கள் அலங்கரிக்கும்
 எனை வரவேற்க காத்திருக்கும் தமிழ்மொழியின் இனிய சந்தங்கள்
 என்றும் எனை வாழ வைக்கும் இனிய கவிதை வரிகள்
 
 காலமெனும் கப்பலில் காததூரம் கடந்து விட்டேன் நண்பா
 காணும் காட்சியெங்கும் கற்பனைப் பூக்களாய் மலர்கின்றதே
 மீதியுள்ள வாழ்நாளில் விரல்களின் வளைவினால் விளையட்டும் எழுத்துக்கள் மனிதனிவன் 
  மனதினிற்கு நல்கவிதை தானெ என்றும் நிம்மதி மீண்டுமொரு பிறப்புண்டு என்றேதன் இறை 
  சொல்வானெனில் மறுபடியும் மிதக்கவிடு தமிழ் தேனாற்றில் என்றே நான் மனமுருகி 
  வேண்டிடுவேன் ; அன்னை தமிழே அருளிடுவாய்
 மழையாக பொழியட்டும் அப்போதும் தமிழ்க் கவிதைகள்
 
 ssakthi@btinternet.com
 http://www.thamilpoonga.com
 
 
 அகரம்.அமுதாவின் கவிதைகள்!
 நத்தை!
 
 
  
  தொழிலிலை எனினும் சுமைதூக்கி!தொடர்ந்து நகரும் சுமைதாங்கி!
 வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ்
 வழிவழி போகா துள்ளபடி!
 
 ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு!
 உள்ளதன் படுக்கை அறையுண்டு!
 கொற்றவன் இல்லை என்றாலும்
 கோல எழில்மணி முடியுண்டு!
 
 கடந்து போகும் இடமெல்லாம் -பொதி
 கழுதை போலே சுமந்துசெல்லும்!
 அடடா! அதுதான் வீடாகும்!
 அதன்பேர் அதன்பேர் ஓடாகும்!
 
 கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
 கூரை அமைத்த கொத்தனிது!
 பட்டுத் தெளியுமுன் பட்டறிவால்
 ஐம்புலன் அடக்கும் சித்தனிது!
 
 கொம்போ டுடலை உள்வாங்கி
 கொடுமையி லிருந்துத் தப்பிக்கும்!
 ஐம்புலன் அடக்கும் வித்தையினை
 அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்!
 
 மதியுரை!
 
 தேய்ந்துத் தேய்ந்து
 தொலைந்த நிலாவும்
 தோன்றி வளர்வது கண்டாயா? –அது
 தேய்ந்துத் தொலைந்தும்
 தோன்றி வளர்ந்தும்
 தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?
 
 வளரும் போதும்
 மதியிழந் தேசிறு
 வழியும் மாறிச் செல்வதில்லை –அது
 தளரும் போதும்
 தன்னை மறந்தே
 தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!
 
 கொடுக்கக் கொடுக்கக்
 குன்றும் குறையும்
 கோள நிலாவும் குறைகிறது –தனை
 எடுத்துக் கொடுத்த
 இளைய நிலாவின்
 இசையே பிறையாய் நிறைகிறது!
 
 முயன்றால் நிச்சயம்
 ஏற்ற மென்பதே
 பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
 முயலா விட்டால்
 வீழ்ச்சி யென்பதை
 முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!
 
 இல்லை என்னும்
 இருளை ஓட்ட
 இளைய நிலாபோல் ஈந்துவிடு –நீ
 தொல்லை காணா
 திருக்க வேண்டின்
 ஈயும் போதே ஆய்ந்துகொடு!
 
 பம்பரம்!
 
 ஒற்றைக் காலில் நின்றபடி
 உன்னை என்னை பார்த்தபடி
 சற்றே காற்றைக் கிழித்தபடி
 சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?
 
 நிலையே இல்லா இவ்வாழ்வில்
 நிலைத்து வாழ வேண்டுமெனில்
 நில்லா துழைத்தல் வேண்டுமென்று
 நிற்கும் பம்பரம் சொல்கிறது!
 
 ஊனம் உடலில் இல்லையென்றும்
 உளத்தில் தானது உள்ளதென்றும்
 காணும் பேரைக் கூப்பிட்டுக்
 கனிவுடன் பம்பரம் சொல்கிறது!
 
 வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
 வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்
 இட்ட முடனே எல்லோர்க்கும்
 இயன்றது செய்திட இயம்பிடுது!
 
 தலைக்கனம் கொண்டே ஆடுவதால்
 தாழ்வே வந்து சேருமென்று
 தலையை ஆட்டித் தக்கபடி
 தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!
 
 தன்னைச் சுற்றும் சாட்டைக்கே
 தன்னை வழங்கும் பம்பரம்போல்
 உன்னை சார்ந்த உறவுக்கும்
 உன்னை ஈந்திடு என்கிறது!
 
 சொந்தக் காலில் நிற்பதுதான்
 சுகத்திற் சிறந்த சுகமென்றும்
 அந்தப் பம்பரம் சொல்கிறதே!
 அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!
 
  agramamutha@yahoo.com 
  
   
  இயற்கை அனுபவ நூலகம்!
 - வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ்,டென்மார்க்) -
 
 
  
  வானம்பாடிகளாக சுற்றுலாச் சோலையில்வார்த்தைகள் விபரித்திடவியலா மகிழ்வில்
 ஊற்றென உணரும் இன்ப சங்கமம்,
 சுற்றுலா இயற்கை அனுபவ நுலகம்.
 
 பற்றில்லா அவசர நெருக்கடி உலகம்.
 முற்றாகப் பிரச்சனைகள் மறந்த உல்லாசம்.
 தொற்றிய தொல்லைகள் உதறிய உற்சாகம்.
 வெற்றிடம் மனதில் அழிக்கும் உன்னதம்.
 
 சரித்திர சம்பவங்கள் துருவி ஆராய்ந்து
 சனத்தொகை, சந்தேகங்கள் கேட்டு அறிந்து
 சர்வமும் அறியும் ஆர்வம் நிறைந்தது,
 சரளமாகப் பெறும் பயண அனுபவம்.
 
 முழுக்க மனம் சூழலுள் கிறங்கி,
 அலுக்க, மெய், அலைச்சலால் மயங்கி
 புழுக்கச் சூழலை மனது மறந்து
 ’களுக்’ கென சிரிப்பு பூவென மலர்ந்திடும்.
 தொடரும் விருப்பப் பயணம் நீண்டது.
 படரும் உறவுகள் நெருக்கம் மிகுந்தது.
 
 நீண்ட பயணச் சிட்டுகளாய்க் கூடிக்கூடி
 தீண்டிய உணர்வுக் கவிதைகள் பாடிப்பாடி
 தூண்டும் ஆவல் படகில் ஆடிஆடி
 தோண்டினோம் அனுபவங்கள் நாடிநாடி.
 மீண்டு புரண்ட நினைவிலிமை மூடிமூடி.
 எமை ஆண்ட சுகங்கள் கோடிகோடி.
 
 vetha@stofanet.dk
 
 
 
  பாரீஸின் இலக்கியக் குரலை லண்டன் 
  தத்தெடுத்ததா?...
 - நவஜோதி ஜோகரட்னம் -
 
 
  
  இலக்கியம் மீதான காதல் அவனுக்குபாரீஸின் வீதிகளில் வருடங்கள் கழிந்தன…
 வெறுமையாகின்றன நாட்கள் …
 கனவுகள் நிஜமாகும்
 எழுத்துக்களை தன்னுள் வளைத்து
 கவிதை… கட்டுரை… சிறுகதை…
 சிருஷ்டித்தவன்…
 உரும்பிராய் பெற்றெடுத்த
 இலக்கியக் குரலொன்றை
 லண்டன் முழுமையாகத் தத்தெடுத்ததா?...
 லண்டனில் முழங்கிய
 இலக்கிய இராகம்; கேட்க
 தொலை பேசி அழைத்த உன்
 உடன் பிறவாத் தங்கைக்கு உன்
 மரணச் செய்திதான் காத்திருந்ததோ?...
 உன் தம்பி சிவகுமாரன்
 மேல் ஸ்தாயி மேலிட
 மௌனத் தொனி கலந்து
 உன் மரணச் செய்தியையா சொன்னான்…
 ஐயோ…
 சுருதிகள் மாறி மாறி அதிர்ந்தன…உன்
 மரணச் செய்தி கூட என்னுள்
 புதிய முகாரிகளைத்;; தொடுத்தன…
 எங்கள் விழிகள் வடிக்கும் கண்ணீர்
 உன் பூவுடலை
 சுருதியாக்கி; இசைக்கட்டும்… உன்
 ‘சுரங்கள் மாறி…’
 எங்கள் நினைவில் என்றும் நிலைக்கட்டும்;…உன்
 துயரில் வாடும் அனைவரது கண்ணீருடன்
 எங்கள் கண்ணீர் இணையட்டும்…
 சென்றுவா சோதரா…! இலக்கியத் தூரிகையோடு…!
 
 - அகஸ்தியர் குடும்பம் சார்பாக -
 20. 5.2008.
 
 [அண்மையில் மறைந்த எழுத்தாளர் திரு.சிவலிங்கம் சிவபாலன் நினைவாக இக்கவிதை. இவர் 
  எழுத்தாளர் அகஸ்தியரின் இலக்கியத்தில் மிகப் பிரியமான கனவான். பழகுவதற்கு 
  இனிமையும் பண்பும் நிறைந்தவர்.]
 
 navajothybaylon@hotmail.co.uk
 
 
 
 
  நீர்!
 - இமாம்.கவுஸ் மொய்தீன் -
 
 
  
  பூமிப்பந்தின் பரப்பில்மூன்றில் இருபங்கு நீர்!
 
 உயிருக்கும் உடலுக்கும்
 இன்றியமையாத் தேவை நீர்!
 
 உணவு பானங்கள் பழங்கள்
 அனைத்திலுமே நீர்!
 
 ஊற்று அருவி ஆறு மேகம் உப்புகளின்
 தோற்றமும் தோன்றலும் நீர்!
 
 சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
 அழுக்கைப் போக்க நீர்!
 
 மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
 துக்கத்திலும் நீர்!
 
 சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
 தணிந்திருந்தாலும் நீரே நீர்!
 
 நீரின்றி ஏது இயக்கம்?
 நீரின்றி உயிரில்லை!
 
 நீரின்றி உலகுமில்லை!
 எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!
 
 drimamgm@hotmail.com
 
 
 
  தொலைந்து போனச் சாவி
 - புதியமாதவி, மும்பை -
 
 
  
  எல்லா இடங்களிலும்தேடிப் பார்த்துவிட்டேன்.
 இத்தனைக் காலமும்
 பாதுகாத்துவைத்திருந்த
 சாவிக்கொத்தை.
 
 எந்தப் பூட்டுக்கு
 எந்தச் சாவி?
 சொல்லவில்லை யாரும்
 சோதிக்கவில்லை நானும்.
 சாவிக்கொத்தை
 இடுப்பில் சொருகிக்கொண்டு
 இருப்பதே பழகிப்போனதால்
 அச்சமாக இருக்கிறது
 சாவிகள் இல்லாத
 இடுப்பைச் சுமந்து கொண்டு
 திறந்தவெளியில்
 எப்போதும் போல
 எழுந்து நடமாட.
 
 யார் தந்தார்கள்
 என்னிடம் இந்தச் சாவிக்கொத்தை?
 எப்போதாவது
 எந்தப் பூட்டையாவது
 என்னிடமிருந்த
 எந்தச் சாவியாவது
 திறந்திருக்கிறதா?
 
 யோசித்துப் பார்க்கிறேன்.
 அம்மா,
 அம்மாவின் அம்மா,
 அவளுக்கு அம்மா,
 அம்மம்மா..
 இவர்களுடன் சேர்ந்து கொண்டது
 புதிதாகத் திருமணமாகி
 புக்ககம் வந்தப்பின்
 மாமியார் கொடுத்தச் சாவிகளும்.
 
 ஒவ்வொரு சாவிகளையும்
 பத்திரமாக வளையத்தில் கோத்து
 அலங்காரமான
 விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்
 தொங்கவிட்டு
 பாதுகாத்துவந்த
 எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து
 காணவில்லை..
 தொலைத்துவிட்டேன்.
 
 இனி,
 எதைக்கொடுப்பேன்
 என் மகளுக்கும்
 வரப்போகும் மருமகளுக்கும்!
 எப்படியும்
 அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்
 தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல
 சாவிகள் இல்லாமல்
 பூட்டுகளை உடைக்கும்
 புதிய வித்தைகளை.
 
  puthiyamaadhavi@hotmail.com |