| 
இதய கீதம்!
 மூலம் : ஜான் லெனனன்,  பீட்டில்ஸ் பாடகர்.  (1940 - 1980)
 
 தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
 
 
 
ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்குள்! பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு!
 விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு!
 எங்கோ உள்ளது என்னுள் ளத்தின் ஆழத்தில்!
 இங்கே காணேன் என்பதை அறிவேன்!
 முன்னமே உள்ள தென்னுடை மனதிலே!
 என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
 எங்கெலாம் எனை இழுத்துச் செல்லினும்!
 என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
 எப்போது நான் அழைக்கப் படினும்!
 என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
 ஆம், இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்!
 ஓம்
 
 
 இந்தியாவே ! இந்தியாவே !
 என் வேண்டுகோளை கேளாய் !
 பொறுமையுடன் உன் திருவடிகளில் அமர்ந்துளேன்.
 ஆற்றங் கரையில் காத்துளேன். ஆயினும்
 எங்கோ என் நினைவில், இங்கி லாந்தில்
 இறக்கி விட்டேன், என்னிதயம் தன்னை
 விட்டுச் சென்ற என் காதலியுடன்!
 எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்,
 என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
 எப்போது நான் அழைக்கப் பட்டாலும்,
 என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
 ஆம், இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்
 இந்தியாவை நோக்கி!
 
 jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 5, 2007)]
 
 பிராத்தனை!
 
 நவஜோதி. ஜோகரட்னம் (லண்டன்)
 
 
  
உழலும் நிஜங்களுக்குள்உத்தமர்கள்
 அவர்களுக்கு
 அருவருக்கும் முகங்கள்
 மகிழ்வற்ற முகங்கள்
 வெறுப்பூட்டும் முகங்கள்
 பயத்தின் முகங்கள்
 
 மோசமான கனவுகளை
 ஆகாரமாக்கிக் கொள்கின்றார்கள்
 பீரங்கிகளால்
 சுருதி சேர்த்துக் கொள்கிறார்கள் - படு
 மோசமான மதுவால்
 போதை ஏற்றிக்கொள்கிறார்கள்
 
 உருளும் உலகத்துள்
 பருவகாலங்கள்…
 வசந்தம் தலைகாட்டும்போது ஏனோ
 வீடுகள்…தோட்டங்கள்…
 தாறுமாறாகச் சுழல்கின்றன…
 முகத்தில் விம்மல்கள் புதைய
 ஒரு விரக்தி…
 மலைத்துப்போய்
 மனித கட்டளைப்படி
 மலைமேல் அமர்ந்திருக்கிறேன் ;
 வானத்து எல்லைகளை அளக்க முயல்கிறேன்
 உள்ளுணர்வு அழைத்து
 சிதைவுற்ற குரலாகிறது…
 சிவப்பைச் சுரக்கின்ற இதயமே!
 என் பகல் பிராத்தனைகளை - நீ
 கேட்க மாட்டாயா?...
 
 9.5.2007
 
 பிரவாகமாய் ஒளிர்ந்த பிரமானந்தா…!
 
 இங்கிலாந்தின் கலைக்கூடங்களில்
 இசையைப் பிரசவித்து
 நாதப் பிரவாகமாய் ஒளிர்ந்த
 நாகேஸ்வரி பிரமானந்தா!
 ஆறடி நீளம் இரண்டடி அகலம்
 என ஒரு வெளியில்…
 அந்த வெளியை உடைத்துவரும் காற்றாகி
 துயர இழைகளில் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் அம்மா!
 உங்கள் இசையின் புன்னகை மட்டும்
 தனித்து நின்று
 தெறித்தும் முறிந்தும் சிதறிப்பரவுகிறது…
 தனித்துவமான கலைச்செல்வமே! எம்
 விழிகள் வடிக்கும் கண்ணீர்
 உங்கள் பாதங்களுக்குக் காணிக்கை!
 
 12. 5.2007
 navajothybaylon@hotmail.co.uk
 
 இருளும். . . .வெளிச்சமும். . .
 
 - வைகைச் செல்வி -
 
 
வெளிச்சத்தை நாள்தோறும்
 உருவாக்க வேண்டும்.
 இருட்டோ இயல்பானது.
 
 வெளிச்சத்திற்கு
 பல உருவங்கள்
 பல நிறங்கள்
 இருள்
 மாறாதது.
 
 ஆழ்ந்த இருள்
 பயத்தை உண்டுபண்ணினாலும்
 அமைதியும் இருக்கும்.
 
 வெளிச்சத்தின்
 இரைச்சலில்
 மனம் குருடாகும்.
 
 வெளிச்சத்தை
 நேசிக்க வேண்டிய
 எனக்கு
 சில வேளைகளில்
 இருட்டும் பிடித்திருக்கிறது.
 
 இருளில்தான்
 மனிதர்களால்
 மாற இயலாது
 பச்சோந்திகளாக.
 
vaigai_anne@yahoo.com
 
 என்.சுரேஷ் (சென்னை) கவிதைகள்!
 
 பூஞ்சோலை...
 
 
புன்னகையை மறந்து விட்டது- எங்கள்பூஞ்சோலை கிராமம்
 
 மழை பொழிய மறுக்கிறது
 முகில்களெல்லாம் இங்கு மட்டும்
 
 தென்றலும் தொலைந்து போனது
 மரங்களெல்லாம் சிலைகளாகிட
 
 கோபத்தின் வெப்பம் தொடர்கிறது
 சூரியன் கடலிற்குள் மூழ்கினபின்னும்
 
 வெப்பம் நிலவுகிறது
 நிலா மழையிலும்
 
 தண்ணீர் வேண்டாமென்ற கோஷமிடுகிறது
 வறண்ட நிலங்களெல்லாம்
 
 என்னுயிர் காதலியே!
 எங்கள் மண்ணிலுந்தன்
 மலர்பாதம் முத்தமிட்டால்
 பூஞ்சோலை கிராமம்
 பூஞ்சோலையாகும்!
 
 பைரவன்...
 
 
பிஞ்சு குழந்தையின் அழமுடியாமல் அழும் சத்தம் - அது
 பிரபஞ்சத்தின் கனிவுமலைகளை
 உருக்கும் சத்தம்!
 
 பூமில் பிறந்து..
 இருபதே நாளென்றாலும்
 நாய்க்குட்டியும்
 ஓர் குழந்தை தானே?
 
 சித்திரையின் தீமழை நிழலில்
 உருகுமதன் முகத்திரையாய்
 எறும்புகளின் மாநாடு!
 
 வெயிலால் வாடி
 விழுந்த பிஞ்சுக் குழந்தையது
 தேடி அழுதும் நாடி வர
 பெற்றோகள் யாருமில்லா
 விந்தையிது
 எங்கள் ஆலையின் முன்னே
 நடந்த அவலம் - உடனே
 அன்பர்கள் நாங்கள் ஒன்று கூடி
 அதன் மேல் கவனமூட்டிட
 
 எறும்புகள் அழுக்குகள்
 இவையகற்றி சுத்தம் செய்து
 தண்ணீரும் பாலுமூட்டி
 நீர் தெளித்து நிற்க வைத்து
 தெரிந்த மருத்துவம்
 அத்தனையும் செய்தோம்!
 
 தெளிந்த குழந்தையது
 திடீரென கண்திறந்து
 நன்றியால் எங்களை பார்வையிட
 வெயிலில் வாடின மரங்கள்
 தென்றல் வீசி
 எங்கள் மனங்களையும்
 அறுதல் செய்தது!
 
 செல்லமாய் அவனுக்கு
 பைரவன்
 என்று பெயரிட்டோம்
 இனிமேல் நம்மில் ஒருவன்
 இவனுமென்றோம்!
 
 சில்லென்ற காற்றில்
 குழந்தையவன் தூங்கினான் - ஆனால்
 சில நொடிகளிலியே
 பைரவன் பாவம்
 நித்தியமாய் தூங்கிவிட்டான்!
 
 தான் அனாதையல்ல
 தனைச் சுற்றி கண்ணீருடன்
 தனக்கென எத்தனை பேர்! - என்ற
 பெருமையில்
 மக்ழிந்து மரித்தான் பைரவன்!
 
 பாக்கியம் செய்தவன் பைரவன்
 பாக்கியமில்லா எத்தனை மனிதர்கள்!
 
 nsureshchennai@gmail.com
 |