| 
    
வேர்களே நீவீர் காலம் வரும் வரை 
கலங்காதிருப்பீர்!
 - மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை) -
 
 
  
நெருப்பிலே வீழ்ந்து கருகிடும் விட்டில் போலானவரென்றும்
 மரணத்தை வலிந்திழுத்து இருந்த இடம் தெரியாது
 உரிகிப்போயினரென்றும்
 ஆளாளுக்கு ஒரு அறிக்கையினை
 அவிழ்து விடுகிறது
 உலகம்.....!
 
 நம்பிக் கெட்டது
 நமது பிழை என்றும்
 நடுத் தெருவிலே விட்டது
 அவர்களின்
 சாமத்தென்றும்
 இழுக்குகளையும் அழுக்குளையும்
 அச்சேற்றிக் கொண்டாடுகிறது கிழக்குலகம் ....
 
 தேனெடுப்பதற்காக
 ஈக்களைக் கொல்லலாம் என்றும்
 படுகொலை
 செய்தால்தான் அரசியலில் வெல்லாம்
 என்றும் நிறுவியிருக்கிறார்களாம்.
 
 புறாக்களை
 சிறை செய்துவிட்டு வெடிகொழுத்தப்படுகிறது
 புலுனிக் குஞ்சுகளைக் கொன்றுவிட்டு
 பால்சோறு தின்னப்படுகிறது ....!
 
 மசுக்குட்டிகள் என்று ஒதுக்கியிருக்கக் கூடாது
 வண்ணாத்துப் பூச்சிகளுக்கான வாய்பினை
 கொடுத்து
 உலகை அழகுபடுத்தியிருக்கலாமே ...?
 
 சோழனின் தேருக்குக் கீழே
 விழிபிதிங்கிச் செத்ததெல்லாம்
 பசுக்கன்றுகள் தானென்பதை
 ஆராட்சி மணிகள் ஏன் சொல்லத் தயங்குகின்றன...?
 
 உமது இந்த மௌனத்தைக்காட்டிலும் கூட
 நரகத்திலே போய்
 பிழைத்துக் கொள்வாயென்று
 நீவீர் சபித்திருக்கலாமே.
 
 பீறி வரும் எங்கள் குரல்
 உங்களுக்கு
 கேட்டிருக்க வாய்ப்பில்லை
 ஏன் எனில் எங்கள் சத்தங்களை எல்லாம்
 நுரையீரலுக்குள்ளே அல்லவா
 சிறைவைத்திருக்கிறார்கள்.
 
 ஒரு கவளம் சோறும்
 ஒரு கோப்பை நீரும் கிடைக்கிறது ஒன்றாக.
 இது தானிங்கு சுதந்திரம் எனக்
 கற்பிக்கவும்படுகிறது
 
 முப்பது வருட
 வேளாண்மையின் அறுவடை இதுதானா
 
 சிறைக்கூடமும்
 கைவிலங்கும் தேவைக்கதிகமாகவே
 இங்கே சிதறிக்கிடக்;கிறது.
 ஆதலால் இங்கே எந்தக் கோரிக்கையையும்
 உரத்து முன்வைக்க முடியாது.
 
 தேர்தல் திருவிழா களைகட்டிக்கிடக்கிறது.
 வாக்காளரைக்காட்டிலும்
 வேட்பாளரின் தொகையே நிரம்பி வழிகிறது
 
 கோரிக்கையோ
 கொள்கையோ எதுவுமில்லை.
 ஆனாவில் இருந்து அரசியல் செய்யப் போவதாகவும்
 அயல் நாட்டானிடம்
 பிச்சையை
 வாங்கி வரப்போவதாகவும்
 கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
 
 ஊரிமை கேட்டு உழைத்தவன்
 கழைத்து விழுந்திருக்கிறான்.
 அப்புக்காத்துகள்
 ஆசிரியன் தொடக்கம்
 கூத்துப் போட்டவன்
 கதை எழுதியவன் வரையிலும்
 வரிசை கட்டி வாக்கைக் கேக்கிறான்.
 
 நாத்து நட்டவனுக்கு கஞ்சியில்லை
 கூலிக்காரனுக்கோ
 எதுவும் மிஞ்சவில்லை
 இந்த லட்சணத்திலே தான் வீடு வந்து
 வாக்குக் கேக்கிறான்.
 
 துன்பச் சிலுவையை கழுவுவவே
 இங்கே கவிதை
 எழுதுகிறோம்.
 
 அரசனைப் புகழ்ந்து
 எழுதி
 அவனது பாதம் கழுவி
 விழும் பொன்னாடையினைக்காட்டிலும்
 துயரம் சுமப்பவருக்காக
 எழுதும் போது வீழ்கின்ற
 கண்ணீரின் வெகுமதிக்கு கனதி அதிகம் தான்.....
 
 யாராயினும் வந்தினி
 எமது விதி எழுதிச் செல்லலாம் என்றான பின்னே
 உல்லாசத் தேரிலேறி வருகிறார்கள்.
 தெருப்போட்டு தருவதாகவும்
 வீடு நோக்கி மாவலி வருவதாகவும்
 உறுதி தருகிறார்கள்.
 
 எதைச்சொல்லி
 எமை ஏமாற்றலாமென்று அவரகளுக்கு
 நன்றாகவே தெரிகிறது
 
 சிறைகளுக்குள்ளும்
 முள்வேலித் திரைகளுக்குள்ளும் காத்திருப்பவரே
 காலம் தன் பாட்டிலே வந்து
 தீர்ப்பெழுத வரும்
 அதுவரை
 வேர்களே நீவீர் கலங்காதிருப்பீர்
 
 maduvilan@hotmail.com
 *************************
 கொ(கு)டிகாரன்
 
 மதியழகன் (திருவாரூர் மாவட்டம்)
 
 
மது தேவையாயிருக்கிறது
 மானுடம்
 தனது பேய்த்தடத்தால்
 மெய்யை அழுத்த
 வலி தெரியாமலிருக்க
 மது
 தேவையாயிருக்கிறது
 மங்கையின் அழகு
 காண்பவரை மயக்குகிறது
 வானமற்ற வெளியில்
 உலவியது போல
 சுகங்கிடைக்கிறது
 இரண்டிலும்
 மாந்தர்களுக்கு சுகம்
 கிடைக்கிறது
 தியானம்,ஆன்மா,முக்தி
 - என்ற பேச்சைக் கேட்டாலே
 அகம் துடிக்கிறது
 வெஞ்சினத்தில் அவன்
 அகம் துடிக்கிறது
 அவன் மது அருந்துகையில்
 பூமி கூட போதையில்
 தடம் மாறி சுழல்கிறது
 சொகுசாக வாழும்
 மேல்தட்டு வர்க்கத்தினரை
 திட்டித் தீர்க்கிறது
 வாய் திட்டித் தீர்க்கிறது
 மறுநாள்
 போதை தெளிந்து
 காக்கிச் சட்டை அணிந்து
 அடிமை பிழைப்புக்கு
 தொழிற்சாலைக்கு
 ஓடும் பொழுது
 நினைவில் வருகிறது
 திரும்பவும் ஒரு மாலை வரும்
 மதுக் கோப்பையுடன்
 மற்றவர்களைத்
 திட்டித் தீர்க்கலாம்
 என்ற எண்ணம்
 நினைவில் வருகிறது.
 
 கடன்
 
 - மதியழகன் (திருவாரூர் மாவட்டம்) -
 
 
  
என் வீட்டுநிலைக்கண்ணாடியில்
 வேறொருவன் முகம்
 என் பிம்பம்
 என்ன ஆனது
 ஏன் வெளிப்படுத்திக்
 கொள்ளவில்லை தன்னை
 அகோரமுகம் தன்னை
 நீதானென்றது
 எப்படி நானாகயிருக்க முடியும்
 நேற்று வரை
 வேறுபிம்பமல்லவா தெரிந்தது
 நிலைக்கண்ணாடி முன்பு
 நிற்கையில்
 ‘உன் பிம்பம்
 உனதானால்
 இவ்வுடலும் உனதாகுமன்றோ
 இவ்வுடலே மரித்திடும்போது
 பிம்பம் எனதாகுமன்றோ
 கடன் கொடுத்தேன்
 காலம் முடிந்தது
 ஒவ்வொன்றாக திருப்பி
 எடுத்துக்கொள்கிறேன்
 இச்சிறைக்கூடத்தில்
 எவரும் தண்டணையிலிருந்து
 தப்ப இயலாது
 உன் பிம்பத்தை
 நீயென்று எண்ணாதே
 பிறப்புக்கு முன்பு
 எங்கிருந்தாய்
 இறப்புக்கு பின்பு
 எங்கி்ருப்பாய்
 கடன் கொடுத்தேன்
 காலம் முடிந்தது’
 என்ற அசரீரி கேட்டது
 அக்குரல் கேட்டு
 கடன்பட்டார் நெஞ்சம்
 போல் கலங்கத்தான்
 முடிந்தது என்னால்.
 
 ப.மதியழகன்,
 115, வள்ளலார் சாலை,
 ஆர்.பி.சிவம் நகர்,
 மன்னார்குடி-614001,
 திருவாரூர் மாவட்டம்.
 தமிழ்நாடு.
 
 cell:9597332952
 mathi2134@gmail.com
 **********************************************
 
 செம்மொழி பேணுவோம் எழுவீர்
 - காரையூர்க் கவிஞர் (கனடா)-
 
 
  
செம்மொழி என்றே பார்புகழ் படைத்த தமிழைஎம்மொழிக்கும் சரிநிகராய் தலைநிமிர்ந்து தரணியில்
 செம்மார்நது இறுமாந்திடப் புலம்பெயர் தமிழரெலாம்
 நம்தமிழ் பேசிடுவோம் நற்றமிழ் போற்றிடுவோம்.
 
 செம்மொழி முத்தமிழாய் தடம்பதித்து வளர்கதை
 செம்பாகமாய் நாடறியும் சான்றுடனே இவ்வுலகை
 நம்மினத்தின் இணையத்தளம் இசைத்தே ஏகமாக்கும்
 விம்மிதத்தால் தென்றமிழும் நாலாய் மலர்ந்ததுவே.
 
 கற்றவர் கேட்டவர் கவிஞர் பாடகர் நாடகர்
 மற்றவர் எல்லார்க்கும் அமிழ்தாய் உருசித்திடும்
 நற்றமிழில் பேணுவதும் பாடுவதும் எழுதுவதும்
 கற்றவர் தங்கள் கடனெனக் கொள்வோமே!.
 
 செம்மொழி என்றுயர் செவ்வியுடை நம்மொழியை
 எம்மவர் ஓம்புதல் இயற்றை யென்றிடுவோம்
 செம்மொழி மகாநாடு கூட்டிடுவோம் பூமியிலே
 எம்மொழி பார்தனில் ஏற்றம் பெற்றிடவே.
 
 புலம்மாறிய தமிழாநின் பேச்சும் மூச்சும்
 புலம்பெயரினும் நிலைபெயராமல் நித்தமும் நிலவிட
 நலம்பாடி டுவோம் நாடெல்லாம் பரப்பிடுவோம்
 கலங்கரை விளக்கமாய்க் கன்னித்தமிழ் ஒளிரட்டுமே.
 
 செம்மொழி எங்கள் தாய்மொழி எனவே
 விம்மிதம் எய்திடுவோம் வித்தைகள் கற்போம்
 நிம்மதி யடைந்தே நித்தமும் மகிழ்வோம்
 அம்மையும் அப்பனும் ஆதரவு நல்குவரே.
 
 balasundarame@yahoo.com
 **********************************************
 இனவாதம் இறக்கட்டும்.....
 
 - வேதா இலங்காதிலகம் -
 
 
  
எட்டு வருடங்களின் பின் பாதம்தொட்டது கொழும்பு மண்ணை.
 கட்டிடம் காட்சிகள் கண்ணில்
 பட்டது பழைய மாதிரியே.
 
 வண்ணச் சாயங்கள் களன்ற
 கண்ணுக்கிதமற்ற கடைத் தொகுதிகள்.
 முன்னேற்றம் என்பது பத்திரிகையின்
 கண்ணோட்டம் மட்டும் தானோ!
 
 ஏ9 பாதை தமிழ் பகுதியில்
 ஏற்றிய பெயர்ப் பலகைகள்
 எழுதியது சிங்கள மொழியாக,
 முழுசினேன் இடங்கள் அறியாது.
 
 கழுத்துறைஇ காலிஇ மாத்தறையில்
 முழுதாகத் தமிழில் அறிவிப்புகளைக்
 கொழுவினால் அவ்விட நிலையென்ன!
 எழுந்தது கேள்வி என்னுள்ளே.
 
 பிரதேச மொழியை முதலாக்கி
 பரவலாய் மூன்று மொழியிலும்
 புரளவிடும் அறிவிப்புப் பலகையால்
 தரம் யாருக்குக் குறைந்திடும்!
 
 இத்தனை நவீன உலகில்
 மொத்தமாய்த் தமிழினம் ஒடுங்கி
 சித்தத்தில் மகிழ்வற்று வாழ்கிறார்.
 உத்தம சொர்க்கமா நம்நாடு!
 
 குரோதம்,  இனத்துவேசம்,  சுயநலம்
 குமுறும் போதுஇ தொண்டையிலேயே
 கமறுகிறது இன ஓற்றுமை.
 திணறுகிறது தமிழினம் விடிவுக்காய்.
 
 புத்தன் தேச மக்களின்
 சித்தக் கலக்கம்,
 பித்தமேறிய இனவாதம்
 செத்துப் போகுமா!
 
 ஓகுஸ், டென்மார்க்.
 28-5-2010.
 kovaikkavi@gmail.com
 
 *******
 
 பொங்குக தமிழ்!
 
 - வேதா இலங்காதிலகம்:-
 
 
  
வாய் நிறைத்தமிழ் வார்த்தைகள் கோர்த்துவழிந்திடச் செய்கிறோம் எழுதுகோலால்,
 வளைக்கிறோம் தமிழ் கவி மாலையாய்
 
 தமிழ் மொழி அது அமிழ்து.
 பழி,  இழிவின்றி அழியாது காக்க
 விழியெனக் காத்து வளர்க்கலாம்.
 
 நம் மொழியால் நம்மரபு காக்கப்படும்.
 நம் மொழிக்கீடாக எம் மொழியாகும்!
 இம் மொழியால் தான் போரும் எழுந்தது.
 
 பொன்னிகர் தமிழை உயிராய்ப் போற்றி
 நன்னிலை கண்டு எந்நாளும் நிலைத்திட
 மண்ணிலே தமிழை யாவரும் பயிலலாம்.
 
 அந்நிய மொழியை செந்நீரென்று எண்ணாது
 மண்ணோடும் எம்மோடும் கலந்த முத்தமிழை
 எம்முதுகு நாணாக வலிமை சேர்க்கலாம்.
 
 மொழியின் வேரை இழுத்து வீழ்த்தும்
 குழுக்களின் சதியால் இனமே ஆடுது.
 தாழும் நிலைமாறி எழும் நிலைவேண்டும்.
 
 மொழியும் நாடும் உயிரெனக் கொண்டால்
 அழிவால் அமுங்காது உயரே ஏறலாம்.
 பொங்கும் தமிழ் எங்கும் மலரட்டும்!
 
 ஓகுஸ், டென்மார்க்.
 25-5-2010
 kovaikkavi@gmail.com
 *****************
 
 தகுதி
 
 - சுபா சபா -
 
 
  
அழகான மணமகன்சொந்த கடை
 நல்ல நிறம்
 அவருக்கு
 நல்ல அரசாங்க
 உத்தியோக பெண்
 வேண்டும் என்று
 தரகர் அவர்
 கூறி நிற்க
 ஆழகான பெண்
 அவள் -
 அரசாங்க உத்தியோகம
 பட்டதாரியவள்
 படம் ஒன்றை காட்டி
 நிற்க
 மணமகன் தன்
 சம்மதம் தெரிவிக்க
 மணமகன் என்ன
 படித்தவர் என
 கேட்ட போது
 தான் தெரிந்தது
 எட்டாம் வகுப்பு
 தாண்டவில்லை என்று;
 
 ***********************
 
 மணமகள் வேண்டுமாம்
 
 - சுபா சபா -
 
 
  
நீண்ட கூந்தலாள்மெல்லிய மேனியாள்
 கொடி யிடையாள்
 சிவப்பு நிறமவளாய்
 வேண்டும் என்று
 மணமகன் வீட்டினர்
 பெண் உருவை சித்தரிக்க
 அந்த பெண் வீட்டினர்
 மணமகனை சந்திக்க
 போன போது
 பொழுது சாய்ந்த வேளையிலே
 பொறுமையோடு மணமகளும்
 மனமாக வந்து நின்றாள்
 மணமகனைக் காணவில்லை!
 கருநீல நிறமவனை
 ‘காமாச்சி’ மாடென்று எண்ணி
 விடுக்கொன்று சென்றுவிட்டாள்
 விளங்காத மணப் பொண்ணு..
 
 suba2304@gmail.com
 ***********************************
 நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை 
திறந்திடுவோம்...!!
 
 - கவிஞர் பொத்துவில் அஸ்மின் -
 
 
  
இலங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!
 கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!
 விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!
 
 உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!
 உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!
 கலகத்தை காதலிக்கும் உணர்வுகளை கொய்திடுவோம்..!
 களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!
 
 நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!
 நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!
 சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!
 சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!
 
 சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!
 சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!
 சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!
 சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்திறந்து கதைத்திடுவோம்..!
 
 அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை
 அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!
 புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்
 புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!
 
 எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!
 நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!
 கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!
 மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!
 
 எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.
 எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்
 ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்
 ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.
 
 மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!
 மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!
 இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்
 இலங்கையராய் வாழ்வதற்கு உன்குழந்தைக்கும் கற்றுக்கொடு..!
 
 மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!
 மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!
 இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!
 இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்...!!
 
 vtvasmin@gmail.com
 0094 771600795
 |