முனைவர் ச.சந்திரா கவிதைகள்!
நடுத்தெருவில். . . . . . . . . .
விதை
முதல் விருட்சம் வரை
பாரத தேச சொத்திற்கு
உயில் எழுதுகிறது
அன்னிய அரசாங்கம் !
நாட்டின் முதுகெலும்பு
முறிக்கப்பட்டு
நரம்புகள் அறுக்கப்படுகிறது
நவீனம் எனும் ஆயுதம் கொண்டு,
உழவு மாடுகள் உல்லாசமாய்
பயணம் போகின்றன
உயிரிழக்கும்
உண்மையறியாமல்!
பயிர்களோடு
மனிதப் பிணிகளை
சேர்த்தே வளர்க்கின்றன
செயற்கை உரங்கள் !
பூச்சிக் கொல்லி மருந்துகளோ
அணு அணுவாய் உருமாற்றம்
மனித உயிர்க் கொள்ளியாய்
நிலமகளின் துகிலுரிக்க
துச்சாதனனாய்
அறுவடை
இயந்திரத்தின் அவதாரம் !
மொத்தத்தில் விவசாயம்
நவசாயம் பூசிக்கொண்டு
நடுத்தெருவில் ஊர்வலம் !
கண்ணீர் பயணம்
உழவை
பாடிய
வள்ளுவன் வாக்கு
வாய்க்காலோடு போனது !
பாரதி வாக்கோ
பாத்தி தாண்டி
பரலோகம் சென்றது !
கல்லணை
கட்டிய காலம் மாறி
கண்ணீர் நதியின்
குறுக்கே கடன் அணை
கட்டும் விவசாயிகள்!
அனுப்பியவர்: albertgi@gmail.com
ஆக்கியவர்: முனைவர் ச.சந்திரா,தமிழ்த்துறைத் தலைவர்
அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி
கிருட்டிணண்கோவில்.
*************************
ரூசோவின் கவிதைகள்
1.
பள்ளி முடிந்து
தோழிகளோடு நீ வருகையில்
எல்லா பென்களும்
என்னையே பார்க்க.
நீ மட்டும்
என்னை பாராமல்
மண்ணைப் பார்த்து
நடந்து போனபோது கொஞ்சமும்..
தெருவில்பெய்யும்
மழையின் சாரல்
தன்னையும் அறியாமல் சிறிது
ஜன்னலையும் நனைத்துவிட்டு போகுமே
அதுபோல
உன்னையும் அறியாமல்
உன் பார்வை
என்னைபார்த்துவிட்டு
போன போது கொஞ்சமும்..
வானிலை அறிக்கையைப் போல
உன் பார்வை
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு அர்த்தத்தையும்..
விதவிதமான ஏமாற்றத்தையும் தந்தாலும்
உன்னையும் மீறிய
உன் உதட்டுப்புன்னகையை
நழுவவிட்டு போனபோது கொஞ்சமும்..
அடுத்தவீட்டு குழந்தையை
இடுப்பில் இருத்தி..
கொஞ்சலும்..குழந்தையுமாய்..
குழந்தையும் குழந்தையுமாய்..
கொஞ்சூண்டு கொஞ்சலை
கடைகண்ணில் எனக்கு
கொடுத்துவிட்டு போனபோது கொஞ்சமும்..
கொஞ்ச கொஞ்சமாய். .
கொடுமையான ஒரு கிருமியைப்போல
என் உடலெங்கும் பரவி விட்டாய்
ஆனாலும்
மரணத்திற்கு பதில்
ஜனனத்தை தருகிற
அழகான கிருமி நீ..
2.
தீ
திரியை பிரிகின்ற பொழுதில்
தீக்குள் நிகழும்
படபடப்பை போல
என் இதயம்
நீ பிரிந்த வேளையிலே..
எதிர் எதிரே
இருவரும்
பிரிந்து கடந்து போகிறோம்
நம் மௌனம் மட்டும்
ஒன்றாய் போகிறது
தினமும் உதிக்கும்
சூரியனாய் இரு
சுட்டெரித்தாலும்
தாங்கி கொள்வேன்
குளிரும் பௌர்ணமியாய் வேண்டாம்
பிரிவை தாங்கி கொள்ள
என் இதயம் ஒன்றும்
பாறை அல்ல
3.
கவிஞனான எனக்கு
மூட நம்பிக்கைகள் கிடையாது
காதலனான எனக்கு
மூட நம்பிக்கைகள் உண்டு
எதிரிலிருக்கும்
அம்மன் கோவிலுக்கு
ஏழெட்டு முறைதான் போயிருப்பேன்
உன்னை பார்த்த பிறகு
எட்டி கூட பார்த்ததில்லை
நம்பாதீர்கள்
இதெல்லாம் நடக்காது என்று
நன்பர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு
உனக்கான
ராசிபலனை நாளிதலில் பார்ப்பேன்
நிதமும்..
நீ அருகில் இல்லாவிட்டாலும்
எங்கிருந்தோ என்னை பார்ப்பதாக
நம்பிக்கொண்டு
என்னை விரும்பி பார்க்கும் பென்களைக்கூட
திரும்பி பார்க்க மறுக்கிறேன்..
நீ கோபித்துக்கொள்வாயோ
என்ற குருட்டு நம்பிக்கைதான்..
marine_engineeruso@yahoo.com
http://minpaakkal.blogspot.com/
மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள்!
இந்நாள் பாரதம் ...!
இராமனுடைய
சிந்தனை எல்லாம்
சீதையை மீட்பது பற்றியாதாக இல்லை
இலங்கையினை கவர்வதே
அவனது இப்போதைய
நோக்கம்....
திரௌபதையின் சபதம் முடிக்க
தருமன்
கூட்டுச் சேர்ந்திருக்கிறான்
துச்சாதனர் கூட்டத்தோடு ...?
ஆட்சிக்காக
இலட்சுமணனை ஏலம் விடுகிறான்
இராமன்
எடுத்தவன் இராவணன் என்பதால்
ஓலம் இடுகிறான்....!
தூதுபோக மறுத்ததால்
அனுமனையே எரித்துவிட்டான்
இந்த இராமன்....
அரசியலுக்கு முன்னால்
அனுமான் என்ன
அண்ணன் தம்பி என்ன ....?
**
நன்றி.....!
உயிர் வலி சிந்தி
அழும்போது
முதுகுவலிக்கக் கவிதை எழுதிய
கலைஞருக்கும்
பதவியை துறக்கப் போவதாக
புரட்சி அறிக்கை விட்ட
கனிமொழிக்கும்
நெஞ்சுவலிக்கு மத்தியிலும்
கருணைக்கொலை புரிய
கருவி கொடுத்த
மன்மோகனுக்கும்
சீமானுக்கும் இன உணர்வாளருக்கும்
தவம் செய்ய சிறை தந்த
தங்கபாலுவுக்கும்
முத்துக்குமாரையும்
ஏனைய பலரையும் தீக்கு தின்னக் கொடுத்த
சோனியாவின் வெளியுறவுக்
கொள்கைக்கும்
இன்னும் மௌன மொழியினால்
சம்மதம் தந்த
அனைவருக்கும்
கருகிப் போனவர் சார்பிலே
நன்றி.
maduvilan@hotmail.com
ராம்ப்ரசாத் கவிதைகள்!
1. எவ்வகை ரோஜா?...
லேசாய்ப்பனி பெய்திடுமோர்
அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்
அனிச்சயாய் என்
விரல்களினிடையில் சிக்குண்ட
இந்த கருப்புக்குடைக்குள்....
எனக்குத்துணையாய், அழகிலவள்
துப்பட்டாவில் பூத்திருக்கும்
ரோஜாவிற்க்கிணையாய்,
தெருவோரம் தேங்கி நிற்கும்
தண்ணீரில் நீந்திப்பழகும்
தவளைகளைத் தட்டிக்கொடுக்கும்
புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம்
ரோஜாக்களில் இவள்
எவ்வகை என்றே...
2. உதாசீனம்
தோழி காண்கிறாள்
இவன் தன் தங்கையிடம்
காட்டாத பரிவை...
மனைவி காண்கிறாள்
இவன் தன் தாயிடம்
காட்டாத பாசத்தை...
தந்தையானவன் தேடுகிறான்
பணி ஓய்வு வரைதனில்
இவன் காட்டிய
மரியாதையை...
இல்லாள் காண்கிறாள்
தன் தங்கையிடத்தே,
தன்னிடத்தே சேரவேண்டிய
காதலை...
உதாசீனத்திற்க்கித்தனை
முகமூடிகள்.
அற்ப ஆண்மகனுமிந்த
முரணும் இணைபிரியா
கோடுகள்.
அவர் சிந்தனையில்
இந்த இளமை,
மழைக்குத்தாங்கா ஓடுகள்...
எவ்விடத்தும் நிறைந்திருப்பது
இறையென்றால்,
அற்ப மனிதரிடத்தெல்லாம்
நிறைந்திருப்பது நீயன்றோ!!!
3. கண்ணாடி
கலியுகக்காதலன் நீ
உருவங்களை மட்டும்
உள்வாங்குகிறாய்
உள்ளத்தை விட்டுவிட்டு...
ஒரவஞ்சனையென்ன
இருளின்மேலுனக்கு உன்றன்
பார்வை பட்டதுமே
ஈன்றெடுக்கின்றன ஒளிக்கற்றைகளை
இரட்டைக்குழந்தைகளாய்...
ஆயினும் இருள்
மாத்திரம் கைம்பெண்ணோ!!!...
கொடுத்துவிட்டேன் உன்றன்பால்
கர்ணன் போல் என்தன்
தேகத்தை, எனக்காகிறது
பதினெட்டு வயது...
என்னழகிற்கும் கொடுத்துவிடாதே
இரட்டை குழந்தைகளை
என் காதலி
எனக்கு மட்டும் தான்...
இனித்தண்ணீரிலுன்னை
தேடவேண்டாம்
சிறைப்பிடித்துவிட்டேனுன்னை
என் அறையில் இந்த
மரசட்டங்களுக்கிடையில்...
4. ஈரமில்லை
ஆகாயமார்க்கமாக பயணப்பட்டவர்களை
ஆகயத்தோடே தன்னோடு
அழைத்துக்கொண்டுவிட்டான்
அந்த காலன்...
எருமை வாகனத்தவன்
அழைத்தால் போகாதவரும்
உண்டோ!!!...
கும்மிருட்டில், கொட்டும் பனியில்
வழிதவறி அடைக்களம் தேடும்
பூனைக்குட்டிகளை
அரவணைத்துப்பாலூட்டும்
ஐந்தறிவு நாய்கள் கூட
உயிர்கள் தோன்றிய
காலம் தொட்டு
இயற்கை வளர்த்துவிட்ட
வேட்டை விதிகளை மறந்து,
நட்பு பாராட்டும்போது,
அறிவை வளர்க்கும் பொருட்டு
கல்வி கற்கும் நோக்கில்
உன் நாட்டிற்குப்பயணப்பட்ட
என் தோழனை
அடித்துத் துன்புறுத்தி
ஐந்தறிவு விலங்கினம் நாயல்ல
நான்தானென்று சொல்லாமல்
சொல்லியிருக்கிறாய்...
உனக்கொன்று சொல்கிறேன்...
தெய்வப்பிறவியாவது உனக்கும்
எனக்கும் பெரிய விஷயமே...
ஆனால்,
குறைந்தபட்சம் மனிதனாக இருக்க
முயற்சி செய்வோம்...
உன் நாட்டைச்சுற்றி
நாற்புறமும் கடல்சூழ்ந்து
என்ன பயன்,
நெஞ்சில் எவருக்கும்
ஈரம் இல்லையே...
முப்புறம் மட்டுமே
கடல் சூழ்ந்த
என் நாட்டிற்கொருமுறை
வந்துபோ...
உன்போன்ற பிறவிகளுக்கு
நாயாவதே பெரிய சாதனை
தானென்பேன். பிற்பாடு,
மனிதனாவதெப்படி என்று
பார்க்கலாம்...
5. காலன்
வீட்டுக்கதவை
தட்டும்
எட்டத்தில்தானிருக்கிறாய் என்பதை
மறவாதே என்றென்றும்...
இடைப்பட்ட குறுகிய நேரத்தில்
உயிர்களிடத்தில் அன்பு செலுத்த
கற்றுக்கொள்...
பாகுபாடு பார்ப்பின்
அதற்கும் உன் நாட்டிலேயே
உன்னை எதிர்க்கவும் மக்கள்
இருப்பார்கள் என்பதையும்
மறவாதே என்றென்றும்...
6. காதல்
வாங்கி வைத்த
இரட்டைக்குவளை பழச்சாறு
தீர்ந்து போனால் எங்கே
நாளை சந்திப்போமெனச்சொல்லி
இன்று
பிரிய நேரிட்டுவிடுமோவென்று
வார்த்தைகளை மட்டும் பருகி
சிந்தனைகளை மட்டும் சீரனித்தே
தொடர்ந்து அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்...
எப்போது சொல்வானென நீயும்
இன்றாவது சொல்லிடலாமாவென நானும்
நம் தயக்கங்களின் அரவணைப்பில்
கட்டுண்டு விழுந்து கிடக்கின்றோம்
மீண்டெழ வழிதெரியாமல்...
நான் சொல்ல யத்தனிக்கும்,
நீ கேட்க காத்து நிற்கும்
அந்த மூன்றெழுத்து
மந்திர வார்த்தைகளை
ஒருவாறு யூகித்தபடி,
நமுட்டுச்சிரிப்பொன்றை
உதிர்த்துப்போகிறான் கடைச்சிறுவன்
நம்மை நோக்கி...
7. பேச யார் கற்றுக்கொடுத்தது..
நேற்று மாலையே
முடித்து வைத்த
வீட்டுப்பாடங்களை
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்
ஏற்கனவே வெளியேறிவிட்ட
உன்னை
தனிமையில் சந்திப்பதற்காக...
எனக்கு மிகவும் பரிச்சயமான
கல்லூரியில்,
அதிகம் பரிச்சயமில்லாத
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,
மிகவும் பரிச்சயமான
என் தாய்மொழியிலோர்
கவிதை கிட்டாவிட்டாலும்
குறைந்தபட்சம்
நான்கைந்து வார்த்தைகளாவது
கிட்டியிருக்கலாம்...
தயங்கி வேர்த்தோதுங்கிய
சில மணித்துளிகளில்
உன்னைச்சூழ்ந்துகொண்ட
தோழிகளுடன் நீ
கதைபல கதைப்பதைப்பார்த்து
சற்றே தள்ளி நின்று
நடத்திக்கொண்டிருந்தேன்
மனதிற்க்குள் ஓர் விவாதம்
'ரோஜாப்பூவுக்குப் பேச
யார் கற்றுக்கொடுத்தது'....
8. பிறப்பென்பது...
அம்மிமிதித்தருந்ததி பார்த்தெந்தன்
சிரசைப்பெற்றோர் பொற்பாதத்தில்
வைத்தெடுத்து,
தகப்பன் மடியமர்ந்தெந்தன்
கைகளால் மஞ்சற்கொடியேந்தியவளுடன்
முயங்கி விரைகிறேனதில்
மயங்கிச்சரிந்தவளெந்தன்
ரேதஸையுள்வாங்கி
ஈன்றெடுத்தனள் பிள்ளையையினி
இந்த மகவாலெந்தன்
பெயர் விளங்குமோ,
கேடு விளையுமோ
நானறியேனெனினும் வளர்ப்பதெந்தன்
கடமையென்றுணர்ந்தவனாதலின்
வளர்ப்பேனென்றன் உயிருள்ளவரையில்,
அவன் வாழ்வு பொன்னாகும்,
இவன் வாழ்வு மண்ணாகுமென்ற
இறையளந்த வாழ்வுதன்னை
வாழவந்திருக்கும் மற்றுமோர்
பரிதாபத்திற்குறிய மானுடப்பிறவியிங்கே
மனிதனாயென்றன் புதல்வனாய்,
பிறப்பிறப்பென்கிற
இருதுருவங்களுக்கிடையில்
சற்று நேரங்கடத்த சில
கடமைகளுடன்...
இவ்வளவே மானுட
வாழ்க்கையில் பிறப்பென்பது...
ashwin_i1980@yahoo.co.in
ப.மதியழகன் (திருவாரூர்) தமிழ்நாடு
கவிதைகள்!
பெண்ணல்ல தேவதை
விண்ணும்,மண்ணும்
உன் பெயர் சொல்லும்
விடியல் வந்து
உன் கனவினை விரட்டும்
கடலில் கலக்கும் நதியென நான்
உன் உயிரில் கலக்க
ஓடோடி வருகிறேன்
உயிரை வதைக்கும் கொடிய பிணி
என் உடலை வாட்டி எடுக்கும்
நிலையில்
உன் தேன்குரல் வந்து
செவிகளில் பாய்ந்தால் போதும்
எனது கல்லறை கூட
சிறு சிறு கற்களாய் சிதறிப் போகும்.
காற்றில் அசையும்
மரக்கிளைகளைப் போல்
என் உண்மைக் காதல்
உன் மனக்கற்பாறையையும் கரைக்கும்.
காற்றின் போக்கில் வெண்மேகம் செல்லும்
நான் கொண்ட காதலுக்காக
எனது இதயம்,
அவளின் இசைவு வேண்டி
என்னவளிடத்தில் சரணாகதி கொள்ளும்.
பூக்கள் திரண்டு சாமரம் வீசும்
தோட்டத்துப் பூக்களெல்லாம்
மலர்களின் ராணியின்
மலர்ந்த முகம் காண
வைகறைப் பொழுதிலிருந்து
அவள் பவனி வரும்
பாதை பார்த்து
கண்கள் பூத்து தவம் கிடக்கும்.
அணிந்திருந்த
ஆடையையும் மீறி பொங்குகிறது
அழகுக் கடலிலிருந்து
ராட்சச அலைகள்
கரை கடக்க,முக்குளிக்க
பேரெழிலாய்,சுடரொளியாய்,முழுநிலவாய்
பிரகாசிக்க
எப்போது என் கைத்தடம்
பற்றப் போகிறாய்?
காதல் வானில்
சிறகடித்துப் சுதந்திரமாய்
நாமிருவரும் இணைந்து பறக்க...
மின்னலின் வெளிச்சத்தில்
உனது தோற்றம் கண்டேன்
ரகசியமாய்
வானம் எடுத்த புகைப்படமோ- என
மென் சந்தேகம் கொண்டேன்.
மோகம் வளர்க்கும்
தீ ஜுவாலைகள் மத்தியில்
உனது கண்கள் ஏற்றிவைத்த
காதல் தீபத்தின்
நிலைச்சுடரின் ஜோதியில் கலந்து
வீழ்ந்துமடிய விரும்புகிறது
இந்த விட்டில் பூச்சியின்
சின்ன இதயம்.
வெள்ளை உள்ளம்
டஜன் கணக்கிலான
தேவைகளை
விரைவிலேயே
நிறைவேற்றிட வேண்டுமென்று
இறைவன் சந்நதி முன்பு
வணங்கிப் பிரார்த்தனை செய்தேன்.
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து
எழுந்த போது
வேண்டுதல்கள் எதுவுமற்ற
சிறு குழந்தை
தன்னை கைகுவித்து
வணங்குவதை
கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள்.
கானல் நீர்
அடர்ந்த இருள் கவிந்த
வாழ்க்கைப் பாதையில்
நிலைச்சுடரின் பிரகாசம்
கூப்பிடு தொலைவில்
கண்ணில் தெரிந்தது.
அதை நோக்கி
எனது கால்கள் குதூகலமாய்
விரைந்து நடக்கத் தொடங்க,
அந்தச் சுடரை நெருங்க,நெருங்க
அந்த ஒளிவெள்ளம்
பின்னோக்கி தனது
கிரணங்களை இழுத்துக் கொண்டது
எனது கஷ்டங்களுக்கு
ஒரு தீர்வென்பது
பாலைவனக் கானல் நீரானது.
cell:09952541345
mail id:mathi2k9@gmail.com
எண்ணிக்கை
- மாலியன் -
இழப்புகள் யாவும்
எண்ணிக்கையாகிப் போனதால் -
செய்திகளுக்குள்
எத்தனை இன்று விழுந்தது
என்பது மட்டுமே தெரிகின்றன.
முந்தைய பொழுதொன்றில் விழுந்த
பத்து பெயர் (தெரியாதவர்களுக்காக) களுக்கு
பதிலாக பதினைந்து எதிரி
விழுந்திருந்தால் நாங்கள்
திருப்தியுற்றவர்களாக -
காலச் சுழற்சியில்
இன்று இருபாதாயிரம்
விழுந்தும்,
ஏனோ எண்ணிக்கை சற்றே கூடியிருந்தால்
தேசம் கிடைத்திருக்கும்
என்பதாய்....
ஆயினும் முன்பு ஒரு பொழுதில்
வயோதிபத்தில் இறந்த
என் பாட்டியின் மரணம்
நெஞ்சை உறுத்தி செல்ல
அது மட்டும்
எண்ணிக்கை யாக்க முடியவில்லை....
maliann@yahoo.com
சக்தி சக்திதாசன் கவிதைகள்!
1. வாழ்வின் நீளம்
ஆற்றின்
ஓரம்
நடக்கிறேன்
வாழ்வின் நீளத்தை
ரசிக்கின்றேன்
எந்தையும் தாயும்
புரிந்திட்ட
விந்தையாய் நானும்
விழுந்திட்டேன்
தந்தையின் கைகளை
பற்றியபடியே
தாயின் மடியில்
விளையாடிய பொழுதுகள்....
நேற்றைய நினைவுகளில்
புதைந்திட்ட வேளைகள்
நாளைய உலகினில்
புலர்ந்திட வழியில்லை
உள்ளத்தினுள்ளே
உண்மைகள் உறைந்தும்
உலகத்தில் அதனை
உணர்ந்தவர் சிலரே
இன்பம் ஒரு பாதி
துன்பம் மறு பாதி
இரவு ஒரு பாதி
பகலும் மறு பாதி
காற்றில் பறக்கும்
சருகினைப் போலே
காலம் எம்மை
உருட்டிடும் உண்மை
நாமே அனைத்தும்
புரிவது போலே
நம்மை நாமே
ஏய்த்திடும் செய்கை
மணலின் மீது
தவழ்ந்திடும் நதியாய்
புவியின் மீது
மிதந்திடும் தென்றலாய்
இதமாய் நாம் வாழும்
இனிமைப் பொழுதுகளை
இறுகப் பிடியுங்கள்
ஈட்டும் இன்பம் அதுவேதான்
ஒருவரை ஒருவர்
மிதித்தே முன்னேறிடும்
பொல்லாத உலகை
இல்லாமல் செய்வோம்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இருக்கும் இடைவெளி
வாழ்வின் நீளத்தை
அளந்திடும் ஜீவநதி
வாழ்வின் நீளத்தின்
அளவி மைல்களிலில்லை
மனித மனத்தில் விளையும்
நல்ல சிந்தைகளின் கனத்திலுள்ளது
2. நண்பனுக்கொரு மடல்
அன்பு
நண்பனே !
உள்ளத்தின் வெள்ளத்தை
உன்னிடம் பகிர்ந்திட
உள்ளூறும் ஆசையால்
உவக்கின்ற வரிகளிவை
அழகான கோடையிது
ஆனந்தம் பொழியுது
ஆதவனின் கதிர்களெனை
அரவணைத்து மகிழுது
தோட்டத்து மலர்களில்
தோற்றிடும் வர்ணங்கள்
தோன்றாத கற்பனைகளை
தோற்றுவித்து மயக்குது
மாலை வெய்யில் பொழுதில்
வீசும் மெல்லிய தென்றல்
ஆசையாய் மேனியில் தவழ்ந்து
அமைதியான சுகத்தைத் தூவுது
பச்சைப் புல்லின் விரிப்பு
பசுமையான வனப்பு
புரிய வைக்கும் உண்மைகள்
புரிந்து கொண்டால் நன்மைகள்
விரிந்து நிற்கும் மலர்களும்
விரியத் துடிக்கும் அரும்புகளும்
சரிந்த நேற்றைய மலர்களையும்
ஒன்றாய்த் தாங்கும் செடிகள்
ஓங்கிச் சொல்லும் உண்மை ஒன்று
இளமை, நடுமை, முதுமை
அனைத்தும் ஒன்றாய் சேரும் போதே
வாழ்க்கை என்பது முழுமை பெறும்
வாழ்வை நன்றாய் வாழ்ந்து முடிப்பது
மானிட ஜென்மக் கடமையன்றோ
இவைகளின் நினைப்பின்
இடையே கொஞ்சம் வெதும்பல்
இணைபிரியா எந்தன் தோழன்
உன்னைப் பிரிந்த எண்ணம்
கொஞ்சம் நெஞ்சை வாட்டும்
உணர்வுகளை வரிகளாக்கி
இதய ஏட்டில் எழுதிய கவிதையை
இனியவன் உன்னோடு பகிர்ந்தேன்
இனி அடுத்த மடலில் மீண்டும்......
ssakthi@btinternet.com
http://www.thamilpoonga.com
மெல்லிய அணைப்பின்
துல்லியம்….
- வேதா இலங்காதிலகம். (ஓகுஸ் டென்மார்க்.) -
மயிலிறகு
தடவும் இதய வருடல்கள்,
சந்தனக் குளிர்மையாம் விழிகளின் பரிவுகள்,
மலர்க் குவியல்கள் அணையும் மெத்தென்ற
மந்திரச் சாரல் விரல்களின் பிணைவுகள்.
கன்னங்கள் கன்னத்தோடு இதமான இணைவு.
கலகலவென கோபம் விரட்டும் ஒளியாக
நிலாப் பொழியும் புன்னகைப் போர்வை.
விலகாத தோள்களின் அணைப்பு பூவிலங்காக.
மகிழ்வான உறவின் மலர்ச்சியின் முன்னே
மலர்க்கொத்தும் மாணிக்கச் சிலம்பும் எம்மாத்திரம்!
வாழ்க்கை வயலில் தோல்வியை உழுதிடும்
மாயக் கலப்பை தானே மந்திரக் காதல்!
மெல்லிய அணைப்பும் தொடுகையும் மாயமாய்த்
துல்லிய மாற்றமிடும் உயர் படியன்றோ!
வல்லின சினத்தை அன்புக் கேடயத்தால்
வளைத்து வீழ்த்தலாம், வாழலாம் வெற்றியாய்.
vetha@stofanet.dk |