அகரம்.அமுதாவின்
கவிதைகள்!
கல்வி!
முனைந்திடின் பெயரோ டேவல்
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;
கனிவுடன் ஒற்றை நீக்கின்
கவிஞனும் குரங்கும் உண்டாம்;
மனைதனைக் கூடும் சொல்லே
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;
உனையெனை சான்றோ னாக
உயர்த்திடும் கல்வி தாமே!
தாமரை!
ஏவலே முதலெ ழுத்தாம்;
எழுத்திதில் கடைத ளைகின்
காவிய வாலி இல்லாள்;
கடையிரண் டெழுத்து மானாம்;
மேவிய இடையை நீக்கி
விரைந்து 'கால்' தனைஒ றுத்தால்
தாவிலை நிலமாம்; அச்சொல்
தாமரை என்பேன் கண்டீர்!
சாமந்தி!
முதலெழுத் திறத்த லாகும்;
முதல்,கடை இனமே யாகும்;
முதல்,கடை யிரண்டெ ழுத்தை
முடிச்சிடின் அமைதி யாகும்;
முதலற குரங்கே யாகு(ம்;)
உயர்இரண்டா மெழுத்தி னோடே
இதன்கடை தளைகின் திங்கள்;
இச்சொல்சா மந்தி யாமே!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!
தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!
முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!
தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!
சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!
விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
விதியே எல்லாம் என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!
மோகப் போய்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!
ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?
பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!
கைவளைக்கும் இல்லை கனிவு!
காமன் வதைபட கட்டில் முறிபட
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!
சட்டெனமா மன்பிரிந்த தால்!
கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;
ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்
மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்
தேனினிய சொல்திக்கு தே!
மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்;எண்
சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்
வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்
தோளிரண்டில் தொத்தாதக் கால்!
வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்
எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்
ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்
காணேனே கண்ணொடுகொண் கன்!
கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்
கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்
என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்
கண்ணருகில் காட்டானோ கண்டு?
வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்
சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல
மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்
கைவளைக்கும் இல்லை கனிவு!
அகரம்.அமுதா
agramamutha08@gmail.com
புரிதலில்.
- றஞ்சினி -
என்
கோபங்களை
தந்திரமாக
உன்
வார்த்தைகள்
வசியம்
செய்துவிடுகிறது
நான்
ரசிப்பதையே
நீயும்
பேசிவிடுவதால்
நம்
சிந்தனையின்
புரிதலின்
காதலில்
கரைந்துவிடுகிறது
அனைத்தும்..
shanranjini@yahoo.com
வாழ்ந்து பார்ப்போம்!
- சக்தி சக்திதாசன் -
வானவில்லின் வர்ணங்களே
வாழ்வில் வந்த சொந்தங்கள்
மழைநீரின் தூய்மையெலாம்
மண்ணின் மீது விழும்வரையே
நேற்று வாழ்வின் இன்பங்கள்
இன்று வாழ்வின் ஏக்கங்கள்
நாளை வாழ்வின் நோக்கங்கள்
நாளும் தோன்றும் கானல்நீர்
உண்மை நெஞ்சில் கசந்திடும்
உறவுகள் அதனை ரசித்திடும்
அன்பு நெஞ்சில் ஊறுவதற்கு
அவசியமில்லை அறிமுகம்
நீரில் போடும் கோலங்கள்
நிச்சயம் என்றே எண்ணிடும்
நிஜத்தின் நிழலில் வாட்டிடும்
நிதர்சனங்கள் வாழ்விலே
என்றோ நடந்த நினவுகள்
எப்படி ஆயின கனவுகளாய் ?
எதையும் மாற்றிடும் காலமோ
எம்முள் புதைந்த சூட்சுமம் ?
தொப்புள் கொடியில் பிறந்திடும்
தானாய் வந்திட்ட சொந்தங்கள்
தீரா வலியைத் தந்துமே ஏனோ
தேடல் இன்னும் தீரவில்லை
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்றான் கவியரசன்
உண்மைகள் இதயத்தில் உரசும்
உணர்வுகள் ஒத்தடம் கொடுக்கும்
வாழ்க்கை என்னும் நாடகத்தில்
வரித்துக் கொண்டோம் வேஷத்தை
வாழ்ந்து மடியும் காலம் வரை
வாழ்ந்து பார்ப்போம் மனிதராய்
http://www.thamilpoonga.com
ssakthi@btinternet.com
தரமாட்டேன் நிச்சயமாய் !
- அனாமிகா பிரித்திமா -
பலராலும் ...
இதை செய்ய முடியும்...
ஏன்....
நீங்கள் கூட ...
அதை செய்து விட்டீர்கள் !
ஆனால்...
என்னால் ...
மட்டும் ஏன்...
அதை...
செய்ய இயலவில்லை?
எது தடுக்கிறது ?
தடுத்தால் என்ன ?
நான் ...
ஏன் செய்யக்கூடாது?
முடியவில்லையே !
என்னால்...
முடியவில்லையே !
கொடுத்த என் மனதை...
தூக்கி எறிந்துவிட்டீர்கள் !
திரும்பிப் பார்க்காமல்...
நடந்து விட்டீர்கள் !
என்னிடம்...
உங்கள் மனது...
இன்னும்...
இருக்கிறதே ?
தூக்கி எறிய...
முடியவில்லையே !
வைத்திருக்கிறேன்...
பத்திரமாய் !
நீங்களே !
கேட்டால் கூட...
தரமாட்டேன்...
நிச்சயமாய் !
என் கனவுலகில்....
நம் இருவருக்கான...
உலகம் இது...
இங்கு விடியலே இல்லை !
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும் !
நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக !
என் கனவுலகில் !
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பேன் !
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
தங்கள் இல்லத்தரசியாய் !
என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை ...
படிப்பேன், ரசிப்பேன் !
நம் இருவருக்கான...
இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே...
இருக்கட்டும்...
விடியவே வேண்டாம் !
புரியவில்லையே ?
என் கண்களை பார்த்து...
என்னவர் சிலிர்த்ததுண்டு
அதே கண்களை...
காயப்படுத்தியதும் உண்டு !
என் முகத்தைப் பார்தது...
ரசித்ததுண்டு...
அதே முகத்தில்...
அறைந்ததும் உண்டு !
என் கரங்களை பற்றிக்கொண்டு...
சிலாகித்ததுண்டு...
அதே கரங்களை ...
முறித்ததும் உண்டு !
என் இதயத்தில் குடியிருப்பதைப் பற்றி...
பேசியதுண்டு...
அதே இதயத்தை...
கிழித்ததும் உண்டு !
என் கால்களைப் பார்த்து...
சிரித்ததுண்டு...
அதே கால்களை...
தாக்கியதும் உண்டு !
ஏன்...
எல்லாம் இருவேறு...
விதமாக நடந்தது...
எனக்கு ?
புரிந்து கொண்டேனா?
புரிந்து கொண்டாரா?
புரியவில்லையே...?
முகம்
பார்க்க...
நான்கு வருடங்கள்...
நகழாத...
அதிசியம்...
நடந்தேறியது !
அதிசியம் என...
எவரும் மகிழும் முன்...
முடிந்தும் போனது !
இனிப்புகள் ...
பரிமாரப்பட்டிருக்க வேண்டும்...
விருந்து வைத்திருக்க வேண்டும்...
வானத்திற்கு துள்ளி...
இருக்க வேண்டும்...
நம் இருவரும் !
நமக்கு முதல் வாரிசு...
உங்கள் குடும்பத்திற்கே...
தலைச்சன் வாரிசு...
எழுபது நாளான புது உயிர் !
சூழ்நிலையால் ...
மருத்துவமனையில்...
இரு உயிர் காக்க போராட்டம் !
தகவல் தெரிந்தும் எவரும் வரவில்லை ...
அப்போழுதும்...
தங்கள் துனைவி தானே ?
ஒவ்வொரு முறையும் ...
அறையின் கதவு...
தட்டபடும் போது...
விழித்து கொள்வோம்...
நானும், அவனு(ளு)ம் ?
தகப்பன் முகம் பார்க்க...
விழித்திருக்குமோ?
“அப்பா” என்றழைக்க...
காத்திருக்குமோ?
காத்திருந்து....
காத்திருந்து....
வரவில்லை என்றதும்...
தங்கள் முகம் பார்க்க...
வெளிநடப்பு செய்ததோ?
வந்ததா?
தங்கள் முகம் பார்த்ததா?
நீங்கள் வந்திருந்தால்...
நிலைத்திருக்குமோ ?
பிறிந்த மாதம்...
பிறந்திருக்கும்...
வயது முன்றாகியிருக்கும் !
நிலைக்கவில்லை...
நீங்களும் !
நம் “குட்டானுவும்” !
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
ஆன்மீக நரகம்
- செந்தமிழினியன் (புதுவை.) -
ஆன்மீக பூமியிலே
நாளுக்கு ஓர் உயிர்க்கொலை
அமைதியான நகரத்தில்
அடைப்பு நாட்கள் ஏராளம்!
கொலைகள் இங்கே
மலிவாக நடக்கிறது!
கால் அரை பாட்டில்களுக்கும்
காசுகளின் தேவைக்கும்!
விலங்குகள் வேட்டையாடுவது
உணவுக்கு மட்டுமே
மாந்தனின் வேட்டைக்கு
1008 காரணங்கள்...
சிந்திக்க நேரமின்றி
சிதறடிக்கப்படும் மூளைகள்!
நற்பயிராகாமல் இங்கே
நச்சுக் களைகளாகின்றன!
கை கட்டும் அதிகாரிகள்
காவலுக்கு அரசியல்வாதிகள்
காடையர்களின் துணிகரம்
கனமழையாய் இன்னும்.....
senthamilinian@yahoo.com
வார்த்தைகளின் வசந்தம்!
- என்.சுரேஷ் -
(பேசத்துடிக்கும் வேளைகளில் வார்த்தைகள் வருவதில்லை. சிலரிடம் பேசி முடித்ததும்
மீண்டும் பேச அழைப்புகள் வருகிறது.
வார்த்தைகள் அதிகமும் இதயத்தில் மௌனங்களாகவே இருந்தாலும் நிர்பந்தங்களால்
வார்த்தைகள் வந்து விழுகிற நிலை! அதிகமாக
பேசிவிட்டோமோ என்ற ஒரு சிந்தைனையும் ஐயோ இவரிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே
என்ற குற்ற உணர்வும் அவ்வப்போது
மின்னலாய் வந்து போனாலும் அன்பான பார்வைகள் ஒன்றொடு ஒன்று தரிசித்ததும் அங்கே
வசந்தம் உதயமாகிறது. இதன்
அடிப்படையில் மலர்ந்த ஒரு கவிதை தான் இது)
பேசத் துடிக்கும்
பூமியிடம் பேசாத மேகங்கள்
தேனையுண்ட
வண்டை நினத்தே
மலர்ந்தும் மலராத பூக்கள்
வார்த்தைகள்
என் இதயச்சிப்பிக்குள்
அடைத்த முத்துக்கள்
இறுக்கங்கள்
அதன் நிர்பந்தங்களாலே
பொழியும் வார்த்தைகள்
ஆசை ஆசையாய் பேசியும்
செவிடே மேலென்றேனே
ஆசையாய்
ஒரு வார்த்தைகூட
பேச மறந்ததேனோ
பாதை ஒன்றும் இன்றியே
ஒரு சிக்கல் பிறக்குமோ
பார்வைகள் அவை
பார்த்ததும் வசந்தம் பிறந்ததோ!
nsureshchennai@gmail.com
காந்தி பிறந்த நாடு!!
- இமாம்.கவுஸ் மொய்தீன் -
மீண்டும் மீண்டும்
தொடந்து கொண்டுதானிருக்கின்றன
நச்சுச் சாராய சாவுகள்!
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
விதவை அநாதைகளின் பெருக்கம்!
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
உறவு நட்புகளின் ஒப்பாரி!
நின்று கொல்லும் நஞ்சு- மது!
நிறுத்தாமல் குடித்தாதால்
இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!
கொலைகள் கொள்ளைகள்
விலையேற்றம் பணவீக்கமென
அனைத்தும் வளர்பிறையாய்....!
அனைத்துத் துறைகளிலுமே
வேகமாய் முன்னேறி வருகிறது
நம் நாடு!
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்
முழுகவனத்துடன்....
காவல்துறை!
சூடான பரபரப்பான
செய்திகளின் தேடலில்....
ஊடகங்கள்!
கேள்வி கண்டனக் கணைகளை
வீசுவதில்... சலிப்படையாத
எதிர்க்கட்சிகள்!
ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்
கோலொச்சிக் கொண்டிருக்கிறது
நம் அரசு!
காந்தி பிறந்த நாட்டில்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
பெருமையுடன்....
drimamgm@hotmail.com |