| 
பூமித் தாய்!
 - இமாம்.கவுஸ் மொய்தீன் -
 
 
சூரியனின் சுடுநெருப்பில்எத்தனை முறை
 வதங்கியிருப்பாள்!
 
 இடி மின்னல் கொட்டும் மழையில்
 எத்தனை முறை
 நனைந்திருப்பாள்!
 
 பெருக்கெடுத்தோடும் வெள்ளங்களில்
 எத்தனை முறை
 வாடியிருப்பாள்!
 
 புயல்கள் சூறாவளிகள் சுழற்காற்றுகள்
 எத்தனை முறை
 சந்தித்திருப்பாள்!
 
 பூகம்பங்கள் சுனாமிகள் பிரளயங்கள்
 எத்தனை முறை
 தாங்கியிருப்பாள்!
 
 பீரிட்டுவரும் எரிமலைகளின்
 எத்தனை வடுக்களை
 சுமந்திருப்பாள்!
 
 வரட்சிகள் பஞ்சங்கள் இயற்கை சீற்றங்கள்
 எத்தனை கண்டு
 கண்ணீர் வடித்திருப்பாள்!
 
 சோதனைகளைத் தாங்கிப் பழகிவிட்ட
 நம் அன்னையரைப் போல்
 பூமித் தாய்!!
 
 drimamgm@hotmail.com
 
 கடைசிவரை...
 
 அல்பேர்ட் (அமெரிக்கா)
 
 
   
உன்னை என் உதடுகள் ஒவ்வொரு
 முறையும் முத்தமிட்ட போது,
 மொத்தமாய் இன்பம்
 என எண்ணினேன்!
 நான்உன்னைச்
 சுவைக்கும்
 ஒவ்வொரு
 முறையும்நீ,
 என் கண் முன்னே
 உதிர்த்தசாம்பல்....
 நீயும்
 இப்படித்தான்
 சாம்பலாகப் போகிறாய்
 என்றுணர்த்தினாய்!
 
 நான் தான்
 அதைஉணராது போனேன்!?
 இழுக்க இழுக்க இன்பம் தானே
 என்று தான்எண்ணினேன்...
 
 இழுக்க, இழுக்க
 என்ஆயுளைக்
 குறைத்துக்கொண்டிருக்கிறாய்
 என்பதை
 அறியாமற் போனேன்!?
 
 என்விரல்கள்
 சுட்டபோது கூட
 உனைப் பிரிய
 மனமில்லாதிருந்தேன்..."
 
 நீ "விரைவில்
 சுடுகாட்டில்
 சுட்டெரிக்கப்படுவாய்
 என்றுணர்த்தினாய்
 என்பதை
 மட்டும்
 கடைசிவரைநான்
 அறிந்திருக்கவே இல்லை!?
 
 albertgi@gmail.com
 
 பிணைப்புகள்!
 
 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)
 
 
 உறவுகளை உரமாக்கி இணைக்கும்
 உதிர இணைப்புகள் இரண்டு.
 உரிமையாம் நிபந்தனைப் பிணைப்பு.
 உறுதியான நிர்ப்பந்;தப் பிணைப்பு.
 நிரந்தரமற்ற வாழ்வின் நகர்வை
 நீட்டும் நிரூபண முயற்சிகள்..
 நீர்க் குமிழிகளை நிறமாக்கும்
 நீர்க்கோலப் பிரயத்தனப் பிணைப்பு.
 
 மன்பதை மனச்சிறையில், கட்டுப்பாடு,;
 தண்டனை, பொதுவிதியே நிபந்தனை.
 அன்பைப் பிணைக்கும் பூவிலங்கு.
 இன்ப இசைவுத் தண்டனை.
 பண்பாம் பாசப் பின்னல்களில்
 இன்பம் இசைக்கும் சதங்கை.
 தேனெனும் சீவத் துளி.
 தெவிட்டாத நூல்வேலிப் பிணைப்பு.
 
 தொந்தரவு, கட்டாயம் என்று
 தொடுகிறது நிர்ப்பந்தப் பிணைப்பு.
 நெருடுமே குறுக்கு வழிகள்.
 அடர்ந்த காரின் சூழ்வில்
 படரும் நீளிரவுப் பயணம்.
 இடறும் நிம்மதியின் விலங்கு.
 கடற் சுழியாக ஆழ்த்தும்
 கடப்பாடெனும் அர்ப்பணிப்பே பிணைப்புகள்.
 
 ( 2001,2002ல் ரி.ஆh.ரி வானொலி, இலண்டன் ரைம் வானொலியில் ஒலிபரப்பானது. திருத்திய 
பதிப்பு இது)
 
 மாற்றங்கள்!
 
 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)
 
 கோள்கள் சுழலக் காலக் கணிப்பு.
 கோலம், கொள்கை, குணம், வயது,
 ஞாலம் போற்றும் இயற்கை, பருவம்,
 ஞானம் தரும் அறிவு, கவனம்,
 வான முகிலாய் மாற்றம் காணும்.
 வாழ்வும், தாழ்வும், வளமான அன்பும்
 வானவில்லாய், பாலைவனக் கானலாய்
 வசமாகும் கணத்தில் வரம்பில்லா மாற்றங்கள்.
 
 மாற்றங்களில் மயக்கம் தேற்;றாத நெஞ்சில்
 நாற்றம், சீற்றமாய்த் தோற்றாது சிதைவு.
 ஆற்றலால் ஏற்றம், ஊற்றான புகழும்
 போற்றல், மகிழ்தலும் பொறிப்பது மாற்றம்.
 சலனமற்ற நீரில் பலமாகும் பாசி.
 விலகாத நீரில் விரவாது மாற்றம்.
 விரக்தி தொலைக்கும் வித்தியாச அனுபவம்.
 வியப்பு, விசனம் குவிப்பது மாற்றம்.
 
 etha@stofanet.dk
 
 மனிதர்கள்போல..
 
 றஞ்சினி
 
 
  
துரிகையின் காதலில் கவிபாடும் வண்ணங்கள்
 மின்னலாய் மின்னும்
 குழந்தையின் விழிகள்
 கவிதையை தேடும்
 வரிகளின் நிமிடங்கள்
 கோபத்திலும் அழகான
 அம்மாவின் கண்கள்
 வானத்து ஓவியனின்
 வானவில்
 கண்களுக்கும் சிந்தைக்கும்
 எல்லாமே அழகுதான்..
 
 நிமிடத்தில் மாறும் இயற்கை
 மனிதர்கள்போல..
 
 shanranjini@yahoo.com
 
 அம்மாவுக்காக ….
 
 மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)
 
 
  
அம்மா உன்னைப் பற்றி
 எழுதும் போது மட்டுமே
 நான்
 தோற்றுவிடுகிறேன்…!
 
 கடலை
 எடுத்து வந்து கைகளுக்குள்ளே
 அடக்க முடியுமா…?
 
 ஆஜந்தா ஓவியம் எனை
 அசத்தவில்லையே
 அம்மா
 நீ கீறித் தந்த
 கிளி ஓவியத்தினை மேவி …!
 
 ஈபிள் கோபுரத்தை விட
 நீ தானே
 உயரமானவள் அம்மா
 பின்னே
 உனைப் போல அது
 பட்டினி கிடக்குமா பிள்ளைக்காக …
 
 சாஜகான் மீது
 இன்னும் எனக்கு கோபமே
 காதலிக்காக மட்டுமே தாஜ்மகாலைக்
 கட்டியவன்
 பெத்தவளுக்காகவும்
 கட்டினானா ஒத்தக் கல்லிலாவது
 ஒரு தாய் மகாலை …
 
 சாமிக்கும்
 மேலானவள் நீ
 பக்தன் பசித்திருக்கவும்
 பால்க் குழியல் செய்யுமே சாமி
 ஆனால்
 எனது பசி தீர்க்க
 உன் குடலையே
 உனக்கு உணவாக்கினாயே …!
 
 புல் கொடுத்தாலே
 பசுக்கூட
 பால் தரும் போது
 நீ மட்டும் பச்சைத்தண்ணியை
 குடித்து விட்டு
 எப்படி எனக்குப் பால் ஊட்டினாய்
 
 உன்னிடம்
 ஒரு கேள்வி அம்மா
 என் பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு
 கோயிலுக்குப் போனாயே
 சாமி கும்பிடவென்று
 ஒரு சாமி இன்னொரு சாமியை
 கும்பிடுமா அம்மா ….
 
 maduvilan@hotmail.com
 |