சபிக்கப்பட்ட உலகு
-துவாரகன்-
மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது
எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று
எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?
அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?
சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.
பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்
மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்
வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று
மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு
s kuneswaran <kuneswaran@gmail.com
**************************
பிரதீபா
(புதுச்சேரி) கவிதைகள்!
1. காதல் திருமணம்
காதலாகி கசிந்துருகி
கண்ணே என்றும்
மணியே என்றும்
நீயின்றி நானில்லை
என்றும் கதை பல பேசி
உற்றார் இழந்து
சுற்றம் துறந்து
கைதளம் பற்றிய பின்
பொன்மான் பொய்மானாகி
ஆதவன் ஆண்டானாகி
நாளும் ஏமாற்றத்தில்
தேய்கிறது முதிர்ச்சியற்ற
காதல் திருமணம்........
2. காகிதத்திரை ஒவியம்
ஸ்தம்பித்த காட்சிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கதை பேசும்...
சித்தெறும்புகளாய்
ஒடிக்கொண்டுடிருக்கும்
நம் வாழ்வில்
நம் பார்வையிலிருந்து தவறிய
காட்சிகளை உற்றுநோக்கச்
செய்யும்...
வண்ணங்கள் வார்த்தை
ஜாலம் ஆடும்
காகிதத்திரை ஒவியம்......
3. மழை
ஆகாயத்தில்
கரிநாள்
கார்மேகங்கள் சூழ்ந்து
மத்தளம் இடித்து
பிரியாவிடை கொடுத்து
மழைத்துளி ஒவ்வொன்றையும்
பூமிக்கு தாரைவார்த்தது...
எய்திய வேகத்தில்
மண்ணை அடையும்
துளிகள் அதனோடு
ஐக்கியமாகி வளம்சேர்த்தது...
கரிய ஒழுங்கைகளை
அடையும் துளிகள்
தாயின் கைவிட்டோடிய
குழந்தை மீண்டும்
தாயிடமே குதித்தோடுவது போல்
விழுந்த வேகத்தில்
வானை தொட
தெரித்தும் தோல்வி அடைய
தலைதாழ்த்தி அமைதியாய்
கால்வாயை நாடுகின்றன...
சமுத்திரத்தில் மோட்சம்
அடைய அன்று
கதிரொலிகளால்
வானை அடைந்து
மீண்டும் மழைத்துளியாய்
மண்ணை சேர.......
bradipagen@yahoo.co.in
**************************
ப.மதியழகன்
கவிதைகள்!
1. விநோதம்
மன்னாதி மன்னர்களும்
ராஜாதி ராஜன்களும்
மயானம் போன கதை கேளு
இந்த கோடாங்கி
உடுக்கையடித்துச் சொல்லும்
உண்மையின் ரகசியத்தை
நீ கேளு
கருவறையில் குடியிருந்து
கல்லறைக்குப் போகும்
சில்லறைத்தனமான வாழ்வின்
திரைக்குப் பின்னாலுள்ள
சிதம்பர ரகசியத்தை
நான் சொல்ல
நீ கேளு
மல்யுத்த வீரனென்று
மார்தட்டி நிற்பவனும்
புதையலைக் கண்டெடுத்து
குபேரன் ஆனவனும்
அரசாங்க பதவி கொண்டு
அதிகாரம் செய்பவனும்
ஏழு கடலுக்கு அப்பால்
வாழும் பறவையில்
உயிரை வைத்திருப்பவனும்
மயானப் பயணத்திற்கு
தொடை நடுங்கும்
கதை கேளு
ஆதி அந்தம் இல்லாதவனும்
பிட்டுக்கு மண் சுமந்தவனும்
பித்தனாய் பிச்சை எடுத்து
வீதியில் திரிபவனும்
ருத்ரனாய் இடுகாட்டில்
ரெளத்திரம் கொண்டு
ஆடுபவனுமான
ஈஸ்வரனின் கதை கேளு
என் வாயால்
நீ கேளு
வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
கொண்டு வந்தது எதுவுமில்லை
கொண்டு போவது ஒன்றுமில்லை
இடைபட்ட வாழ்க்கையோ
ஈசனின் லீலை
பணம்,புகழ்,பெண்ணுக்காக
சமர் செய்த எவனும்
எவன் எவன் எவன்
இங்கு சிவன் சிவன் சிவன் என்று
எக்காளமிடும் எவனும்
சம்ஹாரமான
பழைய சரித்திரத்தை
நீ கேளு
யோக நிலையில்
கண் மூடி அமர்ந்திருக்கும்
கைலாய நாதனை
இம்மண்ணுக்கு வரவழைக்கும்
சிவ சூத்திரத்தை
நான் சொல்ல
நீ கேளு.
2. இரவு
விட்டுவிட மனமில்லை இரவை
பிணியிலிருந்து விடுவிக்கும் கடவுளாக
கடனிலிருந்து விடுவிக்கும் குபேரனாக
அடுத்த நாளின் அடிக்கல்லாக
இருக்கின்றன இரவுகள்
உறக்கத்தில் மறக்கிறோம் கவலைகளை
கனவுலகத்தில் சஞ்சரிக்க
கடவுச் சீட்டு உண்டு
அலைபாயும் மனது
பிரபஞ்ச வெளியில் திரியும்
பட்ஜெட் போடும் புத்தி
துயரமின்றி துயில் கொண்டிடும்
அசதியினால் வசதியான
படுக்கையறையில் விடியல் வரை
உறங்கிடும் சுகம் கிடைக்க
நித்தமும் கண்கள் ஏங்கிடும்
சுமைதாங்கியாய் நம்மை
நினைக்க வைக்கும்
பகற்பொழுதை விட
இரவு இருக்கும் பாரத்தை
இறக்கி வைத்திடும்
தேவகரங்களால் இரவே
உன்னை அழைக்கின்றோம்
நித்தமும் வந்திடு
நல் நித்திரையை தந்திடு.
3. மகான்
கனவுகளாய் நகரும்
கணங்கள்
இருத்தலை அர்த்தப்படுத்தும்
மழலைகள்
விடியலை சுவர்க்கமாக்கும்
பறவைகள்
வீட்டினை பூஞ்சோலையாக்கும்
உறவுகள்
வாழ்வினை வசந்தமாக்கும்
நல்மனிதர்கள்
பந்தத்தை பலப்படுத்தும்
சந்திப்புகள்
பக்தனை பரமனிடம்
அழைத்துச் செல்லும்
மகா புருஷர்கள்
இல்லறத்தை நல்லறமாக்கும்
துணைவிகள்
பூமியை புத்துயிர்ப்புடன் வைத்திருக்கும்
நற்சிந்தனைகள்
மடையனை மகத்தானவனாக மாற்றும்
மகான்கள்
ஆதரவற்றோருக்கு சேவை புரியும்
இறைத் தொண்டர்கள்
வாழ்க்கையின் மாண்பினை உணர்த்தும்
இறையுணர்வு இயல்பாக வாய்க்கப் பெற்ற
அருள் நாதர்கள்.
mail id:mathi2134@gmail.com
*************************
கோநா கவிதைகள்
1. ஒரு ஏரி, நிறைய நீர், நிறைய பறவைகள்
எங்கள் ஊரில்
ஒரு ஏரி இருந்தது
நிறைய நீரும்,
பறவைகளும் கூட.
நீரை 'பாட்டில்'களிலும்
ஏரியை 'பிளாட்'களிலும்
அடைத்து வித்துவிட்டார்கள்.
இப்போது
எங்கள் ஊரில்
நிறைய வீடுகளும்
வீடுகளுக்குள் சொந்தமாக
ஆளுக்குக் கொஞ்சம்
'பாட்டில்' நீரும், ஏரியும்.
பறவைகள்தான்
எவ்வளவு சொல்லியும் கேட்காமல்
எங்கோ பறந்து போய்விட்டன
எங்களை நிராகரித்துவிட்டு.
2. ஒரு ஆட்டம்
வியூகம் வகுத்து
நகர்த்துபவர்களின் விழிகளில்
அமைதிப் புறாக்கள்
அலகுகளால் குதறிய குருதி
கருப்பு வெள்ளைக் காய்கள்
கத்திகளை எறிந்து விட்டு
கட்டித் தழுவிக் கொள்கின்றன நகர்ந்து.
3. களத்தில் வெட்டுவதோ
கழுத்தில் வெட்டப்படுவதோ
கதறி அழுவதோ
கர்வச் சிரிப்போ...
உணர்வுகள்
சிறு மின்னூட்டங்கள்,
கடவுளால் கைவிடப் பட்டவர்கள்
கைக்கொள்ளும் உபாயங்கள்
கையாலாகாத்தனத்தை
மறைக்கும் முகமூடிகள்
உங்களை கட்டுப் படுத்தும்
கரங்கள் நுட்பமானவை
உங்கள் அவதானிப்புகளுக்கு
அப்பாற்பட்டவை,
ஆதலால்
ஆடற வரைக்கும்
மூடிட்டு ஆடிட்டுப் போங்க.
காய்களை நகர்த்தி வெட்டுவதில்லை
இப்போது...
நவீன யுத்தம்
காய்களை கவனித்து
நம் பக்கம் மாற்றிக் கொள்வது
ஒத்துவராத, உபயோகமில்லாத
காய்களை மட்டும்
கட்சி மாறிய
காய்களை வைத்தே கொல்வது
கத்திகளை எப்போதும்
குழிபறிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவது
தவிர்க்க இயலாத சூழலில் மட்டும்
கொல்லப் பயன்படுத்துவது
குறிப்பாக
முதுகில் குத்துவதற்கே
முன்னுரிமை கொடுப்பது
காட்டிக் கொடுப்பது
கூட்டிக் கொடுப்பது...
தப்பான நேரத்துல தப்பான இடத்தில
தவறிப் பொறந்திட்ட தம்பி...
கஷ்டப் பட்டு போராடு,
உயிரக் கொடுத்துப் போராடு...
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கம்மியான கேவலத்தோட
செத்துப்போக.
4. குழந்தை மழை
வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு
நிலவு கண்ணில் படவில்லை
எழுந்து தேடவுமில்லை.
அருகருகே
அம்மா, குழந்தை.
நீண்ட ஒற்றைக்கொம்புடன்
மூன்று கால் மான்,
தும்பிக்கை உயர்த்தியபடி
வலது காலும்
வாலுமற்ற யானை,
அங்கங்கே விரிசலுற்ற
குதிரைகளற்ற தேர்,
களைந்தெறிந்த
குழந்தை உடைகளாய்,
உடைத்த பொம்மைகளாய்
இன்னுஞ் சில
உருவமற்ற குவியல்கள்.
"விர்ர்"ரென்று
விமானமொன்று
அருகில் கடக்க
விருக்கென்று துள்ளிய குழந்தை
தவழ்ந்து செல்கிறது
தாயிடம்.
குளிர்ந்து கனத்த
காற்றொன்றில் கலைந்து
பாம்பாய், புலியாய்,
கரடியாய், யானையாய்,
உருவங்களற்றதுமாய்,
உடைந்து
உருமாறியது அம்மா.
அரவணைத்துக்காக்க அருகே
அம்மா இல்லாதலால்
அனைத்துமே பயமுறுத்த,
முகங்கருத்துக் குழந்தை
பயந்து அழ,
ஆரம்பித்திருக்கிறது
ஒரு குழந்தை மழை.
5. காமக் கடுங் கானல்
மெல்லிய குறுந்தகடிலிருந்து
வெளிவந்து புரிந்த
தூரதேசத்து
ஆண்கள், பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்.
கவுரவ விருந்தினராக.
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர்
மின்சாரவேகத்தில்.
காற்றில் கரைந்திருந்த
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில் மிதந்த
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது
தவறவிட்டுவிட்ட ஒரு
தனிமையின் உச்சம்.
6. வீடெனப்படுவது...
அதிகாலை ஊரிலிருந்து
தவிர்க்க முடியாத தகவலொன்று
கைப்பேசி சொல்லப்பட
ஆற அமர யோசித்து
பொருத்தமான பொய்யொன்றை
ஆபீசில் சொல்லிவிட்டு
அவசியம் வருமாறு
அவசரமாய் கிளம்பிவிட்டனர்
அப்பா, அம்மா, தங்கை.
எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற
ஆறேழு நாட்களுக்குமான
ஆடைகள், இதர பொருட்களுடன்
ஒட்டிக்கொண்டு
வீடும் சென்றுவிட
என்னுடன் மிச்சமிருப்பவை
சில சுவர்கள், பொருட்கள்,
சில ஜன்னல்கள், கதவுகள்,
ப்ரிஜ்ஜில் மிஞ்சிய நேற்றைய மாவு,
இவற்றுடன்
ஹாலில் அமர்ந்து
தம் அடிக்க கொஞ்சம் சுதந்திரமும்,
நிறைய தனிமையும்.
7. பெண் சிநேகம்
முன்னிருக்கையில் பெண்
அழகாயிருந்தாள்
அம்மாவுடன்
அமர்ந்திருந்தவள்
எதேச்சையாய்
என்னைப்பார்க்க
முழிபிதுக்கி
மூக்குவிடைத்து
நாக்குதுருத்தி
கைவிரல்களை
கொம்புகளாக்கி
அழகு காண்பிக்க
உடனே சிரித்தாள்.
சிநேகமாகிவிட்ட
சந்தோசத்தில்
இயல்பாகி
இலேசாய் சிரிக்க
உடனே அழுதவள்
திரும்பிக்கொண்டாள்.
அவள் அம்மாவிடம்
என்னை வைத்து
காமெடி கீமெடி
பண்ணிட்டாளோயென்று
இன்றுவரை
உறுதியாய்த் தெரியவில்லை.
8. வன்முறைக்கான வினாவிடைகள்
கேள்விக்குறியாய் முதுகு வளைய
பள்ளிக்குழந்தைகள் சுமந்து செல்லும்
புத்தகப் பையினுள்
தேடினால் கிடைக்கக் கூடும்
உங்களை
ஆச்சர்யக் குறிகளில் ஆழ்த்தும்
வளர்ந்தவர்கள் வளர்த்துவிட்ட
வன்முறைக்கான வினாவிடைகள்.
9. வருங்காலம்
படர்ந்திருந்த கொடியில்
பூக்கத் துவங்கி விட்டன
பூசணிப் பூக்கள்.
விரைந்து வந்துகொண்டிருக்கிறது
வேலி மரங்களில்
பூசணிகள் காய்க்கும் காலம்.
10. சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
தட்டைத் தட்டியெழுப்பிய
தாயின் தாளத்துக்கு
இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி
கழுத்தை நெரித்துத் தொங்கிய
கம்பி வளையத்தை
தோள்களைக் ஒடுக்கி,
நெஞ்சைக் குறுக்கி,
வயிற்றைச் சுருக்கி,
கால்வழியேயெடுத்து
கக்கத்தில் வைத்துக்கொண்டு
சில்லறைத் தட்டை
தாயிடம் கொடுத்துவிட்டு
தவழும் தம்பியுடன்
சிரித்து விளையாடுகிறாள்
வித்தை காட்டிய சிறுமி.
கழுத்தை நெரித்து விடவேண்டுமென
கங்கணங் கட்டி வந்த வறுமையும்,
உதவி விட்டதாய்ச் சத்தமிடும்
சில்லறைகளின் மனிதாபிமானமும்
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன செய்வதறியாமல்,
கக்கத்தில் வைத்திருந்த கம்பி வளையமாய்.
11. புரிதல்
உழைத்த களைப்போ
உறவுகளின் மீதான சலிப்போ
தூங்கித் தோள்சரியும்
சகபயணி
அவராய் நானும்
நானாய் அவரும்
இருந்திருக்கவோ
இருக்கவோ கூடும்.
naga raju <konamonaa@gmail.com>
************************
கோலங்கள்
- வேதா. இலங்காதிலகம்.( ஓகுஸ், டென்மார்க்.)-
சந்தான சீவன்களின் உறவுப் பாலம்
சரித்திரம் அமைக்கும் வாழ்வுக் கோலம்.
சக்கர வாழ்வின் சஞ்சாரக் காலம்
சாயாத வினைத் தவம், ஓயாத வெற்றி மூலம்.
தாழ்விலா வாழ்வும் வீழ்விலா நீள்வுமில்லை.
வாழ்வை வசப்படுத்த வனையும் கோலங்கள்
தழும்பின்றி எழுந்திடும் பிரயத்தன கோலங்கள்.
ஊழ்வினை யென்றுமொரு வார்த்தைக் கோலங்கள்.
இதமான கோடையில் மகிழும் மனங்கள்
கதமான குளிரில் உறையும் மனங்கள்.
பதமிலாச் சுவாத்தியம், கலாச்சாரச் சூழல்கள்
சதமென வாழவோரிங்கு பலவகைக் கோலங்கள்.
வண்ணப் பொடிக்கோலமல்ல வாழ்வு.
வண்ணப்பூச்செண்டுக் கண்காட்சியல்ல வாழ்வு.
எண்ண மலர்களின் எத்தனிப்பு முகிழ்வு
பின்னிப் பிணைக்கும் விடைக்கோலம் வாழ்வு.
Vetha. langathilakam <kovaikkavi@gmail.com |