| 
  .நான்!
 - யோகபிரபா (புதுச்சேரி) -
 
 
  கதகதப்பைத் 
  தேடி தகித்துக் கொண்டிருந்த
 காமத்தின் வீரியத்தில்
 தனிமைதேடி அலைகிறதென் மனம்
 திருமணத்திற்கு முன்பு வரை
 சக நண்பர்களுடன் பேசுகையில்
 "பொம்பள பொண்ணா அடக்க
 ஒடுக்கமா இருக்காளா பாரு
 வரவன் போரவன் கிட்டெல்லாம்
 பல்ல இளிச்சிட்டு..."
 என்னும் அம்மா
 இப்போதெல்லாம்
 "அவரு அப்படி இப்படி இருந்தாலும்
 நீதான் அட்ஜஸ் பண்ணி
 அவர சந்தோஷபடுத்தனும்"
 என்னும் அறிவுரையோடு
 களம் இறக்குகிறாள்
 வயதின் பசியைத் தீர்த்துக் கொள்ள
 வார்த்தைகளால் கூட விளையாடியதில்லை நான்
 இன்றோ,
 ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட
 உனக்கான உணவு நான்.
 பக்தியில் அழிக்கப்பட வேண்டிய
 'நான்' போல்
 நான் இருப்பதே இல்லை
 வாழ்வின் கடைசி வரை
 இப்போது எங்கே இருக்கிறான் இறைவன்
 நான் அழிந்து வாழும் எனக்கு
 காட்சி அளிக்கச் சொல்
 அவனை அடையாளப்படுத்தி
 அடக்கிய உங்களுக்கு
 அடையாளப்படுத்துகிறேன்
 "நான்" யாரென்று.
 
 yogaprabha_1985@yahoo.com
 
 மேரித் தங்கம் கவிதைகள்!
 
 1.ஒரு மனைவியின் விடைபெறல்!
 
  
   போய் 
  வருகிறேன் தோழா! விலகல் இல்லை இது;
 விடைபெறல் மட்டுமே! உனக்கான
 நேசமும் காதலும் என்னுள்
 நிலைத்திருக்கும் என்றென்றும்.......
 
 நாமிருவரும்
 நட்பாய் கை குலுக்கினோம்;
 நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
 காதலாய் நிறம் மாறியபோதும்
 கனவுகள் பொங்கிற்று மனதில்!
 
 திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
 மறு நிமிடமே நீ
 புருஷனாய் மாறிய இரசாயாணம்
 புரியவே இல்லை எனக்கு!
 
 அதிகார அஸ்திரங்களைத்
 தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
 வாலியை மறைந்திருந்து வதம்செய்த
 இராமபானங்களையும் விட
 வலிமையானவை அவை....
 இரணமான நாட்களின் நினைவில்
 இன்னும் கூட
 இரத்தம் கசிகிறது நெஞ்சில்!
 
 எவ்வளவு முயன்றும் - உன்
 புதுப்பிக்கப் படாத ஆணெனும்
 புராதான மூளைக்குள் காலங்காலமாய்
 பதுங்கிக் கிடக்கும்
 மனைவியின் பிரதியாய்
 மாறவே முடியவில்லை என்னால்
 மன்னித்து விடு என் தோழா!
 
 வேறு வழி தெரியவில்லை; அதனால்
 விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
 கால நதியின் சுழற்சியில்
 மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
 கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
 கணவன் மனைவியாய் நாமிருந்த
 கசப்புகளை மறந்து..........!
 (குறிப்பு: அன்புடன் இணையதளம் நடத்திய 
  கவிதைப் போட்டியில் படக்கவிதைப் பிரிவில் முதல் பரிசு பெற்ற கவிதை இது)
 
 2.தா(கா)கங்களின் கதை!
 
  
   அன்புத் 
  தங்கையே! அன்புத் தங்கையே! இன்னும் கொஞ்ச தூரம் தான்
 எங்காவது சிறிதளவாவது
 நீர் கிடைக்கும் நிச்சயமாய்
 அள்ளிச் செல்வோம் அதுவரை
 வலிபொறு என் செல்லமே!
 
 நீர் நிரப்பும் நேரம் வரை
 நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
 நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
 காகங்களைப் பற்றிய கதை இது!
 பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
 பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;
 
 பாட்டியிடம் திருடிய வடையை
 தன்குரல் பற்றிய பிரமைகளில்
 பாட்டுப் பாடி நரியிடம்
 பறிகொடுத்ததும் கூட
 இதே காகமாக இருக்கலாம்!
 அத்துவானக் காட்டில் ஒருநாள்
 அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!
 
 சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
 தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
 கடும் கானலைத் தவிர இன்று போலவே
 கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ....
 
 முன்பெல்லாம் இத்தனை
 அலைச்சலும் தேடலும்
 அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
 ஏதாவது செடி மறைவில்
 உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
 உருட்டிக் குடித்து விட்டு
 ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி.....
 
 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
 விவசாய நிலங்களை யெல்லாம்
 விழுங்கத் தொடங்கிய பின்புதான்
 காகங்களுக்கும் நமக்கும்
 தாகம் நிரந்தரமாயிற்று!
 
 தூரரத்தில் வெகுதூரத்தில்
 பானை ஒன்று மின்னியது
 பாலை வெயிலில்;
 பசியையும் மீறி காகம்
 பறந்து போனது அதனருகில்...
 
 பெரியதோர் மண்பானை அது;
 இரவுப் பனியின் ஈரம் உலராமல்
 தூரில் நீராய் நின்றிருந்தது
 சூரியக் கதிர்களிலிருந்து
 எப்புடியோ தப்பி.........
 
 விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
 விசனப்பட்டது காகம் - தன்
 அலகுக்கு எட்டாத
 ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து....
 
 இதற்கு முன்பும் ஒரு சமயம்
 இதே போல் நேர்ந்ததும் - தன்
 புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
 நினைவிலாடியது காகத்திற்கு......
 
 கொஞ்சமும் தாமதிக்காமல்
 அக்கம் பக்கம் கல் பொறுக்கி
 அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
 கற்களால் பானை நிரம்பியும்
 நீரெழும்பி வாரதது கண்டு
 நிர்கதியாய் நின்றது காகம்!
 
 என்னாயிற்று தண்ணீருக்கு?
 ஐயகோ -
 போட்ட கற்களின் அழுத்தத்தில்
 ஓட்டை விழுந்து பழம் பானையில்
 ஒழுகிய கொஞ்ச நீரையும்
 வறண்டிருந்த நிலம்
 வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!
 
 என்ன செய்யும் ஏழைக் காகம்?
 தாகம் தணிக்க வழியற்று
 பறந்து போய் மறுபடியும் - சிறுவர்களின்
 பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
 நீதிக் கதை வெளிகளில்
 நீந்தித் திரியலாயிற்று !
 நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
 தொடர்கிறது காலங்கள் தோறும்.....!
 
 3. கணிணிகள் பற்றி ஒரு கவிதை!
 
 
  கணிணிகளே 
  காலத்தின் கண்ணிகளே கலியுகத்தின் கடவுளே!
 பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே
 பன்முகங் கொண்டவனே!
 மனித மூளையின் மறுபதிப்பே
 மந்திர எந்திரமே!
 கனிவும் கரிசனமும் நிறைந்தவனே
 கற்பகத்தருவின் உருவமே!
 
 மின்னும் உமது சின்னத்திரை தான்
 மாயக் கண்ணனின் மலர்வாயோ?
 பன்னெடுங் காலமாய் பரணி ஆளும்
 பரம்பொருளின் ஒளி இதுதானோ?
 விண்ணையும் மண்ணையும் கைக்குள் சுருக்கிய
 விஞ்ஞான விந்தை நீதானோ?
 எண்ணி எண்ணி வியக்கிறேன் உன்னை
 எப்படித் தான் விளிப்பது!
 
 பரந்த உலகத்தின் செய்திகளை
 பத்திரமாய் உன்னுள் பதுக்கி
 விரலசைவில் விபரங்களைக் கொட்டும்
 வித்தைகள் பல தெரிந்தவனே!
 ஒருநொடியில் ஒற்றைச் சொடுக்கில்
 ஒன்றை பலவாய் பலப்பலவாய்
 பெருக்கும் சூட்சுமம் அறிந்தவனே
 பிரமிக்கிறேன் உனைப் பார்த்து!
 
 சிலிர்ப்பூட்டும் வேகத்தில் செயலாற்றும்
 சின்னஞ்சிறு தாரகையே!
 சிலிக்கான் சில்லுகள் உங்களின்
 சிந்தனைக் களமோ?
 அலுவல்களில் நீங்களின்றி அணுகூட
 அசையாதென்பதும் இணைய
 வலைப்பின்னல்களே உலகாளு மென்பதும்
 வருங்கால நிஜமோ?
 
 விண்வெளி தொழிற் நுட்பத்தில்
 விந்தைகள் நிகழ்த்துகிறாய்;
 அண்டம் நடுங்கும் அணுவியலிலோ
 அபார சாதணைகள்!
 கண்சிமிட்டும் நேரத்திற்குள் ஆழ்
 கடலுள் ஆராய்ச்சிகள்;
 வண்ணத்திரை சின்னத் திரைகளிலும்
 வசீகரிக்கும் புதுமைகள்!
 
 விழிப்பூட்டும் கல்வியில் வித்தகனாய்
 வியாபித்து நிற்கிறாய்;
 சலிப்பூட்டூம் நேரங்களை சந்தோஷமாக்க
 சங்கீதமாய் வழிகிறாய்!
 வழிகாட்டும் சுற்றுலாவிலும் உன்னால்
 வருமானம் தழைக்கிறது;
 அழித்தல் ஆக்கல் பணி செய்யும்
 ஆண்டவனுக்கும் உதவுவாயோ!
 
 சகலமும் கணிணி மயமானால்
 சாமானியர்க்கு வேலைபோகும்
 அகிலமுழுதும் அவதியுறு மென்று
 அலறின ஆருடங்கள்!
 புதிதுபுதிதாய் பூத்த வேலைகள்
 புலம்பல்களைப் பொய்யாக்கின;
 கதியில்லை கணிணியின்றி என்றொரு
 காலமும் கனிந்ததே!
 
 மருத்துவத்தில் கணிணியின் பணிகளோ
 மகத்துவத்தின் மகுடங்கள்;
 இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
 இளவரசி நீயேதான்!
 வருகிற நாட்களிலும் உன்னில்
 வளர்ச்சிகள் பெருகும்;
 புரட்சிகளின் புதல்வியாய் பொங்கி
 பிரவகிக்கப் போகிறாய்!
 
 சாதனைகளின் பட்டியல் பார்த்து
 சந்தோஷப்படுமுன் சிற்சில
 வேதனைகளும் விஷப்பல் காட்டி
 விழிகளை நனைகின்றன!
 பெருகும் கணிணி விளையாட்டுக்கள்
 பேரிடியாகின்றன சிறுவர்கட்கு;
 அருகும் உடல் விளையாட்டுக்களால்
 அரும்புகள் கருகுகின்றனவே!
 
 இரவுகளின் அடர்த்தி எப்போதும்
 இளைஞர்களின் கண்களில்
 பெருகும் ஈ-எழுத்துக்களின் வேகத்தில்
 பிழைக்குமா புத்தகங்கள்?
 குருவிகள் கொத்தி என்றும்
 குலையாது கோபுரங்கள்;
 அருவிக் குளியளின் ஆனந்தத்தை
 அறைக்குள் ஷவர்கள்
 ஒருபோதும் தருவதில்லை என்ற
 உண்மை நிலைக்கும்!
 
 சூதும் துவேஷமும் ஆபாசங்களும்
 சூலப்பெற்ற மனிதப்
 பதர்களின் மலிவான பிரயோகத்தில்
 மாசுபடும் கணிணிகள்!
 அற்புதமான அறிவியல் கருவிகளிலும்
 அநீதிகளை விதைக்கும்
 விற்பனை மனங்கொண்ட வீணர்களின்
 விளையாட்டு அது;
 அற்பங்களைக் களைந்து வளரும்
 அரும்புகளைக் காப்போம்!
 
 வயலிலும் கணிணிகள் இறங்கும்
 வருங்காலம் சுபிட்ஷமே!
 இயற்கையின் சீற்றங்களைத் தடுத்து
 இதமான காற்றுக்கு
 இயந்திரங்கள் வழிபண்ணிக் கொடுத்தால்
 இந்தயுகம் செழிக்குமே!
 பயமின்றி மனிதம் தழைக்கவே
 பயனாகட்டும் கணிணிகளே!
 
 4. எயிட்ஸ¤டன் ஒரு பேட்டி!
 
  
   வாசகர்களுக்கு 
  வணக்கம் - இன்று நாம் சந்திக்கப் போகும் நபருக்கு
 அறிமுகமே அவசியமில்லை
 உலகப் புகழின் உச்சியிலிருப்பவர்!
 
 இந்த நூற்றாண்டின் இணையற்றவர்
 புள்ளிராஜாக்களை பிரபலமாக்கியர்;
 மனிதக் கொலைகளுக்கான
 மாபெரும் விருதை
 பெறுகிறவர்களின் பட்டியலில்
 முன்னணியில் நிற்பவர்!
 
 மழைக்காலத்தின் ஒரு மாலை வேளையில்
 வேகவைத்த வேர்க்கடலையை கொறித்தபடி - அவருடன்
 உரையாடியதிலிருந்து சில பகுதிகள்
 உங்களின் பார்வைக்கு.....
 
 (?) உயர்திரு எயிட்ஸாரே
 வந்தனங்கள் உமக்கு
 உள்ளம் திறந்து கொஞ்ச நேரம்
 உரையாடலாமா உம்முடன்
 மானிடர் உய்யவே
 மகத்தான சேதிகள் சொல்வீரா?
 
 (ப) அவசர வேலைகள் அனேகம் எனக்கு
 அவகாசமில்லை நின்று பேச
 புவன முழுக்க பவனி வரவேணும்
 புல்லென நிற்கப் பொழுதில்லை;
 நவநவமான கேள்விகள் இருந்தால் மட்டும்
 நடந்தபடி கேளும் என்னிடம்......!
 
 (?) சிறு அறிமுகம் உம்மைப் பற்றி
 சினேகத்துடன் பகரலாமே!
 வருமுன் காக்கும் சூட்சுமம் உரைத்தால்
 வாழ்த்தும் மானிடர் இனமே!
 
 (ப) மரணம் எனது மறுபதிப்பு; எனக்கு
 மனித உயிர்கள் தித்திப்பு!
 எருமை வாகனன் எனக்கும் எஜமானன்;
 எமனின் புதுவடிவம் நான்!
 ஒரு துளி இரத்தத்திலும் ஊடாடித் தொற்றுவேன்
 ஓய்வேன் உயிர் குடித்தே......
 மருந்தில்லை எனை வெல்லவே இதுவரை
 மறுபடி மறுபடி துளிர்ப்பேன்!
 
 (?) உயிர்த் தாகம் கொண்டு
 உலவும் உம்மால் தான்
 உலகம் அழியும் ஒருநாளென்று
 ஊளை கேட்குதே எங்கெங்கும்
 உண்மை தானோ அது?
 
 (ப) நாழிக்குள் பொங்குமாக் கடலை அடைத்து
 நாடு கடத்துதல் சாத்தியமா?
 அழியும் உலகம் என்னால் என்பதெல்லாம்
 அச்சங்களின் உச்சம்; அறிவீனம்
 ஊழிக்குள் சைத்தான்கள் ஓதும் வேதம்
 உண்மையில்லை ஒரு போதும்
 விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எளிதாய்
 வீழ்த்தி விடலாம் விதியையும்!
 
 என்னைப் போல் இன்னும் எத்தனை
 எத்தனையோ பேரிடர்கள் பலவும்
 தாண்டித்தான் தழைக்குது மனித இனம்
 தடுமாற்றம் தவிர்ப்பீர் மானிடரே;
 வீண் பயங்கள் வேண்டவே வெண்டாம்
 விண்ணுள்ளவரை மனிதம் உய்யும்!
 
 (?) அபாயங்கள் நிறைந்தவனென்று நினைத்திருக்க
 ஆறுதலாய்ப் பேசுகிறாயே சந்தோஷம்;
 அபயம் என்றலரும் மானிடர் உய்யவே
 உபாயங்கள் இருந்தால் சொல்லி
 உலகத்தாரை இரட்சிக்கக் கூடாதா?
 
 (ப) சுத்தப் படுத்தாத ஊசிகள் இரத்தம்
 உறைந்த கத்திகள் பிளேடுகள்
 மெத்தென்ற விலைமகளிர் ஓரினப் பாலுறவு
 மொத்தமும் விலக்கி டுங்கள்!
 பித்தென்ற காமத் தீயை முழுதாய்
 வெல்ல முடியா விட்டாலோ
 வாத்யாயனார் கலை பழக கண்டிப்பாய்
 கவசம் அணிந்து கொள்ளுங்கள்!
 
  ஆட்டோ கிலாவ்வில் வைத்து சிரத்தையாய்அணுதினமும் பாதுகாத்த சிரிஞ்சுகள்;
 மற்றவர் இரத்தத்தை மனிதரில் செலுத்துமுன்
 மாசுகளையும் சோதணைகள் யாவும்
 தோற்று வாயிலேயே எனைத் துப்பறிந்து
 தொற்றுவதைத் தவிர்க்கும் வழிகள்
 மாற்று இப்போதைக்கு ஏதுமில்லை அதனால்
 மிகத்தேவை எச்சரிக்கை என்தோழா!
 
 (?) எப்படியோ உன் மரண வலைக்குள்
 தப்பிப்போய் விழுந்து தத்தளிக்கும்
 அப்பாவிகளை அணுகும் முறைகளை
 செப்புக செவிக்குள் உரக்க........
 
 (ப) நிச்சயிக்கப்பட்ட மரணத்தை நிறுத்த முடியாது
 நேர்மையாய் எதிர் கொள்ளட்டும்
 அச்சமயம் வரும்வரை மிச்ச நாட்களை
 அல்லலின்றி கழிக்க உதவுங்கள்!
 உச்சபட்ச தோழமையும் பரிவும் அன்பும்
 உங்களின் பங்களிப்பாக இருக்கட்டும்
 மெச்சும்படி மேன்மையாய் வாழ விடுங்கள்
 வாழ்வுரிமை யாவர்க்கும் பொது!
 
 ஏற்கெனவே என்னுடைய முட் படுக்கையில்
 ஏகப்பட்ட இரணங்கள் அவர்களுக்கு;
 வெறுத்தொதுக்கி விலக்கி வைத்து அவர்களின்
 வேதணைகளை அதிகப் படுத்தாதீர்!
 கர்மபலனெனும் கண்ணீர் குண்டுகளை வீசி
 காயப் படுத்தாமல் இருங்கள்;
 வார்த்தை களெனும் ஈட்டிகளால் குத்தி
 வாழ்தலை நரகமாக்க வேண்டாம்!
 
 வியர்வையிலோ எச்சிலிலோ பரவுவதில்லை நான்
 வீணான எண்ணங்களை விடுங்கள்!
 பயமின்றி பழகலாம்; பணிஇடங்களிலும் அவர்களை
 பாரமென ஒருநாளும் நினைக்காதீர்!
 அயலாரை ஒருபோதும் தொற்றுவதில்லை நான்
 அணைத்தலிலும் இரத்தமற்ற முத்தத்திலும்.....
 நயமின்றி தனித்தட்டு டம்ளரெனப் பிரித்து
 நாயைப்போ லவர்களை நடத்தாதீர்!
 
 தெரிந்து கொள்ளுங்கள் மானிடரே இறப்பைத்
 தடுக்கத்தான் முடியாது; ஆயினும்
 பிரியங்களுடன் அவர்களைப் பேணிப் பராமரித்தால்
 நீட்டிக்கலாம் ஆயுளை நிச்சயமாய்......
 நிரந்தரமாய் எனை நீக்கும் நிவாரணிகள்
 நிறுவப்படும் ஒருநாள் அதுவரை
 பொறுமையுடன் காத்திருங்கள் சக உயிர்களை
 பொக்கிஷமாய்க் கருதி மகிழ்ந்திடுங்கள்!
 
 (?) இறுதியாய் ஒரு கேள்வி - இனியவனே
 உறுதியான உன் பதிலுக்கு!
 அரிதும் அரிதுமான மானுட சமூகத்திற்கு
 விரோதியா நீ நண்பனா?
 
 (ப) பிற்போக்கானவனென நீங்கள் முத்திரை குத்தினாலும்
 ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
 கற்பொழுக்கத்தை மறுபடி போதிக்க வந்தேன்
 மீறலுக்கு விலை அதிகம்!
 வற்புறுத்திக் கேட்டதனால் சொன்னேன் வருத்தமில்லை
 வாழ்த்தினாலும் நீங்கள் தூற்றினாலும்.....
 தீர்மானித்துக் கொள்ளுங்கள் நீங்களே நான்
 தீயவனா நல்லவனா என்று
 தீர்ப்பு மரணம் அதனால் மானிடரே
 திருந்தி விடுங்கள் உடனேயே....!
 
 thangam.mary@gmail.com
 
 அம்மா! அம்மா! அம்மா!
 
  - ராஜா தமிழ் - 
  
   ரத்தத்தில் 
  நனைந்து வந்த என்னை முத்தத்தால் நனைத்த
 உன் இதழ்களில்
 முதல் முறை என் பெயரை
 எப்பொழுது உச்சரித்தாயோ
 அன்றிலிருந்து இன்று வரை
 அந்த குரலில் கலந்து வரும்
 உரிமையை உணர் வை
 வேறு எந்த குரலிலும்
 நான் உணர்ந்ததில்லை
 உன் விரல் பட்ட உணவில்
 தான் நான் உயிர் வளர்த்தேன்
 உன் இதழ் சிந்திய வார்த்தையை
 உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
 உன் சுவாசத்தில் கலந்த காற்றை
 சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
 முதல் நடந்திடும் நான்
 விழுந்தது உன் மடியில்
 முதல் மொழியினை நான்
 உணர்ந்தது உன் இதழில்
 முதல் கலங்கிடும் விழிகளை
 துடைத்தது உன் உடையில்
 முதல் சிரிப்பினை பழகியது
 உன் முகத்தில்
 கண்ணாடிப் பார்க்கும் வரை
 என் அத்தனை முகங்களும் நீயே
 உன் முன்னாடி இருப்பதை விட
 வேறு இன்பமில்லை தாயே
 என் நிர்வானத்தை முதலில்
 களைத்த நீயே
 நீல வானத்தையும் காட்டி
 வளர்த்தாய் தாயே
 மூச்சு விடும் இடைவெளியிலும்
 உன் அன்பு எனை
 விட்டு விலகியதில்லை
 நீ காட்டி வளர்த்த
 ஒவ்வொரு பொருளும்
 இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
 கையெடுத்து நீ கும்பிடச்
 சொன்ன தெய்வமோ
 எனக்கு தலை சீவிவிட்டதில்லை
 நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
 கூட நீ எனை அடித்ததில்லையே
 குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
 அடி வாங்கஅடம் பிடிப்பேன்
 உன்னிடம் அடி வாங்காமல்
 உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
 என்பேன்
 கிறுக்கித் தான் அம்மா
 உன் கைகளை பிடித்து
 எழுத துவங்கினேன்
 அன்பை சுருக்கி வாழும்
 இதயங்களின் நடுவே
 உறவுகளை பெருக்கி வாழும்
 உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
 அணுஅணுவாய் என் வளர்ச்சியை
 ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
 குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
 என்றைக்கும் உன் சேலை நுனி தான்
 என்னுடைய கை குட்டை
 உன் முகமே நான் முகம் பார்த்து
 தலை சீவும் கண்ணாடி
 உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
 விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
 நான் விரும்புகிறேன் தாயே
 சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
 எனக்கு தெரியாமல் நீ
 வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
 அந்த சுகம் இன்று எந்த
 ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
 உன் விரல் நுனியின் சுவையை
 எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
 உணர்ந்ததில்லை
 உன் மடியின் சுகத்தை எந்த
 பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
 சத்தியமாய் உன்னை போல் ஒரு பிரிவை
 இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை
 
 tamil.bsc@gmail.com
 
 யாரிவன்?
 
  - என் சுரேஷ் (சென்னை) - 
  
   பதினொன்றாம் வயதில்
 விபத்தொன்றில்
 கிணற்றில் விழ
 கழுத்திற்கு கீழ்
 கைகள் இரண்டையும் தவிற
 எல்லாவற்றின் செயலகளையும் அந்த
 கிணற்றால்
 கொள்ளையடிக்கப்பட்டவன்!
 
 உடலின் கசிவுகள்
 இவனின் கட்டுக்குள் இல்லை
 உடன்பிறந்தோரின் உதவிகள்
 தொடர்கிறது
 வருடங்கள் இருபத்தி ஐந்திற்கு
 மேலாக!
 
 கழுத்திற்கு கீழ் உணர்வில்லை -ஆனால்
 உடல் முழுக்க மனவலியின் உணர்வுகள்
 பழகி விட்டதென்று புன்னகைப்பான்
 பார்ப்போறின் கண்களில்
 முந்தும் கண்ணீர்மழை!
 
 எத்தனையோ நண்பர்கள்
 வந்தார்கள் சென்றார்கள்
 புதிய துடப்பத்தின்
 ஆரம்ப சுறுசுறுப்பு போலவே!
 
 இருப்பினும்
 சில தியாகதீபங்கள்
 இவனுக்காய் அழுதுகொண்டு தான்
 இருக்கிறார்கள்
 உருகுவதைத் தவிற
 வேறுவழியின்றி!
 
 இவனிடம்
 பேச யாருக்கு நேரமுண்டு - என
 உணர்ந்த இவனின் தனிமையே
 இவனுக்கு நல்ல தோழன்!
 
 இவனும் தனிமையும் சேர்ந்து
 புத்தகங்கள் வாசிப்பார்கள்
 அழுவார்கள்
 பள்ளிநாட்களின் நினைவுகள் தரும்
 மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!
 
 மூன்று மாதங்கள் முன்பு
 தகப்பனின் மரணம்
 ஆலமரம் விழுந்ததால்
 கசிந்துருகுமதன்
 நிழலின் துயரம்!
 
 படுத்த படுக்கையில்
 பல்லாண்டுகளாய் தாய்!
 
 ஐந்து சகோதரிகள்
 அவர்களின்
 தியாகமும் அன்பும்!
 
 தனிமையின் துணையோடு
 இதெல்லாம் நினைத்துக்கொண்டே
 நகர்ந்து கொண்டிருக்கிறது
 இவனின் கவலைகளின்
 இருண்ட மேகமூட்டத்தில்
 கரையும் வாழ்க்கை!
 
 கவலை கோபமாக மாறும்
 சில நொடிகளில்
 தனிமையும் இவனும் சேர்ந்து
 பூமிப்பெண்ணை ஒரு சாத்து
 சாத்துவார்கள்
 பிறகு அழுவார்கள்!
 
 இசையில் மேதையிவன் - ஆனால்
 இவன் இசையை இசைக்கமட்டும்
 மனமில்லா சமுதாயம்!
 
 தசைகள் செயலற்ற இசைஞானிக்கு
 இசையெதற்கு என்ற
 விரக்தியில் இசைந்து
 இசையை மறந்துவிட
 முயற்சிக்கிறான்
 காதலியை மறக்க முயன்று
 தவிக்குமோர் காதலனைப்போல!
 
 கண்டதை படித்து
 பண்டிதனாணானா - அல்லது
 பிறப்பாலையே பண்டிதனா
 எனும் வினா எழுப்பிக்கொண்டிருக்கிறது
 இவனின் அறிவாற்றல்!
 
 தந்தை விட்டுச்சென்ற
 கொஞ்சம் வயல் நிலத்தில் மிஞ்சும்
 வியர்வை
 இவன் பசியை கொஞ்சம்
 ஆற்றிக்கொண்டிருக்கிறது!
 
 தேவைகள் அநேகம்
 ஆனாலதை
 கட்டுக்குள் வைக்கும்
 அதீத விவேகமது
 இவனின் சீடன்!
 
 இந்நிலையிலும்
 சுயமாக சம்பாதிக்க
 துடிக்கும் உள்ளம்!
 
 கணினியும்
 கணினியில் தமிழின் அழகாம் "அழகியும்"
 ஒன்றாய் கலந்திட
 இவன் இதயம் முழுக்க தமிழின்று!
 
 இணையம் வழி
 சுயதொழில் செய்ய
 யோசனை!
 
 தெரு அரசியல்வாதி முதல்
 ஐநா சபைத் தலைவர் வரை
 எல்லோரிடமும் இணையம் வழி
 வணக்கம் சொல்ல
 காத்திருக்கிறது இவன் துடிப்பு!
 
 தன்னிலையில்
 இவ்வுலகில்
 எத்தனை பேரென்று ஒருநாள்
 அழுது உருகினான்
 அதனால்
 அவர்களுக்கென ஓர் இயக்கம் தீட்டும்
 எழுச்சியின் சிந்தைனையில் இவனின்று!
 
 தன்னிலை கண்டு
 தற்கொலை தவிற்போரின்
 எண்ணிக்கை கண்ட மகிழ்ச்சியில்
 இந்நிலை தனக்கு தந்த இறைவனுக்கு
 நன்றி சொல்லும் ஞானியிவன்!
 
 அன்பர்கள் உதவினால் - அதை
 சுயமரியாதை தடுத்தாலும்
 தந்நிலை உணர்ந்த ஞானத்தால்
 ஒருநாள் திரும்ப கொடுப்போமென்ற
 உறுதியில் அதை நன்றியுடன்
 அங்கீகரிப்பவன்!
 
 இவன் தானே மனிதன்
 இவன் போன்றோரை
 உதவினால் ஏவரும் புனிதர்கள்!
 
 இவன் பெயர் அந்தோனி
 சென்னை ஏழைகளில் மூத்தவன்
 உதவ மனமிருந்தால் போதும்
 இவன் விலாசம் உங்களை
 தேடி வரும்!
 
 புனிதர்களாக வாழ்த்துக்கள்
 அன்புடன்
 என் சுரேஷ்
 
 திரு அந்தோணியின் விலாசம்
 Mr. S. Anthony Muthu
 C/O. Mr.J.Dharmaraj
 5/96 Cheran Street
 KK Nagar
 Pammadhu Kulam
 Redhills
 Chennai 600052
 Tamil Nadu, India
 
 Phone Number : 26323185
 Mobile Number: 9444496600
 Email: anthonymuthu1983@yahoo.com
 anthonymuthu1983@gmail.com
 
 nsureshchennai@gmail.com
 
 என்.சுரேஷ் கவிதைகள்!
 
 )நிஜங்களின் கோலங்கள்
 
 
  தோழியை 
  நானின்று தொலைபேசியில் அழைக்க அடைபட்ட கிளிமொழியில்
 பதற்றமாய் சொன்னாள்
 " அவர் இருக்கார்"....!
 
 உயிர் தோழிக்கா இந்நிலை!
 புன்னகையின் பெட்டகம்
 சுதந்திரத்தின் விரிந்த சிறகுகளென
 எத்தனை வியப்புகளிருந்தது அவளில்..!
 
 தோழியவளின் திருமணமிட்ட வேலியால்
 எத்தனையோ வருடங்களாய் இந்நிலையிது
 என்னில் பற்றவைத்தது கவலைகளை!
 
 புன்னகையால் மறைத்தாளவள்
 அடிமையென்பதை!
 
 பிள்ளைகளால் இருக்கிறது இல்லறம்
 என்கிறது நிஜம்!
 
 பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
 ஒளிந்துகொள்கிறது அவளின் வேதனைகள்!
 
 பெண் சுதந்திரப் போராட்டம்
 இவளிலிருந்து இனி என்று ஆரம்பித்து.....!!!!
 
 2)மீண்டும் கல்விக்கூடத்தில்...!
 
 நேரமும் செல்வமுமன்று தடைசெய்த
 கல்விப்பயணம்
 தொடர்கிறதின்று
 மீண்டும் மாணவனல்ல
 நீயென்றும் மாணவனேயென்று!
 
 மறந்துபோன அந்தகால நினைவுகள்
 மறவாமல் மனமெங்கும் பூக்களைத்தூவ
 மனதின் வர்ணங்களெல்லாம் தெளிந்துணர்த்த
 மறக்கவில்லை எதையும் நானின்று!
 
 நிஜங்கள்
 மனதின் மென்மையான பிரதேசங்களில்
 தியானத்திலிருப்பதை
 மறதியென்று பெயரிடல்
 சரியாயென்று கேட்க
 கலைந்த தவங்கள் மகிழ்ச்சியிலின்று!
 
 3) இறைவா...!!!
 
 சிரித்தால் என்னோடு சிரிக்கும் உலகம்
 அழுதால் எனக்கு தனிமையை அனுப்பும்
 என்னோடு நீயிருப்பதை அறியாமல்!
 
 நீ என்னை மறப்பதுமில்லை
 என்னை விட்டு விலகுவதுமில்லை!
 
 உமையென்றும் நினைத்து வாழும்
 உள்ளமெனக்கென்றும் தாரும்
 என்னுயிர் இறைவா!
 
 உம்மை அறிவதால்
 உண்மை அறிகிறேன்
 உமது பணிகளைச் செய்வதிலேயே
 நான் நிஜ மகிழ்ச்சியடைகிறேன்
 
 உமது சித்தத்தின்படி வாழ்வதினாலென்
 கவலைகள் கரைந்து மகிழ்கிறது
 
 எனது மறைவான பிரதேசங்களிலுமென்
 தவறுகளை வெளிப்படுத்துகிறீர்
 
 நகையாக ஆசைப்பட்ட உலோகமெனக்கு
 சோதனைகளும் கவலைகளும் - இனி
 கொஞ்சகாலமே
 
 சோதனைகளை வெல்ல
 உமது கிருபைகள் மட்டும் போதும்
 
 சோதனைகளில் வென்றுதும்
 என்னிலுள்ள உம்மை காண்கிறேன்
 
 இறைவா
 என்னை உமது கண்களென்றாய்
 எனக்கினி ஏது பயம்!
 
 nsureshchennai@gmail.com
 
 வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!
 
 அடையாளம்!
 
 - வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ் ,டென்மார்க்) -
 
 
  
  கொடையான இயற்கை, செயற்கையினால்கடையாக்கும் குறிப்பு, அறிகுறியெனும்
 அடையாளம் அகிலத்திலொரு அறிமுக ஒளி,
 உடையதைக் காட்டும் அங்கீகார வழி.
 
 குடையாகும் பெயர், இலக்கம், முத்திரை
 ஆடையாகும் இலச்சினை, கொடி, மொழியால்
 விடைவரும் இவர் யார், இது எதுவென.
 விடைதரும் ஐம்புலன்களும் தடையின்றி.
 
 அடைமொழி, குறியீடு, சைகையும்
 அடையாளம் காட்டுமொரு சங்கேத வழி.
 பாடையில் மனிதன் பயணமான பின்பும்
 சாடை காட்டும் அடையாளம் கல்வெட்டு.
 
 நாடாள அரசன், பாவாளக் கவிஞன்;
 படையாளத் தளபதி, கோடாள நீதிபதி.
 ஏராள அடையாளம் ஏவலிட்டு மனிதனை
 ஏற்றம் தாழ்வென ஏகாதிபத்தியம் புரிகிறது.
 
 மேடைகளாண்ட தமிழ் தமிழன் அடையாளம்
 குடை சாயாது காத்திட மேற்கிலும் பிரயத்தனம்.
 குடையொன்றின் கீழ் இணையாத தமிழன்
 அடையாள அங்கீகாரம் கோரும் வறியன்;.
 
 நடையாளம் காணாத அரசநிலைச் சமரால்
 படையோடு போராடும் போர் நிலைத் தொடர்.
 விடை காண முடியாதது மக்கள் இடர்.
 அடையாளம் தொலைந்தால் அவன் நாடோடியாகிறான்.
 
 மாவீரர்
 
 வாகை மரப் பூக்கள் சாமரம் வீச
 ஈகையாயத்; தம்முயிர் ஈந்து
 வாகை சூடியவர் மாவீரர்.
 தோகை விரித்தின்று மக்கள் மனதில்
 சாகை (சாதல்) வென்றவர் மாவீரர்.
 ஆகையால் அவரை அஞ்சலிப்போம்..
 
 வீரம் மூலதனமாய் நாட்டு விடுதலை
 சாரமாய்க்; கார்த்திகைப் பூக்களாய்
 ஆரமாய்த் துயிலும் மாவீரர் காலம்
 தீரம் தரட்டும் எம் மக்களுக்கு.
 நேரமிது அவராத்ம அஞ்சலிக்கு
 வாரம் முழுதுமவர்களை அஞ்சலிப்போம்.
 
 vetha@stofanet.dk
 
 ஈழநிலாவின் (இலங்கை) கவிதைகள்!
 
 01. மாட்டுக்கு மாலை போடு….
 
 
  
  காலினைப் பிடித்தேன் என்றன்கழுத்துக்;கு மாலை வேண்டாம்!
 
 எழுத்திலே காணின்; ஏதும்
 எழுதுவீர் அதுவே போதும்!
 
 வாலினை பிடிப்ப வர்தான்
 வாழுவர் தெரியும்;@கெட்ட
 
 தேளினை பிடித்தோர் கூட
 தேம்புவர் எனவே@உங்கள்
 
 காலினைப் பிடித்தே னையா
 கழுத்துக்;கு மாலை வேண்டாம்!
 
 கழுதையும்; குரங்கும் மாடும்
 கழுத்திலே மாலை ப+ண்டு…
 
 மூலைக்கு மூலை கூடி
 “முதுகினை சொரிந்து” எங்கும்
 
 “போட்டோக்கு” பல்லைக் காட்டி
 “போஸினை’’ கொடுத்து@ பின்னர்
 
 எங்களை வெல்லும் கொம்பன்
 எவனடா இங்கு உண்டு…?
 
 என்றுதற் புகழ்ச்சி தன்னில்
 எம்பித்தான் குதிக்கும் போது
 
 அற்பன்நான் அவைகள் பாத
 அடியிற்கு இன்னும் கீழே
 
 ஆகையால் மாலை வாங்க
 அடியேனுக் காசை யில்லை
 
 காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
 கழுத்துக்;கு மாலை வேண்டாம்!
 
 மாண்டுநாம் மடிந்த பின்தான்
 மனதினால் மாலை இடுவர்
 
 ஈண்டிவர் போடும் மாலை
 இதயத்த லல்ல வேசம்..
 
 மாலையில் மாலை போட்டு
 மாலைதான் மறையுமுன்னே
 
 கூழையன் நாங்கள் போட்ட
 “கூழுக்கு” ஆடிப் போனான…
 
 ஆளினைப் பிடித்து வைத்தால்
 ஆளலாம் என்பீர்@உங்கள்
 
 காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
 கழுத்துக்;கு மாலை வேண்டாம்!
 
 எலும்புக்காய் எச்சிலைக்காய்
 எங்கள்நாய் வாலை ஆட்டும்
 
 பிணமான பின்தான் உண்மை
 பிரியத்தை அதுவும் காட்டும்
 
 ஆகையால் மாலை சூட்ட
 ஆருமே வராதீர் தேடி!
 
 எழுத்திலே ஏதும் காணின்
 எழுதுவீர்;; அதுவே கோடி!!
 
 2007.11.23
 
 02. விருதுகள் வாங்கும் எருதுகள்….
 
 எருதுகளுக்கு
 விருதுகள் வழங்க
 மாடுகள் கூட்டிய
 மாநாடு அது…
 
 நடப்பன ஊர்வன
 நடிப்பன பறப்பன
 விலங்குகள் சிலவும்
 விழாவுக்கு வந்தன…
 
 காணிகளை
 களவாக மேய்வதில்
 ‘கலாநிதி’ முடித்த
 கிழட்டுக் கிடாக்கள்தான்
 கிரீடத்தை சூட்டுகின்றன…
 
 இலவம் பழத்துக்காய்
 இலவுகாத்த
 மூளையே இல்லாத
 முட்டாள் கிளிகள்;
 கீச்சுக் குரலில்
 மூச்சு விடாமல்
 சிறுநீரை பற்றி
 சிலாகித்து பேசின…
 ஒலிவாங்கியை
 எலி வாங்கி
 எருமைகள் பற்றியே
 எடுத்துவிட்டன…
 
 பாவம் பசுக்கள்…!
 பாலைப் பலருக்கும்
 பருகக் கொடுத்துவிட்டு
 குட்டிகளோடு
 குமுறிக் கொண்டிருந்தன
 குளக்கரையில்.
 
 பசுக்களை
 கொசுக்கள் கூட
 கணக்கில் எடுக்கவில்லை….
 
 பாம்புகள்
 பாலுக்காய்
 படப்பிடிப்பிலிருந்தன…
 வெட்கமில்லாத
 வெண்பசுக்கள்
 முலைகளை
 மூடிமறைக்காததால்
 முள்ளம் பன்றிகள் பார்த்து
 மூச்சிரைத்தன…
 பார்க்கு மிடமெங்கும்
 பாலே ஓடியது…
 
 பூனைகள் எலிகளோடு
 புன்னகைத்தவாறு
 முயல்களை
 முழங்குவது போல் பார்ப்பதில்
 மும்முரமாய் இருந்தன…
 
 எருதுகளுக்கு
 விருதுகள் வழங்க
 மாடுகள் கூட்டிய
 மாநாடு அது…
 
 வாழ்த்துப் பாடின
 வால் பிடித்தே
 வயிறு வளர்க்கும்
 வாலான் தவளைகள்….
 கால் பிடித்தே
 காரியம் முடிக்கும்
 காகங்களும்
 கழிசரைக் கழுதைகளும்
 காளைகளுக்கு மாறி மாறி
 கவரிவீசின…
 
 மாக்கள் கூடிய
 மாநாடு அல்லவா…?
 பூக்களுக் கங்கே
 புகழாரமில்லை
 
 அழுக்குத்தான் அன்று
 அரியணையில் இருந்ததால்
 சாணமே அங்கு
 சந்தனமாயிருந்தது…
 
 தயிர்ச் சட்டிளாலும்
 நெய் முட்டிகளாலும்
 இவ்வருடத்திற்கான விருதுகள்
 இழைக்கப்பட்டிருப்பதாகவும்
 பருந்துகளுக்கு
 விருந்து வழங்கினால்தான்
 அடுத்த வருடத்திற்கான
 ‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்
 அதிலும்@
 முதுகு சொரிவதில்
 ‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
 முன்னுரிமை இருப்பதாகவும்
 முதலைகள்
 முணுமுணுத்தன…
 
 எருதுகளுக்கு
 விருதுகள் வழங்க
 மாடுகள் கூட்டிய
 மாநாடு அது…
 
 நாக்கிலுப்புழு ஒன்றே
 நடுவராக இருந்ததால்
 மான்களுக்கும்
 மயில்களுக்கும்
 மரியாதை அங்கில்லை.
 வான் கோழிகளுக்குத்தான்
 வரபேற்பிருந்தது.
 பரிகளும் வரவில்லை
 நரிகளும்
 நாய்களுமே
 நாற்காலியை நிறைத்திருந்தது.
 
 மாநாட்டின் ஈற்றில்
 எருமைகள் பற்றி
 பெருமையாய்
 சாக்கடை ஈக்கள்
 சங்கீத மிசைத்தன….
 
 மரம்விட்டு
 மரம்தாவும்
 மந்தி
 மந்திரிகள்
 கையடித்தன
 கைலாகு கொடுத்தன…
 எதுவுமே தெரியாத
 எருமைகளுக்கு
 பன்னாடைகளால
 பொன்னாடை போர்த்தி
 பொற்கிழி வழங்கின…
 
 மாடுகளின் மாநாட்டில்
 விருதுகள் பெற்ற
 எருதுகளின்
 வீர பிரதாபங்களும்
 பல்லிளிப்புடன் கூடிய
 படங்களும்
 விளம்பரமாய்
 நாளை வரலாம்
 நாய்களின் பத்திரிகையில்!!
 
 2007.11.20
 ‘EELANILAA’ U.L.M.ASMIN.
 SUB EDITOR IN SUDAROLI NEWS PAPER.COLOMBO.SRI LANKA
 kavingerasmin@yahoo.com
 writereelanila@yahoo.com
 http://www.eelanila.blogs.com.
 http://www.srilankatamilpoets.blogs.com
 0094 072 4679690
 0094 011 2572903
 
  'அடையாளம்'
 - கலா (புதுச்சேரி) -
 
 
  
  ஒவ்வொரு முறைஒதுங்கும் போதும்
 உன் உடலாயிருக்குமோ என்ற
 பதை பதைப்பு ஒரு புறம்!
 இருக்கக் கூடாதே என்ற
 துடிதுடிப்பு மறுபுறம்!
 உன் நிலை யறியாது
 நான் தவித்த தவிப்பு,
 வார்த்தையில் வடித்திட
 இயலுமோ?
 
 என்றேனும் ஒரு நாள்
 சினிமாவில் வருவது போல்
 'அம்மா' என்றைழைத்து
 ஓடோடி வருவாய் நீ என்ற
 நப்பாசையில் அல்லவா
 நகர்த்திக் கொண்டிருந்தேன் நாட்களை!
 
 அன்று காலை உருக்குலைந்து
 மண்ணில் புதைந்து கிடந்த தன்
 கட்டு மரத்தைத் தூக்கச் சென்ற
 உன் சிற்றப்பன் ஓடோடி வந்தான்
 என்னை அழைக்க!
 
 கட்டு மரத்தின் அடியில்
 ஓர் எலும்புக் கூடாம்!
 பக்கத்தில் சேறு படிந்து கிடந்த
 அந்தப் பச்சை சட்டை!
 'விளையாடப் புதுச்சட்டை எதற்கு? என்று
 தடுத்தேன் கண்டிப்புடன் நான்;
 அதைத் தான் போடுவேன் என்று
 அடம் பிடித்தாய் நீ!
 
 பாவி மகளே! பிடிவாதமாய்
 அன்று காலை
 அதை உடுத்திச் சென்றது
 உன் எலும்புக் கூட்டை
 எனக்கு அடையாளம்
 காட்டத் தானா?
 
 (சுனாமி முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து கட்டு மரத்தின் அடியில் கிடந்த 
  எலும்புக் கூட்டை, தன் குழந்தையின் சட்டையைக் கொண்டு தாய் அடையாளங் கண்டதாய் 
  செய்தித்தாளில் வந்த உண்மைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)
 
 kalayarassy@yahoo.com
 |