| 
  இம்மாதக் கவிஞர்கள்: 
  நட்சத்திரவாசி 
  | மட்டுவில்
  ஞானக்குமாரன் | ராம்ப்ரசாத் | 
  வித்யாசாகர் | 
  துவாரகன் | 
  வேதா. 
  இலங்காதிலகம்  
  
   
  வெறுமொரு 
  சலனம்
 நட்சத்திரவாசி
 
 எனது ஆண்மையின் சூரியன்
 உதிக்க துவங்கியது வழக்கமற்ற பொழுதில்
 காலம் கலைத்து போட்ட நினைவுகளில்
 அதன் வேர்கள் சொற்களாகின்றன
 பட்டம் பூச்சியின் சிறகு அதிர்வது போல
 அதன் விரைப்பு தொடங்குகிறது
 நீ இல்லாத கணங்களை நினைத்தப்படி
 நிறைவேறாத காமத்தை சுமந்தபடி
 நீ விட்டு சென்ற வலியின் துயரம்
 என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
 மெல்ல உயர்ந்து திரண்ட மேகமாகி
 கனிய துவங்கி கொள்ள
 காத்திருக்கிறது என் காலம் அதன் நேர்கோட்டில்
 பிடித்து செல்லப்படாத கன்றின் குதித்தல்
 எதைப்பற்றியதாகவும் இல்லை எனும்படி
 நீ எப்போது என்னுடன் இருப்பாய்
 என்பது தெரியாதாகையால்
 நான் சுமக்கும் உனது கனவுகள்
 எளிதில் இறக்கிவிட முடியாததாய் இருக்கிறது.
 பாழ்வெளியில் வீசும் காற்றின் நினைவுகளில்
 உனது முகங்காண துடிக்கும் என் ஆவலில்
 வெப்பகிரணமான ஆயிரம் வர்ணங்கள்
 என் துயரினும் பெரிதான இப்படியான
 பொழுதுகளை கட்டப்பது குறித்து
 இப்போதே சொல்லிடு
 இல்லையென்றால் எனக்கு நானே தண்டனை
 அளித்துக் கொண்டு குருதியில் நனையும்
 காமத்தை காலால் எட்டி மிதித்து
 எறிய வேண்டிவரும்
 வலி முற்றி போகுமுன்னரே
 சிறு வண்டி பூட்டி தயராக வைத்திரு
 வெப்பம் மெல்ல இறங்கியதும்
 இரத்தமணம் கேட்டு வரும் மிருகங்களை
 காணாதிருந்திட வேண்டும்
 அறுந்து கிடக்கும் என் குறிவளர்ந்து
 பெரிதாவதற்க்குள் நான் போய்விடவேண்டும்
 பரவும் குருதியில் சூரிய அஸ்தமானம்
 வெறுமொரு சலனம் மாத்திரமே.
 
 mujeebu2000@yahoo.co.in
 www.natchathravasi.wordpress.com
 
 
 முதுகிலே தட்டி உனக்கு நீயே பாராட்டு .....!
 
 - மட்டுவில் ஞானக்குமாரன் -
 
 
  
  இலங்கை இதிகாசத்தின்
 இறுதிப்பாகம் முடிந்தாயிற்று
 முடிவென்னவோ
 சோகச்சகதி தான்....
 
 அத்தோடு கூடவே
 அரங்கிலே நிறைந்திருக்கிறது
 இரத்தமும்
 சதையும் தான்.
 
 இடையிடையே வந்த
 பாபூன்களின்
 முகமூடிகள் கழற்றப்படும்.
 நேரம் இது.
 
 ஓப்பாரி பாடியவரிவரின்
 ஒப்பனையும்
 கலைக்கப்படுகிறது.
 
 நாடகத்ததை நிறுத்தக் கோரி
 அறிக்கைப் போர்
 செய்தோரும்
 
 நீலிக்கண்ணீர் விடக்
 கூலி
 கேட்டோரும்
 
 செமிபாட்டுக் கோளாறுக்காக
 உண்ணாமல்
 இருந்தோரும்
 
 இதிகாசத்திலே
 தங்கள் பங்கு தான்
 சிறப்பாக இருந்ததாக கூறி
 தங்கள் முதுகை
 தாங்களே
 தட்டிக் கொள்கிறார்கள்....!
 
 maduvilan@hotmail.com
 
 ராம்ப்ரசாத் கவிதைகள்
 
  
   1. சருகுகள்
 ஒரு முடிவற்ற பாதையில்
 சீராக பயணிக்கும் காலத்தின்
 வெவ்வேறு மைல்கற்களில்
 தொடங்கி விடுகிறது
 நிகழ்வுகளுக்கான காரணங்கள்...
 
 காலத்தின் பாதைகளில்
 பயணிக்கும் நிகழ்வுகள்
 என்றோ எப்போதோ
 சந்தித்துக்கொள்ளவே செய்கின்றன...
 அறியாமல்...
 
 கானல் நீரில்
 மறைந்து போகும்
 தொடர்புகள் கவனிக்கப்படாமல்
 கிடக்கின்றன பாதையெங்கும்
 காய்ந்த சருகுகளாய்...
 
 அனிச்சை செயலாய்
 அதன்மீதே பதிகின்றன
 கால்தடங்கள் எப்போதும்...
 
 கவனிக்கப்படாத சருகுகளால்
 பயணங்களே பிரதானமாகி
 விடுகின்றன...
 வழக்கம்போல்...
 
 2. காகிதம்
 பேராசைக்கேடயம் தாங்கி
 எதிர்த்துவரும் தர்மங்களை
 தகர்த்தெறிகிறது ஒரு
 கையெழுத்திட்ட காகிதம்...
 
 பரிமாறிக்கொள்ளப்பட்ட
 தேவைகள் நின்றுவிட
 கேடயங்களுக்குள்
 ஒளிந்து கொண்டன காகிதங்கள்...
 
 இது ஒரு
 போர்...
 என்னவென்று தெரியுமுன்
 தொடங்கிவிடும் போர்....
 
 இங்கு வெட்டிச்சாய்ப்பது
 பிரதானமல்ல...
 போர் தொடர்வதே
 பிரதானம்...
 
 அதைத்தான் விரும்புகின்றன
 காகிதங்களும்...
 
 3. மெர்க்குரிக் கனவுகள்
 திரைச்சீலை இடுக்குவழி...
 நுழைந்துவிட்ட
 மெர்க்குரி விளக்கொளி...
 அனுமதியின்றி உறங்கியிருந்தது
 தடுமாறி விழுந்த
 என் படுக்கையில்...
 
 கொட்டும் பனியை
 நினைவூட்டியபடி
 இறங்கிக்கொண்டிருந்தன
 அதன் கனவுகள்
 துகள்களாய்...
 
 4.குடை
 நல்ல வேளை
 நீ குடை விரித்தாய்..
 இல்லையெனில்,
 உன்னை சிலையென
 நினைத்து அந்த காகம்
 எச்சமிட்டிருக்கும்...
 
 5.மழை என்பது யாதெனில்
 உன்னைத் தழுவ
 இறங்கி வந்த
 மேகங்கள்
 நீ குடை விரித்ததில்
 அது இயலாமல் போன
 ஆற்றாமையைத்தான்
 அழுது தீர்க்கிறதோ
 மழையாய்...
 
 6. சோம்பல்
 என்னுள் நீ
 முறிந்து போவாயோ
 என்றுதான் நான்
 சோம்பல் முறிப்பதே இல்லை...
 என்னை முந்திக்கொண்டு
 உன்னில் நுழைந்துவிடும்
 சோம்பலை நீ
 முறித்துப்போடுவதில்
 எப்போதும் சந்தோசமெனக்கு...
 
 நீ சோம்பல் முறிக்கையில்
 நினைத்திருக்கிறேன்...
 உன்னில்
 அவ்வப்போது முறிய நேர்ந்தாலும்
 என்னைப்போல் அனுஅனுவாய்
 செத்துப்போவதில்லை அது...
 .
 நீ சோம்பல்
 முறிக்கிறாய்...
 பார்த்துக்கொண்டிருந்த நான்
 உள்ளுக்குள்ளாகவே
 முறிந்து போனேன்...
 
 ramprasath.ram@googlemail.com
 
 சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு 
  நாள்)
 
 வித்யாசாகர்
 
 
  தெருவுக்கு தெரு டாஸ்மார்க் வீட்டுக்கு வீடு தொலைகாட்சி
 மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி
 மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு
 மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை!
 
 படிப்பு முடியும் முன்னரே பாரின்
 படித்து முடித்தாலும் வெட்டி சோறு
 பாதி நாள் வேலைக்கு போனால் -
 மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி
 சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!
 
 காமம் தெறிக்கும் பார்வை
 காசு பிடுங்கும் அவசரம்
 மாடி வீட்டு மீதேறி நின்று -
 கீழிருப்பவன் மேல் எச்சில் உமிழத் துடிக்கும்
 வெறி பிடித்துத் திரிபவர்களுக்கு -
 ஒரு துளியும் வெட்கமில்லை!
 
 முளைச்சி மூனெல விட்டா சினிமா
 மூச்சு விடவும் கால் கழுவவும் ஜோசியம்
 நாள்காட்டி பேர் சொல்லி –
 நேரங்களை தொலைக்கும் மூட தனம்
 வீட்டுக்கும் சோத்துக்கும் வாஸ்த்து பார்க்குற ஒருத்தனுக்கும்
 வெட்கமில்லை வெட்கமில்லை வேட்கமேயில்லை!
 
 வாய் கூசாம கேட்கும் லஞ்சம்
 ஏமாந்தவன் வண்டி மடக்கும் அசிங்கம்
 போலீசுக்குப் பக்கத்துலையே நடக்கும் கொலை
 அரசியல் வாதின்னா கொம்பு முளைத்த திமிரு
 அரசு வேலை கிடைத்துவிட்டால் –
 வங்கியிலும் தபால் நிலையத்திலும் கூட
 அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
 கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்
 
 என் தேச கொடி கனகம்பீரமாய்
 பட்டொளி வீசி பறக்க உழைத்த
 அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
 
 vidhyasagar1976@gmail.com
 
 யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் 
  சட்டை
 
 - துவாரகன் -
 
 
  
  ஒரு நாள்என் வீடு இருந்தது.
 வயல்வெளிக்கு நடுவே
 ஆலமர விருட்சம் போல்
 
 அரைக்காற்சட்டையோடு
 அண்ணா
 டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான்
 அப்பா
 விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார்
 மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும்
 குளத்தில் வரால் மீன் பிடிக்கவும்
 சின்னத்தம்பி என்னுடன் வருவான்.
 
 தங்கையும் நானும் கதை பயில
 தேக்கமரமும் மலைவேம்பும்
 எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள்.
 
 மாலையானதும்
 மாடுகள் அசைபோடுவது போல்
 உறவுகள் சுற்றியிருந்து
 அன்பை அசைபோடுவோம்.
 
 அம்மாவும் பெரியக்காவும்
 சுவையாகச் செய்த சாப்பாடு.
 செய்திக்குப் பின்
 அப்பா என்னிடம் தரும் றேடியாவில்
 வழிந்து வரும் பாட்டு.
 காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம்
 எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன்.
 
 இப்போ
 இரண்டு காவலரனுக்கு நடுவில்
 மழை வெள்ளம் தரைதட்ட
 தொண்டு நிறுவனம் தந்த
 படங்கு காற்றில் அடிக்க
 எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில்
 அம்மாவின் காய்ந்த விழிகளோடு
 நானும் காத்திருக்கிறேன்.
 
 யாரோ போட்டு முடித்து
 முகாமொன்றில்
 தானமாகக் கிடைத்த
 ஒரு இரவுச் சட்டை
 என்னை மூடிக்கிடக்கிறது.
 
 kuneswaran@gmail.com
 
 குறும் கவிவரிகள்.
 
 - வேதா. இலங்காதிலகம்.(டென்மார்க்.) -
 
  
   
  மன்னிப்பு.முன்னிற்கும் மனிதப் பண்பு.
 மன்னிப்பது தெய்வப் பண்பு.
 மன்னிப்பு குற்றம் தடுக்கும்.
 மன்னிப்பது குற்றமும் பெருக்கும்.
 
 போலி.
 போலிகளின் கவர்ச்சி நிரை
 ஊழியின் முடிவு வரை.
 தூளி கிளப்பும் துன்பத்திரை.
 கூலி பெறும் விளம்பர நுரை.
 
 வாழ்க்கை.
 வாழ்க்கை என்பது பயிற்சி.
 முயற்சியின் முழுத் தொகுப்பு.
 உடன்பாட்டின் உயர்ச்சி.
 உறவுகளின் இணைப்புஇ சிறப்பு.
 நவரசக் கலகலப்பு.
 
 தத்துவம்.
 பாடுபட்ட மனப் பக்குவமொழி.
 சூடுபட்ட மனச் சுடர்மொழி.
 அனுபவத்தின் அறிவு வரி.
 அனைவருக்கும் ஆறுதல்மொழி.
 வித்துவத் தெளிவின் முத்துமொழி.
 சத்தாக மனப் பலம் தரும் மொழி.
 
 31-1-2010.
 kovaikkavi@gmail.com
 |