பதிவுகள் கவிதைகள்!
அகரம் அமுதாவின் கவிதைகள்!
ஆக்கப் பொறுத்த மனம்!
எங்குற்றாய் தாயே?
எங்குற்றாய்? என்னை
இங்குற்றத் தொட்டியிட்டு
எங்குற்றாய் நீயே?
பட்டோடு துணிவகையும்
பழமும் பால்சோறும்
கேட்டேனோ? அழுதேனோ?
கத்திழுயிர் எடுத்தேனோ?
தப்பாய்ப் பிறந்தேனோ?
தவறேதும் செய்தேனோ?
அப்பன் யாரென்று
அடம்பிடித்து அழுதேனோ?
குப்பைத் தொட்டியென்
தொட்டில் ஆனதுவே...
இப்போது அன்னைமடி
கனவாகிப் போனதுவே...
ஆவொன்று கன்றோடு
அமுதூட்டி விளையாட
கோவென்று மனமழுகும்...
கண்ணீரும் சேர்ந்தழுகும்...
திருவோடு கையோடு
சாண்வயிறு பசியோடு
தெருவோடு எனைக்கண்டால்
ஊர்வாசல் அடைத்துவிடும்!
நாயீன்றக் குட்டிக்கும்
நாலுவீட்டில் சோறுண்டு...
நீயீன்ற சேயெனக்கு
நாதியென்று யாருண்டு?
பத்தினிப் பெண்மைநீ...
பனிமலரின் மென்மைநீ...
பட்டினிக் கிடக்கையிலும்
பார்க்கவரா தெய்வம்நீ...
தூக்கம் விழிசேராத்
தூரத்தில் தொலைந்ததடி!
ஏக்கம் என்னுள்ளே
ஏரிமலையாய்க் கனலுதடி!
இளமைக் காலங்கள்
இருந்தும் என்னுள்ளே
வளமை சேர்ப்பிக்க
வருங்காலம் வருவாயோ?
இருக்கும் வேளையிலே
இடைவெளி வளர்ப்பவளே!
இறக்கும் பொழுதேனும்
இருந்தென்னைப் புதைப்பாயோ?
ஆக்கப் பொறுத்தமனம்
ஆறப் பொறுத்திருக்கும்...
தீய்க்கும் நினைவுகளோ
தின்றென்னை முடித்திருக்கும்!
அன்னை பாரதம்!
எம்மதமும் சம்மதமாம்
இந்தியாவின் தேர்தலில்...
மும்மதத்தில் குத்துவெட்டு
முடியவில்லைக் கூக்குரல்...
கத்தியின்றி இரத்தமின்றி
பெற்றெடுத்த பாரதம்...
முற்றுமின்று இரத்தமின்றி
ஓடவில்லை ஆறெதும்...
காடுவெட்டி நாடுசெய்து
கண்டதுதான் என்னவோ?
வீடுகட்டி வாழும்கீழ்மை
விலங்குகள்நாம் அல்லவோ!
வாக்களித்து வாக்குவாங்கி
வாழ்க்கைபெற்ற பேர்களே!
வாக்களித்தோர் வாழ்வினிலே
வளர்ச்சியில்லை பாரிலே...
கள்ளமின்றிப் பள்ளமேடு
கடந்துசெல்லும் ஆறுகள்...
கல்லைக்கொண்(டு) அணையெழுப்பக்
கழயெலாம் பாலைகள்...
அன்னையென்று பாரதத்தை
அன்றுத்தொட்(டு) இன்றுமே
சொன்;னதெல்லாம் போதுமடா
சொன்னசொல்லைக் காப்போமே!
சிலேடை வெண்பாக்கள்!
பானையும், பலகாரமும்!
தட்டித் தழலிடலால் ஆவென்னும் வாயுளதால்@
சுட்டிடப்பொன் வண்ணமாய் தோன்றுதலால் -அட்டியின்றி
மண்பானை வாசப் பலகாரம் நேராக்கிப்
பண்பாய் தமிழில் படி!
பனியாரமும், புத்தகமும்!
புரட்டுதலால் பல்சுவை காணுதலால் போய்ஓர்
திறண்டநூல கத்துள் சேர்ந்தும் -இருத்தலால்
உண்ணும் பனியாரம் புத்தகத்தை ஒக்குமெனப்
பண்பாய் தமிழில் படி!
விண்ணும், கிணறும்!
சந்திர சூரியர் தோன்றுதலால் தண்ணீரைத்
தந்தேநம் தாகம் தணித்தலால் -சிந்தித்தே
விண்ணும்நீர் ஊற்றுக் கிணறும்நேர் என்றாய்ந்தே
பண்பாய் தமிழில் படி!
agramamutha08@gmail.com
நகைப்பாக்கள்- சென்ரியு
- மாமதயானை -
குடை ராட்டினம்
சுற்றும் சிறுவனுக்கு……..
உலகத்தைச் சுற்றும் மனசு
தேர்வு பயம்
இரவு முழுக்க படித்தான்…….
கந்த சஷ்டி கவசம்
அம்மாவின் கடுதாசி
பாதியில் படிக்கிறது…….
என்னோடு கண்ணீரும்
சிரிக்க வைக்கும் கோமளியை
அழவைக்கும்;;;;;……..
வாழ்க்கை
வாசனை திரவியத்தை
மறக்கவில்லை……….
குளிக்க மறந்தவன்
ஊர் சுற்றும் பிள்ளையின்
வேலைக்காக……….
கோயில் சுற்றும் அம்மா!
அமைதியின் அரசிக்காக……
மாமதயானை -
அடிக்கடி
செல்லமாய்
நீ என்
தலையில் கொட்டுவதை
நினைவு படுத்தியது…….
சற்று முன்
பெய்த
ஆலங்கட்டி மழை.
நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டே போகிறது
ஆனால்
உனக்கு மட்டும்தான்
அழகு கூடிக்கொண்டேபோகிறது.
உனக்கு பின்னால் ஒளிவட்டம்
எதுவும் தோன்றவில்லை
கையில் ஆயுதங்களும்
எதுவும் இல்லை
ஆபரணங்களின் ஆதிக்கமும்
உன் திருமேனியில் இல்லை
எனினும்
நீ
என் காதலின் கடவுள்
நிறைய பேசுவேன்……….
உன்
அருகில் மட்டும்
ஊமையாகிப்போகும்
நான்.
மறுபடியும்
எங்களுர்
விழாக்கால
இரவுகளை நினைவுபடுத்துகிறது
உன் புன்னகை.
என்
அருகிலேயே
நீ இருக்கிறாய்………..
ஏழு கடலையும்
ஏழு மலையையும்
தாண்டி
சொர்க்கம் இருப்பதாய்
தவறாய் கதை சொன்ன
தமிழ் ஐயாவை
என்ன செய்வது.
manisen37@yahoo.com
சுதந்திரம் ?
- றஞ்சினி -
இருண்டு கிடக்கும்
குகைக்குள்
குருதியும்
ஓலமும்..
இறந்து கிடக்கும்
உடல்களுக்கும்
உரிமைகூற
எவரும் இல்லை
வீதிகளிலும் வீடுகளிலும்
மரங்களை அழித்து
மனங்களை அழித்து
நடப்பட்டுள்ளார்கள்
மனிதர்கள்
ஆயுதங்களுடன்..
திறந்தவெளிச் சிறைகளுக்குள்
பயத்தின் நிழல்
மனிதர்களைத்தின்ன
காணாமல்போபவர்களை
யார் தேடுவது
போருடன் தூங்கி
போரில் விழித்து
போரை சுவாசித்து
இறந்த உடல்களில்
தடுக்கிவிழுந்து
சாதாரண வாழ்வே
மறந்து
புதைகுழிக்கலாச்சாரத்தில்
மிதக்கும் எமது
தேசத்தில்..
சுதந்திரம் என்றோ
தற்கொலை செய்துவிட்டது
shanranjini@yahoo.com
நாளைய உலகம்
- கனிஷ்கா தென்காசி -
காசுகொடுத்து மூச்சுக் காற்றுவாங்கி
ஒற்றை மாத்திரையில் வயிற்றை நிரப்பும்
நாளைய மனிதன் கேட்பானோ!
இப்படியும் …….
'நெல் மரமோ! தென்னங் கொடியோ!
மாஞ்செடியோ! மாதுளை விருட்சமோ!'
பதிலளிக்க அப்பாரினில்தான் ஆளுண்டோ!
பாதிராத்திரி கனவில் வந்தாள் பண்டைக்காலப்
பாட்டி ஒருத்தி
முன்னொரு காலத்தில்……..
விளைநிலம் என்றொரு இடமுண்டு
விவசாயம் என்றொரு தொழிலுண்டு
விவசாயி என்றொரு இனமுண்டு
விளைதானியம் என்றொரு பொருளுண்டு
வித்தைப் போட்டு விளைவித்தான்
நெத்தைப் போட்டு மரம்வளர்த்தான்
மண்ணில் வியர்வை சிந்தவிட்டான்
மனிதன் வாழ உணவளித்தான்
சேற்றில் மிதித்த தொழிலாளி
உழைப்பில் அவனே முதலாளி
உலகின் முதலாம் தொழிலதனை
செய்தவன் அவன்தான் விவசாயி
ஏட்டுக் கல்வி வந்தபின்னே
ஏர்பிடிக்க இயலவில்லை
இயந்திரவாழ்க்கை ஆனபின்னே
பயிர்த்தொழில் செய்ய யாருமில்லை
நாட்டு வாழ்க்கை போகியாகி
நகர வாழ்க்கை போதையாச்சு
நாகரீக மோகம் கொண்டு
நல்லொழுக்கம் போயாச்சு
பகட்டுவாழ்க்கை மாயையிலே
பறிகொடுத்த நிலமெல்லாம்
பல்லடுக்கு மாடிகளாய்ப்
பல்லிளித்து நிற்குதிங்கே
உணவென்ற பொருளில்லை
உறவென்ற பேரில்லை
இப்படியோர் மனித வாழ்வு
எப்பிறப்பிலும் வேண்டாமே!
kalpa2011@gmail.com
சொத்துப் பங்கீடு!!
-இமாம்.கவுஸ் மொய்தீன் -
தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!
அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!
மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!
அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!
மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!
சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!
கடைசி மகனாய்
நான் இருந்ததால்....
என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!
drimamgm2001@yahoo.co.in
"எங்கே போகிறோம் நாம்"
- கலையரசி பாண்டியன் -
"வன்முறை! வன்முறை!!
எங்கு பர்ர்த்தாலும் வன்முறை!
குண்டு வெடிக்காத நாளில்லை
கொலை, கொள்ளை
செய்தியில்லா,
நாளேடுகள் இல்லை.
குழந்தைகளின் கணிணி
விளையாட்டில் கூட
துப்பாக்கிகள் வெடிக்கின்றன;
'டுமீல்', 'டுமீல்' எனச்
சுட்டுவீழ்த்தி வெற்றி வாகை
சூடுகின்றனர்,
சின்னஞ்சிட்டுகள்
படு உற்சாகத்துடன்!
தமிழ்ச் சினிமாவிலோ
வில்லனுக்கு வேலையில்லை;
கதாநாயகனே 'டூ இன் ஒன்!'
'பழிக்குப் பழி',
'இரத்தத்திற்கு இரத்தம்'
என்ற முழக்கத்தோடு
வீச்சரிவாளும், வெட்டரிவாளும்
படம் முழுக்க உலா வந்து
இரத்த மழை பொழிய,
கை தட்டி ரசிக்கின்ற
மக்கள் கூட்டம்!
எங்கே போகிறோம் நாம்?"
kalayarassy@yahoo.com |