| 
         
எழுந்து வா!- பாரதி (ஜேர்மனி) -
 
 உள்ளத்தை மறைத்து வைத்து
 உறவுகளைத் தூரவைத்து
 உதட்டில் மட்டும் வரட்டுப் புன்னகை ஒட்டவைத்து
 உனக்குள்ளே வட்டமிட்டு
 உணர்வுகளைப் புதைத்தவளாய்……
 இன்னும் எத்தனை காலத்தைக் கரைக்கப் போகிறாய்?
 எழுந்துவா! என்கிறேன். ஏன் மௌனப் போர்வைக்குள்
 ஒளிகிறாய்.
 
 உலகம் வாழ்வதே உன்னால் அல்லவா?
 உயிர்கள் ஜனிப்பதே பெண்ணால் அல்லவா?
 சமையல் அறைக்குள் உலகைக்காட்டி
 சாய்ந்திடத் தோள் ஒன்றைத் துணையாய் ஆக்கி
 தனிவழி நடந்திட உன்னை விடாததால்
 தவித்தது நீயல்ல! நானும்; உன் நண்பியும் கூட!
 இனியாவது மனசில்; வலிமை கூட்டு!
 மடமைத்தனங்கள் அகற்று!
 படிகளேறிச் சென்று பரந்த உலகை நோக்கு!
 பாதைகள் எல்லாம் உனக்கானது.
 பாதம் பதித்து நடக்க வேண்டியவள் நீயே பெண்ணே!
 உனக்கான வழியில் நட! உலகே உன் பின்னால்இதோ!
 
 scanma2000@t-online.de
 
பொழுதுகள்!- றஞ்சினி -
 
 குத்தும் குளிருக்குள் தோற்றுப்போன சூரியன்
 கண்ணாடித்துண்டுகளாக தொங்கும் பனி
 கரையோரம் உறைந்து கிடக்கும் கடல்
 மனிதர்களிடம் உறவாகிப்போன பறவைகள்
 மூச்சுத்திணறும் குளிருக்குள்ளும்
 திமிராக கண்சிமிட்டுகிறது இயற்கை
 
 தொலைந்துபோன நான்
 சேர்ந்து நடக்க நீயில்லா பொழுதுகள்
 குத்தும் குளிரைவிடக் கொடுமையானது
 
 shanranjini@yahoo.com
 
என் சுரேஷ் கவிதைகள் சில!
 1) முத்தமழை
 
 
  
கஸ்தூரிக் கன்னங்களில் - என்கன்னத்தால் முத்தம் இட்டேன்
 என் கண்ணில் உன்னை நீ கண்டதும்
 உன்னில் நான் என்னைக் கண்டேன்!
 
 மேகத்தின் வெண்பட்டு படுக்கையில்
 மோகத்தால் நாம் கொஞ்சினோம்
 மின்னல்கள் மீதேறி பறந்தோம்
 மின்பூக்கள் பூக்கக் கண்டோம்!
 
 சொந்தங்கள் பந்தங்கள் தந்திடும்
 பாசங்கள் மொத்தம் தந்தாய்
 அழகே நீ என் மார்பில் உறங்கிட
 அலைகள் ஓயந்தது என்னிலே!
 
 அன்பே நீ ஆனந்தம்
 நம் வாழ்வே பேரின்பம்
 சத்தங்கள் இல்லாத தனிமையில்
 முத்தங்கள் நீராடும் மகிமையில்!
 
 2. அன்பே என் காதலியே...
 
விரகவேதனை தாங்க முடியவில்லை - நாம்சந்திக்காமலே இருந்திருக்கலாம்!
 
 முதல் நாள் தொலைபேசியில் - உந்தன்
 முதல் சப்தம் கேட்டதும்
 ஜீவன் பெற்று மகிழ்ந்த என் மனம்
 உன்னிடம் பேசிப் பேசி மகிழ்ந்தது!
 
 ஒற்றை மழையில் செடியொன்றை
 மரமாய் காணத் துடிக்குமென் மனதை
 அதே நிலையிலிருந்தும்
 சமாதானப்படுத்தும் உன் மனம்!
 
 நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் - என்
 சந்தோஷத் தோட்டங்களின்
 ஒவ்வொரு பூட்டையும்
 திறந்து விட்ட சாவிகள்!
 
 எதையெதையோ பேசினேன்
 மகிழ்ந்து சிரித்தாய்!
 எதையெதையோ கேட்டு வந்தேன்
 எதற்கும் நீ சொல்லவில்லை
 இல்லை என்ற ஒரு சொல்லை!
 
 அடுத்த நாளே உனைக்காண
 விழித்து துடித்து சூரியனை எழுப்பினேன்!
 முதல் முதலாய்
 உனைக்காணும் நொடிதேடி ஓடிவர
 அன்று பார்த்து தேடி வந்த தடைக்கற்கள்
 ஒவ்வ்வொன்றையும் தாண்டித்தாண்டி
 உனைக்கண்டதும்...
 
 உணர்வுகளை ஒளித்து வைத்த
 பெருமூச்சில் நான்
 அதை
 புன்னகையில் ஒளித்துவைத்த
 மகிழ்ச்சியில் நீ!
 
 உந்தன் விரல்நுனி எனைத்தீண்டியதும் - நம்
 வெட்கத்திற்கு உடனடி கிடைத்தது விடுதலை!
 
 நினைத்ததெல்லாம்
 சொல்லிவிட முடியா - அந்த
 சூழ்நிலைகளின் தவிப்பிற்கிடையே
 மின்னல்போல் அவ்வப்போது கிடைத்த
 சுதந்திர நொடிகளில்
 முத்தமிட்டு மகிழ்ந்தன நம் இதழ்கள்
 பயத்தில்... பதட்டத்தில்... நாம்!
 
 அன்று
 நம் நேசத்திற்கு
 சிறகுகள் கிடைத்தது
 
 நம் மனதில் பூத்து
 மகிழ்ந்தது
 வாடாத காதல்மலரகள்!
 
 மாலை நெருங்க
 மனம் வலிக்க நாம் பிரிந்தோம்
 இனியென்று காண்போமென்ற
 ஒற்றை தவத்தில்!
 
 தடைகளால் நம் இதயங்களின்று
 இருகரைகளில் பிரிந்துத் துடிக்கிறது!
 
 உருகியுருகி மரணப்பட
 நினைக்கவில்லை நாம் - ஆனால்
 காதல் வந்து மலர்ந்ததும்
 உருகி மகிழ்கிறது என் மனம்
 பாவம் மௌனமாய் நீயும்!
 
 விரகவேதனை தாங்க முடியவில்லை - நாம்
 சந்திக்காமலே இருந்திருக்காலாமென்ற கசப்பை
 சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை!
 நம் காதலை சிந்திக்கையில் தான்
 மகிழ்கிறது நம் விரகவேதனையும்!
 
 nsureshchennai@gmail.com
 
என்னை எனக்கு!- யாழினி அத்தன் -
 
 யாசிக்கும் கைகள்
 நீளும் போதெல்லாம்
 சட்டைப்பையினை
 விரல்கள் வருடி
 உதட்டைப் பிதுக்கி
 "பாவ்லா" செய்யும்...
 
 அநீதியை ஒழிக்க
 தலைவர் அவதாரம்
 எடுக்கும் சினிமா
 நுழைவுச் சீட்டினை
 "பிளாக்"கில் வாங்கி
 ரசித்துப் பார்க்கும்...
 
 கட்டண கழிப்பிடத்தில்
 காசுகளை செலுத்த
 நிராகரித்து
 "சிறுநீர் கழிக்காதீர்"
 சுவற்றின் பரப்பில்
 கூட்டத்தோடு நின்று
 சிறுநீர் கழிக்கும்...
 
 பிளாஸ்டிக் கோப்பையின்
 தேநீர் சுவையில்
 சற்றே இளைப்பாறி
 காலியான கோப்பையை
 இரயில்வண்டியின்
 கம்பி சன்னலில்
 தூக்கிப் போடும்...
 
 சாலையில் தோய்ந்திருக்கும்
 சிவப்புக்கறை நடுவிலே
 அடிபட்டுக் கிடக்கும்
 சக மனிதரை
 கண்டும் காணாமல்
 போகும்...
 
 அபிமானங்களற்ற
 துளிகளாலும்
 அபிமானமுள்ள
 துளிகளாலும்
 நிரம்பி வழியும்
 வாழ்க்கைக்
 கோப்பை...
 
 கேடுகள் பரவியிருக்கும்
 சுயநலப் பொழுதுகளில்
 வாழ்வேன்
 என்னை எனக்குப்
 பிடிக்காமலே...
 
 வெட்கப்படாமல்
 விரவிக் கிடக்கும்
 சமுதாயக் கேடுகள்...
 நெய்யினை ஊற்றி
 வேள்வித்தீயாய்
 வளர்க்கும்
 அலட்சிய அணுகல்கள்...
 
 சமுதாய அநீதிகளை
 தட்டி கேட்க
 எனக்கு நானே
 சூளுரைப்பேன்
 எனக்கு என்னைப்
 பிடித்திருந்தால்
 போதுமென்று
 அறியாமலே!
 
 p.d.ramesh@gmail.com
 
 வேதா இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள் சில!
 
 
தேன்கூடு!வாழ்வின் மரபியல் கோடு
 காட்டும் உறவுக் கூடு
 மீட்டும் இராகம் சுகத்தோடு,
 கிட்டும் இனிமை தேன்கூடு.
 இராணித் தேனீ மனைவியாய்
 இராசா, குழந்தைகள் தேனீக்களாய்
 பாச வாசம் வீசியாடும்
 நேசக் குடும்பம் தேன்கூடு.
 
 வட்டமிட்டு அன்பில் பிணைந்து
 விட்டுவிலகாது ஆவலாய் இணைந்து,
 கொட்டி அன்பைப் போர்த்திடும்
 பட்டுக் காதலுறவும் தேன்கூடு.
 ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து,
 குற்றங்களை மன்னித்திடும் அனுபவத் துளிகள்
 முற்றும் நிறைந்த தேனடைகளால்; உறவாகும்
 கொற்றம் நிறை வாழ்வது தேன்கூடு.
 
 நிசங்கள்!
 நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடல்
 விலையற்ற வேலை, முயற்சியின் பாடல்.
 வலை பிரித்து இடர் அழித்து ஓடல்.
 தலையுடையும் மலை மீது மோதல்.
 நிலையூன்ற ஒரு நேர் வழியோ,
 தொலையாத தமிழ் வழியோ கொள்ளல்,
 இலையூடு மறைந்த காய் தேடும்
 அலை போன்ற அயராத ஆடல்.
 
 கலையால் களிப்பு உலகில் காத்திரம்.
 சிலை, சித்திரம், ஓவியம் நி;சம்.
 மலை, மந்த மாருதம் இன்பம்.
 விலையற்ற நர்த்தனம், கீர்த்தனம் நி;சம்.
 கறை அழித்து குறை தீர்க்கும்.
 இறை நேசம் இன்பம் தரும்.
 நிறை அன்பு எனும் பரமானந்தம்
 சிறையுடைத்து வேதனைக் கதவுடைக்கும் நி;சம்.
 
 இணைய வலைப்பூ நிச்சயமோ இல்லையோ,
 அணைக்கும் அச்சடித்த தாள்கள் நி;சம்.
 அரசாங்கமும் தமிழரும் தினம் அடிபடுதல்,
 வரமிகு எழுதுகோலின் சத்தியப் போரும் நி;சம்.
 வாழ்ந்து மடியும் சாதாரண மனிதனிலும்
 வாகை சூடி சாதிக்கும் சாதனை நிசம்.
 வான், நிலம், கடல், கதிரவன்,
 வாடாத தமிழ் வாசனையும் நி;சம்.
 
 காணி, வீடு, தோட்டம், துரவு
 ஆணியடித்த நிசமென்ற நம்பிக்கை
 தோணி கவிழ்த்ததாய் ஆனது போரினால்.
 நாணித் தலை குனியும் நிலையுமானது.
 அடக்கு முறைகள், அகங்காரத்துள் அசையும்
 அவனி வாழ்வில் சுயநலங்கள் நிசம்.
 ஆத்மபலம், உடல் ஆரோக்கியம், எம்
 ஆளுமைத் திறமை உறுதியான நிசம்.
 
 உலகைத் தலையில் ஏந்துவதாய்ச் சிலர்
 கலகம் பண்ணுவதில் இல்லை நிசம்.
 திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
 நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.
 கம்பன் இலக்கியத்தில் கொடியேற்றினான்.
 கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.
 காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.
 கவிதையில் பாரதி நிலைக்கிறார் நிசம்.
 
 vetha@stofanet.dk
 |