வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்'!
இருப்பு பற்றிய தேடல்!
இதுவரையில்
நான் எழுதிய கவிதைகளில் பல் இப்பிரபஞ்சத்தில் ந்மது , மானுட, இருப்புப் பற்றிய
தேடல்களாகவே இருப்பதை எனது
கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று
வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில்
எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய
மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால்,
எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப்
பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல்
நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்'
என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப்
பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை,
தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர்
மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி,
தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய
தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது..
1. மீறிப் பார்!
- வ.ந.கிரிதரன் -
உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை.
அதற்குள் வளைய வந்து கொண்டா
இத்தனை ஆட்டமும், பாட்டமும் ?
முடிந்தால், மீறிட முடிந்தால்
முயன்று பார்!
மீறுதலென்பது அவ்வளவு தப்பான
காரியமல்லவென்பதை மட்டுமல்ல
மீறுதலென்பது வளர்ச்சியினொரு
படிதானென்பதை மட்டுமல்ல
ஏன்
மீறுதலென்பதவ்வளவு
இலகுவானதல்லவென்பதையும் கூட
மேலும் நீ புரிந்து கொள்ளலாம்.
அதற்காகவாவது
மீறிப் பார்!
2. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'
-வ.நகிரிதரன் -
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.
எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.
ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?
வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற,
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?
இடம், வலம் , மேல், கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?
இரவி , இச் சுடர் இவையெலாம்
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்
நான் மட்டுமேன்?
நீ எத்தனை முறை தான்
உள்ளிருந்து
எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ
போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.
வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?
3. சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.
வ.ந.கிரிதரன் -
இருண்ட அடிவானை நோக்குவீர்.
ஆங்கு
இலங்கிடும் சுடர்பெண்கள்
சொல்லிடும்
இரகசியம் தானென்ன ?
புரிந்ததா ?
சூன்யத்தைத் துளைத்து
வருமொளிக் கதிர்கள்.
'அஞ்சுதலற்ற கதிர்கள்.
அட! அண்டத்தே யார்க்கும்
அஞ்சுவமோ ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம்.
வருகின்றோம்.வருவோம்.
காலப் பரிமாணங்களை
வெளியினில்
காவியே வந்தோம்.சூன்யங்கள்
கண்டு சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர்
எம்முன்னே மிஞ்சி நிற்பவர்
தானெவருமுண்டோ ?
தெரிந்ததா ? விளக்கம்
புரிந்ததா ? '
நோக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம் தான்
தெரிந்ததுவோ ? சுடர்ப்
பெண்கள் பகரும்
இரகசியம் தான்
புரிந்ததுவோ ?
4. கதி கூடின் கதி கூடும் காலமே! அ'கதி'க் காலமே!
வ.ந.கிரிதரன்
காலத்தின் விரைவு சிந்தனையை
நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச்
சென்ற காலமாயிது!
பாடசாலை விட்டு வரும் வழியில்
எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக
'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது,
வயற்புறக் குளத்தில் விரால்
பிடிக்க அலைந்த போது,
முருங்கையில் மரங்கொத்தி கண்டு
முதற் கதை படைத்த போது,
உடும்பு தேடி 'ஜிம்மியுடன் '
காடுமேடென்று ஊர்ந்த போது
எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்
காலம்.
'டியூசன் ' முடிந்து அவள் கடைக்கண்
பார்வைக்காய் வீதிக் கோடியில்
காத்து நின்ற போது கூட
இவ்வளவு விரைவாகச் செல்லவில்லையே
இந்தக் காலம்.
பின்னொரு நாள் நடுநிசி நிலவே
துணையாக நண்பருடன்
பொருள்முதல் வாதம் பற்றி
வாதம் புரிந்த போது கூட
காலம் இவ்வளவு கடிதாகச்
சென்றதாயென்ன ? அன்று
சிறைப்பிடிக்கப் பட்ட ஒவ்வொரு கணமும்
பதியப் பட்ட உருவக் கோப்புகளாகி
எந்தன் நிலையான நினைவகத்தில்
இன்னுமிருக்குமளவிற்கு
எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்
காலம்.
ஆனால்..இன்று.. ?
காலமே! உன் கடுகதிப் பயணத்தின்
காரணம் யாதோ ?
வேகம் கூடுமெனின், சார்பு நிலையில்
உன் வேகம் கூடக் குறைந்து விடுமென்று
தத்துவம் சொல்லிடுதே. ஆனால் நாடற்றவிந்த
அகதி வாழ்வின் வேகம் கூடியதன்றோ ?யார் சொன்னது
குறைந்ததென்று ? கடுகதியாய் விரையுமிவ்
வாழ்வில் காலமே நீயுமேன் கடுகதியில்
விரைகின்றாய் ?அன்று ஆடி அசைந்து
ஆறுதலாகச் சென்றவென் வாழ்வில் நீயுமேன்
ஆறுதலாகவாடிச் சென்றாய் ?காலமே!
கதி கூடின் காலந்தனின் கதி
குறையுமென்ற ஐன்ஸ்டைனின்
கூற்றும் பொய்யோ ?என்
கதி கூடின் கதி கூடும்
காலமே சொல். 'அ'கதி'யிருப்பில்
கதியிருப்பதால் கதிகூடும் உன்னைப்
போல் நானுமொரு அ'கதி'யே! வெளிகளிற்குள்
திக்கிழந்ததொரு அகதி நான்.
அதனாலென் கதியும் உன் கதியாச்சு.
கதி கூடிப் போச்சு. பாவம். ஐன்ஸ்டன். அவன்
கதி இவ்விதமாச்சே! கதி கூடின் 'காலம் '
கதி குறையுமென்ற மூடனவன்
காலத்தின் கோலம் முற்றுமறியாத
யானை பார்த்த குருடன் '
என்கின்றாயா காலமே! காலமே!
இன்று நான் உந்தன்
இருப்பறிந்தேன். உந்தன் கதியறிந்தேன்.
'கதி'யற்ற அ'கதி'க்குக் 'கதி'யற்ற
காலமும் துணையென்றுணர்ந்தேன்.
காலமே! போற்றி! போற்றி!
5. மின் பின்னியதொரு பின்னலா ?
- வ.ந.கிரிதரன் -
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது
இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல்.
நீ சொல்கின்றாய்
நீ இருக்கிறாயென்று.
உண்மையாக நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்
ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?
நேரத்தினைத் தவிர.
உனக்கும்
எனக்குமிடையில்
எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே
செய்கிறது. அது
எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதுமே ஒரு நேரம்
இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக
என்றாலும்.
நீ இருப்பதாக
நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும்
எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!
காண்பதெதுவென்றாலும்
கண்ணே! அதனை
அப்பொழுதே காண்பதற்கு
வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி
ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை
நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ?
அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள்
காலத்திற்குள்
கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே!
மின் பின்னியதொரு
பின்னலா ? உன்னிருப்பும்
இங்கு
மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
6. தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- வ.ந.கிரிதரன் -
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக்கோளத்தினொரு சித்த
விளையாட்டாய் இருந்து நீ
சென்றதெல்லாம் அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய். உணர்வெல்லாம்
காற்றாக நீ போனதினால் நனவாய்க்
கனவாய் வந்து வந்து மோதும்
செயலென்னே! என்றேனும்
உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ? நாம்
நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ? தாயே!
உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம், இங்கு நீ
நடந்ததெல்லாம், இங்கு நாம்
திரிந்ததெல்லாம் இருந்ததொரு
இருப்போ ? விரியும் வினாக்கள்
விடைநாடிச் சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்
தெறிப்பெல்லாம் கானற் காட்சியாய்
கடந்ததுவோ ? பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
'நான் ' 'ஏன் ' 'யார் ' என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ? தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்தஉன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.
- அன்னையார் மறைந்தபோது எழுதியது. -
7. எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..
- வ.ந.கிரிதரன் -
முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்!
8. அலைகளுக்கு மத்தியில்
அலையென அலைதல்!
- வ.ந.கிரிதரன் -
நீர்த்துப் போன அலைகளும்,
வீர்யம் நிறைந்தவையுமாக,
மிகச்சாதாரணமான ஒலி அலைகள் தொடக்கம்
மின்காந்த அலைகள், வானொலி அலைகளென
(காமா, அகச்சிவப்பு, புற ஊதா, X-கதிரெனப் பலப்பல)
அலைகளால் நிறைந்து கிடைக்கின்றதிந்தப்
பிரபஞ்சத்துப் பெருவாவி.
பரந்து, பொசிந்து, வியாபித்துக் கிடக்குமிந்த
அலைகளில் இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்தின்
இது நாள் வரையிலான வரலாறு.
வரலாறென்றால் எனக்கு மிகவும்
பிடித்தமானதொரு துறை.
வரலாற்றினை ஆய்வு செய்தல்
எப்பொழுதும் சலிப்பினைத்
தருவதில்லை; மாறாக
வியப்பினைத்தான்.
எங்கோவொரு தொலைவிலொரு
ஆத்மா (இருக்கும் பட்சத்தில்
அல்லது உண்மையாகவிருக்கும்
பட்சத்தில்)
இதனூடு காலத்தின் பரிணாம வளர்ச்சியினை
அல்லது இந்த அண்டவெளியின்
இதுவரையிலான அன்றாட நடப்புகளை,
போர்களை, உணர்ச்சி வெடிப்புகளை,
துக்கத்தினை, மகிழ்ச்சியினையெல்லாம்
அறிந்து கொள்ளும் பக்குவம்பெற்றிருக்கும்
பக்குவமடைந்திருக்கலாம்;
அதன் மூலம்
வியப்பும், திகைப்பும் அடைந்து கொண்டிருக்கலாம்
இங்கு நான், இப்பொழுது, இக்கணத்தில்
அடைந்து கொண்டிருப்பதைப் போல.
வியப்பாக இருக்கிறது அலைகளின்
ஆற்றலை எண்ணுகையில்.
அலைகளின் வேகம் பற்றித்தான்
இதுவரையில் பிரமித்திருந்தேன். ஆனால்
இப்பொழுதுதான் அவற்றின்
மறுபக்கத்தின் மகி¨யெனை
பிரமிப்பிலாழ்த்திக் கொண்டிருக்கின்றது..
இந்த வகையிலவை வெறும்
வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல.
காலத்திரையினில் விரிந்திடுமவற்றின்
விசும்புக் காட்சிகள் தொடர்ந்தும்
வியப்பினையே தருகின்றன.
அலைகள்தானெத்தனை வியப்பானவை;
புதிரானவை.
அலைகளுக்குள் ஆடுமென்னிருப்பும்
வியந்தபடி, அறிய முனைந்தபடி
ஆடிடும்
இன்னுமொரு அலையென
அலைந்தபடி.
9. விண்ணும் மண்ணும்!
- வ.ந.கிரிதரன் -
விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்
பார்த்து ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.
'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.
இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்
நூலகத்தினைப் போல் இந்த வானம்
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.
காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.
அளவுகளுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான்
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!
அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்
படையெடுப்பெதற்கு?'
ஆகாயத்தின் இயல்புகளில் சில:
அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம்
அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'
தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்
விசும்பு மண்ணின் கேள்விகள்
அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.
10. முல்லை = பாலை
- வ.ந.கிரிதரன் -
எத்தனையோ நாட்களாகி விட்டன
நான் இந்த வனத்தில் சிக்கி.
யார் சொன்னது கனல்வது
பாலைகள் மட்டும் தானென்று ?
வந்து பாருங்கள் ஒருமுறை
இந்த முல்லையினுள்.
முல்லைகளே பாலைகளான
விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.
பாலைகளில் தான் கானல் நீர்
பாய்வதென்பதில்லை.
பாருங்கள் இந்தப் பெருவனத்தை.
இங்கும் தான் கானல்கள்
பாய்கின்றன.
கொதிக்கும் அனலிற்குள் சுமந்து செல்லும்
ஒட்டகங்கள் அங்கு மட்டும் தானா ?
வந்து பாருங்கள் இங்கே.
இரண்டு கால் ஒட்டகங்களை
இங்கே நீங்கள் தாராளமாகவே
காணலாம்.
இவற்றால்
இருப்பையே இரசிக்க முடியாத அளவிற்கு
முதுகில் சுமைகள்.
சுமந்து சுமந்து சுமந்து
சுமையே வாழ்வாகிப் போன
ஒட்டகங்கள் இவை.
சுழன்று வீசும் பெருங்காற்று
அங்கு மட்டும் தானென்பதில்லை.
இங்குமுண்டு.
ஓங்கிய விருட்சங்களிற்கிடையில்
ஒருமுறை நின்று பாருங்கள்
வீசுவது பெருங்காற்றா இல்லையா
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
வனமென்றால் அங்கொரு மரமிருக்கும்.
அதன் கீழ் இருக்க நிழலிருக்கும்.
அதன் மேல் புள்ளிருக்கும்.
இங்கு மரத்தின் நிழலிலும்
கனலிருக்கும். இரு காற் புள்ளால் நிறைந்திருக்கும்
மரங்களில் சிறகு விரிக்கும்
நிஜப் புள்ளெங்கே ?
விரிந்திருக்குமிந்த காங்க்ரீட் வனத்திலிருந்து
கொண்டு
வியந்து கொண்டிருக்கின்றேன் இன்னும்
முல்லைக்கும் பாலைக்கும் இடையிலுள்ள
வேறுபாடுகளையெண்ணி எண்ணி.
11. அனகொண்டா
- வ.ந.கிரிதரன் -
அடாது மழை
விடாது பெய்து கொண்டிருந்த
நேற்றிரவு நானொரு கனவு
கண்டேன்.
வழக்கம் போல்
இம்முறையும் தனது அகன்ற
வாயினை விரித்தபடி
அதே அனகொண்டா.
விண்ணளாவ வியாபித்து
விரிந்திருக்கும் அதன் வாய்
எனக்கு அச்சத்தினை
மூட்டியது. அதன்
துரத்தலிலிருந்து
தப்புதலென்பது வழக்கம் போல்
இம்முறையும்
இயலாத செயல்களில் ஒன்றாகவே
ஆனது.
எனது கால்களும் கூட
நிலை பெயர்தலை
நினைக்க மறந்தன.
எதற்காக இந்த அனகொண்டா
என்னை எப்பொழுதுமே
துரத்துகிறது ?
இதனிடமிருந்து எனக்கு
மீட்சி
எப்பொழுது ?
அவ
தரிப்பிலிருந்து
தரிப்புவரை
அகன்ற தன் வாயினை
அகலத் திறந்தபடியிந்த
அனகொண்டா
இது போலெப்பொழுதுமே
வரத்தான் போகின்றது
போல் தெரிகிறது.
அகன்று பெரு வெளியெங்கும்
வியாபித்துக் கிடக்கும்
இதன் பார்வையிலிருந்து
ஒரு போதுமே தப்புதலென்பது
முடியாது போல் தான்
படுகிறது.
அனகொண்டாவுடன்
வாழப் பழகிக் கொள்வதைத் தவிர
வேறெதுவுமொரு வழி
இருப்பதாகத் தெரியவில்லை
கனவில் மட்டுமல்ல
நனவிலும்தான்.
12. ஜன்னலினூடு பார்த்தல்!
வ.ந.கிரிதரன்
இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே
ஒருவித வியப்பினை
ஆச்சர்யத்தினைத்
தந்து கொண்டு கொண்டிருக்கிறது.
கண்ணாடி ஜன்னல்களையே
பார்த்துப் பழகிப் போயிருந்த
எனக்கு
காற்றாலுருவாகிய இந்த
ஜன்னல் வியப்பினைத் தந்ததில்
என்ன
ஆச்சர்யமிருக்க முடியும் ?
கண்ணாடி ஜன்னல்களின்
பார்வைப்புலம்
போல்
இந்த ஜன்னலின்
பார்வைப் புலம்
குறுகியதல்ல என்பதுவும்
என்னை இந்த ஜன்னல்
கவர்ந்த காரணங்களில்
ஒன்று தான்..
குருவிகளை, ஆடுகளை
மாடுகளை
மனிதர்களை
என் வீட்டு ஜன்னல்களால்
பார்த்து அலுத்துப் போயிருந்த
எனக்கு
இந்த ஜன்னல் புதியதொரு
பார்வையினைத் தந்து
விட்டதெனலாம்.
என் பார்வையின்
அதிகரித்த புலத்தினால்
இப்பொழுது
என்னால்
இந்தப் பிரபஞ்சத்தை
இதன் தோற்றத்தை
இதன் ஆழத்தை
இதன் மாயத்தை
எல்லாம் பார்த்துக் களிக்க
முடிகிறது.
இப்பொழுது புரிகிறது
இந்த ஜன்னலின் சிறப்பு.
அன்றைய கிரேக்கர்கள்
தொடக்கம்
இன்றைய
நான் வரை
மனிதருக்கு
இந்த ஜன்னல் எவ்வளவு
உதவியாக
இருக்கிறது.
இவ்வளவு உதவிகளை
வழங்கும்
இந்த ஜன்னலைப்
போற்றிப் பாதுகாக்க
வேண்டியது
நம் தலையாய கடமையல்லவா ?
இந்த ஜன்னலை
இவ்வளவு தூரம்
அசுத்தமாக்கியது
அவ்வளவு நல்லதென்று
யார் சொன்னார்கள் ?
ஆனால் தொடர்ந்தும்
இதனை அசுத்தப்படுத்திக்
கொண்டிருக்கிறார்களே
இந்த மட மானிடர்.
பார்வையைக் குருடாக்கும்
செயலைச்
செய்பவரை எவ்விதம் கூறி
அழைக்கலாம் ?
பார்வைக் குருடர்களென்று
அழைக்கலாமோ ?
13. எல்லைகளைப் போடாதீர்!
வ.ந.கிரிதரன்
என் நிறத்தை
என் மொழியை
என் இயல்பை
என் பிறப்பை வைத்து
என் நாட்டை
வரையறுக்கும்
மூடர்களே!
உங்களுக்கு
ஒன்று சொல்வேன்.
கவனமாகக் கேளும்.
இந்தப் பிரபஞ்சத்தின்
ஒரு துளி நான்.
இந்தப் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
எனக்குச் சொந்தம் தான்.
என் உடம்பில் விரையும்
அடிப்படைத் துகள்கள்
தான் இந்தப் பெரு வெளியிலும்
பிரிக்க முடியாதபடி
விரவிக் கிடக்கின்றன.
என்னால் முடிந்தால்
இதன் அகன்ற பரப்பில்
எந்த மூலையிலென்றாலும்
சென்று என் இருப்பை
உறுதி செய்ய
எனக்கு உரிமை உண்டு.
அதே உரிமை
உமக்கும் உண்டு
என்பதை நான்
பெருந் தன்மையுடன்
ஏற்றுக் கொள்கின்றேன்.
இதிலெனக்கு ஏதும்
தயக்கம் கிடையாது.
இந்தக் கிரகத்தின்
ஒவ்வொரு மூலையிலும்
எனக்குச் சொந்தம்
உரிமையுண்டு.
இதற்கு
எல்லைகளைப் போட்டு
என் உரிமையை
நீர் பறிப்பதை அனுமதிக்க
முடியாது.
வெளிக்குள் விரையுமிந்தக்
கோளின்
கதியையொரு கணம்
நினைவில் கொள்வீரென்றால்
எல்லைகளைப் போட்டுக்
கிணற்றுத் தவளையாய்
விளங்குமும் மடமை
உமக்கே
புரியும்.
14. பறவையும் பெரு முட்டையும்!
வ.ந.கிரிதரன்
பந்தைப் போல்
அழகாக
நீல வண்ணத்தில்
இருப்பதால்
இது விளையாடுவதற்குரியதொரு
பந்தாகுமா ஆகாது.
ஒருவகையில்
வெளியில் விரையும்
சில்லு.
இன்னொரு புறத்தில்
உயிர் தாங்கி நிற்கும்
பெரு முட்டை.
இந்த
முட்டையை
இட்ட
அந்தப் பறவையெது ?
15. விட்டு விடுதலையாக....
- வ.ந.கிரிதரன் -
விட்டு விடுதலையாகி நிற்குமிந்தச்
சிட்டுக் குருவியின் வாழ்வு கண்டு
பொறாமைப்படுகின்றாய்!
அதுவாகவேயாகிக் கட்டுக்களை மீறி
எட்டுத் திசைகளும்
பறத்தல் பற்றிய கனவுகளில்
ஆழ்ந்து விடுகின்றாய்! ஆயின்
பொழுதும், கணமும்,
துரத்தும் பெரும் பட்சிகள் தவிர்த்துப்
போராடுதலை, தப்பிப் பிழைத்தலையே
வாழ்வெனக் கொண்டவதனிருப்புப்பற்றி
எப்பொழுதுதாவது நீ
எண்ணியதுண்டா ?
விட்டு விடுதலையாகச் சிறகடிக்குமிந்த
சிட்டுக் குருவியெனச் சிறகடிக்க
நீ சிந்தித்ததுண்டா ?
16. காலத்தின் சார்பு நிலை!
- வ.ந.கிரிதரன் -
எனது பால்யகாலத்தில் எவ்வளவு
ஆறுதலாக, மெதுவாகக் காலம்
சென்று கொண்டிருந்தது.
ஒவ்வொரு கணத்தையும் மிகவும்
ஆறுதலாக உளவாங்கி, உணர்ந்து, இரசித்து
பொழுதுகளை எவ்வளவு
இனிமையாகக் கழிக்க முடிந்தது.
அன்னையப்பர் மற்றும் பிற
உறவுகளுடன் கழிந்ததந்த
வாழ்வினொவ்வொரு பக்கமும்
நேற்றுதான் படித்ததொரு புத்தகமென
இன்னுமென்னகத்தில்
இருக்கும் மாயமென்ன?
ஆறுதலாக , மிக மிக மெதுவாக
விரைந்த காலமே! உழைப்பேயிருப்பென
ஆகிவிட்ட இன்று மட்டுமேன்
ஒளிவேகத்தில் விரைகின்றாய்?
ஐன்ஸ்டைனின் கூற்றினைத் திருப்திப்படுத்துவதில்
உனக்கென்ன அவ்வளவு மோகம், வேகம்?
17. தயங்குதலுண்டோ இனி!
வ.ந.கிரிதரன்
அன்றிலிருந்து இன்றுவரையில் ,
இதுவரையில்,நான்
எடுத்த முயற்சிகளில்
எத்தனைமுறை
இடர்களிடறியிருக்குமென
நினைக்கிறீர்கள்? - சாணேற
முழம் சறுக்குதலென்பது
முற்றுப் பெறாததொரு தொடராகத்
தொடரும் மர்மம் மட்டும்
கண்டு பிடித்து விடின்
முடிவில் இனபம் துய்த்தலென்பது
அவ்வளவொன்றும்
சிரமமானதல்லதான்.
ஒவ்வொருமுறையும் புதியதொரு
தோல்விக்கான வழியினைக்
கண்டு பிடிப்பதில்
நான் தோமஸ் அல்வா எடிசனுக்கு
எவ்விதத்திலும் குறைந்தவனல்லன்..
சத்தமிட்டுச் சொல்லுவேனிதை
எத்தனை முறையென்றாலும்!
எததனை முறையென்றாலும்!
ஒருமுறை ஈரான் தேசத்துக் கைரேகைச்
சாத்திரக்காரி ஒருத்தி கூறினாள்:
'உன்னைச் சுற்றியும் உள்ள கெட்ட
ஆவிகளை ஓட்டிவிட்டால் புத்திரா!
அனைத்தும் சுகமே!'
ஆளை விடு அம்மாவென்று
ஓடியே வந்து விட்டேன்.
இருந்தாலும் வாசித்தல் எனக்கு
இந்தவிடயத்தில் எப்பொழுதுமே
உதவிக்கு வரத் தயங்குவதேயில்லை.
அந்தத் துணைமட்டுமில்லாவிடின்
என்னவாகியிருக்குமென எண்ணிப்
பார்ப்பதில்லை நான்.
புரிதலைத் தருபவை அதுவே!
விளைவாய் விரிவதெந்தனுள
வெளியே!
இப்புரிதலுமதன் விளைவாய்
விரிதலும் போதுமெனக்கு!
எத்தனை முழங்கள் சறுக்கினுமென்ன
சாணேறத் தயங்குதலுண்டோ
இனி!
18. இயற்கையைச் சுகித்தல்
- வ.ந.கிரிதரன் -
அந்தரத்திலொரு
தோடஞ்சுளையாகத்
தொங்குமிந்த
பிறை நிலவின் தனிமை
கண்டு நெஞ்சம்
கலங்கும். ஆனாலும்
ஒரு திருப்தி.
இந்தப் பிறைநிலவும்
இன்னொருநாளில்
முழுநிலவாகி
முறுவல் பூத்திடுமேயென்ற
நினைவில் தான்.
அண்டம் கலங்க
இடியிடித்து
மின்னிப் பெய்யுமிந்த
மழை ஒரு கணம்
அகத்தே அச்சம்தனைப்
பரப்பும்.
இருந்துமொரு
நிறைவு.
இம்மழையை நம்பி
நெல்லும் வேறு பயிரும்
இருக்குமென்ற
நினைவால் தான்.
கவலைகளற்றுக்
கட்டுக்களற்றுக்
கடுகி மறையுமிந்தச்
சிட்டுக்களைத்
துரத்தும் கழுகுகளை
நினைத்தால்
துயரம்தான்.பெருமிதப்
பறவை கூடவே சிறகடித்துப்
பறக்கும். சுதந்திரக்
காற்றினைச் சுவாசிக்கும்
இவற்றின்
இருப்பையெண்ணி.
19. வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.
வ.ந.கிரிதரன்
எனக்குச் சில சமயம்
ஆச்சர்யமாகத்
தானிருக்கிறது
என்னை நினைத்தால்.
ஏன்
நம்மை நினைத்தால்.
ஏன் இந்த உலகை
இந்த வெளியை
இந்த விரிவை
இந்த அறிவை
இன்னும் என்னால் நினைக்க
முடிந்த, அறிய முடிந்த,
உணர முடிந்த, மகிழ முடிந்த
எதை நினைத்தாலும்
எனக்கு ஆச்சரியமாகத் தான்
இருக்கிறது.
இந்த
வயது மாற மனமும்
மாறுமோ ? மனதில்
முகிழ்க்கும் நினைவும்
மாறுமோ ? அறிவும்
மாறுமோ ?
எனக்கு ஆச்சாியமாகத்
தானிருக்கிறது.
பொருளே சக்தி.
சக்தியே பொருள்.
பொருளின்றி சக்தியில்லை.
சக்தியின்றிப் பொருளில்லை.
இருப்பின்
சக்தியை ஆக்கிய பொருளெது ?
பொருள் படைத்த சக்தியெது ?
மூன்றிற்குள் முடங்கிக்
கிடப்பதினால் மூன்றை
ஏன் இரண்டை ஏன் ஒன்றினைக் கூட
உணராலாம். நான்கை ஐந்தை
ஆறினை... அறிவதெப்படி ?
இருந்தால்
பொருளில்லாத சக்தியை
சக்தியில்லாத பொருளை
அறிவதில் புரிவதில்
சிரமமற்றுச் சிறகடித்திடல்
சாத்தியமோ ?
பரிமாணம் மீறாத
தவளை நான் ஏன்
நீயுந்தான். மீறாதவரை
கிணறு தாண்டாத
தவளைதான். கிணற்றுத்
தவளைதான். நான்
கிணற்றுத் தவளைதான்.
நாம் கிணற்றுத் தவளைதான்.
மாாிமழை நிறைக்கும்
கிணறு நீங்கி
வெளி காணும் தவளைகள்.ஆயின்
வெளி தாண்டாத் தவளைகளே!
வெளி பார்த்து வெளி தாண்டாத்
தவளைகளாய் வளையவருவோம்.
வயிறு வீங்கி வெடிக்கும் வரை
கத்திக் கத்தி வெடித்துச்
சிதறி ஓய்வோம்.
20. பெய்பேய் மழை!
வ.ந.கிரிதரன் -
மழையே! மழையே! வா! வா! வா!
மழையே! மழையே! வா! வா! வா!
மாமழையே! மழையே! வா! வா! வா!
மாமழையே! மழையே1 வா! வா! வா!
இரவிரவாய் பெய்யுமேயிந்த
அடை மழை.அடம் பிடித்து
அடாது பெய்யும் பேய்
மழையாய்! பெருமழையாய்.
விண்ணிடித்துப் படம்பிடித்த
பேரரவாய் காரிருளில்
மின்னல். புந்தி
நடுங்கிக் கிடந்தும், புரண்டும்
கண்ணயர விடாது
கொட்டும் வானம் இரவின்
மோனம் சிதைத்தபடி.
என்ன மழையிது ? என்ன மழை ?
இயற்கைப் பெண்ணே! உன்
இதயம் குமுறியதேனோ ?
மழையென்றால் நினைவில்
மழைக்காளான், வயற்புறத்
தவளை, வாற்பேத்தை, விரால்
சிறகொடுங்கிய கிளிப்புள்,
இருண்டதோர் மோனத்தில்
மருண்டிருக்கும் மழைவான்,.
வந்து வந்து போகும்.
வந்து வந்து போகும்.
மின்னல், இடி, கோடிழுக்கும்
மழைத் தாரை, பெருவெள்ளம்
இவையெல்லாம் கதைபல
கதைபல கூறும்.கூறும்.கூறும்.
காகிதக் கப்பல், 'மழை வா ',
'வெயில் போ '
படம் விரிக்கும் நினைவுத்
திரை.
விரிந்ிருக்கும் பெருவான் பார்க்க
விரிவெளியில் கிடப்பதென்
பெருவிருப்பு. அது போல்
படுத்திருந்து பெய்பேய்மழை
பார்த்துருளல்
இன்னுமோர் இலயிப்பு.
ஆண்டு போயென்ன ?
அடைமழையில் இன்னும்
அடங்கிவிடும் ஆழ்மனது.
நடுப்பகல் மழை நள்யாம
மழை கண்டும் ஆடாத
மனமும் உண்டோ!
கவிவடிப்போர் கற்பனைக்குப்
புயியில்பஞ்சம்வைக்காப்
பெய்யுமிந்தப் பெருமழை.
அன்னைபூமி அவலம் கண்டு
அகல்வான் உதிர்க்கும் கண்ணீர்.
அகதி அலைச்சல் கண்டு மேகம்
வடிக்கும் கண்ணீர்.
மழையில் புனலாடுதல்
பேரின்பம் ஒரு போதில்.
மாசற்றபுறம் நீங்கி
மாசுற்று வரும் நீரில்
நிலப்பெண்ணும்
நிலைதளர்வாள்.
பூவுலகின் தோழர்களோ
நீரில், நிலத்தில்,வெளியில்
நீரரித்து நீலம் பாரிப்பர்.
இயந்திரப் பேயரக்கர்
புகை கக்கும் நகரத்துப்
பெரும்பரப்போ
கனலடங்கிக்கண்சாய
பெய்யும் மழையோ
பெய்யும்! பெய்யும்! பெய்யும்!
பெருமழையாய்ப் பெய்யும்.
பேய்மழையாய்ப் பெய்யும்.
மழையே! மழையே! போ! போ! போ!
மழையே! மழையே! போ! போ! போ!
மாமழையே! மழையே! போ! போ! போ!
மாமழையே! ம்ழையே! போ! போ! போ!
21. யாரிந்த தீவிரவாதி ?
வ.ந.கிரிதரன்
வானணை தகர்த்த இந்தத்
தீவிரவாதி யார் ?
நீரைக் கொட்டி,
நெருப்பைக் கக்கி
நிலத்தை நடுக்கி
நீ
புரியும் படுகொலைகள்
தானெத்தனை ?
மறைந்திருந்து
வல்லமையுடன்
தாக்குவதில்
உனக்கு நிகர்
நீயேதான்.
குழந்தைகள், பெண்கள்,
முதியவர், இளையவர்
பறவைகள், மிருகங்கள்
என
நீ
பாரபட்சம்
பார்ப்பதில்லை.
உன்னைவிட வேறொரு
பயங்கரவாதி இப்
புவியிலுண்டோ ?
தீவிரவாதிகளுக்கெதிரான
போரில்
கவனம் உன்னையும்
சேர்த்துக் கொள்ளப் போகின்றார்கள்.
ஆனால் ஒன்று மட்டும்
நிச்சயம். இந்த
யுத்தத்தில் மட்டும் இறுதி வெற்றி
உனக்குத் தான்.
22. விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.
- வ.ந.கிரிதரன் -
விரிந்திருக்குமிந்த வான்
என் நெஞ்சினில்
இனம்புரியாததொரு களிப்பினை
விடைதெரியா பல்
வினாக்களை எழுப்பிட
எப்பொழுதுமே தவறியதில்லை.
சூழல் தெரியா
மலை முகட்டில் அல்லதோர்
குன்றில்
அல்லது உயர்வானதொரு புல்வெளியில்
அண்ணாந்து படுத்திருந்து
வான் பார்த்தல்
எப்பொழுதுமே மகிழ்ச்சிக்குரியதொரு
விடயமாகத் தானிருந்து வருகிறது.
இந்த வெளி
தத்துவஞானிகள் எப்பொழுதும்
தத்துவங்களைத்
தர்க்கிப்பதற்குப் பெரிதும்
உதவியாக இருந்திருக்கின்றது.
அன்றைய அறிவியல் அறிஞர்கள்
தொடக்கம்
இன்றைய நியூட்டன், ஐன்ஸ்டைன் என்று
சிந்தனையைத் தூண்டியதில்
அளப்பரியதொரு பங்கு இதற்குண்டு.
விரிந்திருக்கும் சடவெளி
அதில்
உயிர்த்துடிப்புடன் வளையவரும்
பொருளின் பின்னணியில்
பெரும் அர்த்தத்துடன் விரிந்து
கிடக்கும்.
மிகப் பெரியதொரு
'பிர(ம்)மா 'ண்டமானதொரு
மேடையின் பின்னணியாய்.
இதன் பின்னணியில்
உயிர்களின் நடனம் நடிப்பு
எல்லாமே வெகு நேர்த்தியாக
இயல்பாக, அற்புதமாக
இருக்கிறது.
ஒருவரை ஒருவர்
கொன்று தம் இருப்பை
உறுதி செய்வதில்
எல்லோருமே
எல்லாமே
உண(ர்)வாக இருக்கின்றார்கள்.
இருக்கின்றன.
சின்னஞ்சிறிய அழகானதொரு குருவி
தன் குஞ்சிற்கு
உணவாக ஊர்ந்து செல்லுமொரு
உயிரினைப் பிடித்து வருகிறது
எந்தவித மன உறுத்தலுமில்லாமல்.
ஊர்ந்திடும் உயிருக்கு உள்ள
இருக்கக் கூடிய பந்த
பாசங்களைப் பற்றிய
எந்தவிதத் துயரங்களோ
சோகங்களோ
கழிவிரக்கமோ
இல்லாமல்.
தனியாக மானொன்றினை அல்லது
வரிக்குதிரையினைத் துரத்தும்
புலியோ அல்லது சிங்கமோ
அந்த மானின், அந்தக் குதிரையின்
அவற்றின் வருகையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்
அவற்றின் குட்டிகள் அல்லது அவற்றின்
காதலர்கள் இருக்கக் கூடிய
சாத்தியங்களைப் பற்றியெல்லாம்
சிந்திக்காமல் துரத்துகின்றன
புசிப்பதை மட்டும்
நினைவில் வைத்துப்
பெரும் பசியுடன்.
ஆனால் முதலை, காட்டு நாய்
போன்ற சில
கொல்லுவதில் கூடக் கொடூரமானவை.
சிறுகச் சிறுகக் குழுவெனக்
கூடி கொல்லும் இவற்றின் செயல்
கொல்லப் படுவதன்
உணர்வுகளைக் கொஞ்சமேனும்
கவனத்திலெடுக்காமல்
புரியப் படுகின்றது.
தனது குழுவில் ராஜாவாக ஆதிக்கம்
செலுத்திக் கொண்டிருந்த
வரிக் குதிரையொன்றை
அல்லது
காட்டெருமையினை
அல்லது
மானொன்றினை இவை
கீழ்த்தரமாகக் கொல்லுகின்றன
எந்தவித இரக்கமும்
இல்லாமல்.
உயிர் அளவில் சிறிதாயினும்
அல்லது
உருவில் பெரிதாயினும்
டிஎன்ஏயின்
சில வித்தியாசங்கள்
போதுமானவையாக
இருக்கின்றன
அடிப்படை இயல்பினை
மாற்றுவதற்கு.
உண(ர்)வு
உயிர்களின் இருப்பிற்கு
உயிராகவே
இருக்கின்றது.
விரிந்திருக்கும் வெளிப்
படுதாவில்
வரைந்திருக்கும் ஒவியமாய்
சுடர்கள், உயிர்கள்
அனைத்துமே எழில் கொண்டு
ஒளிர்ந்து. கருவாக,
உருவாக, உதித்து
உலருமொரு இருப்பு
இங்கிருப்பதன் அடிப்படை
இரகசியமென்ன ?
உயிரற்ற கதிர்
அதன் ஒளி, அதன் துகள்
உயிரின் அடிப்படையாய்
உள்ளதொரு விந்தை.
விளங்காத விந்தை. வியப்பு
கொள்ளும் நம் சிந்தை.
23. ஜன்னலினூடு பார்த்தல்!
வ.ந.கிரிதரன்
இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே
ஒருவித வியப்பினை
ஆச்சர்யத்தினைத்
தந்து கொண்டு கொண்டிருக்கிறது.
கண்ணாடி ஜன்னல்களையே
பார்த்துப் பழகிப் போயிருந்த
எனக்கு
காற்றாலுருவாகிய இந்த
ஜன்னல் வியப்பினைத் தந்ததில்
என்ன
ஆச்சர்யமிருக்க முடியும் ?
கண்ணாடி ஜன்னல்களின்
பார்வைப்புலம்
போல்
இந்த ஜன்னலின்
பார்வைப் புலம்
குறுகியதல்ல என்பதுவும்
என்னை இந்த ஜன்னல்
கவர்ந்த காரணங்களில்
ஒன்று தான்..
குருவிகளை, ஆடுகளை
மாடுகளை
மனிதர்களை
என் வீட்டு ஜன்னல்களால்
பார்த்து அலுத்துப் போயிருந்த
எனக்கு
இந்த ஜன்னல் புதியதொரு
பார்வையினைத் தந்து
விட்டதெனலாம்.
என் பார்வையின்
அதிகரித்த புலத்தினால்
இப்பொழுது
என்னால்
இந்தப் பிரபஞ்சத்தை
இதன் தோற்றத்தை
இதன் ஆழத்தை
இதன் மாயத்தை
எல்லாம் பார்த்துக் களிக்க
முடிகிறது.
இப்பொழுது புரிகிறது
இந்த ஜன்னலின் சிறப்பு.
அன்றைய கிரேக்கர்கள்
தொடக்கம்
இன்றைய
நான் வரை
மனிதருக்கு
இந்த ஜன்னல் எவ்வளவு
உதவியாக
இருக்கிறது.
இவ்வளவு உதவிகளை
வழங்கும்
இந்த ஜன்னலைப்
போற்றிப் பாதுகாக்க
வேண்டியது
நம் தலையாய கடமையல்லவா ?
இந்த ஜன்னலை
இவ்வளவு தூரம்
அசுத்தமாக்கியது
அவ்வளவு நல்லதென்று
யார் சொன்னார்கள் ?
ஆனால் தொடர்ந்தும்
இதனை அசுத்தப்படுத்திக்
கொண்டிருக்கிறார்களே
இந்த மட மானிடர்.
பார்வையைக் குருடாக்கும்
செயலைச்
செய்பவரை எவ்விதம் கூறி
அழைக்கலாம் ?
பார்வைக் குருடர்களென்று
அழைக்கலாமோ ?
24. இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!
- வ.ந.கிரிதரன் -
படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.
வீழும் மலர், ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.
முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!
இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ? இல்லை
இதுவும் 'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?
இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!
25. இருப்பதிகாரம்
- வ.ந.கிரிதரன் -
நிலை மண்டில ஆசிரியப்பா!
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா நிழலாக் கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.
வேறு....
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.
உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?
26. இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!
வ.ந.கிரிதரன்
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உனக்குள் எனக்குள்
பரவிக் கிடக்கும் வெறுமை
கண்டு மனம் அதிரும்.
உள்ளூம் புறமும் வெளியாய்ப்
பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.
சோகமேன் சகியே!
உனைப் பார்த்து மட்டுமல்ல
உன்னருகே கிளைதாவுமந்த
அணில், அதனருகே தனித்துணவு
தேடுமந்தச் சிட்டு,
அவசர அவசரமாய் வீடு
விரையுமந்த அந்த அராபிய மனிதன்
ஆபிரிக்க அணங்கு
ஆலயம் விட்டு ஆடிவரும்
அந்த முதிய சிறிலங்காத் தமிழன்
அந்த இந்திய மனிதன்
அந்த எருது
அந்த அமெரிக்கன்
அந்த ஆங்கிலேயன்
இவ்விதம் யாரைப் பார்த்தாலும்
எதனைப் பார்த்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெளியும்,கதியும்,முகிலும்,
சுடரும்,சக்தியும் தானே.
வெறுமைக்குள் வெறுமையாய்
அரங்கேறும் நாடகங்கள்.
சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.
இருப்பினை இருத்திவிடுமொரு
பொறுப்பு மட்டுமில்லையென்றால்...
அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!
அடிப்படையில் அனைத்துமொன்றே.
இது கூடப்
புரியாத பொழுதெனவே
போகுமிந்த இருப்பினிலே
இருப்புணர்ந்து இளகும் என் நெஞ்சே!.
27. விசும்பும், தொலைநோக்குதலும்!
வ.ந.கிரிதரன்
தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!
எனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து
-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்
மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -
நானும்
தொலைவுகளை இதனூடு
மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்
ஒருவித அறிவுப் பசிகொண்டு.
அடங்கவில்லை அந்தப் பசி
இன்றுவரை.
இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள
ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.
ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,
மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு
நப்பாசையுடனும் நானும்
முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்.
ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்
என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு
விடயமிது.
எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை
எனக்கு.
நீண்டு,கவிந்த இரவு.
வியாபித்திருக்கும் விரிவிசும்பு.
இயன்றபோதெல்லாம்
நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.
இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.
தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!
28. தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....
1.
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்
இளவேனிற்பொழுதொன்றின்
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்
'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்
'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
வீடற்றவாசிகள் சிலர்.
விரிந்து கிடக்கிறது வெளி.
எதற்கிந்த முடக்கம்?
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.
2.
பகலவனாட்சியில்
பல்வகை வாகனங்கள்!
பல்லின மானிடர்கள்!
விளங்குமிப் பெருநகரின்
குணம்
இரவுகளில்தான்
எவ்விதமெல்லாம்
மாறிவிடுகிறது!
மாடப்புறாக்களே!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து
இன்னும் இரைதேடுவீர்!
உமதியல்புகளை
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?
நகரத்துப் புறாக்களா?
இரவுப் புறாக்களா?
சூழல் மாறிடினும்
கலங்கிடாப் பட்சிகளே!
உம் வல்லமைகண்டு
பிரமித்துத்தான் போகின்றதென்
மனம்.
3.
நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
'மருந்து'விற்கும் போதை
வர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்....
துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ!
4.
இவ்விதமானதொரு,
வழக்கமானதொரு
பெருநகரத்தின்
இரவுப் பொழுதொன்றில்,
'பின்இல்' புல்வெளியில்
சாய்கதிரை விரித்ததில்
சாய்ந்திருக்கின்றேன்.
பெருநகரத்தின் இடவெளியில்
ஒளிந்திருக்கும் இயற்கையைச்
சுகிப்பதற்காக.
சிறுவயதில்
'முன்இல்' தந்தையின்
'சாறத்'தொட்டிலில்
இயற்கையைச் சுகித்ததின்
நீட்சியிது.
பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்
பால்யத்துப் பிராயத்து
வழக்கம்.
இன்னும் தொடரும் -அப்
பழக்கம்.
தோடஞ்சுளையென
அடிவானில்
கா(ல)ல்மதி!
அந்தரத்தில் தொங்குமந்த
மதி!
அதனெழிலில் தெரிகிறது
வெளிதொங்குமென்னிருப்பின்
கதி!
5.
பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன்.
6.
வெளியில் விரைமொரு
வாயுக் குமிழி! - உள்
உயிர்
ஆடும் ஆட்டம்தான்
என்னே!
ஒளியாண்டுத் தனிமை!
வெறுமை! -உணராத
ஆட்டம்!
பேயாட்டம்!
இந்தத்
- தனிமையெல்லாம்,
- வெறுமையெல்லாம்,
- தொலைவெல்லாம்,
ஒளியணங்கின் ஓயாத
நாட்டியமோ! - மாய
நாட்டியமோ?.
ஆயின்,
விழியிழந்த குருடருக்கு
அவை
ஒலியணங்கின்
சாகசமோ?!
7.
இந்தப் பெருநகரத்திருப்பில்
நான் சுகிக்கும் பொழுதுகளில்
இந்த இரவுப் பொழுதுகள்
சிறப்பு மிக்கவை.
ஏனெனில் -அவை
எப்பொழுதுமே
என் சிந்தையின்
- விரிதலை,
- புரிதலை
- அறிதலை
அதிகரிக்க வைப்பவை;
அதனால்தான்.
29. ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
- வ.ந.கிரிதரன் -
நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.
- மார்ச் 6, 1983.-
30. எதற்காக?
வ.ந.கிரிதரன்
ஒவ்வொரு கணமும் என்னைச் சுற்றியிருக்கும்
இந்த உலகு, வாசனை மலர்கள், மரங்கள்,
நதிகள், சுனைகள், விரிந்து கிடக்கும்
பரந்த வான், வெளி, சுடர்கள், உயிர்கள்
இவை யாவும் என்னைப் புதிர் தேடும் ஒருவனாக
ஆக்கி விடுகின்றன. அத்தகைய சமயங்களில்
நான் நினைக்கின்றேண்?
எதற்காக? இவையெல்லாம் எதற்காக?
இந்த இருப்பு, இந்த விருப்பு, இந்த வெறுப்பு
இவையெல்லாம் எதற்காக? எதற்காக?
நூல்களைத் துருவித் துருவிப் பார்த்தேன்.
என் அறிதலின் எல்லையினைக்
கூட்டிப் பார்த்திட முயன்றேன். இந்தப் புதிரின் விடையினைக்
கண்டுவிடுமொரு வெறியினில் முயற்சித்ததெல்லாம்
நெஞ்சில் பிரமிப்பினையே ஏற்றின. ஆயின்
என் கேள்விக்கான விடையினை மட்டும்
என்னால் அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று.
எதற்காக? எதற்காக? எதற்காக?
பரிமாணங்களைப் புரிய முடிந்தது. ஆயின்
மீறுவதற்கு ஏதேனும் சாத்தியங்களுண்டா?
புரிந்தது சொன்னது இல்லையென்று.
புரிதல் தவிர வேறேனும்
அறிதல் முறையேதுமுண்டா என்
ஆவலைத் தணிப்பதற்கு? உணர்வதன் மூலம்
புரிதலுக்குச் சாத்தியமுண்டா?
படைப்பினிந்த நேர்த்திதான் என்னைப் பெரிதும்
பிரமிக்க வைத்து விடுகிறது. எவ்வளவு அறிவு பூர்வமான
நேர்த்தி! படைப்பின் இரகசியம் தானென்ன?
இத்தகைய சமயங்களில்
நான் நினைக்கின்றேண்?
எதற்காக? இவையெல்லாம் எதற்காக?
இத்தகைய சமயங்களிளெல்லாம்
கட்டுகளறுத்த மானுடச் சிட்டாக இந்த
நகர் விட்டு, இந்த ஒலிகளை விட்டு,
இந்தக் களரிகளை விட்டு நான்
வெளியின் தொலைவுக்குள், ஆழத்திற்குள்
பறந்து,புதைந்து ஒளிந்திட விரும்புகின்றேன்.
அத்தகைய சமயங்களிலெல்லாம்
உறவுகள் தரும் பாதிப்புகளிலிருந்து
துறவு கொள்ளப் பெரிதும் விரும்புகின்றேன்.
வினாக்களோ மீண்டும் மீண்டும்
எழுகின்றன:எதற்காக?
இவையெல்லாம் எதற்காக?
31. கிணற்றுத் தவளைகள்!
- வ.ந.கிரிதரன் -
தவளைகளின் கொட்டம் தாங்க முடியவில்லை.
கிணற்றை விட்டு வெளிவர
மாட்டோமென்று அடம் பிடிக்கின்றன.
சில தவளைகளுக்கோ வார்த்தைகளென்றால்
அவ்வளவு உயிர். மழைக்காலங்களில் அவை இழுக்கும்
ஆலாபனையிருக்கிறதே! வார்த்தைகளை வைத்து
மாயாஜாலம் காட்டுவதில் வல்லவை அவை. மேற்படி
தவளைகள் சில வேளைகளில் அறிதலுக்காக
மிகவும் பிரயத்தனம் செய்கின்றன.
ஆயினும் 'வெளிவருத'லென்பது அவற்றுக்கு
வேப்பங்காய் தான்.
புறம் விரிக்குமென்பதறியாத அவை
அறிதலின் உச்சியில் நின்று
ஆனந்தக் கூத்தாடுவதாகக் கனவுகள்
காணுகின்றன. தமக்குள் அடிக்கடி மோதிக் கொண்டபோதும்
ஒரு விடயத்தில் மட்டும் அவை பெரிதும் ஒற்றுமையாக
இருக்கின்றன. அது....
இருப்பை நிலை நாட்டுவதிலுள்ள ஆர்வம்.
தம்மிருப்பை உறுதி செய்வதில் அவை
பெரிதும் ஒற்றுமையாகவிருக்கின்றன.
ஆயினும் ஒற்றுமையின் பலம் கொண்டு
வெளிவர மட்டும் அவை சிறிதும்
முயல்வதில்லை.
கிணற்றுத் தவளைகளின் இருப்பு
அவற்றின் பரிதாப நிலையினைப்
புலப்படுத்தும். வெளி விரிந்து கிடப்பதை
அவை அறியவில்லை. இருந்தும் அவை
மிகவும் சந்தோஷமாகத்
தானிருப்பதாகத் தெரிகின்றது.
போதுமென்ற மனதில் பொன் செய்து
வாழும் தவளைகள்!
32. தேடல்கள்!
- வ.ந.கிரிதரன் -
எப்பொழுதுமென் நெஞ்சில் களியை
ஊட்டுவனவாகக் கீழுள்ளவற்றினைக்
கூறிடலாம்.
நல்ல நூல்கள்; நதி;கடல்;
மலை;சுடர்;புள்;மரம்;காற்று...
இது போல் பலப் பல. இவை
எனக்குப் படைப்பின் அதிசயத்தை,
அற்புதத்தினைப் போதிக்கின்றன.
அகக் கண்களை எல்லைகள் கடந்து
நோக்கத் தயார் செய்து விடுகின்றன.
எப்பொழுதுமே
அறிதலுக்கும், புரிதலுக்குமாக
தேடுமென் நெஞ்சத்தின்
தாகம் இச்சிறுகணவிருப்பில்
அடங்கிப் போகப் போவதில்லை
என்பதும் புரிந்துதானிருக்கிறது.
இருந்தும் இயன்றவரை
வினாக்களுக்குரிய விடைகளை
நாடித் தொடருமென் தேடல்
தொடரத் தான் போகின்றது.
33. நகரத்து மனிதனின் புலம்பல்!
- வ.ந.கிரிதரன் -
மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி
என்கின்றது
முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்
சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு
விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று
கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும்
நிழலைத்தந்தீர்! உமது
காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்!
இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை
தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால்
இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும்
உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும்
உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று
எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்'
என்பதாச்சு.
34. விருட்சங்கள்!
- வ.ந.கிரிதரன் -
திக்குகளெங்கும் ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்!
எண்ணிலடங்கா விருட்சக் காட்டினுள்
தன்னந்தனியாக நான்
நடந்து கொண்டிருக்கின்றேன்.
வனமெங்கனும் கவிந்து கிடக்குமொரு
மோனம்.
கோடை வெயிலின் சுட்டெரிப்பில்
தகித்துக் கிடக்கும் விருட்சங்கள்
தகிப்பினை வாங்கித் தரும்
தண்மையின் கீழ் என் பயணம்
தொடரும்.
அமைதியான,
ஆரவாரமற்ற பெருந்தியாகம்!
பலன் கருதாப் புரியப்படும்
பணி!
எத்தனை விந்தையான உயிரினங்கள்!
அத்தனைக்குமோர்
ஆதரவு! அரவணைப்பு!
ஓங்கிய விருட்சங்களுக்குள்
ஒரு கோடி பிரிவுகள்! ஆயின்
ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்
தண்நிழல்!
பிரமிப்பில் தொடருமென் பயணம்.
ஆறறிவு பிளந்து வைக்கும் மண்ணில்
கீழறிவின் பேரறிவு!
நன்மைக்காய்த் தனை மறக்கும்
இன்மனத்தினிருப்பிடமாயிவ்
விருட்சங்கள்!
தமையழித்த போதும்
தண்தரும் விருட்சங்கள்!
35. ஞானம்!
- வ.ந.கிரிதரன் -
நேரம், சூழல், இடம்
இவையெல்லாம் சரியாக
அமைந்து விடவேண்டும்
சிந்தை குடையும் சில
சிக்கல்களை அவிழ்ப்பதற்கு.
அப்பொழுதுதான் அதுவரை
புதிராய்த் தெரிந்ததெல்லாம்
'ப்பூ' இவ்வளவுதானா
என்றிருக்கும்.
பிரமிப்பில் அத்தகைய தருணங்களில்
நான் ஆழ்ந்து விடுவதுண்டு.
அறிவின் தெளிவெனை
புடமிட்டு வைத்துவிடும்
தருணங்களவை.
புரியாதவற்றைத் தெரிதற்கு
நான் இப்பொழுதெல்லாம்
முன்புபோல் குத்துக்கரணங்களடித்து
முயல்வதில்லை. கூடிவரும் பொழுதுகளிற்காகவும்,
பொருந்தியதொரு சூழலுக்காகவும்,
அமைந்தவோரிடத்துக்காகவும்
நான் இப்பொழுது காத்திருக்கப்
பழகிவிட்டேன்.
36. நடிகர்கள்!
வ.ந.கிரிதரன்
இந்த நாடக மேடையில்
நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்
அழுவதா சிரிப்பதா என்று
சில நேரங்களில் தெரிவதில்லை.
இவர்களுக்கோ தாங்கள் பிறவி
நடிகர்கள் என்ற அடிப்படை
உண்மை கூடத் தெரியவில்லை.
தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்
கொண்டே நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் ஒருவன் என்ற வகையில்
என்னையும் சேர்த்துத் தான்
கூறுகின்றேன்.
எவ்வளவு தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் இவர்கள்.
எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு
தத்ரூபமாக இவர்களால்
முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?
உருகுவதிலாகட்டும் அசடு வழியக்
குழைவதிலாகட்டும்
என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?
இந்த நாடக மேடையிலிருந்து
விடுபட வேண்டுமென்று தான்
இத்தனை நாளாக முயன்று
கொண்டிருக்கின்றேன்.
திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.
கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.
எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து
கத்துகின்றார்கள்.
நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே
நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்
ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்
என்னைப் பார்த்துப்
'பார் இவனது அபாரமான
நடிப்பை'யென்று.
என்ன நடிகர்களிவர்கள்?
தங்கள் நடிப்பை விட
என் நடிப்பு அபாரமானது
என சான்று வழங்கும்
பெருந்தன்மை மிக்க
மகா பெரிய நடிகர்களே!
உங்கள் பெருந்தன்மைக்காக
உங்கள் கருணைக்காக
உங்கள் அனைவருக்கும்
எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
உரித்தாகுக.
மகாபெரும் கவிஞராக, அற்புதப்
படைப்பாளியாக, மூதறிஞராக,
அதிமேதாவியாக,சமூகத்
தொண்டராக, தலைவராக
எத்தனை விதமான வேடங்களில்
நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!
உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு
வசிட்டர் வாயால் கிடைத்தது போல்
எத்துனை பெருமை மிக்கது. அதற்காக
எனது ஆயிரம் ஆயிரம் கோடி
நன்றிகள்!
இந்த நாடக மேடையில் முற்றாகவே
நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது
இயலாததொன்று என்பதை உணர
முடிகின்றது. இருந்தாலும்
நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்
தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்
அற்புதமான நாடக மேடையிது.
இங்கு நடைபெறும் நாடகங்கள்
அனைத்துமே திரை விழும் வரை
தான். விழுந்த பின்னும்
நடிப்பில் தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் நாடகத்தைத்
தொடரத் தான் செய்வார்கள்.
இந்த நாடக மேடையில்
நடிப்பதென்பது மட்டும்
தான் நித்தியம்.சாசுவதம்.
நிரந்தரமானதொரு திரை
என்று ஒன்று உண்டா
இதன் நிரந்தரத்தை
நிரந்தரமின்மையாக்க?
யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை
இருக்கும் பட்சத்தில்
அவ்விதம் விழும் திரை கூட
இன்னுமொரு பக்கத்தில்
ஆரம்பமாகுமொரு நாடகத்தின்
தொடக்கமாகவிருக்கலாம்?
யார் கண்டது?
பாத்திரங்களிற்கா
குறைவில்லை?
ஆக,
இருக்கும் வரை
நடித்துக் கொண்டேயிருப்போம்.
வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!
(1983-1987 காலகட்டத்தில் எழுதப்பட்டவை).
37. அர்த்தமுண்டே...!
- வ.ந.கிரிதரன் -
புயல்கள் வீசி புழுதிகள் படர்கையிலே
நெஞ்சினில் தானெங்ஙனம் நிம்மதியேது...?
ஆயினுமென் நெஞ்சோ
துவண்டு விடுவதில்லை! சோகத்தாலுதிர்ந்து
விடுவதில்லை.
தொலைதூரத்தே, கண்ணாடியினூடே
நீலவானத்திரவின் கருமையில் உறைந்து கிடக்கும்
ஒளியாண்டுகளில் ஓய்ந்திருக்கும் அமைதிகளில்
சுடர்க்கன்னிகளின் 'கெக்கலி' மட்டும்
மின்னி மெல்ல மறையும்.
நெஞ்சகமோ குலுங்கி மெல்லக் குளிரும்.
கூடவே,
மென்தென்றலில் நாணிச் சிரிக்கும்
மல்லிகைகளும்,
வயல்களில் மாரிகளில் படரும்
தவளைக் கச்சேரிகளும்,
மின்கம்பிகளில் இரட்டைவாற்
கருங்குருவிகளின் ஒயிலாட்டங்களும்,
மாவினில் மறைந்து மருளும் குயில்களும்
மலிந்த என்னூரின் நினைவலைகளும் மெல்ல
எழும்..
ஆயின் அங்கும் அமைதியில்லை.
இரவுகளில் இரத்தம் வீதிகளில்
ஆறெனப் பெருகிக் கிடக்கையில்...
கண்ணீர் பொழிகையில்..
அந்த நினைவுகளும் இன்னும் நெருஞ்சி முட்களாகத்தான்
குற்றுகின்றன.
கண்ணீருங், கம்பலையுமே கவிந்துவிட்ட
வாழ்வினிலே..
அர்த்தங்கள் அவர் வாழ்விலில்லை.
காலச்சாலைகளில் அங்கு
வசந்தப் பூக்களும் வாடியே பூக்கின்றன.
அநீதியின் பொருமலுக்குள் அவரெலாம்
சிதைந்து, இடிந்து கிடக்கின்றார்.
எங்ஙனும்,
வியாபித்துக் கிடக்கும் இயற்கைத் தாயே!
எதற்கு..? இவையெல்லாம்..எதற்கு..?
ஆயினும்,
விலகியோடுவதில் அர்த்தமில்லை.
உணர்ந்து பின் வாழ்வதிலும்
உண்டே அர்த்தங்கள்.
'போரற்று அமைதியிங்கு பிறப்பதில்லை.
புரட்சி வெடிக்காமல்
புதுயுகங்கள் பிறப்பதில்லை.'
அர்த்தமற்று வாழ்வதிலுமோர்
அர்த்தமுண்டு. அறிந்திடுவோம்.
கோழையைப் போலோடுவதால்
கண்ட பயன் தானென்ன?
நாளை நாம் படைப்போம்
நல்லதோர் பொற்காலம்!
(1984)
38. இயற்கைத்தாயே!
- வ.ந.கிரிதரன் -
போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.
விதியென்று
வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு
விதியறியும்
மனத்திடத்தை
மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.
தாயே! இயற்கத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...
39. ஆசை!
- வ.ந.கிரிதரன் -
அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும்
ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில்
வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்
பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள்
கத்தி விடும்
நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே
பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால்
அடியேனின்
இஷ்ட்டமாகும்.
40. இயற்கையே போற்றி!
- வ.ந.கிரிதரன் -
எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து
எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும்
சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும்,
பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும்,
இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி
கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும்
பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப்
போற்றுகின்றேன். நானுனைப்
போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்!நானுனைப்
போற்றுகின்றேன்.
41. தனிமைச் சாம்ராஜ்யத்துச்
சுதந்திரப் பறவை.!
- வ.ந.கிரிதரன் -
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே. இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
கட்டுக்களற்ற உலகில்
கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில்
சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில்
பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
42. ஞானச்சுடரே! நீ எங்கு போயொளிந்தனையோ?
- வ.ந.கிரிதரன் -
'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.
செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.
மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.
இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?
ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.
அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?
விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!
ஆ....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
ஞானச்சுடரே! நீ
எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?
வ.ந.கிரிதரனின் ஆரம்பகாலக் கவிதைகள் சில
(கீழுள்ளவை) வீரகேசரி, தினகரன், நுட்பம், சிந்தாமணி, ஈழமணி ..போன்ற பத்திரிகை,
சஞ்சிகைகளில் வெளிவந்தவை.
43. பயணம் தொடரும்!
- வ.ந.கிரிதரன் -
நாளையென்ற வசந்தத்தை
நாடி எங்கள்
பயணம் வாழ்க்கைப்
பாலையினூடு
தொடர்கிறது.
துன்பப்
புயற்காற்றுகளால்
எங்கள் தேகங்கள்
சீர்குலைந்து
துவண்டு விட்ட போதும்
உறுதி குறையவில்லை.
கானல் நீர் கண்டு
கண்டு எங்கள் கண்கள்
பூத்து விட்ட போதும்
கண் 'பாவை'யின் ஒளி
பூத்து விடவில்லை.
நம்பிக்கைக் கோல் பற்றி
எண்ண ஒட்டகங்கள் மேல்
எங்கள் பயணங்கள்
இனியும் தொடரும் அந்த
வசந்தத்தை நாடி
44. எதிர்பார்ப்பு!
- வ.ந.கிரிதரன் -
இருண்டு கொண்டிருக்கிறது.
இன்னும் சிறிது நேரத்தில்
இவ்வுலகம்
இருளால் நிறைந்துவிடும்
கூகைகளும்
கோட்டான்களும்
கொஞ்சிக் குலாவத் தொடங்கி
விடும்.
பனிமுட்களால்
இருட்பன்றி
குத்தத் தொடங்கிவிடும்.
நிலவயலைக்
கொத்திக் கிளறிவிட்டு
வயற்காரக் கதிரவன்
வந்தவுடன்
இந்தப் பன்றியும்
ஓடி ஒளிந்துவிடும்.
ஆனாலென்
அகவுலகை மூடியிருக்கும்
அந்த மயக்க இருள்
என்றுதான் தொலையுமோ?
அவ்வுலகை ஆட்சி செய்யும்
கோபதாபக் கூகைகளும்
கோட்டான்களும்
என்றுதான் அழியுமோ?
கும்மிருள் நீக்கியெழும்
குளிர் நிலவொன்றை நாடிச்
செல்லும் வழிகாட்டிடத்
துருவ நட்சத்திரமொன்றை
நோக்கி
நானிங்கு காத்திருக்கின்றேன்.
45. மும்மூர்த்திகள்!
பரிசோதனைக் குழாய்களில்
புதுப்புதுப் பாப்பாக்களைப்
பிரசவித்த நாங்கள் தான்
கூடவே
'நியூட்ரன்' குண்டுகளையும்
ஆக்கிச் சாதனை
புரிந்தவர்கள்.
'படைத்தல்'
'காத்தல்'
'அழித்தல்'
புரியும் மும்மூர்த்திகள்
நம்மில் அடக்கம்.
46. யுகமாற்றம்!
- வ.ந.கிரிதரன் -
'அன்ரோமீடாக்கள்'
திகழும்
அண்டம் முழுவதையும்
சுற்றிவந்தே
அன்பேயுனை
மணப்பேனென்று
ஒளியின் வேகத்தில்
ஓயாது சுற்றியலைந்து
மீண்டபோது, ஏழை
அவளிருந்த மண்ணிலோ
புட்கள் முளைத்து யுகங்கள்
பலவந்து போயிருந்தன.
47. ஆத்துமாவின் கேள்வியொன்று!
- வ.ந.கிரிதரன் -
நெஞ்சப் பாலைகளில்
சிந்தனைப் புயல்கள் வீசிப்
புழுதி பறக்கையிலே
அடிவயிற்றைக் கீறியொரு
திகில்
ஊடுருவிச் செல்லும்.
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்.
"நானென்றால் நான் யார்?
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
புழுப்பிடித்து நாறுகையில்
இந்த நானெங்கே?
அன்றி, அம்மனத்தே
விரவி நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றால் உணர்வாயின்
நடையிழந்து, மொழியிழந்து
நிலைகுலைந்து போகையிலே
இந்த
நானெங்கே?
காணுங் கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய் சிலிர்க்கும்
மயக்கமெல்லாம்
உணர்வெல்லாம்
உடலெல்லாம்
நான் தானோ?
வெறுமைகள் சிரிக்கும்
என்னுடலும் ஓர்
அண்டம் தானோ?
அப்படியாயின் நான்
நான் மட்டும்தானா?
நான்தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம்தான் நானோ?
48. பயணத்தின் எல்லை!
காலப் பெருங்கடலில்
மிதக்கும்
வாழ்க்கைப் படகுகள்
ஒருநாள்
காலக்கடலுள்
மூழ்கிவிடும்.
எல்லையற்ற
இக்கடலை
வெற்றி கண்டவர்
யாரோ?
49. பயணங்கள்!
காலப் பெருங்கடலின்
கணப்பொழுதின்
ஒரு துளியாய்
இந்த ஞாலத்தில்
நாள் தோறும்
நடைபெறும் பயணங்கள்
என்றும் தொடர்வதில்லை.
எங்கோ முடிகின்றன.
[நன்றி: சிந்தாமணி]
50. சீடர்கள்!
- வ.ந.கிரிதரன் -
நாங்கள் கவிகள்.
புல்லின் நுனிகளில்
பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில்
தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்மறந்துடும் எங்கள்
நெஞ்சங்கள்
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில்
வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவனகளுக்கு
வழிகாட்டுதற்காய், கவி
வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!
அவலங்கள் கண்டு
சிந்தைகள் கனன்று
துடிக்கையிலே
புயலாகச் சீறியெழும்
நாங்கள் மிகவும்
அமைதியானவர்கள்.
இயற்கையாசானின்
இரக்சியங்களை அறிந்திட்ட
சீடர்களே நாம்.
ngiri2704@rogers.com |