வியாபகன் (இலங்கை) கவிதைகள்!
              
              ஒரு கிராதகக் கவியின் கதை!
              
              
              கடவுளை மறுத்தவர்கள் ஒன்று கூடிக்
              களிகூர்ந்திருந்த நாளொன்றில்
              நான் பிறந்தேன்
              உலகின் துர்ச்சகுனங்கள் பலவும் அரங்கேறிய சேதி
              வெகுசனங்களால் பேசப்பட்டதாக
              பிற்றைப் பருவங்களில்
              அநேக தடவைகள் சொல்லியிருக்கிறாள் அம்மா
              
              எந்தப் பெண்ணும் காமுறப் போவதில்லை
              எனது கரீய வசீகரத்தை என்பதாக
              ஆரூட நிபுணர்கள் குறித்து வைத்தார்கள்
              ‘fair and handsome’ முதலாளிகளிடம்
              தரகுக்கூலி பெற்றுக்கொண்டு
              
              மூளைத் திசுக்களில்
              சொற்ப முதிர்வு தொற்றிய வேளை
              கோட்டை கொத்தளங்கள் பற்றி
              பாட்டி சொன்ன மூதைச் சாகசக் கதைகளில்
              நிணமும் கபாலங்களும் நிறைவதை
              உணரத் தொடங்கிற்று மனம்
              
              வர்ணம் குலைந்த எனது கனவுகளில்
              தோன்றிக் கீச்சிடும் சோகக் குருவியின் பாடல்கள்
              வரையறை தகர்த்து
              பிரபஞ்சச் சுவர்களில் இருட்டாய் வழிந்தன
              
              ராஜவிசுவாசிகளின் சுளகுக் காதுகளை
              ஆயுள்வரைக்கும் நேரக்கூடிய
              அஞ்ஞாதவாச விதிப்பை
              அடிக்கடி நினைவூட்டி எச்சரித்தார்கள் நண்பர்கள்
              
              சதா கண்ணெதிரே உலவும் கடவுளோ
              இதய ஊசலிழையின் சுருள்களுக்குள்
              மறைத்துத் தீட்டப்பட்டிருக்கும்
              எனது மெல்லிய கவிதைகளை எண்ணி
              அஞ்சி அயர்ந்து செத்து மீள்கிறான்
              அன்றாடமும் அனுப்பொழுதும்.
              
              (23.11.2006)
              
              ஒற்றைக் கோப்பைக்குள் உறையும் சமுத்திரம்!
              
              பனியைக் குடைந்து செதுக்கிய 
              வெற்றுக் கிண்ணம் அப்போது நான்
              
              தாரைகளாய் விளிம்பில் வழிந்து 
              நீ என்னுள் இறங்கத் தொடங்கினாய் 
              
              காலம்,
              கரையாது நின்றதா?
              கண்ணிமைக் கணத்துள் கடுகித்தான் தீர்ந்ததா?
              
              உணராப் புலத்துள் நொடிகள் நகர
              என்னோடு உறைந்து ஒன்றிற்று
              நீ எனும் சமுத்திரம் 
              
              பேரலை வெகுளும் பிரளயம்
              ஒவ்வொரு துளியிலும் பெருலயம் 
              
              தூலமற்ற சுவடுகள் நீள, எல்லாம் நிகழ்ந்தது 
              
              மாயக் கருவியின் குருட்டுக் கண்கள்தாம்
              காலமென்று முடிவாயிற்று 
              
              இன்னமும், 
              இன்னமும்
              இன்னமும்
              நான் எனும் பனிக்கோப்பைக்குள் 
              உறைந்து கிடக்கிறது நீ எனும் சமுத்திரம் -
              யுகங்கள் பலநூறு தாண்டியும்,
              எந்தச் சூரியனுக்குக் கீழேயும்
              
              (07.04.2006) 
              
              சொல்ல நினைத்த என் வார்த்தைகளைப்
              பெருஞ் சுருக்கில் திணித்துக் கருக்குலைத்தேன்
              சொரியும் மழையின் நெடும் பெருக்கில்
              எண்ணச் சுழல்வை முழுதாய்க் கரைத்தொழித்தேன்
              இல்லை எனும் ஓர் பொருளாகிச்
              சூன்ய இருப்பின் முனைக்குள் உயிர்பதுக்கி
              ஏற்ற சுயத்தைச் சிதைக்காமல்
              இனி எவர்க்கும் இல்லை உயிர் வாழ்க்கை
              
              (28.08.2006)
              
              உடையும் வானம் - உடல்குறுகி
              உணர்வைத் தீய்க்கும் ஒளிக்குருவி
              கிடையிற் சரியும் மலைத்துண்டம்
              கீத ஒலியின் லயம்குலையும்
              அடையா முடிவின் இடமறிய
              அகழ்வேன் அகழ்வேன் ஆனாலும்
              தடயம் இல்லாப் பெருங்கனவின்
              தகவல் கசிந்தால் உயிர்பிரியும்
              
              (04.11.2006)
              
              சேய்மையிற் செறியும் கவிதை!
              
              1
              முதிர்ந்த இரவு
              நிலைத்த கணத்துளிகளை
              வலுக்கொண்டு இழுத்துச் செல்லும் சுவர்க்கடிகாரம்
              (அல்லது ஒற்றைப் பரிதியில் சுற்றித் திரியும்
              சிட்டுக் குருவிகள் மூன்றின் சிறைக்கூண்டு)
              புட்டி மது
              மின்குமிழின் தளர்ந்த ஒளிக்குப் பின்னான காலத்தில்
              பாயப் பதுங்கும் வெளிறிய இருள்
              ஜன்னலுக்கு வெளியே
              நூலேணித் தூரத்தில் தொங்கும் நிலவு
              பலநூறு ஒளியாண்டுகள் பயணித்தும்
              அண்மித் துலங்காத கவிதை
              (01.08.2006 அதிகாலை 01:05)
              
              2
              எல்லைகள் தென்படாத பெரீய பீடம்
              ஏதோவொரு மூலையில்
              முடங்கித் துயில்கிறது ஒரு பூனை
              அடுத்து நான் விழிப்பிக்க நினைத்திருக்கும் கவிதையைப் போல
              
              (01.08.2006 காலை 06:00)
              
              உனக்கு ஒவ்வாத பட்சணங்கள்! 
              
              நீ கடாசி எறிந்த கவிதையிலிருந்து
              குருதி வழிகிறது பார்
              சூட்சும ஒளி சுரக்குமிரவை
              புரண்டுறங்கி, பிருஷ்டப் புறம்காட்டி
              எள்ளுவதும் அலாதி உனக்கு
              மேலும், பாஷையின் நுண்புலக்
              கீற்றினில் குருடெறிந்து
              கவிதை என்பது கவிதைதானென்றும்
              இரவு என்பது இரவுதானென்றும்
              அலட்சியம் செய்து
              மீள உள்ளிறக்கிக் கொள்ளுகிறாய்
              பிசுத்து நுரைக்கும் போத்தலிலிருந்து
              ஒரு மிடறு பியரை
              (15.09.2006)
              
              ஊடிக் களித்துப் பிரியும் அந்நேரம்
              ஒருமுறை அனுமதித்திருக்கலாம் நீ
              ஈரம் செழித்த உனது இதழ்களில்
              எனது உயிரை விதைத்து மீள..
              
              காதலூறும் பரிதிக் கடுஞ்சுடர்
              உனது பார்வையில்
              பெருங்கடல் ஏழு, நதி சிலநூறு
              விழுங்கியும் தீரா விடாய்மிகும்
              ஒளிர்வு துலங்குமென் கண்களில்
              
              'விரகப் பிணியில் உழன்று சுவர்ந்து
              பிரசவி
              மறுபடி உனது மஹாகவிதை ஒன்றை' என்று
              செல்லமாக ஆணையிட்டுச்
              செல்கிறாய் தூர விடைபெற்று
              
              (05.09.2006)
              
              சரித்திரச் சாபம்!
              
              எங்களில் எந்தப் பட்டாம்பூச்சி அறியும்
              நினைவின் எல்லை கடந்து வாழும் காலத்திலிருந்து
              மீட்டெடுக்கக் கூடிய உண்மைகளை? 
              
              எப்படித்தான் இறக்கை அடித்தாலும்
              பின்னோக்கிப் பறக்க முடிவதில்லை
              பட்டாம்பூச்சிகளுக்கு
              
              இது தொட்டே நிகழ்ந்தது -
              பட்டாம்பூச்சிகளாயிருந்த நாங்கள்
              சபிக்கப்பட்டு மனிதர்களானதும்
              
              ஒவ்வொரு தலை உருளும் போதும்
              நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அந்தச் சாபத்தை
              ஞாபகம் கொள்கிறேன்
              
              மிக அந்நியமான மனிதர்களால்
              எங்கள் பட்டாம்பூச்சி உலகு பறிக்கப்பட்டது
              நாங்கள் கொண்டாடிய நிறத்தின் அழகு
              நிராகரிக்கப்பட்டது
              
              பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருந்து
              இறங்கிய அவர்களிடம்
              எம்மை நிர்மூலம் செய்வதற்கான
              யந்திர மனமும் முடிவில்லா யுக்திகளும் இருந்தன
              
              இதமான ஸ்பரிசங்களின் மூலம் அவர்கள்
              எங்கள் உணர்கொம்புகளை நீவுவதாகச்
              சிலர் நம்பியிருக்க
              ஈற்றில் அவற்றை நெரித்துத் தின்றார்கள்
              
              எம்மைப் பற்றிய உண்மைகளைச்
              சூறையிடும் வல்லபம் வாய்த்திருந்தது அவர்களுக்கு
              தந்திரமாய்ச் சூறை முடித்த பின்பு
              குருதியின் நிறத்திலான குரோதங்களை
              வரங்கள் எனும் தோரணையில் வழங்கிவிட்டு
              விடைபெற்றுக் கொண்டார்கள்
              
              களையப்பட்ட எமது இறக்கைகளை
              மறைக்கப்பட்ட எமது சரித்திரத்தை
              எம்மைப்பற்றிய உண்மைகளைக்
              காலத்தை அகழ்ந்து கண்டடைய வேண்டியிருக்கிறது இப்போது
              
              (05.07.2006 அதிகாலை 1.30)
              
              மதர்த்த விழிகள் உகக்கும் ஒளிப்பெருக்கு
              எதிரியின் துவம்ச சபதம்
              எழுதி முடித்து நிமிர்கையில்
              புருவ உயர்வில் கொழிக்கும் பிரதாப மிடுக்கு
              தெள்ளிய வார்த்தைகள்
              மழலைக் குழாத்தை வாரி அணைக்கையில்
              முலைகள் இல்லாத் தாயின் சாயை
              நிலத்தை வகுத்து விதித்த ரேகைகள்
              நுணுகி இம்மியும் பிசகாப்படிக்கு
              திசைக்கொரு கூ(ற்)றாய்
              எம்மை ஆள்கிறார் மாவேந்தர் இருவர்
              அவர்தம் அரியணைகளின் கீழிருந்து கிளம்பும்
              நிணநெடி நீக்கத்
              தூவப்படும் சுகந்தப் பொடியைப்
              பயபக்தியோடு சேகரித்துக் கொள்கின்றன
              செய்திப் பத்திரிகைகள்
              (05.09.2006)
              
              தாப தாண்டவம்!
              
              இரவின் கேளாச் செவிகளைத் துளைக்கும்
              முரட்டுக் கவிதையெனவே தொடரக்
              கட்டியம் முழங்கிற்று
              வலிந்து வந்தென்னை மோதிய காற்று
              
              விளக்கு நூற்றாயிற்று
              என்றுமில்லாத பதைபதைப்போடு
              காட்டுத்தனமேறிச் சுற்றுகிறது மின்விசிறி
              
              எனக்குள் இருக்கும் ஒளியுடலை உருவி
              உலவ விடுகிறேன் அறையில்
              வெளிச்சம் வேண்டி
              
              சக்தியைப் பிரிந்த உக்கிர தாபத்தோடு
              தாண்டவக் கூத்தாடுகிறது ஒளியுடல்
              
              இரவின் நிறம் கரியது என்ற
              பேயர்களைப் பந்தாடும் ஆவேசம் அதற்கு
              
              கணக்கிட முடியாத கணங்களின் இடைவெளிகளில்
              தோன்றி மறையும் நினைவுகள்
              நீர்ச்சுழியின் வளையங்கள் போல
              
              விடியல்வரை நீளப்போகும் எனது கவிதை
              நர்த்தனத் தாளக்கதியை அனுசரித்து நகர்கிறது
              
              ஒரு மொழிக்குள் கூடிவராத வேட்கையைத்
              தம்முள் புதைத்த எழுத்துக்கள்
              சிந்திக் கிடக்கின்றன அங்கும் இங்குமாய் 
              
              (07.07.2006 இரவு11:49)
              
              ஒப்புதல்!
              
              குப்புற விரித்து வைத்த புத்தகம்
              கிடக்கிறது ஓர் ஓரமாய்
              இருளையும் ஒளியையும் இருவர்ணங்களாக்கிச்
              சாளரம் சாய்த்த ஓவியம்
              மல்லாந்திருக்கும் என் மார்பின் மீது படிகிறது
              
              எங்கெங்கோ எரியும் சுவாலைகள்
              எப்படி எனது அறைக்குள்ளும்
              புகையை மூட்டின?
              
              மழை ஓய்ந்த பொழுதில்
              ஓலை நுனிவழுவி ஒழுகும் துளிபோல
              உள்ளக் கணுக்களை ஊடுருவி
              உயிர்ப்பொறிக்குள் நுழையும் இது என்ன?
              
              நான்
              காலத்தின் இழைகளால் பின்னப்பட்டிருக்கிறேன்
              காலம்
              எனது அயர்ந்த விழிகளுக்கிடையில்
              ஆறி அடர்ந்து பின் அதிர்கிறது
              
              தீரா வெறிகொண்டு அலையும் விலங்குகள்
              தின்று மீய்த்த எச்சங்களாய்த் தெரிகின்றன
              நாட்காட்டியின் கிழிக்கப்படாத பக்கங்கள்
              
              பொத்தி மூடிய எனது கைகளுக்குள்
              ஒரு கொலையாயுதம்
              அல்லது
              இருளின் திரைகளிலிருந்தான வாழ்வின் மீட்புப்பாடல்
              இருக்கலாம் எனச்சந்தேகிக்கிறார்கள் இவர்கள்
              புதைகுழிகளுக்குள் உறங்கும்
              நேற்றுவரை என்னைப்போலவே இருந்த
              மனிதர்கள் பற்றிய நினைவுத் துயர்தவிர
              எதுவுமில்லை என்னிடம் பெரிதாய்
              
              (12.08.06)
              
              பச்சை உதிரம்!
              மூளையை உருக்கி ஒழுக்கும் மின்னல்
              பிசையும் மனதுள் இசையின் நுழைவு
              புகையும் திரியாய்ச் சுருளும் காமம்
              தெளியா ஞானம்
              தீரா வேட்கை
              மாய்க்க மாய்க்கச் சவமாய் உயிர்க்கும்
              முடிவிலி வாழ்வு
              இடறி விழுந்த தெருவில்
              இல்லை நான்
              
              (31.08.2006)
              
              viyabahan@gmail.com 
              http://viyabahan.blogspot.com/ 
              
              
              புதியமாதவி (மும்பாய்) கவிதைகள்!
              
              காற்று எழுதும் ஹைக்கூ!
              
              பனிப்படர்ந்த மலையடிவாரத்தில்
              பெயர்த் தெரியாத
              மலர்களுக்கு நடுவில்
              பச்சையம் இழந்த 
              உதிரும் இலைகளில்
              எழுதப்பட்டிருந்தது
              இதுவரை
              காற்று தீண்டாத
              காதலின் ரகசியம்.
              
              உதிர்ந்த இலைகளை
              மரத்தில் ஒட்டமுடிவதில்லை
              என்றாலும்
              மண்ணில் புதைந்தச் சருகுகள்
              மரத்தில் துளிர்க்குமென
              காற்று எழுதுகிறது
              ஒரு ஹைக்கூ..
              
              *
              
              ஆனைபலம்!
              
              ஆனைகளின் பலம்
              பலவிதம்
              பாசம், காதல், குடும்பம்,
              உறவுகள், பிரிவுகள்
              எதிலும் கண்ணீருடன்
              கலங்குவதில் 
              பெண்களைப் போலவே 
              ஆனைகளும் இருப்பதாக
              அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
              அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
              கால்களைப் பரப்பி
              மல்லாக்க விழுந்த ஆனைகள்
              பெண்களைப் போல
              தானே எழுந்து நடப்பதில்லை என்பதை.
              
              *
              மடிப்பிச்சை!
              
              சூரிய மண்டலத்தைவிட்டு
              விலகிப்போனது பூமியின் பயணம்.
              புதிய சூரியன்
              புதிய நிலவு
              நீண்ட இரவு
              நீண்ட பகல்
              ஆசைப்பட்ட
              எல்லாம் கிடைத்தப்பின்னும்
              எதை வேண்டி
              சூரிய வம்சத்து
              கர்ண பரம்பரையிடம்
              பிச்சைக் கேட்கிறது
              பூமியின் மடி?
              
              *
              
              puthiyamaadhavi@hotmail.com
              
              
              
              மனம்!
              ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய் 
              என்னுள் நானாகி பிறரில் நானாகும் 
              எதையும் காண எப்படியும் காண 
              எங்கோ ஜனித்;ததொன்றை 
              எண்ணித்தொலைய கருமம் 
              இங்கே நிகழ்வதைத்தான் 
              என்றோ மறந்துபோகும் 
              நுட்பத்தில் நுட்பமாய் 
              நுணுகிப் புகுந்து பரவி 
              இயற்கையும் செயற்கையுமாய் 
              எதிலும் நிறைந்து வளரும் 
              கங்கையொடு கழிவு 
              நன்மையொடு தீமை 
              சோலையும் பாலையும் 
              சோகமும் மகிழ்வும் 
              எண்ணச் சுடரில் 
              எகிறிவிட்ட பொறியாய் 
              எல்லாமும் நிகழும் 
              அதுவே தோற்றுவாய்! 
              
              
              சொல்லிவிடு!
              படித்தது போதும்: எழுது 
              மற்றவர்களுக்கு ஏதாவது விஷயஞ் சொல் 
              உன் கருத்தை 
              உலகுக்குத் தெரிவி 
              ஓங்கிக் குரலெழுப்பு 
              உட்கார்ந்து போகாதே 
              ஏட்டுச்சுரக்காய் 
              கறியாய் உதவட்டும் 
              அவநம்பிக்கை போக்கி 
              ஆத்மசுகம் தேடு 
              அஞ்சுக்கு ரெண்டு 
              பழுதிருக்காது 
              முடிவுஅனைத்தும் 
              மூளைக்கே சொந்தம் 
              பிறருக்கும் அதுபோலே 
              ஆனாலும் 
              நீ சொல்வதைச் 
              சொல்லிவிடு 
              இறக்கிவிட்டோம் என்ற 
              எண்ணமேனும் மிஞ்சும் 
              
              அம்மா!
              கங்கையானாலும் 
              காவிரியானாலும் 
              எங்கோவோர் மூலையில் 
              ஏதோவோர் மலையிடுக்கில் 
              ஒரு சின்னதான ஜனனத்தில் 
              உயிர்த்து எழுந்து 
              தவழ்ந்து இறங்கி 
              பல்கிப்பெருகும் 
              புகுந்த இ;டத்தில் 
              முற்றிலும் 
              புதிதாய் 
              பூமியில் பரவும் 
              போகுமி;டமெல்லாம் 
              தாகம் தணித்து 
              காணும் நிலமெல்லாம் 
              கசிந்து செழிப்பாக்கி 
              புவியை வளமாக்கும் 
              ஒரு ஜீவநதி 
              
              தலைமை!
              தேசம் முழுதும் 
              குப்பை கூளம் 
              சுத்தம் பண்ண நினைச்சுத்தான் 
              துடைப்பத்தைக் கொண்டு வச்சோம் 
              துடைப்பமே குப்பையாச்சு 
              தூசிகளும் அதிகமாச்சு 
              தேசம் முழுக்க 
              குப்பை கூளம் 
              தேவை ஒரு புதுத்துடைப்பம்.
              
              
              ushadeepan@rediffmail.com
              - றஞ்சனி 
              
              
              
              உன்கரம் பற்றி 
              உன்தோழ் சாய்ந்து 
              ஏனென்றுதெரியாமல் அழவேண்டும் 
              உன்தலைகொதி உன்கண்களில்
              முத்தமிடவும்
              உன் அணைப்பில் உறங்கிப்போகவும்
              உன் முத்தம் எனை எழுப்பவும்
              அதிகாலை செய்திகளை
              உன்மடியிருந்து அறிந்துகொள்ளவும்
              உலகை உன்னோடு ஒருதடவை
              சுற்றிடவும்
              ஆசைகள் நிஜமாகும் பொழுதுகளை
              தேடியே போகிறது 
              நாட்களும் வயதும்..
              எனதான நீ எங்கேயோ.......
              தேடுகிறேன் நினைவுகளில்
              காத்திரு என்றாவது 
              சொல்லேன் வண்ணங்களில் 
              ஏனென்று தெரியாத 
              உன் மெளனத்தில் 
              அணைந்து கொண்டிருக்கிறது
              என் காதல் தீ.
shanranjini@yahoo.com
              சேமித்து 
              வைத்தது!!
              
              - இமாம்.கவுஸ் மொய்தீன் -
              
              
              படிக்கின்ற காலத்திலேயே
              இலட்சாதிபதி ஆகிவிட
              இலட்சிய கனவுகள்!
              
              பட்டக் கல்வி முடித்து
              ஈராண்டு அனுபவம் பெற்றதும்
              தேடிவந்தது வெளிநாட்டு வேலை!
              
              இலட்சத்தின் இலட்சியத்தை
              நான் அடைந்த போது 
              இலட்சம் தன் மதிப்பிழந்தது!
              
              வானமே எல்லை!
              முயற்சி திருவினையாக்கும் -ஆகவே
              கோட்டீஸ்வரன் ஆகும் ஆசை!
              
              கோடியை நான் எட்டிய நேரம்
              கோடிக்குக் கோடி
              கோடியும் மதிப்பிழந்தது!
              
              தாயகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்
              முயற்சி உழைப்பு தியாகம் 
              அனைத்தும் விரயமாகப்பட்டது!
              
              இருப்பினும் மனதில் அமைதியும் திருப்தியும்
              'சம்பளத்தைத் தான் சேமித்திருக்கிறோம்
              சாபத்தை அல்ல'!
              
              drimamgm@hotmail.com
              ஈழநிலா 
              (இலங்கை) கவிதைகள்!
              
              நெருப்பாய் எரியும் வாழ்வு!
              
              ஈழநிலா 
              
              
               கல்வியை 
              விற்கிறான் கடையிலே!-இங்கு
கல்வியை 
              விற்கிறான் கடையிலே!-இங்கு
              கற்பவன்; நிற்கிறான்; படையிலே!
              கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
              கண்டு துடிக்குதே இடையிலே…! 
              
              பேயர சாளுது நாட்டிலே!-இன்று
              பேனையை போடுறார் கூட்டிலே!
              கணவனும் மனைவியும் கோட்டிலே!-கொண்ட
              காதலால் வந்தது றோட்டிலே…!
              
              நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
              நிம்மதி தேடுறார் குடியிலே!
              ;வாழ்வு நிலைப்பது “படி”யிலே!-இன்றேல்
              வாடிட வேண்டுநாம் அடியிலே!
              
              அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
              அகதியாய் நனைகிறார் மழையிலே!
              வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
              வாக்கினால் வந்தெதம் தலையிலே!
              
              சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
              சுயநல முள்ளது மூச்சிலே!
              வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
              வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!
 
              நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்!
              
              பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!
              படுபாவிகளி களினாலே அழியுதடா சாமி!
              யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’! 
              யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து’ காமி!
              
              நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி’யென் றடைப்பார்
              நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!
              காலாற நடந்தாலே காணமல் போவோம்!
              கண்ணிவெடி ‘கிளைமோரில்’ கால்பறந்து சாவோம்!
              
              கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!
              கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!
              ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!
              எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!
              
              பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!
              புல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!
              ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்
              அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!
              
              எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!
              எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!
              அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்’ உரித்தான்!
              ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!
              
              ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!
              ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!
              பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!
              பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்!
              
              kavingerasmin@yahoo.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




