- திலகபாமா -
              
              கவிதைக்குள் கதை.
              சிறைகள் பெயர்த்த கதை.
              
              முக்காடிட்ட தள்ளாமைக்குள்
              மூழ்கியிருந்த உருவம் ஒன்று
              உள்ளங்கை தீ வடுவுக்குள்
              கரை தேடுது நினைவுகளோடு இன்று.
              
              சூடிழுத்தது உன் அம்மாவா?
              சொல் பேச்சு கேட்காததாலா
              கோடிழுத்த என் கேள்விக்குள்
              பெருமூச்சு தனை விட்டாள்?
              
              பாட்டி வடுவுக்குள் வீழ்ந்து
              நினைவுகள் எடுத்துப் போட்டாள்.
              
              கன்னி வாடி ஜமீனில் 
              கன்னியாய் தானிருந்த நேரம்
              கோட்டையுள்ளே உடையவரும்
              வாயில் வெளியே முதலையாய் 
              உள்நுழைய காத்திருந்தவரும்
              
              பிடிபட்டால் நிழந்து விடும் 
              சூறையாடலுக்குப் பயந்து
              மூட்டிய தீயில்புகைக்கு பதில்
              சூழ்ந்திருந்தது பெண்ணினம்.
              
              வாயிற்கதவு உடைபட
              வேக தீயில் வீழ்ந்தனர் வேகமாக.
              
              வீழ்ந்த உடல்கள்
              காற்றும் நுழைய விடாது மறுக்க
              உயிர் உடல்கள் தின்னவெறுத்து
              பெண்ணுடல்கள் அணைக்கமறுத்து
              அணைந்து போனது தீ.
              
              விருப்பமில்லா பெண்களை
              தழுவ விரும்பாது தானே தீக்குளித்தது தீ?
              
              கரித் தழும்போடு எழுந்தவர்கள்
              விறகோடு விரட்டினர் வெள்ளையர்களை.
              தருணங்கள் உணர்த்திய விடுதலை
              வடுவோடு சொல்லிப் போன பாட்டி.
              
              மூழ்கிய நான் திடுக்கிட
              இருட்டுற நேரத்துல என்ன வாய்ப்பேச்சு
              போகிற வழியில் எண்ணெய் வாங்கு
              வீடு பெருக்கு விளக்கு பொறுத்து
              வைச்ச உலையை பார்த்துக்கோ
              குலசாமிக்கு விளக்கு போட்டு வந்திடுறேன்
              சொல்லிப் போன அம்மா குரலில்.
              
              அன்று கைவந்த 
              விடுதலை உணர்வைஉணர முடியாது
              தேடுகின்றாள் பாட்டி.
              வீடு வெளிச்சமாய் சுத்தமாய்
              பெண் வாழ்வு யாரும் துடைக்க முடியா
              அழுக்குகளோடு
              விடுதலை இல்லா உழைப்போடு.
              
              சூரியனும் துளைத்து உள் வர முடியா காடு.
              ஆரியன் உள்நுழைந்து திருத்தி வைத்த வீடு.
              கம்பி வெளி கிளி உலாவும் காற்று வெளிக் கூடு.
              பூனைகளிடமிருந்து காப்பதாய் கோவலன்களின் கூப்பாடு.
              
              வானவெளி சிறகு விரியும்
              மாதவிகளில் பறத்தல் கோவலன்களுக்காக.
              தத்தி நடை பயின்று கூண்டுச்
              சிறையிருக்கும் சீதைகள் இராமன்களுக்காக.
              வெளிகளோ உள்ளிருப்புகளோ
              மாறுவதெப்போ அவரவர்க்காக?
              மாறிய தருணத்தில் சாத்தியமான பொழுதுகளில்
              களிப்பு கை சேரும் விடுதலைக்காக.
              
              கொத்தப் போன தானியத்துள்
              சிறையிருந்தது விருட்சம்.
              தனக்குக் கிடைக்காத விடுதலை
              தந்து விட கிளி கொண்டது விருப்பம்.
              கூண்டுத் துளை வழி
              வழிய விட்டது தானியத்தை.
              தினம் தோறும் வார்த்தது
              தான் குடிக்க இருந்த நீரை.
              
              விதை வெடிச்சு சிறகாச்சு.
              வேர் விட்டு செடியாச்சு.
              கிளை வெடிச்சு மரமாச்சு.
              வேரின் ஊன்றலில் ஒரு நாள்
              கூண்டு பெயர்ந்து தூள் தூளாச்சு.
              வான வெளி இன்று கிளிக்காச்சு
              மாதாவி கண்ணகி எல்லை இல்லாதாச்சு.
              
              விடுதலை என்பது 
              விட்டு விடுதலையாவதா?-குடும்பம்
              கட்டுடைத்து போவதா? இல்லை நிதம் 
              சோறுபடைத்து மூழ்குவதா?
              
              விடுதலை என்பது
              பெண்ணை உணருவதா?-இல்லையவள்
              தன்னை உணருவதா? மனித இருப்பின்
              தன்மை உணருவதா?
              
              
              விடுதலை என்பது 
              வெளியேற உழைப்பதா? நான்மட்டும்
              தப்பிக் கொள்ள நினைப்பதா-வருங்காலம் 
              வெளியேற வாசலுமமைப்பதா?
              
              நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த
              நேற்று உழைச்சாச்சு.
              பற்றிய நெருப்பு கனலாய் எரிய
              இன்று கனன்றாச்சு.
              தொட்டது பூவாய் மலர்ந்திடவென்று
              விதைத்தது நானாச்சு.
              பட்டது போக உழைத்த பலனை
              பார்க்கும் நாளாச்சு.
              
              நாஜிகளின் வன்கொடுமை வாசலில்
              ஒரு வாசகம்
              வேலை செய்தால் விடுதலை யடைவாய்.
              
              விடுதலை அர்த்தம் மரணமென்று
              அவர் சொன்ன கதை பழம்பொருளாச்சு.
              
              செக்கிழுத்தும் சிறையிருந்தும்
              கப்பல் விட்டும் விதேசி விட்டும்
              போராடிய காலங்கள் போயாச்சு.
              விடுதலை அர்த்தமின்று வேறாச்சு.
              
              சுருங்கிச் சும்மாடாய் போன உலகத்திலே
              மனம் விரியவென்று வாய்ப்பிருக்க
              திறந்த பலகணிகள் வழியாக
              உள்நிழையுது பல அரக்கிறுக்கு.
              
              நீண்ட இரவிருக்கு குளிரிருக்கு.
              குடும்பஅமைப்பில்லா மேலைத் தேயத்திலே
              மன வக்ரமிருக்கு வடிய விடும் கலையிருக்கு அதை
              அள்ளித் தெளிக்குது கீழைத் தேயத்திலே
              நீண்ட மரபிருக்கு வலுவிருக்கு
              காவியங்கள் தந்த நம்ம தேசத்திலே அதை
              மறந்திருக்கு புடிக்குது புதுக்கிறுக்கு
              விற்க வலை வீசும் உலகமயமாக்கலிலே.
              
              பெண்உடல் பண்டமாகுது,நுகர் பொருளாகுது,
              இலக்கியத்துள்ளும் நீலிக் கண்ணீர் வடிக்குது
              வணிகமயமாக்கலிலே.
              சோம்பலிருக்குது, பீடம் தேடித் திரியுது,
              ஆளைப் போட்டு ஏறி மிதிக்குது
              உழைக்க மறந்த வீணர் கூட்டத்திலே.
              
              ஆக்ரமித்திருந்த காலச்சுவடுகள்
              போலிகளாய் உயிர்மைகள் போர்த்த உடல்கள்
              விற்க வீசும் வலையிலே
              விழுந்திடாது காக்கனும் பெண் உழைப்பு.
              
              வெள்ளித் திரை ராமகிருஷ்ணன்களை
              வேரறுக்கட்டும் சீதை ராதைகள்
              கோபியர்கள் சூழத் திரிந்த கண்ணன்களுக்கு
              தந்து போகட்டும் தனிமைச்சிறையிருப்பை ருக்மணிகள் 
              பச்சைத் தமிழன்கள் பச்சை தேவதைகளுக்கு
              முந்தானை விரிக்கையில் முத்துலெட்சுமிகள்
              சீறி எழட்டும் 
              கள்ளத்தனம் உடுத்தி திரியும் மனுஷ்ய புத்திரன்கள்
              புதிய தாண்டவத்திலே புறம் காட்ட
              பெண்ணின உழைப்பு 
              உணரத் தரும் விடுதலை உணர்வு
              
              உழைப்பை சொல்லனும் உரத்துச் சொல்லனும்
              உழைப்பு தரும் விடுதலையைகாணச் செய்யனும்
              உண்மை சொல்ல சொல்லனும்
              மண்ணோடு மக்களை நினைக்கச் சொல்லனும்
              இலக்கியம் மண்ணில் வேரூண்றி கிளைக்கச் சொல்லனும்
              
              விடுதலை என்பது உணர்வு.
              உணர்வு தருவது உழைப்பு.
              உழைப்பு தரும் தனித்துவம்.
              தனித்துவம் தரும் விடுதலை.
              
              விடுதலை கோசமல்ல.
              விடுதலை போராட்டமல்ல.
              விடுதலை உனக்கானதல்ல.
              விடுதலை அவரவர்க்கானது.
              
              அவரவர் உழைப்பில் சாத்தியமாகும்
              சத்திய விடுதலை எல்லாருக்குமானது.
              
              mathibama@yahoo.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




