'கவிதை'ப்பூச்சி!
- தநுசு (ஜப்பான்)-
ஊரால் ஒதுக்கப்பட்ட அந்த பூங்காவின்
உயர்ந்த மரங்களினூடே
நீளமாய் போடப்பட்ட மரபெஞ்சில்
ஆசுவாசமாய் ஒரு காலை நீட்டி
அணுசரனையாய் மறு காலை மடக்கி
ஒய்யாரமாய் சாய்ந்து உட்கார்ந்து
கைகளை கோர்த்து பிடரியில் சேர்த்து
உடம்பை வளைத்து நெட்டி முறித்து
கண்களை மூடி லயித்த நிலையில்
சில்லென்று வருடிச் செல்லும் காற்றிலும்
எங்கும் ஏகாந்தமாய் நிறைந்த நிசப்தத்திற்கு
இசை கூட்டி தன் துணையை எனக்கு உணர்த்தும்
மரங்களின் சலசலப்பிலும் என்னை கரைக்கையிலே
என்னுள்ளே ஏராளமாய் எழும் கவிதைகள்,
எழுத்தாய் வடிக்க நினைக்கையில்
எங்கோ சென்று மறைகின்றன;
கண் முன்னே வர்ணஜாலம் காட்டி கவர்ந்திழுத்து,
நாம் கவர்ந்திட நினைக்கையில் 'டாடா' காட்டி
மறையும் பட்டாம்பூச்சியை போல.
sunofsoil@gmail.com