- பட்டுக்கோட்டை தமிழ்மதி -
உன்
மூச்சும் பேச்சும்
முடியவில்லை.
உடல்
மண்ணுக்கு என்பார்கள்
ஆனால்
உன் உடலே
உன் மண்தான்.
தாய் மண்ணில்
உன்னினம் படும் வலியினும்
நோயினால்
உன் உடல்படும் வலி
ஒரு
கூழாங்கல் எனச்சொல்லி
நீ
உயிரோடு போராடினாய்
உன்னின
உயிர்களுக்காக போராடினாய்...
போரிலும் சமாதானம்
எழுதினாய்
'விடுதலை கேட்டு
சிறைபட்ட இனம் உனது.
சிறையில் உனக்கு
கைதிகள் எழுதுகிறார்கள்
கண்ணீரஞ்சலி.
உன்
மண்ணில் மக்களும்
கைதிகளாய் எழுதுகிறார்கள்
கண்ணீரில் அஞ்சலி.
உன்
உடல்நோய்க்கு மருந்துதேட
பாதைவிடா மண்ணிலிருந்து
அகதியாய்
கடல் கடந்தேறிதான்
காப்பாற்றிக் கொண்டாய்.
அன்றைக்கு
அனுப்பிவைத்த அந்த
கரையை காண
அப்புறம்
அடிக்கு அடி வந்து நின்றாய்.
உலகெலாம் ஒலித்த
தேசத்தின் குரல்
நீ.
உன்
மண்ணை பேசும்
மண்வாசம் மாறாத பேச்சோடு
ஈழத்து மண்ணாய்
இருக்கிறது உன் உடல்.
உன்
மூச்சும்பேச்சும்
முடியவில்லை.
உன் துணைவி
உன் முகம்தொட்டு கதற
கண்மூடிக் கொண்டிருக்கிறாய்.
உன் கண்மூடலுக்காக
குரலிழந்து
ஒரு நிமிடம்
மெளன அஞ்சலி
மறு நிமிடம்
உன்னினத்தின் உயிர்ப்புக்காக
குரலெழுப்பும்
உன்
குரல் வளை...
thamizhmathi@gmail.com