உரிமையின் பரிசாகக் கிடைத்த
கறுப்பு யூலை...!
- த.சரீஷ் (பாரீஸ்) -

  மரணங்கள் மலிந்தமண்ணில்
  உடலங்கள் எரிந்துபோக
  அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
  தினம்தினம்... 
  தொடர்கிறது கறுப்பு யூலை
  
  புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...
  துயரங்கள் சுமந்துகொண்டு 
  தொடரும் காயங்களுக்கு நடுவில்
  நாளைய பொழுதின் 
  விடிவுக்காக ஏங்கும் 
  ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...!
  
  நீதி 
  என்றைக்கோ செத்துப்போனது 
  மனிதனேயம் 
  எப்போதோ தொலைந்துபோனது 
  அன்றில் இருந்து...
  நியாயத்தின் அர்த்தம் 
  என்னவென்றே தெரியாத ஆட்சியில்
  இன்றுவரை... 
  தொடர்கிறது கறுப்பு யூலை
  
  தொப்புள்கொடி உறவுகளின் 
  தலைகள் அறுபட்டு
  உடல்வேறு தலைவேறாய் 
  தூக்கி எறியப்படும்
  
  பிஞ்சுகளின் உடலங்களில்
  தோட்டாக்களால்... 
  துளைகள் இடப்பட்டு
  தூக்கில் இடப்படும்
  
  தாய்குலத்தின் 
  உயிரிலும் மேலான கற்ப்பு 
  களவாடப்பட்டு உடல்மட்டும் 
  வீதியில் வீசப்பட்டிருக்கும்
  
  மரணங்கள் மலிந்தமண்ணில்
  உடலங்கள் எரிந்துபோக
  அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
  தினம்தினம்... 
  தொடர்கிறது கறுப்பு யூலை
  
  அமைதியின் பரிசாக மரணம்
  அகிம்சையின் பரிசாக மரணம்
  பொறுமையின் பரிசாக மரணம்
  உரிமையின் பரிசாக்கூட மரணம்
  
  தவறேதும் இல்லாத 
  தண்டணைகளாக...
  மனிதப்புதைகுழிகள்
  வங்காலைத் துயரங்கள்
  அல்லைப்பிட்டி அவலங்கள்
  இன்னும் சொல்லமுடியாத சோகங்களாய்
  இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை
  
  வாழ்க்கைபற்றி 
  எதுவுமே அறியாத பிஞ்சு
  வாழவென்று...
  நேற்றுப்பிறந்து இன்று மடிந்துபோகும்
  
  எதிர்காலக் கனவுகளோடு
  எங்களின் நாளைய தலைவர்கள்
  இன்றைய சிறுவர்களாய் 
  பலியாகிப்போவார்
  பத்தோடு பதினொன்றாய்...!
  
  வாழ்வதற்கு ஏங்குகின்ற 
  ஒரு இனம்
  கலையும் பண்பாடும் 
  மிகநீண்ட வரலாறும்
  சொந்தமாகக்கொண்ட ஓர் இனம்
  சர்வாதிகார அரசின் இரும்புக்கரங்களால்
  நசுக்கப்பட்டு...
  éவும் பிஞ்சுகளுமாய்
  தாயும் குஞ்சுகளுமாய்
  இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை
  
  புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...
  துயரங்கள் சுமந்துகொண்டு 
  தொடரும் காயங்களுக்கு நடுவில்
  நாளைய பொழுதின் 
  விடிவுக்காக ஏங்கும் 
  ஒரு இனமாகத்தான் 
  இன்றும் நாங்கள்...!
  
  இருப்பினும்...
  எவராலும் அழிக்கமுடியாத இனமாய்
  பல்லாயிரக்கணக்கில்
  வேர் ஊண்றி விழுதெறிந்து
  பாரெங்கும் பரவியிருக்கிறோம்...!
  
  காயம்பட்டு... 
  இரத்தக்கறைபடிந்த 
  எங்கள் உறவுகளின் 
  கன்னத்தைத்துடைத்து அணைத்திடவே 
  நாங்கள் இங்கு இருக்கிறோம்...!
  
  பாசங்கள் அறுபட்டு
  எங்கேயோ தொலைந்துபோன 
  உறவுகள் அல்ல நாங்கள்...!
  
  தொலைவினில் இருந்தாலும்
  தொப்புள்கொடி அறுபடாத
  குழந்தைகளாய்த்தான் நாங்கள் 
  இங்கு இருக்கிறோம்.
  
  அதனால்த்தான்... 
  அல்லைப்பிட்டியில் அடிபட்டால்;
  ஐரோப்பாவில் வலிக்கிறது...!!!
  
  இந்த...
  தொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்
  அகலங்கள் இன்னும் விரியும்
  இன்றைய 
  மரணத்தின்வாழ்வு மறையும்வரை
  நாளை... 
  "கறுப்பு யூலை" மரணங்கள் முடியும்வரை
  
  த.சரீஷ்
  பாரீஸ் 23.07.2006
  poet.sharish@gmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


