| சர்வதேச மகளிர்தினக் கவிதை! பெண்!
 - மாதுமை -
 
  
 தேவையான பொருட்கள்:ரத்தமும் நாளமும் கொண்ட சதைப்பிண்டம்
 இரு முலைகள்
 ஒரு யோனி
 இதயம் (அவசியமென்றில்லை)
 
 செய்முறை:
 
 அடக்கி வைத்து பொத்தி வளர்த்து
 சமூகப் பார்வைக்காய்
 'கற்பு' பூசி
 சொல்வதைக் கேட்கும்
 கேட்பதைச் செய்யும்
 பொம்மையாகலாம்.
 
 தனிப்பட்ட விருப்புகளை
 பட்டாம்பூச்சிக் கனவுகளை
 ஒட்ட அறுத்து வெட்டி எறிந்து
 திருமண சந்தைக்கென்று
 குல சாஸ்திரப்படி
 வளர்த்துக் கொள்ளலாம்.
 
 உடலுக்கு சேலை
 தலைக்குப் பூ
 நெற்றிக்குப் பொட்டு
 ஆங்காங்கே தங்கம்
 'இவைதான் உன் அடையாளம்' என
 சொல்லிக் கொள்ளலாம்.
 
 படுக்கை விரித்து
 குட்டி ஈன்று
 பாலூட்டி
 சந்ததி காப்பதே
 இப்பிறவிப் பயனென்று
 ஓதிக் கொள்ளலாம்.
 
 பரிமாறும் முறை:
 
 தாலிகட்டி புணரலாம்
 விரும்பித் தருவாள பருகலாம்
 காசு கட்டி புசிக்கலாம்
 அகப்பட்டால்
 வன்புணர்ந்தும் குதறலாம்
 உடல்பார்த்து ருசிக்கலாம்
 முகம் பார்த்து வையலாம்
 வேண்டுவன் செய்யலாம்
 உருமாறும் அவள் களியென...
 எச்சரிக்கை:ஆயிரமாயிரம் வலிகளின் தீயில்
 'அவள்' கனன்று கனன்று எரிகின்றாள்...
 அன்றைய
 'சிவனார் பாதி உமையாக'
 இன்று
 சம உரிமை கேட்கின்றாள்!!!
 
 mathumai.sivasubramaniam@students.unibe.ch
 |