- தநுசு (ஜப்பான்)-
கடந்த சில வருடங்களாய்...
அலுவலக சுவர்களுக்குள்
அடங்கிப் போனதாய் வாழ்க்கை !
காலநேரம் பாராமல்
கணினிகளுடன் நடத்திய போராட்டத்தில்
காணாமற்போன மனித சந்திப்புகள் !
அன்றாடம் பார்த்து சலித்துப் போன
அதே முகங்கள்;
அக்கம் பக்கத்து நாற்காலிகளில் !
மூளையின் கற்பனை ஊற்று வற்றி
காய்ந்து போனதாய் ஓர் உணர்வு !
புதிய தோண்டுதலில்தானே ஊற்று !
புதிய சந்திப்புகளில்தானே புது எண்ணங்கள் !!
புதிய எண்ணங்கள்தானே கற்பனை !!!
அவசர ஓட்டங்களில்
அவதானிக்கத் தவறிய
அழகின் சிரிப்புகள் !
சமுதாய நீரோட்டத்தில் கலக்காது
கிணற்றுத் தவளையாய் ஒரு நெடிய பயணம்;
கிணற்றுக்குள்ளேயே !
பணப்பை கனத்தும் கனம் குறையா
மனப்பைகள் !
புதிய முகங்களின் தேடலில் ஒரு முயற்சியாய்
புத்தனாய் கிளம்பிவிட்டேன் நகர்வலம்...
ஆ ! அத்தனையும் புதிய முகங்கள் !!
சிறியதும் பெரியதுமாய்
நெட்டையும் குட்டையுமாய்
எத்தனை கோடி உருவங்கள்
இறைவனின் படைப்பில் !
ஒவ்வொரு நடையிலும் ஒவ்வொரு வேகம்
வெவ்வேறு தேடலுடன் !
நீண்ட வரிசைகளில் நெடுநேர காத்திருப்பு
ஒருமித்த தேடலுடன் !
நெடுநாளுக்குப் பின்னான சந்திப்பில்
நெகிழ்ந்து போன நட்புகளின் குசலம்விசாரிப்புகள்
நீண்ட தழுவலுடன் !
ஆண்-பெண் இரட்டையர்களின் சல்லாப
அணிவகுப்புகள்; புதிய கைப்பைகளுடன் !
தாயின் கையைப் பற்றி இழுத்து
தவழ்ந்தோடும் மழலைகள் !
தனயனை சாலையின் மறுபக்கத்தில்
தவறவிட்ட தவிப்புடன் தாய் !
தனிமையின் இறுக்கத்தில் சில முகங்கள் !
தனியராய் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் பல !
இப்படி -
வருவதும் போவதுமான
வண்ண வண்ண மேகங்கள்
கண்களில் கருவாகி
மனதுக்குள் மழையை பெய்து
வேகமாய் விலகிச் செல்கின்றன;
ஈரம் சொட்டும் இதயத்தை தாங்கி
தளர்வாய் நடை கட்டுகின்றன என் கால்கள்;
மீண்டும் கணினிகளை நோக்கி.
- தநுசு (ஜப்பான்)
(sunofsoil@gmail.com)