- பட்டுக்கோட்டை தமிழ்மதி -
O
தமிழ்தாய் வாழ்த்துப் பாடி
நாட்டுப்பண் பாடும்
நாட்கள்...நாட்கள்...
O
மூவண்ணக் கொடி
உச்சிபோய் அவிழ
உதிரும் பூக்கள்...
O
கொடிக் கம்பத்தின் கீழே
கோடுகிழித்து வைத்த புள்ளிகளாய்
பள்ளிப்பிள்ளைகள்...
ஆடாமல் அசையாமல்
நிற்கும் முல்லைகள்...
O
அண்ணாந்துப் பார்க்க
ஆகாயமாய் கொடி
அது
இதயத்தின் மடி...
O
அது அன்றைய
எங்கள் கிராமத்துப் பள்ளியின்
இனிப்பு சுதந்திரதினம்.
அதில் இப்பவும்
நினைப்பாய் இருக்கிறது மனம்.
O
எங்கள் தாயகமே...
O
முகம் எங்கோ
முகாமிட்டிருக்கும் போதும்
எங்கள்
அகம் உன்னிடம்தான்
அகப்பட்டிருக்கிறது.
O
திரைக் கடலோடி திரவியம்
தேட வந்தாலும்
தேட கிடைக்காத
திரவியம் உன்னிடம்தான்
O
நாங்கள்
வளர்ந்த நாடு நீ.
நாங்கள்
வளரும் நாடு நீ.
O
கணக்குப் பார்க்க
பூச்சியத்தை கண்டுபிடித்த நாடு நீ
பூச்சியமாய் போகாமல்
உன்
வளர்ச்சி விகிதம்.
O
எங்கள் தாயகமே
O
உன்
அடிமை விலங்குகள் உனக்கு
அழகென
அணியவைத்து பார்த்து
ஆனந்த கூத்தாடியது ஒரு கூட்டம்
அன்று.
O
உன்
விலங்கொடித்து
விடுதலையானாய் நீ.
O
உன்
சுதந்திரம்
சுத்த தங்கமா என
உரசிப்பார்க்கப் போய்
உன்னில்
தீக்குச்சிகளாய்
தீய்கிற தலைகள் சில
இன்று.
O
பூக்கள் முள்ளோடு
பூப்பதுவும் சரி என்று
அரவணைக்கும் அன்னை உனக்கு
ஆயுதங்களின் காவல்.
O
என்ன செய்ய
உன்
சுதந்திர நாளில்
நீ
ஊரடங்கு உத்தரவில்.
O
எங்கள் தாயகமே...
O
இரத்ததானம் செய்கிறோம்
அது
கயவனை காப்பாற்றி
களவாடவைக்குமென எண்ணுவதில்லை.
O
கண்ணைத் தானம் செய்கிறோம்
அது
கண்மூடித்தனமானவனை
கட்டவிழ்த்து விடுமென எண்ணுவதில்லை.
O
ஆனால்
இப்போது எண்ணுகிறோம்
நீ
உன் ரேடார் கண்களை
இன்னொரு நாட்டுக்கு
தானம் செய்ததினால்.
O
ஆம்.
மண்ணை பண்படுத்துவார்கள் எனச்சொல்லி
மனிதர்களை வெட்டிப் புதைப்பவர்களுக்கு
நீ
மண்வெட்டி கொடுக்காதே.
O
இன்று
உன் பள்ளிப்பிள்ளைகள்
எழுந்து நின்று
தேசியகீதம் பாடும்போது
கரைத்தாண்டி
கத்தும்குரல் கேட்கிறது...
O
உன்
ரேடார் கண்கள் பார்த்துக் கொண்டிருக்க
விமான குண்டுவீச்சில்
வீழ்ந்துக்கிடக்கிறார்கள்...
அங்கே
பள்ளிப் பிள்ளைகள்.
சின்னஞ் சிறார்கள்.
O
இன்று
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி
நாட்டுப்பண் பாடுகையில்
நிற்காமல்
நிலைக்கொள்ளாமல் கால்கள்
அலைகின்றன எங்கோ...
O
ஓ எங்கள் தாயே
எழுந்து நிற்கவை
அதோ
விழுந்து கிடக்கும்
எங்கள் கால்களை.
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com