| 
    தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....- வ.ந.கிரிதரன் -
 
     1. கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்
 இளவேனிற்பொழுதொன்றின்
 துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்
 'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்
 'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
 வீடற்றவாசிகள் சிலர்.
 விரிந்து கிடக்கிறது வெளி.
 எதற்கிந்த முடக்கம்?
 தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,
 நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா
 தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.
 
 2.
 பகலவனாட்சியில்
 பல்வகை வாகனங்கள்!
 பல்லின மானிடர்கள்!
 விளங்குமிப் பெருநகரின்
 குணம்
 இரவுகளில்தான்
 எவ்விதமெல்லாம்
 மாறிவிடுகிறது!
 
 மாடப்புறாக்களே!
 நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து
 இன்னும் இரைதேடுவீர்!
 உமதியல்புகளை
 எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?
 நகரத்துப் புறாக்களா?
 இரவுப் புறாக்களா?
 சூழல் மாறிடினும்
 கலங்கிடாப் பட்சிகளே!
 உம் வல்லமைகண்டு
 பிரமித்துத்தான் போகின்றதென்
 மனம்.
 
 3.
 நகரில் துஞ்சாமலிருப்பவை
 இவை மட்டும்தானென்பதில்லை!
 துஞ்சாமலிருப்பவர்களும்
 நிறைந்துதான் இருக்கிறார்கள்.
 ஆலைத் தொழிலாளர், ஓரின,
 பல்லினப் புணர்வுகளுக்காய்
 வலைவிரிக்கும்
 வனிதையர், வாலிபர்.
 'மருந்து'விற்கும் போதை
 வர்த்தகர்கள்,
 திருடர்கள், காவலர்கள்....
 
 துஞ்சாதிருத்தல் பெருநகரப்
 பண்புகளிலொன்றன்றோ!
 
 4.
 இவ்விதமானதொரு,
 வழக்கமானதொரு
 பெருநகரத்தின்
 இரவுப் பொழுதொன்றில்,
 
 'பின்இல்' புல்வெளியில்
 சாய்கதிரை விரித்ததில்
 சாய்ந்திருக்கின்றேன்.
 பெருநகரத்தின் இடவெளியில்
 ஒளிந்திருக்கும் இயற்கையைச்
 சுகிப்பதற்காக.
 சிறுவயதில்
 'முன்இல்' தந்தையின்
 'சாறத்'தொட்டிலில்
 இயற்கையைச் சுகித்ததின்
 நீட்சியிது.
 
 பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)
 சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்
 பால்யத்துப் பிராயத்து
 வழக்கம்.
 இன்னும் தொடரும் -அப்
 பழக்கம்.
 
 தோடஞ்சுளையென
 அடிவானில்
 கா(ல)ல்மதி!
 
 அந்தரத்தில் தொங்குமந்த
 மதி!
 அதனெழிலில் தெரிகிறது
 வெளிதொங்குமென்னிருப்பின்
 கதி!
 
 
 5.
 பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
 மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
 கன்னியின் வனப்பினை
 இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
 ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
 இரசிக்க முடிகிறது.
 சில சமயங்களில் நகரத்தின்
 மயானங்களினருகில்
 நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
 பள்ளத்தாக்குப் பகுதிகளில்
 மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
 குழிமுயல்களை, இன்னும் பல
 உயிரினங்களையெல்லாம்
 இத்தகைய இரவுப் பொழுதுகளில்
 கண்டிருக்கின்றேன்.
 அப்பொழுதெல்லாம்
 வ்ளைகளுக்குள் வாழ்ந்து
 இரவுகளில்
 இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
 சஞ்சரிக்கும் அவற்றின்
 படைப்பின் நேர்த்தியில்
 மனதிழந்திருக்கின்றேன்.
 
 6.
 வெளியில் விரைமொரு
 வாயுக் குமிழி! - உள்
 உயிர்
 ஆடும் ஆட்டம்தான்
 என்னே!
 
 ஒளியாண்டுத் தனிமை!
 வெறுமை! -உணராத
 ஆட்டம்!
 பேயாட்டம்!
 
 இந்தத்
 - தனிமையெல்லாம்,
 - வெறுமையெல்லாம்,
 - தொலைவெல்லாம்,
 ஒளியணங்கின் ஓயாத
 நாட்டியமோ! - மாய
 நாட்டியமோ?.
 
 ஆயின்,
 விழியிழந்த குருடருக்கு
 அவை
 ஒலியணங்கின்
 சாகசமோ?!
 
 7.
 இந்தப் பெருநகரத்திருப்பில்
 நான் சுகிக்கும் பொழுதுகளில்
 இந்த இரவுப் பொழுதுகள்
 சிறப்பு மிக்கவை.
 
 ஏனெனில் -அவை
 எப்பொழுதுமே
 என் சிந்தையின்
 - விரிதலை,
 - புரிதலை
 - அறிதலை
 அதிகரிக்க வைப்பவை;
 அதனால்தான்.
 
 ngiri2704@rogers.com
 |