- பெயரிலி -
எல்லா விழிகளுக்கும் எரிந்துகொண்டிருக்கின்றேன்;
என் விழி மட்டும் இன்னும் தொடர வழிகிறது
அடர் இருள்;
காற்றுன் தோணியிலே கடந்துகொண்டிருக்கின்றேன்
காலத்தை;
சொரிந்த தினங்கள் புலம்பற்சருகுகளாய்
பொய்த்து அலைகின்றன போம் வழியில்.
தொட்டுக்கொள்ள எகிறும்; மறுகும்
எக்கணத்தும் துவளும்; மெல்லத் தூள்.
எரிந்த குப்பையெல்லாம் எடுத்து அடுக்கிக்
கிடுக்கிப்பிடியில்
கிடத்தி வாசித்துக்கொண்டிருக்கின்றது
கிழக்காலம் பல்லால்.
என்னையும் இனம் கண்டு
தின்னென்றது, "உன் பங்கு."
ஆங்கே அலைந்த நிழல்கள் கொஞ்சம் அசதிவசமாய்
அகப்பட்டுக்கொண்டதென் கோழிக்கால்களுள்;
வனங்களின் செறிவும் வழிகளின் புல்லும்
வரி கலந்ததாய்க் கசியும் மிதியும்
நிழலும்
மருளும் அழியும் மலமாய்க் கழியும்.
அலைய அலைய அமிழும் தோணி.
அலையின் கீழே ஆழமாய் ஆழி.
அகல, களி.
~13 மே 2004, வியாழன் 02:14 மநிநே
தளையுறாததும் தலைப்புறாததும் II!
கடற்காற்று கனத்துக் கல்லாய்க் கண் தூங்கும்
கழுத்தழுத்த,
சகதிச்சேறாய்ச் சீறி நாறும் சீழ்ச்சாமம்
இன்றும் எனது.
சிறுநண்டேறத் தடமாகி சைக்கிளும்
நானும்
சாய்ந்தே கிடக்கும் சன்னமண்ணும் தூங்கும்
தனி மின்னல் மட்டும் எண்ணி எண்ணித்
துணை
இந்தப்பக்கம் ஒரு முறை அந்தப்பக்கம்
மறுமுறை
விரைபாம்பு வீதிக்குள் வேரோடி ஒளியும்
வெண்ணிலா.
முடிகின்ற நிலம் எல்லாத்துக்குமாய் முடி
நீட்டிக்கிடக்கிறது முழு நிலவு
அப்பப்போ, அறுகின்ற கதிருக்கும் உதிர்கின்ற
நெல்லுக்குமாய் ஓங்கி
உப்பி உமிழ்ந்துவிட்டுப்போகிறது ஒளி
ஒரு துளி
கறுத்துப்போன வெயிற்காட்டுத்தேகத்துக்கு
மழையடித்து
மினுக்கிற நிலவுக்கும் முகமிருட்ட
வடித்து அடி மறைத்து நாசிமூசித் தலையாட்டும்
இரட்டைத்துளிர் மொட்டைக்கிளையின்
கீழோர்
தோலுதிர் குட்டிச்சுவரில் தணலள்ளி
நெருப்பைத் திமிரத் தின்ற மரநெஞ்சில்
மட்டும்
"இன்னும் ஏன் வரக்காணோம்?!"
வாழ்ந்த சொற்சொட்டும் வழித்தின்று
அழிந்தானை வாயகட்டித் தின்றதெது?
கத்துங்கடலோ? கனக்குங் காற்றோ?
கால்பாவாக் காரிருளோ?
நாளைப் பத்திரிகையும் நடிக்கும் தெரியாது
நடப்பென்று.
-/பெயரிலி. பதிகை @ 1/20/2005
05:48:00 PM
காற்றின் மொழி!
- பெயரிலி -
காற்றானபடியாற் கடந்து போகிறேன்;
வேளைகளிற் கலைந்தும்
வேண்டாச்சிகை கலைத்தும்.
பட்டுக்கொள்கின்ற பாவங்கள் குறித்துப்
பக்கவாட்டிற் படர்கின்றவை என் பெயர்கள்:
ஊழி,
உப்பு,
ஊதாரி,
ஊத்தை,
உன்மத்தம்.
போகிற வழிகளிலே புகுகின்ற பெயர்கள்
வளைந்து வால் வழியாக வழிந்தோடுகிறன.
அசைதலால்,
கடிதல் என்பது காற்றுக்குமட்டுமாகி,
அகலொளி குவி மேசையில்
ஆழத்தட்டுவேன் மொழி தனித்து.
'05 Feb., 14 02:11 EST
-/பெயரிலி. பதிகை @ 4:33 PM
நன்றி: http://akazh.blogspot.com/ http://kanam.blogspot.com http://pulam.blogspot.com/2005/03/1.html peyarili1000@yahoo.com