பாரிஸ் மாணவர் எழுச்சி அனுபவங்கள்-உங்கள்
புரட்சியை நீங்களே உருவாக்க வேண்டும்:
- மூலம்: திக் ஹவார்டு -
- மொழிபெயர்ப்பாளர் ரா. பாலகிருஷ்ணன் -
1968 அறிமுகம்
இக்கட்டுரை
பிரெஞ்சு இதழான ‘எஸ்பிரிட்’டின் ஒரு சிறப்புப் பதிப்பிற்காக 2008 ஆம் ஆண்டு மே
மாதம் எழுதப்பட்டது. இதழாசிரியர்கள் வழக்கமான பிரெஞ்சுத் தவிர்ப்புவியல்வாதத்
தவறுகளை இக்கட்டுரையிலிருந்து நீக்குவதற்குப் பெரிதும் முயன்றனர். 1968 மற்றும்
அதற்குப் பிந்திய ஆண்டுகளிலும் இவ்வியக்கத்தின் துவக்கம் மற்றும் செயல்பாடுகள்
இருந்து வந்தன என்றால் மிகையல்ல.
லத்தீன் குவார்ட்டர் சார்ந்த அறிவுஜீவிகள் மற்றும் போராளிகள் மத்தியில் பாரீஸிலும்
இவ்விதத் தாக்கங்கள் இருந்தன. நான் அதனுடன் இணைந்திருந்த பத்தாண்டுகளில்
‘எஸ்பிரிட்’டின் தன் முதுகைத் தானே பார்த்துக்கொள்ள விரும்பும் தன்வயமான குறைபாட்டை
உணர்ந்தேன். எனினும் அதில் கூர்மையான இளம் விமர்சகர்கள் பலர் பங்களித்ததையும்
மறுக்கவியலாது. அவர்கள் புதிய அனுபவங்கள் பொங்கி வழிபவர்களாய் இருந்தனர். மதம்
மாற்றப்பட்டு தேவாலயங்களைத் தேடி வந்தவர்களல்லர்.
நானும் எனது அனுபவத்தின் செறிந்த பிரத்தியேகக் காரணங்களுக்காக மதிக்கப்பட்டேன். அது
பிரான்ஸில் வழக்கமானதன்றோ! இதழாசிரியர்கள் என்னைப் பங்களிக்குமாறு கேட்டபோது
கோட்பாடு சார்ந்த கட்டுரைகளுக்குப் பதிலாக சில மேற்கோள்களோ அல்லது சுயசரிதைகள்
சார்ந்த தகவல்களையோ தர எண்ணினேன். அவ்வாறே புதிய இடதுசாரிகளைப் பற்றி எழுத
விரும்பினேன்.
அவர்கள் அரசியலை முற்றிலும் வேறுபட்ட அளவில் அணுகுபவர்களும் ஜனநாயகப் போராளி
இயக்கங்களில் எழுச்சியுடன் செயல்படுபவர்களும் ஆவர். இக்கட்டுரை ஒரு பொதுக்கருத்தை
வெளியிடக்கூடியது.
1968ம் ஆண்டு ஜூனில் எட்கர் மோரின், கிளாட் லெபார்ட் மற்றும் கார்னெலியஸ்
காஸ்டரியெடிஸ் ஆகிய மூவரும் இணைந்து ழான்
மார்க் கௌட்ரே எனும் புனைப்பெயரில் ஒரு நூல் எழுதினர். அவர்கள் அதில், ‘மேல்
காணப்பட்ட எழுச்சியானது வரலாற்றின்
தொடர்ச்சியில் ஏற்பட்ட ஒரு கிழிசலே. அதில் மார்க்சியம் தன் எதிர்கால நம்பிக்கையைக்
காண விழைந்தது’ என்றனர். ஆனால் அவைகள் எளிதில் கைவிடப்படும் தன்மை கொண்டனவாய்
இருந்தன. அதில் எத்தகு புதிய கண்ணோட்டமும் வெளிப்படவில்லை.
1968 இல் நான் எழுதியவற்றில் அதிகமானவை நடந்தவை குறித்த அனுமானங்களே. நான் காரா
ஓகானரின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசித்தேன். அதில் அவர் ஆங்கில அமெரிக்க
வாசகர்களுக்குக் குறிப்பிட்டிருந்த ஒன்று, ‘பிரெஞ்சு வாசகர்களுக்கு எழுதும்போது
அவர்களுக்கே உரித்தான முக்கியத்துவத்தினைக் கைவிட இயலாது’ என்பதே.
1966 ஆம் வருடக் கோடைகாலத்தில் நான் டெக்ஸாஸிலிருந்து பாரீசுக்குச் சென்றேன்.
மார்க்சியம் பயிலவும் புரட்சியைச்
செயல்படுத்தவும் அங்கு கற்றுக்கொள்ள நான் முயன்றேன்.
இம்முடிவு உங்களுக்கு வேடிக்கையாய்ப் பட்டது என்றாலும் அமெரிக்கன் என்றளவில் எங்கள்
அரசியல், பண்பாடு சார்ந்த அனுபவங்கள் இவற்றை கல்வி மூலமே பெற்றோம். வியட்நாமுக்கு
எதிரான ஆக்கிரமிப்பு குறித்து நாங்கள் நிகழ்த்திய மனித உரிமைச் செயல்பாடுகள்
இன்றியமையாதன. எனினும் பெரிதும் எதையும் சாதிக்கவில்லை. குழப்பமான நிலையில்
விடப்பட்டு ஒரு தாராளவியல் சமூகத்தில் விடுதலைக் கோட்பாடு பற்றிச் சொல்லாடுவதும்
அது குறிப்பாக கம்யூனிசத்திற்கு எதிராக இருப்பதும் எம்மை இந்நிலையில் வைத்தன.
யாம் எழுப்பிய குரல் வெறுமே பூர்சுவா உரிமைகள் சார்ந்த குரலே. அதை விடவும்
முதலாளிய, ஏகாதிபத்திய அமெரிக்கா மிகவும் தீமை செறிந்தது. எங்களுக்கு வேண்டிய ஒரு
‘சொல்’- அது மாற்றத்தை வலியுறுத்த வேண்டும். அது இனங்களுக்கான சமத்துவம் என
நின்றுவிடாமல் கடந்து செல்ல வேண்டும்.
பிரான்ஸ் ஏன் என் சிந்தனையில் இடம்பெறுகிறது என்றால், அமெரிக்கர்கள் அனைவரும்
அங்குதான் புரட்சி தோன்றியது என்று
நம்புகின்றனர். இங்கே 1789 இல் தோன்றிய அது 1793 ஐக் கடந்து பூர்சுவாக்களின்
அரசியல் உரிமைகளை மீறி பொருளாதாரரீதியான
சமத்துவம் என்பதில் லயித்து 1917இல் பெரும் புரட்சியாக மாறியது.
பிரெஞ்சுப் புரட்சி என்பது பெருமளவு பறைசாற்றப்படும் அமெரிக்கப் புரட்சியிலிருந்து
வேறுபட்டது. 1776இல் புரட்சி ஏற்பட்ட பின்னும் அமெரிக்காவில் அடிமைத்தனம்
நீங்கவில்லை. நாம் இன்றளவிலும் அடிமைத்தனத்தின் சுவடுகளை எண்ணி அமெரிக்கர்கள்
மறுபரிசீலனை செய்துவருவதைக் காண்கிறோம். சமத்துவம் குறித்த விவாதங்கள் இன்றும்
இங்கு நிகழ்ந்து வருகின்றன.
மேலும் பிரான்ஸ் பற்றிய மதிப்பீடானது அங்கு இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த காலனி
எதிர்ப்பு இயக்கங்களால் அதிகரிக்கின்றது. வியட்நாமில் அமெரிக்கப் படைகள்
ஆக்கிரமிப்பு அங்கு எதிர்க்கப்பட்டது. அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு எதிர்வினை
அங்கு நேர்ந்தது. புரட்சியும் பிரான்ஸ்ம் இவ்வாறு ஒன்றாக அறியப்படுகின்றன.
பிரான்ஸில் ஒரு முறை நான் ‘ஸ்டாலின்கிராடு’ நகர ரயில் நிலையத்திற்குச் சென்றேன்!
அமெரிக்க விடுதலைக் கோட்பாடு
கூறுவதென்ன? சோவியத் யூனியன் என்பது நாசிசத்தை எதிர்ப்பதில் பங்களித்துள்ளது
என்பதே. ஆனால் பிரான்ஸில் காணப்படும் இந்த ரயில்நிலையம் அது வெற்றுக் கம்யூனிச
எதிர்ப்பு நாடு அல்ல என்பதைப் பறைசாற்றும்.
பிரான்ஸின் தத்துவார்த்தச் செழுமையும் மதிப்பு வாய்ந்த ஒன்று. சார்த் மற்றும்
அல்தூசரின் விவாதங்கள் கருத்தியல் நிலையில்
இன்றியமையாதவை. அல்தூசர், ‘மார்க்ஸ் மற்றும் மூலதனத்தை வாசித்தல்’ என்ற நூலை
பதிப்பித்துள்ளார். ஸ்ட்ரக்சுரலிசமும்
அட்லாண்டிக்கைத் தாண்டவில்லை.
சார்த் பூர்சுவா நிலைப்பாடுகளுக்கு எதிரானவர். அவர் ஒரு அரசியல் கருத்தியலாளர்
அல்ல. அவர் எழுதிய நூல் இருத்தலியல், ஹெகலியம் மார்க்சியம் சார்ந்த வரலாற்றியல்
பகுப்பாய்வு குறித்த ஒன்று. தனிமனிதனின் இருத்தல் மற்றும் விடுதலை சார்ந்த
கோட்பாட்டை அவர் உருவாக்கினார். அவரே அவர் காலத்திய வால்டேர் ஆவார்.
அமெரிக்காவில் உள்ள இளம் அறிவுஜீவிகளான எங்களுக்கு இவ்வளவு போதும். ‘தளைகளிலிருந்து
விடுதலை’ எனும் வால்டேர் அல்லது சார்த் யாராக இருந்தாலும் நாங்கள் ஒப்புக்
கொள்வோம். ஆங்கில அமெரிக்கச் சித்தாந்தங்களோ பொருளற்ற தர்க்கங்களால் கட்டப்பட்டு
வெளிப்படையாகக் காணப்படும் சமூக உறவுகள் குறித்து மட்டும் சொல்லாட வல்லவை.
எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்ஸ் பிரான்ஸின் புனிதமானவர். அமெரிக்காவில் அவரது
கருத்துக்கள் சொல்லாடப்பட்டதே இல்லை. மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் மூலதனம்
மூன்று பதிப்பையும் மாஸ்கோவில் வெளியிடப்பட்ட ஆங்கிலப் பதிப்பையே பெற்று
வாசித்தேன். தற்காலத்தில் ஸ்டாலினுக்குப் பிறகு மறுபரிசீலனைவாதிகள் கிழக்கு
ஐரோப்பாவில் இளம் மார்க்சினுடைய எழுத்துக்களை வாங்கி வாசித்து வருகின்றனர்.
மேற்கத்திய விமர்சகர்களோ கம்யூனிஸ்டுக் கட்சிகளின் அதிகாரபூர்வக் கருத்தியல்களை
விமர்சிக்க அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மார்ச் 22 இயக்கம்
பாரீசுக்கு வந்த பிறகு, ‘நான்தெர்’ வளாகத்திலுள்ள ஒரு அறை எனக்குக் கிட்டியது.
அங்கு நான் மூலதனத்தை வாசித்தேன். என்னுடைய சன்னல் வழி நான் சிறு குடிசைகள் நிறைந்த
பகுதி ஒன்றைக் கண்டேன். அவர்கள் உருவாக்கும் புகைமண்டலம் சூழ அதைக் காணும்பொழுது
அது ஒரு கண்டறியாப் புலம் போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
பிற்பாடு நான் ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணம்முடித்துக் கொண்டபின் புதிய
இடதுசாரிகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சியின் இதழான ‘எல்
ஹ்யூமனிஸ்டே’ ஒருங்கிணைத்த ஒரு வேனில் விழாவில் நான் பங்கெடுக்க விழைந்தபோது
முகத்தில் அறைந்தாற்போல வெளியேற்றப்பட்டேன்.
நான் ஒரு வெளிநாட்டுக் காம்ரேட் என்று புரிய வைக்க முயன்றேன். நுழைவுச் சீட்டுப்
பெறுவதற்கான தொகையும் என்னிடம் இல்லை.
இதன் விளைவாக நான் ட்ராட்ஸ்கியிஸ்டுகள் நடத்திய கூட்டங்களில் பங்கெடுத்துக்
கொண்டேன். இதில் ஒவ்வொருவரும் மாற்றுப் பெயர் ஒன்றைக் கொடுத்துக் கலந்து கொள்ள
வேண்டும். ஏனென்றால் ட்ராட்ஸ்கியிஸத்தின்படி பொய்ப்பெயர் கொண்ட கம்யூனிஸ்டுகளால்
கம்யூனிசம் நடைமுறைப்படுத்தவியலாத ஒன்று என நிரூபிக்கத்தான். பாட்டாளி வர்க்கமானது
கருத்தியலின் வரலாற்றுத் தேவை என உணர்ந்து கொண்ட தலைவர்களால்தான் வழிநடத்தப்பட
இயலும் என்பது இதன் பொருள்.
மேலும் அதிகாரபூர்வ கம்யூனிஸ்டுகள் தங்கள் போட்டியாளர்களைத் தீர்த்துக்கட்டவும்
தயங்க மாட்டார்கள் என்பதால் புனைப்பெயர்.
எனக்குப் புரட்சி மேற்கொள்ளப் போதிய அவகாசம் கிட்டவில்லை என்பதால் நான் வியட்நாம்
போருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டேன். இதன் மூலம் போருக்கு எதிரான
முன்னாள் இராணுவ வீரர்களால் துவங்கப்பட்ட அல்ஜீரிய மறைவியக்கம் ஒன்றில்
பங்கெடுத்துக் கொண்டேன். அவர்களுக்கு ஒரு தீவிர நோக்கம் இருந்தது. அவர்கள் எனக்கு
மறைவிடத் தந்திரங்கள் பலவற்றைப் போதித்த போதிலும் எனது பங்களிப்பு மிகக் குறைவானதாக
இருந்தது.
இரகசியமான நடவடிக்கைகள் மூலமே பெரும் மாற்றம் நிகழும் என நான் நம்பினேன்.
இவ்வகையில் ‘எஸ்பிரிட்’ இதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன் (1968 மார்ச்). அது
சார்த்தால் வழிநடத்தப்பட்ட ஒரு சில அறிவுஜீவிகளின் படையைப் பற்றிய கட்டுரை ஆகும்.
இவ்வியக்கம் போருக்கு எதிரானது எனினும் அதற்கு செயலளவிலும் பொருளளவிலும் உதவி
தேவைப்பட்டபோது வெறும் வாயளவில் என்னால் இயன்றதைச் செய்தேன். இதனை ஆதரித்து ஒரு
பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாடியதே இக்கட்டுரை. ஆனால் இதன் மூலம் எனக்கு விடால்
நாகேத்தினுடைய தொடர்பு கிட்டியது. அவரும் அமெரிக்காவைப் புறக்கணித்து வந்த சில
அறிவுஜீவிகளுடன் உரையாட
ஒப்புக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக நான்தெரில் மாணவர்கள் கிளர்ச்சிகள் தோன்றின. அதில் நான்
பங்கெடுத்துக் கொண்டேன். இவைகள் பெரும்பாலும் அடிப்படை அற்றவை. ஒரு கூட்ட இறுதியில்
விவசாயிகள்-தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா அல்லது
தொழிலாளர்கள்-விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா என்று தீர்மானம்
நிறைவேற்றுவதில் தகராறு ஏற்பட்டு கையில் கிடைத்ததை எடுத்து வீசிக் கொண்டார்கள்.
எனக்கு இதன் அடிப்படை புரியவில்லை. விவசாயப் புரட்சி என்பது தொழிலாளர் புரட்சிக்கு
எதிரானது. மெய்யான தொழிலாளர் எழுச்சிக்கு எதிரான மேடை ஒன்றை ஏற்படுத்தி
திசைதிருப்பும் போக்கு உடையது. 1917இல் நடந்ததைக் கூர்ந்து கவனியுங்கள். நான்
பிரான்ஸில் மேற்கொண்டு இருந்து பிரிவினைவாதக் கோட்பாடுகளின் இறுதியைக்
கற்றுக்கொள்ளும் பேறு பெறவில்லை.
எனினும் ஏப்ரல் 1968ல் ஒரு மாணவர் பொதுக்கழுக் கூட்டம் ஒன்றில் நான்தெரில் நான் ஒரு
சொல்லாடலைக் கண்டேன். அது முந்தைய காலத்துப் புரட்சியாளர்களின் அதிகாரக்
கோட்பாடுகளுக்கு வரலாற்றின் அதிகாரத்துவப் பாதையின் மேற்செல்லும் வாகனமாய் தம்மை
காட்டிக்கொண்ட பித்தலாட்டக்காரர்களுக்கும் எதிரான ஒன்று ஆகும்.
அவர்கள் பிரெஞ்சு மொழியில்தான் கதையாடினார்கள் எனினும் உலக வரலாற்றின் எதிர்காலப்
பாட்டையைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குள் அதனை நிகழ்த்தினர். இவ்விதத்
தர்க்கங்களின் குறைபாடுகளை நான் நன்கு உணர்ந்து கொண்ட பிறகு புதிய பிரெஞ்சு
இயக்கங்களிலும் இவைகள் காணப்பட்டது.
இம்மாணவர் இயக்கங்கள் அதிகாரத்திற்கு எதிரான சொல்லாடல் நிறைந்தவை. அது ஆற்றல்
நிறைந்திருந்தது. அமெரிக்காவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான இயக்கத்தின்
பிரதிபலிப்பாய் இருந்தது.
நாங்கள் நான்தெர் வளாகத்தில் காணப்படுவோம். பின் காலை நேரப் பிரார்த்தனைக்குப்
பிறகு வேறு செயற்குழுக்களாகப் பிரிந்து
செல்வோம். அமெரிக்காவில் உள்ள ஒரு நடைமுறையை நான் அவர்கட்குச் சொன்னேன். தாமாகப்
படித்துக் கொள்ள விரும்புபவர்கள் இம்மாதிரிப் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து
வெளியேறிக் கற்றுக்கொள்வதே அது. இவ்விதத் தன்னாட்சி முறை கல்வியில் விடுதலையைப்
புகுத்துமா? இதுதான் சீர்திருத்தமா? எனினும் நான் என்னையே ஒரு புரட்சியாளனாகப்
புரிந்து கொண்டேன். அங்குள்ள மாணவர்களும் அப்படியே.
வரலாறு கூட இவ்விதமாகப் புரட்சிகரமாக உள்ளதா? எங்கே நாம் செல்கிறோம்? எவ்வாறு நாம்
புரட்சி பற்றி அறிய விரும்பி
எஸ்பிரிட்டில் இணைந்தேன் என்பது வேறு கதை. நான் முதன் முறை ழான் மேரி டொமனிச்சைச்
சந்தித்தபோது (இதழின் முதன்மை ஆசிரியர்) காலிஸ்ட் இடதுசாரிகளின் அரசியற்
செயற்பாடுகள் குறித்துக் கூறினார். அவர் அதனை ஆதரித்தபோதும் நான் அவ்வாறு இல்லை.
எனினும் ‘ஆபிளாசியர்ஓ’ பத்திரிகையின் வாராந்திரக் கூட்டங்களில் நான் பங்கெடுத்துக்
கொண்டேன். இங்கு மேற்கொள்ளப்படும்
விவாதங்கள் ‘எஸ்பிரிட்;’டில் பதிவு செய்யப்படும். மாணவர் இயக்கம் மென்மேலும்
ஆக்ரோசம் அடையும் போது எஸ்பிரிட்டின் தர்க்கப்பகுதியும் சூடேறும்.
நான் இந்நிகழ்வை இன்றியமையாத ஒன்றாய்க் கருதினேன். மாணவர் இயக்கத்தின் போக்கு
ஒழுங்கற்றதாய் இருப்பினும் அதில் போர்க்குணத்தின் வித்துக்கள் இருந்ததைக் கண்டேன்.
மாணவர்கள் அப்படிக் காணப்படுவது இவ்வமைப்பின் குற்றமே. நான் இது குறித்து ஒரு சிறு
பிரசுரம் ஒன்றை மார்ச் 22 ஆந்தேதி வெளிக்கொணர்ந்தேன். அக்கட்டுரை சமூகவியலாளர்களைக்
கேள்வி கேட்பதாக இருந்தது.
அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை ஒழுங்கமைப்பதின் மூலம் இவ்வமைப்பிற்கொப்ப அவர்களைத்
திருத்தி அமைக்கும் நிலையிலேயே இருந்தனர்.
மே 1968ம் இதழில் இது வெளியிடப்பட்டது. அதே இதழில் நான் வெளியிட்ட இன்னொரு கட்டுரை
மார்ட்டின் லூதர் கிங் ஏப்ரல் 4ம் நாள் கொல்லப்பட்டது குறித்து இருந்தது. அதன்
பெயர் ‘ரெசிஸ்டர்’ எனப்படுவதாகும். இவ்வார்த்தை மார்ட்டின் லூதர் கிங்கின் இயக்கம்
எவ்வாறு எதிர்த்தல் மூலம் வளர்ந்தது எனும் அடிப்படையில் இடப்பட்டதாகும்.
இவ்வார்த்தை தடித்த எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது.
எனது புரட்சி பற்றிய கனவு அள்ளிப் பருகும் நீரென்று அல்ல. கானல் நீரெனக்
காட்சியளித்தது. விடுதலையை வெளிக்கொணரும் தந்திரம் யாதென நான் தேடினேன். இத்தேடலில்
விளைந்த காட்சியில் பட்டுப் போர்வையினுள் புதைந்து கிடந்த இரும்புக் கரத்தை நான்
கண்டு கொண்டேன். அது தன்னை உறுதி செய்தது. அதனுடைய நியாயமற்ற நடவடிக்கைகளின்
தொடர்ச்சியால்.
நான்தெர் பின் இழுத்து மூடப்ப்பட்டது. சார்போன் பல்கலைக்கழகத்தில்
போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டது.
இத்தாக்குதல்களால் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலான நான் கட்டியமைக்க விரும்பிய ஒரு
புத்தகக்கடையின் இரண்டாவது
மாடியில் அமைந்த விடுதலைப் பல்கலைக்கழகம் எனும் இயக்கம் தடையுற்றது.
கடையின் பெயர் ஷேக்ஸ்பியர் அன் கம்பெனி. அத்தகைய விவாதங்களில் நாங்கள் கண்டது
மூலதனம் மூன்றாம் பாகத்தில்
கொடுக்கப்பட்டுள்ள லாபநோக்கம் எவ்வாறு முதலீட்டின் வீழ்ச்சியில் கொண்டு செலுத்தும்
என்னும் முதலாளியத்தின் உட்சார்ந்த முரண் குறித்த கோட்பாடாகும்.
நாங்கள் இன்னும் 350 பக்கங்கள் பாக்கி விட்டிருந்தோம். அதை வாசிக்க இயலாமல்
போய்விட்டது. லெனினுடைய அரசும் புரட்சியும், பிப்ரவரி புரட்சி சமயத்தில்
எழுதப்பட்டது, அதனை நாங்கள் வாசித்திருந்தோம் என்று நம்புகிறேன். புரட்சி
உருவானதின் அனுபவம் குறித்து லெனின் முழுமையும் பதிவு செய்யாமல் விட்டிருந்தார்.
அவரே அதில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சி பற்றிய அனுபவம் எழுதத் தகுந்ததல்ல.
அனுபவிக்கத் தகுந்தது. எவ்வளவு துல்லியமான வாக்கியம்!
மே மாதத்தில் நிகழ்ந்த துரிதச் செயல்களுக்கு அமெரிக்கர்கள் எவ்வாறு பயனளித்தோம்?
வேனிற்கால விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து பாரீசுக்குப் பெயர்ந்த மாணவர்களில்
பெரும்பாலோர் மாணவர் போராட்டங்கள் ஏன் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களுக்கு இட்டுச்
செல்லாது என்பதனை அறியவில்லை? கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஏப்ரலில் நிகழ்ந்த
போர்க்கால இயக்கங்களும் பெருமளவு
திரளான மாணவர்களால் நிகழ்த்தப்பட்டபோதும் அவற்றின் தொடர்ச்சி பெருமைக்குரியதாக
இல்லை.
நான்தெரில் நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள் இவற்றின் பாதிப்புகள் நிறைந்தவை. நான் சில
நண்பர்களுடன் சேர்ந்து அமெரிக்க நடவடிக்கைக் குழு ஒன்றைத் துவக்கினோம். சார்போனில்
காணப்பட்ட எண்ணற்ற அத்தகைய குழுக்களில் ஒன்றைப் போன்றதே இதுவும். நாங்கள்
இவ்வியக்கம் உலகளாவிய அளவில் பரவும், பிரான்ஸின் சமூக மாற்றத்திற்கு உதவும் என
நினைத்தோம்.
எங்களுடைய புரட்சிகர மனப்போக்கில் பெரும் எழுச்சிகளை உருவாக்கிக் கொண்டு அமெரிக்க
நடவடிக்கைக் குழுவுடன் மற்ற
இணக்கமுள்ள சிந்தனையாளர்களையும் இணைக்க எண்ணினோம்.
செர்பியாவைச் சேர்ந்த எங்கள் குழு அங்கத்தினர் ஒருவர் ஒரு முறை புலம் பெயர்ந்த
தொழிலாளர்களுக்கு இடையில் இயக்கத்தைக் கட்ட விரும்பினார். ஆனால் பெரும்பாலோர்
மாணவர் இயக்கத்திலேயே ஆர்வம் கொண்டிருந்தனர். எனினும் நாங்கள் தொழிலாளர்களுடன் ஒரு
இணைப்பை விரும்பிய காரணத்தால் ரெனால்டில் உள்ள இளம் தொழிலாளர்கள், டேனியல்
மோத்தேயுடன் இணைந்தவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரை நான் எஸ்பிரிட்டில் ஜர்னல் அ
பிளாசியே போ சார்ந்த சந்திப்புகளில் கண்டிருக்கிறேன். ஆனால் எங்களுக்கு நாங்கள்
தொழிற்சங்கவாதிகளாவோம் என்ற நம்பிக்கை ஏதுமற்றிருந்தது. பல்கலைக்கழகத்தில் என்ரேஜஸ்
அமைப்பில் புதிய உறுப்பினர்களை ஏற்கெனவே உள்ளவர்களின் அனுமதியுடன் சேர்த்துக்
கொள்வது குறித்த விவாதங்களில் எங்கள் இருவரின் பங்களிப்பு அதிகமாகக் காணப்பட்டது.
சீர்திருத்தவாதிகள் பிரான்ஸ் அமெரிக்கா போன்ற ஒரு அமைப்புடைய நாடு என்றுதான்
கருதினர். நாங்கள் அதில் முரண்பட்டோம், குழு உறப்பினர்களை வேறு சந்திப்புகளுக்கு
அனுப்போனோம், காலம் கடந்தது. ஒரு நாள் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்திற்காக
மே மாத இறுதியில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டு நாடே ஸ்தம்பித்தது.
பூல்வா தி செயின்ட் மைக்கேல் சாலையில் சந்தடியற்று நாங்கள் விவாதித்தபடி நடந்து
சென்றோம். அந்த வார இறுதியில் பாரிஸில் இருந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையோ
தாறுமாறாக இருந்தது. போரிடும் குணமுடைய எலான் அமைப்பு சிதறிப்போனது. பொழுதுபோக்குச்
சங்கங்கள் முதிர்ச்சியற்ற ஜனநாயகக் கட்டமைப்பான பிரெஷ்ஷைக் கட்டிலும் நன்கு
வளர்ந்தன.
ஆயினும் எங்களுக்கு கடைசி நம்பிக்கை காத்திருந்தது. வரலாற்றில் எல்லா
மார்க்சியர்களுக்கும் இக்கடைசி நம்பிக்கை. பியர் முன்டே எனப்படும் பிரெஞ்சு நன்னெறி
சோசலிசத்தின் நம்பிக்கை எங்களுக்கு கெரன்ஸ்கியின் இயக்கமாகப் பட்டது. பிப்ரவரி 17ல்
கெரன்ஸ்கியின் வளர்ச்சி உண்மையான போல்ஷிவிக்குகளுக்கு தொழிலாளி வர்க்கத்தின்
புரட்சிகரப் பாதையிலுள்ள இடர்களைக் காட்டிக் கொடுத்தது.
மென்டே பிரான்ஸ் அவ்வாறே தற்காலப் பிரதம மந்திரியாக ஆகிப் போவாரா? எனக்கு வரலாறு
மீண்டும் தன்னை மறுஉருவாக்கம் செய்து கொள்வதில் நம்பிக்கை இல்லை. எனினும் பி எஸ் யு
குறிப்பாக செர்ஜி மைலேவைச் சேர்ந்தவர்கள் புதிய பாட்டாளி வர்க்கம் என்பதில் அவ்வாறு
நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
செர்ஜி மைலே மேற்கொண்ட இறுதி முயற்சியின் காரணமாக பல்விதத் தன்மைகளுடன் கூடிய
மாணவர்கள், தொழிலாளர்கள்,
சேவையாளர்கள் ஆகியோரை மே 27ம் தேதி சார்லெட்டி அரங்கில் திரட்டிக் காட்டினார்.
பிரெஞ்சு இயக்கம் இவ்வாறாக
இறுதிபெறவில்லை. எனது புரட்சி பற்றிய தேடல் இவ்வாறு பிரபஞ்சம் அளாவியது.
சோசலிசத்தை எதிர்கொள்ளல்
எனது மே மாதக் கனவுகள் அவ்வளவு எளிதில் அருகி விடவில்லை. மாற்றாக நான் பிரான்ஸில்
இருந்த காலத்தில் உருவான கொந்தளிப்பு உணர்வு ஹெக்ஸகோனுக்கு வெளியே பரவத்
தொடங்கியது.
லண்டனிலும் காணப்பட்டது. எனது இளைய சகோதரன் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை
முடித்து ஐரோப்பாவில் மேற்படிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இரு வேறு
முரண்பட்ட அனுபவங்கள் எனக்கு அங்கே ஏற்பட்டன. முதலாவது ‘நியூ லெப்ட் ரிவியூ’
ஆசிரியர் குழுவைச் சார்ந்த பெரி ஆண்டர்சனை நான் அங்கு காண நேர்ந்தது.
அல்பேனியாவிலிருந்து அவர் ஒரு தீவிர மாவோயிஸ்டு என்றளவில் அடையாளம் பெற்றுத்
திரும்பியிருந்தார். அங்கு அவர் என்வர் ஹோக்ஸாவைச் சந்தித்தார்.
பிரெஞ்சு மாணவர்களைப் பற்றி நான் கொண்டிருந்த அதீத எண்ணம் உண்மையான கலாசாரப்
புரட்சியின் பிதாமகர்களைப் பற்றி நான் அறிந்த பொழுது மாற்றம் பெறலாயிற்று. மறுநாள்
நான் ஹாஸ்னி கலை தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்றேன். அங்கே மாணவர்கள்
குழுமியிருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் கூட்டாண்மை சார்ந்த குரல் மேலோங்கி
இருந்தது, அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் இருந்தனர். அவர்களுக்கு
பிரெஞ்சு மொழியில் பரிச்சயமில்லை எனினும் ஒரு சிறு வெளியீடு ஒன்றை அவர்கள்
அம்மொழியில் வெளியிட்டனர்.
நான் இங்கு எனது நம்பிக்கைகள் உருப்பெறுவதைக் காண இயலுமா? ஹாஸ்னியில் மேலோங்கி
ஒலிக்கும் எதிர்க்குரல்கள் இங்கிலாந்தில் பரவுமா? இங்கிலாந்திலிருந்து
திரும்பியதும் நான் எஸ்பிரிட்டுக்கு இது குறித்து எழுதினேன்.
நம்பிக்கைகளின் பாதிப்பில் என் மனைவி, எனது சகோதரன் ஆகியோரை விட்டு புரட்சிகரப்
பாதையில் பயணிக்கலானேன். அது
ஸ்விட்சர்லாந்திலிருந்து இத்தாலிக்கும் பிராக்கிலிருந்து பெர்லினுக்கும்,
பிராங்பர்ட்டிற்கும் பின் அமெரிக்காவிற்கும் ஆகஸ்டில் தொடர்ந்தது.
சோவியத் நாடு செக்கோஸ்லோவாகியாவைக் கைப்பற்றியதால் பிராக் இளவேனில் முடிவுக்கு
வந்தது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹ்யூபர்ட் ஹம்ப்ரி நியமிக்கப்பட்டார். இளம்
போராட்டக்காரர்கள் அன்று பெரும் வன்முறையில் ஈடுபட்டபோதும் மாநாட்டின்
செயற்குழுவினர் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிக்காகோ நகர வீதிகளில்
கலவரங்கள் அரங்கேறின. போலீஸ் தலைகள் அதிகம் முளைத்தன. போராட்டக்காரர்கள் போருக்கு
எதிரான முழக்கங்களைகப் போலியாக முழக்கமிட்டனர். ஜனநாயகக் கட்சி சீரழிந்து கிடந்தது.
வியட்நாமியப் போரோ மேலும் ஆறு வருடங்கள் நீடித்துப் பல உயிர்களை அழித்தது.
ஐரோப்பாவில் நான் பயணம் செய்தபோது அமெரிக்காவில் காணப்பட்ட அர்த்தமற்ற போராட்டங்களை
விடவும் செறிவுள்ள
எதிர்க்குரல்களை நான் காண நேர்ந்தது.
மார்க்சியம் மற்றும் புரட்சியுடன் இவ்வியக்கங்கள் கொண்டிருந்த தளர்ச்சியான
தொடர்பும் விளங்கியது.
நாங்கள் போராளிகளுடன் தொடர்ந்து கொண்டிருந்த தொடர்பில் அவர்கள் எங்களை நன்கு
வரவேற்றனர். மட்டுமல்ல, அங்குள்ள அரசியல் நிலவரங்கள் அமைப்புகளுக்கு எதிரான
எதிர்வினைகள் குறித்து மனந்திறந்து உரையாடினர். நாங்கள் எந்தச் செயற்குழு
உறுப்பினருமல்ல, இயக்கங்களின் அதிகாரத்துவம் அங்கில்லை.
மொழி மிகவும் லகுவாக இருந்தது. கேட்பதற்கு வெகுளியாக இருந்தாலும் உள்ளத்தின்
ஆழத்திலிருந்து வெளிப்பட்டது.
மார்க்சியம் இறுதியில் இன்னும் தோற்றப் பொலிவுடன் இருந்தது எனலாம். சார்த் தன்னுடைய
‘இயங்கியல் பகுப்பாய்வின் நுட்பநோக்கு’ நூலில் கொடுக்கப்பட்டிருந்தது போல்,
மார்க்சியம் நம் காலத்தின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்தது.
நான் ஜூரிச்சுக்குச் செல்ல நினைத்தேன். போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது லெனின்
அங்கிருந்தார். அவரை ஒரு கவச வண்டியானது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பின்லாந்து
ரயில் நிலையத்தில் பின்னொரு நாள் இறக்கிவிட்டுச் சென்றிருந்தது. பிங்கஸ் புக்கன்
ஹேண்ட்லுங் என்ற புத்தகக் கடை ஒன்றின் மேல்மாடியில் நாங்கள் வசித்து வந்தோம்.
போராளிகளாய் இருந்த தோழர்கள் பலர் அந்தப் புத்தகக் கடைக்கு பல புத்தகங்களை
வழங்கியிருந்தனர். இங்கு என் தேடல் விருத்தியடையும் சூழல் உருவானது.
காப்ஹாஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்) எனும் இடத்தைச் சுற்றி நடந்த போராட்டங்கள்
முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்போராட்டங்கள் எதைச் சாதித்தன? புத்தகக் கடைக்கும்
மார்க்சிய இளைஞர்களுக்கும் இருந்த தொடர்பு விரைவில் முடிந்தது.
இத்தாலி நாட்கள் பற்றி எனக்கு அவ்வளவாக நினைவில்லை. வெப்பம் அதிகமான அங்கு
நண்பர்கள் சிறு பத்திரிகைகளில் பணிபுரிந்து வந்தனர். கட்சியின் பெருமை அங்கு அதிகம்
காணப்பட்டது.
கிராம்சியின் எழுத்துக்கள் இன்றும் போற்றப்படுகின்றன. இத்தாலியக் கம்யூனிசத்தின்
மேலாதிக்கம் அதன் பாசிச எதிர்ப்புக் கொள்கையால் தோன்றியது. நாங்கள் இன்டர்நேஷனலைவிட
(யூஜின் போத்தியர்) பண்டியரா ரோஸாவை அதிகம் பாடினோம். இதன் காரணமாகத்தான்
செம்போராளிகளின் ஓவரிசம் பிற்காலத்தில் தோன்றியது.
பிராக் பற்றிய என் நினைவுகள் மேன்மையுடையது. அங்கு காணப்பட்ட இளவேனில் மட்டுமல்ல,
கம்யூனிசத்திற்கான சீர்திருத்தங்கள் வேர்விட்டதும் ஒன்று. சீர்திருத்தவாதிகள் அங்கே
அதிகாரப் போக்குடைய கம்யூனிஸ்டுகளைப் பின்தள்ளி இயக்கத்தில் முன்னேறிக்
கொண்டிருந்தனர்.
புறத்தோற்றம் சார்ந்த பௌதிக அடையாளங்களால் போராட்டங்கள் நிகழ்வது என்பதினும் ஜனநாயக
விடுதலைச் செயல்பாடுகளே அவற்றை நிகழ்த்த இயலும் என்பதை இது காட்டுகிறது. இதன்மூலம்
கம்யூனிச இயக்கம் என்பது எளிதாகச் சீர்திருத்தப்படவியலாதது என்று விளங்கிற்று.
மாஸ்கோ அத்தருணத்தில் தாராளமயமாக்கலுக்கு எதிரான பிரஷ்னேவ் அறிக்கையை வெளியிட்டது.
நானும் என் மனைவியும் 1967 இல் பிற்பகுதி வேனிலில் பாலாட்டன் ஏரிப்பகுதியாகிய
ஹங்கேரியில் நிகழ்ந்த மேற்குத் தொகுதி மாநாட்டில் கலந்துவிட்டு பிராக் சென்றோம்.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வியட்நாம் போருக்கு எதிரான தீர்மானத்திற்கு நானும்
ஆதரவளித்தேன். செக்கோஸ்லோவாகியப் பிரதிநிதி அதனை மறுத்தார். ஏனெனில் இவ்விதத்
தீர்மானத்தில் கையெழுத்திடுவதை அவள் வெறுத்தாள். போருக்கு எதிராக அல்ல, சில
செக்குகள் அவரைத் தூண்டிய போதும் அரசியல்ரீதியான குறைபாடுகளை சரிசெய்ய அவள்
வலியுறுத்தினாள்.
பிற்பாடு உருவான தனித்துவமாக்கப்பட்ட குடிமைச் சமூகத்தின் விளைவாக சோசலிசப் பேரரசு
வீழ்ச்சியுற்றது. பாலாட்டன் மாநாட்டு நிகழ்வின் போது நாங்கள் பிராக்கிற்குச்
சென்றோம்.
அங்கு 1956ல் சோவியத் ஆதிக்கம் நிகழ்ந்த போது ஏற்பட்ட அடையாளங்கள் பெரிதும்
காணப்பட்டன. ஜான் கவன் என்ற இளைஞரை நாங்கள் அங்கு கண்டோம். அவரது தாயார் ஒரு
ஆங்கிலப் பெண் என்பதால் அவர் ஆங்கிலத்தை நன்கு அறிவார். இதன்மூலம் உடைந்து போன
மொழியில் நாங்கள் போராளிகளிடம் கூடியவரை உரையாட முயன்றோம்.
மாலை நேரங்களில் கோட்டைகளின் புறத்தே உள்ள தோட்டங்களில் நடந்தபடி உரையாடி
மகிழ்ந்தோம். நாங்கள் அங்கு விவாதித்தது, 1967 இல் நான் மூலதனத்தை வாசித்துக்
கொண்டிருந்தேன்.
பிராக்கில் அனைவரும் தாஸ்தயேவ்ஸ்கியை விரும்பினர். ஆகவே எனக்கு நான்தெர்
போராளிகளுடன்தான் இணக்கம் அதிகம். எனது
புரட்சி குறித்த தேடல் அதிகம் தொடர்ந்து நடந்தது. 68ல் ஒரு மொத்தத்துவ எதிர்ப்பாள
இடதுசாரியாக, முதிர்ச்சியற்ற ஒரு இளைஞனாக நான் அறியக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வு
கிளாட் லெபார் மற்றும் காஸ்டேலியஸ் கேஸ்டாரியட்ஸ் ஆகியோருடன் பியர் விடால் நாகேத்
ஏற்பாடு செய்த விவாதத்தின்போது ஏற்பட்டது.
இதன் பின்பே நான் 68க்குப் பிறகு கோட்பாடு சார்ந்த தேடல்களைத் துவக்கினேன். அது
வேறு கதை.
என்னுடைய தொடர்பயணத்தில் ஜெர்மனியை அடைந்தேன். அங்கும் பிரான்ஸிலிருந்து
புறப்பட்டதிலிருந்து அடைந்த முரண்களை அனுபவித்தேன்; மார்க்சியமா போர்மயமாதலா?
புரட்சியா அல்லது எதிர்த்தலா? அமெரிக்காவில் புதிய இடதுசாரிகள் ஜனநாயக
சமூகத்திற்கான மாணவர் அமைப்பு என்ற அமைப்புடன் ஜெர்மனி நாட்டில் காணப்பட்டனர்.
இதில் எனது நண்பர்களும் பங்கேற்றிருந்தனர். இதன் பொருள் ஜனநாயகம் முதன்மையானது;
சோசலிசம் முக்கியத்துவம் உடையது என்று இவ்வாறு இன்றியமையாக் குறிப்புகள்
உடையன.
குறிப்பிடத் தகுந்த ஒன்று, மேற்கு ஜெர்மானிய அந்நியர்கள் அவர்களுடைய சோசலிச
உடன்பிறந்தாருடன் தொடர்பிலிருந்தனர். நாங்கள் அறிந்த புதிய இடதுசாரிகளில்
ஜெர்மானியர்கள்தான் ஆழமாக வாசிப்பு நிறைந்தவர்கள். மார்க்சின் கோட்பாடுகள்
ஜெர்மானிய மொழியிலேயே இருந்ததால் அதன் நுட்பங்கள் பல மொழிபெயர்ப்பில் சிதைவடையாமல்
அம்மொழியிலேயே கற்க அவர்களுக்கு வாய்ப்பிருந்தது.
கோட்பாடு அவர்களது செயல்பாடுகளை முடக்கியதா, நான் அறியவில்லை. ஆனால் அவர்களை
வியட்நாம் போர் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் என்ன? கிழக்கு ஜெர்மனிகூட போரை
எதிர்த்துத்தானே குரலிடுகிறது.
அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு இருந்தபோதிலும் கிழக்கு ஜெர்மானிய எல்லைக்
காப்பாளர்களை அசச்சுறுத்தியது சிறு வெளியீடுகள் அல்ல. அவை மார்க்சியரான ஜார்ஜ்
லூகாக்ஸின் வரலாறும் வர்க்க உணர்வும் நூலின் பதிப்புகள்.
நான் ஜெர்மன் எல்லையைக் கடந்தபோது எல்லைப் பாதுகாப்புப் படையினர் பெட்டியைத்
திறந்து பின்சீட்டிலுள்ள சூட்கேஸ்களை
ஆராய்ந்தனர். பிராக்கிலிருந்து வெளியேறியபோது எங்களுக்கு ஆச்சரியமில்லை. பழைமைவாத
மார்க்சியர்கள் எந்த விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். இது எங்கள் பிராங்பர்ட்
நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. அவர்கள் பல்கலைக்கழகத்தில் நுட்பநோக்குக்
கோட்பாடுகளில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால் ஒன்று நிச்சயம் அவர்கள் சிந்தனையிலிருந்து கழன்று விழுந்து விட்டது - புதிய
இடதுசாரிகள் தொடுவானில் கண்ட புரட்சியின் புதுமையை அவர்கள் தொலைத்துவிட்டனர்.
நான் ஒரு பிராங்கோ அமெரிக்கச் சிறுநிகழ்வு ஒன்றை நினைவூட்டி இக்கட்டுரையை இறுதி
செய்கிறேன்.
1968 இல் இலையுதிர் காலத்தில் நான் டெக்ஸாஸ் திரும்பினேன். இளம் மார்க்ஸ்
கருத்தியலில் இருந்து அரசியல் பொருளாதார மாற்றம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின்
அடிப்படையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். அங்கு வருகைப் பேராசிரியராக இருந்த
பிரெஞ்சுப் பேராசிரியர் பியரே காஸ்கரை எனக்கு அறிமுகப்படுத்தினர். பிரெஞ்சுக்
கலாசாரம் பற்றி வானொலியில் உரையாடல் நிகழ்த்த என்னை அவர் பணித்தார். கிரேக்
கால்வர்ட் என்ற எஸ் டி எஸ் தலைவரை பிரெஞ்சு நன்கறிவார் என்பதால் உதவிக்கு
அழைத்தேன்.
உரையாடல் மே 68ல் நான் கேள்வியுற்றிருந்த ஒரு சொல்லாடல் சுற்றி அமைந்தது:
‘புரட்சியை நீங்களே உருவாக்க வேண்டும்.’ இதில் பொதிந்துள்ள நவீன விடுதலைச்
சமூகத்தின் எக்காளத்தையும் மேநோக்கையும் யாரும் உணராமல் இருக்க இயலாது.
நான் இங்கு கேள்வியுற்ற இன்னொரு தகவல் வேறொரு பரிமாணத்தை விளக்க வல்லது. காஸ்பர்ட்
அதனை நன்கு அறிவார்.
புரட்சி பற்றிய கால நிர்ணயம் யாரும் அறியாதது. ஆணையிடுதல் மூலம் விடுதலையை
நிகழ்த்தவியலாது.
பாட்டாளி வர்க்கம் உலகெங்கிலும் பரந்து கிடக்கின்றது என்றும் மூன்றாம் உலக
நாடுகளில் எழுச்சியாக உருவாகி அது புரட்சியை
நிகழ்த்தும் என்றும் இதுவரை நாம் கூறி வந்தது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு
வெற்றுக் கற்பனை.
பெண்விடுதலையாளர்கள், இனவாதத்தால் விளிம்பில் தள்ளப்பட்டவர்கள், ஓரினக்
கலவையாளர்கள், மதத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்
ஆகிய தனித்துவம் வாய்ந்த விடுதலைக் குழுக்களிடம் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டு
முழுப்புரட்சியாற்ற வாருங்கள்.
புரட்சி ஒன்றே உங்கள் அத்தனை அவசங்களையும் மாற்றும் என்று நான் தொடர்ந்து கதைத்துக்
கொண்டிருக்க இயலாது.
புரட்சி பற்றிய பெருங்கற்பனையே புரட்சியின் அடிநாதமான ஆன்மாவை அழித்துவிட்டதை என்
அனுபவங்கள் கூறும்.
1920 இல் லெனின் கூறினார், ‘இது இளம்பிள்ளத் தவறு’ என்று. ஆனால் மார்க்ஸ் என்றும்
கூறுவார், ‘பெருச்சாளி என்றும் தோண்டிக் கொண்டிருக்கும்’. நான் கூறுவது ஒருவேளை
வெற்று நம்பிக்கையின் விகசிப்பு எனலாம்.
பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் பின்-இனவாத இயக்கமானது பிற்போக்கான அடையாளம்
சார்ந்த அரசியலை மறுதலித்து புதிய
இடதுசாரி நிலைமைகள் உருவாகி உள்ளன எனக் கொள்ளலாம். மனித உரிமை இயக்கங்களின் பால்
கவர்ந்திழுக்கப்பட்டு கணிசமான இளைஞர்கள் வேற்றுவிதமான ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை
கொண்டு எழுச்சியுறலாம். அமெரிக்காவில் நான் சார்ந்திருந்த எஸ்டிஎஸ்ஸின் நிலை என்ன?
பிரான்சுக்கு நான் செல்லாமல் இருந்திருந்தால் இதனை எவ்வாறு நான் உணர்ந்திருப்பேன்?
பிரான்ஸில் நான் கண்ட புரட்சியின் தழல் எங்கும் உருவாகலாம். தோன்றியவுடன் மறைந்தும்
போகலாம். ஏனென்றால் அதற்கு தான்தான் புரட்சியின் ஆன்மா என்று அறிந்து
கொள்வதற்குக்கூட நேரமிருக்காது.
கட்டுரையாளரான திக் ஹவார்டு அமெரிக்காவின் ‘நியூயார்க் ஸ்டேட் யூனிவர்சிடி’யில்
பணிபுரியும் தத்துவப் பேராசிரியர். ‘ரோஸா லக்ஸம்பர்க்கின் அரசியல்’ உட்பட பல
அரசியல் ஆய்வு நூல்களை எழுதியவர். மொழிபெயர்ப்பாளர் ரா. பாலகிருஷ்ணன் ஆங்கில
விரிவுரையாளர். தமிழ்-ஆங்கில மொழிகளில் பரவலாக மொழிபெயர்ப்பவர். 2007ம் ஆண்டில்
இந்தியாவின் ‘டெக்கான் க்ரானிகல்’ நாளிதழால் சிறந்த கவிதைக்கான பரிசு பெற்றவர்.
http://inioru.com/?p=2124
பதிவுகளுக்கு அனுப்பியவர்: யோகன் கண்ணமுத்து
ashokyogan@hotmail.com |