- முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர்
கல்லூரி புதுக்கோட்டை ) -
தமிழ்க்
காப்பியங்களில் கம்பராமாயணத்திற்குத் தனித்த இடம் உண்டு. கம்பனின்
தன்னலமற்ற, தன்னிகரற்ற படைப்பாகக் கம்பராமாயணம் விளங்குகின்றது.
வால்மீகி ஆக்கிய வடமொழியின் முலத்தின் சார்பினைக் கம்பராமாயணம்
பெற்றிருந்தபோதும் அது மொழி பெயர்ப்பாகவோ, அல்லது தழுவலாக மட்டும்
அமையவில்லை. அதனைத் தாண்டி அது தனிப்பெரும் படைப்பாக
முலத்திலிருந்து செம்மைப்பட்டதாக, தமிழ் இலக்கணச் சூழல்
வாய்ந்ததாக, தமிழ் இலக்கிய நெறிப்பட்டதாகக் கம்பரால் படைக்கப்
பெற்றுள்ளது. இக்காப்பியத்தில் பல பாத்திரங்கள் அழியா இடத்தைப்
பெற்றுள்ளன. கற்போர் மனதில் கம்பராமாயணப் பாத்திரங்கள் நீங்கா இடம்
பெறுகின்றன. இவ்வகையில் குறிக்கத் தக்கப் பாத்திரமாக விளங்குவது
கூனி என்ற பாத்திரமாகும்.
கூனி என்கிற பாத்திரம் தனக்குரிய ஒரு பங்கினை இக்காப்பியத்தில்
ஆற்றியபோதும் பல இடங்களில் அது நினைக்கப்படுகிறது.
கம்பராமாயணத்தின் அடிப்படைப் போக்கையே மாற்றி நிற்பதில்
இப்பாத்திரத்திற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு. இதன் காரணமாகவே
இப்பாத்திரம் இராமன், சீதை, இராவணன் போன்றோர் மனதில் அழியா இடம்
பெற்றதாக நிற்கிறது.
இவளின் அறிமுகத்தைக் கம்பர் ஒரு சிறப்புடன் எடுத்துரைக்கிறார்.
கம்பராமாயணத்தில் கூனி அறிமுகமாகிற ஒரு காட்சி இடம் பெறுகிறது.
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்
(மந்தரை சூழ்ச்சிப் படலம் பாடல் எண் 47)
மந்தரை சூழ்ச்சிப் படலம் என்னும் படலத்தில் கூனி இவ்வாறு
அறிமுகம் செய்யப்படுகிறாள். மந்தரை என்பது கூனிக்கு அமைந்த மற்றொரு
பெயராகும்.
இராவணன் என்ற பாத்திரம் அறிமுகப்படுத்தப்படாத நிலையில்,
காப்பியத்தின் எதிர் பாத்திரமாக விளக்கப் போகிற இராவணனைக் கொண்டு
இங்கு கூனி அறிமுகம் செய்யப் பெறுகிறாள். இராவணன் என்ற காப்பிய
எதிர்பாத்திரத்தினால் காப்பியத்தில் ஏற்பட்ட மாறுபடுகளுக்கு ஒத்த
நிலையில் மாறுபாடுகளை விளைக்கப் போகிறவள் இந்தக் கூனி என்பதால்
இவளை இராவணனுக்கு ஒப்பு வைத்துக் கம்பர் இங்கு அறிமுகப்
படுத்தியுள்ளார்.
குறிப்பாக இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை என்று கம்பர்
காட்டியிருப்பது இராவணனையும் காப்பியத்தின் முன்னிலையிலேயே
அறிமுகப்படுத்திவிடுவதாகவும் அமைந்து விடுகின்றது. இராவணன் இழைத்த
தீமைகள் பல என்றாலும் குறிக்கத் தக்க ஒரு தீமை என்ன என்று
ஆராய்ந்தால் சீதையை அவன் கவர்ந்தமையே ஆகும். இராமனுக்கு உரிய அவளை
இராவணன் கவர்ந்து போகின்றான். இந்த அடிப்படை தீமையே அனைத்துத்
தீமைகளுக்கும் முலமாகி விடுகின்றது. இது போன்றே இராமனுக்கு உரியதாக
ஏற்கப் பெற்ற அரசாட்சியை இராமன் அடையவிடாமல் கூனி தடுக்கப்
போகிறாள் என்ற காரணத்தினாலேயே இங்குக் கூனியும், இராவணனும் ஒரே
நிலையில் காப்பியத்தில் கம்பரால் அறிமுகம் செய்யப்பெறுகின்றனர்.
மேலும் பல இடங்களில் கூனியும், அவளின் தீமையும் காப்பியத்
தலைமைப் பாத்திரங்களான இராமனாலும், சீதையாலும் நினைக்கப்
பெற்றுள்ளது. இராமன் சுக்ரீவனுக்கு அரசினைத் தந்து அவனுக்கு
அரசியல் ஆற்றும் திறத்தை எடுத்துரைக்கின்றான். அப்போது கூனியின்
நினைவும் அவளுக்குத் தான் செய்த தீமைக்கு, அவள் மாற்றாக செய்த
தீமையை எண்ணிப் பார்க்கிறான் இராமன்.
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யேல் மற்று இந்
நெறி இகழ்ந்து யான் ஒரு தீமை செய்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குளவு தோளாய்
வெற்றியின் எய்தி நொய்தின் வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேன்.
( அரசியற்படலம் 12)
இப்பாடலில் கூனியைப் பற்றிய செய்திகளை இராமன் சுக்ரீவனிடத்தில்
எடுத்துரைக்கிறான். கூனியைப் பற்றிய அறியாத சுக்ரீவனுக்கு அவளின்
உருவம் முதற்கொண்டு, அவளுக்குத் தான் இழைத்த தீமை முதல் அவளுக்கு
அதற்கு மாற்றாக செய்த தீமை வரை அனைத்தையும் இராமன் இந்த இடத்தில்
பகிர்ந்து கொள்ளுகின்றான்.
சிறிய வயதில் குறியது ஆக மேனி வளைந்திருந்த கூனியின் முதுகில்
மண் உருண்டைகளை வில் முலமாக வீசி விளையாடியதால் அவள் கோபப் பட்டு
இருக்கிறாள். இந்தக் கோபம் காரணமாகவே அவள் எனக்கு வரவேண்டிய
அரசாட்சியை மாற்றிடத் திட்டம் போட்டு வென்று விட்டாள். எனவே
சுக்ரீவனே சிறியவர் என்று நினைத்து யாரையும் இகழாதே. அவர்கள்
நோகும்படி செய்யாதே என்று இராமன் அறிவுரை பகர்கின்றான்.
கூனியின் உடலுக்குச் செய்த சிறு துயரம் இராமனைப் பதினான்கு ஆண்டு
காலம் கானகத்திற்கு விரட்டி விட்டது. விரட்டியது மட்டும் இல்லாமல்
பதினான்கு ஆண்டுகாலமும் கூனியைப் பற்றி நினைக்கச் செய்திருக்கிறது
என்பது கருதத்தக்கது.
இதன் வழியாகக் கம்பர் உலகிற்குத் தரும் செய்தி ஒன்று உள்ளது.
அதாவது சிறியவர் என்று யாருக்கும் எவ்வித தீமையையும்
எக்காலத்திலும் செய்துவிடக்கூடாது. அச்சிறு தீமை வருங்காலத்தில்
பெரிய தீமையை நமக்குச் செய்துவிடும் என்பதுதான் அந்த உண்மையாகும்.
சீதையும் மற்றோர் இடத்தில் கூனியை எண்ணிப் பார்க்கிறாள்.
கம்பராமாயணத்தின் ஏறக்குறைய கடைசி காட்சி என்றே இந்தக் காட்சியைக்
கொள்ளலாம். இராணவன் அழிவு நிகழ்கிறது. அவன் அழிந்ததும் அனுமன் சீதை
உள்ள இடத்தை நோக்கி வருகிறான். அவளிடத்தில் இராமனின் வெற்றியைக்
கூறி அவளை மீட்டுச் செல்ல அசோக வனத்திற்கு வருகிறான். அசோக
வனத்தில் அப்போதும் அரக்கியர்கள் காவலுக்கு நிற்கின்றனர்.
சீதையிடம் வெற்றி வாசகத்தைச் சொன்ற அனுமன் அவளிடம் ஒரு வேண்டுகோளை
வைக்கின்றான்.
அதாவது இராவணன் அழிந்து போனான். அவனின் ஏவல்படி தினமும்
சீதையைச் சொல்லாலும், செயலாலும் வருத்தி வந்த அசோகவனத்து அரக்கியரை
நான் கொன்றுவிடுகிறேன் என்று அனுமன் சீதையிடம் அனுமதி
கேட்கின்றான். அதற்கு அவள் பதில் கூறுகின்றாள்.
யான் இழைத்த வினையின் இவ்விடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியர் அலரே இவர் ( மீட்சிப்படலம், 35)
இந்தப் பாடலில் சீதை கூனியின் செயலை நினைவு கூர்கிறாள்.
கூனியின் இடையீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தத் துன்பம்
தனக்கு வாய்த்திருக்காது என்று சீதை எண்ணுகிறாள். எனவே
அரக்கியர்களை விடக் கொடுமையான செயலைச் செய்து என்வாழ்வில் துயரத்தை
விளைவித்தவள் கூனியே என்று சீதை கூனியைக் காப்பியத்தின் நிறைவில்
நினைவி கூர்கிறாள்.
கூனியை இராவணன் கொண்டு அறிமுகப் படுத்தினார் கம்பர். இராவணனும்
கூனியைப் பற்றி அறிந்திருப்பவனாக ஒரு இடத்தில் படைத்திருக்கிறார்
கம்பர். முதன் முதலாக இராமனுடன் போர் புரிந்தவிட்டு, நாசம்
வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன் என்றுத் திரும்பி வந்த
இராவணன் இராமனின் வில்லாற்றலை எண்ணிப் பார்க்கிறான். மாலியவானிடம்
இராமனின் வில்லாற்றலைப் புகழ்ந்து உரைக்கின்றான். அப்போது ஒரு
பாடல் இடம் பெற்றுள்ளது.
எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சம்
பறித்தபோது என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்தபோது அன்னான் அந்தக் கூனி கூன்போக உண்டை
தெறித்தபோது ஒத்தது அன்றிச் சினம் உண்மை தெரிந்தது இல்லை
( கும்பன் வதைப் படலம் 17)
இப்பாடலில் இராம இராவணப் போரில் இராமனுக்குக் கோபம் என்பதே
எழவில்லையாம். அவர் அரக்கர் சேனைகளை அழிக்கின்றபோது கூனியின்
முதுகில் மண் உண்டை அடித்தது போலவே விளையாட்டுப் போக்குதான்
இருந்தது. கோபமே இல்லை என்று இராவணன் பேசுவதாகக் கம்பர்
படைத்துள்ளார்.
இதன் முலம் இராமன் வீசும் ஒவ்வோர் அம்பும் கூனி மீது வீசிய
அம்பினை நினைவு படுத்துகிறது. அவளுக்குச் செய்த துன்பத்தின்
தொடர்வான விளைவை அவை பெற்றுள்ளன என்று இராமனின் நிகழ்வுகளில் கூனி
பெற்றுள்ள இடத்தை அறியமுடிகிறது. இச்சிறு நிகழ்வைக் கூட இராவணனும்
அறிந்திருக்கிறான் என்பதையும் எண்ணிப் பார்க்கின்றபோது கூனி என்ற
பாத்திரம் கம்பரின் அடிமனதில் எவ்வளவு பெரிய இடத்தைப்
பெற்றிருக்கிறது என்பதும் தெரியவருகிறது.
இவ்வகையில் கூனியின் செயல்கள் பரந்த அளவில் கம்பராமாணயம்
முழுவதும் எடுத்தாளப் பெற்றுள்ளன. இது கூனி என்ற பாத்திரத்தின்
இன்றியமையா நிலையினைக் காட்டுவதாக உள்ளது.
கூனி என்பவள் கைகேயின் உற்ற தோழியாவாள். மணம் முடித்துத் தயரத
மன்னனுடன் வந்த கைகேயியோடு அயோத்திக்கு வந்தவள் கூனி. இவள்
கைகேயின் நெருங்கிய தோழி. கைகேயி அரசமாதேவியாக இருந்தாலும் அவளை
எந்நேரத்திலும் சந்திக்கும் அளவிற்கு அவளின் அன்பைப்
பெற்றிருந்தவள் கூனி.
இவளின் இயல்புகள் என்ன என்ன என்றுப் பட்டியல் இடுகிறார் கம்பர்.
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினள்
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளதாள்
கான்று எரிநயனத்தாள், கதிக்கும் சொல்லினாள்
முன்று உலகினுக்கு இடுக்கண் முட்டுவாள்
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 48)
இதுதான் கூனியின் பாத்திர இயல்புகள் ஆகும். முன்று உலகிற்கும்
துன்பம் விளைவிக்கின்ற அளவிற்குக் கொடியவள் கூனி. கடும் கோபக்காரி.
துன்பத்தை விளைவித்தே ஆகவேண்டும் என்ற உள்ளத்தோடு திரயக்
கூடியவள். சுடுகின்ற சொற்களுக்கு அவள் சொந்தக்காரி. உடலெல்லாம்
என்றும் கொதிக்கின்ற இயல்பினள். இவள் எந்த நல்லதையும் செய்யாத
செய்யவிடாத சூழ்ச்சிக்காரி என்று கூனியின் இயல்புகள் கம்பரால்
காட்டப்படுகின்றன.
இவளுக்கு இராமன் மீது ஒரு கோபம் உண்டு. பண்டைநாள் இராவன் பாணி
வில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்தில் அழியாமல்
வைத்துக்கொண்டிருப்பவள் இந்தக் கூனி. அதற்குப் பழி வாங்க நேரம்
பார்த்துக் கொண்டிரப்பவள் இந்தக் கூனி.
இராமனுக்கு முடி சூட்டப்பெற இருக்கிறது என்ற செய்தியைக்
கேள்விப்பட்டு அதனைத் தடுப்பதற்காக கைகேயின் மாளிகைக்கு அவள்
வருகிறாள். அந்த நேரத்தில் அமைதியுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள்
கைகேயி. அவளை எழுப்பி அவள் மனத்தைத் திரிக்கும் வேலையைத்
தொடங்குகிறாள் கூனி.
படுத்திருந்த கைகேயை அவள் கால் தீண்டி எழுப்புகிறாள். தீண்டுதல்
என்ற சொல் பாம்பு விடத்துடன் தீண்டியது என்பதற்குப்
பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இந்தச் சொல்லைத் தேர்ந்துக் கம்பர்
இங்குப்பயன்படுத்துகிறார். தீண்டினாள் காலக்கோள் ஆனாள் என்பது
கம்பரின் அடியாகும். அதாவது காலக்கோள் ஆன இராகு என்ற
பாம்பினைப்போல் கூனி கைகேயைத் தீண்டினாளாம். தீண்டலும் உணர்ந்த
கற்பினள் கைகேயி. அவள் மாற்றார் கை தன்மீது பட்டுவிட்டால் அதனை
உணர்ந்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற இயல்பினை உடையவள்.
தீண்டியதும் எழுந்த கைகேயி கூனியிடம் நிகழ்ந்தன பற்றி
கேட்கிறாள். இதற்குக் கூனி வாழ்ந்தனள் கோசலை என்று நிகழ்ந்தன பற்றி
கூறத்தொடங்குகிறாள். நல்ல மனதுடைய கைகேயின் மனதை மெல்ல மெல்ல
கூனி மாற்றுகிறாள்.
கைகேயி! இராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் என்று அரசர் முடிவு
செய்துவிட்டார். இதனால் உனக்கு நன்மை இல்லை. கோசலைக்குதான் நன்மை.
இதுவரை மகாராணியாக இருந்த நீ இனி அந்த நிலையை இழந்துபோவாய். இராமன்
அரசனாக மாறிவிட்டால் கோசலையின் உரிமையாக இந்த நாடு ஆகிவிடும். நீ
உன் நிலையை இழந்து அவள் உதவிய பொருளால் வாழவேண்டும். எண்ணிப்பார்
இது நடக்க வேண்டுமா என்று தன் முதல் கேள்விக் கணையைக் கூனி
தொடங்குகிறாள். இன்னும் பல பேசுகிறாள்.
இதுவரை உன்னை நம்பி வந்தவருக்கு நீ வாரி வாரி வழங்கிக்
கொண்டிருந்தாய். இனி நீ உன்னை நம்பி உன் நாட்டவர் வந்தாலும் உடனே
வழங்க இயலாது. கோசலையிடம் சென்று இதற்குப் பணிந்து நிற்பாயா?
அல்லது வழங்காமல் இருப்பாயா? அல்லது கோப்படுவாயா? அல்லது கொடுக்க
முடியாத துயரத்தால் இறந்து போவாய? எண்ணிப்பார்.
உன் உறவினர்கள் இனி இந்த நாட்டிற்கு நகரத்திற்கு வந்தால் நீ
பெற்ற செல்வத்தைப் பாராட்டுவார்களா? அல்லது கோசலை பெற்ற
செல்வத்தைப் பாராட்டுவார்களா எண்ணிப்பார்.
கைகேயி உன்னுடைய தந்தைக்கு இதுவரை உதவியாக இருந்துவந்த அயோத்தி
அரசு இராமன் ஆட்சிக்கு வந்தபின் உதவியாக இருக்குமா? இராமன் அவன்
உறவினருக்குத் தானே உதவியாக இருப்பான். எண்ணிப்பார்.
இராமனுக்கு வழங்கப் பெற்ற அரசு அவன் தம்பியர்க்கு அதே நிலையைத்
தருமா? குறிப்பாக உன் மகனுக்கு அது கிடைக்குமா? எண்ணிப்பார்
சிவந்தவாய் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின்மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆனபோது
உவந்தவாறு என்? (63)
இராமனும் சீதையும் அரசவையில் இனிதாய் இருக்க உன் மகன்
ஏதுமற்றவனாக இருக்க வேண்டுமா.
அரசு தரும் முடிவைத் தற்போது அரசர் அறிவிக்கக் காரணம் என்ன?
பரதன் அவனின் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கும் வேளையில் ஏன்
இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்?பரதனே உன்னைக் காப்பவர் இனி யார்.
உனக்கு உன்தாயும் துணையில்லை. தந்தையும் துணையில்லை. இனி என்ன
செய்யப் போகிறாய் என்று பலவாறு கூறி திரியா மனத்தினை உடைய
கைகேயியையும் திரித்துவிடுகிறாள் கூனி.
இதன் தொடர்வாக ஏய இரண்டு வரங்களைக் கேட்கச் செய்து இராமன்
காடேகவும், தயரதன் வருத்தப்படவும் ஆன சூழலைத் தன் சொற்களால் கூனி
வருவித்துவிடுகிறாள்.
மண் உருண்டைகளால் அடித்த வலிக்குப் பதிலாக கூனி வீசிய
சொல்லம்புகளுக்கு வலிமை கூடுதலாக இருந்துள்ளது. இதன் காரணமாக
இராமாயணத்தின் போக்கே மாறித் துன்பச் சூழலுக்குச் சென்றது.
இவை அத்தனைக்கும் காரணம் கூனியின் சொற்கள் என்ற ஆயுதம் மட்டுமே.
muppalam2006@gmail.com
manidal.blogspot.com