நாட்டியப் பேரொளி பத்மினி கடந்த ஞாயிறு (செப்டம்பர் 24, 2006) அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார். சனிக்கிழமை கலைஞர் கருணாநிதிக்குக் கலைஞர்களால் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பத்மினி உடல் சுகவீனமுற்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி எனத் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களுடனெல்லாம் நடித்த பத்மினி 200க்கும் அதிகமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர ஹிந்தித் திரைப்படவுட உலகிலும் ஒருகாலத்தில் கொடி கட்டிப்பறந்தார். இவரும் ராஜ்கபூரும் நடித்த 'மேரா நாம் ஜோக்கர்' ரஷ்யாவில் மிகவும் பிரபல்யமடைந்த ஹிந்திப் படங்களிலொன்று. தமிழில் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சுமார் ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் மோகனாங்கி பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். நாட்டியத்தாரகைக்கேற்ற பாத்திரம். அதில் அவர் 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?", 'நலந்தானா நலந்தானா' போன்ற பாடல்களில் மிகச்சிறப்பாக நடனமாடி நடித்திருந்தார். இவரும் இன்னுமொரு நாட்டியத் தாரகையான வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஜெமினியின் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' குறிப்பிட வேண்டிய இன்னுமொரு படம். அதில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் வையந்திமாலாவுக்கும், பத்மினிக்குமிடையில் நடக்கும் நடனப் போட்டி புகழ்பெற்றதொரு திரைப்படக் காட்சி.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பூஜபுராவில் 1932, ஜூன் 12ம் தேதி பிறந்தார். தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா. தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்த பத்மினிக்கு சகோதரிகள் இருவர். ராகினி, லலிதா. மூவருமே நாட்டியத்தில் சிறுவயதிலிருந்தே சிறந்து விளங்கினார்கள். 'திருவாங்கூர் சகோதரிகளான' லலிதா- பத்மினி நாட்டியமில்லாத தமிழ்த் திரைப்படமே ஒரு காலத்தில் இல்லாமலிருந்தது. பதினேழு வயதில் 'கல்பனா' என்னும் இந்திப் படம் மூலம் திரையுலகில் காலடியெடுத்து வைத்தவர் பத்மினி. பின்னர் 1950ல் மணமகள் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவரான டாக்டர் கே.டி. ராமச்சந்திரனை 1961இல் திருமணம் செய்து சிறிது காலம் திரைப்பட உலகுக்கு முழுக்குப் போட்ட பத்மினி மீண்டும் திரையுலகுக்கு நடிக்க வந்து 'இரு மலர்கள்', 'தில்லானா மோகனாம்பாள்' போன்ற திரைப்படங்களில் நடித்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் மீண்டும் 1977இல் அமெரிக்கா திரும்பிய அவர் அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து இறுதிவரையில் நடத்தி வந்தார். அண்மையில்தான் உடல்நிலை காரணமாகத் தமிழகம் திரும்பிய அவர் அண்மையில் எம்ஜிஆரின் 'நாடோடிமன்னன்' திரையிட்டபொழுது நடந்த விழாவில் கலந்து கலந்து கொண்டார். தொடர்ந்து நடிகர் சூரியாவின் திருமணவிழாவிலும் கலந்து கொண்ட இவர் இறுதியாகக் கலந்து கலைஞருக்குத் தமிழகத் திரைப்பட உலகினர் எடுத்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, பல்வேறு அமைப்புகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளைப் பெற்ற இவருக்கு சோவியத் அரசு சிறந்த நடனமணிக்கான விருதினை வழங்கியதோடு, தபால்தலை வெளியிட்டும் கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை கலையரசியாகவே கம்பீரமாகவே உலா வந்த பத்மினியின் மறைவானது தமிழ்த் திரைப்பட உலகுக்கும் குறிப்பாக நாட்டியத் துறைக்கும் ஏற்பட்டதொரு பேரிழப்பு. - ஊர்க்குருவி -