| 
  ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்
 - பொ.கருணாகரமூர்த்தி. -
 
 
  இங்கே பாடசாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை இரண்டு தடவைகளாவது எங்காவது 
  சுற்றுலா அழைத்துப்போவது வழக்கம்.
  அப்படி ஒவ்வொரு தடவை சுற்றுலாபோய்விட்டு வரும்போதும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதை 
  கொண்டுவருவாள் காருண்யா.
  அவளுக்கு ஒன்பது வயதாயிருக்கும்போது LUBECK அருகிலுள்ள ஒய்டின் (EUTIN) என்கிற 
  குக்கிராமத்துக்கு சுற்றுலா போயிருந்தார்கள். 
  பெர்லின் நகரத்தை மட்டிலுமே தெரிந்திருந்த அவளுக்கு ஒய்டினின் தனிமையும் 
  அமைதியும் ஈவாயிருந்த வீடுகளும், எப்போவாவது 
  வீதியில் தென்பட்ட மனிதர்களும், சிறுகாடுகளுக்கு நடுவில் ஆங்காங்கே அமைந்திருந்த 
  தோட்டவெளிகளில் காரெட் கோவா சோளம் 
  சீனிக்கிழங்கு பயிரிட்டிருந்த கொல்லைகளும், கோழி பன்றி செம்மறியன்ன கால்நடைப் 
  பண்ணைகளும், வயல்களும் சிற்றோடைகளும்,
  ஏரிகளும் பரவசப்படுத்தியிருந்தன. அத்துடன் இவர்களின் விடுதிக்கு அலகிலும் ஒரு 
  கண்ணைச்சுற்றியும் வெள்ளை மறை வைத்திருந்த 
  கபிலநிற அநாமதேய நாயொன்றும் அடிக்கடி வந்துபழகி இவர்களுடன் வாலாயமாக 
  இருந்திருக்கிறது. அதையும் படம் பிடித்துக்கொண்டு 
  வந்திருந்தாள். பல்வேறு இடங்களைப் பார்க்கவும் ரசிக்கவும் ஒவ்வொரு நாளும் 
  கால்நடையாகவே போவார்களாம். இவர்கள்
  எங்குபோகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு முன்னதாகவே போய் அந்தநாய் அவர்களை 
  எதிர்பார்த்தபடி முனகிக்கொண்டு 
  காத்திருக்குமாம். சில நாட்களில் உயர்ந்த மரங்களுள்ள செறிவான காட்டினூடு 
  ஒற்றையடிப்பாதைகளில் தொலைவாகப் பத்து
  கிலோமீட்டர் தூரத்துக்குப் போயிருந்தபோதுகூட ஒரு மாயாவியைப்போல அது அவர்களுக்கு 
  முதலே அங்கேபோய் நின்றதாம். 
  அநாமதேயமாக நின்ற அதன் பெயர் எவருக்கும் தெரியாதாகையால் எவர் என்னபெயர் 
  சொல்லிக்கூப்பிட்டாலும் வாலையாட்டிக்கொண்டு 
  ஓடிவருமாம். இவ்வாறாக ஒரேயடியாக அம்மறையன் நாயின் புராணம் பாடிவிட்டு ” அந்த 
  நாய்க்கு எப்படி அங்கே எல்லா இடமும் 
  தெரியுமெண்டு சொல்லுங்கோ பார்ப்பம்…………..?” என்று என்னிடம் புதிர் போட்டாள். 
 நாய் பூனை எலிக்கு கீரிக்கு மோப்பத்தின் மூலம் திசையறியும் சக்தி (Orienteerung) 
  அதிகம் என்பார்கள். வேறு எதைச் சொல்ல?
 
 ” ப்ச் ! தெரியல………. நீதான் சொல்லேன். ”
 
 “ ஏனெண்டால் அது ஒய்டின் நாய் டாட் ! ”
 
 கெய்ரோவின் எலியென்றால் அதுக்கு அங்குள்ள சந்து பொந்துகள் எல்லாம் தெரிந்துதானே 
  ஆகணும்? என்னைக் கவிழ்த்துவிட்ட களி
  முகத்தில். பத்து ஆண்டுகள் கடுகிப்பாய்ந்திட இப்போது அவள் சட்டமும் ப்ரெஞ்சும் 
  படிக்கும் மாணவி. இந்த ஆண்டு
  கோடைவிடுமுறைக்கு அவர்கள் துறையில் பத்து மாணவிகள் சேர்ந்துகொண்டு ஃப்ரான்ஸின் 
  மொம்பிலி (MONTPELLIERS), டூலூஸ் 
  (TOULUSE), நீஸ் (NICE) ஆகிய இடங்களுக்கு சுற்றுலா போயிருந்தார்கள். போயிட்டு 
  வந்ததும் அவள் பயண உறைகளை 
  கீழேவைக்கமுதலே என்னிடம் கேட்டாள் 
  ” Geizhal என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தை என்ன டாட் ? ”
 
 “ உலோபி, கருமி, ஈயான், கஞ்சன், கசவாரம் என்று இருக்கிறது. நாட்டார் 
  வழக்கிலிருந்தும் நப்பி, கஞ்சல், பிசுனாறி, ஈப்பிணி என்று 
  கனக்கவே சொல்லலாம்.”
 
 ” இவ்வளவு வார்த்தைகள் இருக்கே அப்போ தமிழர்களும் நிறையப்பேர் கஞ்சல்களோ?”
 
 “ அப்படி மேம்போக்காகச் சொல்லிவிடமுடியாது. அவர்கள் பொதுவில் விரையங்களை 
  விரும்பாத பொருண்மியவாதிகள். “
  அவளுக்குப்புரியவில்லை. ’ஙே’ என்று என்னைக் கங்காருபோலப் பார்த்து முழித்தாள்.
 
 “ அதாவது எக்கனோமிஸ்டுக்களடா…….”
 
 “ இல்லை. நீங்கள் இனத்தைத்தான் விட்டுக்கொடுத்திடுவீங்களா சரி, இருக்கட்டும் 
  தெரியாத்தனமா எங்களோட கூட்டுச்சேர்ந்துவிட்ட ஒரு 
  கஞ்சியைப் பற்றி முதல்ல சொல்றன் ” என்றுவிட்டு இடியிடித்துச் சிரித்தாள்.
 
 ’’ அவளது பெயர் ஜொஹானா. அவளை நாங்கள் இப்போ அவளை -பத்து சென்ட்ஸ்- என்றுதான் 
  சங்கேதமாகச் சொல்லுவோம். 
  புரிஞ்சுக்கமாட்டாள். ஒருவகையில் அப்பாவி. அவளால் யாருக்கும் கெடுதல் இல்லை. 
  ஆனால் சிக்கனத்தையிட்டு அவள் மூளை 
  எப்படியெல்லாம் வேலைசெய்யுமென்று எவராலும் சொல்லிடமுடியாது. இத்தனைக்கும் அவள் 
  ZEHLENDORFல இருந்து வருகிறா அப்பா.
 ”
 ZEHLENDORF பெர்லினின் பெரும் பணமுதலைகளால் மட்டும் மிதக்கக்கூடிய ஏரி அது. 
  பொருண்மியத்துக்காக எதிர்காலத்தில அவளுக்கு 
  நோபலோ இல்லை வேறொரு பரிசோ கிடைத்தால் அதிசயமில்லை. அவளிடமிருக்குமொரு 
  விரும்பத்தக்க குணம் என்னவென்றால் தானே 
  எல்லாக்காரியங்களையும் முன்னின்று செய்வாள். நாங்கள் மொம்பெலி போவதென 
  முடிவெடுத்ததும் இணையமெல்லாம்
  தேடோதேடென்று தேடி அவள்தான் கட்டணம் மலிவான விடுதிகள் கண்டுபிடித்தாள். 
  எங்களுக்கு வேண்டிய விண்ணுந்து பேருந்துச் 
  சீட்டுக்கள்கூட அவளேதான் தேடித்தேடி முன்பதிவு செய்துகொண்டு எடுப்பித்தாள்.
 
 நாம் தங்கிய விடுதிகளில் நாங்களே சமையல் செய்ய வசதிகள் இருந்தன. நாம் முதலில் 
  போய் இறங்கிய மொம்பெலியில்
  விடுதிக்குப்பக்கத்திலேயே வசதியாக ஒரு வெதுப்பகமும் இருந்தது. காலையுணவை 
  வெதுப்பகத்தில் முடிப்பது, பகலில் வெளியே
  சுற்றும்போது எதையாவது கடிப்பது, பின் இரவுவந்து எல்லோரும் சேர்ந்து 
  கூட்டாஞ்சமையல் சமைப்பது என்று தீர்மானித்தோம்.
  முதநாள் காலை வெதுப்பகத்தில் குறொசோங், பகெட் (Crossoints, Bauguettes) என்று 
  அங்கத்தைய பிரபலமான வெதுப்புச் 
  சமாச்சாரங்களை காலையுணவாக அனைவரும் அனுபவித்தோம். ஆனால் மறுநாள் காலை 
  அங்குகுவரமுடியாதென்று ஜொஹானா
  மறுத்தாள். காரணம் கேட்டபோது ’அங்கு சாப்பாடு சரியான விலை தனக்குக் 
  கட்டுபடியாகாது’ என்றாள். ’அதனாலென்ன விலை சற்று 
  அதிகமாகத்தான் இருக்கட்டுமே சுற்றுலா வந்த இடத்தில் இதையெல்லாம் 
  கணக்கிலெடுக்கமுடியுமா………. இதிலென்ன சிக்கனம் 
  வேண்டியிருக்கு’ என்றபோது அவள் பிறிதொரு மாற்றுத்திட்டத்தை முன்மொழிந்தாள். 
  குறொசோங், பகெட், ப்றெட், பண் 
  எல்லாவற்றையும் வெதுப்பகத்தில் வாங்கிக்கொண்டு மம்லேட், சீஸ், பேக்கன், ஹாமை 
  (அப்பளத்தின் கனத்துக்கு அரியப்பட்ட வாட்டிய 
  இறைச்சி) பொது அங்காடியில வாங்கிட்டால் எமக்குப் பாதிச்செலவு கூட ஏற்படாதென்றாள். 
  அப்படியே அடுத்த நாள் செய்தோம்.
  காலைச்சாப்பாடானதும் கணிப்பானையும் ஒரு தாளையும் எடுத்துவைத்துக்கொண்டு பல 
  கணிப்புகள் போட்டாள். போட்டு முடித்ததும் 
  கறோலா 1.23, பிறிட்டா 1,43, லீனா 1.74 மேர்ஸி 1,69 சாரா 1.52 றெபெக்கா 1.59 இயூரோ 
  என்று அறிவித்தாள். நாமெல்லோரும் அவள் 
  சும்மா தமாஷ்தான் பண்ணுகிறாள் என்று எண்ணிக்கொண்டிருக்கவும் நிஜமாகவே 
  ஒவ்வொருவரிடமும் பணம் சேகரிக்கத்தொடங்கினாள் 
  ஜொஹானா. தொகையில் எதுக்கு வித்தியாசங்கள் என்றதுக்கு ’ஒவ்வொருத்தரும் 
  எடுத்துக்கொண்ட பண் பகட் ரொட்டி ஹாம் வெண்ணை 
  சீஸ்கட்டிகளுக்குத் தகுந்தபடி கட்டணமும் வேறுபடும்’ என்று விளக்கம் தந்தாள். 
  மொம்பெலியிலிருந்து நூறு கி.மீட்டர் தூரத்தில் நீஸ் 
  என்றொரு கடற்கரை நகரம். (நீங்கள் You Tube ஐச்சொடுக்கி இந்த அழகு 
  நகரைப்பார்க்கலாம்) அங்கு செல்லும் தொடருந்துப்பாதை 
  முழுவதும் ப்ரான்ஸின் தெற்குக்கடலோரமாகவே அமைந்துள்ளது. கடலையும் மக்களையும் 
  பார்த்தபடி அதில் பயணிப்பது ஒரு 
  இன்பானுபவம். கோடைகாலமாதலால் நீஸிலும் போய் இரண்டு நாட்களைக்கழிப்பது எங்கள் 
  பயணத்தில் ஒரு திட்டம்.
  ’நாங்கள் நீஸ் புறப்படுவதற்கிடையில் ஜொஹானா விடுதி முகவரிடம் போய் ’நாங்கள் 
  இரண்டு நாட்கள் நீஸ் போய் தங்குவதாக
  இருக்கிறோம்…….. அதனால் அந்த இரண்டு நாட்களுக்குமான விடுதிக்கட்டணத்தையும் 
  நீங்கள் ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது?’ என்று 
  கேட்டாளாம். முகவர் ’அப்படிச் செய்வதற்கெல்லாம் எனக்கு அதிகாரம் இல்லையே’ 
  என்றுசொல்லிவிடவும் நொந்துபோனாள்
 ஜொஹானா.
 
 நாம் ஃப்ரான்சுக்குப் புறப்பட்ட அன்று ஜொஹானாவுக்கு என்னதான் பிலாதியோ 
  மொம்பெலியிலிருந்து நீஸுக்குச் சென்றுவருவதற்கான 
  தொடருந்துச் சீட்டுக்களை பெர்லினிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாள். பின் அவள் 
  தகப்பனுக்கு குறுந்தகவல் எழுதிக்கெஞ்சியதில் 
  அவரும் அவற்றை கடுகதி அஞ்சலில் அனுப்பியிருந்தார். எமது துரதிஷ்டம் கடிதக்காரர் 
  அதைக்கொண்டுவந்த நேரத்தில் நாங்கள் எவரும் 
  விடுதியில் இருந்திருக்கவில்லை. அவை வந்தகதியிலேயே பெர்லினுக்குத் திரும்பி 
  விட்டன. கடுகதி மற்றும் முன்னுரிமை அஞ்சல்கள் 
  அய்ரோப்பாவில் எங்குமே அப்படித்தான், விநியோகிக்கப்படாவிடில் உடனே அனுப்பினரிடம் 
  திரும்பிவிடும். மூன்று மாதங்கள் 
  முன்னரே தள்ளுபடிவிலையில் 23 இயூரோவுக்கு வாங்கியிருந்த சீட்டுக்களுக்கு இனியும் 
  ஒவ்வொருவரும் 60 இயூரோ செலவு 
  செய்யவேண்டியிருக்கிறதே? இருந்தும் அத்தற்செயலுக்காக நாங்கள் எல்லோருமே ஜொஹானாவை 
  மன்னித்து விட்டிருந்தோம்.
 
 ’ 60 இயூரோ செலவுசெய்தெல்லாம் என்னால் நீஸ் வரமுடியாது. நான் விடுதியில்தான் 
  இருப்பேன்’ என்று அடம்பிடித்தாள் ஜொஹானா. 
  பரவாயில்லை உனக்கான சீட்டையும் நாங்களே வாங்கித்தருகிறோம் என்றதும் அரைமனதுடன் 
  சம்மதித்தவள் மீண்டும் தகப்பனைப்
  போனில் இறைஞ்சவும் அவரும் மனக்கனிந்து ’சரி மீண்டும் கூரியரில் 
  அனுப்பிவைக்கிறேன். கிடைப்பதும் கிடையாததும் இனி உங்கள்
  அதிஷ்டம்’ என்றுவிட்டு அனுப்பிவைத்தார்.
 
 நாங்கள் நீஸ் புறப்பட ஒரு மணி நேரமே இருக்க தேவதை ரூபத்தில் கூரியர் வண்டியும் 
  வந்தது. தாங்கமுடியாத சந்தோஷத்தில் 
  கூவியபடி வானத்துக்கு எம்பிய எம் கால்கள் சரியாகத்தரையில் பதியமுன்னரே ஜொஹானா 
  கறாரான தொனியில் அறிவித்தாள்:
  “Ok, Freunde. Das macht dann natuerlich 4 Euro 70 pro Person fuer den 
  Expressversand, und die ganzen Ferngespraeche mit meinem 
  Handy…!” [தோழர்களே……….. கவனியுங்கள். முந்திய அஞ்சல், இந்தக் கூரியர், என் 
  தொலைபேசிச் செலவு எல்லாம் சேர்த்துத் தலைக்கு 4 
  இயூரோ 70 சதமாகிறது !] அத்தனை ஆரவாரங்களும் நொடியில் ஒடுங்கின. பிறகென்ன அவளது 
  தவறுக்கும் சேர்த்து நாங்கள் சம்பளம்
 வழங்கினோம்.
 
 நீஸில் கடற்கரையும் மக்களும் ஆரவாரமும் ஒரு கார்ணிவலைப்போல ஜே ஜே என்றிருந்தது. 
  கணப்பில் வாட்டிய கஸ்டானியன், 
  அல்மொண்ட், ஹாஸல் மற்றும் வால்நட் விதைகள், ஸ்வீட் ஆப்பிள், சோளப்பொரி, கடலை 
  எனநிறையத்தின்பண்டங்கள் அங்கே 
  விற்றன. இன்னும் Looping/ Rollercoaster, ரங்கராட்டினம், சறுக்கும் கார்ச் சவாரி, 
  குதிரைச்சவாரி, படகோட்டம் என்று எதுக்கும் போகாமல் 
  ஒரு ஓரமாக நின்றாள் ஜொஹானா. அங்கே இத்தாலியின் பிரபல கெலாடோ, சொர்பெட் வகை 
  ஐஸ்கிறீம்கள் தாராளமாகக்
  கிடைத்தன, சுவைத்தோம். ரம்மியமாகக் கழிந்தன இரண்டு நாட்களும்.
 
 ஒரு முறை நான் 3 இயூறோ 10 சதம் விலையான ஜோர்கெட்ஐஸ்கிறீம் ஒன்றை வாங்கியபோது 
  என்னிடம் பத்து சதம் 
  இல்லாமலிருந்தது. ஜொஹானா தானாகவே தன் பர்ஸிலிருந்து அதைத்தந்து உதவினாள். நான் 
  அதில் ஒரு விள்ளல் சுவைக்கு முன்னே
  ’நானும் பத்துச்சதம் தந்திருக்கிறேன் நானும் அதில் நக்குவேன்’ என்றாள் 19 வயது 
  ஜொஹானா. அதைத்தூக்கி அவளிடமே 
  கொடுத்துவிட்டேன். ஜொஹானா ’பத்துசென்ட்ஸ்’ ஆகியது இப்படித்தான்!
 
 நீஸிலிருந்து புறப்படும் நாள் நாமெல்லோரும் ஷொப்பிங் போனோம். வால்மாதிரி 
  ஒட்டிக்கொண்டு ஜொஹானாவும் எங்கூட எல்லாக் 
  கடைகளுக்கும் வந்தாள். அனால் அந்த மூன்று மணிநேரத்திலும் அவள் 
  தேடிக்கண்டுபிடித்ததெல்லாம் சில கலர்பென்சில்கள், எதிலாவது
  ஒட்டிவிடக்கூடிய சிறு நினைவூட்டல் நறுக்குகள், கொஞ்சம் வியூ காட்ஸ், தன் 
  தங்கைக்கு தண்ணீர்ப்படம் போலச்சில படங்கள் இப்படி   சில சதம் பெறாத சமாச்சாரங்களே. அவள் பொறுக்கிய அத்தனை பொருட்களும் அதே விலைக்கு 
  பெர்லினிலும் கிடைக்கும். பாவம் 
  அவளுக்கு அந்த விஷயம் தெரியாது.
 
 மாணவர்கள் நாங்கள் எமது பிறந்தநாட்களின்போது எம்மிடையே சிறு சிறு பரிசுகள் 
  பரிமாறிக்கொள்வது வழக்கம். இவள் எப்போதும் 
  ஏற்கெனவே தான்வாங்கி வாசித்த புத்தகங்களையே எமக்குப் பரிசளிப்பாள். போதாததுக்கு 
  அது தன் பாட்டியிடமிருந்து தான் 
  கற்றுக்கொண்ட ’அற்புதமானதொரு சிக்கனப்பழக்கம்’ என்றும் பீற்றுவாள்.
 
 நாங்கள் பெர்லின் திரும்பமுதலே நாம் எடுத்துப்போயிருந்த ரொக்கங்கள் அனேகமாக 
  அனைவரிடமும் தீர்ந்து போய்விட்டிருந்தன.
  ஃப்ரான்ஸ் வங்கிகளின் தான்வழங்கி இயந்திரங்களில் ஜெர்மனிய கடன் அட்டை மூலம் பணம் 
  எடுப்பதாயின் அவை தம் பிரத்தியேக 
  தரகுப்பணம் 10 இயூரோ வையும் சேர்த்தே அறவிட்டுவிடும். (ஐக்கிய இராட்சியத்தில் 
  அப்பிடியல்ல) அதனால் நாங்கள்
  தயங்கிக் கொண்டிருந்தோம். ஜொஹானாவுக்கு அந்த மின்னல் யோசனை எப்படித்தான் அவள் 
  மூளையில் பொறித்ததோ? அறிவித்தாள்:
  ” தோழர்காள்…………. நீங்கள் ஒவ்வொருவரும் பணத்துக்காக தனித்தனியே பயணச்சீட்டு 
  எடுத்துக்கொண்டு வங்கிக்கோ தான்வழங்கி 
  தேடியோ வினைக்கெட்டெல்லாம் அலையவேண்டியதில்லை. என்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது. 
  இன்னும் ஒரு மணிநேரத்தில் உங்கள்
  ஒவ்வொருவருக்கும் வேண்டியதான தொகைகளை நானே தருவேன். சரிதானே? ” என்றாள். எங்கள் 
  அனைவருக்குமே நடந்து நடந்து 
  கால்கள் சோர்ந்து போயிருந்தன, யார் குத்தியும் அரிசியாகட்டுமேன். அனைவரும் 
  சம்மதித்தோம்.
 
 நாங்கள் ஒவ்வொருவருக்கும் எமக்குத் தேவையான தொகைகளை நூறு, இருநூறு , நூத்தம்பது 
  என்று சொல்லவும் படபடவென்று
  அவற்றை ஒரு சிறுதாள் நறுக்கில் குறித்துக்கொண்டு ஜீன்ஸுள் நுழைந்து புறப்பட்டாள். 
  போனவள் மொத்தமாக வேண்டிய 
  தொகையைத் தன் கடன் அட்டையில் எடுத்துக்கொண்டு ( தொகை எதுவாயிருந்தாலும் ஒரு கடன் 
  அட்டைக்கு 10 இயூரோ மட்டுந்தானே 
  தரகுப்பணம்?) வந்தவள் அனைவருக்கும் வேண்டிய தொகைகளைத் தந்தாள். பின் நிதானமாக: ” 
  நீங்கள் எல்லோரும் ஊருக்கு
  வந்ததும் இந்தத்தொகைகளைத் எனக்குத் திருப்பிவிடுவீர்கள்தான். சந்தேகமில்லை……….. 
  ஆனால் கண்ணுகளா என் பஸ் செலவு 40 
  சென்ட்ஸோடு அந்த வங்கியின் தரகுக்கூலி 10 இயூரோவையும் சேர்க்க மட்டும் நீங்கள் 
  மறந்துவிடக்கூடாது ” என்றாள் அச்சகாய
 தேவதை !
 
 நாங்கள் மொம்பெலியைவிட்டுப் புறப்படும் நாள் நிறைய காய்கறிகளும், உருளைக்கிழங்கு, 
  வெங்காயம், சூரிய காந்தி சமையல் 
  எண்ணை என்பனவும் எஞ்சிவிட்டிருந்தன. நாங்கள் அவ்விடுதிக்குப் போனபோதும் முன்பு 
  அங்கு தங்கி இருந்தவர்கள் தமக்கு எஞ்சிய 
  சமையைல் பொருட்கள், பால்பெட்டிகள் போன்றவற்றை வீசிவிடாமல் அச் சமையலறையின் 
  குளிர்பதனப்பெட்டியில் விட்டுவிட்டே 
  போயிருந்தார்கள் நாமும் அப்பிடியே விட்டுவிட்டுப்போவோம், அடுத்து வருபவர்கள் 
  பாவிக்கட்டுமே என்று இருந்தோம். அது 
  ஜொஹானாவுக்கு உடன்பாடாயில்லை. எதுக்கு அவற்றை வீணே அங்கேயே விட்டுவிடவேண்டும் 
  என்று முனகிக்கொண்டிருந்தாள். 
  நாங்கள் உடை அணிந்துகொண்டு புறப்படுவதற்கு ஆயத்தமாகியபிறகும் ஜொஹானாவைக் 
  காணவில்லை. எங்கேயென்றுதேடினால்
  அவள் சமையலறையில் ஒரு ஏப்ரனைச் சுற்றிக்கொண்டு கிழங்கு காரட் லீக்ஸ் அன்ன 
  காய்கறிகளையெல்லாம் சிறுதுண்டுகளாகவெட்டி 
  வெங்காயம் உப்பு மிளகுப்பொடி சேர்த்து மசாலாவாக வாணலியில்போட்டு வதக்கிப் 
  புரட்டியெடுத்து ரொட்டித்துண்டுகளுக்கிடையில் 
  வைத்துச் சாண்ட்விச்சுகளாகப் பண்ணிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
 
 **********
 
 பின் குறிப்பு:- ” எமது அடுத்த சுற்றுலாவிலும் எம்மோடு நாம் சூசானாவை மட்டும் 
  சேர்த்துக்கொள்ளவே கூடாது, அவளொரு 
  கஞ்சல்பிசினாறி” என்றாளாம் ஜொஹானா. அந்தச் சூசானாவைப்பற்றியும் இன்னும் நானோ 
  காருண்யாவோ பிறிதொருகால் எழுதலாம்.
 
 karunah08@yahoo.com
 |