இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

 நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்?

- பொ.கருணாகரமூர்த்தி (பெர்லின்)-


நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்?பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்அது ஒரு கோடைகாலம். அவ்வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்திலில்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன. வடதுருவத்தின் பனிமலைகளும் பாறைகளும் உருகியதால் கடல்மட்டமே உயர்ந்திருந்தது. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப்போலவே ஜெர்மனியின்வீடுகளும் கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை ஆதலால் சூழலின் உஷ்ணம் மிதமிஞ்சிப்போகும்போது அவற்றுக்குள் வதிவது அசௌகரியம். அவற்றின் அறைகள் வெதுப்பகத்தின் கணப்பறைகள் மாதிரி ஆகிவிடும். காற்றுவீசாததால் மரங்களும் கொடிகளும் சிறிதும் அசைவற்று சித்திரங்கள்போல் நிற்க மக்கள் அபேதவாதிகளாய் களிசானிலும் பனியனிலும் திரிந்தனர். அனைத்து நீச்சல் நிலைகளிலும் நீண்ட கியூவில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் காத்திருந்தனர்.

அன்று நான் சுரங்க ரயில் நிலையமொன்றில் ரயிலுக்காகக் காத்திருந்தேன். ரயில் வந்தது. இறங்குபவர்கள் இறங்கி ஏறுபவர்கள் ஏறிக்கொண்டார்கள். எனக்கு "தாண்டுறா ராமா" மன்னிக்க " தாவடா ராமா " என்கிற ஆணை எங்கிருந்தும் வராததினால் சும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அது புறப்படப்போகிறேனென்று கூக்காட்டியதுந்தான் அறிவில் உறைக்கிறது சம் சில்லி மிஸ்டேக்.......சம்வெயர். மூளையைக்கொஞ்சம் அதன்பாட்டுக்கு ஜொக்கிங்விட்டேன். அது நான் எதற்கு அங்கேவந்தேனென்பதன் காரணகாரியங்களை தர்க்கரீதியாக அலசிப்பார்க்கிறது. எதற்குப்புறப்பட்டேன்? வருமானவரி ஆலோசகருடனான சந்திப்பிணக்கத்திற்காக. அவரைப்பார்ப்பதாயின் எங்குபோகவேணும்? ரியர்கார்டனுக்கு. இந்த ஆறாம் இலக்க வண்டியும் ரியர்கார்டனூடாகச் செல்வதுதானே? சரி.

" சட்டெனத் தாவடா ராமா."

தாவினேன்.

என் ஞாபகசக்தி குறைந்துகொண்டுபோன வேகத்தில் அது சீக்கிரத்தில் தடயமொன்றும் இல்லாமல் ஈதர்மாதிரி ஆவியாகிவிடும் போலிருந்தது. பிறக்க முதலே மனதில் பெயரிட்டுப் பெற்றமகள் அஸ்வதியை 'கீதா' என்று அழைத்தபோது மனைவி கடுப்புமிகவானாள். இருபது வருடங்களுக்குமுன் ஊரில் குழந்தையாக விட்டுவிட்டு வந்த மூத்தசகோதரரின் மகள்தான் கீதா. அவளுக்கு அப்போது பத்து அகவைகள். அஸ்வதிக்கு இப்போதுதான் ஆறு அகவைகள் ஆகிறது.

"இன்னும் உங்களூக்கு வீட்டு நினைவுகள் விட்டுப்போகேல்லை."

மனைவிக்கும் என் பிரச்சனை சரிவரப்புரியவில்லை.

சிலவேளைகளில் போக்குவரத்துச் சமிக்கையுள்ள சந்திகளைக் கடந்து சென்றபின்னால் மனது குழம்பியடிக்கும். "பச்சையில் வந்தேனா, இல்லை சிவப்பில்தான் கவனிக்காமல் வந்துவிட்டேனா?"
ஒருமுறை சிவப்பில் நான் இழுத்துக்கொண்டு வந்தபோது காருக்குள் இருந்த ஜெர்மன்காரர் தமாஷ் பண்ணீனார்: " Hey Ram Es was Kirschgruen." (சிக்னல் செறிப்பழப் பச்சையிலிருந்தது) எல்லாவற்றிலும் சிரமந்தருவதாக இருந்தது போக்குவரத்துச் சமிக்கைகளில் சிவப்பாக இருக்கும்போது காரைத் தொடர்ந்து செலுத்தலாமா இல்லை நிறுத்தவேண்டுமா என்கிற மயக்கம் வந்தபோதுதான். சிலவேளைகளில் சமிக்கை பச்சையாக இருந்தபோது வேகமாகவந்த வண்டிக்கு பிறேக் போட்டிருக்கிறேன். பின்னால் வந்தவண்டிக்காரர்கள் பலரும் எம் Primates இனக்குழுமத்தை மறுதலித்து என்னைக் குள்ளமான முலைகள் அதிகமுள்ள வேறொரு விலங்கின் இளவல் என்றனர்.

பின்நவீன இலக்கியத்தில் பாவிக்கப்படும் பலவார்த்தைகளை இரண்டு நாட்களுக்குமனதில் வைத்துக்கொள்வதே சிரமமாயிருக்கிறது. ஆங்கில/ஜெர்மன் நூல்களைப்படிக்கையில் எதிர்ப்படும் புதிய வார்த்தைகளை அகராதி பார்த்துதெரிந்து கொள்வேன். பின் அடுத்தடுத்த பக்கங்களில் அதேவார்த்தையை மீளச்சந்திக்கும் போது அது நான் ஜென்மாந்திரங்களாய் அர்த்தம் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தை போலிருக்கிறது.

மின்னஞ்சல்கள் எழுதுகையில் சம்பிரதாயமான முடிவுவரிகளை எழுதாமல் பல அஞ்சல்களைப் பாதியிலேயே அனுப்பிவிட்டிருந்தேன். இவாறான பாதிக்கடிதங்களை இரண்டு மூன்று தடவைகள் அண்ணனுக்கு அனுப்பிவிடவும் அவர் அதைக்கவனித்துவிட்டு 'உன் கடிதங்களின் பாதி எங்கேயோ தொங்கிப்போகிறதே ஏன் உன் கணினியில் ஏதாவது பிரச்சனையா' என்று கேட்டார்.

இன்னும் மனதும் காரணமில்லாமல் அடிக்கடி நெகிழ்ந்து நெக்குருகுகிறது. மனைவியின் வற்புறுத்தலால் ஒரு தெரிந்தவர்கள் வீட்டுக்குக் கல்யாணத்துக்குக்கூடப் போயிருந்தேன். அங்கே நாதஸ்வரக்காரர்கள் அபாரமாக " ஸ்வாமிக்கு இரக்கமில்லாதது என்ன காரணமோ........." என்று பேகாக்கில் உருகவும் அதோடு பரிந்திசைத்த மனது உள்ளார விம்மத்தொடங்கவும் Agnosticகான என் கண்களிலிருந்தும் வழியப்பார்க்கிறது. முடிவின்றி விரிகிறது வாழ்வின் புதிர்.

ஒருமுறை ஊரில் மதியம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டின் முன்வாசலில் பல்லுக்குத்திக்கொண்டு நின்ற என் தாத்தாவிடம் மிதியுந்தில் வந்த வெளியூர்க்காரர் விசாரித்தார்:

"பெரியவரே........ நீளக்கால் செல்லையா வீட்டுக்கு எப்பிடிப்போறது? "

"அது உதில பக்கத்திலதான்....... ஒரு சின்னப்பிள்ளைக்குக் காட்டிவிட்டால்கூட தானாய் போய்வீட்டு முற்றத்தில நிற்கும். பாரும் இப்பிடியே நேரேபோய் பத்திரகாளி அம்மன் கோயில்பின் வீதியில மேற்கால திரும்பிப்போக வாற சந்தியில வலக்கைப்பக்கம் திரும்பிப்போனால் அங்கால சின்னொதொரு பள்ளிக்கூடம் வரும். அதையுந்தாண்டினால் வலப்பக்கமாயொரு கையொழுங்கை கிளைக்கும். அதில இறங்கி மேல போக........ போக......... சரி. உமக்கு யாராராராராராற்றை வீட்டை போகோணும்? "

"ஐயோ ஆளைவிடுங்கோ."

என் பிரச்சனையை இணைவலையில் 'யாகூவின் பதில்கள்' பகுதியில் வைத்தேன்.

'எனக்கு அடிக்கடி என் மனைவியின் பெயர் மறந்துபோகிறதே? '

'எனக்கும் அதுதாம்பா பிரச்சனை. நீ வெளிய சொல்லிட்ட என்னாலமுடியல.'

'மனைவி உன்னை இன்னும் உதைக்கலையா?' என்கிற பாணியில் பலர் பதிலிறுத்திருந்தனர்.

ராகுல் என்று பெயர்கொண்ட ஒருவர், தமிழ்க்குடிமகனாகக்கூட இருக்கலாம். ' அது எதுக்கு. மைத்துனியின் பெயர் ஸ்படிகமா ஞாபகமிருக்குமே..... வைச்சுச்சமாளிக்க மாட்டியா கண்ணா?' என்று பதிலளித்தார். மிகப்பொறுப்பாக மிகுந்த மருத்துவ விளக்கத்துடணான பதில் தந்தது இன்னொரு மின் கடிதம். அவரே ஒரு மருத்துவராகக்கூட இருக்கலாம்: ' உங்கள் வயதைப்பாக்கும்போது இது வயதோடு வளரும் ஞாபகசக்திக்குறைவாக எனக்குப்படவில்லை. மேலும் இது Alzheimers நோயின் ஆரம்பமாக இருக்கலாம். மூளையின் செல்கள் சிதைவதாலோ, திஸ¤க்கள் சுருங்குவதாலோ ஏற்படும் அதீதமான ஞாபகமறதியென்றும் உடனேயொரு நரம்பியல் நிபுணரைச்சந்தியுங்கள்' என்றும் ஆலோசனை வழங்கினார்.

தாத்தாவைப்போலல்ல அம்மாவுக்கு அபூர்வ ஞாபகசக்தி. தன் கல்யாணத்துக்கு செல்லப்பா கட்டாடியார்வந்து சொக்கட்டான் பந்தல் போட்டதையும், பன்னாகத்துச் சைவர்கள் வந்து சமைத்த 14 வகைக்கறிகளையும் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டால்கூடச் சொல்வார். கல்யாணமான பின்னால் அப்பாவும் அப்பாவும் வைஜந்திமாலா சகஸ்ரநாமம் நடித்த 'பெண்' படம் பார்க்கப்போனார்களாம். அம்மாவுக்கு அப்படத்தில் வரும் அத்தனை பாடல்களும் வரிவிடாமல் மனப்பாடம். ஊரில் கைமாற்றாகக் காசுவாங்கிவிட்டுப் பின் முழங்கையைக் காட்டியவர்களையும் அம்மாவால் மறக்கமுடிவதில்லை. சொக்கதிடல் சின்னத்தம்பி ஆறுபிடி விதை வெங்காயம், பழனி பத்துப்பறை நெல்லும் 500 ரூபாகாசும் , ஒரு கலியாணவீட்டுக்கு போட்டுவிட்டுத்தாறன் என்று சொல்லி இரண்டுசோடி காப்புகளை இரவலாக வாங்கிப்போய்விற்றுவிட்ட கனகம், சுப்பிரமணியத்தார் 1250 ரூபா, ஊரெழுக்கோகுலம் 521ரூபா, யோசனைமுருகன் 764ரூபா, கொழும்பான் 120.65, கமலி 7.25ரூபாவும் அறவிடமுடியாமல்போன கடன்கள் என்பார். சுப்பிரமணியத்தாரெல்லாம் மனைவியின் சங்கிலியை அடைவாகக்கொண்டுவந்துதான் காசு கேட்டவராம். அம்மாதான் பெருந்தன்மையாக வேண்டாம் அதை நீரே வைச்சிருமென்று திருப்பி அவர்கையில் நகையைக்கொடுத்து காசையும் கொடுத்துவிட்டாராம். இப்போது வசதியாக இருந்தும் இரண்டு தசாப்தங்களாக கடனைத்திருப்பிக்கொடுக்க வேணுமே என்ற யோக்கியதை அவருக்கு இல்லாமலிருப்பதுதான் துரதிஷ்டம். பட்டறிவுகளின் விளைவால் அடிக்கடி" காசைக்கொடுத்து ஆளை அறி " என்பார். அம்மா எங்களிடம் விடை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே அவரது அந்த அபூர்வஞாபகசக்தி அவரைவிட்டு மெல்ல மெல்ல விடை பெறத் தொடங்கிவிட்டிருந்ததுதான் ஆச்சரியம்.

அம்மாவுக்கு நந்தனுக்கு விலகிவழிவிட்ட நந்தியைத் தரிசித்துவிடவேணுமென்று நெடுங்கால ஆவல் ஒன்றிருந்தது. அந்த ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது அவர் விருப்பப்பட்டபடி தமிழகத்தின் பலகோவில்களுக்கும் அவரை அழைத்துச்சென்றேன்.
அச்சுற்றுலாவில் கொழும்பிலிருந்த என் சகோதரி குடும்பமும், அப்போது சென்னையில் தங்கியிருந்த என் சிற்றன்னையின் மகள் புவனமும் அவரின் கணவரும் மகள் செல்வியும்கூட வந்தனர். சென்னையிலிருந்து ஒரு சியாறா வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செய்த சுற்றுப்பயணத்தில் முதலில் திருச்சிக்குப்போய் அங்கே ஒரு ஹொட்டலில் தங்கிக்கொண்டு சுற்றுவட்டத்திலுள்ள கோவில்களுக்கெல்லாம் போனோம். இரண்டாம் நாள் இரவு சாப்பாடுமுடித்துக்கொண்டு தூங்கப்போக முன் என்னிடம் அம்மா தனியாகக் கேட்டார்: " எல்லா இடங்களுக்கும் எங்ககூட ஒரு பொடிச்சி கூடவந்து கொண்டிருக்கிறாளே..... ஆர் ஆள், நீ கூட்டியந்தனியோ ? "அது புவனக்காவின்ர 'செல்வி'யம்மா, அதுக்குள்ள மறந்து போனியளே?" "ஆமோ."

பின் சென்னைக்குத் திரும்பி நாம் வந்து வண்டியால் இறங்கியதுமிறங்காததுமாய் புவனக்காவிடம் கேட்டார்: "அடியே சின்னம்மா..... எங்கேயடி இருந்தநீ இவ்வளவு காலமும்? " அவர் 'சின்னம்மா'வென்பது எங்கள் பெரியன்னையின் புவனக்காவைவிட அதிகவயதுள்ள இன்னொரு மகள். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அம்மா தன்னை நாம் கேலிசெய்கிறோமென நினைத்துக் கொண்டார், ஆனால் எதற்கென்றும் அவருக்குத் தெரியவில்லை.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் நின்றபோது ஒருநாள் ஒடியல்கூழ் காய்சுவதென்று ஏற்பட்டாகியது. அக்கா மீன்வகைகள் வாங்கிவருவதற்காக பருத்தித்துறை மீன்சந்தைக்குப்புறப்படவும் அம்மாஉத்தரவாகச் சொன்னார்: "தலையணைக்குக்கீழ் என்னுடைய பேர்ஸ் இருக்கு. அதில பத்துரூபா எடுத்துக்கொண்டுபோய் நல்ல இறாலாய் வாங்கியா." அப்போது ஒரு கிலோ சாவாளைமீனே ஐந்நூறு ரூபாய்கள் விற்றதென்ற விஷயம் அம்மாவுக்குத் தெரியாது. அம்மா ஒரு படிஅரிசி ஒருரூபா ஐம்பது சதத்துக்கு இருந்த காலத்துக்குப் போய்விட்டிருந்தார். அவர் கவனித்துவிடாமல் எமக்குள் வாய்பொத்திச்சிரித்தோம்.

இந்தியாவுக்குப் புறப்பட்டவன்று அண்ணனின் மகன் பாபுவிடம் போய் " கோயிலுக்குப்போகப்போறன் கைச்செலவுக்குக் காசு தா." என்றாராம்.

"ஐயாச்சிக்கு எவ்வளவு வேணும்?"

"ஒரு நூறு ரூபா போதும். "

பிறகு அவன் சிரித்துவிட்டுப் பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்தான்.

அம்மாவின் கடைசி நாட்களில் அவரது ஞாபகசக்தியின் இழப்பு உச்சத்தைத் தொட்டிருந்தது. ஒரு இரவு பக்கத்தில் படுத்திருந்த அக்காவிடம் " என் நெஞ்சின்மேல் குறுக்காகக் கையை வைக்காதை எனக்கு மூச்சுமுட்டுது" என்றாராம். அவரும் "நான் கையை வைக்கவில்லையே " எனவும் வலது கையை உயர்த்திக்காட்டி "அப்போ இது யாருடைய கை?" என்றவர் திடீரென "யாரு நீ?" என்றாராம். அவர் " நான்தான் உங்களுடைய மூத்தமகள் சறோஜினி " எனவும் "இருக்கும் நான்தான் அயத்துப்போனன்." என்றாராம். [மறந்துபோதல்] அம்மா இனித்தாக்குப் பிடிக்கமாட்டார் எனத்தெரிந்தபோது நானும் ஜெர்மனிலிருந்து இன்னொரு சகோதரியும் அடுத்த விமானத்தைப் பிடித்துப்பறந்தோம். எங்களுக்கு முன்னரே அம்மா அதைவிடவும் உயரமாகப் பறந்துவிட்டார். அக்காதான் எங்களையும் சமாதானம் செய்தார். இவ்வளவுகாலமும் அருகிலிருந்து கவனித்து சிஷ்ருஷை செய்த என்னையே ''யாரு நீ?'' என்று கேட்டவர் நிச்சயம் உங்களையும் அதையேதான் கேட்டிருப்பார். அது அவர் பிரிவைவிடவும் தாங்கமுடியாதிருந்திருக்கும். உண்மைதான்.

அம்மாவுக்கு ஞாபகமறதிபோலவே இரண்டாவது பிரச்சனையுமொன்றும் அவரது அந்திம காலங்களில் ஆரம்பித்திருந்ததது. அதாவது அவரது செவிப்புலனும் வெகுவேகமாக மந்தமாகிக் கொண்டுபோனது. எங்கள் சகோதரசகோதரிகளுக்கு நிறையவே பெண்குழந்தைகள் என்றால் வீட்டில் கலகலப்புக்கும் கும்மாளத்துக்கும் கேட்கவேணுமா? அதனால் யார் எதற்குத்தான் சிரித்தாலும் அவர்கள் எல்லோரும் தன்னையே கிண்டல் பண்ணுகிறார்கள் என நினைக்கவாரம்பித்தார். என்ன வாழ்வின் இக்கட்டான தருணங்களிலெல்லாம் நாம் தடுமாறியபோது எமக்கு மதியுரைத்து எமக்கு வழிகாட்டிக்கரையேற்றிவிட்ட அம்மா தானே பெதும்பை பேதை குழந்தையாக மாறிக்கொண்டிருந்தது ஆச்சர்யம்.ஏறக்குறைய அவர் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டிருந்ததால் இவ்விஷயத்தில் யார் என்ன சொல்லியும் அவரைச்சமாதானம் பண்ணமுடியவில்லை.

சென்னைக்கு சுற்றுலா வந்தகையோடு அவரைப் பெயர்பெற்ற ஆஸ்பத்தரியொன்றிலும் காட்டுவித்தோம். பலவிதமான பரிசோதனைகளை அவர்கள் செய்த பின்னர் அவரது செவிப்புலன் நரம்புகள் எழுபது சதவீதம் மீளமைக்க முடியாதபடி ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். வேண்டுமாமானால் Ear-Plug பாவிக்கலாம் ஆனாலும் முன்னேற்றம் பத்துசதவீதத்துக்குள்ளாகவே இருக்குமென்றனர். Ear-Plug பாவிக்கநேர்வதை ஒரு குறைபாடாக எண்ணி அவர் தாழ்வுமனச்சிக்கல் அடையலாம் என்பதால் மிகவும் பக்குவமாக அம்மாவிடம் மருத்துவர்களின் ஆலோசனையைச் சொன்னேன். பின் மறுநாள்" அம்மா இன்றைக்கு நாம் Ear-Plug ஒன்றை வாங்கப்போகலாமா" என விநயமாகக் கேட்டேன். மௌனமாக இருந்தார்.

இலேசாக வற்புறுத்தியபோது பேசினார்:

"செல்வநாயகத்தார் போட்டிருந்த மாதிரி அதுதானே? " (தந்தை)

"அதைவிடச் சின்னதாக வெளியில் தெரியாதமாதிரிப் பொருத்திக்கொள்ள இப்போ எல்லாம் மொடேணாய் வந்திருக்கம்மா."

"அதற்கு என்ன செலவாகும்?".

பொய் சொல்லிப் பின்னால் மாட்டிக்கொண்டால் வம்பு அதிகமாகிவிடும். ஆதலால் நேர்மைகாத்து

"என்ன ஒரு இருபத்தையாயிரம் வரும்." என்றேன்.

"காது நல்லாய்க் கேட்டுத்தான் இனிமேல் நான் என்ன மகன் செய்யப்போறன். வேண்டாம்."

அதன்பின் அவரைச் சம்மதிக்கவைக்க எங்கள் எவராலும் முடியவில்லை.


பெர்லினில் அந்த மனிதர் எங்களுக்குத்தெரிந்தவர், இடைசுகம் வந்துபோகிறவர்தான். அன்று இரவும் முன்னறிவித்தல் எதுவுமின்றி வந்தார். வந்தவுடன் " நீங்கள் சுகர் வருத்தத்துக்கு (Diabetes Mellitus) என்னவென்ன மருந்தெல்லாம் பாவிக்கிறனீங்கள் என்றார். நான் மெற்போம் , குளுகோபே, கில்பென்-ஹெக்ஸால், குளுகோபாக் என்று ஒப்புவித்தேன்.

"சரி, எல்லா மருந்தெல்லாத்தையும் காட்டுங்கோ" என்றும் விரட்டினார். காட்டினேன்.

இதுகளைவிட புதூசா வேறையேதேனும் பாவிக்கிறியளோ? என்றார்.

அருகில் நின்ற மைத்துனன் என்றொரு இம்சை கையில் முழம்போட்டுக்காட்டி "இதுகளைவிட இன்னுமொரு ரஷ்யன் மருந்துமிருக்கு, அப்சலூட்வொட்கா என்பது அதன் திருநாமம். பார்வைக்குப் பச்சைத்தண்ணி கணக்காய் இருக்கும் பச்சைக்கைச்சல். இருந்தும் லெமென் ஜூஸோ ஜிஞ்சர் ஏலோ கலந்து அட்ஜஸ்ட்பண்ணி யாரும் ஞாபகப்படுத்தாமலே அத்தான் இரண்டு நாளைக்கொரு போத்தல் தனிச்சே சாப்பிடுறவர் " என்று பொருமினான். அப்போதுதான் நினைவுக்குவரவும் "இது மூன்றுக்கும் பதிலாக இப்போ Actos-Pioglitazon என்றொரு புதுமருந்தை டொக்டர் தந்திருக்கிறார்" என்றேன். "அதை உடனே கொண்டுவாங்கோ" என்றார். குறோமியநீலத்தில் மினுங்கும் அந்தப் பெட்டியை எடுத்துக்கொடுத்ததும் அதைப்பார்த்துவிட்டு நெற்றியிலடித்தபடி செற்றிக்குள் தொப்பென்று விழுந்தார்.

"இதை எவ்வளவு காலமாய் பாவிக்கிறியள்? "

"இப்ப இரண்டு மூன்று கிழமையாய்த்தான். "

"அய்யோ........இந்த மருந்தைப்பற்றித்தான் AOKயும் , மருத்துவ இலாகாவும் எல்லா மீடியாவிலயும் பேஷன்ஸை அலேர்ட் பண்ணியிருக்கு நீங்கள் இன்னும் கேள்விப்பட வில்லையோ.................?"

"ப்ச் "

"இது சுகருக்கு நல்லமருந்துதானாம். ஆனால் இதோட பக்கவிளைவுகளால பல மரணங்கள்கூட ஏற்பட்டிருக்காம். பேஷண்டுகளுக்கு அசாதரண ஞாபகமறதி , புத்திமாறாட்டங்களைப் பல உண்டாக்கியிருக்குதாம். இந்த மருந்தின்ரை உற்பத்தி தடைசெய்திருப்பதோட உடனடியாக இதைப் பாவிப்பதை எல்லோரையும் நிறுத்தச்சொல்லியிருக்கிறார்கள். இதொன்றுமே அறியாமல் இப்பிடிஅப்பாவியாயிருக்கிறீர்களே. அதுதான் ஒரு சந்தேகத்தில வந்தனான். உடனே மருந்தை எடுத்துக்கொண்டு உங்க டொக்ரிட்டைப் போங்கோ."

"இப்ப உடனடியாய் ஒன்றுஞ்செய்ய ஏலாது."

"ஏன்? "

"அவர் ஊர்லாப் போயிட்டார். " (விடுமுறை)

"புது மருந்தை உங்களுக்குத்தந்திட்டு அதுக்குச்சைட் இபெக்ட்ஸ் ஏதும் இருக்கோ இல்லையோ என்றுகூடப்பார்க்காமல் ஊர்லாப் போயிட்டார்..........நல்ல டொக்டர்."

"இதை ஒரு பரிசோதனையாய்த்தான் எனக்குத் தந்தவர்...............அவருக்கு நான் மட்டுமே பேஷண்ட், மனுஷந்தானே......... அவரும் ஊர்லாப் போகத்தானே வேணும்."

அந்த மருந்துதான் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தியிருக்கென்று உறுதியாகத்தெரிந்தது.

என் டாக்டரின் பிராக்டிஸில் இன்னுமொரு டாக்டரும் இருப்பார். அவரிடம்போய் அந்த மருந்தைக்காட்டி அதைப் பாவிக்கத்தொடங்கிய பின்னால் நான் ரயிலைப்பார்த்துகொண்டு ஏறாமல் நின்றது, போக்குவரத்துச் சமிக்கையில் தடுமாறியதிலிருந்து அனைத்தையும் விபரித்தேன்.

நீங்கள் அந்த மருந்தைமட்டும் பாவித்திருந்தால் அந்த அளவுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அந்த மருந்து வேறு சில மருந்துகளுடன் சேர்த்துப்பாவித்தபோதுதான் சிலரில் சில விரும்பத்தகாத விளைவுகளைக் கொடுத்ததென்று இப்போ தெரியவந்திருப்பது உண்மைதான். ஆனால் உமது பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த காங்கை மிகுந்த கோடையின் வெய்யில்தான் இந்த மருந்தல்ல என்றும் அவர் முடித்தார். இப்போது இந்தக்காலநிலை ஒவ்வாமல் எங்கள் பிரக்டிஸ¤க்குக்கூட தினமும் பலர் தலைவலி, மயக்கம், வலிப்பு, ஸ்றோக் என்று வருகிறார்கள். இன்னும் உமக்கு அந்த மருந்தின் மேல் சந்தேகம் இருந்தால் அதை விட்டுவிட்டு முன்னர் பாவித்த மருந்துகளைத் தொடரலாம்" என்றார்.

அவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த வேளையில் என் இரத்த அழுத்தத்தையும் இரண்டு மூன்றுதடவைகள் அளந்துபார்த்தார். ' இந்தக் காங்கைக்குத்தான் உங்கள் இரத்த அழுத்தம் சீரில்லாமல் ஏறியிறங்கிக்கொண்டிருக்கு. இந்தக்கோடைகாலம் கடக்க எல்லாம் வழமையாகிவிடும்'. நம்பிக்கை தந்தார்.

நான் டக்டரிடம் போய் வந்ததும் அந்த நண்பர் விடாமல் போன்பண்ணினார். " டொக்டர் என்ன சொன்னார்? விடப்படாது உவங்களைக் கட்டாயம் வழக்குவைச்சு நஷ்டஈடு கோரவேணும். "

Dr. Raible பத்து வருஷத்துக்குமேலாக என் குடும்ப டாக்டர். இந்தியக்கலைகளில் ஈடுபாடுகொண்டதால் என்னிடமும் நெருக்கமாகிவிட்ட நல்ல ஜெர்மன்காரர். அஸ்வதியின் முதல் நடனஅரங்காற்றுகைக்கெல்லாங்கூட மனைவியுடன்கூட வந்திருந்தார். அருமையான மனுஷன் எனக்கு கெடுதி ஏற்படுத்தும் என்று தெரிந்தால் அந்த மருந்தை எனக்குத் தந்திருப்பாரா?

என் இளமைக்காலங்களில்கூட ஞாபகசக்தி என் கால்களைப்பல தடவைகள் வாரிவிட்டிருக்கிறது. நான் சொல்லவிருந்த விஷயத்தை சொல்லவிரும்பிய விதத்தில் சொல்லுவதற்கு வேண்டிய வார்த்தையை என் மூளையின் சேமிப்பு அடுக்குகளில் இருந்து லபக்கென எடுத்துத்தராமல் வஞ்சித்திருக்கிறது. கல்லூரி நாட்களில் பங்குபற்றிய சில விவாதங்களில்கூட நடுவர்தீர்ப்பும் சொல்லியான பிறகுதான் அட இந்தக்கருத்தை இப்படி எடுத்துச்சொல்லி எதிராளியின் வாய்க்குள் கொங்கிறீ£ட்டைத் திணித்திருக்கலாமேயென்று தோன்றும். ஞாபகத்தின் வஞ்சனைமட்டும் என்னைத் தொடராதிருந்திருந்தால் தோற்றிய பல பரீட்சைகளிலும் வெற்றிவாகை சூடிக்கொண்டு எங்கேயோ உயரத்தில் பறந்திருக்கலாம்.

அசலான டியூப்லைட் யாரென்று கேட்டால் அங்கே இங்கேயெல்லாம் தேடவேண்டியதில்லை. அசல் இரண்டு மீட்டர் டியூப்லைட்டுக்கு வாழும் உதாரணம் நான்தான். எனக்கு ஈடுபாடுள்ளதுறைகளில் பேசுவதைவிட எழுதுவதிலுள்ள அனுகூலம் என்னவென்றால் உரிய ஒரு வார்த்தை உடனே ஞாபகத்துக்கு வராவிட்டால் அதுவந்தபின்னால் சாவகாசமாக மேலே எழுதலாம் அல்லது அவ்வார்த்தையைத்தேடி அப்புறமாக இட்டுக்கொள்ளலாம். பேச்சில் அது சாத்தியமில்லை, மேடையில் ஒரு வார்த்தை அல்லது விஷயம் கை கொடுக்கவில்லையென்றால் பின்னால் அது பயன்தராது. கிருபானந்தவாரியாரின் பன்முக ஆற்றல்களில் எனக்கு வியப்புமிக ஏற்படுத்தியது அவரது ஞாபகசக்திதான். அவரது உபன்னியாசங்களின் போதெல்லாம் ஒரு காவிய சம்பவத்தை விளக்க ஒரு உபகதை. அதைத்தெளிவாக்க ஒரு கிளைக்கதை. பின் கிளைக்குள் இன்னொருகிளையெனப் பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டார் போலிருக்க திடுப்பென சப்ஜெக்டில் விட்ட இடத்துக்கு வந்து அசத்துவார்.

அந்த Actos-Pioglitazon வில்லைகளை அன்றைக்கே குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டேன். ஞாபகசக்தியில் முன்னேற்றம் மெல்லவருகிறமாதிரித்தான் தெரிகிறது. இல்லாவிட்டாலுந்தான் என் டாக்டர் நண்பரை வழக்குவைத்து அவரைச் சங்கடத்துக்குள்ளாக்கும் எண்ணங்களும் எதுவுமில்லை, அம்மாவின் மனப்பக்குவத்தில் ஒரு சிறியபின்னம் இப்போ எனக்கும் வந்துவிட்டமாதிரி ஒரு பிரமை.  ஆமா...... ஞாபகசக்தியைப் பெரீசா தசாவதானி கதிரவேற்பிள்ளை அளவுக்கு வைத்திருந்துதான் என்னத்தைக் கிழிக்கப்போகிறேன்?

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் 09.01.2009.
karunah08@yahoo.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்