இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!

ராஜா ராஜாதான்.
- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -

1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு.  என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் நுழைந்து மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S. Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக்கண்டேன். அட்டையில் அவரது ஓவியம், உள்ளே J.S. Bach ன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப்பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. கனதியான அந்நூலை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பதும் தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை, எனினும் அதைவாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். ” பெற்றுக்கொண்டேன் நன்றி ” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் எளியதும் நியாயமானதுமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாகி இன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் விட்டன. பதில் இன்றுவரை இல்லை.

சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக கவிஞர் இரவிபாரதி வந்திருந்தார். அவர் என்னுடனேயே சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘ மறுபடியும் ’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ” ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா ” என்கிற துள்ளுப்பாடலை எழுதியவர். (இன்னும் எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனுமாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) இரவிபாரதி மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப்பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bach இன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு “ என்றுவிட்டுத் தன் கதையைச்சொனார் இரவிபாரதி:

“ ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று குதித்துக்கொண்டு என் ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு அங்கு சென்றேன். போனால் அது வேறு விஷயம். என்னவென்றால் அவர்கள் வீட்டில் திடிருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (உண்மையான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார்.

பொலீஸுக்குப்போனால் விஷயம் கெட்டுவிடுமென்று நினைத்தார்களோ, அல்லது வேறேதும் காரணமோ தெரியவில்லை. ’ நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்து நைச்சியமாகப்பேசிப் பணத்தை எப்படியாவது மீட்டுத் தந்துவிடுங்கள் ’ என்றனர் அவரும் மனைவியுமாக.

இவ்வளவு தொகையைத் திருடிச்சென்றவனிடம் பேசிமீட்பதாவது…………. எனக்குச் சற்றேனும் நம்பிகையில்லை, சரி ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதிக்காமல் உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் துணைக்குக்கூட்டிக்கொண்டு திருச்சிக்குப்புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்ததும் எமது வண்டியைதூரத்தில் ஓரங்கட்டி நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப்போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக்கண்டவுடன் ஆள்சிறிது கலவரமாவதை உணரக்கூடியதாக இருந்தது. அவன் சாப்பிட்டுமுடிக்கும்வரையில் காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப்போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத்தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக்கொடுத்தோம். ’ கண்ணா இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, அவர் உன்னை என்னவேணுமின்னாலும் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன் பார்த்தியா, உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழுவருஷங்கள் உள்ள தள்ளிக் கழி திங்கவைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும்போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தை ஒழுங்காக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்………….சார். அவங்கமேலும் தப்புத்தான்……… கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்றான். எமக்கும் நம்பிக்கை வந்தது. இருங்க சார் என்றவன் வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக்கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க வழிச்செலவுக்கு ’ என்றான். பின் ”இம்மாந்தூரம் வந்திருக்கீங்க இன்னிக்குச் சாப்பிட்டுத்தான் நீங்க போவணும்” என்றும் உபசரித்தான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே இந்தப்பெரியவருக்கு ’நன்றி’ என்றொரு வார்த்தை சொல்லவோ எம்மை உபசரிக்கவோ தெரியலை. கடேசி எமது வண்டிச்செலவையோ பெற்றோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா மனுஷனுக்கு? இன்றுவரை இன்னொரு படத்துக்கு என்னை ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று முடித்தார்.

ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்துகொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் இளையராஜவிடம் கேட்டாராம் ” ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? “ இளையராஜா அக் கேள்வியையே காதில் விழாததுபோல் இருக்கவும் அதேகேள்வியைத் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “ கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா? “ என்று கேட்கவும் நான் ருசியான முழுச்சாப்பாடு போடுகிற சமையல்காரன் கண்ணா…….எங்கிட்ட பொப்கார்ண் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’ பொப் கார்ண் ’என்கிற வார்த்தையை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் பிரயோகித்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக்கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக்கொள்வதில் தயக்கம்.

இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக முத்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக்கொண்டாலும் அவரது சனாதன வழிபாட்டு முறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன நடவடிக்கைகள் எல்லாம் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் அவர் இன்னும் தேறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப்போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர்பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்கமுடியாது.

இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்றும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.

நாட்டுப்புற இசையை அரங்கறியச்செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமுமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக ” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்ததால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.

மானுஷ விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருக்கட்டும் சகித்துக்கொள்வோம். ஆனால் அற்புத இசைஞானமும், வண்ண வண்ணக்கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது எமது கடமையும்.

karunah08@yahoo.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்