சமாதானத்தின் அவசியமும் சர்வதேசத்தின் முன் தலை குனிந்த 
    மகிந்த ராஜபக்க்ஷவின் ராஜதந்திரமும்!
  
  
    சர்வதேச சமூகம்  இலங்கை மீண்டும் போருக்குத் திரும்புவதை 
    விரும்பவில்லையென்பது மட்டுமல்ல அவ்விதமொரு நிலை ஏற்படாதிருப்பதற்காகத் தம்மால் 
    முடிந்த அளவுக்கு 
    அழுத்தங்களையும் பிரயோகிக்கத் தயாராகவுள்ளதென்பதையும் மேற்படி அண்மைக்கால 
    நிகழ்வுகள் புலப்படுத்தி நிற்கின்றன. கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பியக் 
    கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது பற்றிப் பெரிதாக ஸ்ரீலங்கா அரசு 
    சந்தோசப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளின் விடுதலைப் புலிகள் மீதான தடைகள் 
    புலிகளைச் சமாதான நகர்வுகளை நோக்கித் திரும்புவதையே மையமாகக் கொண்டவை. ஆனால் 
    அதே சமயம் முன்பெல்லாம் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஓரபட்சமாகச் செயற்படும் 
    பெரும்பாலான சர்வதேச நாடுகள் தற்போது ஈழத்தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளை 
    விளங்கிக் கொண்டுள்ளன எனபதையும் அவற்றின் அரசியல் நகர்வுகள் மூலம் புரிய 
    வைத்துள்ளன. இது ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகளுக்குக் கிடைத்த 
    தோல்வியாகக் கருதலாம். 
  
  
    குறிப்பாகப் பின்வரும் அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:
  
    1. அண்மையில் ஜப்பானிய சிறப்புத் தூதுவரான அகாசி இலங்கையின் 
    நிலைமை மோசமடைந்து யுத்தத்திற்கு நாடு திரும்பினால் ஐக்கிய நாடுகள் சபையின் 
    அமைதிப் படைகளை ஈடுபடுத்துவதசியம் என்னும் கருத்துப்பட தன் எண்ணங்களை 
    வெளிப்படுத்தியிருந்தார். அதே சமயம் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய 
    தேசியக் கட்சி இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப் படை வருவது தவிர்க்க இயலாதது 
    என்று கருத்து தெரிவித்திருந்தது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க.வின் 
    களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன ஐக்கிய நாடுகள் சபையினது தீவிர 
    உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்ப வேண்டிய சூழ்நிலையை 
    வலியுறுத்தி வருகின்றனவென்றும் ஐக்கிய நாடுகள் சபையானது முடிவெடுத்துவிட்டால் 
    சிறிலங்கா அரசாங்கத்தால் அதைத் தடுக்க முடியாது. ஐ.நா.வுக்கு வேறு மாற்று 
    வழியில்லையென்றும் அதே சமயம் ஐ.நா. அமைதிப் படையினது முயற்சிகள் 
    தோல்வியடையுமானால் நாடு பிளவுபட்டு வட-கிழக்கு தனியரசாக மாறிவிடுமென்றும், இது 
    போன்ற நிலைமை  21 நாடுகளில் ஏற்பட்டிருக்கிறதென்றும் எச்சரித்திருந்தார். இது 
    இலங்கையின் தேசிய பிக்கு முன்னணிக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது 
    பற்றி ஜப்பானிய அரசு தன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டுமென 
    அம்முன்னணியின் தலைவரான தாம்பர அமில தேரர் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் 
    சபையினது படையை ஈடுபடுத்துவது நாட்டைப் பிளவுபடுத்தி விடுமென்பதால் பிரிவினைவாத 
    சக்திகள் இம்முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் 
    சாட்டியிருந்தார். அதே சமயம் இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி,யின் 
    தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையினது அமைதிப்படை 
    அனுப்பி வைக்கப்பட்டால் தமிழீழத்தை விடுதலைப் புலிகள் அமைத்துவிடுவார்கள் என்று 
    தெரிவித்திருந்தார்.
  
    2. இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த 
    கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் 
    அவுஸ்திரேலிய இணைப்பாளர் ரொபின் கில் பற்றிக் அம்மையார் அண்மையில் 
    வலியுறுத்தியிருந்தார். இதுவும் சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
    
  
  
    3. இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்க அரசின் தமிழ் மக்கள் மீதான 
    தாக்குதல்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தினரான 
    ஜோன் மேர்பி ஆத்திரமூட்டல்கள் எத்தகையதாகவிருந்த போதிலும், ஸ்ரீலங்க அரசின் 
    பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா அரசானது தமிழ்மக்களை நாட்டினொரு 
    அங்கமாகக் கருதவில்லையென்ற தன் எண்ணத்தை வலிமையுறச் செய்வதாகக் 
    குறிப்பிட்டிருந்தார்.
  
    4. சர்வதேச சமூகத்தின் உதவியுடன் அப்பாவிப் பொதுமக்கள் 
    படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய 
    நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பின் சார்பில் பாரிசில் நடைபெற்ற 
    கூட்டமொன்றில் உரையாற்றிய அவ்வமைப்பின் ஆணையாளரான லூசி 
    அர்பெளர் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து 
    வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், சர்வதேச காவல்துறை மற்றும் 
    தடயவியல்துறையினர் உதவியுடன் படுகொலைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணை 
    நடத்த வேண்டும் என்றும் அத்துடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது 
    அரசாங்கத்தின் கடமையென்றும், மேலும் இந்த வன்முறைகள் வெறும் யுத்த நிறுத்த 
    ஒப்பந்த மீறல்கள் மட்டும் அல்ல- சர்வதேச மனித உரிமைக சட்ட மீறல்களுமாகும் 
    என்றும் அவர் தனதுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
  
    5. இதே சமயம் ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தமிழகம் நோக்கிச் 
    செல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் (UNHCR) ஆழ்ந்த கவலை 
    தெரிவித்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தது. 
  
  
    6. இதே சமயம் அண்மையில் ஒருநாள் பயணமாக இலங்கை வந்திருந்த 
    தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் 
    கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் 
    கைவிட்டு வந்தால் அவர்களுடனான உறவினை மறுபரிசீலனை செய்யத் தயாரென்றும் அத்துடன் 
    சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட 
    வேண்டுமென்றும் ,  இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் 
    திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் 
    கூறிய அதேசமயம் சிறிலங்கா அரசாங்கமானது ஏற்கனவே ஒப்புக்கொண்ட விடயங்களைச் 
    செயற்படுத்த வேண்டுமென்றும் இதுவே ஜனநாயகப்பூர்வ அரசாங்கமொன்றிடமுள்ள தமது 
    எதிர்பார்ப்பாகுமென்றும்,  ஆத்திரமூட்டல்களுக்குக்கெதிரான அரசின் நடவடிக்கை 
    வன்முறையாக மாறி விடக்கூடாதென்றும்,  அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மனித 
    உரிமை மீறல்கள் இல்லாமலிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமமென்றும் மேலும் 
    ஜெனீவா ஒப்பந்தத்தை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டுமென்றும் கூறியிருப்பதானது 
    ஸ்ரீலங்கா அரசின் ராஜதந்திர நகர்வுகளுக்கு விழுந்த பலத்த அடியாகும்.
  
    7. இதே சமயம் அண்மையில் டோக்கியோவில் இலங்கையின் 
    அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கான மாநாடு நடத்தப்பட்ட மூன்று 
    ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் 
    நோர்வேயை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தைத் தொடர்ந்து 
    வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் அண்மைய நிலைமைகளை முடிவுக்கு 
    கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் 
    தமிழீழ விடுதலைப் புலிகள் இழக்க வேண்டியேற்படுமென்று எச்சரிக்கை 
    விடப்பட்டிருந்தது. மீண்டும் அமைதிப் பாதைக்கு திரும்ப இருதரப்பினரையும் இணைத் 
    தலைமை நாடுகள் கேட்டுக்கொள்வதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் 
    பேச்சுவர்த்தைகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமெனவும், பயங்கரவாதம் மற்றும் 
    வன்முறைகளை அது கட்டாயம் கைவிட வேண்டுமெனவும்,  ஐக்கிய இலங்கைக் 
    கட்டமைப்புக்குள் அரசியல்  தீர்வுகாணல் அவசியமெனவும், இலங்கையின் அனைத்து 
    மக்களினதும் ஜனநாயக உரிமைகளை உள்ளடக்கியதாக அத்தீர்வு இருக்குமெனவும், 
    அதற்காதரவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளுமெனவும் அவ்வறிக்கையில் 
    மேலும் கூறப்பட்டிருந்தது. அதே சமயம் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்குச் 
    சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்து தீர்வு காண வேண்டுமமெனவும், அரச 
    கட்டுப்பாட்டுப் பகுதியில் வன்முறைச் செயல்களை மேற்கொள்ளும் குழுக்களை அது 
    தடுக்க வேண்டுமெனவும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் அது 
    பாதுகாக்க வேண்டுமெனவும்,  வன்முறையாளர்களைத் தண்டிக்க வேண்டுமெனவும்,
  
    முஸ்லிம்களை உள்ளடக்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் 
    உரிமைகள் வழங்கக் கூடிய ஒரு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான பாரிய 
    அரசியல் மாற்றங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக வேண்டுமெனவும்,  அத்தகைய 
    நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் உதவுமெனவும், அவற்றை மேற்கொள்ளத் தவறினால் 
    சர்வதேச சமூகத்தினது ஆதரவை இழக்க நேரிடுமெனவும் அவ்வறிக்கையில் 
    தெரிவிக்கப்பட்டிருந்தது.
  


 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

