மீள்பிரசுரம்: தினக்குரல் ஆகஸ்ட் 14, 2007!
சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்
பழ.நெடுமாறன்!
யாழ்.குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல
அனுமதிக்குமாறு கோரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் சாகும் வரையிலான
உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை படம்பிடிக்கவும் செய்தி
சேகரிக்கவும் சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரினால் மிகமோசமாக தாக்கப்பட்டதுடன்,
உண்ணாவிரத பந்தலும் உடைத்தெறியப்பட்டது. பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்தையடுத்து
அங்கு விரைந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச்
செயலாளர் தொல்.திருமாவளவன் மற்றும் பிரமுகர்கள் பொலிஸாரின் நடவடிக்கையை
கண்டித்துள்ள அதேவேளை, பெருந்திரளான ஆதரவாளர்கள் கோயம்பேட்டில் திரண்டதால் அங்கு
பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து மேலதிக பொலிஸாரும் அவ்விடத்தில்
குவிக்கப்பட்டனர்.
யாழ்.குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கென தமிழகத்தில்
சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் படகுகளில் குடாநாட்டை நோக்கி
புறப்படத்தயாரான பழ.நெடுமாறனும் அவரது பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் புதன்கிழமை
நாகபட்டினம் துறைமுகத்தில் வைத்து பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு அரசு அனுமதி
வழங்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த
நெடுமாறன், நாகபட்டினம் துறைமுகத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார்.
இதனால் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்ற
பொலிஸார், அன்று மாலை அவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
இதனையடுத்து தனது சொந்த இடமான கோயம்பேட்டுக்கு வந்த நெடுமாறன் அங்குள்ள தமிழர்
தேசிய இயக்க ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கட்டிட வளாகத்தில் தனது 2 ஆவது
நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.
நெடுமாறனின் உண்ணாவிரத போராட்ட செய்தியறிந்த பல படப்பிடிப்பாளர்களும்
செய்தியாளர்களும் கோயம்பேட்டுக்கு விரைந்தனர்.
இதேநேரம், அங்கு வந்த பொலிஸ்காரர்கள் நெடுமாறன் உண்ணாவிரதமிருப்பதற்காக
அமைக்கப்பட்டிருந்த பந்தலை பிரித்து எறிந்தனர். அத்துடன், நெடுமாறனையும்
உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் எச்சரித்தனர்.
ஆனால், பொலிஸாரின் எச்சரிக்கையை காதில் வாங்காத நெடுமாறன் தனது போராட்டத்தை
தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக பெருந்திரளானோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
பங்கேற்றனர்.
இதனால், கோபமடைந்த பொலிஸ்காரர்கள் பலவந்தமாக உண்ணாவிரதப் போராட்டத்தை
நிறுத்துவதற்கு முயற்சித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே
முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை படப்பிடிப்பாளர்கள்
படம்பிடித்தனர். அப்போது ஆவேசமடைந்த பொலிஸார் அவர்களை படம் எடுக்கக்கூடாதென
தடுத்தனர். செய்தி சேகரிப்பதை யாரும் தடுக்க முடியாதென செய்தியாளர்கள் பொலிஸாருடன்
வாக்குவாதப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரியொருவர் சன் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளரின்
கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியதுடன், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு
பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அந்தப் படப்பிடிப்பாளரின் சட்டையைப்
பிடித்து பொலிஸார் வெளியே இழுத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் பொலிஸ் அதிகாரியுடன் கடுமையான
வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், வீதியில் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டனர். பொலிஸாருக்கெதிரான கோஷங்களையும் எழுப்பினர். இதன் பின்னரே கைது
செய்யப்பட்ட படப்பிடிப்பாளரை பொலிஸார் விடுவித்தனர். சில பொலிஸார் செய்தியாளர்களை
சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் அடாவடித்தனச் செய்தி அனைத்து இடங்களிலும் பரவியதையடுத்து தமிழின
உணர்வாளர்கள் பலர் உண்ணாவிரத இடத்துக்கு வந்து குவியத் தொடங்கியதையடுத்து
அவ்விடத்துக்கு மேலதிக பொலிஸாரும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். இதனால் அவ்விடத்தில்
பெரும்பதற்ற நிலை ஏற்பட்டது.
நெடுமாறனை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ,
தமிழர் தேசிய விடுதலை இயக்க செயலர் தியாகு, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர்
விடுதலை க. இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர்
சரஸ்வதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான்
உள்ளிட்ட பல தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டவுடன், நெடுமாறனுக்கு தமது ஆதரவைத்
தெரிவித்தனர்.
ஆனால், பழ.நெடுமாறன் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் எவருக்கும்
பொலிஸார் அனுமதி வழங்க வில்லை.
`இங்கு செய்தியாளர்களிடம் வைகோ கருத்துத் தெரிவிக்கையில்; மத்திய, மாநில அரசுகள்
ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்து வருகின்றன. பசி, பட்டினியால் வாடும்
ஈழத்தமிழர்களின் பசியை போக்குவதற்காக சாகும்வரை உண்ணாவிரதமிருக்கப் போவதாக
பழ.நெடுமாறன் அறிவித்ததும் நான் பெரிதும் கவலையடைந்தேன்.
இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்காக அறப்போராட்டத்தில் ஈடுபடமுயன்ற அவருக்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்திற்காக போடப்பட்ட பந்தலை பொலிஸார்
உடைத்தெறிந்துள்ளனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தை படம் பிடிக்க வந்த
ஊடகவியலாளர்களையும் பொலிஸார் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது' என்றார்.
பழ.நெடுமாறன் இன்று மூன்றாவது நாளாகவும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை
தொடருகின்றார்.
http://www.thinakkural.com/news/2007/9/14/mainnews_page36093.htm
நெடுமாறன் ஜயாவிற்காக ஒரு கவிதை!
நலமுடன் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
- றஞ்சனி -
எம்உறவுகளோடு எப்போதும்
என்நேரமும் ஒன்றியிருக்கும்
நெடுமாறன் ஜயா
உடல் நலமில்லாதபோதும்
உணவின்றி எமக்காக
உயிர்கொடுக்கவும் தயாராக,
எம் உயிரை உறைய வைக்கிறது
உங்கள் போராட்டம்
வெற்றி பெறவேண்டும்
வாழவேண்டும் நீண்டகாலம் நலமாக
தோழ்கொடுத்து நிற்கும்
தோழி,தோழர்களுக்கும்
பெரியோருக்கும் வாழ்த்துக்கள்.
எம்மக்கள் இறப்பதையும் ,இழப்பதையும்
பாட்டினியால் மடிவதையும்
அகதிகளாக அலைவதையும்
அருகிலிருந்தும்
காணாதும் கேட்காதும்
டெல்கிவரை சொல்ல உரிமை கொண்ட
உணர்வின்றி இயங்கும்
தமிழ்நாட்டு அரசியலை என்ன சொல்வது
என் நினைவில்
பாரதியாரின் கவிதை வரிகள்
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில்
சாதல்கண்டும் சிந்தை இரங்காரடி.
வாழ்க நெடுமாறன்
shanranjini@yahoo.com |