பகுதி - 2!
உயிர்க்கொல்லி*
மர்க்கெரித் த்யுரா (Marguerite Duras)
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
மீண்டும் அறைக்குத்
திரும்புகிறீர்கள். கட்டில்விரிப்பில் அசைவின்றி கிடக்கிறாள். தன்னையோ, தன்னொத்த
வேறு சரீரங்களையோ பரீட்சித்திட அனுமதித்திராத உடலைப் பார்த்தவண்ணமிருக்கிறீர்கள்.
காலங்காலமாய் சந்தேகத்திற்கென்றே படைக்கபட்டுள்ள சரீரத்தைப் பார்க்கிறீர்கள்.
பின்னர் உங்கள் பார்வையைச் சட்டென்று விலக்கிக் கொள்கிறீர்கள்.
பார்ப்பதை நிறுத்திக்கொண்டாயிற்று. இனி எதனையும் பார்ப்பதில்லை. கண்களை இறுகமூடி,
உங்களுக்கான அபிப்ராய பேதங்களிலும், உங்கள் இறப்பிலும் உங்களை நீங்களே
காண்கிறீர்கள். மூடியக் கண்களைத் திறக்க, அவ்விடத்திலேயே, எப்போதும்போல இன்னமும்
இருக்கிறாள். உங்களுக்குப் புறத்தியான அவ்வுடலிடத்தில் திரும்பவும் வருகிறீர்கள்.
உடல் நித்திரைகொண்டிருக்கிறது. அவ்வுடலே உங்களுக்கு உயிர் கொடுக்கிற பிணியாகவும்,
உயிரெடுக்கும் பிணியாகவும் உள்ளதென்பதை கண்டுகொள்கிறீர்கள். ஆம் அவளிடத்தில்தான்,
உறங்குகின்ற அவளது உடலில்தான் அப்பிணி ஜீவிக்கிறது. முகம், மார்பு,
குழப்பத்திற்குட்பட்ட அவளது பெண்ணுறுப்பு.. என ஒவ்வொரு அங்கமாய் பார்த்த பிறகு
மார்புக்கூட்டில் உங்கள் பார்வையை நிறுத்துகிறீர்கள். இதயத் துடிப்பில்
விகற்பமிருக்கிருக்கிறது. அடங்கி ஒலிக்கிறது, 'மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில்'
என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. எனினும் சீராக, எக்காரணத்தை முன்னிட்டும்
தடைபடாது என்று சொல்வதைப்போல இருக்கிறது. அவளது சரீரத்தின் பொருண்மையோடு உங்கள்
சரீரத்தை நேர்படுத்துகிறீர்கள். குளிர்ச்சியும், வெதுவெதுப்பும் கலந்த உடல்.
இன்னமும் ஜீவனிருக்கிறது. தன்னை கொல்வதற்குக் இறைஞ்சியபடி உயிர் வாழ்பவள். அவளை
எப்படிக் கொல்வது, யார்கொல்வது என்பது உங்களுக்குள் உள்ள கேள்வி. உங்களுக்கு
இவ்வுலகம் வெறுத்துவிட்டது, ஒருவரிடமும் பிரியமில்லை, ஏன் நீங்கள் நம்புகிற உங்கள்
முரண்பாடுகளிடங்கூட உங்களுக்குப் பிரியமில்லை. இதுவரை நீங்கள் சம்பாதித்தது
அனைத்துமே பிணங்கள் அல்லது அதுபோன்றவற்றின் இரக்கங்களின்றி வேறல்ல. அடுத்தகணம்
உங்களுக்குத் தெரிகிற முரண்பாடே கூட இரக்க உணர்வில் பிணங்களுக்கும், இவளது உடற்
பலவீனங்களுக்குமுள்ள வேறுபாடென்பது உங்கள் முடிவு. அப்பலவீனத்தை அதன் பெருமைமிகு
ராச்சியத்தை கபளீகரம் செய்ய சின்னதாய் ஒரு முயற்சி போதும், மொத்தமும் இடிந்து
தரைமட்டமாகிவிடும்.
உங்கள் வரையில் உயிர்க்கொல்லி எனும் நோய் அங்கே அவளிடத்திற்றான் உற்பத்தியாகிறது.
இதோ உங்கள் முன் கடைபரப்பட்டுள்ளதே இந்த சரீரந்தான் அந்நோயை அமல் படுத்துகிறது.
திறந்திருக்கும் வாய்வழியே மூச்சுக் காற்று வெளியேறுகிறது, உள்ளேபோகிறது, தன்னில்
அடங்குகிறது, மீண்டும் வெளிப்படுகிறது. தசை எந்திரத்தின் மிக நுணுக்கமான காரியம்.
அசைவற்றுக் கிடக்கும் அவளைக் குனிந்து நோக்குகிறீர்கள். எப்படி வேண்டுமானாலும், ஏன்
ஆபத்தான வழிகளிற்கூட அவளைக் நீங்கள் கையாள உரிமையுண்டென்று நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் அதைச் செய்வதில்லை. மாறாக, உங்கள் செயலால் அவள் பரவச நிலையை எட்டக்கூடிய
அபாயமிருந்தும், அவளது சரீரத்தை மிக மென்மையாகத் தடவிக்கொடுத்துக்
கிளர்ச்சியூட்டுகிறீர்கள். உங்களது கைவிரல்கள் அவளது யோனியில், பிளந்திருக்கும்
அதன் அதரங்களில், அவள் நெருடுமிடத்தில். பிளவுபட்டுள்ள உதடுகளை பார்க்கிறீர்கள்,
அதைச் சூழ்ந்துள்ளவற்றைப் பார்க்கிறீர்கள், ஒட்டுமொத்த உடலையும் பார்க்கிறீர்கள்.
உங்களுக்கு எதுவும் புலனாகவில்லை, எங்கும் சூனியம்.
பெண்ணோருத்தியை முழுமையாக
காணவேண்டுமென்பது உங்கள் அவா. அதிகபட்சமாக உங்களால் முடிந்தது அதுவொன்றுதான், ஆனால்
அதைக்கூட உங்களால் செய்வதற்கு இயலாது என்பதுதான் உண்மை. மர்மத்திற்குக்
காரணமான உடலை பார்க்கிறீர்கள். உங்கள் பார்வையில் முதலாவதாகப் படுவது மெல்லிய
முனகல்களான அவளது அவஸ்தைகள். பிறகு கண்களால் காண விருப்பப்பட்டதைபோல படபடக்கும்
விழிமடல்கள். பிறகு எதையோ சொல்லத் தீர்மானித்து தொடர்ந்து திறந்து மூடும் அவளது
வாய். தவிர வேறொரு அனுபவமும் கிட்டுகிறது, உங்கள் தடவலால் அவளது யோனியின் அதரங்கள்
ஊதிப் பெரிதாகின்றன. வெல்வெட்டுப்பகுதியினின்று வெதுவெதுப்பும் கொழகொழப்பும் கொண்ட
ஒருவகை திரவம், செந்நிறத்தில் இரத்தம் போல. இப்போது முன்னிலும் வேகமாய்ச்
செயல்படுகிறீர்கள். உங்கள் காரியத்திற்கு உபகாரம் செய்யும் விதத்தில் அவளது
தொடையிரண்டும் விரிந்து இடமளிக்கின்றன.
அவள்படும் அவஸ்தைக்கிடையில் சட்டென ஓர் ஆனந்தப் பரவசத்தில் அவள் திளைப்பதைக்
கண்ணுறுகிறீர்கள். அவள் உடல் முழுமையாக உங்கள் வசம். அவ்வுடலை கட்டிலை விடுத்து
மேலெழும்பும்படிச் செய்கிறீர்கள். சாதித்துவிட்டத் திருப்தியுடன் உடலைத்
தீர்க்கத்துடன் பார்க்கிறீர்கள். மீண்டும் உடல் கட்டிலில் விழுகிறது. வெண்ணிற
கட்டில் விரிப்பில் பேச்சு மூச்சற்று கிடக்கிறது. சற்றுமுன் வேகமாய்த் துடித்த
இதயம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வபோல நிதானத்திற்கு வந்திருக்கிறது. பசைபோட்டு
ஒட்டியதுபோல முகத்தில் இறுக்கமாய் மூடியபடி இருந்த கண்கள் மெல்ல திறப்பதும் பிறகு
மூடிக்கொள்வதுமாய் இருக்கின்றன.
அவைகள் மூடிக்கொள்கின்றன. உங்கள் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை. அனைத்தையும்
கண்டீர்கள். கடைசியாக, இப்போது உங்கள் முறை என்பதுபோல நீங்களும் கண்களை
மூடிக்கொள்கிறீர்கள். அவளைபோலவே நீங்களும் கண்களை வெகுநேரமாய் மூடியபடி
இருக்கிறீர்கள்.
உங்கள் என்ணங்களில் அறைக்கு மறுபுறம், நகரத்து தெருக்கள், இரயில் நிலையத்திலிருந்து
தள்ளி அமைந்துள்ள சிறுசிறு குடியிருப்புகள், வேற்றுமைகளற்ற குளிர்காலத்து இரு
சனிக்கிழமைகளென ஒன்றன் பின் ஒன்றாக நினைவுகளில் வந்து போகின்றன.
பிறகு ஏதொவொருவித ஓசை அண்மையில் கேட்கிறது. கடல் இரைகிற ஓசை.
ஆம், கடல் இரைகிற ஓசைதான். அதுவும் அறைச்சுவர்களுக்கு வெகுநெருக்கத்தில். சன்னல்
ஊடாகப் பார்க்க எப்போதும்போல சோபையிழந்திருக்கும் வெளிச்சம், சோம்பேறித்தனத்துடன்
நகரும் பொழுது, தன்நிறத்தை ஒருபோது மாற்றிக்கொள்ளாத கருங்கடல், உறங்கும் உடல்,
அந்நியப் பெண்ணான அறைவாசி. பிறகு நீங்கள் காரியத்தில் இறங்குகிறீர்கள். எதற்காக
இக்காரியத்தினைச் செய்கிறீர்கள் எனபதை நான் அறியேன். ஆனால் அதைப்பற்றிய அடிப்படை
ஞானங்கூட இல்லாமல்தான் செய்கிறீர்களென்று என்னால் சொல்ல முடியும். உங்களால்
அறையைவிட்டு வெளியேற முடியும், உடலைவிட்டு அல்லது தூக்கத்திலிருக்கிற இவ்வுருவத்தை
விட்டும் பிரிந்து செல்லமுடியும். அப்படி செய்யவில்லை. அவளிடமிருந்து உங்களை
வேறுபடுத்தி காட்டுகிற அத்தனை முரண்பாடுகளுடனும் தொடர்ந்து செயல்படுகிறீர்கள்.
வெளியுலகத்திற்கு நீங்கள் இன்னொருத்தருக்காக அக்காரியத்தைச் செய்வதைப்போல
காட்டிக்கொள்கிறீர்கள். மீண்டும் செயல்படவேண்டி அவ்வுடலிடத்தில் வருகிறீர்கள்.
உங்கள் உடல் அவள் உடலுக்கு போர்வையாகி இருக்கிறது. உங்கள் பாரத்தினால் அவள்
நொறுங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், அவளை சாகடித்து விடக்கூடாதென்பதற்காகவும்
மென்மையாக அவளது உடலை உங்கள் உடலுக்காய் இழுத்துக்கொள்கிறீர்கள். அதன் பிறகு
காரியத்தில் இறங்குகிறீர்கள். உங்கள் இரவுஜாகைக்கு திரும்பவும் மீண்ட நீங்கள்,
அவ்விடத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறீர்கள். உங்கள் தங்கும் காலம்
நீடிக்கிறது. இன்னமும் அழுதபடி இருக்கிறீர்கள். அதற்கான காரணங்களை நீங்கள்
அறிந்தவரல்லர் என்பதோடு, அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் தங்களுக்கு இல்லையென
நினைக்கிறீர்கள். இவ்வுலகில் கெட்ட நேரத்திற்கும் சரி நல்ல நேரத்திற்கும் சரி,
இரண்டுக்கும் நான் ஒருவன் மாத்திரமே ஏகப் பிரதிநிதி என்கிற நினைப்பு உங்களிடத்தில்.
நடந்துகொண்டிருக்கிற சம்பவத்திற்கு,அப்படியொன்று இருப்பதான உங்கள் நம்பிக்கையின்படி
-சக்கரவர்த்தியாக மாறவிருப்பதைப்போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அவள்
உறங்குகிறாள். இதழ்களில் புன்னகை, என்னைக்கொன்றுவிடென்கிறாள். அவள் உடலிலிருந்து
எழுந்திருக்க மனம் வராமல் இன்னமும் படுத்திருக்கிறீர்கள். உடலில் மெல்ல
சத்தமிடுவதுபோல வெளிப்படும் முனகல் நேரங்கூடக்கூட வெளிப்படையாகவேக் கேட்கிறது.
முதன் முதலாக சந்தோஷமளிக்கும் கனவொன்றில் அவள் மிதக்கிறாள். அக்கனவில் வரிசை
வரிசையாய் ஆண்கள், முதலின் ஒருவன், பின்னர் நீங்கள், மற்றும் ஒருவன், பின்
வேறொருவன்.. நீங்கள் அழுகிறீர்கள்.
உங்கள் அழுகை அவளை எழுப்பிவிடுகிறது. அவள் உங்களைப் பார்க்கிறாள். அறையைப்
பார்க்கிறாள். மீண்டுமொரு முறை உங்களைப் பார்க்கிறீர்கள். உங்கள் கரத்தினைப்
பிடித்தவள் வருடுகிறாள். எதற்காக அழுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?
உங்களிடத்தில் கேட்கிறாள். அதற்கு நீங்கள், நான் எதற்காக அழுகிறேனென்று நீதான்
சொல்லவேண்டும், உனக்குத்தான் தெரியும், என்கிறீர்கள்.
மிகவும் மென்மையான குரலில் அவள், ஏனெனில் அன்பென்று எதுவும் உங்களிடத்தில் இல்லை,
என்கிறாள். நீங்களும், ஆம், அதுதான் காரணம், என்கிறீர்கள்.
அதனைப் புரியும்படி எனக்குச் சொல்ல முடியுமா?- அவள்.
நான் காதலிப்பதில்லை- உங்கள் பதில்.
உங்கள் வாழ்க்ககையில் காதலே அரும்பியதில்லையா?- அவள்.
இல்லை. ஒருபோதுமில்லை -நீங்கள்.
அவளது கள்ள புருஷனை கொல்லும் சந்தர்ப்பம் வாய்த்திடவேண்டும், நீங்கள் ஒருவர்
மாத்திரமே அவளை உடமையாக்கிக்கொள்ளவேண்டும், பாதுகாப்பதாகச்சொல்லும் சட்டங்களையும்,
தரும சாத்திரங்களையும் மீறி அவளை அபகரிக்க வேண்டும் என்கிற அவாவினை உங்களுக்கு
ஏற்படுத்தவல்ல மாதொருத்தியை நீங்கள் ஒருபோதும் அறிந்ததில்லையா? அல்லது
அப்படியொருத்திக்கு ஒரு போதும் உங்களைத் தெரியாதா?-அபள்.
இல்லை, ஒருபோதும் தெரியாது.
அவள் உங்களையே பார்த்தவண்ணமிருக்கிறாள், பின்னர் மீண்டுமொருமுறை, மரணம்
அபூர்வமானதொன்று, என்கிறாள்.
கடலை நீங்கள் கண்டதுண்டா என வினவுகிறாள், வெளிச்சமாக இருப்பதால் பகல் வந்து விட்டது
என்று பொருளா? -கேட்கிறாள்.
நீங்கள் பொழுது புலர்ந்துகொண்டிருக்கிறது, தவிரவும் வருடத்தின் இப்பருவத்தில்
வெளியை ஒளி மெதுவாகத்தான் நிரப்பும் என்கிறீர்கள்.
கடலின் நிறமென்ன என்பது அவளது அடுத்த கேள்வி.
கறுப்பென்பது உங்கள் பதில்.
கடல் ஒருபோதும் கறுப்பு நிறத்தில் இருப்பதில்லை. உங்கள் பதிலில் தவறு இருக்கலாம்.-
அவள்
என்னையும் ஒருத்தி நேசிக்க முடியுமா? -அவளிடத்தில் நீங்கள்.
உங்களை நேசிப்பதற்கு காரணங்கள் ஏதுமில்லையென அவள் சொல்ல நீங்கள்: ஏன் எனது இறப்பு
ஒரு தடையா? என கேட்கிறீர்கள். அதற்கவள், உண்மைதான், ஆனால் அந்த அபத்திரம் மாத்திரமா
காரணம், உணர்ச்சிகளேதுமற்ற மரக்கட்டையாக நீங்கள் இருப்பதும், கடல் நிறம்
கறுப்பென்கிற உங்கள் புளுகுகுங்கூட காரணங்கள்தான்.
அதன் பிறகு அவள் அமைதியானாள்.
எங்கே விட்டால் மீண்டும் ஆழ்ந்து உறங்கிவிடுவாளோ என்கிற அச்சத்தில் அவளை எழுப்பி,
ஏதாவது தொடர்ந்து பேசேன், என்கிறீர்கள். அதற்கவள் நான் மாத்திரம் எதைப் பேசுவது.
நீங்கள் வேண்டுமானால் கேள்வி கேளுங்கள், அதற்குப் பதிலளிக்கிறவகையில் நான் பேச
முயல்கிறேன் என்கிறாள். மறுபடியும் அவளிடம், என்னை எவரேனும் நேசிப்பதற்கு
வாய்ப்புகள் உண்டா? அவளோ, வாய்ப்புகள் இல்லை என்கிறாள்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு, பால்கணியிலிருந்து இரண்டாவது முறையாக அறைக்குள் திரும்பி
என்னை ஏறிட்டபோது, என்னை கொல்லவேண்டுமென்கிற விருப்பத்தை நீங்கள் மனதிற்
சுமந்திருந்ததை, எனது உறக்கத்தில் அறிந்தேன், எதற்காக இந்த விபரீத புத்தி?
சொல்லுங்களேன் - அவள்.
ஏனென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, எனது வியாதி குறித்த தெளிவும் எனக்கில்லை -
நீங்கள்.
சிரிக்கிறாள். பின்னர், இப்போதுதான் முதன் முறையாக பிணத்திற்கும் உயிருண்டென்பது
எனக்குத் தெரிய வந்திருக்கிறது. உங்களைச் சந்திப்பதற்கு முன்பு நான் அறிந்திராத
உண்மை, என்கிறாள்.
கருவிழிகளின் தெளிந்த பார்வையூடாக உங்களைப் பார்க்கிறாள். உங்களிடம், நீங்கள்
மரணத்தின் அதிகாரத்தைப் பிரகடணபடுத்துகிறீர்கள். மரணத்தை நேசிக்க வேண்டுமா கூடாதா
என்பதை சம்பந்தவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் நிர்ப்பந்திக்க கூடாது.
உங்களுக்குக் காதல் உறவினைக் காட்டிலும், அழுதுக்கொண்டிருப்பதில் நம்பிக்கை
இருக்கிறது, மரணத்தை பிரகடணப்படுத்துவதிலும் அழுவதில்
அக்கறைகாட்டுகிறீர்கள்-என்கிறாள்.
அவள் மீண்டும் உறங்கத் தொடங்கிவிட்டாள். நீங்கள் விளங்கிக் கொள்ளாதவகையில்,
மரணத்தின் காரணமாக இறக்கவிருக்கிறீர்கள். உங்கள் மரணம் எப்போதோ ஆரம்பித்தாயிற்று,
என்கிறாள்.
நீங்கள் அழுகிறீர்கள். அவள் உங்களிடத்தில், அழாதீர்கள், அது அவசியமற்றது, இப்படி
அழுகின்ற வழக்கம் இனியும் உங்களுக்கு வேண்டாம், அதனால் எந்தப்பலனுமில்லை.
சூரியஒளியை உள்வாங்கி வெளிச்சமுற்றதை கவனத்திற்கொள்ளாமல் அறை கூடுதலான இருட்டில்
இருப்பதைபோல உணர்வு.
அவள் விழிகள் திறக்கின்றன பின்னர் மூடிக்கொள்கின்றன. நீங்கள் கொடுத்துள்ள
பணத்திற்கு இன்னும் இரண்ண்டு இரவுகளே பாக்கியுள்ளன. கூடிய சீக்கிரம் முடிவுக்கு
வரயிருக்கிறது. சிரித்த்வள், அவளது கரம்கொண்டு உங்கள் கண்களை வருடிக்கொடுக்கிறாள்.
உறங்கியபடி உங்களை எள்ளுகிறாள்.
நீங்கள் தொடர்ந்து, தனியொருவராக, விருப்படி பேசியபடி இருக்கிறீர்கள். காதல் என்பது
உங்களை பொறுத்தவரையில் நிலையற்றதாக இருந்திருக்கிறது, அதைப் புரிந்துகொள்ளும்
சந்தர்ப்பம் ஒருபோதும் உங்களுக்கு வாய்த்ததில்லை, அதன் காரணமாகவே காதலை தவிர்த்தும்
வந்திருக்கிறீர்கள், காதல் வயப்படாமல் சுதந்திரமாக இருப்பதும் உங்கள் விருப்பம், என
புலம்புகிறீர்கள். இனி வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒன்று மில்லை, எல்லாவற்றையும்
இழந்தாயிற்று, ஆனால் எதனை எவ்விடத்தில் இழந்தோமென்று உங்களுக்குத் த்ரியாதென்றும்
சொல்லிக்கொள்கிறீர்கள்.
உங்கள் பிரசங்கம் அவளுக்கு அலுத்துவிட்டது, உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
நீங்கள் அவளிடம் சிறுவர்களுக்கான கதையொன்றைச் சொல்கிறீர்கள்.
சன்னலில் வைகறை துலக்கமாகி இருக்கிறது.
கண்விழித்தவள் உங்களிடத்தில், இனியும் புளுக வேண்டாம். எனக்கு அலுத்துவிட்டது,
என்கிறாள். பிறகு, உலகத்தைக் குறித்த உங்கள் குருட்டு அபிப்ராயத்திற்கு
இணங்கிப்போகும் சந்தர்ப்பம் எனக்கு ஒருபோதும் அமைந்திடாதென நம்புகிறேன், தவிரவும்
மரணத்தினால் நேர்ந்த உங்கள் சுறுதிபேதமற்ற ஒப்பாரி குறித்தும் பகலோ, இரவோ உங்கள்
உயிர்வாழ்க்கையோடு சமவீதாச்சாரத்தில் ஒட்டிக்கிடக்கும் மரணத்தின் தன்மைகுறித்தும்,
காதலுக்கு லாயக்கற்றவராக உங்களை மாற்றிடும் அதன் அபாயகரமான பணி குறித்தும் நீங்கள்
வேண்டுமானால் தெரிந்துகொள்ளுங்கள், எனக்கதை தெரிந்துகொள்ளூம் அவசியமில்லை,
என்கிறாள்.
தொடர்ந்து, பகற்பொழுது வந்திருக்கிறது. இனி அனைத்திற்கும் ஆரம்பம். ஒவ்வொன்றும்
தனது காரியத்தைத் தொடங்கும் நேரம். நீங்கள் மாத்திரமே விதி விலக்கானவர்.
ஆரம்பித்தினை அறியாதவர், ஆரம்பிக்கப் போதாதவர்.
மீண்டும் உறக்கத்தில் ஆழ்கிறாள். அவளிடத்தில், எதனாலிப்படி தூங்கியபடி இருக்கிறாய்?
அப்படியென்ன உலகத்திலில்லாத அசதி உனக்கு மாத்திரம், தொடர்ந்து ஓய்வெடுப்பதற்கு? -
என நீங்கள் கேட்கிறீர்கள். கரத்தினை உயர்த்துகிறாள்,உங்கள் முகத்தினை அல்ல உங்கள்
வாயினைத் தடவிக்கொடுக்கிறாள். துயிலுற்றவாறே உங்களைப் பரிகாசிப்பதில் ஆர்வம்
காட்டுகிறாள். நீங்கள் புரிந்துகொண்டா கேள்வி கேட்கிறீர்கள், அப்படித்தான் நானும்
புரிந்துகொள்ளாமலே உங்களாலும், மரணத்தினாலும் ஓய்வெடுக்கிறேன்- அவள்.
சிறுவர் கதையொன்றை தொடர்ந்து சொல்லுகிற நீங்கள், இடைக்கிடை அவளிடத்தில்
கூச்சலிடுகிறீர்கள். பின்னர் சிறுவனின் கதையோ, உங்களுடைய கதையோ எதையும் முழுதாகச்
சொல்லத் தெரியாதென்கிறீர்கள். வேறொருவர் சொல்ல இக்கதையைக் கேட்டிருக்கிறேன்,
என்கிறீர்கள். அவள் சிரிக்கிறாள், இக்கதையை பலமுறை பிறர் சொல்ல கேட்டதுமுண்டு, அநேக
இடங்களில் நிறைய புத்தகங்களில் வாசித்த அனுபவமும் உண்டு, என்கிறாள். நீங்கள்
அவளிடத்தில் காதல் உணர்வென்பது ஷணத்தில் தோன்றக்கூடியதா? எப்படி சாத்தியம்? எனக்
கேட்கிறீர்கள். அதற்கவள், உலகின் நெறிமுறைகளில், சின்னதாய் ஏற்படும் ஒரு விரிசல்
போதும், ஏன் உதாரணமாக ஒரு தவறுகூட அதற்குக் காரணமாகலாம், ஆனால் ஒரு போதும்
விருப்பம் காரணமாகாது. வேறு எங்கெல்லாம் அல்லது எவ்விடத்தில் இப்படி சட்டென காதல்
உணர்வு தோன்ற சாத்தியங்கள் உள்ளன? தயை செய்து விளக்கமாய்ச்சொல்லேன், அவளிடத்தில்
மன்றாடுகிறீர்கள். உங்கள் கேள்விக்கெனவே காத்திருந்ததுபோல, ஏன் எல்லா இடங்களிலும்
சாத்தியபடக்கூடியதுதான். இராக்கால பறவைகள் இரைதேடும் நேரங்களில், உறக்கத்தில்,
கனவுகளில், இறக்கும் தருவாயில், ஒரே ஒரு வார்த்தையில், இழைக்கும் ஒரு குற்றத்தில்,
ஒவ்வொருவரிடமும், ஏன் உங்களிடமேகூட, திடீரென்று எப்படியென உணரப்படாமலே
ஏற்படக்கூடியதுதான், என்கிறாள். தொடர்ந்து, இங்கே பாருங்கள். அவளது தொடைகளை
விரிக்கிறாள். அவளது விரிந்திருக்கும் தொடைகளுக்கிடையேயான பிளவில் கரிய நிறத்தில்
கங்குல். உடனே நீங்கள், அட கும்மிருட்டு இப்படித்தான் இருந்தது.. இதுதான் இதுதான்..
என பிதற்றுகிறீர்கள்.
வா! வாருங்கள்! அதற்குள்ளே நுழையுங்கள் -அவள். நீங்கள் கூடுதலாக அழுகிறீர்கள்.
அவள், அழாதே - என்கிறாள். பிறகு, அதனைச் செயல்படுத்தவேண்டுமெனில் கைகளில் என்னை
வாங்கிக்கொள்ளவேண்டும், என்கிறாள்.
அவள் வேண்டுதலை நிறைவேற்றுகிறீர்கள், கைகளில் ஏந்திக்கொள்கிறீர்கள்.
அது நடந்தேறியது.
மீண்டும் நித்திரையில் ஆழ்கிறாள்.
ஒரு நாள் அவளைக் காணவில்லை. நீங்கள் கண்விழித்து பார்க்கிறீர்கள், அவள் இல்லாதது
தெரிய வருகிறது. இரவோடு இரவாக புறப்பட்டுப் போயிருக்கிறாள். போர்வையில் இன்னமும்
ஒட்டிக்கொண்டு குளிர்ந்து போயிருக்கிற அவளது சரீரத்தின் அடையாளம்.
இன்றைய தினம் சூரிய ஒளியின் வரவிற்காகக் காத்திருக்கும் வைகறைபொழுதுதென்பதால்
அடிவானம் வெளுத்திருக்கிறது. நடுவானம் தான் கறுத்ததுபோக, மிச்சமிருந்த கருமையை
பூமிக்கு வார்க்கிறது.
அறையில் உங்களைத்தவிர வேறெதுவும் இல்லை. அவள் சரீரம் போனவிடம் தெரியவில்லை.
உங்களுக்கும் அவளுக்குமிடையேயுள்ள பேதத்தினை, திடீரென நேர்ந்துள்ள அவளது மறைவு
ஊர்ஜிதப்படுத்துகிறது.
தூரத்தில் கடற்கரையில், பிரியவிருக்கும் இருளில் கடற்பறவைகள் சத்தமிடக்கூடும். அவை
சிற்றலைகள் ஒதுக்கிய மணலினைச் சீய்த்து, சேற்றினைக் கிண்டி கிடைத்த புழுக்களைத்
தின்று வயிற்றை நிரப்புவதை முன்பே தொடங்கியிருக்கவேண்டும். இருட்டில் பசித்த
கடற்பறவைகள் எழுப்பும் உன்மத்த ஓசை, சட்டென்று உங்களுக்கு இதுவரை கேட்டிராததுபோல
தோன்றுகிறது.
அவளினி திரும்ப வரப்போவதில்லை. அவள் புறப்பட்டுப்போன அன்றை மாலை, மதுச்சாலைக்குச்
செல்லும் நீங்கள் கதையைச் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கதைசொல்லவ்ரும் என்பதுபோல
ஆரம்பித்து பின்னர் விட்டுவிடுகிறீர்கள். பிறகு சிரித்தபடி, இப்படியெல்லாம்கூட
நடக்குமா என்ன, சொன்னவை அனைத்துமே எனது கற்பனையில் உதித்தவை, என மழுப்புகிறீ£ர்கள்.
மறுநாள், அவளில்லாமல் வெறிச்சோடி கிடக்கும் அறை ஒருவேளை மீண்டும் உங்கள்
கவனத்தினைப் பெறக்கூடும். அம்மறுநாள், இதுவரை நீங்கள் அறிந்திராத உங்களில்,
அபூர்வமாய் உங்களுக்கு நேர்ந்திருக்கிற தனிமையில் மறுபடியும் அவளை காணவேண்டுமென்கிற
ஏக்கத்தின் சோதனை நாளாகவும் அமையலாம்.
ஒருவேளை அவளை நீங்கள் அறைக்கு வெளியே தேடலாம், கடற்கரைகளில் தேடலாம், பால்கணிகளில்
தேடலாம். உங்கள் தேடல் அனைத்துமே வீண் அலைச்சலாகத்தான் முடியும், ஏனெனில் பகல்
வேளைகளில் உங்களால் ஒருவரையும் அடையாளபடுத்துவது இயலாது. அதுவன்றி, விழிகளை மூடி
அல்லது திறந்தபடி சயனித்திருந்த உடலாகமாத்திரமே அவளைப் பார்த்திருக்கிறீர்கள். உடற்
பிரவேசத்தை அடையாளபடுத்துவதென்பது உங்களுக்கு ஆகாத வேலை. இன்றைக்குக்கு மட்டுமல்ல,
எனறைக்குமே உங்களால் முடியாது.
நீங்கள் அழுதபோது உங்களுக்காக அழுதீர்களேயொழிய, உங்களிருவருக்கும் இடையிலான
முரண்பாடுகள் ஊடாக அவளை மறுபடியும் சந்திக்க முயன்று முடியாமற்போன
அப்போற்றுதலுக்குரிய இயலாமைக்காகவல்ல.
இக்கதைமூச்சூடும், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்று சொன்னால், அவை,
தூக்கத்தில் அவள் கூறிய சொற்கள், அச்சொற்கள் உங்களைப் பீடித்திருக்கும் நோய்க்கு
பேர் சேர்த்த சொற்கள்:உயிர்க்கொல்லி நோய்.
இத்தனை சீக்கிரம் நீங்கள் அவளை கைவிடுவீர்கள் என்று நினைக்கவில்லை. அவளை இனி
நீங்கள் தேடப்போவதில்லை. இரவோ, பகலோ அல்லது நகரமோ, எங்குமே தேடி அலையப்போவதில்லை.
தேடி என்ன ஆகப்போகிறது?
அப்படித்தான் இழந்தாலென்ன, மீண்டும் உங்களுக்கு வாய்க்கும்வரை இருக்கவே இருக்கிறது
உங்களுக்கு நேர்ந்த அனுபவம், இனி அவ்வனுபவத்தின்படி தற்போதைக்கு காதலுக்கு நீங்கள்
உயிர்ப்பிச்சை அளிக்க முடியும்.
(முற்றும்) நன்றி: அணங்கு
பகுதி - 1!
உயிர்க்கொல்லி*
- மர்க்கெரித் த்யுரா - பிரெஞ்சிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா -.உள்ளே