காதலன் - 3!
- மார்கெரித் த்யூரா -
தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -
மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர்
மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள்
ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி
படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய
எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று
நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover))
என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின்
மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது
எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை
சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும்,
அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான
உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை.
வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில்
தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப்
பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது
உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு
ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது
படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது
இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.
http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html
அத்தியாயம் மூன்று!
ஆற்றின் வண்டல், ஒளியாக எங்கும் படிந்திருக்க, தோணிப் பாலத்தின் பிடிமானத்தில்
கைகளை மடித்து சாய்ந்தபடி, வழக்கம்போல மிருதுவான தொப்பி தலையை அலங்கரிக்க,
தன்னந்தனியே சிறுமி நிற்கிறாள். காட்சியை நிரப்பவென்று ரோசாவண்ணத்தில் ஆண்களுக்கான
ஒரு தொப்பி. அதுவன்றி வேறு வண்ணங்கள் அங்கில்லை. கடுமையான வெப்பத்துக்கேயுரிய
சூரியன், அதன் ஒளியில் நதி ஏற்படுத்தியிருக்கிற மூடுபனி மாதிரியான தெளிவற்றச்
சூழல், கரைகளைக்கூட தேடவேண்டி இருக்கிறது. தொடுவானத்தில் நதி சங்கமிப்பதுபோல பிரமை,
சத்தமிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, சின்னதாய் ஒரு 'களக்' இல்லை, உடலின் இரத்த
ஓட்டம்போல அத்தனை அமைதி. நீர் பரப்பினைத் தவிர்த்து பிறபகுதிகளில் காற்றும்
அசைவின்றி இருக்கிறது. சம்பவத்தின் சத்தமென்று சொன்னால், அது தோணியின் மூப்படைந்த
எந்திரம் எழுப்பும் 'தடக் தடக்' என்ற ஓசை. அவ்வப்போது, எதிர்பாராதவிதமாக வீசும்
காற்றும்; மனிதக் குரல்களின் இரைச்சலும்; தெளிவற்ற புகைபரப்பிற்குப்
பின்புறமிருந்தும், கிராமங்களிலிருந்தும் நாய்களின் குரைப்பும் கேட்கின்றன. தோணி
ஓட்டுபவனை, தனது குழந்தைப் பருவத்திருந்தே சிறுமி அறிவாள். அவளைப் பார்த்ததும்,
புன்னகைத்தவன், "மதாம் தலைமை ஆசிரியை, நலமா?" என விசாரித்தான், கூடவே, இரவு
நேரங்களில் தோணியில் அவர் அடிக்கடி பயணம் செய்யத் தான் பார்க்கிறேன், என்றான்.
சமீபத்தில் கம்போடியாவில் வாங்கியிருந்த நிலத்தைப் பார்க்கவென்று அவள் செல்வதுண்டு.
சிறுமி அவனிடத்தில், "அம்மாவுக்கென்ன, நலமாகத்தான் இருக்கிறார்கள்", என்றாள்.
படகைச்சுற்றி நீரளவு கரை அளவிற்கு உயர்ந்து, பின்னர் நெல்வயல்களில்
தேங்கிக்கிடக்கிற நீருடாக வழிந்து சென்றாலும், கலப்பதில்லை. கம்போடியாவின்
'தோன்லெசாப்'(Tonlesap) வனப்பகுதியிலிருந்து எதிர்பட்டதையெல்லாம், நதி வாரிக்கொண்டு
வந்திருக்கிறது. குடிசைகள்; மரங்கள்; அணைந்த தீ; இறந்த பறவைகள், நாய்கள், புலிகள்,
எருமைகள், நீரில் மூழ்கிய மனிதர்கள், அழுகிய உடல்கள், குவியல் குவியலாய் நீலோற்பல
மலர்கள் என அனைத்தும் சுழன்று பாயும் ஆழ் நதி நீரோட்டத்தின் காரணமாக, நீரில்
அமிழ்ந்துவிடாமல், மிதந்தபடி வேகமாய்ப் பசிபிக் பெருங்கடலை நோக்கி அடித்துச்
செல்லப்படுகின்றன.
"தற்போதைக்கு நான் செய்யவேண்டியதென்று சொன்னால், எழுதுவதைத் தவிர வேறொன்றுமில்லை",
என்று அம்மாவிடத்தில் சொன்னேன். அவளுக்குப் பொறாமை. அதன்பின்னர் அவள் பதிலின்றி
இருந்ததும், சாடையாக பார்த்ததும், சட்டென்று திரும்பிக்கொண்டதும், அளவாய் ஒரு முறை
தோளைக் குலுக்கிக்கொண்டதும், நினைவில் இருக்கிறது. அவளை முதலிற் பிரிவது
நானாகத்தான் இருக்கும். என்னை, அதாவது இந்தக் குழந்தையை இழக்க ஒரு சில ஆண்டுகள்
கட்டாயம் அவள் காத்திருக்க வேண்டியிருக்கும், தவிர்க்க முடியாது. பையன்கள்
விஷயத்தில் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. என்றேனும் ஒருநாள், இப்பெண் தன்னை விட்டுப்
பிரிந்துசெல்லக்கூடும் என்பதும், அதற்கான வழிமுறைகள் அவளுக்குத் தெரியும் என்பதும்
அம்மா புரிந்திருந்தாள். பிரெஞ்சு பாடத்தில் முதலாவதாக வந்திருக்கிறேன். எனது
ஆசிரியர் அம்மாவிடம், " மதாம், உங்கள் மகள் பிரெஞ்சு பாடத்தில் முதல் மதிப்பெண்
பெற்றிருக்கிறாள்", என்கிறார். அம்மா, அமைதியாக இருக்கிறாள். ஒரே ஒரு சொல் ம்...
இல்லை. அவளுக்கு அதனாற் மகிழ்ச்சி இல்லை, பிரெஞ்சு பாடத்தில் முதலாவதாக
வந்திருப்பது அவளுடைய ஆண்பிள்ளைகள் அல்லவே, பெட்டை பிள்ளைதானே, பின் எதற்காக
அவளுக்கு மகிழ்ச்சி? எனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அம்மா என்ன கேட்கிறாள்
தெரியுமா?, "சரி கணக்கில் எப்படி? அதற்கு "இன்னமும் போதிய அளவிற்கு இல்லை, ஆனால்
அதிலும் திறமையைக் காட்டுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது", என்று
பதில் வர, அம்மா தொடர்ந்து, "என்றைக்கு? இன்றைய தேதியில் ஒன்றுமில்லையே",
என்கிறாள். மீண்டும், "உங்கள் மகள் விரும்பினால் கூடிய சீக்கிரம் அதற்கும்
சாத்தியம்", என்று பதில் வருகிறது.
எனது தாய், எனது பிரியத்திற்கு உகந்தவள், வெப்ப மண்டலபிரதேசமாக இருப்பினும் ஒரு
பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக இருப்பவள் கண்டிப்பாக காலுறைகள் அணிவது அவசியம்
என்கிற நினைப்புடன், வேலைக்காரி 'தோ'வால், தைத்து சரி செய்யப்பட்ட காலுறைகளை
மாட்டிக்கொண்டு, அவள் நடப்பதைப் பார்க்கவேண்டுமே, ஐய்யோ சகிக்காது. போதாதற்கு
நைந்து, பரிதாபமாகக் காட்சியளிக்கும் அவளுடைய கவுன்கள், அவைகளும் பெரும்பாலும்
வேலைக்காரி 'தோ'வால் தைத்து சரிசெய்யபட்டவைகளாக இருந்தன. அவளுக்கு இன்னமும், தனது
அத்தை மகள்கள், மாமன் மகள்களுடன் தான் வசித்த பிக்கார்டி(1) பண்ணைவீட்டிலிருந்து
நேராக புறப்பட்டு வந்ததுபோல எண்ணம், எல்லாப் பொருட்களையும் கடைசிவரை
உபயோகித்திடவேண்டும், அதை அவசியமென்றும் நினக்கிறாள், அதற்கான தகுதிகள்,
அப்பொருள்களுக்கு உண்டென்பதும் அவளது முடிவு. அவள் அணிகிற காலணிகள் கூட மோசமாக
தேய்ந்திருக்கும், நேராக நடக்க முடியாமல், சிரமப்படுகிறாள். தலைமுடியைச்
சீனப்பெண்களைப்போல கழுத்துக்குமேலே இழுத்து முடிந்திருக்கிறாள், அவளால் எங்களுக்கு
அவமானம், குறிப்பாக உயர்நிலைப்பள்ளி வழியாக வீதியில் அவள் போகிறபோது எனக்குப்
பெருத்த அவமானம், B.12ல், பள்ளிக்கு முன்னால் அவள் இறங்குகிறபோது அத்தனைபேரும் அவளை
பார்க்கிறார்கள், ஆனாலும் அவள் அதை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை, அவள்
பூட்டிவைக்கப்படவேண்டியவள், அடக்கிவைக்கப்படவேண்டியவள், செத்தொழிந்தாலும் நிம்மதி.
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவள், "பார்ப்போம், எனக்கென்னவோ, அம்மாதிரியான
எண்ணங்களிலிருந்து நீ விடுபடுவாய் என்றுதான் நினைக்கிறேன்", என்கிறாள். ஒருவகையில்
அவள் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது, இப்படியான வாழ்க்கையிலிருந்து எப்படி
விடுபடுவது என்பது குறித்த ஒரே சிந்தனையில்தான் இரவும் பகலும் இருந்தேனே அன்றி,
ஏதாவது நடந்தாகவேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் இல்லை.
மகிழ்ச்சியான தருணங்களில், அம்மா அவநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதைப் பார்க்க
முடிகிறது, அப்படியான நேரங்களில், நான் அணிந்திருக்கும், ஆண்களுக்கான தொப்பியும்,
'லாமே ஓர்' காலணியும், அவளுடைய கவனத்தை ஈர்க்கும் போலிருக்கிறது. என்னிடத்தில்,
"என்ன விஷயம்?", என்கிறாள். நான்,"ஒன்றுமில்லை", என்கிறேன். தொடர்ந்து சிலகணங்கள்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவள், புன்னகைக்கிறாள், அவளுக்கு அந்தக் கோலத்தில்
என்னைப் பார்க்கச் சந்தோஷம். "பரவாயில்லையே, உனக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதோடு,
உன்னை நன்கு மாற்றியிருக்கிறது", என்றாள். அவைகளை வாங்கியது தான் என்பதை அவள்
உணர்ந்திருந்ததால், யார் வாங்கியது? என்று அவள் கேட்கவில்லை. அவளால் சாதிக்க
முடிந்த நேரங்களும் உண்டு, விரும்பியவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்பதுபோல அன்றைய
தினம் அவள் எங்களோடு சுமுகமாக இருந்தாள், என்கிறேன். "தவிர வருந்தவேண்டாம்,
அவைகளுக்குக் கொடுத்த விலையும் அப்படியொன்றும் அதிகமல்ல என சமாதானப்படுத்துகிறேன்.
"எங்கே வாங்கினோம்? நினைவிருக்கிறதா?", என்று கேட்கிறாள். 'கத்தீனா வீதி', மலிவு
விலையில் போட்டிருந்ததை, மீண்டும் விலைகுறைத்து வைத்திருந்தார்கள், என்கிறேன்.
என்னை பரிவுடன் பார்க்கிறாள். சின்னப்பெண், தன்னுள் கற்பனையை வளர்த்துக்கொள்வதும்,
அதற்கேற்ப தனது ஆடை அணிகலன்களில் கவனம் செலுத்துவதும், பரவாயில்லை இவள்
பிழைத்துவிடுவாள் என்ற எண்ணத்தை அவளிடம் ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவள் வரையில்,
பலரின் நகைப்பிற்கும் இடமளிப்பதோடு, சங்கடங்களுக்கும் உட்பட்டு வாழ்வை
நடத்துகிறாள். விதவையாக ஒதுங்கிக்கொண்டு, மடத்துப்பெண்மணிகளைபோல சாம்பல்வண்ண பெரிய
கவுன்களை அணிவதும், அதில் மகிழ்ச்சி அடைவதையும் பார்க்கிறேன்.
வீட்டில் வறுமை, என்னிடமிருந்த ஆண்களுக்கான தொப்பி மூலம் பிறர் அதனை அறிய
முடிகிறது. இந்த நேரம் எங்களுக்குத் தேவை பணம் அது எப்படிவேண்டுமானாலும் வரட்டும்.
அம்மாவைச் சுற்றி இருப்பதெல்லாம் வரட்சியும், பாலையும். அவளது பிள்ளைகளுங்கூட பாலை
நிலமே. அவர்களால் எந்த உதவியும் இல்லை, இருக்கிற பூமி கூட உவர் நிலங்களே.
அதிற்போட்டிருந்த அத்தனை பணமும் வீண், எல்லாம் முடிந்தது. எஞ்சியிருப்பது வளர்ந்த
இச்சிறுமி மட்டுமே. அநேகமாக பணத்தை எப்படிச் சம்பாதிக்கலாம் என்பது என்றேனும் ஒரு
நாள் இவளுக்குத் தெரியவரக்கூடும். ஒருவேளை அதற்காகத்தான் அம்மா தனது மகளை, வேசிச்
சிறுமியைப்போல உடையணிந்து வெளியில் செல்ல அனுமதிக்கிறாளோ என்னவோ, புரியவில்லை. அதை
உணர்ந்தே, அதாவது பிறரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கமுடிகிற அலங்காரங்களோடு,
பணத்தின் தேவையும் சம்பந்தப்பட்டிருக்கிறது, என்பதை உணர்ந்தே தனது ஆடை அலங்காரங்களை
முன்னமேயே மாற்றிக்கொள்ள அச்சிறுமிக்கும் தெரிந்திருந்தது. நினைத்துப் பார்க்க
அம்மாவுக்கு மகிழ்ச்சி, அதனை வெளிக்காட்டும் வகையிற் புன்னகைக்கிறாள்.
பணத்திற்காக ஏதேனும் அவள் செய்கிறாளெனில் அம்மா தடுக்கப்போவதில்லை. "பிரான்சுக்குத்
திரும்பப்போகணும், ஐந்நூறு பியாஸ்த்ரு(2) அவனிடம் கேட்டேன்", என்று சிறுமி கூறலாம்.
அதற்கு அம்மா, "நல்லது, பாரீஸில் குடியிருக்கவேண்டுமெனில் அவ்வளவு பணம்
தேவைப்படலாம், என்று சொல்லக்கூடும், பிறகு இவள், "ஐந்நூறு இருந்தால் போதுமா", என்று
கேட்கக்கூடும்.. என்ன செய்யவேண்டுமென்றும் சிறுமிக்குத் தெரியும், அதிலும் அன்றாடம்
சோதனைகளைச் சந்தித்து அலுத்துப்போயிருக்கும் அம்மா, துணிச்சலும், பலமும் இருந்தால்,
தனது மகளை எதைச் செய்ய அனுமதித்திருக்கக்கூடும் என்பதையும் அறிவாள்.
எனது சிறுவயது அனுபவங்களைச் சொல்லும் புத்தகங்களில், சடாரென்று எதைச் சொல்லாமல்
தவிர்த்தேன், எதைச் சொன்னேன் என்று நினைவில்லை, அம்மாவிடம் எங்களிடத்திலிருந்த
பாசத்தினை சொல்லியிருந்தேனேயொழிய, எங்கள் குடும்பத்தின் அழிவு, இழப்பு என்கிற
பொதுவான கதைக்குக் காரணாக இருந்த, அம்மாமீதான எங்கள் கசப்பினையும்,
எங்களுக்கிடையேயான அன்பினையும், பேதங்களையும் அவற்றில் பேசினேனா என்று ஞாபகமில்லை,
பரஸ்பர அன்பினைப்போலவே, எங்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும், விழிகள் மூடிய
பிரசவித்த சிசுபோல, எனது தேடுதலுக்குத் தப்பித்து, இன்றைக்கும் எனது உடலுக்குள்
எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றன.
அனைத்து சலனமின்மைக்கும் அவளே மூலம், மௌனம் அன்றி வேறு செயல்பாடுகளில்லை.
ஆறப்போடுதல் எனது வாழ்க்கையாகிவிட்டது. இன்றைக்கும் அப்படியே இருக்கிறேன், எதிரில்
மந்திர சக்திக்குக் கட்டுண்ட பிள்ளைகள், அவர்களுக்கும் எனக்குமான புதிரான
இடைவெளியிற்கூட மாற்றமில்லை. நினைத்ததுபோல ஒருபோதும் எழுதியவளில்லை, ஆனால்
எழுதுவதற்கான நம்பிக்கை இருக்கிறது, ஒருபோதும் நேசித்ததில்லை, ஆனால்
நேசிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, தாழிட்ட கதவுக்கு முன்னால்
காத்திருந்ததை அன்றி வேறு செயல்களை அறியேன்.
மீகாங்நதியில், தோணியில் காத்திருந்த அன்றைக்கு அதாவது சொகுசு மோட்டார் வாகனத்தைக்
காண நேர்ந்த காலத்தில், அணைக்கருகே பெற்றிருந்த நிலம் எங்களிடத்தில்தான் இருந்தது.
அடிக்கடி மூவரும் இரவில் பயணம் செய்வதும், ஒரு சிலநாட்கள் அங்கு தங்கி
இளைப்பாறுவதும் வழக்கம். முன் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி சியாம் மலையை
பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு புறப்பட்டு வருவோம். அவளுக்கு அங்கு வேலைகள்
எதுவுமில்லை. ஆனாலும் திரும்பவும் எங்களை அழைத்துக்கொண்டு அங்கு போவாள். எனது இளைய
சகோதரனும் நானும் முன் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி காடுகளை பார்த்தபடி இருப்போம்.
இப்போது நாங்கள் வளர்ந்தவர்கள். ஏரியில் குளிப்பதும்,, கருஞ்சிறுத்தைகளை
வேட்டையாடவென்று முகத்துவாரத்திலுள்ள சதுப்புநிலபகுதிகளுக்கு செல்வதும், காடுகளைப்
பார்ப்பதும், மிளகு விளையும் கிராமங்களுக்குப் சென்றுவருவதும் இனி
இல்லையென்றாகிவிட்டது. எங்களைச் சுற்றிலும் எல்லோரும் வளர்ந்திருந்தனர்.
இளம்பிராயத்து பிள்ளைகளே இல்லை என்பதுபோல. எருமைகள், பிற இடங்களிற்கூட அப்படியானவை
இல்லை. முற்றிலும் வேறானவர்களாக நாங்கள் மாறி இருந்தோம். அம்மாவைப்
பீடித்திருந்ததுபோலவே எங்களிடமும் சுணக்கம் குடிகொண்டிருந்தது. நாள் முழுக்க
காட்டினைப் பார்த்தபடி இருப்பது, எதற்காகவாவது காத்திருப்பது அல்லது,
அழுதுகொண்டிருப்பது, இதைத் தவிர எங்களுக்குத் தெரிந்ததென்று எதுவுமில்லை. கீழ்ப்
பகுதியிலிருந்த நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல என்ற நிலையில், மேற்பகுதியில் இருந்த
துண்டு நிலங்களை, ஊதியத்திற்குப் பதிலாக சொந்த நெல் சாகுபடிக்கென்று வீட்டு
வேலைக்காரர்களுக்கு ஒதுக்கினோம். அவர்களுக்கு ஓரளவு வசதியான குடிசைகளும் அம்மா,
கட்டிக்கொடுத்திருக்கிறாள். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதி, எங்களை
அவர்கள் மிகவும் நேசித்தார்கள். எங்கள் பங்களாவைப் காப்பதுபோல நினைத்துக்கொண்டு,
காவலிருந்தார்கள். அத்தனை வேலைகளும் குறை இல்லாமல் நடந்தேறின. மழையினாற்
சேதமடைந்திருந்த கூரை தொடர்ந்து காணாமற்போனது. வீட்டிலிருந்த தளவாடங்களை துடைத்து
மெருகேற்றுவது தவறாமல் நடந்தது. சாலையிலிருந்து பார்க்க எங்கள் பங்களா ஓவியம்போல
அத்தனைக் கச்சிதமாக தெரியும். உள்ளிருக்கும் மரத்தாலான உத்திரங்கள், தூண்கள்
காற்றில் உலர்த்தபடவேண்டுமென்பதற்காகவே பகலில் கதவினைத் திறந்து வைப்பதும்,
மாலையானால் தெரு நாய்களுக்கும், மலைப்பகுதிகளில் நடமாடும் கடத்தல்காரர்களுக்கும்
பயந்து அவற்றை மூடிவைப்பதும் உண்டு.
ஆக சொகுசுகாருக்குச் சொந்தக்காரனான பணக்காரனை சத்திந்த இடம் ரெயாம்(3) நகரிலிருந்த
எங்கள் பள்ளி உணவு விடுதி அல்ல, நான் விவரித்ததுபோல கடுமையான வெப்பத்துடனும்,
நதிநீரால் ஏற்படுத்தப்பட்டிருந்த மூடுபனி மாதிரியான தெளிவற்றச் சூழலிலும் தோணியில்
சந்தித்தபோது மேலே குறிப்பிட்ட நிலத்தையும் பங்களாவையும் விட்டு வெளியேறி இரண்டு
அல்லது மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன.
சரியாக அச் சந்திப்புக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவும் நாங்களும்
பிரான்சுக்குத் திரும்பினோம். வீட்டிலிருந்த அத்தனை தளவாடங்களையும் விற்க அப்போது
தீர்மானிக்கிறாள். பிறகு கடைசிதடவையாக எங்கள் பங்களா இருந்த அணைப்பகுதிக்குச்
செல்வதென்றும், அங்கு முன் தாழ்வாரத்தில் மலைகளைப் பார்த்தபடி சிறிது நேரம்
உட்காருவதென்றும் முடிவெடுக்கிறாள். அவ்வாறே மீண்டும் ஒருமுறை அங்கிருந்து சியாமைப்
(Siam) பார்க்க இருந்தோம், அதுதான் கடைசி, மறுமுறை அதற்கான வாய்ப்பில்லை, ஏனெனில்
எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தனது ஓய்வுக் காலத்தைக் கம்போடியாவில் கழிப்பதென்று
மீண்டும் குடியேறியபோதும் அவள் ஒருபோதும் அம்மலைகளையோ, அங்கிருந்த வனப்
பிரதேசங்களுக்கு மேலாகப் பசுஞ்மஞ்சள் வண்ணத்தில் தெரிந்த வானத்தையோ காண
விரும்பியவளல்ல.
இதற்கிடையில் மற்றுமொன்றை மறக்காமல் நான் சொல்லவேண்டும். வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்திற்கூட வழக்கம்போல சும்மா இராமல், பிரெஞ்சுமொழி கற்றுகொடுப்பதென்று
பள்ளியொன்றை ஆரம்பித்தாள், பெயர் 'புதிய பிரெஞ்சு மொழி பள்ளி', அவள் உயிரோடு
இருந்தவரை அப்பள்ளியின் மூலம் கிடைத்தப் பணம், எனது படிப்பிற்கான செலவின்
ஒருபகுதியையும், என் மூத்த சகோதரனை பராமரிக்க ஆன செலவையும் சமாளிக்க உதவிற்று.
எனது சிறிய சகோதரன் 'பிராங்கோ நிமோனியாவால்'(5) பாதிக்கப்பட்டு, இதயம் இயங்க
மறுத்ததால் மூன்றாம் நாள் இறந்து போனான். அம்மாவைவிட்டு நான் விலகிப்போக நேரந்தது
அந்த நேரத்தில்தான். கம்போடியா ஜப்பானியரால் பிடிக்கப்பட்டிருந்த நேரம். இனி
எதுவுமில்லை என்று ஆன நாள். எங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றியோ அல்லது அவளைப்
பற்றியோ ஒருபோதும் நான் கேள்விகள் எழுப்பியதில்லை. என்றைக்கு எனது இளைய சகோதரன்
இறந்தானோ அன்றைக்கே அவளும் என்னைப் பொறுத்தவரையில் மரணித்துவிட்டாள். அவ்வாறே என்
மூத்தசகோதரனும் என்வரையில் இறந்து போனவன். சம்பவத்திற்குப் பிறகு, சடாரென்று
அவர்கள் என்னிடத்தில் ஏற்படுத்திய அச்சுறல்களிலிருந்து மீள முடியாமற் தவித்தேன்.
இருவருமே எனது மதிப்பீட்டில் தாழ்ந்துபோனார்கள். அதற்குப் பிறகு அவர்களைப்பற்றி
எதுவும் நினைவில் இல்லை. செட்டிமார்களிடத்தில் வாங்கிய கடனையெல்லாம் அவளால் எப்படி
அடைக்க முடிந்தது என்பது இன்றளவும் வியப்புக்குரியது. கடன் கேட்டுத் தினமும்
நடந்தவர்கள், திடீரென்று ஒருநாள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்கள் கண்முன்னே
நிற்கிறார்கள். 'சாடெக்' நகரிலிருந்த எங்கள் வீட்டு சிறிய வரவேற்பறையில் வெள்ளைத்
துணியை இடுப்பில் சுற்றிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்.
வாய்திறவாமல் காத்திருக்கிறார்கள் ஒரு நாளல்ல, இருநாளல்ல, மாதக்கணக்கில்,
வருடக்கணக்கில்..அம்மா அழுவதும், வந்தவர்களைத் திட்டுவதும் காதில் விழுகிறது.
அனைத்தும் அவள் அறையில் இருந்தபடியே அரங்கேறுகிறது, வெளியில்வர அவளுக்கு
விருப்பமில்லை. அவர்களை வெளியிற் போகச்சொல்லி சத்தம்போடுகிறாள், அவர்கள் ஊமைகள்போல
எதையும் காதில் வாங்குவதுமில்லை, பதில் சொல்லிக்கொண்டிருப்பதுமில்லை, அனைத்தையும்
புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து
அசையமாட்டார்கள். ஒரு நாள் இவைகள் எதுவும் இல்லையென்று ஆகிவிட்டது. அம்மாவும்
இரண்டு சகோதரர்களும், இறந்துவிட்டனர். அவர்களைப் பற்றிய நினைவுகளுக்குக்கூட காலம்
கடந்திருக்கிறது. அவர்களை விரும்பும் மனநிலையில் நானில்லை. உண்மையில் அவர்களை
நேசித்தேனா? தெரியாது. அவர்களை உதறிவிட்டு வந்தேன், என்பது மட்டும் உண்மை. அவர்களது
தோலுக்கான மணம் என்ன? மறந்திருக்கிறேன், அல்லது அவர்களது கண்களுக்கான நிறமாவது எனது
கண்களில் இருக்கிறதா என்றால், இல்லை. குரலைக்கூட மறந்திருந்தேன், ஆனால்
இரவுநேரங்களில் அலுப்புடன் ஒலிக்கும் மென்மையான குரலை ஞாபகப்படுத்த முடிகிறது.
சிரிப்பும் காதில் ஒலிப்பதில்லை, சிரிப்புமட்டுமல்ல, உரத்துக்கேட்ட குரலும்
இல்லையென்றாகிவிட்டது. எல்லாம் முடிந்தது. எதுவும் ஞாபகத்தில் இல்லை, விளைவு, எனது
எழுத்தில் அடிக்கடி அவள் இடம்பெறுகிறாள், இன்றைக்கு வெகு எளிதாக, எத்தனை பக்கம்
வேண்டுமானாலும், மிகவும் விபரமாக அவளைப்பற்றி எழுத முடிகிறது.
(தொடரும்)
1. Piccardie -பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த பிரதேசம், மூன்று
மாநிலங்களைத் தன்னுள் கொண்டது.
2. பிரெஞ்சு காலணிநாடுகளில் உபயோகத்திலிருந்த நாணயம்
3. கம்போடியாவைச் சேர்ந்த நகரம்
4. Siam - Thailand
5. Bronco Pneumonia
nakrish2003@yahoo.fr |