காதலன்!
- மார்கெரித் த்யூரா -
தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -
மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர்
மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள்
ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி
படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய
எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று
நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover))
என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின்
மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது
எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை
சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும்,
அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான
உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை.
வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில்
தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப்
பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது
உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு
ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது
படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது
இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.
http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html
அத்தியாயம் ஒன்று!
ஒரு நாள், நான் வளர்ந்த பெண்ணாக மாறி இருந்த நேரம்,
வெளியில் பொது இடமொன்றில் நின்றுகொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான்,
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட பின்," வெகு நாட்களாக உங்களை அறிவேன். பலரும்,
நீங்கள் இளம்வயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள், இப்போதுதான் உங்கள் அழகு
கூடி இருக்கிறது என்பதைச் சொல்லவே உங்களை நெருங்கினேன், உங்கள் இளம் வயது
முகத்தினும் பார்க்க, சோபை அற்றிருக்கும் இம் முகத்தை, நான் விரும்புகிறேன்"-
என்றான்.
இதுவரை அச் சம்பவத்தைப் பற்றி எவரிடமும் பேசாத நிலையில், ஒவ்வொருநாளும் இன்றைக்கும்
தனிமையில் இருக்கிறபோதெல்லாம் அக்காட்சியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அன்று
கண்டது போலவே அதே மௌனத்துடன், பிரம்மித்தவளாக நிற்கிறாள், அவளைச் சுற்றிலும். என்னை
மகிழ்விக்கக்கூடிய அத்தனை தனிமங்களுக்கும் இருக்கின்றன, அதாவது என்னை
நினைவுபடுத்தும், என்னை குதூகலத்தில் ஆழ்த்தும் பண்புகளோடு.
எனது வாழ்க்கையில் வெகு சீக்கிரம் பல விஷயங்கள் காலம் கடந்தவையாக இருக்கின்றன. ஏன்
பதினெட்டுவயதேகூட அநேக பிரச்சினைகளில் காலம் கடந்ததாகத்தான் இருந்தது.
பதினெட்டிற்கும் இருபத்தைந்து வயதிற்குமான இடைபட்ட காலத்தில் இன்னதென்று
விவரிக்கமுடியாத திசைக்கு எனது முகம் பயணப்பட்டிருந்தது. பதினெட்டு வயதிலேயே,
முதுமை அடைந்தவள்போலத் தோற்றம். பலருக்கும் இப்படித்தானா? விசாரித்ததில்லை. இளமைக்
காலத்திலும், புகழின் உச்சியில் இருக்கிறபோதும், வயது இப்படித் திடுமென்று
அதிகரித்ததுபோலத் தோன்றும், என்று சொல்லக் கேள்வி. ஆனால் இத்தனைக் கடுமையாக
இருக்குமென்று நினத்ததில்லை. அடுத்தடுத்து முகத்தில் விழுந்த கோடுகளும், அவைகளுக்கு
இடையேயான புதிய உறவுகளும், பெரிதாகிப் போன எனது கண்களும், பார்வையில் தெரிந்த
கூடுதலான சோகமும்; இனி மாற்றமில்லை என்றாகிய வாயும், அதரங்களும்; நெற்றியில் கண்ட
மேடு பள்ளங்களும் எனது முதுமையை அறிவிக்கப் போதுமானதாக இருந்தன. எனினும்
கலக்கமின்றி முதுமையின் அக் காரியத்தினை, ஒரு வாசிப்பு நிகழ்வாகக் கருதி ஆர்வத்தோடு
கவனித்து வந்தேன். இக் கருத்தில் பூரண உடன்பாடிருந்தது, நான் தவறுவதற்கு
வாய்ப்பில்லை, காரணம் ஒருநாள் முதுமையின் செயல்பாடுகள் நிதானத்துக்கு வரக்கூடும்,
வாசிப்பில் அன்றைக்கிருந்த அவசரம், தொடர்ந்து இருக்கமுடியாது. பதினேழுவயதில்,
பிரான்சில் நான் பயணம் செய்தபோது என்னை அறிந்திருந்த பலருக்கும், இரண்டாண்டுகள்
கழித்து பத்தொன்பது வயதில் என்னை மறுபடியும் பார்த்தபோது வியப்பு. நீங்கள்
என்னிடத்தில் இப்போது பார்ப்பது அம் முகத்தைத்தான், முதுமை அதிகரித்துக்
கொண்டிருப்பது உண்மை என்றாலும், வழக்கமான வேகம் அதற்கில்லை. சுருக்கம் கண்ட முகம்,
உலர்ந்தும் வரிவரியாய்ப் பிரிந்தும் இருக்கிறது. சில மெலிதான முகங்களைப்போல
ஒடுங்கிப்போகவில்லை, அதன் பொருண்மைகள் சிதைவுற்றபோதிலும், அதன் எல்லைக்கோடுகள்
அப்படியே காக்கப்பட்டன. உண்மை, எனது முகம் சேதம் உற்றிருக்கிறது.
உங்களிடம் சொல்வதற்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன. எனக்கு பதினைந்து வயது
ஆறுமாதங்கள். உயர்நிலைப்பள்ளிக் கல்விக்கென்று மீகாங் நதிக்கருகே ஒரு பள்ளியில்
சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். மீகாங் நதியை படகில் கடக்கிறபோது ஏற்பட்ட
பயணத் தொடர்பானக் காட்சி. பிரான்சைப்போல அந்த நாட்டில் காலங்களைப்
பிரித்துப்பார்க்க இயலாது. பூமியின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் நாங்கள்
இருக்கிறோம். காலம் என்று சொன்னால், ஒன்றேயொன்று, கடுமையாக வெப்பம் நிலவுகிற
கோடைகாலம். எறிச்சலூட்டக் கூடியது. வசந்தகாலம், புத்தாக்கம் அல்லது மறுபடியும்
உயிர்ப்பு என்று எதுவுமில்லை. சைகோன் நகரில் உள்ளூர் அரசாங்கத்துக்குச் சொந்தமான
விடுதியொன்றில் தங்கி இருக்கிறேன். அங்கே உறங்கவும், உண்ணவும் செய்கிறேன்.
படிப்புக்குப் பிரான்சு அரசுக்குத் சொந்தமான பள்ளிக்கென்று வெளியிற் செல்லவேண்டும்.
அம்மா ஆரம்பப்பள்ளி ஆசிரியை, அவளுக்கு நிறைவைத் தந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியை வேலை
அவள் மகள் விஷயத்தில் கசக்கிறது, உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக நான் வரவேண்டுமென்று
அவளுக்கு ஆசை. 'உனக்கான இடம் ஆரம்பப் பள்ளி அல்ல, ஞாபகத்தில் வைத்துக்கொண்டு படி,
கணக்கில் ஒரு பட்டயமும், உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் வரணும்', என்கிறாள்.
என்றைக்குப் பள்ளிக்கூடமென்று சேர்க்கபட்டேனோ அன்றையிலிருந்து இந்தப் பாட்டைக்
கேட்டுப்பழகி இருக்கிறேன். எனவே கணக்கிலிருந்து நான் தப்பிக்கமுடியும் என்கிற
கனவுகள் இருந்ததில்லை. அம்மாவை அப்படியானதொரு நம்பிக்கையில் வைத்திருக்க முடிகிறதே
என்கிற சந்தோஷமும் எனக்கு இருந்தது. அம்மாவுக்கு எதிர்காலம் முக்கியம், தனக்காகவும்
தன் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொருநாளும் அதன் பொருட்டு ஏதாவது செய்தாகவேண்டும்.
அப்படிப்பட்ட காரியங்களில் இறங்குகையில், இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற
நிலையில் சோர்ந்திடாமல், புதிதாக ஒன்றைத் தொடங்குவாள், எதிர்காலம் என்பது நமது
கைகளில் இருக்கிறதென்று நினைப்பவள். பிள்ளைகளும் தங்கள் பங்குக்குக் கடனே என்று,
காலத்தை வீணாக்கக் கூடாது என்பதுபோல எதையோ செய்தார்கள். எனது இளைய சகோதரன்
சென்றுவந்த அக்கவுண்டன்சி வகுப்புகள் நினைவுக்கு வருகின்றன. யூனிவர்செல்
பள்ளியிலிருந்தே பிரச்சினைதான், ஒவ்வொரு வருடமும், தொடக்கநிலை அக்கவுண்டன்ஸி
வகுப்பிலிருந்து, இறுதிநிலை அக்கவுண்டன்ஸிவரை அத்தனையையும் கற்றாகவேண்டும்,
என்பாள். மிஞ்சிப்போனால் மூன்று நாட்கள் அந்தக் கூத்துத் தொடரும். வேலை மாற்றல்
வருகிறபோதெல்லாம், யூனிவர்செல் பள்ளிகளும் மாறும், புதியபள்ளியிலும் இதுதான்
நிலைமை. பத்து ஆண்டுகள் அம்மாவால் பிடிவாதமாக இருக்க முடிந்தது. பலன் என்னவோ
பூஜ்யம். கடைசியில், எனது இளைய சகோதரன் சைகோன் நகரிலேயே கணக்கெழுதும் பணியில்
அமர்ந்ததுதான் சாதனை. வியோலே(1) மாதிரியான கல்லூரியைக் காலணி நாடுகளில்
எதிர்பார்க்க முடியாத நிலையில், மூத்த சகோதரனை பிரான்சுக்கு அனுப்பிவைத்தோம்.
அவனும் அந்தப் பள்ளியில் சேர்ந்துவிடுவதென்று பாரீஸில் சில ஆண்டுகள் தங்கினான்.
எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. அம்மாவுக்குத் தனது பெரியமகன் ஏமாற்றிவிட்டானே
என்றகோபம். அம்மா அவன் உறவு கூடாது என்று நினைத்தாள். ஒரு சில ஆண்டுகள் அவனுக்கும்
எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. எங்களோடு அவன் இல்லாத
சமயத்தில்தான் சொந்தமாக நிலமொன்று வாங்கினாள். மிக மோசமான அனுபவம் என்றாலும்,
இரவுநேரங்களில் பிள்ளைகளுக்காக வீதிகளில் அலைகிற கொலைகாரர்கள்? வேட்டைக்காரர்கள்
போன்ற கதைகளைக் கேட்டிருந்த எங்களுக்கு அச்சம் அவ்வளவாக இல்லை.
சூரியனின் கடுமை, சிறுவயதில்தான் அதிகமாக உணரப்படும் என்று சொல்ல கேட்டதுண்டு.
ஆனால் நான் அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வறுமை பிள்ளைகளை
சிந்தனையாளர்களாக மாற்றக்கூடும் என்று கூறவும், கேட்டிருக்கிறேன். இதுவும் சரி
அல்ல. பசிப்பிணி சிறியவர்களை முதியவர்கள்போல நடந்துகொள்ளவைக்கிறது என்பது
உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் எங்கள் நிலைமை வேறு: சொல்லிக் கொள்ளும்படி எங்கள்
வாழ்க்கை இல்லை என்பதும், சில வேளைகளில் வீட்டில் உள்ள தளவாடங்களை விற்க வேண்டிய
அவசியம் எங்களுக்கு இருந்ததென்பதும் உண்மை. ஆனால் பசி நாங்கள் அறியாதது. ஐரோப்பிய
பிள்ளைகள் நாங்கள், எங்கள் தோலின் நிறம் வெள்ளை. வீட்டு வேலைகளுக்கென்று உள்ளூர்
பையன் ஒருவன் இருந்தான், நேரந்தவறாமல் சாப்பிட்டோம். என்ன சாப்பிட்டோம் என்று
கேட்டுவிடாதீர்கள். சில நேரங்களில் இதுதான் என்றில்லை கொக்கு நாரை, சின்னச்சின்ன
முதலைகள் என கிடைத்ததெல்லாம் உணவாயிற்று; இதில் நீங்கள் கவனத்திற்கொள்ளவேண்டியது,
அவைகளை சமைப்பதற்காகவும், சமைத்தபின் பரிமாறவும் ஒரு வேலைக்காரப் பையனை வீட்டில்
வைத்திருந்தது, பிறகு சில சமயங்களில் படாடோபத்துடன் சமைத்த உணவை வேண்டாமென்று சொல்ல
முடிந்தது. எனது முகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு பதினெட்டு வயதில்
எனக்கேற்பட்ட சம்பவம் முக்கியம். அது இரவில் நடந்தது. என்னிடத்தில் எனக்கு அச்சம்
இருந்தது. கடவுளுக்கும் பயந்தேன். பகலென்றால் பரவாயில்லை போலிருந்தது, இரவு
அளவிற்குப் பயமில்லை. மரண பயமும் அப்படியே. என்னையே சுற்றிவந்தது. கொல்ல
விரும்பினேன். அவன் என் மூத்தச் சகோதரன் அவனைத்தான் கொல்ல விரும்பினேன், ஒரே ஒரு
முறை என் தரப்பில் உள்ள நியாயத்தை அவனுக்கு உணர்த்த முடிந்தால் போதும், அதன்பிறகு
அவன் மரணிப்பதை நான் பார்க்க வேண்டும், அதுவன்றி. வேறு ஆசைகள் இல்லை. இதிலாவது
அம்மாவை நான் முந்திக்கொள்ளவேண்டும், அதன் மூலம் அவளிடமிருந்து பிரியத்திற்கு உகந்த
அவளது பொருளை -மகனைப் பிரித்து - அவன்மீது கொண்டிருந்த மோசமான பாசத்தினைத் தண்டிக்க
வேண்டும், எனது சிறிய சகோதரனைக் காப்பாற்ற அதைச் செய்தாகவேண்டும். என் இளைய
சகோதரன்; எனக்கு மகன்போல, அப்படித்தான் அவனை நடத்தினேன், பகலை மறைத்திருக்கும்
இரவுபோல இளைய சகோதரனுடைய உயிர்வாழ்க்கையின் மீது, என் பெரிய சகோதரன்
ஆக்ரமித்திருந்தான். அதற்கான சட்டத்தை வகுத்தவனும் அவன், சட்டமாக நடந்து கொண்டவனும்
அவன். ஆறறிவு மனிதன், ஆனால் அவனுடைய விதிகள் விலங்குத்தனமானவை. அவ்விதி எனது இளைய
சகோதரனுடைய ஒவ்வொரு நாளையும், அதன் ஒவ்வொரு தருணத்தையும்
பயமுறுத்திக்கொண்டிருந்தது. அவ் அச்சம் பூதாகரமாக வளர்ந்து ஒருமுறை சகோதரனுடைய
இதயத்தையும் தாக்கி அவன் மூச்சையும் நிறுத்தியது.
எனது குடும்பத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதினவள்தான். என் தாயும், சகோதரர்களும்
உயிரோடு இருந்த காலம் அது. அவர்களை வலம் வந்தும் இருக்கிறேன், வாசல்வரை சென்றும்
இருக்கிறேன் ஆனால் உள்ளே சென்றதில்லை.
எனக்கென்று வாழ்க்கை வரலாறு இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை
ஒருபோதும் கண்டதில்லை. வழியும் இல்லை, தடமும் இல்லை. எவரேனும் ஒருவர்
இருக்கக்கூடும் என்று நம்பிக்கை ஊட்டுவதுபோல பெருவெளிகள். அது உண்மை அல்ல. அப்படி
ஒருவரும் அங்கில்லை. எனது இளமைக்காலத்தின் மிகச்சிறியபகுதியை ஓரளவு ஏற்கனவே எழுதி
இருக்கிறேன். இப்போது இதுவரை நான் சொல்லாதவற்றை, இளமைக்காலத்திய எனது உணர்வுகளைச்
சொல்லப் போகிறேன். குறிப்பாக நதியொன்றினை கடக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள். நான்
சொல்ல இருக்கும் இக்கதையை ஏதோ ஏற்கனவே கேட்டதுபோலத் தோன்றலாம். ஆனால் இதுவேறு.
முற்றிலும் மாறுபட்டது. முன்பு எனது நிர்மலமான இளமைக் காலத்தையும், ஒளியூட்டப்பட்ட
சந்தோஷக் காட்சிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன், இப்போது எனது இளமை
வாழ்க்கையின் நிழற்பகுதியையும், அதன் மர்மங்களையும் திறந்துகாட்டபோகிறேன், ஒருசில
சம்பவங்கள் அடிப்படையில், ஒருசில உணர்வுகள் அடிப்படையில், சில உண்மைகள்
அடிப்படையில் ரகசியமாக புதைக்கபட்டவை அவை. பிறந்துவளர்ந்த குடும்பச் சூழ்நிலை
காரணமாக எனது எழுத்தில் சில நெறிகளை கடைபிடிக்க வேண்டியதாயிற்று. அதுவும் தவிர,
எழுத்தென்பது அவர்களுக்கு நீதியைச் சொல்வது, ஒழுக்கங்களைப் பேசுவது. அந்த நிலைமை
இனி இல்லை, எதையும் எழுதலாம், எதையும் எழுதலாமென்றால் செருக்கு, காற்று என்று
எதையும் தொடலாம். எதையும் எழுதலாம் என்றால், இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று
திட்டவட்டமாக அறிவிக்க முடியாதபடி எதையும் எழுதலாம், விளம்பரம் தேடிக்கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் இம் மாதிரியான முடிவுகளிலிருந்தும் நான் மாறுபடுவதை
உணருகிறேன். இப்போது எனது எழுத்துவெளிக்கு எல்லைகள் இல்லை, பிறர் அறியாமல் தன்னை
ஒளிக்கவும், காரியம் ஆற்றவும், வாசிக்கப்படவும் அதற்கு இயலாது அதை மறைத்து
வைக்கவென்று ரகசிய அறைகள் இல்லை, அதன் பாதகங்கள் குறித்து கவலைகொள்ள எவருமில்லை.
இதுபோன்ற எண்ணங்கள் இதற்கு முன்பு எனக்குத் தோன்றவும் இல்லை.
எனது பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும், பதினைந்தும் என் கண்முன்னே
விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச்
சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால்
நிறைவேற்ற இயலாத பணியினை மது முடிக்க வேண்டியிருந்தது, என்னை கொல்லும் பணியையும்
மதுவிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிடுகிற இந்த மதுவின் முகம்
மதுவுக்கு முந்தைய முகம். பின்னர் எனக்கேற்பட்ட மதுப்பழக்கம் அதை உறுதிசெய்தது.
இதற்கெல்லாம் எனது வாழ்க்கையில் இடம் ஒதுக்கியிருந்தேன், பிறரைபோலவே அவற்றின்
அறிமுகம் எனக்குக் கிடைத்ததென்றாலும், முரண்பாடாக நான் பிஞ்சிலே பழுத்திருந்தேன்.
எனது வாழ்க்கையில் இச்சைகள் இடம் பிடித்ததும் அவ் வகையில்தான். கிளர்ச்சி இன்பம்
என்றால் என்ன என்பதை அறியாமலேயே, பதினைந்து வயதில் கிளர்ச்சி இன்பத்துக்குறிய முகம்
என்னிடத்தில் இருந்தது. அம்முகத்தை கடுமையாகத்தான் பிறர் கண்டார்கள். எனது தாயார்
கூட அப்படித்தான் கண்டாள். எனது உடன்பிறந்த சகோதரர்களும் அவ்வாறே பார்த்தார்கள். ஆக
எனது வாழ்க்கை, செய்முறைகளமாக - களைத்த, கால அளவில் முந்திக்கொண்ட கருவளையங்களிட்ட
கண்கள் கொண்ட முகத்தின் ஊடாகத் தொடங்கியது.
பதினைந்து வயது ஆறுமாதங்கள். நதியொன்றில் பயணம் செய்த நேரம். சைகோனுக்குத்
திரும்பிக்கொண்டிருக்கிறேன், இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் பேருந்து
ஒன்றில் நதியைக் கடந்து செல்லும் நேரம். அன்றைய தினம் காலை எனது தாய் பணிபுரிகிற
மகளிர் பள்ளி இருக்கிற சாடெக் என்ற ஊரில் பேருந்தில் ஏறினேன். பள்ளிகளுக்கான
விடுமுறைக்காலம் எனபது மட்டும் நினைவில் இருக்கிறது. ஆனால் எந்த விடுமுறையின்போது
என்பது நினைவில் இல்லை. சைகோனில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கென்று வீடுகளை
ஒதுக்கி இருந்தார்கள். அதிலொரு சிறிய இருப்பிடம் எனது தாய்க்கும் கிடைத்திருந்தது.
எனவே விடுமுறைக்கு அங்கே சென்று கழிப்பதென்று முடிவுசெய்திருந்தேன். உள்ளூர்
வாசிகளுக்கான அந்தப் பேருந்து, சாதக் நகரத்தில் சந்தைகூடும் இடத்திலிருந்து
புறப்பட்டது. முன்னதாக எப்போதும்போல அம்மா சந்தைவரை உடன் வந்து, பேருந்து
ஓட்டுனரிடம் என்னை பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். சாலை விபத்து, தீ
விபத்து, வன்புணர்ச்சி, எதிர்பாராமல் குறுக்கிடும் கொள்ளையர் கும்பல்,
நதியைக்கடக்கும் படகுக்கு ஏற்படுகிற ஆபத்தான கோளாறுகள் என அவள் அச்சங்கொள்ள
காரணங்கள் இருந்ததால் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பில் என்னை விட்டுவிட்டுச்
செல்வாள். வழக்கம்போல ஓட்டுனரும் வாகனத்தின் முன் இருக்கையில், அவர் அருகிலேயே
இருக்கை ஒதுக்கித் தந்தார்.
ஆற்றைக் கடக்கிறபோதுதான் காட்சி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். தவிர அக்காட்சி
முழுமையாகப் பிடுங்கப்பட்டிருக்கவேண்டும் அங்கேயே இருந்திருக்கவேண்டும். மற்றுமொரு
சந்தர்ப்பத்தில் பிரிதொரு காட்சியை எடுக்கக்கூடிய வகையில் அதை நிழற்படமாக
எடுத்திருக்கவேண்டும். அப்படி ஏதும் நடைபெறவில்லை. அக்காட்சி மென்மையானது
அப்படியானச் சம்பவத்தை எதிர்க்கும் துணிச்சல் அதற்கில்லை. இப்படியெல்லாம் ஆகுமென்று
யாருக்குத் தெரியும்? எனது வாழ்க்கையில் அக்காட்சிக்கான முக்கியத்துவம் முன்னதாக
உணரப்பட்டிருந்தால் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம். அச்சம்பவ நிகழ்வின்போது
அக்காட்சியின் இருப்பையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையோ என்னவோ? உண்மை
என்னவென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆகையால்தான், வேறுவகையாக உருவகிக்க
முடியாத அக்காட்சி, இல்லை என்றாகிறது. விடுபட்டுவிட்டது. மறக்கப்பட்டிருக்கிறது.
அக்காட்சி, பிரித்தெடுத்தது இல்லை. பிடுங்கப்பட்டது. எதைச் செய்யவேண்டுமோ அதைச்
செய்யாததற்கு, அதன் பண்பை அல்லது தனித்தன்மைக் காரணமென்று சொல்லலாம், ஏன்
அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம்.
ஆக மீகாங் நதியின் ஒருகரையிலிருந்து மற்றொரு கரைக்குப் படகில் பயணம் செய்கிறேன்.
அதாவது 'வின்லோங்'(Vinhkong)கிற்கும் 'சாடெக்'(Sadec)கிற்குமான பயணம். சுற்றிலும்
'கொஷன்ஷின்'ன்னுடைய தென்பகுதி, பறவைகளும், சேரும், நெல்வயல்களுமாக
கண்ணுக்கெட்டியவரை விரிந்திருக்கிறது.
நான் பேருந்துலிருந்து இறங்கிக்கொள்கிறேன். படகின் ஓரமாகச்சென்று பிடிமானத்தில்
சாய்ந்தபடி நதியைப் பார்க்கிறேன். அம்மா பலமுறை அதைக் கூடாது என்றிருக்கிறாள். எனது
வாழ்க்கையில், அதன் பிறகு ஒருபோதும் அவ்வளவு வனப்புடனும் அத்தனை பெரிய, ஆவேசங்கொண்ட
நதியை பார்க்க நேர்ந்தது இல்லை. மீகாங் நதி அதன் நீண்ட கைகளுடன், சமுத்திரத்தை
நோக்கிப் பாய்கிறது, நதியின் நீர்ப்பரப்பினை சமுத்திரப் பள்ளம் வாங்கிக்கொள்ள
இருக்கிறது. நீர்வெளியைப் பார்த்துக்கொண்டிருக்க பார்வையின் விளிம்பில் நதியின்
வேகம் கூடி, ஏதோ பூமி தாழ்ந்திருப்பதுபோல வெள்ளம் பாய்வதும் விழுவதும் தெரிகிறது.
எப்போது படகில் போனாலும் பேருந்துவிலிருந்து இறங்கிக் கொள்வேன். இரவென்றாலும்
அப்படித்தான். ஏனெனில் எனக்கு அச்சம், எங்கே படகின் இரும்புக் கயிறுகள் அறுபட்டு
கடலில் இழுத்துச் செல்லப்படுவோமோ என்ற அச்சம். பயங்கரமாய் சுழித்துக்கொண்டுப்
பாயும் வெள்ளத்தில், எனது வாழ்வின் இறுதி நிமிடங்களைப் பார்ப்பதைப்போல உணருகிறேன்.
நீரோட்டம் மிகவும் திறன்வாய்ந்ததாக இருக்கிறது. அனைத்தையும் அடித்துச் செல்லலாம்:
கற்கள், தேவாலயம், ஏன் நகரங்கூட அதனிடமிருந்து தப்பமுடியாது போலிருக்கிறது. நதி
நீருக்க்கடியில் புயல் வீசுகிறதென்று நினக்கிறேன். காற்றும் ஏதோ
பிரச்சினைபண்ணிக்கொண்டிருக்கிறது.
இயற்கைப் பட்டினால் நெய்யப்பட்ட கவுன் ஒன்று அணிந்திருக்கிறேன். மிகவும் பழையது.
தெளிவாகக் காட்டக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே அம்மா உடுத்திய கவுன், அணிந்தால்
பளிச்சென்று உடல் தெரிகிறதென்று நினைத்த நாள்முதல் அவள் அணிவதில்லை, என்னிடம்
கொடுத்துவிட்டாள். அது ஒரு கைகளற்ற கவுன். கழுத்து மிகவும் இறங்கி இருக்கிறது.
வருடக்கணக்கில் பட்டினை உபயோகிக்க ஒரு நிறம் வருமே அவ்வாறான நிறத்திற்கு
வந்திருந்தது. அந்த கவுனை என்னால் நன்கு நினவுபடுத்த முடியும். எனக்கு நன்றாக
இருந்தது. அதற்குப் பொருத்தமாக இடுப்பில் தோற் பட்டையொன்றை அணிந்திருந்தேன். அந்த
வருடத்தில் அணிந்த ஷ¥க்கள் பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை, ஆனால் அணிந்த சில
கவுன்கள் குறித்த ஞாபகம் இருக்கிறது. பெரும்பாலான நாட்களில் வெற்றுக் கால்களில்
சப்பாத்து அணிந்திருப்பேன். அதாவது சைகோன் நகரில் நடுநிலை வகுப்புகளில் இருந்தக்
காலத்தைப்பற்றி சொல்கிறேன். ஆனால் அதன் பிறகு எப்போதும் ஷ¥க்கள் அணிந்திருக்கிறேன்.
அன்றைக்கு என்னிடம் இருந்த பிரசித்தி பெற்ற, குதி உயர்ந்த லாமே ஓர்(Lame or),
காலணிகளை அணிந்திருக்கவேண்டும். அதைத் தவிர அன்றைக்கு வேறு எதையும் அணிந்திருக்க
சாத்தியமில்லை, எனவே அவற்றை அணிந்திருக்கிறேன். பள்ளிக்கு மாலை நிகழ்ச்சிகளில்
அணியக்கூடிய சிறுசிறு அலங்காரங்களைக் கொண்ட காலணிகளை அணிந்து போகிறேன். எனது
விருப்பம். என்னால் அந்த ஜோடி காலணிகளை மட்டுமே சகித்துக்க்கொள்ள முடியும்,
இன்றைக்கும் எனக்கு அவைதான் வேண்டும். குதி உயர்ந்த காலணிகளைப் போடத்தொடங்கியது
எனது வாழ்வில் அதுவே முதன் முறை. அவை மிக அழகாக இருக்கின்றன, இதுவரை ஓடவும்,
விளையாடவும், தட்டையாகவும், நாடாகொண்டும் எனது உபயோகித்திலிருந்த மற்ற காலணிகளை அவை
தகுதி இழக்கச்செய்திருக்கின்றன.
ஆனால் அன்றையதினம் வேறொருப் பொருள் அப்பெண்ணை பிறர் வியந்துபார்க்கவும்,
அதிசயிக்கவும் காரணமாக இருந்தது, அது செம்மரம் நிறத்தில், கறுப்புப் பட்டையுடன்
மடியக்கூடியதாகவும், தட்டையான ஓரத்துடனும் தலையில் அணிந்திருந்த அவளது தொப்பி.
அன்றி நீங்கள் நினைப்பதுபோல, அவள் அணிந்திருந்த ஷ¥ அல்ல. ஆக அவளிடத்தில்
முரண்பட்டத் தோற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குக் காரணமாகத் தொப்பி இருந்தது.
என்னிடத்தில் அத்தொப்பி எப்படி வந்திருக்கும்?
(தொடரும்)
-----------------------------------------------------------
1. L'Ecole Violet - பாரீஸ் நகரத்தில் உள்ள
புகழ்பெற்ற பொறி இயல் கல்லூரி |