வெட்டிப்பேச்சு வலைப்பூவிலிருந்து... யூனிகோடு உமர் மறைவு! கணித்தமிழ்த் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு!
[உமர் அவர்களின் திடீர் மறைவு கணித்தமிழ்த் தொழிநுட்பத் துறைக்கோர் மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவு பற்றிய செய்தியினை வெட்டிப்பேச்சு வலைப்பூக்கள் தளத்திலிருந்து அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவு பற்றிய வெட்டிப்பேச்சு வலைப்பூத் தளத்தில் வெளிவந்த செய்தியினை இங்கு எம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரியர்]
தமிழ் இணைய தளங்களிலும்
வலைப்பூக்கள் மற்றும் தமிழர் மின்மடல் குழுமங்களிலும் பரவலாக அறியப்பட்ட
எங்களூரைச் சார்ந்த
'யூனிகோட்' உமர் அவர்கள் நேற்று (12-07-2006) மாலை 5:30
மணியளவில் மரணமடைந்தார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (13-07-2006) காலை 9:00
மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
'உமர்' என்கிற உமர்தம்பி அவர்கள், தமிழ் இணையங்களின் பிரபலத்திற்கு முன்னரே
எங்களூர் மின்மடற் குழுமங்களிலும் பல பொதுச்சேவை அமைப்புகளிலும் பரவலாக
அறியப்பட்டவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த புலமை பெற்றிருந்ததோடு
தமிழ்வழி இணையப் பயன்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். உலகமெங்கும்
பரவியுள்ள தமிழர்களின் பல மின்மடல் குழுக்களில் இணையவழி தமிழ் பயன்பாடு பற்றிய
கட்டுரைகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் வழங்கியவர்.
தனது தமிழார்வத்தால் தமிழிணைய மென்பொருளாக்கத்திலும் பயன்பட்டிலும் மிகுந்த
ஈடுபாட்டுடன் பல முயற்சிகளைச் செய்துவந்ததை நான் அறிவேன். உமர் அவர்கள் முதன்
முதலாக இணைய தமிழ் அகராதி, தானியிங்கி யூனிகோட் எழுத்துரு மாற்றி, தேனிவகை
எழுத்துருக்கள் ஆகிவற்றோடு யூனிகோட் தமிழில் மின்மடல் அனுப்பும் இணைய கருவிகளை
உருவாக்கியிருந்தார்.
தமிழ் இணைய நாளிதழ்களை நகலெடுத்து மறுபதிப்பு (COPY & PASTE) செய்வதிலுள்ள
சிரமத்தைக் குறைத்து, வலைப்பூக்களிலும் இணைய தளங்களிலும் சுலபமாக தமிழில்
உள்ளீடு செய்யவும் பின்னூட்டமிடவும் யூனிகோட் உருமாற்றியை உருவாக்கினார்.
யூனிகோட் பற்றிய இவரின் கட்டுரைகள் நேரில் பேசிக் கொண்டிருப்பது போல் பாமரரும்
புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் இருக்கும். எங்களூர் தளத்தில் உமர்
தம்பி அவர்களின் கட்டுரைகளில் ;தகர்ந்து வரும் டார்வின் கோட்பாடு, குழப்பத்தில்
குமுகாயங்கள் என சமூகக் கண்ண்டோட்டத்தில் எழுதிவந்தார்.
உமர் தம்பி அவர்களுடன் எனக்கு மின்மடல்கள் மூலமே தொடர்பு இருந்து வந்தது.
எங்களூர் இணைய தளத்தை தமிழில் கொண்டு வருவதற்கு மேலான ஆலோசனைகளை வழங்கியதோடு,
இணைய வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கவும் தவறவில்லை. 'வெட்டிப் பேச்சு' என்ற எனது
தமிழ்வலைப்பூ பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்ட போது, பிறர் மனதைப்
புண்படுத்தாமல் எழுதும் பதிவுகள் வெட்டிப்பேச்சல்ல; வெற்றிப்பேச்சே! என்று
பாராட்டி தொடர்ந்து எழுத ஊக்குவித்ததை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறக்
கடமைப் பட்டிருக்கிறேன்.
நல்லடியார் அவர்கள், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முஸ்லிம் தமிழர்களைப்
பற்றிய பதிவிற்கு உமர் அவர்களைப் பற்றிய விபரங்களைக் பெற்றுத் தர முடியுமா
என்று மடலில் கேட்டிருந்தார். இது விசயமாக கடந்தவாரம் உமர் தம்பி அவர்களுக்கு
மெயிலிட்டிருந்தேன். புகழ்சியையோ அல்லது தன்னை முன்னிலைப் படுத்துவதையோ
விரும்பாத பண்பாளர் உமர் தம்பி அவர்களிடமிருந்து பதில் கடிதம் வர தாமதமாகிய
போதே சற்று சந்தேகம் வந்தது. கடைசிவரை எனது மின்மடலுக்கு அவர்களிடமிருந்து
பதில் வரவே இல்லை.
இதற்கிடையில் அதிரை மின்மடல் குழுமத்திலிருந்து உமர் தம்பி அவர்கள் மஞ்சல்
காமாலையால் அவதிப்படுவதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும் படியும் ஒரு ஈமெயில்
வந்தது. உடனே அதிரையிலிருக்கும் உமர்தம்பி அவர்களின் மகனுக்கு தொலை பேசினேன்.
மாலை மூன்று மணிவரை சுயநினைவின்றி இருப்பதாக கவலையுடன் சொன்னார்.
உமர்தம்பி அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் பாதிப்பு இருந்ததாகவும்
அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மாதம் மஞ்சல் காமாலையால்
பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை செய்து ஊர்வந்ததாகச் சொன்னான். ஒரே
ஊர்க்காரராக இருந்தாலும் இதுவரையிலும் உமர் தம்பி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு
கிடைக்கவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் அன்னாரது இன்னுயிர் பிரிந்ததையும்
அறிந்து சொல்லொன்னா துயருற்றேன்.
அதிரை போன்ற பிற்படுத்தப்பட்ட கிராமப் பகுதியிலிருந்து அயல்நாடுகளில் பணி
செய்யும் வாய்ப்புகளை உதறி விட்டு எஞ்சிய காலத்தில் தமிழுக்கும் தான் சார்ந்த
சமுதாயத்திற்கும் சேவை செய்ய தாயகம் புறப்பட்ட எங்கள் ஆரூயிர் கணினி குருநாதர்
அன்பிற்குறிய உமர் தம்பி அவர்கள் போன்ற பண்பாளரை இழந்தது அதிரைக்கு மட்டுமல்ல
தமிழர்களுக்கும் இழப்பே.
உமர்தம்பி அவர்களின் தமிழ்ச் சேவைகளையும் சாதனைகளையும் நினைவு கூர்ந்த,
வலைப்பதிவிட்ட தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் மூலம் துக்கத்தை
பகிர்ந்து கொண்ட பிற வலைப்பூ நண்பர்களுக்கும் உமர்தம்பி அவர்களின் குடும்பதினர்
சார்பிலும் அதிராம்பட்டினம் மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.
சகோதரர் உமருக்கு அஞ்சலி! நீங்களும் பங்குபற்றுங்கள்! - ஆல்பர்ட் (அமெரிக்கா) -...உள்ளே
உமருக்கு அஞ்சலி (வெட்டிப்பேச்சு)....உள்ளே
உமருக்கு அஞ்சலி
(தமிழ் உலகம் மடலாற் குழு)....உள்ளே
நன்றி: வெட்டிப்பேச்சு வலைப்பூ.