இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2006 இதழ் 77 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
'நூலகம்' பற்றி..!
Noolaham
நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்!

Noolahamஅண்மையில் பதிவுகளில் நூலகம்.நெற் பற்றி எழுதப் போக அது அங்கு பலத்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றி விட்டது. ஆனால் அவை காழ்ப்புணர்ச்சி கொண்டவையல்ல. ஆரோக்கியமானவை. மேலும் அவ்வாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், விவாதங்களினூடு நூலகம்.நெற், நூலகத் திட்டம் மற்றும் விக்கிபீடியா பற்றியெல்லாம, அவற்றிற்குப் பின்னாலிருந்து தம் பயன்கருதாக் கடும் உழைப்பினை வழங்கும் அனவைரையும் அறிந்து கொள்ள முடிந்தது. அதனைப் பதிவுகள் வாசகர்களும் அறிந்து கொள்வதும் பயன்மிக்கதே என்ற எண்ணத்தின் விளைவாக நூலகக் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மடல்களிலிருந்து பயனுள்ள சில பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இத்திட்டங்களில் கலந்து கொண்டு பங்களிக்க விரும்பினால் கோபி, நக்கீரன், ஈழநாதன், மயூரன் போன்றோருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் பின்வருமாறு: கோபி: -kopinath@gmail.com ; ஈழநாதன்: eelanathan@gmail.com; மயூரன்:mmauran@gmail.com. நக்கீரன்: natkeeran@gmail.com . மேலும் நூலகம் குழு பற்றிய மேலதிக விளக்கங்களை http://groups.google.com/group/noolaham  என்னும் முகவரியிலுள்ள வலைத்தளத்தில் வாசித்துக் கொள்ளலாம். மேலும் கீழே அக்குழுவில் அண்மையில் பதிவுகள், திண்ணையில் நூலகத் திட்டம் பற்றித் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையொட்டித் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையே கீழே தந்துள்ளோம்.

கோபியின் மடல்கள்லிருந்து சில பகுதிகள்: 
கடிதம் 1; சனி ஏப்ரல் 22, 2006 காலை 5.29

'அன்புடன் அனைவருக்கும், ஐயரும் ஈழநாதனும் நூலகத்துக்கு நூல்களைச் சேர்ப்பதில் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள். ஐயரின் முயற்சியால் விடியலிடம் பெறப்பட்ட இரு நூல்கள் விரைவில் இணைக்கப்படவுள்ளன. விடியல் பதிப்பகத்தினர் மேலும் சில நூல்களை தரச் சம்மதித்துள்ளனர். அவர்களுக்கு நூலகம் சார்பில் நன்றிகள். மேலும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் தாம் வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைத் தரச் சம்மதித்துள்ளனர்.

சுவிஸ் ரவி மிகுந்த ஆர்வத்துடன் நூலகம் திட்டத்தில் பங்கெடுக்கிறார். அவர் எமது மடலாடற் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. இப்பொழுது சரவணனும் தன்னாலான பங்களிப்பைத் தர முன்வந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் பணியாற்றும் அருளானந்தம் சிறீக்காந்தலட்சுமி மின்னூலாக்கத்தில் பங்குபற்றத் தொடங்கியிருப்பது நூலகத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. பூ. சிறீதரசிங் நூலகம் திட்டம் வலையேற்றப்பட முன்பிருந்தே ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரது பங்களிப்பால் மூன்று நூல்கள் நூலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

ஈக்குவலிற்றி அச்சகத்தினரும் நூலகத்துக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நூலகம் திட்டத்திற்காகவென்றே இதுவரை ஏழு நூல்களை அவர்கள் தட்டெழுதித் தந்துள்ளார்கள். மேலும் அவர்களால் அச்சடிக்கப்பட்ட நான்கு புத்தகங்களின் மின்வடிவங்களையும் தந்துள்ளார்கள். பெருமளவு நூல்களை அவர்கள் வெளியிட்டுள்ள போதிலும் கணனிகள் அண்மையில் செயலிழந்தமையால் அந்நூல்களின் மின்பிரதிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. ஆயினும் இறுவட்டுக்களிலிருந்து மேலும் சில நூல்களைத் தேடி எடுக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஈக்குவலிற்றி அச்சகத்தின் உரிமையாளர் திரு. வெ. ஜசிகரன் மற்றும் முகாமையாளர் திரு. ரஞ்சகுமார் ஆகியோருக்கு நூலகம் திட்டத்தின் சார்பில் நன்றிகள்.

நூலகம் திட்டம் இன்றைய நிலைக்கு வர கால்கோள் இட்டவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையினர். ஆக ஐந்து நூல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் கனவுடனும் திட்டத்துடனும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தேவராஜாவை நானும் மயூரனும் சந்தித்த போது சுமார் ஒன்பது நூல்களின் மின்வடிவங்களைத் தந்தார். அந்த ஆதரவே எம் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் துணை நின்றன.

மேலும் சி. சிவசேகரம் அவர்கள் தனது நூல்களை இணைக்க எமக்கு அனுமதியளித்த முதல் எழுத்தாளர். அதுவே அவரது நூல்கள் பலவற்றை நூலகத்தில் இணைப்பதில் நான் காட்டும் ஆர்வத்திற்குக் காரணம்.

ஈழத்து இலக்கியம் தொடர்பான தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பெருமளவு சேர்க்கப்பட்டுள்ளன. இது மயூரன் செய்த அறிமுகத்தாலேயே சாத்தியமாகியது. மயூரன், கோபி, ஈழநாதன், கனக சிறீதரன், கிரிதரன் ஆகியோர் நூலகம் திட்டத்தினூடாகவே விக்கிப்பீடியாவில் இணைந்ததாகத் தெரிகிறது. நூல்களைத் தட்டெழுதுவது மற்றும் ஒப்புநோக்குவது திட்டத்தின் எல்லா உறுப்பினருக்கும் சாத்தியமற்றதெனினும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது எல்லோருக்கும் சாத்தியமானதே என்பதை சுட்டிக்காட்டிய மயூரனுக்கு எனது பாராட்டுக்கள்.

பிரதீபா தில்லைநாதன், மதி கந்தசாமி ஆகியோரும் நூலகம் வலையேற்றப்பட முன்பிருந்து குறிப்பிடத்தக்க பங்கெடுத்து வருகின்றனர். மேலும் கலைவாணி, சாத்விகா, வி.என் .எஸ். உதயசந்திரன் உட்படப் பலர் தொடர்ந்தும் பங்காற்றி வருகின்றனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நூலகம் தனிநபர்கள் எவருக்கும் சொந்தமானதல்ல. ஆகையால் நூலகம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஆகையால் நூலகத்திற்குப் பங்களிக்க எவரும் தயங்க வேண்டியதில்லை.

"நூலகம் திட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய விரும்புவோர் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள், ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்கள், ஈழம் தொடர்பான நூல்கள் என்னும் வகைகளுள் அடங்கும் எந்த ஒரு நூலையும் மின்னூலாக்கலாம் ஆனால் சமகால எழுத்தாளரின் நூல்களாயின் குறித்த எழுத்தாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது முக்கியமானது ." என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வகைகளில் அடங்கும் நூல்களை எந்த ஆர்வலர் மின்னூலாக்கி அனுப்பினாலும் அது நூலகத்தில் வெளியிடப்படும்.

நூலகம் திட்டத்தில் பங்கெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் அனைவரதும் தொடர்ந்த பங்களிப்பே நூலகம் திட்டத்தின் வெற்றிக்குத் துணை நிற்கும். தோழமையுடன், கோபி'

கடிதம் 2; சனி ஏப்ரல் 22, 2006 காலை 5.31
அன்புடன் அனைவருக்கும், நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்ற மடலின் பின் குறிப்பு இது. தி. கோபிநாத் என்கிற நான் ஒரு தமிழனாகப் பிறந்தேன் என்கிற காரணத்தைத் தவிர வேறெதுவும் என் தமிழார்வத்திற்குக் காரணமல்ல. நான் வளர்ந்த சூழலில் நிறையப் புத்தகங்களும் வாசகர்களும் இருந்தமையே எனது வாசிக்கும் ஆர்வத்திற்குக் காரணம். நான் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வாசித்தேன். எனக்குப் போதிய ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரது நூல்கள் கிடைக்காமையே நான் இலக்கிய நூல்களையும் வாசிக்கக் காரணம்.

நான் எக்காலத்திலும் ஒரு இலக்கியவாதியாகவோ எழுத்தாளனாகவோ தமிழ்க் காவலனாகவோ (?) இருந்ததில்லை; இருக்க வாய்ப்புமில்லை. நான் ஒரு நல்ல வாசகன் கூட இல்லை. நூற் தெரிவில் எனது போதாமைகளைப் பற்றி நான் அறிவேன். நான் வாசித்த தரமான நூல்கள் மிகக் குறைவே.

ஆயினும் புத்தகங்களெனது அடிப்படைத் தேவைகளிலொன்றாக உணர்கிறேன். 2001 இல் நான் கொழும்பு வந்தபின் என்னிடம் புத்தகங்கள் எதுவுமில்லை. வாங்குவதும் சாத்தியமாகவில்லை; வைத்திருக்க இடமுமில்லை. அப்போது மதுரைத்திட்டத்தின் அறிமுகம் மயூரன் மூலமாகக் கிடைத்தது. குட்டன்பேர்க் திட்டத்தையும் கண்டடைந்தேன். தொடர்ச்சியான இணைய இணைப்பு இல்லாததால் மதுரைத்திட்டத்தின் அனைத்து நூல்களையும் குட்டன்பேர்க் திட்டத்திலிருது 1600 நூல்க்ளையும் பதிவிறக்கினேன். அவற்றை ஒழுங்குபடுத்தி இணைப்புக்கள் கொடுத்து வைத்திருக்கிறேன்.

மதுரைத்திட்டத்தின் தளத்தில் இருந்த போதாமைகள் பற்றி அவர்களுக்குச் சில மடல்களை எழுதினேன். திருப்தியில்லை. Mackintosh இற்கு யுனிக்கோட் வரும்வரை மதுரைத்திட்டமும் யுனிக்கோட்டுக்குக் காத்திருக்க வேண்டியிருப்பதை உணர்ந்தபோது சலிப்படைந்தேன். (மதுரைத்திட்டம் இன்னமும் முழுமையாக யுனிக்கோட்டுக்கு மாறவில்லை.) அப்போது ஈழத்து நூல்களுக்கான தனியான திட்டம் ஒன்றைத் தொடங்குவது பற்றி எண்ணினேன். அது தொடர்பில் மயூரனுடன் ஆலோசித்தபோது உருவானதே 'ஈழநூல்' திட்டம். அதன் பின்னரான நூலக வரலாறு உங்களுக்குத் தெரிந்ததே.

[இங்கு நூலகத்தில் என் பங்கு தொடர்பாகவே குறிப்பிட்டுள்ளேன். இதனை நூலகம் கோபியால் தொடங்கப்பட்டது என்றவாறு விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. 2001 / 2002 அளவிலேயே ஏறத்தாழ 40 நூல்களை தட்டெழுதிய ஐயர், ஆரம்பத்திலிருந்தே நூலகம் திட்டத்தை வரையறுக்க உழைத்துவரும் மயூரன், நூலகத்துக்கான இணையத்தளத்தினை உருவாக்கி பரவலான தொடர்புகளை ஏற்படுத்திt தந்த ஈழநாதன் ஆகியோரின் பங்களிப்பு இல்லையேல் எதுவுமே சாத்தியமாகியிராது. இது ஊர் கூடி இழுக்கும் தேர்]

நூலகம் கடந்த தைப்பொங்கலன்று பகிரங்கமான அறிவிக்கப்பட்ட பிறகு அது தொடர்பாக வெளிவந்த அறிமுகங்கள்/ குறிப்புக்கள் என்ற வகையில் என் பார்வைக்குக் கிடைத்தவை நான்கு. முதலிரண்டு மயூரன், மதி எழுதியது. மற்றையது வீரகேசரிக் குறிப்பு. கடைசியாகக் கிடைத்தது கிரிதரனுடையது.

கிரிதரனது குறிப்பை வாசித்த போது நான் மிகுந்த பதற்றமடைந்தேன். என் பதிலில் இருந்த நான் பொதுவாக வெளிப்படுத்துவதற்க்கு மாறான சொற்களும் அம்மடலை நான் பதிவிலிட்ட இடங்களும் அதனை வெளிக்காட்டின. அது கிரிதரனுக்கு மனவேதனை அளித்திருந்தால் அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயினும் இப்போதுள்ள நூலகத்தில் பத்மநாப ஐயரதும் என்னுடையதும் நூற்தெரிவுக்ள் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்துவதாக எனக்குப் படுகிறது. நூலகத்தை ஈழத்தின் இணைய நூலகம் என்று கருதப்படத்தக்கதாக அமைப்பதற்குப் பரவலான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பு தேவை என உணர்கிறேன். (நூலகம் தொடர்பில் எதுவித பாராட்டுக்களையும் நான் எதிர்பார்க்கவில்லை. நூலகத்தில் எனது பங்களிப்பு நானும் ஏதாவது இணையத் தமிழுக்குப் பங்களிக்க வேண்டுமென்ற என் சுயநலம் சார்ந்தது.)

நூலகம் திட்டம் மூலம் மின்னூலாக்கப்படும் நூல்களுகளைப் பயன்படுத்தும் உரிமை எனக்கு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நூலகம் திட்டம் எவராலும் எக்காலத்திலும் தனிப்பட்ட நலன்களுக்காகவோ அல்லது எதுவித வணிக நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்பட முடியாதவாறே அமைக்கப்படுகிறது. நூலகம் திட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஆக உங்கள் ஒவ்வொருவருக்காகவும் கடந்த ஓராண்டில் எனது வாசிப்பு நேரத்தை முழுமையாக இழந்து நூலகம் திட்டத்துக்கு உழைத்துள்ளேன். அந்த உரிமையுடன் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது யாதெனில் நூலகம் தொடர்பில் அதனை தொடர்ந்து வளர்த்தெடுத்துச் செல்வதில் உங்களது ஆலோசனைகளை நீங்கள் ஒவ்வொருவரும் விரிவாகக் கூறுங்கள். உங்களில் ஒரு 20 பேர் ஆளுக்கு இரண்டு மணிநேரத்தை ஒதுக்கி எனது இந்த மடலுக்குப் பதிலெழுதினால் அதுவே நூலகத்தை இன்னுமொரு பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தப் போதியதாக இருக்கும் என நினைக்கிறேன்.

இப்போதுள்ள நூலகத்தின் குறை நிறைகள், செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மின்னூலாக்கப்பட வேண்டிய நூல்கள் மற்றும் நூலகம் தொடர்பில் உங்களுக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதுங்கள். (சிறு வட்டங்களுள் வளைய வந்து திருப்திப்படாது முழு ஈழத்தமிழுலகின் பிரதிபலிப்பாக நூலகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய கிரிதரனுக்கு என் நன்றிகள்.)

கோபியின் கடிதம் 3: சனி, ஏப்ரல் 22, 2006 காலை 8.17
Wickipediaவணக்கம் கிரிதரன், நீங்கள் நூலகத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் பங்களிக்க முன்வந்திருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. ஈழநாதன் குறிப்பிட்டது போல விக்கிப்பீடியா தொடர்பான உங்களது சந்தேகங்களை விக்கிப்பக்கங்களிலேயே தெரிந்து கொள்ளலாம். மயூரன் குறிப்பிட்டது போல நூலகமும் விக்கிப்பீடியா போன்றதொன்று தான். ஆனால் இங்கு ஈழத்து நூல்களும் சஞ்சிகைகளுமே வெளியிடப்படுகின்றன. ஆதலால் இங்கே மாற்றங்கள் செய்வதற்கான அனுமதிகள் இல்லை. நாம் வெளியிடும் வகைகளுள் அடங்கும் பதிப்புரிமைச் சிக்கல்கள் இல்லாத நூல்கள் சஞ்சிகைகளை எவரும் இத்திட்டத்தில் சேர்க்கலாம். குழுவில் இணைந்து குழுவுக்கு குறித்த மின்பதிப்புக்களை அனுப்பும் போது குறித்த மின்பதிப்பு உரிய காலத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளலாம்.

அடுத்து பத்மநாப ஐயர் பற்றிய  ஒரு சிறு குறிப்பு. பத்பநாப ஐயர் என்பவர் ஒரு நிறுவனம் அல்லர். சில நண்பர்களின் உதவி கொண்டு ஈழத்து இலக்கியத்துக்கு தன்னாலான பங்காற்றிவரும் ஒருவர். அவரால் இயன்ற அளவில் தான் அவரது பணிகள் அமையும். மேலும் அவரது நண்பர்கள், இணைந்து செயற்படுவோர் தொடர்பான பதிப்பு முயற்சிகளிலேயே அவர் அதிகம் செயற்பட்டிருப்பார் என்பதில் என்ன தவறிருக்கிறது? நாங்கள் நூலகப் பக்கங்களில் முறைப்படி அறிவிக்காவிட்டாலும் நூலகம் திட்டத்துக்கான ஆலோசகராக அவரே செயற்படுகிறார். நூலகம் பக்கங்களில் விரைவில் நூலகத்துக்குப் பங்களிப்போர் தொடர்பான பக்கங்கள் சேர்க்கப்படும். குறித்த பக்கங்களை சேர்ப்பதில் நான்தான் தயக்கம் காட்டி வருகிறேன். நூலகம் திட்டம் குறித்த குழுவினருடையது என்பதான கருத்து ஏறபடாமலிருக்க வேண்டும் என விரும்புகின்றோம். அவ்வாறு ஏற்பட்டால் நூலகத்துக்கான பரவலான பங்களிப்புக் கிடைக்காமற் போய்விடுமோ என்பதே தயக்கம். மதுரைத்திட்டத்தில் ஈழத்து நூல்கள் தொடர்ந்தும் சேர்க்கப்படாமல் தனியானதொரு திட்டமாக நேரிட்டது போல் எமக்கும் நேரிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

நடைமுறையில் நூலகம் திட்டமும் noolaham.netஉம் ஒன்று தான் என்றாலும் கொள்கையளவில் அவை ஒன்றல்ல. கொள்கையளவில் நூலகம் திட்டம் என்பது ஈழத்தமிழர்களுடையது. நூலக்ம் திட்டம் மூலம் வெளியிடப்படும் மின்னூல்கள் எந்தத் தனிநபருக்கும் உரியனவல்ல. ஆனாலும் எவரால் குறித்த மின்னூல் ஆக்கப்பட்டது, எத்திட்டம் மூலம் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். அத்துடன் எந்த வணிக நோக்கங்களுக்காகவும் எமது மின்னூல்கள் பயன்படுத்தப்படக்கூடாது.

இத்தகைய ஒழுங்குமுறையில் இணைந்து பணியாற்ற எவருக்கும் தயக்கம் இருக்க வாய்பில்லைத்தானே? மேலும் சந்தேகங்கள் இருப்பின் எமது மடலாடற் குழுவுக்கு எழுதுங்கள். உங்களது பங்களிப்பை ஆவலோடு வரவேற்கிறோம். மு.கு. நீங்கள் ஏதாவது நூலை தட்டெழுத ஆரம்பிக்க முன் அதுபற்றி நூலகம் குழுவுக்கு அறியத்தாருங்கள். தோழமையுடன், கோபி.'

ஈழநாதனின் மடல்; வெள்ளி ஏபரல் 21, 2006 மாலை 7.34
வணக்கம் நண்பர்களே நூலகத்திற்கு நல்வரவு கிரிதரன். தொடரும் முன் கிரிதரன்,மயூரன் மற்றும் நண்பர்களுக்கு சிறு விளக்கம்.நூலகம் மற்றும் விக்கிபீடியா இரண்டும் தனித்தனியான தன்னார்வச் செயற்பாடுகள் நூலகத்திற்கும் தனியான விக்கி அமைப்பதாக முன்னர் தீர்மானித்திருந்தோம்  உரையாடல்களின் பின்னர் தனியான விக்கி ஒன்றினை அமைப்பது தேவையற்றது என்பதும் பிரதான விக்கி தளத்திற்கு நூலகம் உறுப்பினர்கள் பங்களிப்பதென்பதும் முடிவாகிற்று. 

இருந்தும் நூலகம் திட்டத்தின் நோக்கம் செயற்பாடுகள் பற்றிய பக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டி விக்கியில் சில பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன அவை மட்டுமே நூலகம் விக்கியின் செயற்பாடு.காலப்போக்கில் பக்கங்கள் முழுமை பெற்றதும் அவை நூலகத்தின் உதவிப் பக்கங்களாக மாற்றப்படும். விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியம் பற்றிய பக்கத்திற்கு நூலகம் உறுப்பினர்கள் பங்களிப்பு செய்தாலும் அவை நூலகம் திட்டத்தின் செயற்பாடுகள் இல்லை ஆகவே விக்கிபீடியா பற்றிய விவாதங்கள் நூலகத்தையும் நூலகம் பற்றிய விவாதங்கள் விக்கிபீடியாவையும் பாதிக்காத வகையில் செயற்படவேண்டியது அவசியம். 

கிரிதரன் நூலகத்திற்கான பங்களிப்பு இந்த மடலாடற் குழு மூலம் மட்டுமே நடைபெறுகின்றது நூலகம் விக்கி உதவிப் பக்கம் மட்டுமே கட்டுரைகளை அங்கே இணைக்க முடியாது எவ்வித ஆக்கங்களையுமிம் மடலாடற் குழ்வில் பகிர்ந்துகொண்டால் அவற்றை நூலகத்தில் கால ஒழுங்கில் சேர்த்துக் கொள்வோம் 

அதேவேளை விக்கியிலும் மயூரன்,கோபி,நக்கீரன் முதலியோர் நூலகம் திட்ட உறுப்பினர்கள் பங்களித்து வருகிறார்கள் தற்போது நானும் பன்ம்க்களிக்க ஆரம்பித்துள்ளேன் ஈழத்து இலக்கியம் பற்றிய கட்டுரைகள் விக்கியில் வளர்த்தெடுக்கப்பட்டு காலப்போக்கில் எமது ஆவணக்காப்பகத்தில் இணைக்கப்படும். உங்களுக்கு நக்கீரன்,மயூரன் முதலிய நண்பர்கள் விக்கிபீடியாவில் உதவுவார்கள் என நம்புகிறேன்.நூலகம் பற்றிய சந்தேகங்களை இங்கே தெரிவிக்கலாம். அன்புடன் ஈழநாதன்'

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner