-நாகரத்தினம்
கிருஷ்ணா-
என்
பின்னால் சளக் சளக்கென்று யாரோ தண்ணீரில் நடப்பதுபோல சத்தம். திரும்பிப்
பார்க்க தைரியமில்லை. கல்லாய் சமைந்துவிடுவேன் என்கிற பயம். சூரியன்
மண்ணுருகக் காய்ந்துகொண்டிருந்தான். நான் அணிந்திருந்த ஆடைகள் வியர்வையில்
நனைந்திருந்தன. வெகுதூரம் நடந்து வந்திருந்த களைப்பில் சோர்ந்திருந்த
போதிலும், நான் தேடிவந்த அரண்மணையை கடைசியாய் பார்க்கையில்
சந்தோஷமாயிருக்கிறது. நிமிர்ந்து பார்க்க பின் கழுத்து வலிக்கிறது.
மாளிகையின் பிரமாண்டம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. வாயிலில் கட்டியணைக்க
முடியாத இருபெரிய தூண்களை இணைத்திருந்த ஆர்ச்சில், கொழுப்பேறிய உடலும்
பூரித்த தனங்களும், வாளிப்பான கைகால்களும் கொண்ட இறக்கை முளைத்த கிரேக்க
தேவதைகள். வாயிலில் நின்றிருந்த அடிமைப்பெண் என்னை அசூயையோடு பார்க்கிறாள்.
நான் எதற்காக வந்திருக்கிறேனென்பதை எளிதாக ஊகித்தவள்போல அவளிடமிருந்து
புறப்பட்டது கேள்வி.
'என்ன? எங்கள் எஜமானியிடம் அடிமையாக இருக்க உத்தேசமா?
எனது பதிலுக்குக் காத்திராதவள்போல தொடர்ந்து பேசுகிறாள். 'இங்கே பார், எங்கள்
எஜமானியை சாதாரணமா நினைச்சுடாதே, சிங்கம், சிறுத்தைண்ணு சொல்லிக்கொள்பவன் கூட
இங்கே வந்தா, நாய்போல சேவகம் பண்ணறான். உனக்கு நேரம் சரியில்லைண்ணு
நினைக்கிறேன், இல்லைண்ணா அம்மாவைத் தேடிவந்திருக்கமாட்டே. எந்த அடிமையையும்
சுலபத்தில் நம்பாதவள்' என்றவள், மாளிகைக்குச் சொந்தக்காரியைச் சந்திக்காமல்
நான் திரும்புபவனல்ல, எனத் தீர்மானித்தவள்போல எனக்கு வழிகாட்டிக்கொண்டு
முன்னே நடக்கிறாள்.
நான் அவளைத் தொடர்ந்து செல்கிறேன். நீண்ட விசாலமான கூடம், சுவர்களுக்குக்
கிட்டத்தில் வண்ணம் பூசியிருக்கவேண்டும், பூசணிப்பூவின் மணத்தோடு
சோபிக்கிறது. இடப்புறம் அளவான இடைவெளியில் என்னைப்போல இருமடங்கு
உயர்ந்திருந்த சுவர்களில் கலை நேர்த்திமிகுந்த சாளரங்கள், அவற்றின் கதவுகளில்
பொருத்தியிருந்த கண்ணாடி சில்லுகள் வானவில்லாய் ஜொலிக்கின்றன. கூடமெங்கும்
லஸ்தர்விளக்குகள் பிரகாசிக்க, மயன் உலகிலிருப்பதைப்போல பிரமை, புத்தி தேனில்
நனைகிறது, நடை தடுமாறுகிறேன். முன்னே சென்றுகொண்டிருந்த அடிமை, என்ன
நினைத்தாளோ, எனது திசைக்காய் திரும்பியவள்,
'ஆணடிமைகள் இம்மாளிகைகளில் படுகின்ற இம்சைக¨ளை சொல்லி மாளாது. இயலுமெனில்,
பெண்ணுருவில் வா. பிடித்துபோனால் நீதான் அவள் கட்டில் சகோதரி, அம்மாவுக்கு
விருப்பமான பெண்ணடிமை, பிறகு ஏழேழு ஜென்மத்துக்கும் உனது உறவுகள்
ராச்சியந்தான். நீ ஆணாக இருப்பதுதான் பரிதாபம். உனக்கு இதுதான் விதியென்றால்,
நானென்ன செய்ய முடியும்', -முணுமுணுக்கிறாள்.
'என்னிடத்தில் பரிதாபங் காட்டுவது தேவையற்றது. நீ நினைக்கிற ரக ஆணடிமையல்ல
நான். உனது எஜமானிக்கு எனது உபயோகம் வேறுமாதிரியானது.'
எனது விசுவாசம் எஜமானியின் பாதங்களுக்கானதென்ற உண்மையைச் சொல்லி அவளது
அனுதாபத்தை மறுக்கலாமா? - யோசிக்கிறேன்.
'உள்ளே போ,' சட்டென்று கூடத்தின் மத்தியில், தனி கவனமெடுத்து செதுக்கியிருந்த
கதவினைத் தள்ள அது டரடரவென்ற சத்தத்துடன் திறக்கிறது, என்னை அனுமதித்தவள்,
பின்புறம் மூடிக்கொள்கிறாள். அறையெங்கும் சன்னமான வெளிச்சம், மத்தியில்
தகதகவென்று பசும்பொன்வேய்ந்த கட்டில், பதித்திருந்த முத்தும், பவளமும்,
விலையுயர்ந்த இன்னபிற கற்களும், கட்டில் பெண்ணின் பேரழகில் அடக்கமாய்
ஜொலிக்கின்றன. பெண்களுக்கேயுண்டான வெதுவெதுப்பான மூச்சொன்று என்னைச் சீண்ட,
பிரம்மிப்பிலிருந்து விடுபடுகிறேன்
'அருகில்வா"! அதிகாரமும், மென்மையும் சங்கமித்திருக்கும் குரல், பெண்குரல்.
பனிப்புகையா, துணித்திரையா என்கிற தவிப்பிலிருந்து விலகி, ஒரு கையால்
திரையைவிலக்கி மெல்ல முன்னேறுகிறேன். பனிப்புகையிலிருந்து உயிர்த்தெழுந்த
தேவதைபோல, இருக்கிறாள். இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம், கால்களைக்
கொஞ்சமாக முன்னே மடக்கி கம்பீரத்துடன், அமர்ந்திருக்கிறாளா படுத்திருக்கிறாளா
என பார்ப்பவர் எவரையும் குழப்பும்படியான இருப்பு. அவளது கைக்கெட்டும்
தூரத்தில், ஒரு வெள்ளித்தட்டு, அதில் திராட்ஷை கொத்துகள். நீண்ட கூந்தலை
கழுத்துக்குமேலே சாதுர்யமாக முடிந்து, மிச்சமிருந்ததை தோளிலும் முதுகிலுமாகப்
பரத்தியிருந்ததில் ஒரு நாசூக்கு இருந்தது. அவள் உடலைச் சுற்றியிருக்கிற
வெண்பட்டு, அலங்கார தீபங்களின் ஒளியில், வெள்ளி முலாம் பூசப்பட்டதுபோல
ஜொலிக்கிறது. காலணிகள் அகற்றபடாத பாதங்களிரண்டும், சிறிய தலையணையொன்றில்
வாகாய்க் கிடந்தன. அக்கால்களைப் பார்த்தமாத்திரத்தில், அவை அடிமைகளால்
பூஜிக்கப் படவென்று காத்திருக்குங் கால்கள் என்பது தெளிவாயிற்று. அவ்வாடையின்
ஆக்ரமிப்பிலிருந்து வேண்டியோ வேண்டாமலோ மீண்டிருந்த சிவந்த உடல், அவள் எனக்கு
எஜமானி, நான் அவளுக்கு அடிமை என்பதை சற்றே மறக்கச் செய்தது. அவளையும் அவள்
பாதங்களையும் பார்த்தமாத்திரத்தில், உயிர்வாழ்க்கையின் அர்த்தம்
தெளிவாயிற்று. அவளின் பார்வையும், நித்திரைகொண்டிருந்த விதமும், அவளுக்குப்
பாதகாணிக்கையாக என்னையே அர்ப்பணித்துக்கொள்வதென்கிற எனது முனைப்பினை
உற்சாகபடுத்துகிறது. தரையில் விரித்திருந்த கம்பளத்தில் என் கால்களை
தயக்கத்துடன் பதித்து, இளநங்கையை நெருங்கி முழந்தாளிட்டு வணங்குகிறேன்.
'பெண்ணே உன் பாதங்களை வணங்குகிறேன்,' மெல்ல அவளுக்கு மாத்திரம்
கேட்கிறவகையில் முணுமுணுக்கிறேன். அவளிடத்திலிருந்து வார்த்தைகளேதுமில்லை.
அமைதியாகக் காத்திருக்கிறேன்.
'ம்.. அடிமையே எழுந்திரு, உனது வரவு நல்வரவாகுக'
'சந்தோஷம், அம்மணி.'
தனது வலது கையை அமர்த்தலாக நீட்டியவள், கட்டை விரலையும் சுட்டுவிரலையும்
ஒன்று சேர்த்து, திராட்சைக்கொத்தினின்று பழமொன்றை விடுவித்து,
அதரங்களுக்கிடையில் சோம்பலுடன் திணித்தாள், வாய் மெல்ல அசைபோட்டது. இடது கையை
உயர்த்தி சொடுக்குகிறாள். பின்புறத்தில் திரையை விலக்கிக்கொண்டு வேகமாய்
நடந்து வந்த அடிமை ஒருத்தி துவாலையை நீட்ட, அதனை வாங்கியவள் அழகாய் வாயில்
ஒற்றியெடுத்துத் திரும்பவும் அதனை பெண்ணடிமையிடம் ஒப்படைக்கிறாள்.
'என்னைத் தேடிவந்த முகாந்திரமென்ன?
'உனக்கு சேவை செய்யவேண்டும், குறிப்பாக உன் பாதங்களுக்கு அடிமையாக இருப்பதில்
நிறையவே சந்தோஷமிருக்கிறது.
'குழப்புகிறாய்'
'பெண்ணே, இப் பாதங்களில்தான் எனது வாழ்விருக்கிறது, கொஞ்சம் என் பக்கமாய்
கால்களைக் கொண்டுவா, நான் அவற்றை எனது கைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும், மெல்ல
வருடவேண்டும், சுளை சுளையாய் இருக்கும் அவ்விரல்களுக்கு சொடக்கு
எடுக்கவேண்டும், நீவிடவேண்டும், இதமான வெந்நீரில், அவற்றை கழுவ வேண்டும்,
வெளுத்த பாதங்களில் முத்தமிடவேண்டும், கெண்டைக்கால் சதையை விரல் வலிக்க பிசைய
வேண்டும், பிறகு நீ உறங்கும்வரை இதமாகப் பிடித்துவிடவேண்டும். ஆம் உனது பாத
கமலங்களுக்கு என்றென்றும் நான் அடிமையாக இருக்கக்கூடிய பாக்கியத்தை நீ தயவு
பண்ண வேண்டும். முடியுமா?'
'எனக்குக் குற்றேவல் செய்யவந்த அடிமையென்று கூறுகிறாய். ஆனால் என்
பாதங்களுக்கு செய்யவேண்டிய பராமரிப்புகளை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டாய்
போலிருக்கிறதே. அதனை தீர்மானிக்கும் உரிமை உனது எஜமானிக்கல்லவோ இருக்கிறது.'
'பெண்ணே! எனது அபிலாஷை, எஜமானி அடிமை இருவர் தேவையையும்
பூர்த்திசெய்யக்கூடியது. இங்கே ஏவலும் கீழ்ப்படிதலும் அர்த்தமற்ற சொற்கள்.
எங்கே பாதங்களைக் காட்டு, சேவையை ஆரம்பிக்கலாமா?'
'ஏய் நிறுத்து.. என்ன செய்கிறாய்?'
'உன் பாதத்தை. ருசிபார்க்கவேண்டும்.'
'உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? யாரங்கே?'
அடுத்தகணம், கிங்கரர்கள்போல இரண்டு அடிமைகள் என்னை நெருங்குகிறார்கள்.
'பெண்ணே! இவர்களை தடுத்து நிறுத்து, வலிக்கிறதா?. பற்களை அழுந்தப்
பதிப்பதில்லையென்று சத்தியம் செய்யட்டும?'
ராட்சஷி என்னை அவர்கள் இழுத்துச் செல்ல, வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள். கூச்சலிட முயல்கிறேன் நாக்கு அண்ணத்தில்
ஒட்டிக்கொள்ள குரல் தொண்டைக்குழியிலேயே நீர்த்துபோகிறது.
அதிகாலை மணி இரண்டென்பதை நான் கண்விழித்தவுடன் பார்த்த கடிகாரம் சொன்னது.
விழிமடல்களில் உறக்கம் இன்னமும் படிந்திருந்தது. அறைக்குள் சீராக பரவியிருந்த
இருள், சன்னலருகில் இறக்கியிருந்த சுருள் கதவுகளினூடாக கசிந்திருந்த
நிலவொளியில் கரைந்திருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் சிறுமேசையில்,
தொலைபேசியின் இருப்பினை, விட்டு விட்டு சீராக எரிந்த வெளிர்பச்சைப்
புள்ளியில் உணர்ந்தேன். முற்றுகையிட்டிருந்த இருளில், ஒரு ஜோடி சிவந்த
பாதங்கள். மகுடம் சூட்டியதுபோல கட்டைவிரல், அதனின்று மில்லிமீட்டர்களில்
விலகி இறுகத்தழுவிக்கிடக்கும் மற்ற கால்விரல்கள், மத்தியில் அளவாய்
விம்மித்தணிந்து, கெண்டைகாலின் கீழ்ப்பகுதியில் சரணாகதியிலிருக்கும் பாதம்.
பார்த்தவுடன் சட்டென்று கைகளில் ஏந்திக்கொள்ள தூண்டும். செவியையும் மனதையும்
ஒன்றாக நிறுத்தினால் குதிகாலில் சலசலக்கும் வெள்ளிக்கொலுசு, மனச் சுவர்களில்
மோதி எதிரொலிக்கும். கிராமத்தில் பொங்கலுக்கு முன்பு அதிகாலையில் சேகண்டி
அடிக்கும் பண்டாரம், வந்து போனபின்பும் வெகுநேரம் உயிர்பிரியாமல் கிடக்கும்
நாதம்போல, நெஞ்சுவரை இனித்து, பால் பொங்கும். அறையில் வேறெவரும் இல்லை,
இருசப்பன் உட்பட. எனினும் நான் தீர்மானமாக இருந்தேன், என்னை எழுப்பியவன்
இருசப்பன். நேற்றும் அப்படித்தான் என்னை எழுப்பும்போது அதிகாலை இரண்டுமணி,
துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்கிற கேள்விகள் வேண்டாம். இரு
சம்பவத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை, வேண்டுமானால் உங்கள் திருப்திக்காக
நிமிடங்களாலானது என்று சொல்லிவைக்கலாம். அதாவது நேற்று என்கிற இன்றைய
தினத்தோடு ஒப்பிடும்போது ஓரிரு நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ நான்
எழுப்பப்பட்டிருக்கலாம், அதனாலென்ன சுமக்கும் அவஸ்தைகளின் பாரம் அப்படியேதான்
இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே அவனது தொல்லை அதிகரித்து வருகிறது. முதன்
முதல் நான் சந்தித்ததும் இப்படியான இரவொன்றில் வைத்துத்தான். பிறகு
அடுத்துவந்த நாட்களில் இரவென்றில்லை பகலில் கூட தொல்லைகொடுக்க
ஆரம்பித்துவிட்டான். மூன்று நாட்களுக்கு முன்பு இப்படித்தான் என்னை
அதிகாலையில் அவன் எழுப்பியபோது, சத்தம் போட்டுவிட்டேன். "எதற்கும் ஓர்
அளவில்லையா? இனி எனக்கும் உனக்கும் ஒன்றுமில்லை நீ போகலாமென்றேன்".
ஆரம்பத்தில் அமைதியாகத்தான் கூறினேன். கேட்டவன் சிரித்தான், பிறகு மீண்டும்
சிரித்தான், பிறகு மீண்டும் சிரித்தான், பிறகு மீண்டும் சிரித்தான், பிறகு
மீண்டும்..
'சோமு! எழுந்திருங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு', மனைவி என்னைப் பிடித்து
உலுக்க, விழித்துக்கொண்டேன். அவள் முகத்தைத் தெளிவாக படிக்கமுடியவில்லை
என்றபோதிலும், என் உடலைத் தொட்டிருந்த அவளது கைகள் நடுங்கியபடி இருந்தன,
வியர்த்துமிருந்தன.
உங்களுக்கு இம்மாதிரியான சிக்கல்கள் நேர்ந்திருக்குமாவென்று தெரியவில்லை.
நேற்றும் இன்றும் நடந்ததை வைத்து, மனச்சிக்கல்களுக்கு ஆளானவனென்று நீங்கள்
நினைக்கலாம். என் மனைவிக்கும் அம்மாதிரியான சந்தேகங்கள் வெகுநாளாகவே
இருக்க்கின்றன, சிலவேளைகளில் வெளிப்படையாகவே சொல்கிறாள்.
யோசித்துப்பாருங்கள், உங்களுக்கு நேரமிருக்குமானால் எல்லாச் சங்கதிகளையும்
தெளிவாக பரப்பிவைக்க முடியும், உங்களுக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அச்
சங்கதியை கொஞ்சம் பிரத்தியேகக் கவனமெடுத்து, சொல்லமுடியும். சுவாரஸ்யமாக
சொல்லவேணுமில்லையா அதனால் இளநங்கையொருத்தி வயதுபோனவனிடம் கலவிக்காக செய்யும்
சாகசங்களை நானும் உங்களிடத்தில் அவ்வப்போது செய்வேன், அதற்கு நீங்கள்
இணங்கித்தான் ஆகவேண்டும்: எனது விரல்கள்கொண்டு உங்கள் கேசத்தை
உழுதுபார்க்கவோ, எனது மூச்சின் வெப்பத்தில் உங்கள் காதுமடல்களைக் கடிக்கும்
பதத்திற்குக் கொண்டுவரவோ, உங்கள் அதரங்கள் பிரிவதற்கு இடம்கொடாமல் அழுந்த
முத்தமிடவோ அல்லது எனக்குப் பிடித்த உங்கள் பாதங்களை.....ஏதோவொன்றைச் செய்ய,
உங்கள் உள்ளுணர்வு எனது வசமாகிவிடும், நீங்கள் நானாவீர்கள்.
கால்கள் அல்லது பாதங்கள் சம்பந்தபட்ட பேச்சும் செயலும் என்னிடத்தில்
பிரத்தியேகக் கவனத்தை எப்போதுமுதல் பெற்றிருக்கலாம், இதில் இருசப்பனின்
பங்கென்ன என்பது மாத்திரம் இன்றுவரை எனக்குப் பிடிபடாமலேயே இருக்கிறது.
எனக்கு என்ன சாப்பிட்டாலும் தேறாத உடம்பென்பதால், ஒடிசலா எலும்புகள்
துருத்திக்கொண்டு இருப்பேன். இருசப்பன் வெள்ளை வெளேரென்று இருப்பான், நான்
நாவற்பழ நிறம். அவனுக்கு கைகாலெல்லாம் திரட்சியா ஆணிவேரில் தங்கிய
வள்ளிக்கிழங்கு மாதிரி. குறிப்பாக அவன் கால்கள், மாசுமருவற்று பூனை
ரோமங்களுடன் சித்திரை மாதத்தில், அவையிரண்டும் வாழைப்பூ நிறத்திற்கு
வந்தபின்னருங்கூட பெண்பிள்ளை கால்களைப்போல கவர்ச்சிகுறையாமல் இருக்கும்.
பிரம்மா, அசுரன் ஒருவனால் சங்கடத்திற்கு உள்ளானபோது என்னைப்
படைத்திருக்கவேண்டும். அம்மா மறுப்பாள், பிறந்தபோது நான் கொள்ளை அழகென்று,
அடிக்கடி சொல்வாள். ஒரு முறை, நான் குழந்தையாக இருக்கையில், அம்மா
புதுச்சேரிக்குப் போனதாகவும் அங்கே வெள்ளைக்காரி ஒருத்தி என்னை கைகளில்
வாங்கிக்கொண்டு கொடுக்கமாட்டேனென்று அடம் பிடித்ததாகவும் வருவோர்
போவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். அதற்குபிறகுதான்,
ஒன்றுமாற்றி ஒன்றுவந்து எந்த நேரமும் சீக்கில் கிடப்பேனாம். கோடிவீட்டு
சாயபுவின் மந்திரித்து கட்டிய தாயத்திற்கும், கொடூர் வைத்தியரின்
சூரணத்திற்கும் பலனின்றி, தேரைபோல பச்..
பாலிய வயதில் பொழுதுசாயும்வரை பையன்களோடு கழித்துவிட்டு, முன்வாசல் வழியாக
சத்தம்போடாமல் உள்ளே நுழைகிறபோது, 'காலை அலம்பிக்கொண்டு உள்ளே நுழை' எனச்
சத்தமிடும் பாட்டியின் அர்த்தமில்லாத குரல் பலமுறை காயப்படுத்த இருசப்பன்தான்
எனக்கு ஆறுதலாக இருந்திருக்கிறான். இருசப்பனின் கால்கள், பாதங்களைபோலவே என்னை
ஆச்சரியபடுத்தியவை எங்கள் வயதொத்த பெண்பிள்ளைகளின் கால்கள், பாதங்கள்.
பையன்களும் பெண்களுமாய் விளையாடுகையில் மருதாணியிட்ட தளிர் பாதங்கள்
அவ்வப்போது பாவாடை விளிம்பிற்குப் பிடிகொடுக்காமல் குதிப்பதும், ஓடுவதும்,
நொண்டுவதும், நடப்பதுமான சில்லறை கேளிக்கைகளில் ஈடுபட அவற்றை ஆர்வத்துடன்
ரசித்திருக்கிறேன். அதென்னவோ நான் பார்த்த அநேக சினிமாக்களில்
பாடல்காட்சிகளில் முதலில் நடிகையின் கால்களை அல்லது பாதங்களை காட்டித்தான்
பல்லவியை ஆரம்பித்திருக்கிறார்கள். பாதங்களின் சுதந்திரத்திற்காக
கொடிபிடிக்கவேண்டும் என்கிற எண்ணங்கூட உண்டு. குதிரைக்கு லாடங்கள் என்பது போல
பாதங்களுக்கு காலணியென்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. காலணிச்சிறையில்
பாதங்கள் படுகின்ற வேதனைக்குரல்களை, அலட்சியபடுத்துவது எந்தவிதத்தில்
நியாயம்?
எனக்குக் கருத்து தெளிந்த நாளிலிருந்து இருசப்பனும் நானும் ஒன்றாகத்தான்
இருந்திருக்கிறோம், அதாவது அவன் கடைசியா வேணு செட்டியார் கிணத்திலே பிணமா
மிதக்கும் வரை. ஊருணிகுளம், உள்ளூர் பள்ளிக்கூடம், கிழக்குவெளிமதகு,
இலுப்பைத் தோப்பு என ஊருக்குப் பொதுவான இடங்களில் சொல்லபோனால்,
விடிந்ததிலிருந்து, அந்தி சாயும்வரை சேர்ந்தே திரிந்திருக்கிறோம்: தகிக்கும்
வெயிலில், பொடி மணலில் கால்கள் நிலத்தில் பாவாமல் கரையில் அரைக்கால் சட்டையை
கழற்றிவிட்டு நீரில் இறங்கி ஆழத்திற்கு நீச்சலடித்து போகின்றவன், 'சீக்கிரம்
சீக்கிரமென்று' என்னைப்பார்த்து சத்தம்போடுவான். ஐப்பசி மாதங்களில்
பள்ளியிலிருந்து திரும்பும்போது சட்டென்று நிழல் கவியும், இவன் மேலே
பார்ப்பான் திரண்டிருக்கிற சாம்பல் வண்ண மேகங்கள் இவனை எச்சரிப்பதாக
எண்ணிக்கொண்டு, குதிகால் பின்புறத்தில்பட, ஓடி ஒண்டுவதற்கு இடம்தேடிய பின்னரே
என்னைத் தேடுவான், நான் அதற்குள் அடித்த மழையில் தொப்பலாக நனைந்திருப்பேன்.
ஆலமரத்தின் விழுதைப் பிடித்து ஊஞ்சலாடிக்கொண்டு, கார்த்திகை மாதத்தில்
ரொம்பிக் கிடக்கும் ஏரியில் தலைகாட்டும் தண்ணீர் பாம்புகளை கவனமாக
ஒதுக்கிக்கொண்டு நீரில் குதித்து மூக்கொழுக, கண்கள் சிவக்க நீந்தி களைத்த
அயற்சி ஐரோப்பிய மண்வரை தொடர்கிறது.
சம்பவம் நடந்த அன்று கூடத்தில் மதிய சாப்பாட்டிற்காக தட்டினை
எடுத்துவைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். அப்பா ஏதோ வேலையாக பக்கத்து
கிராமம்வரை போய்விட்டுத் திரும்பியிருந்தார். வெடித்திருக்கும் அவரது
பாதங்களை, கால் மாற்றி ஒரு முறைக்கு இருமுறையாக தேய்த்து அலம்பிக்கொண்டு
உள்ளேவந்தவர், சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னைக் கோபத்தோடு பார்த்தார். 'டேய்
நீ இங்கே என்ன பண்ற? 'இருசப்பன்' கிணத்தில் கிடந்தாண்ணு, அவங்க வீட்டு வாசல்ல
கொண்டுவந்து போட்டிருக்காங்க', என்கிறார்.
அம்மா பதைபதைத்து, தெருவாசலுக்காய் விரைந்து செல்கிறாள். நான் நிதானமாகச்
சாப்பிட்டு முடித்தேன். இரவு எத்தனை மணியென்று ஞாபகமில்லை, நிம்மதியாக
தூங்கிக்கொண்டிருந்தவனை அம்மா எழுப்பினாள். 'டேய் சொல்லு என்ன நடந்தது'. நான்
வாய்திறக்கவில்லை. குப்புற கவிழ்ந்து படுத்துக்கொண்டு, அவள் போகின்றாளா
இல்லையா எனக் கவனிக்கிறேன். அவள் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு
எழுந்திருக்கையில், புடவைத் தலைப்பு பாதத்தில் சிக்கியதில் தடுக்கி விழ
இருந்தாள், பிறகு சமாளித்துக்கொண்டாள். அவளென்னை மீண்டும் எழுப்பி, ஏதேனும்
கேட்டிருந்தால் ஒருவேளை உண்மையைச் சொல்லியிருப்பேனோ என்னவோ.
டவுனில் பிரசவம் முடித்துக்கொண்டு அக்கா திரும்பியிருந்தாள். அக்காவின்
நீட்டியகைகளில் வெளிப்பட்ட இரண்டு பிஞ்சுகால்களைக் கண்டமாத்திரத்தில், அம்மா
அவசரஅவசரமாய் ஓடிவந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். பிறகு வீட்டில்
அக்காவுக்கும் குழந்தைக்குமென ஒழித்துவைத்திருந்த அறைக்குள்ளே அவர்களை
சேர்ப்பிக்கும் வரை முத்தங்களை சரமாரியாகப் பொழிந்தாள், குறிப்பாக
குழந்தையின் கால்களில். அப்படித்தான் குழந்தையின் இருபாதங்களையும், தனது
முகத்தில் தேய்த்து மகிழ்ந்தவள், என்னைக் கண்டதும் சட்டென்று
நிறுத்திக்கொண்டாள்.
'அம்மா!'
'என்னடா?'
'இதென்ன குழம்பு எனக்குப் பிடிக்கலை?'
'அக்காவுக்காக வச்சது, பத்தியக்குழம்பு. பிடிக்கலைன்னா, தோச்ச தயிரிருக்கு
ஊத்திக்க. ஸ்கூலுக்கு நேரமாச்ச்சுப் பாரு.'
'எனக்கு எதுவும் வேண்டாம். நான் சாப்பிடபோறதில்லை.'
அம்மா காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. அழுதுகொண்டிருந்த சிசுவை
ஆயக்கட்டுவதில் முனைந்துவிட்டாள்.
அன்றைக்கு அப்பா புதுச்சேரியிலிருந்து திரும்பி கூடத்தில் போட்டிருந்த
பெஞ்சில் உட்கார்ந்திருக்க, அவர் எதிரே அக்காவும், அம்மாவும்
உட்கார்ந்திருந்தார்கள். அக்கா கைகளில் பச்சை நிற ரேக்குத் தாளில் ஒரு ஜோடி
காப்புகள்..
'சோமு இங்கே வா. நல்லா இருக்காண்ணு சொல்லு, - அக்கா.
'என்னது?- நான்.
'பவுண் காப்புடா, நம்ம குட்டிப் பையன் காலுக்கு.'
'எனக்கு?'
'உனக்கா? மூவரும் ஒன்றுசேர ஆச்சரியத்துடன் கேட்டதில் என் முகம்
சுருங்கிப்போனது.
சட்டென்று அம்மா என்னை சமாதானபடுத்துவதுபோல, 'இங்கே பாரு சோமு, சின்ன வயசிலே
உனது கைக்கெல்லாங் கூட இப்படித்தான் போட்டு அழகுப் பார்த்தோம். அப்பா
புதுச்சேரியிலிருந்து வாங்கிவந்த காராசேவ் பொட்டலம் பிரிக்காம அப்படியே
பையிலே இருக்குது பாரு, எடுத்துக்க', என்றாள்.
இரண்டுநாள் கடந்திருக்கும், அம்மா தெருவிலிருந்த முருங்கைமரத்தில்
துறட்டுகோல்போட்டு முருங்கைக்காய் பறித்துக்கொண்டிருக்கிறாள். நான் கூடத்தில்
உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்ததாக ஞாபகம். தோட்டக்கால் பக்கம்
போய்விட்டுத் திரும்பிய அக்கா ஓவென்று அலறியதில், வீட்டிலிருந்தவர்கள்
மாத்திரமல்ல அக்கபக்கத்தவர்களும் ஓடிவந்திருந்தார்கள்.
எனது அக்காள் பையன் இறந்திருப்பதை, வேலுப்பண்டாரம் ஊர்ஜிதம் செய்தார். நான்
கூட்டத்தினை விலக்கிகொண்டு, செத்திருந்தவன் கால் மாட்டில் உட்கார்ந்தேன்.
அக்காள் குழந்தைமீது விழுந்துபுரள, அம்மா அவளைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டு
கட்டி அழுகிறாள். சுற்றியிருந்த கும்பல் வாய்க்கு வந்தபடி சலசலவென்று
பேசிக்கொண்டிருக்கிறது. இறந்திருந்த பையனின் பாதங்கள் எனக்கு நேராக இருந்தன.
நகம் பதிய கிள்ளவேண்டும்போல இருக்கிறது. சுற்றி நின்றவர்கள் என்னைக்
கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தவனாக வெளுத்திருந்த பாதத்தில்
அழுந்தக்கிள்ளியவன், சட்டென்று பயத்துடன் சுற்றும்முற்றும் பார்க்கிறேன்.
இருசப்பன் பக்கத்தில் நின்றிருந்தான், அவன் இதழோரத்தில் மர்மமாய் ஒரு
புன்னகை. அச்சம்பவத்திற்கு பிறகு ஏழெட்டு ஆண்டுகள், இருசப்பன் சகவாசம்
எனக்கில்லாமலிருந்தது.
சித்திரை மாதத்தில் திடீரென்று ஒருநாள் பகலில்தானென்று நினைக்கிறேன்.
இருசப்பன், 'சாவித்திரி அக்காளை நம்பாதே, அவள் கால்களை பார்த்திருக்கிறாய்
அல்லவா? ஓரிடமாக நிற்காது. அவளொரு ஓடுகாலி, ஒருநாளைக்கு அப்பாசாமி
மாமாவைவிட்டு ஓடிப்போனாலும் போவாள்'. - என்கிறான்.
சாவித்திரி அக்காள், அப்பாசாமி மாமாவுக்கு மனைவி. சாவித்திரி அக்காளுக்கு
வயதென்னவோ என்னுடைய அம்மாவைக் காட்டிலும் கூடுதலாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் கிராமத்தில் நிறையபேர் சாவித்திரியை அக்காளென்றும், அப்பாசாமியை
மாமாவென்றும் அழைப்பார்கள். ஆதலால் எனக்கும் சாவித்திரி, ஒருவகையில் அக்காள்.
சாவித்திரி அக்காள் இரண்டும்கெட்டான் நிறம், ஆனாலும் ஒரு
சுமங்கலிபெண்மணிக்குரிய இலட்சணத்துடனிருப்பாள். முகமும், தாலிக்கயிறும்
அப்போதுதான் அரைத்த மஞ்சளில் தோய்த்த மாதிரி கமகமக்கும். நெற்றியில் பெரிய
சாந்து பொட்டு. லட்டுக் கம்மல், கம்பிவளை. வாய் திறந்து
சிரிக்கவேண்டுமென்பதில்லை, இரு உதடுகளுக்கும் இடையில் தெரிகிற பல்வரிசை அதனை
சரிகட்டிவிடும். இரவு நேரத்தில் வீட்டு மாடத்தில் ஏற்றிய நல்விளக்கருகில்
நின்றாளென்றால் யஷ தேவதை பிரசன்னமானதுபோல. விலகிய முந்தானையை சரி செய்ய
மறந்து, உள்பாடியுடனான மார்புகள் குலுங்க எப்போதாவது அவள் சண்டையிடுவதை
ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் எங்கள் ஊரில் உண்டு. சாவித்திரி அக்காள்
அப்பாசாமி மாமாவிடம் ரொம்பவும் பிரியமாயிருப்பாள். மாமா ஊருக்கு வந்தால்,
சாவித்திரி அக்காள், அவரை அடுப்பண்டை வரக்கூடாதென்று சத்தம்போடுவாள்,
நாட்டுகோழி அடித்து அவருக்குச் சாப்பாடு நடக்கிறதென அக்கம்பக்கத்து
வீட்டுகாரர்கள் சொல்லிக்கொள்வார்கள். கேசவர்த்தினி தைலம் தெருவில்
மணக்கிறதென்றால் சாவித்திரி அக்காள், மாவோடு சினிமாவுக்குப் போகிறாள் என்று
பொருள். ஊர்க்கோடிவரை அப்பாசாமி மாமா சைக்கிளைத் தள்ளிக்கொண்டுபோக அக்கா
பத்தடிதள்ளி பின்னால் நடந்துபோவார். அதன்பிறகு சாவித்திரி அக்காளை கேரியரில்
உட்காரவைத்துக்கொண்டு அப்பாசாமி மாமா, முதுகு நெளிய பெடல் மிதிப்பார்.
அவர்களுக்குள் சண்டை சச்சரவென்று அறிந்ததில்லை. அக்கம் பக்கத்திலிருக்கிற
தம்பதிகளுக்குள் பிரச்சினைகளென்றாள், அக்காள் அக்காளென்று உரிமையாகச்
சாவித்திரியைத் தேடிவந்து பெண்கள் தங்கள் வீட்டு ஆண்பிள்ளைகளின் குறைகளை
முறையிடுவதும், அடுத்த நிமிடம் சாவித்திரி அக்காள் சம்மந்தப்பட்ட ஆண்களைத்
தேடிச் சென்று அண்ணாவென்றோ தம்பியென்றோ அழைத்து அவற்றைத் தீர்த்துவைப்பதுமான
காரியங்கள், அப்பாசாமி மாமாவைக் காட்டிலும் சாவித்திரி அக்காளை உயரத்தில்தான்
வைத்திருந்தது. சாவித்திரி அக்காளிடத்தில் நான் உபாசித்தது மெட்டியணிந்த
அவளது பாதங்களை. மழை ஓய்ந்த வானம்போல நிர்மலமாய் இருக்கும், சுண்டுவிரல்
நீளத்திற்கு அவள் வலது காலில் தெரிந்த தழுப்புகூட வால் நட்சத்திரம்போலத்தான்
பிரகாசிக்கத் தெரிந்தது. பனிபெய்த வரப்புகளில் அதிகாலையில் உலாத்தியதுபோல
ஒருவித ஈர மினுமினுப்பினை அக்கால்களில் கண்டிருக்கிறேன் -அக்கால்களையும்
பாதங்களையுந்தான் இருசப்பன் தப்பானது என்கிறான்.
சித்திரைமாதம். அறுவடை காலம். புளியமரத்தில் சடைசடையாய் புளியும்,
பனைமரங்களில் குலைகுலையாய் பனங்காயும் காய்த்திருக்கும் நேரம்.
மேய்ச்சலுக்குப் போன மாடுகள், வற்றிப்போன குளத்தில் தாகசாந்திசெய்ய, மாடு
மேய்க்கும் சிறுவர்கள் ஆலமரத்து நிழலில் ஆயாசத்துடன் படுத்திருக்கும் மாதம்.
சாவித்திரி அம்மாள் வீட்டு எள்ளடையும், கை முறுக்கும் கிராமத்தில் கூலி
வேலைக்குப் போகின்றவர்களின் குடிசைகளிலிருந்து, வேலிக் கணக்கில் விவசாயம்
பார்க்கிறவர்களின் வீடுகள்வரை மணக்கிறகாலம்.
இந்த முறை மாரி அம்மன் திருவிழா நடத்துவதென்று ஊர்நாட்டாமைகள்
தீர்மானித்திருந்தார்கள். எட்டாம் நாள் கரகத் திருவிழா, ஒன்பதாம் நாள் தேர்.
திருவிழாவின் உச்சகட்டமாக மூன்று நாட்களுக்கு சிறுதாமூர் கோவிந்தன் சமாவின்
தெருக்கூத்தென்று ஏற்பாடாகி இருந்தது.
எனக்கு சிறுதாமூர் எந்த திசையிலிருக்கிறதென்று தெரியாது, கூத்துவாத்தியார்
கோவிந்தனைத் தெரியும், அவர் கால்களையும் தெரியும். கூத்தன்றைக்கு
நடேசக்கவுண்டர் வண்டி, கூத்தாடிகளை அழைத்துவருவதற்கென்று ரோட்டுக்குப்
போகும். முதல் நாளே நடேசக்கவுண்டரிடம் சொல்லிவைத்திருப்பேன். அப்பாவுக்குத்
தெரியாமல், வண்டிக்காரர் நடேசனுக்காக எடுத்துவைத்திருந்த கரும்பு மார்க்
சுருட்டுடன் ஊர்க்கோடியில் காத்திருந்து வண்டியில் தொற்றிக்கொள்வேன். கயிற்றை
என்னிடத்தில் கொடுத்துவிட்டு, அவர் துண்டை தலையில் போட்டுக்கொண்டு
படுத்தாரென்றால் வண்டியின் ஆட்டத்தில் சுகமாகத் தூங்கிவிடுவார்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வண்டி மண்பாதையிலிருந்து விலகி தடக்
முடக்கென்று தார்ச் சாலையில் இறங்கியவுடனேயே அவருக்கு விழிப்பு வந்துவிடும்.
ரோட்டோரமாக இருக்கும் ஆலமரத்தடியில் இடமிருந்தால், வண்டியை நிறுத்தலாம்.
இல்லயென்றால் ராசு டீக்கடைக்குப் பின்னால் இடம் பார்க்கவேண்டும். சில
சமயங்களில் நுகத்தடியிலிருந்து தும்பை அவிழ்த்து மாடுகளை விடுவிக்ககூட
நேரமிருக்காது. நடேசன் கொதிக்க கொதிக்க டீயைக் ஊற்றிக்கொண்டு ஓடிவர நாலரை
பஸ், 'வீரப்பா' வந்துவிடும். வண்டியில் கூத்து வாத்தியார் கோவிந்தனுக்கும்,
மிருதங்கத்திற்கும், வேஷசாமான்களுக்கும் மாத்திரந்தான் இடமுண்டு. மற்றவர்கள்
விடுவென்று நடந்து முன்னே போய்க்கொண்டிருப்பார்கள்.
வாத்தியார் கோவிந்தனுக்கு முகத்தில் பெண்ணின் சாயலுண்டு, அதற்கேற்றார்போல
அடர்த்தியாய் நீண்ட தலைமுடி. அதனைப் பின்புறம் வாங்கி நெருக்கி
சுருக்கிட்டிருப்பார். தலையைச் சரிபாதியாகப் பிரித்துக்கொண்டு, அதனை சிவப்பு
ஈர இழைத்துண்டின் பிரிமாதிரியான சுற்றலில் அடக்கியிருப்பார். வலதுகையில்
வாட்சும், இடது கையில் காப்பும், காவி நிந்த்தில் கழுத்தற்ற ஜிப்பாவும்,
சீவல் மெல்லும் வாயுமாக பார்க்க வசீகரத்துடனிருப்பார்.
கூத்தாடிகளுக்கு சாப்பாடு, அப்பாசாமி மாமா வீட்டில். அவருக்கு ஆறுமைல்
தள்ளியிருந்த தனியார் பள்ளி விடுதியொன்றில், சமையற்காரர் உத்தியோகம். எனவே
திருவிழாவிற்கென அவர் கிராமத்திற்கு வந்தால் கூத்தாடிகளுக்குச் சமையல்
செய்யவேண்டிய பொறுப்பும் அவர் தலையில் விடிந்துவிடும்.
அப்பாசாமி மாமாவும், சாவித்திரி அம்மாளும் கூத்தாடிகளுக்கென்று அடுப்பு
மூட்டினால் ஊரேமணக்கும், அப்படியொரு ராசி. அப்பாசாமி மாமா, சாவித்திரி
அக்காள் கைப்பக்குவத்தில் தயாராகும் விரால் மீன் குழம்புக்கும், சீரகச்சம்பா
சோற்றுக்கும், கூத்தாடிகளைச் சாக்காக வைத்துக்கொண்டு கிராமத்தில் ஒரு சிலர்
அங்கேயே டேரா போடுவதும் நடக்கும். இந்தவிஷயத்தில், அப்பாசாமி மாமாவை
வேண்டுமானால் ஏமாற்றலாம், சாவித்திரி அக்காளை முடியாது, ரொம்பவும்
கறார்பேர்வழி. இரண்டு நாளைக்கு முன்பாகவே, கூத்தாடிகள் எத்தனைபேர்,
பிறத்தியார் எத்தனைபேர் என்கிற லிஸ்ட் வந்துவிடவேண்டும். பிறகு அதற்குண்டான
அரிசி, மளிகை சாமான்கள், பெரிய கவுண்டர் வீட்டுத் தோட்டத்து வாழை இலைகளுடன்
ஊரார் ஒப்படைத்துவிடவேண்டும். இவற்றில் குண்டுமணி குறைந்தாலும் சாவித்திரி
அக்காள் அப்பாசாமி மாமாவை அடுப்புப் பற்றவைக்க அனுமதிக்கமாட்டாள்.
கூத்து எப்போதும் பிள்ளையார்கோவில் திடலில்தான் நடக்கும். நான்கைந்து
பெஞ்சுகளும், இரண்டு சவுக்குக் கம்பங்களும் நான்கு பெட்ரோமாக்ஸ் லைட்டுகளும்
போதும், கூத்தினை அரங்கேற்ற. எட்டுமணியிலிலிருந்தே கோரைப்பாய், தடுக்கு,
ஈச்சம்பாய் சகிதம் கிராமத்து ஜனம் திரண்டு இடம்பார்த்து உட்கார
ஆரம்பித்துவிடுவார்கள். தற்காலிகமாக போடப்பட்ட டீக்கடையைச் சுற்றி ஒரு
கூட்டமிருக்கும். காவிளக்கு வெளிச்சத்தில் பொறிகடலை வியாபாரமும்,
பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் டீக்கடையும் கனஜோராக நடப்பதுண்டு. சிலர்
தலைவேஷம் வந்தவுடன் எழுப்பு என்று சொல்லிவிட்டு படுத்தார்களானால்,
விடியற்காலையில் பபூன் வேஷக்காரர் தண்ணீர் தெளிக்கத்தான் எழுந்திருப்பார்கள்.
நானும் விடிகாலையில் தூங்கிவிடுவதென்கிற வழக்கத்தைத்தான் கொண்டிருந்தேன்.
இரவு பத்துமணிக்குமேல்தான், வாத்தியக்காரர்கள் என்றழைக்கபடும்,
மிருதங்கக்காரரும், ஆர்மோனியக்காரரும் வந்தமருவார்கள். இவர்கள் இருவரில்
மிருதங்கம் வாசிப்பவர் ரொம்பவும் முக்கியம். இவர் ஒருவர் மாத்திரம்
விடியும்வரை விழித்திருப்பவர். பிறகு தாளம் அடிப்பவர்கள். கூத்தாடிகளில்
வேஷம்பூசாத எவரும், அல்லது கூத்தின்போது சும்மாயிருக்கிற எந்த வேஷதாரியும்
தாளம்போடுவதுண்டு.
சிறுதாமூர் கோவிந்தன், வாத்தியார் என்பதால் இரவு பன்னிரண்டு மணிவாக்கில்தான்
திரைக்குப் பின்னே தோன்றுவார். எங்கள் ஊரில் நான் பார்த்த பெரும்பாலான
கூத்துகளில் அநேகமாக அவரை கர்ணனாகவோ, அல்லது அர்ச்சுனாகவோதான் வேஷம் கட்டிப்
பார்த்திருக்கிறேன். அரங்கத்திற்கு வரும் கதாபாத்திரத்தின் முதற்
பிரவேசத்தின்போது திரைபிடிக்கிறது வழக்கம். அப்போது கடவுள் துதி என்றொரு
பாட்டு உண்டு. குடித்திருக்கும் சாராயம், கூத்துவாத்தியார் குரலை ஏடாகூடாமாக
ஏதாவது செய்துவிடும். ஆனால் திரைக்குக் கீழே தெரியும் கால்கள் எனக்குச்
சுலபமாக அவரை அடையாளம் காட்டிவிடும். சற்றே தடித்தகால்கள் அவருடையவை.
அவற்றுள் கொடிபோல படர்ந்து, மரவட்டைபோல சுருண்டிருக்கும் நரம்புகள்,
புடைத்துக்கொண்டு தெரியும். பாதங்கள் அலையும், ஓரிடமாய் நிற்காது.
திரைப்பாட்டு முடிந்து, அவர் வெளியே வந்தால், எதிரே உட்கார்ந்தவர்களில்
பலரும் அவரது அரிதாரம் பூசிய முகத்தையும், தலைகிரீடத்தையும், புஜகட்டையையும்
பார்த்து சொக்கிப்போவார்கள். நானோ மனங்குமுற வெற்றுகால்களுடன், தரையைச்
சீண்டுவதுபோல அவர் பிடிக்கும் அடவுகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
அன்றைக்கு முதல்நாள் கூத்து முடிந்திருந்தது. காலை பதினோரு மணிக்கு, இரவு
கூத்துபார்த்த மயக்கத்திலிருந்து வீடுபட்டு தேரடிக்குச் சென்றேன்.
கூத்தாடிகளில் பெரும்பாலோர், பெரிய கவுண்டர் வீட்டு முன் வாசல் தாழ்வாரத்தில்
உறக்கத்திற் கிடந்தார்கள். வழக்கம்போல கூத்துவாத்தியார் சிறுதாமூர் கோவிந்தன்
அங்கில்லை, அவர் அப்பாசாமி வீட்டுத் திண்ணையில்தான் தனது எடுபிடியோடு
படுப்பது வழக்கம். தேரடியில் சீட்டுக்கச்சேரி நடக்கிறது. சிற்றேவல்களுக்கு,
விளையாடுவர்களைச் சூழ்ந்துகொண்டு என் வயது பையன்கள்.
சோமு, இங்கே வாடா, அப்பாசாமி மாமாதான் அழைத்தார். என்ன? என்பதுபோல
தலையாட்டினேன். 'அக்காகிட்டேபோய் நான் கேட்டேண்ணு சொல்லி, குதிருக்குப்
பக்கத்தில் சீட்டுக்கட்டிருக்கும் வாங்கிவா, என்கிறார். பக்கத்திலிருந்த
வண்டிக்காரர் நடேசன், 'அவன் வேண்டாம், வேற யாரையாவது அனுப்பலாம்', என்கிறார்.
வேறுயார்கிட்டேயும் சாவித்திரி சீட்டுகட்டைக் கொடுக்கமாட்டாள், என்று
அப்பாசாமி சொன்னபோது, உண்மையில் சந்தோஷமாகத்தானிருந்தது.
பக்கத்திலென்றாலும் கத்திரிவெயிலில் தெருக்கோடிவரை போய்வருவது, அதிலும் என்னை
மாதிரியான பையன்களுக்கு ஆகக் சிரமம். நான் போனபோது தெருக் கதவு
சார்த்தியிருந்தது. திண்ணையில் கூத்துவாத்தியாரையோ, அவரது எடுபிடியையோ
பார்க்க முடியவ்லில்லை. சாவித்திரி அக்கா.. சாவித்திரி அக்கா.. கூப்பிட்டுப்
பார்த்தேன். ம்.. பதிலில்லை. கண்விழித்துக் கூத்துபார்த்த அசதியில் அக்காள்
அயர்ந்து தூங்குகிறாளோ என்ற சந்தேகத்தில் கதவைத் திறக்க யோசித்தேன்.
இருசப்பன் சட்டென்று கதவைத் திறந்துவிட்டுச் சிரிக்கிறான். எனக்குப் பழக்கமான
வீடுதான், மதிய வேளைகளில், நிலைபடியில் தலையைவைத்தபடி உள்தாவாரத்தில்
வெறுந்தரையில் நித்திரை கொள்கிற சாவித்தி அக்காளை பலமுறை பார்த்திருக்கிறேன்.
நடையைத் தாண்டி உள்ளே வந்தேன். வாசலில் கட்டியிருந்த கயிற்றில் சாவித்திரி
அக்காளின் புடவையொன்று துவைத்துக் காயப்போட்டிருக்கிறது, அருகிலேயே
அவள்போடும் பிரத்தியேக டூபைடூ ரவிக்கையும், உள்பாடியும். சட்டென்று சுரந்த
உமிழ்நீர் கொழகொழப்புடன் நெஞ்சில் இறங்குகிறது, ஜிவ்வென்று மேலே போகிறேன்,
தொடர்ந்து நடக்க முடியால் கால்கள் கணக்கின்றன, உடம்பு சில்லிட்டுவிட்டது.
இதுவரை அப்படியான அனுபவமில்லை. அக்கா.. சாவித்திரி அக்கா.. நா குழறுகிறது.
எனக்கு நேராக இருந்த அறை. உள்ளே லேசாக இருள் கலந்த வெளிச்சம்.
ஆணும்பெண்ணுமாய் கலந்த சுவாசம், முனகல். கொடியில் போட்டுவைத்திருந்த
புடவையின் கீழே என் பார்வை செல்ல, சற்றே தடித்த ஆணின்கால்கள், அதில் கொடிபோல
படர்ந்து மரவட்டைபோல சுருண்டிருக்கும் நரம்புகள். அதனை உரசிக்கொண்டு மழை
ஓய்ந்த வானம்போல நிர்மலமாய் இருக்கும் பெண்மணியின் பாதங்கள். அதில் வலது
பாதத்தில் சுண்டுவிரல் நீளத்திற்கு தழும்பு. மூச்சிறைக்க வீட்டிற்கு
நடந்துவந்தேன். அன்றைய இரவு கூத்துபார்க்க நான் போகவில்லை. இருசப்பன், தான்
செயித்துவிட்டதாக வெகு நேரம் என்னிடம் விவாதித்துக்கொண்டிருந்தான்..
அதற்குப்பிறகு இருசப்பனைச் சந்திக்க நேர்ந்தது சென்னையில். வடசென்னையிலிருந்த
ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்புக்கு அனுமதிக் கிடைத்து
படித்துகொண்டிருந்த காலம். தென்னாற்காடு மாவட்டத்தில், ஐந்து கி.மீட்டர்
தள்ளியிருப்பவர்களாற்கூட நினைவில் கொள்ள முடியாத பெயர் கொண்ட
கிராமத்திலிருந்து வந்திருந்த எனக்குச் சென்னை அப்போது பிரம்மிப்பாக
இருந்தது. அதிலும் சந்தடி மிகுந்த வடசென்னை என்னை ரொம்பவே ஆச்சரியபடுத்தியது.
இராயபுரம் கோவிந்தனும், தண்டையார்பேட்டை டில்லிபாபுவும் மோதும் ஆக்ரோஷமான
குத்து சண்டை போஸ்டர்கள். தோன்றிய வேகத்தில் மறையும் மோட்டார் வாகனங்கள், மணி
அடித்து, சலித்தபடி பெடலை மிதிக்கும் சைக்கிள் ஆசாமிகள், அடுத்தவர்களை
இடித்துக்கொண்டு முன்னே போய் பின்னே திரும்பும் மனிதர்கள், திடுதிப்பென்று
முளைத்து மூர்க்கமாய் ஓடி சந்துகளில் மறையும் கும்பல், வாய் நிறைய
புகையிலையும், இடுப்பவிழும் சதையுமாய் கூறுகட்டி சீசனுக்குத் தகுந்த
வேவாரம்பண்ணும் கூடைக்காறிகள், பிறகு ஸ்டான்லி ஆஸ்பீடலருகே: லுங்கி அவிழ
தூங்கும் மனிதர்கள், பீடிகுடிக்கும் மரத்தடி கார்ப்பரேஷன் காவலாளி, கேனில்
காப்பி வியாபாரம் செய்யும் மலையாளி, துடைப்பமும் கையுமாக அலையும்
காக்கிச்சட்டை பெண்மனி, கிளி ஜோஸ்யர்கள், சோர்ந்திருக்கும் நடைவழிகளென
எப்போதும் காட்சிமாறாமலிருக்கும் ராபின்ஸன் பார்க், அதில் மென்மை
மயக்கத்திலிருந்து விடுபட்டு, உரம்பெறும்வரை, பெயர் சூட்டப்படாமல்
காத்திருக்கும் மரங்கள், வளர்ந்து நிற்கும் பெரியமரங்களின் நிழல்தரும்
கிளைகள், விள்ளல்களாக மாத்திரமே காணக்கிடைக்கிற வானம். அதிகாரமும்,
கொதிப்பும், மென்மையும் கொண்டு நான்கு திசைகளிலும் பரவிக்கிடக்கும் பூமி.
பூமியின் குணத்துடன், கண்கள் எழுதப்பட்ட களிமண் பொம்மையாக தலை தெறிக்க
நடக்கும் அல்லது ஓடும் பாதசாரிகள் இப்படி எல்லாமே என்னை ஆச்சரியபடுத்தியவை.
பாதசாரிகள் என்றா சொன்னேன், இல்லை பாதங்கள். இங்கே எங்கே பார்த்தாலும்
கால்கள்தான் இருக்கின்றன, பாதங்கள்தான் தெரிகின்றன. எங்கள் கிராமத்தைக்
காட்டிலும் சென்னையில் விதவிதமாய்ப் பாதங்கள்: மூப்படைந்த பாதங்கள், வாலிபப்
பிராயத்துப்பாதங்கள், சிறுவர் பாதங்கள் சிறுமியர் பாதங்கள், வியாபாரியின்
பாதங்கள், தொழிலாளியின் பாதங்கள், அலுவலத்திற்கு செல்பவன் பாதங்கள்,
துக்கிப்பவனின் பாதங்கள், சந்தோஷிப்பனின் பாதங்கள், தமிழனின் பாதங்கள்,
தெலுங்கன் பாதங்கள், சேட்டின் பாதங்கள், பெண்களென்றால் மெட்டி அணிந்தவளா
அணியாதவளா?.. அம்மாவா.. பெண்ணா? கிழவியா..குமரியா?.. ஒரு பெரிய அட்டவணையை
வைத்துக்கொண்டு பாதங்களை ரகவாரியாகப் பிரித்து எனது மூளையை
கசக்கிக்கொண்டிருந்திருந்த நேரம். பாதங்களில் அணிந்துள்ள காலணிகள், தோலின்
அமைப்பு, கால்களில் மூடியிருக்கிற ஆடை, கால்களின் நடை இவற்றை வைத்து சென்னை
மனிதர்களின் லட்சணத்தை ஓரளவு தீர்மானிக்க முடிந்த காலம்.
ஒரு நாள் காலை நேரம். விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் திரைப்பாடல்
ஒலித்துக்கொண்டிருக்கிறது, வால்வை அணைத்துவிட்டு, அறைக்கதவை அவசரமாய் அறைந்து
சாத்திவிட்டுக் கல்லூரிக்குப் புறபட்டுவிட்டேன். டி.எச். ரோடு
என்றழைக்கப்படும் திருவொற்றியூர் சாலையப் பிடித்து கல்லூரி திசைக்காய் மெல்ல
நடந்துகொண்டிருக்கிறேன். எதிரே அவள், சிவப்பு ரோஜாவொன்று ரோட்டில்
பூத்ததுபோல: துலக்கமான முகம். அழுந்த வாரியக் கூந்தல் முன் நெற்றியில்
முக்கோணமிட்டு, ஆட்டமிடும் குண்டுமல்லி மாதிரியான ஜிமிக்கைகளை ஜாக்கிரதையாகத்
தவிர்த்துவிட்டு காதுமடல்களைத் தன்னுள் அடக்கிய ஒற்றைப் பின்னல், அது
இடுப்புவரை நீண்டு வலமும் இடமுமுமாக அவள் தரையில் கால்பதிக்கும்போதெல்லாம்
எட்டிப்பார்க்கிறது. சூடியிருப்பது தலையிலா அல்லது கழுத்திலா என
தீர்மானிக்கமுடியாபடி ஒரு மல்லிகைச் சரம். அரக்குவண்ணத்தில் பட்டுப்பாவாடை
அதற்குத் தோதாக இளஞ்சிவப்பில் ஒரு சட்டை, வெண்ணிற மஸ்லிலின் தாவணி முதுகை
வலப்புறமாகச் சுற்றிக்கொண்டு, பாவடைக்கு அழகு சேர்த்திருந்தது. வலது தோளில்
புத்தகப் பை. வழக்கம்போல என்னை பொறாமையில் ஆழ்த்தும் இருபாதங்கள், சிவந்த
பாதங்கள். குஞ்சம்போல கட்டைவிரலும் வரிசையாக ஏனைய விரல்களும். மத்தியில்
அளவாய் விம்மித்தணிந்து, கெண்டைகாலின் கீழ்ப்பகுதியில் சரணாகதியிலிருக்கும்
பாதம். சட்டென்று கைகளில் ஏந்திக்கொள்ள தூண்டும். கட்டைவிரல் நகத்தில்
தெரிந்த வெளிர் சிவப்பு நகப்பூச்சு நிழலில் கூட மினுமினுக்கிறது. குதிகாலில்
பாறைமீது விழும் நீர்போல சலசலக்கும் வெள்ளிக்கொலுசு. பாதத்தின் மென்மையும்,
உடையவளைத் தவிர வேறொருத்தர் கை என்மீது பட்டதில்லை என்கிற அதன் ஆணவமும்,
நெருங்கித்தான் பாரேன் தெரியும் சேதி என்ற சலங்கையின் முனுமுனுப்பும் என்னை
ரொம்பவே படுத்தியது.
அடுத்துவந்த நாட்களில், உலகில் வேறெந்தப் பிரதேசமும் வடசென்னைக்கு ஈடானதல்ல
என்ற முடிவுக்கு வந்தாயிற்று. கோவிலுக்கு அதிகமாக போகின்ற வழக்கம்
எனக்கில்லை. அந்த வெள்ளிக்கிழமை அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குப்
போவதென்று தீர்மானித்திருந்தேன். அந்தப்பெண்ணும் அங்கே ஒருவேளை வரலாம் என்ற
நம்பிக்கையே காரணம். என் நம்பிக்கைப் பொய்க்கவில்லை, அவள் வந்திருந்தாள்.
கூடவே, நடுத்தர வயது பெண்மணியொருத்தி. தீபாராதனைக்காக அவர்கள்
காத்திருந்தார்கள். நானும் எதிரே போய் நின்றேன். அவளது மருதாணி பூசிய
பாதங்களைப் பார்த்தவன் தலையை உயர்த்தினேன். சட்டென்று என்னைத்
திரும்பிப்பார்த்தாள். நான் தலையை உயர்த்த அவள் காரணமா? அல்லது அவள்
திரும்பிப் பார்க்க நான் காரணமா தெரியாது. இருவர் பார்வையும் ஒருநொடி
முட்டிக்கொண்டதென்னவோ உண்மை.. பிறகு ஒன்றும் நடவாததுபோல, அவள் அம்மாவுடன்
சேர்ந்து பிரகாரத்தைச் சுற்றினாள். நான் கும்பலில் கலந்து அவளைத்
தொடர்ந்தேன். கோவிலை விட்டு அவர்கள் வெளியேற நானும் காத்திருந்து வெளியே
வந்தேன். அவர்கள் விடுவிடுவென்று நடக்க, பின் தொடர்ந்து செல்ல எனக்கு அச்சமாக
இருந்தது. அறைக்குத் திரும்பினேன். என்னை முழுவதுமாக அவள்
சுவீகரித்துவிட்டதைபோல பிரமை. உலகமுச்சூடும் பூத்து குலுங்குகிறது,
சந்தோஷம்,ஆனந்தம், பூரிப்பு.
மறுநாள்காலை கல்லூரிக்குச் சென்றபோது கிடைக்குமென்று எதிர்பார்த்த அவளது
பாததரிசனம் வாய்க்கவில்லை. மறுநாளும் அப்படியே அமைந்தது. பிறகு அதற்கு அடுத்த
நாளும்..அதற்கும் அடுத்த நாளும்..ஹ¤ம்..இல்லை. வெள்ளிக்கிழமையன்று
பிள்ளையார்க்கோவிலிலும் அவளில்லை. அன்றிலிருந்து சென்னை கசந்துவிட்டது.
வாகனங்கள் மாத்திரமே சாலைகளில் ஊர்கின்றன. மனித உயிர்களின் நடமாட்டமின்றி
சென்னையே வெறிச்சோடிபோய்விட்டது. இருந்த ஓரிருவர்கூட பாதங்களற்று
நடக்கிறார்கள்.
இரண்டுமாதங்கள் கழிந்திருந்ததாகக் காலண்டர் அறிவித்திருந்தது.
கிராமத்திலிருந்து அப்பா வந்திருந்தார். மாலை என்னை அருகிலிருந்த
இராயபுரம்வரை சென்று வருவோமென கூட்டிச் சென்றார். தெருவென்று
பெயர்கொண்டிருந்தாலும் அதுவொரு சிறிய சந்து, இடையிடை நிற்கும்
பாரவண்டிகளையும், நாயர் டீக்கடையையும், அண்ணாச்சி கடையையும், அவிச்ச கடலை,
பொரியுண்டை விற்கும் சுப்பு நாய்க்கரையும் கவனமாகத் தவிர்த்தால் இருபத்தெட்டு
சொச்சம் வீடுகள். கடைசியாய் குறிபிட்ட சொச்சத்தில்தான் மனைவியோடும்
பிள்ளைகளோடும் ஆர்பர் தொழிலாளியாக, எங்கள் ஊர் முறுகேசன் தங்கியிருந்தார்.
அன்றைக்கு நல்ல மழை. தாழ்ந்திருந்த தலைவாசலில் குனிந்துகொண்டு உள்ளே
நுழைந்தோம். சிற்றோடு வேய்ந்த கூரையுடனான தாழ்வாரம் நான்கு பக்கமும்
இறக்கியிருக்க நடுவில் வாசல். வாசலையும் ஆக்ரமித்துக்கொண்டு இரண்டு
குடித்தனங்கள். நடைவாசலில் உடலைக் குறுக்கி படியென்று பேர்பண்ணியிருக்கும்
இரண்டு கருங்கற்களில் சாக்கிரதையாக கால்வைத்து இறங்கினால் பத்துக்கு இரண்டில்
ஒரு நடைபாதை. மழையின் காரணமாக நடைபாதை தண்ணீரில் மூழ்கியிருக்கிறது.
கடைசியாய் இருந்த கொஞ்சம் வசதிகூடிய போர்ஷனில்தான் முறுகேசன் குடும்பம்
இருந்தது. வசதிகூடிய போர்ஷனென்றால், முன் தாழ்வாரத்தில் இடம் வலமுமாக
கிராமத்துக் குதிர் படுக்கையிருப்பதுபோல சின்னதாய் இரண்டு அறைகள்.
அக்குதிர்களொட்டி இரண்டு பெரிய அறைகள். பிறகு தாழ்வாரத்தின் தலையில் ஒன்று.
பகலில்கூட மின்சார விளக்கின்றி புழங்க முடியாத வீடு. மெல்லிய இருட்டு, வீடு
முழுக்க உரிமையாய் படர்ந்திருந்தது. சில நேரங்களில் தகைவாசலையும் தாண்டி,
நம்மோடு ஒட்டிக்கொண்டு வரக்கூடிய ஈரத்தன்மையுடன்.
'தம்பி! தம்பி!'- முன்வாசலை விட்டு இறங்கி, தண்ணீரில் மூழ்கியிருந்த வாசல்
நடைபாதையில், வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கியிருந்த அப்பா,
கூப்பிட்டுக்கொண்டு முன்னே நடக்க, நான் செருப்பைக் கையிலெடுத்துக்கொண்டு,
பேண்ட் நனைய மெதுவாய் அவரைத் தொடர்ந்து போகிறேன்.
'அம்மா! யாரோ வந்திருக்காங்க பாருங்க- பக்கத்திலிருந்த போர்ஷனிலிருந்து
ஒருத்தி.
நடுத்தர வயது பெண்மணியொருத்து எட்டிப்பார்த்தாள். வாய்கொள்ள வெத்திலைச் சாரு.
'நீங்க?...'
சட்டென்று ஒருவித இன்ப அதிர்ச்சி. எனக்குப் பாததரிசனம் பண்ணுவித்த பெண்ணின்
தாயார். அங்கிருந்த கொஞ்ச நஞ்சமிருந்த இருட்டையும் சட்டென்று எவரோ வழித்து
கடாசியதுபோல உணர்வு.
'ஊர்ல இருந்து வறோம். தம்பி முறுகேசனைப் பார்த்துட்டுப் போகலாம்ணு வந்தோம்.'
வாசலில் கிடந்த ஈரக்கோணியில் கால்களைத் தட்டிக்கொண்டிருந்த அப்பா பதில்
சொல்லியபடி முன் தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றார். நான் அவர் பக்கத்தில்
நிற்கிறேன்.
'உட்காருங்க'.. போட்டிருந்த ஒரு நாற்காலியைக் காட்டினாள். அப்பா என்னை
பார்த்தார். 'பரவாயில்லை நீ உட்கார் என்பதான பார்வை. நான் தயங்கிபடி அவர்
அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.
'நம்ம சோமுவை இங்கேதான் காலேஜ்ல சேர்த்திருக்கன், ஹாஸ்டலும் பக்கத்திலதான்.
முறுகேசனுக்கு விபரமா எழுதியிருந்தேன். அதுதான் அழைச்சுகிட்டு வந்தேன்.' -
அப்பா.
'அவரும் வர்ற நேரம்ந்தான்.' ஆர்பரிலிருந்து முறுகேசன் வரும் வரையான நேரத்தை
நிரப்ப ஊர்க்கதையை அப்பாவும், பெண்மணியும் ஆரம்பித்திருந்தார்கள். நானோ,
கொஞ்சநேரம் எதிரே சுவரில் தெரிந்த காலண்டர் நடிகையைப் பார்த்து அலுத்துபோய்,
வலப்புற அறையில் அப்பெண் நிற்கிறாளா என்று கவனித்தேன். நிழலாடியது தெரிந்தது.
இருட்டைச் சபித்தேன். கதவு முன்னும்பின்னுமாய் அசைய, கூர்ந்து கவனித்தேன்.
இடதுகாலை அழுந்த ஊன்றி, வலதுகாலை குதிகாலில் நிறுத்தி, முன்பாதம் தெரிய,
கால்விரல்கள்கொண்டு கதவினை அசைப்பது தெளிவாகத் தெரிந்தது. மனதில் தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு அவளது திசைக்காய் சில நொடிகள் தொடர்ந்து பார்த்திருப்பேன்.
'நீங்கள் வருவீர்கள் என்று அவரும் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்களும் பெரியவ
கல்யாணத்தை முடிச்ச கையோடு சின்னவளுக்கும் செஞ்சிடவேண்டியதுண்ணுதான்
நெனைச்சோம். ஆனால் அது வேறமாதிரி ஆயிப்போச்சி, அக்காளைப் பார்க்கவந்தவர்கள்
தங்கைமேல் பிரியப்பட்டு கேட்டார்கள், நாங்களுல் சம்மதித்துவிட்டோம். தையில
இவள் கல்யாணமும் குதிர்ந்தா சந்தோஷம். எங்க வீட்டுக்காரரும், மூத்த பெண்ணை
கட்டிக்கறதில உங்களுக்கேதும் சங்கடமிருக்காது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
'வாங்க வாங்க', வந்து அதிக நேரமாவுதா..' முறுகேசன் உள்ளே வந்தார்.
'இல்லை. இப்பத்தான் வந்தோம். -அப்பா.
உள்ளிருந்து நாற்காலியைக் கொண்டுவந்து எங்கள் அருகில் போட்டபடி அமர்ந்த
முறுகேசன். 'காப்பியெல்லாம் ஆச்சா?'- என்றார்.
'இல்லைங்க நீங்க வரட்டுமெனக் காத்திருந்தேன்.- என்ற அவர் மனைவி, 'கௌரி காப்பி
கொண்டுவாம்மா', வலப்புறமிருந்த அறைக்காய் குரல் கொடுத்தாள்.
கதவு திறந்து கொண்டது. துலக்கமான முகம், அழுந்த வாரியக் கூந்தல்.குண்டுமல்லி
ஜிமிக்கி, காதுமடல்களைத் தன்னுள் அடக்கிய பின்னல் சடை. அரக்குவண்ணத்தில்
பட்டுப்பாவாடை அதற்குத் தோதாக இளஞ்சிவப்பில் ஒரு சட்டை, வெண்ணிற மஸ்லிலின்
தாவணியில், வழக்கம்போல என்னை பொறாமையில் ஆழ்த்தும் சிவந்த பாதங்கள் நோக மெல்ல
நடந்து வருவாளோ? ஆர்வத்துடன் காத்திருந்தேன்.
'கௌரி, வாம்மா'- மீண்டும் அவள் தாயாரின் குரல் கேட்டு சுய நினைவுக்கு
வருகிறேன். மீண்டும் அப்பெண்ணிருந்த அறைக்காய் பார்வையைப் பதித்திருந்தேன்.
ஒரு வளைக்கரமொன்று கதவினை உட்பக்கமாய்த் திறந்தது. வலது பாதம் மெல்ல
நிலைப்படியைத் தாண்டிப் பதிய, இடது பாதம் புடவைத் தலைப்பிலிருந்து விடுபடத்
தயங்குவதுபோல இருந்தது.
முறுகேசன், 'ஏண்டி, பக்கத்துல நிண்ணு ஜாக்கிரதையாய் கூட்டி வாயேன்',
என்கிறார். அவர் வார்த்தைகளில் அசாதாரண வெப்பம்.
சுதாகரித்துக்கொண்டு நடந்து வந்தாள். இடது காலை தரையில் நிறுத்த
சங்கடப்பட்டாள். உடலில் இடப்பாக பாரத்தையும் வலப்பக்கமாக சுமந்துகொண்டு
நடந்து வந்தாள். மெதுவாய் தலையை உயர்த்தியவள், என்னை நேரிட்டு பார்க்காமலேயே
காப்பியை நீட்டுகிறாள். சூம்பியிருந்த அவள் இடது பாதத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
'பாப்பாவுக்கு இடது காலில் சின்னதாய் ஒரு குறை. ஆனாலும் தம்பி அளவுக்கு
இல்லை'. - முறுகேசன்.
அவள் நீட்டிய தட்டிலிருந்து காப்பி தம்ளரை எடுத்துக்கொண்டேன். அப்பாவும்
எடுத்தவர், குனிந்து அதைத் தரையில் வைத்தார். அவர் முகம் சிவந்திருந்தது.
எனக்குக் கொடுத்த காப்பியைக் குடிப்பதா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் கையில்
வைத்துக்கொண்டிருந்தேன். அவள் மீண்டும் அறைக்குத் திரும்பினாள். போனவள் சில
கணங்கள் திறந்திருந்த கதவின் இடைவெளியை நிரப்பியபடி நின்றாள், இடது கையில்
கதவினைப் பிடித்திருந்தாள். முகம் சோர்ந்திருந்தது. சூம்பியிருந்த இடதுகால்
பாதம் அமைதியாயிருக்க, வலது கால்திசையில் ஒரு விதப்பதட்டம். சில நொடிகள்
என்னைப் நேரிட்டுப் பார்த்தாள். உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கினாள்.
அப்பா எழுந்துகொண்டார். எழுந்து நின்றவர், 'டேய் எழுந்திரு', என்றார். நான்
எழுந்துகொண்டேன்.
'மழைவரும்போல இருக்கிறது, கொஞ்சம் இருந்து போங்களேன்- அவள்தான் பேசினாள்.
ஆச்சரியமாக இருந்தது. நான் தயங்கினேன். வழக்கம்போல 'இருசப்பன்' சிரிக்கிறான்.
'இல்லை நாங்க போகணும். நான் இன்றைக்கே ஊருக்குத் திரும்பணும்- போயிட்டு
எழுதறோம். இடைமறித்து ஊமையாக நின்ற முறுகேசனைப் பார்த்து பேசியவர், அப்பா.
வாசல் நடைபாதையில் இறங்கியபோது, தலைக்குமேலே வெளுத்திருந்த வானத்தில்
திடுதிப்பென்று மலைகள் முளைத்ததுபோல அடர்த்தியாய் கருமேகங்கள். தூறலிட
ஆரம்பித்திருந்தது. வாசலில் இன்னமும் தண்ணீர் வடியாமல் தேங்கியிருந்தது.
அப்பா வேட்டியை மடித்துக்கொண்டார், நான் செருப்பை கையிலெடுத்துக்கொண்டேன்.
வாசல் தண்ணீரில் இறங்கி நடந்தோம். எனக்குப் பின்னால் சளக் சளக்கென்று யாரோ
வாசல் தண்ணீரில் இறங்கி நடந்து வருவதுபோல சத்தம். திரும்பிப் பார்க்க
தைரியமில்லை. கல்லாய் சமைந்துவிடுவேனென்கிற பயம்.
nagarathinam.krishna@neuf.fr