பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
பெனுவாத் க்ரூல்ட் (GROULTE BENOITE )
- நாகரத்தினம் கிருஷ்ணா -
'பெண்ணியம் ஒருவரையும் கொன்றதில்லை,
கொல்லவும் கொல்லாது, ஆணாதிக்கத்திற்கோ அதுதான் அன்றாடத் தொழில்.'* - பெனுவாத்
க்ரூல்ட்
இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள்
ஒருவர். முகத்தில் எப்போதும்
தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு,
அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள்,
எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை
கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும்
அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு
பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி
எண்ணங்கொண்டவர். நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள்
அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.
1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார்
நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார
கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. புகழ்பெற்ற
ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற
இல்லம்.- உ.ம். Picasso, Picabia, Jouhandeau, Paul Morand மற்றும் பலர்.
தாயாரின் வழிகாட்டுதலில், இளமை முதற்கொண்டே
இலக்கியங்களில் ஆர்வம், பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக
இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஞானம்,
ஆங்கிலத்திலும் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப்
பணியாற்றியவர், பின்னர் இதழியலில் ஆர்வம்
காட்டினார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும்
பணிபுரிந்திருக்கிறார். 1978ம் ஆண்டில் குளோது
செர்வன் என்பவரோடு சேர்ந்து பெண்களுக்கான F. Magazine என்கிற இதழொன்றைத் தொடங்கி
அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1982ம் ஆண்டுமுதல் Femina இதழின் ஜூரிகளுள் ஒருவராக இருந்துவருகிறார். 1984 -
1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும்,
அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை உண்டாக்கவென்று, இலக்கண வல்லுனர்கள்,
மொழியாளர்கள், எழுத்தாளர்கள் கொண்டு
இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். மூன்று முறை திருமணமானவர்.
முதல் கணவர் காச நோயில்
1945ம் ஆண்டு இறந்தபின்னர், இரண்டாவதாக பத்திரிகை செய்தியாளரை மணந்து இரு
பெண்களுக்குத் தாயாரானார். அம்
மணவாழ்க்கையும் கசப்பில் முடிய மூன்றவதாக ஓர் பிரபல எழுத்தாளரை (Paul Guimard)
மணக்க நேர்ந்தது. திருமண அனுபவங்கள்
'பெண்ணியம்' குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி
'·புளோரா'வுடன் (Flora) இணைந்து முதல்
நாவலான 'இருவர் வாசித்த செய்தித்தாள்' (JOURNAL A QUATRE MAINS) 1958ம் ஆண்டில்
வெளிவந்தது, தொடர்ந்து சகோதரிகள்
இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப்
பேசுகின்ற 'வாழ்க்கையின் சில
உண்மைகள்' (LA PART DES CHOSES-1972,) 'அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT
ELLE -1972) என்ற இருகட்டுரைத் தொகுப்பும்
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பல நாவல்கள் குறிப்பாக
'முக்கால்வாசி நேரம்'(LES TROIS QUARTS DU TEMPS),
'தமனியும், சிரையும்'(LES VAISSEAUX DU COEUR) அவற்றுள் முக்கியமானவை. பிறகு
பெண்ணியல் வாதிகளான 'பொலின்
ரொலான்(Pauline Rolland), ஒலிம்ப் தெ கூழ் (Olympe de Gouge) ஆகியோரது
வாழ்க்கைவரலாறுகள், 'ஒருவிடுதலையின் வரலாறு'( Histoire
d'une evasion) என்கிற பேரிலே 1997 வெளிவந்த அவரது சொந்த வாழ்க்கை மீதான
பார்வையும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை.
பெனுவாத் வாழ்க்கையும், எழுத்தும், இன்றைய நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்த
முனைவதல்ல, ஆணுக்கு நிகரென்று,
அழுந்த உரைப்பது, எந்த ஜீவனையும்போலவே 'அவள்' முதலில் 'தனக்கானவள்' எனபதை
வலியுறுத்துவது. அவளுடைய வாழ்வியல்
நித்தியங்களை நிதரிசனப்படுத்துவது: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள்,
முதிர்ச்சியின் பலம், பெண்ணினம் மற்றும் அவள் சார்ந்த
கருத்தியல்கள் அதில் பதிவுசெய்ய்யப்பட்டன. தற்போது அதற்கான வயதில் - முதுமையை
விவாதத்திற்கு உட்படுத்துகிறார், அதன்
மேன்மைக்கு வாதிடுகிறார். பெண்கள், பெண்ணியம் என உழைத்துவருகிற இவரது சமீபத்திய
படைப்பு,(2006) 'நட்சத்திர ஸ்பரிசம்'-
விற்பனையில் சாதனை செய்துவருகிறது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்ஷம் 3000 பிரதிகள்.
மரணம் கண்ணியத்துடன்
நிகழவேண்டுமென்பது இந்நாவலில் வெளிப்படுத்தப்படும் அவரது ஆதங்கம். அறுபத்தைந்து
வயதில் முதியவர்களாகப் பிறந்து
எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர
ஸ்பரிஸத்திற்காக நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கிறோம், அத்தீணடலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான்
இருக்கவேண்டுமென்பது இவரது பிடிவாதம்..
சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய
நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது. சிமோன்
தெ பொவார்க்கு 'பெண்ணென்ற ஓர் இரண்டாமினம்' ( Deuxieme sex) எப்படியோ,
பிரான்சுவாஸ் பத்துய்ரியேவுக்கு (PARTURIER,
FRANCOISE)'ஆண்களுக்கு ஓரு வெளிப்படையான கடிதம்('Lettre ouverte aux hommes)
எப்படியோ, அப்படி 'பெனுவாத் க்ரூல்ட்க்கு 'அவளது
விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE). இன்றுவரை பத்து இலட்சம் பிரதிகள்
விற்பனைச் செய்யபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரது
எழுத்துக்களில் பெண்ணியத்தின் தாக்கங்கள்: காதலர்கள், கணவன்மார்கள், அரசியல்
ஆகியவற்றை மையமாக வைத்துச்
சொல்லபட்டிருக்கின்றன. சமீபத்தில் இவரைக் குறித்த ஓர் ஆவணப்படத்தினை மற்றோர்
பெண்ணியல்வாதியும் இயக்குனருமான ஆன்
லா·பான்(Anne Lenfant) 'அவளுக்கென்று ஓர் அறை (Une chambre a elle) என்ற பெயரில்
தயாரித்திருக்கிறார்.
* 'Le feminisme n'a jamais tue personne - le machisme tue tous les jours'
21ம் நூற்றாண்டும் 'அவளது விதிப்படி ஆகட்டும்'(Ainsi soit-elle) கட்டுரைத்
தொகுப்பும்...
பெனுவாத் க்ரூல்ட்
பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக
'அவளது விதிப்படி ஆகட்டும்' வெளிவந்தது. அதன்
பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம்
அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக,
ஒவ்வொரு பெண்ணும் 'இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென' நினைத்தாள்;
ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு
முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை
என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள்
முன்னெச்சரிக்கையுடன் கவனமாக 'மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து
பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு
மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே
நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார்
முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி
விழித்துக்கொள்ளுமென்று எவரும்
நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம்
சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு
செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும்
போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக
யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும்
ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம்
நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது.
விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில்
ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி
திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை
மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத்
திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து
ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர்
யுத்தமென்றாகிவிட்டது.
அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு
மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை
ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன்
விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக்
குறித்து பிறர் கொண்டிருந்த
எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலை' பேசும் பெண்கள் தங்களை
ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற
விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட 'La Garconne' மாதிரியான நூல்கள்) என
பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது
அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப்
பெண்நெறி போற்றப்பட்டது
பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக்
குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக
அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு
'மகப்பேறு கொள்கை' அடிப்படையில் ஒரு
சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான
கடமைகளை கட்டாயம்
நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத்
தானே தீர்மானிக்கலாம் என்கிற
முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு
கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை
மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல்
பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால
அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு
செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே
எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் 'பெத்தேன்'(Petain)(3)
நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள்
பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு
கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம்
நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான்
கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த
நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும்,
சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை
சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.
1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3)
பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல
பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம்.
ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது,
பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய
சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல்
தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென
சட்டம் கொண்டுவந்திருந்தும்,
பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர
ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு
வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள்
1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள்,
ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம்
ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது
தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49
சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில்
வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது
எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது
ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு
குறியீட்டைத் தொட்டது. 1945ம்
ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப்
பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6
சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11
சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக
இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில்
நுழைவதற்கு நமக்குக் குறைந்தது
இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம்
மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள்
கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன்
கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை
உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற
எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய
பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல,
மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால்
அதிர்ச்சிதருகிறது.
தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த
'பெண்ணென்ற ஓர்
இரண்டாமினம்'(Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு
விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த
கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு
ஜீவிகளுடையே பெரும்
விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான
தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை.
பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய
உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும்
இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் 'சிமோன் தெ
பொவாரு'க்கிருந்த (Simone de Beauvoir),
ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர்
கையாண்டவிதமும் என்னைப் பெரிதும்
கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே
அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து
எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர்
இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில்
நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம்,
அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில்
நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில்
'சிமோன்' வரலாற்றாசிரியராகவும்,
தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு
அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட
காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில் 'லிட்ரேலுடைய'(Maximilien
Paul Emile Littre) அகரமுதலியில் 'பெண்ணியம்' என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக்
அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே
பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும்
'வரையறையைத் தாண்டிவிட்டதெனக்' குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட
'பெண் விடுதலை' சிந்தனையும், எழுப்பிய
ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது.
கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும்,
'பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்' சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை
மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ
இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge)
பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert),
மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம்
செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு
கட்டுரைத் தொகுப்பான 'A Room of One's Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது
வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக்
கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்·ப் (Virginia Woolf)
நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான்
அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை
வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய
பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை
மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம்
வெளிப்படுத்த முடியும்?
யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் - பெண்
உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம்
கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான்
இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற
உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.
உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி
வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு
முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான்
அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென
விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக்
கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு,
சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். 'பண்டை
வழக்குகள்' நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட
உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை
வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.
இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது
மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்;
காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை
நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை
மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று
வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு.
நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக்
காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.
புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும்
அப்படியான நாளாக 1970ம் ஆண்டு
ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர்
உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று
எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள்
அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன
வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த
மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே
கைது செய்யபட்டனர். மறுநாள் 'M.L.F.(5) பிறந்தது' என நாளேடுகளில் தலைப்புச்
செய்தி. மற்றொரு இதழோ, 'பெண்கள் சுதந்திரம்,
ஆண்டு பூஜ்யம்' எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின்
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின்
நோக்கம், 1792ம் ஆண்டில் 'ஒலிம்ப் தெ கூர்ழ்'(Olympe De Gourge) உரத்து
குரல்கொடுத்ததைபோல: 'ஒன்றிரண்டு பெண்களுக்காக
குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய
நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது', அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால்
அவர் சிரம் வெட்டபட்டது.
அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால
பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை
முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம்
அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த 'பொவாருடைய'(Beauvoir)
பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு
ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
'உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று'(La plus massive
survivance de l'esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால்
விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக
தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த
குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது
ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது
கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.
பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன
என்று பொதுவாகச் சொல்லப்படும்
குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும்
பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின்
கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ)
என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை,
அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய்
நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும்
அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு
போகிறது. அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக
உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற
அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை,
எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென
இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம்
நிகழ்ந்தது. அது,'இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று
அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.' சட்டென்று அவளுக்கு ஓரு
தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.
மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம்
ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ(FRANCOISE
GIROUD) அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால்
இரண்டாண்டுகள் கழித்து அது <
கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய் (SIMONE VEIL) முயற்சியால் விரும்பினால்
கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென
சட்டம்(L'INTERUPTION VOLONTAIRE DE GROSSESSE) இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான
உரிமையையும், (68லேயே அதற்கான
சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.
'ELLE'(அவள்) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு,
அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர் (CHRISTIANE
ROCHEFORT), மார்கெரித் த்யூரா(MARGURITE DURAS), பிரான்சுவாஸ்
தோபோன்ன்(FRANCOISE D'EAUBONNE), எவ்லின் சுல்லெரோ(EVELYNE SULLEROT), பெனுவாத்
மற்றும் ·ப்ளோரா க்ரூல்ட் (BENOITE et FLORA GROULT), மொனிக் விட்டிக்(MONIQUE
WITTIG), சிமொன் தெ பொவார்(SIMONE DE BEAUVOIR), லூயீஸ் வைஸ் (LOUIS WEISS)
அர்லெத் லகிய்யே(ARLETTE
LAGUILLER), ழிஸேல் அலிமி(GISELE HALIMI), டெல்பின் செரிக்(DELPHINE SEYRIG),
லிலியானா கவான்னி(LILIANA CAVANNI), யனிக்
பெலோன்(YANNICK BELLON), மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது.
படைப்பாளினிகள், வழக்காளினிகள், திரைப்பட
இயக்குனிகள்(?), தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள்
குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது
பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 'மகளிர் ஆண்டாக' அறிவித்தது.
'அன்னையர் தினம்' என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய
முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள்
நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய
நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. பெண்ணியத்தைப்
பேசுவதற்கென்று பல நூல்கள்:HELENE CIXOUS, ANNIE LECLERC, KATE MILLET என்று
பலரது எழுத்துகளும் புத்தக வடிவம் பெற்றன. பெண்ணாக இருப்பதும், ஷந்தால்
ஷவா·ப்(CHANTAL CHAWAF) 'பெண்ணைப்' பற்றியும், லுஸ் இரிகரி(LUCE IRIGARY)
'திறந்து விரிவது'(Speculum) பற்றியும், 'தோற்ற பெண்கள்' (FEMMES BATTUES) என்று
எரென் பிஸ்ஸேவுல்(EREN PIZZEY), 'சூதக இரத்தம்' (SANG MENSTRUEL) என்று மரி
கர்டினல்(MARIE CARDINAL) என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை
தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக்
கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான 'அவள் விதிப்படி
ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின்
புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற
காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை
அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும்,
முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும்,
அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக
வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.
இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், 'அடைய
வேண்டியதை அடைந்துவிட்டோம்' என்ற
எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை
நிறுத்திய கதைதான். நாமெறிந்த
ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். 'பெண் விடுதலை இயக்கம்' இன்றைக்கு
சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது,
பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும்,
'பெண்ணியம்' என்பது ஏதோ தகாத
சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி
அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய
இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு)
திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன.
ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ
ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும்,
அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற
எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம்
வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித
பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும்
தந்திரம், திசைதிருப்பும் செயல். 'O'வின் கதை (Histoire d'O)என்றொரு திரைப்படம்,
அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும்
பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை
நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர்.
வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும்
இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.
இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள்
அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை
அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன்
தேவையை நிரப்பி வாழ்வின்
தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென
சொல்லிவருகிறார்கள். அப்படி
சொல்கிறவர்கள் 'பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்'(DEUXIEME SEX) மிகப்பெரிய
புரிதலுக்கு வழிவகுக்கிற 'உடலியல் மாத்திரமே நமது
மேன்மைகளை தீர்மானிப்பதல்ல' என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை
மறந்துவிடுகிறார்கள்.
*****************
**. 1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.
1. மே -ஜூன் -1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல
அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய
அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது,
ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு
ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக்
காரணமாயிற்று.
2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)
3.. REGIME DE VICHY(1940 - 1944). முதல் உலகப்போரில் விஷியை
நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு 'பெத்தேன்'(Petain)என்ற ராணுவ
தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு
நிருவாகம்
4. Charle DE GAULLE (1890-1970) -இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு
நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean
Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது
பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத்
திகழ்ந்தவர்.
5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான
இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.
nakrish2003@yahoo.fr |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|