மண் வாசனையோடு நடைபெற்ற நூல் வெளியீடும்
பாராட்டுவிழாவும்
- கலைஞர் காவலர் -
மழைக்கு முன்னர் மணக்கின்ற மண்ணைப்போல தங்கள்
மண்ணின் மைந்தர்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதிலும் அவர்களை வாழ்த்திக்
கௌரவிப்பதிலும் பிரான்ஸ் - 'புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்" மற்றைய சங்கங்களுக்கு
ஒரு வழிகாட்டியாகவே விளங்கி வருகின்றது. தீவகத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியப்
பரம்பரையில் வந்த மருத்துவர் அமரர் வீரவாகு தம்பிராசா அவர்களின் புதல்வர்களான திரு.
த. திருநாவுக்கரசு (நாவேந்தன்) திரு. த. துரைசிங்கம், திரு. வி. ரி. இளங்கோவன்,
திரு. வி. ரி. தமிழ்மாறன் ஆகிய நால்வரும் கலை இலக்கியத்துறையில் ஆற்றிய பணி
அளப்பரியது. அவரது இன்னொரு மகனான திரு. த. சிவானந்தன் அவர்கள் வைத்தியராக
விளங்குகின்றார். இவர்; ஏனைய சகோதரர்களைப்போல இலக்கியத்துறையில் பங்களிப்புகள்
செய்யாவிட்டாலும் அவரும் இலக்கிய ஆர்வலரே..!
நாவேந்தன் அவர்கள் பிரபல்யமான மேடைப்பேச்சாளர். அன்று தமிழரசுக்கட்சின்
வளர்ச்சியில் இவருடைய மேடைப்பேச்சும் எழுத்தும் முக்கிய பங்கு வகித்தது எனக்
கூறலாம். அத்தோடு பல நூல்களையும் அவர் எழுதியிருக்கின்றார். அவை இலக்கியம்,
அரசியல்;, சமயம் சார்ந்த நூல்களாகும். பத்திரிகை, சஞ்சிகைகளையும் வெளியிட்டவர்.
சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய மண்டலப் பரிசினை அன்று பெற்றவர்.
வி. ரி. இளங்கோவன் அவர்களும் சிறந்த மேடைப்பேச்சாளர். சமதர்மக் கொள்கைகளையுடைய இவர்
அமரர் கே. டானியல் அவர்களின் நட்புக் கிடைத்த காலந்தொட்டு மாக்ஸிசக் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டு, தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல
போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். கவிஞரும் எழுத்தாளருமான இவரும் பதினைந்துக்கும்
மேற்பட்ட நூல்;களை
வெளியிட்டிருக்கின்றார். 2006ம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட 'இளங்கோவன்
சிறுகதைகள்" என்னும் நூலினை, இலங்கை இலக்கியப் பேரவை 2006ம் ஆண்டுக்கான சிறந்த
சிறுகதைத் தொகுப்பாக தேர்வு செய்து இளங்கோவனைக் கௌரவப் படுத்தியிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
வி. ரி. தமிழ்மாறன் அவர்கள் சிறந்த அரசியல் விமர்சகர். சர்வதேச மனிதவுரிமைச் சட்ட
நிபுணர். இலங்கையிலிருந்தும்
பிறநாடுகளிலிருந்தும் வெளிவரும் பிரபலமான தமிழ், ஆங்கிலச் சஞ்சிகை, பத்திரிகைகளில்
இவருடைய கட்டுரைகள்
பிரசுரமாகியிருக்கின்றன. அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாகவும்
வெளிவந்திருக்கின்றன.
த. துரைசிங்கம் அவர்கள் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். அத்தோடு இலக்கியத்
துறையிலும் அதிக ஆர்வமாக இருந்ததினால் தமிழ் இலக்கிய ஆய்வு நூல்கள், சிறுவர்
இலக்கியப் புத்தகங்கள், கட்டுரைத் தொகுப்புகள், பாடநூல்கள் என நூற்றுக்கும்
மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியத்திற்கான
சாகித்திய மண்டலப் பரிசினை நான்கு தடவைகளும் மற்றும் பல அமைப்புகளின்
பரிசில்களையும் பெற்றவர்.
தங்கள் மண்ணின் மைந்தர்களான கவிஞர் த. துரைசிங்கம்
அவர்களின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" என்னும் நூலின்
வெளியீட்டுவிழாவையும் இலங்கை இலக்கியப் பேரவையின் விருதுக்குத் தெரிவுபெற்ற வி. ரி.
இளங்கோவன் அவர்களுக்கான பாராட்டு விழாவையும் பிரான்ஸ் - புங்குடுதீவு மக்கள்
ஒன்றியத்தினர் கடந்த (01- 03 - 2009) ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் மிகச் சிறப்பாக
நடாத்தினர்;. ஊர் சார்ந்த நிகழ்ச்சி எதுவானாலும் திரண்டுவந்து அந்நிகழ்வைச்
சிறப்பிப்பது புங்குடுதீவு மக்களின் இயல்பு! அது மாத்திரமல்ல நீண்ட நாட்களுக்குப்
பின்னர் பாரிஸில் ஓர் இலக்கிய விழா நடைபெற்ற காரணத்தாலும் இவ்விழாவில் இலக்கிய
ஆர்வலர்களும், படைப்பாளிகளும், புங்குடுதீவு மக்களுமாகப் பெருந்தொகையானோர் கலந்து
சிறப்பித்தார்கள்.
இளங்கோவன் அவர்களின் நீண்டகால நண்பரும், எழுத்தாளரும் சமூக சேவையாளருமான கலாநிதி
கந்தையா தேவமனோகரன்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இவ்வாண்டு (2009) நடைபெறவிருக்கும்
ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழரான பேராசிரியர் ஜோன்மேரி
யூலியா (செவாலியர் சுகிர்தராஜா) அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்,
'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும்
கலந்துகொண்டார்கள். ஊடகவியலாளர் இ. க. அரியரட்ணம் (மெய்கண்டான் - பாரிஸ்) 'தமிழ்
இலக்கியக் களஞ்சியம்" நூலுக்கான அறிமுகவுரையாற்ற, தொடர்ந்து கவிஞர் தா. பாலகணேசன்,
'கலைஞர் காவலர்"; வண்ணை தெய்வம், ஊடகவியலாளர்களான கே. பி. லோகதாஸ், மாணிக் நாகேஸ்,
திருமதி ரதி கோபாலசிங்கம், 'தோழர்" எஸ். சுரேந்திரன், ஏ. எஸ். ராஜா, மற்றும் திரு
எஸ். பாலச்சந்திரன், திரு சி. நேசன் - குமாரதாஸ், திரு மா. கி. கிறிஸ்ரியன்,
திருமதி மோகனா சிவதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" நூலினை, பிரதம விருந்தினர் 'கல்விச்சேவையாளர்" சி.
காராளபிள்ளை அவர்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை 'பாரதி விளையாட்டுக் கழகத்"
தலைவர் திரு எஸ். அழகன் பெற்றுக்கொண்டார்.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத் தலைவர் திரு எஸ். மதி நூல் வெளியீட்டு விழாவின்
அவசியம் குறித்தும், ஒன்றியத்தின் இலக்கியப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பேராசிரியர் ஜோன்மேரி யூலியா அவர்கள் தமதுரையில், 'இளங்கோவன் அவர்களின் சிறுகதைத்
தொகுப்பான 'இளங்கோவன் கதைகளில்" உள்ள சிறப்புக்களையெல்லாம் சுட்டிக்காட்டி,
இதுபோன்ற புத்தகங்கள் பிரெஞ்சு மக்களின் கைகளிலும் சென்றடைந்தால், எங்கள் நாட்டு
நிலைமைகளை, பிரச்சினைகளை அவர்களும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். இளங்கோவன்
அவர்கள் சம்மதம் தெரிவித்தால் அந்தச் சிறுகதைத் தொகுப்பை பிரெஞ்சு மொழியில்
மொழிபெயர்த்துத் தருவதாகத் தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் தமதுரையில்,
'இளங்கோவன் குடும்பத்தினருக்கும் தமக்கும் உள்ள நீண்டகாலத் தொடர்புகளைக்
குறிப்பிட்டு, தீவகத்தில் சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையிலும் இலக்கியத்துறையிலும்
அரசியலிலும் இந்தக் குடும்பத்தினரின் பங்களிப்பு மிகச்சிறப்பு வாய்ந்தது
எனத்தெரிவித்ததோடு, 'பல்கலை வேந்தனாக" மிளிரும் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கூறி,
'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" நூலின் சிறப்புக்களை விளக்கி, இந்நூல் ஒவ்வொரு தமிழர்
வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியது எனச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
கவிஞர் பாலகணேசன் தமதுரையில், 'இன்று நமது தேசம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.
இப்படியான சூழல்களிலும் நமது மொழியின் தொன்மைகளும் சிறப்புக்களும் அழிந்துவிடாத
வண்ணம், நமது அடுத்த சந்ததியினர் புரிந்துகொள்ளக்கூடிய விதமாக இலக்கியக்
குறிப்புகளை அழகாகத் தொகுத்து நூலாக்கியிருக்கும் துரைசிங்கம் அவர்களின் முயற்சி
பாராட்டுதலுக்குரியது என்னும் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஊடகவியலாளர் மாணிக்
நாகேஸ், நமது தேசத்தின் அவலங்களை மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டதோடு அந்த
மக்களின் துயரங்களை உலகம் தெரிந்துகொள்ளும் விதமாகவும் படைப்பாளிகளின் பேனாக்கள்
நிமிர்ந்து நிற்கவேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.
பாரிஸ் அறிவாலயம் புத்தகசாலை அதிபர் திரு. எஸ். சிவதாஸ் அவர்களின் துணைவியார்
திருமதி மோகனா, 'புகழ்பெற்ற இளங்கோவன் குடும்பத்தினர் பிறந்த புங்குடுதீவு மண்ணில்
தானும் பிறந்ததையிட்டு பெருமையடைவதாகக்கூறி இளங்கோவனை வாழ்த்திச் சென்றார். திரு.
வண்ணை தெய்வம் தமதுரையில், நடக்கும் பாராட்டுவிழாவின் அவசியத்தை விளக்கியதுடன்
இளங்கோவன் அவர்களுக்குப் பொன்னாடையும் போர்த்திக் கௌரவித்ததைத் தொடர்ந்து,
'ஜரோப்பிய கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்" சார்பாக அதன் செயலாளர் திரு. கே. பி.
லோகதாஸ் வாழ்த்துப்பா ஒன்றினை வாசித்து இளங்கோவனிடம் கையளித்தார்.
இளங்கோவன் அவர்கள் தற்சமயம் 'ரி. ஆர். ரி." தமிழ் ஒலி வானொலியில் பணிபுரிவதால்,
'ரி. ஆர். ரி." கலையகத்தைச் சேர்ந்த
ஊடகவியலாளர் பலரும் விழாவில் இளங்கோவனை வாழ்த்தி உரையாற்றினர்.
இளங்கோவன் அவர்கள் தமது ஏற்புரையில், 'பெருந்தொகைப் பணமுடிப்புக் கிடைப்பதிலும்
பார்க்க, நூலினைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தருவதற்கு, கவியரசர்
கண்ணதாசன் கவிதைகள் உட்படப் பல நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பேராசிரியர்
ஜோன்மேரி யூலியா அவர்கள் முன்வந்தமை தமக்குப் பெருமகிழ்வினைத் தருவதாகக்
குறிப்பிட்டார்.
நிறைவாக புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரும் இளங்கோவன் அவர்களுக்குப் பொன்னாடை
போர்த்திக் கௌரவித்து நன்றியுரை கூற விழா இனிது நிறைவு பெற்றது.
vtelangovan@yahoo.fr
|