| நிருத்த நிறைஞர் பட்டமளிப்பு விழா - 2010 
 - மாலினி அரவிந்தன் -
 
 
  ஒரு 
            சிறிய அசைவையும் நாம் லயத்தோடும் நயத்தோடும் முழுமனத்தோடும் 
            செயற்படுத்துகின்றபோது அது நாட்டியம் எனப்படுகின்றது. தொன்மை வாய்ந்த 
            எமது பரதக்கலை திராவிட கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குவது மட்டுமல்ல, 
            அது தனித்துவம் வாய்ந்ததுமாகும். அத்தகைய பரதநாட்டியக் கலையில் ஸ்ரீமதி 
            நிறைஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கனடா கலைமன்றத்தின் நிருத்த 
            நிறைஞர் 2010ம் ஆண்டு பட்டமளிப்புவிழா 10-10-2010;ம் ஆண்டு 
            ஞாயிற்றுக்கிழமை யோக்வூட் நூலக மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு 
            ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது 1992ம் ஆண்டு 
            ஆரம்பிக்கப்பட்ட கலைமன்றத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவாகும். 
 
  இந்த 
            விழாவிற்கு தமிழர் தகவல் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் 
            தலைமை தாங்கினார். கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களும் நடனக் கலைஞர் ஜனக் 
            கே. ஹென்றி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். தமிழ் 
            வாழ்த்து, கனடிய தேசியகீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை 
            நிகழ்ந்தது. அடுத்து கலைமன்றத்தின் அதிபர் குரு. நிறைஞ்சனா சந்துரு 
            ‘கலைகள் மனித வாழ்க்கையைப் பண்படுத்துகின்றன. எனவே கலைகளைக் கற்போம், 
            கற்றதைப் பேணிக்காப்போம். கலைகளின் மகிமை நேர்த்தி என்பன குன்றாது 
            புதியன புகுத்தி அடுத்த சந்ததியினருக்குக் கற்பிப்போம்’ என்று தனது 
            ஆரம்ப உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றிய விருந்தினர், 
            பெற்றோர் ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார். 
 
  2010ம் 
            ஆண்டுக்கான நிருத்த நிறைஞர் பட்டத்தை (Niruththaniraignar) 
            செல்வி அனுஷா ஜெயன், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர், செல்வி ஜெனித்தா 
            ரூபரஞ்சன், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன், செல்வி கௌதமி இராமநாதன் ஆகிய 
            ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர்தர டிப்ளோமா பட்டத்தை (Teachers 
            Grade) செல்வி ஹரின்யா ராஜசேகரன், 
            செல்வி கவினா சத்தியசோதி, செல்வி ஸ்ரெவ்னி அன்ரன் ஜெயபாலன், செல்வி 
            லிஸானா தர்மபாலன், செல்வி மதுமிதா சண்முகநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் 
            பெற்றுக் கொண்டனர். 
 
  நிருத்த 
            நிறைஞர் பட்டம் பெற்றவர்களான செல்வி. அனுஷா ஜெயன் அவர்களை ரொறொன்ரோ 
            கல்விச்சபையின் ஓய்வுபெற்ற பல்கலாச்சார ஆலோசகர் திரு.பொ.கனகசபாபதியின் 
            சார்பில் கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர் 
            அவர்களை அரசியல் ஆய்வாளர் திரு குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களும், 
            செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன் அவர்களை கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், 
            செல்வி மஜின்டா மகேந்திரதாஜன் அவர்களை எழுத்தாளர் குரு அரவிந்தன் 
            அவர்களும், செல்வி கௌதமி இராமநாதன் அவர்களை கவிஞர் மா. சித்திவினாயகம் 
            அவர்களும் சபையோருக்கு அறிமுகம் செய்து அவர்களது திறமைகளைப் 
            பாராட்டினார்கள். 
 மதிய இடைவேளையின் பின் கலைமன்றத்தின்; தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து 
            வரையிலான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் 
            வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலாநிதி திரு. திருமதி பாலசுந்தரம், 
            திரு. திருமதி கந்தவனம், திரு. திருமதி சித்திவினாயகம், எழுத்தாளர் 
            குரு அரவிந்தன், குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். தரம் 
            ஒன்றில் 30 மாணவர்களும், தரம் இரண்டில் 26 மாணவர்களும், தரம் மூன்றில் 
            30 மாணவர்களும், தரம் நான்கில் 12 மாணவர்களும், தரம் ஐந்தில் 31 
            மாணவர்களும் சித்தியடைந்திருந்தனர்.
 
             இந்த நிகழ்வில் ஸ்ரீமதி நிறைஞ்சனா 
            சந்துருவின் கலைமன்றம், ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனின் அமிர்தாலயா, 
            வனிதா குகேந்திரனின் கலைக்கோயில், சிந்துஜா ஜெயராஜின் சிந்து 
            கலைமன்றம், ஜலனி தயாபரனின் யாழ் நாட்டிய கலைமன்றம், கார்மிளா 
            விக்னேஸ்வரமூர்த்தியின் கலை கார்மிளாலயம், அனுசியா ஜெயனின் சந்திரசேகரா 
            நாட்டியக் கல்லூரி, நிந்துஜா நடேசனின் பரத கலைமன்றம் ஆகியவற்றின் மாணவ, 
            மாணவிகள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். இதுவரை 26 நிருத்த நிறைஞர்களும், 
            8 ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளும் கலைமன்றத்தின் பரீட்சையில் 
            சித்தியடைந்திருக்கிறார்கள். 
 பரீட்சையில் சித்திபெற்ற நாட்டிய தாரகைகளான நிருத்தநிறைஞர்களுக்கும், 
            பரதக்கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியர்களுக்கும், கலைமன்றத்து அதிபர் 
            ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவிற்கும், ஆக்கமும் ஊக்கமும் தரும் 
            பெற்றோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
 
 maliniaravinthan@hotmail.com
 |