மீள்பிரசுரம்: புதினம்.காம் (ஜனவரி
12, 2008)!
கிளிநொச்சியில் குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால ஆவணச்
சேகரிப்புக்களின் கண்காட்சி!
குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால
ஆவணச் சேகரிப்புக்கள் அடங்கிய வரலாற்றுக் கண்காட்சி இன்று கிளிநொச்சி
மத்திய கல்லூரியில் தொடங்கியுள்ளது. தமிழின்னியம் இசையுடன் இன்று சனிக்கிழமை
முற்பகல் 9:00 மணிக்கு விருந்தினர்கள் அழைத்து
வரப்பட்டனர். நிகழ்வுக்கு கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் த.குருகுலராசா தலைமை
வகித்தார். பொதுச்சுடரினை கிளிநொச்சி
"அன்னை" இல்ல இயக்குநர் அருட்தந்தை எட்மன் றெஜினோல்ட் ஏற்றினார். தமிழீழத் தேசியக்
கொடியினை "புலிகளின் குரல்" நிறுவனப்
பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஏற்றினார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின்
திருவுருவப்படத்திற்கு வணிக ஒன்றியத்தலைவர்
வெற்றியரசன் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ காவல்துறைப்
பொறுப்பாளர் இளங்கோ சுடரேற்றி, மலர்மாலை
சூட்டினார். மலேசிய வீ.தீ.சம்மந்தனின் உருவுப்படத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக்கழக
உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேன் சுடரேற்றி, மலர்மாலை
சூட்டினார்.பீ.ஜீ.மித்திரன் ஏட்டின் ஆசிரியராக இருந்த அப்பாப்பிள்ளையின் படத்திற்கு
தமிழீழ மாணவர் அமைப்புப்
பொறுப்பாளர் கண்ணன் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.
கரிபியன் தீவுகளில் தமிழ் வளர்த்த கென்றி
சிதம்பரத்தின் படத்திற்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் இரத்தினகுமார்
சுடரேற்றி,
மலர்மாலை சூட்டினார். ஆவணக் காப்பகத்தில் பணியாற்றிய 5 பேருக்கு பரிசில்கள்
வழங்கப்பட்டன. ஆவணக் கண்காட்சியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
நாடாவை வெட்டி தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்
கா.வே.பாலகுமாரன் கூறியதாவது: இத்தகைய வரலாற்றுக்
கண்காட்சி இன்றைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கண்காட்சியை பார்வையிடுவதன்
மூலம் தமிழர்களின் வரலாற்றை தற்காலத்தில் அறிந்து கொள்ளலாம். கனகரத்தினத்தின்
முயற்சி பாராட்டப்பட வேண்டியது. எல்லோரும் இக்கண்காட்சியைப் பார்த்துப் பயன்பெற
வேண்டும் என்றார் அவர்.
இளைய தலைமுறைக்கு வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ளக் கூடிய வகையில் இக்கண்காட்சி
அமைந்துள்ளது என்றார் வணிக
ஒன்றியத்தலைவர் வெற்றியரசன். நான் பாடசாலை மாணவனாக இருக்கின்ற காலத்திலேயே
கனகரத்தினம் ஜயாவின்
ஆவணக்கண்காட்சியை பார்த்திருக்கிறேன் இன்றைய சூழலில் இக்கண்காட்சி நடைபெறுவது
இன்றைய இளம் தலைமுறைக்கு பெரும் பயனைத் தரும் என்றார் அவர்.
பெருமளவில் மக்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு இக்கண்காட்சியைப் பார்வையிட்டு
வருகின்றனர். தமிழ் மக்களின் வரலாற்று ஆவணங்கள்- விடுதலைப் போராட்டத்தின் பல
நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள்- சிரித்திரன் சுந்தரின் பல ஆயிரக்கணக்கான சிரிக்கவும்
சிந்திக்கவும் வைக்கும் கருத்தோவியங்கள் ஆகிய இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நன்றி: புதினம்.காம்
http://www.puthinam.com/ |