| குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு 
  விழா
 - மணிமாலா (கனடா) -
 
 
  சென்ற 
  சனிக்கிழமை 07 - 11 - 2009 மாலை 3:30 மணியளவில் குரு அரவிந்தனின் 'நீர் மூழ்கி 
  நீரில் மூழ்கி' என்ற நூலும், 'இங்கேயும் ஒரு வெண்ணிலா' என்ற இசையோடு கலந்த 
  ஒலிவட்டும் மகாஜனக் கல்லூரி நூற்றாண்டு நினைவை முன்னிட்டுப் பழைய மாணவர்களால் 
  ரொறன்ரோவில் உள்ள இலக்கம் 
  25 
  Slan Ave, MIG
   மண்டபத்தில் வெளியிடப்பட்டன. 
  இந்த நிகழ்விற்கு மகாஜகக்கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி தலைமை 
  தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்தை மாலினி அரவிந்தனும், கனடிய தேசிய கீதத்தை 
  சாலினி மணிவண்ணனும் இசைத்தனர். தொடர்ந்து அகவணக்க நிகழ்ச்சி இடம் பெற்றது. 
  மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு நா. சாந்திநாதன் வரவேற்புரை 
  நிகழ்த்தினார். புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரியின் 
  பழைய மாணவராக இருப்பதையிட்டு மகாஜனக் கல்லூரி மட்டுமல்ல, கனடா பழைய மாணவர் சங்க 
  நிருவாகசபை அங்கத்தவராகவும் இருப்பதையிட்டு தாங்களும் பெருமைப்படுவதாகக் 
  குறிப்பிட்டு, இவரது பணி மேலும் தொடரவேண்டும் என்று வாழ்த்தி, நிகழ்ச்சிக்கு 
  வருகை தந்தோரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். 
 
  அதைத் 
  தொடர்ந்து மகாஜனக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அறிமுக 
  உரை நிகழ்த்தினார். குரு அரவிந்தனை மகாஜனக் கல்லூரி பழையமாணவர் எல்லோருக்கும் 
  நன்கு தெரியும் என்பதால் அவருக்கு இந்த மண்ணில் அறிமுகம் தேவையில்லை. இந்த நூலை 
  வாசித்து முடிக்கும் போது அன்று மாணவனாக இருக்கும்போது தான் படித்து ரசித்த 'யூ 
  ரூ புறூட்டஸ்?' என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் தனக்கு நினைவிற்கு வந்தது என்று 
  குறிப்பிட்டார். தியாகம், காதல், சோகம், பாசம், துரோகம் என்று வாசகர்களை அப்படியே 
  கதைக்குள் இழுத்துச் சென்று மெய் மறக்கச் செய்து விடுகின்றார். மகாஜன மாதாவிற்கு 
  அர்ப்பணித்திருக்கும் இந்த அரிய நூலை நீங்களும் வாசித்துப் பெருமைப்பட வேண்டும் 
  என்று தனது உரையில் குறிப்பிட்டு, குரு அரவிந்தன் தொடர்ந்தும் எழுதிக் 
  கல்லூரிக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார். 
  
   
  உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். 
  லோகேந்திரலிங்கம் தனது ஆசியுரையில் குரு அரவிந்தனின் 'உறைபனியில் உயிர் 
  துடித்தபோது' என்ற தொடர் உதயன் பத்திரிகையில் வெளிவந்தபோது பல வாசகர்களின் 
  பாராட்டையும் அந்தக் கதை பெற்றுக் கொண்டதைக் குறிப்பிட்டு, அவரது எழுத்துக்கள் 
  மட்டுமல்ல அவரது சிறந்த பண்பும் போற்றப்பட வேண்டும், இச் சந்தர்ப்பத்தில் அவரைக் 
  கௌரவிக்கும் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களை மனம் திறந்து பாராட்டவேண்டும் 
  என்றும், தன்னை ஆசியுரை வழங்குவதற்கு அழைத்ததற்காகவும் நன்றி தெரிவித்தார்.
 தொடர்ந்து வெளியீட்டுரை நிகழ்த்திய முன்னாள் மகாஜனக் கல்லூரி அதிபர், தலைவர் 
  திரு. பொ. கனகசபாபதி அவர்கள் குரு அரவிந்தன் அவர்கள் இன்று சர்வதேசப் புகழ்பெற்ற 
  ஒரு எழுத்தாளராக மாறியிருப்பதையிட்டு பெருமை கொள்வதாகவும், ஆனந்தவிகடன் பவளவிழா 
  ஆண்டு மலரில் 'நீர்மூழ்கி நீரில் மூழ்கி' என்ற கதை வெளிவந்தபோது அவரது வாசகர் 
  வட்டம் சர்வதேச ரீதியாக வியாபித்ததாகவும், உதயன் பத்திரிகையில் 'உறைபனியில் உயிர் 
  துடித்தபோது' என்ற தொடர் வெளிவந்தபோது பலரின் பாராட்டைப் பெற்றதாகவும் 
  குறிப்பிட்டார். மஹாகவி, அ.ந. கந்தசாமி,  அ.செ.முருகானந்தம், கோகிலா 
  மகேந்திரன் ஆகியோரின் வரிசையில் இன்று மகாஜனனான குரு அரவிந்தனும் இலக்கிய 
  ஆர்வலர்களால் பேசப்படுகின்றார் என்று குறிப்பிட்டு, புகலிடம் தேடிவந்த மக்கள் 
  பலவிதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு குரு அரவிந்தனின் 
  கதைகள் அந்தப் பாதிப்பில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர உதவுகின்றன என்று 
  கூறி, 'நீர் மூழ்கி நீரில் மூழ்கி' என்ற நூலை வெளியிட்டு வைத்தார்.
 
 முதற்பிரதியை கனடா பழையமாணவர் சங்கத் தலைவர் திரு . ஆர். இரவீந்திரன் பெற்றுக் 
  கொண்டார். விசேடபிரதிகளை எழுத்தாளர் நா. கணேசன் பழைய மாணவர் சங்க காப்பாளர்களான 
  ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு, எஸ். சுப்பிரமணியம், கதிர் துரைசிங்கம், வை. 
  இரஞ்சன், வி. நந்தீஸ்வரர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
   
  'நீர்மூழ்கி நீரில் மூழ்கி' என்ற நூலைப் பற்றிய 
  ஆய்வுரை நிகழ்த்திய கலாநிதி. திருமதி. கௌசல்யா சுப்ரமணியன் அவர்கள் தனது 
  ஆய்வுரையில், என்றோ எழுதப்பட்ட சிலப்பதிகாரம் எப்படி ஒரு படம் போல எங்கள் 
  கண்முன்னால் காட்சிகளாக விரிந்து நிற்கிறதோ அதேபோல குரு அரவிந்தனின் இந்த நூலும் 
  காட்சிகளாகக் கண்முன்னால் விரிந்து நிற்கின்றன. அவருடைய கதை சொல்லும் பாங்கு 
  வியக்கத்தக்கது. குரு அரவிந்தன் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட கதையம்சத்தைச் 
  சுவைபட வளர்த்துச் சென்று நிறைவு செய்யக் கூடியவர் என்பதை அவரது நாவல் உணர்த்தி 
  நிற்கின்றது. அவருடைய இந்த ஆளுமையே அவருக்கு பரந்ததொரு வாசகர் வட்டத்தை 
  ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் தன்னால் உணரமுடிகிறது என்றும், இந்த நூலை 
  வாசித்ததால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, அவரது ஏனைய நாவல்களையும் தேடித்தேடி 
  எடுத்து வாசித்ததாகவும் குறிப்பிட்டார். குரு அவவிந்தன் இன்னும் ஆழமாகச் சமுதாய 
  சிந்தனைகளில் கவனம் செலுத்தினால் அவரது எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும் என்ற 
  தனது ஆதங்கத்தையும் அப்போது வெளியிட்டார். குரு அரவிந்தனுடைய படைப்பாளுமையானது 
  எதிர்காலத்தில் தமிழ் புனைகதைத்துறைக்கு மேலும் வளம் சேர்க்கும் என்ற 
  நம்பிக்கையைத் தெரிவித்து, வாழ்த்தி விடைபெற்றார். 
 அடுத்ததாக ஓலிவட்டை வெளியிட்டு வைத்த மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் க. 
  முத்துலிங்கம் மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஒலிவட்டை குரு 
  அரவிந்தன் மகாஜன மாதாவிற்குச் சமர்ப்பித்திருப்பதையிட்டுப் பெருமைப்படுவதாகக் 
  குறிப்பிட்டார். ஏற்கனவே இவர் இசையும் கதையும் கலந்த இரண்டு ஒலிவட்டுக்களை 
  வெளியிட்டிருப்பதாகவும், இது அவருடைய மூன்றாவது ஒலிவட்டு என்பதையும் 
  தெரிவித்தார். இத்தகைய ஒலிவட்டுக்கள் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் 
  இன்றியமையாதது. வாசிப்புப் பழக்கம் அருகிக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் 
  செவிக்கு இன்பம் கொடுப்பதாக இந்த ஒலிவட்டுக்கள் அமைந்திருக்கின்றன. கேட்பதற்கு 
  மிகவும் இனிமையாக இருக்கும் இந்த ஒலிவட்டுக்கு ஒலிவடிவம் கொடுத்த முல்லையூர் 
  பாஸ்கரன் அவர்களையும், விஜே ஆனந்த் அவர்களையும் அவர் பாராட்டிப் பேசினார்.
 
 'இங்கேயும் ஒரு வெண்ணிலா' ஒலிவட்டின் முதற்பிரதியை விஜே தியாகராஜாவும், விசேட 
  பிரதிகளை ஸ்ரீரஞ்சனி விஜயேந்திரா, திரு. கே. ஜெயேந்திரன் திரு. சிவலிங்கம் 
  ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
 
 ஏற்புரை நிகழ்த்திய குரு அரவிந்தன், ஆனந்தவிகடனிலும், உதயன் பத்திரிகையிலும் 
  வெளிவந்த இந்தக் கதைகளை நூல் வடிவமாகவும், ஒலித்தட்டு வடிவமாகவும் நூற்றாண்டு 
  காணும் மகாஜன அன்னைக்குச் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார். 
  இந்த விழாவை முன்னின்று நடத்திய பழைய மாணவர்களுக்கும், காப்பாளர்களுக்கும், தமிழ் 
  வாழ்த்து, கனடிய தேசிய கீதம் இசைத்தவர்களுக்கும், சொற்பொழிவாற்றிய 
  பெரியோர்களுக்கும், விழாவிற்கு வருகைதந்த ஆர்வலர்களுக்கும், புத்தகத்தை அழகாகப் 
  பிரசுரித்த மணிமேகலை பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணனுக்கும், குறும் தட்டிற்கு ஒலி 
  வடிவம் தந்த முல்லையூர் பாஸ்கரன், விஜே ஆனந்த் ஆகியோருக்கும், மண்டபத்தைக் 
  கொடுத்துதவிய மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் 
  MIG 
  நிறுவனத்தினருக்கும், 
  எல்லாவிதத்திலும் ஒத்துழைப்புத் தரும் குடும்பத்தினருக்கும். நன்றி தெரிவித்தார்.
 
 இறுதியாக நன்றியுரையை திரு எஸ். கௌரிபாலன் தெரிவித்தார். குறுகிய கால அழைப்பை 
  ஏற்று வருகை தந்த அதிபர், ஆசிரியர், பழைய மாணவர்கள், காப்பாளர்கள், 
  செற்பொழிவாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 
 நூல் வெளியீட்டு விழா இனிதே முடிவுற்றது.
 |