பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட்டுக்கு வாழ்நாள் தமிழ்
இலக்கிய சாதனை விருது!
'புனைவுக்கு' சோ.தர்மனின் 'கூகை'!
அபுனைவுக்கு 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி!
பேர்க்லி
பல்கலைக் கழகத்தின் தமிழ் துறைத் தலைவரும் பேராசிரியருமான திரு ஜோர்ஜ் எல்
ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. இவருடைய கடும் முயற்சியினால்தான்
செப்டம்பர் 2004 ல் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்தது.
பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் நிறுவப்பட்டதற்கும் இவரே மூல
காரணர். தமிழின் மேன்மையையும், தொன்மையையும் உலகத்துக்கு உணர்த்திய திரு
ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருதான 'இயல்
விருது' கேடயமும், 1500 டொலர் பணப் பரிசும் வழக்கப்பட்டது.
'புனைவு'க்கான விருது பெறும் சோ.தர்மனின்
கூகை!
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறுகதை,
நாவல் என எழுதிக்கொண்டிருக்கும் சோ. தர்மன் கதா விருது, இலக்கியச் சிந்தனை
விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். இது வரை இரண்டு நாவல்களும், ஐந்து
சிறுகதைத் தொகுப்புகளும் ஓர் ஆய்வு நூலும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவருடைய சிறுகதைகள் சிலவற்றை சாகித்திய அகாதெமி ஆங்கிலத்திலும்,
இந்தியிலும் இன்னும் வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்திருக்கிறது. பஞ்சாலைத்
தொழிலாளியாகிய இவர் இருபத்தியைந்து வருடங்கள் பணியாற்றிய பிறகு தற்போது
ஓய்வில் முழுநேர எழுத்து வேலையில் கோவில் பட்டியில் வசித்து வருகிறார்.
2005ம் ஆண்டின் சிறந்த நாவலாக புனைவு
இலக்கியப் பிரிவில் 'கூகை' தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பரிசாக
500 கனடிய டொலர்கள் வழங்கப்படுகிறது.
க்ரியாவின்
'தற்காலத் தமிழ் அகராதி'க்கு அபுனைவுக்கான
விருது!
க்ரியா ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும்
எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சேவையில் ஈடுபட்டு
வந்தவர். கசடதபற என்னும் தீவிர இலக்கிய பத்திரிகையை தொடங்கிய முன்னோடிகளில்
ஒருவர். 'சமகால தமிழில் மரபுச் சொற்களும், சொற்றொடர்களும்' என்ற தமிழ்-
தமிழ் - ஆங்கில அகராதியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் கூத்து
பட்டறையில் ஆழமான அக்கறை காட்டியவர். ஒரு லட்சம் நூல்களுக்கு மேல் அடங்கிய
ரோஜா முத்தையாச் செட்டியார் ஆய்வு நூலகத்தை சிகாகோ பல்கலைக் கழகத்தின்
துணையுடன் உருவாக்கியவர்.
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' 2005ம் ஆண்டின் சிறந்த நூலாக 'அபுனைவு'
இலக்கியப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பரிசாக 500
கனடிய டொலர்கள் வழங்கப்படுகிறது.
- அமுதன், கனடா-