| கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் 
            நிகழ்வு – 2010  - மாலினி 
            அரவிந்தன் - 
  
            பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு 
            – 2010 பலமணவ செல்வங்கள் கலந்து கொண்டு தங்கள் பல்வேறு வகைப்பட்ட 
            திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக ரொறன்ரோவில் அமைந்திருந்தது. மே 
            மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 
            500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை 
            மாலை ஆறு மணியளவில் ஜ+னியர் சிங்கர் கனடாவின் இரண்டாவது சுற்று 
            நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது சுற்றில் தென்னிந்திய திரைப்படப்பாடகி 
            மதுமிதா கலந்து சிறப்பித்திருந்தார். இரண்டாவது சுற்றில் தகுதிபெற்ற 
            இருபது இளம் பாடகர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 
            சின்னத்திரையில் நடக்கும் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை 
            ரொறன்ரோ எவரெஸ்ட் மண்டபத்தில் கூடியிருந்த இசைப்பிரியர்கள் பெற்றுக் 
            கொண்டனர்.
 விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மாணவர்களோடு 1996ம் ஆண்டு 
            ஆரம்பிக்கப்பட்ட பாரதி கலைக்கோயில் இன்று வளர்ந்து கிளைபரப்பி இசைத் 
            தாகத்தைத் தீர்க்கும் கற்பகதருவாய் நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு திரு. 
            எஸ். மதிவாசனும் அவரது மனைவியான அமரர் பவதாரணி மதிவாசனுமே முக்கிய 
            காரணமாக இருந்தனர். கனடாவில் மட்டுமல்ல, இலங்கை, இந்தியா, ஐரோப்பிய 
            நாடுகள் என்று சமீபத்தில் உலகெல்லாம் அவர்கள் இசைப்பயணம் மேற்கொண்டு 
            தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததைப் பலரும் அறிந்ததே. ‘இசைத்தாய்’ 
            என்று மாணவர்களால் பாராட்டப்பட்ட பாரதி கலைக் கோயில் அதிபர் 
            பவதாரணியின் திடீர் மறைவு மாணவர்களுக்கும், இசைப்பிரியர்களுக்குப் 
            பெரியதொரு இழப்பாகும்.
 
             தமிழ், வாய்ப்பாட்டு, வீணை, 
            மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தபேலா, ட்றம்ஸ், கிட்றார், கீபோர்ட் 
            போன்ற நுண்கலைத் துறைகளில் மாணவர்கள் கற்ற நெறிகளில் இருந்து திறன் 
            காணல் நிகழ்வு இடம் பெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் 
            ரொறன்ரோவைச் சேர்ந்த பலகல்விமான்களும், பல்வேறு துறைசார் கலைஞர்களும் 
            கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான 
            நிகழ்வில் கவிஞர் வி. கந்தவனம் கலந்து கொண்டார். சனிக்கிழமை காலை நடந்த 
            நிகழ்வில் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம், 
            சிந்தனைப்பூக்கள் திரு. திருமதி பத்மநாதன், வைத்திய கலாநிதி லம்போதரன் 
            ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் திரு. 
            திருமதி குரு அரவிந்தன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு 
            விழாவைச் சிறப்பித்தனர். ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்வில் 
            மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ. கனகசபாபதி, கனடா தமிழ் 
            எழுத்தாளர் இணையத் தலைவர் த. சிவபாலு, நாடக நெறியாளர் சாந்திநாதன், 
            மூத்த கலைஞரும் நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து 
            கொண்டனர். பாரதி கலைக்கோயில் நிறுவனர் திரு.எஸ்.மதிவாசனின் 
            வழிநடத்தலில் திரு. கதிர் துரைசிங்கம் நிகழ்ச்சிகளைக் கொண்டு 
            நடத்தினார். இவர்களுடன் ஏனைய தன்னார்வத் தொண்டர்களும், மாணவர்களும், 
            பெற்றோர்களும் விழா சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்டனர். இந்த 
            நிகழ்வில் திரு திருமதி ஜெயானந்தசோதி, திரு. திருமதி காந்தி ஆகியோரும் 
            கௌரவிக்கப்பட்டனர்.
 ராகுணா, சுபவீன், சாலினி, நவீன், சரிகா, ஆதவன், அபிஷ்கா, சாம்பவி, 
            அஜந்தன், மயூரதி, தக்ஷிகா, சாஜித்தியன், சுரபி, பிரம்யா, துளசி, 
            பிரணவன், மாதங்கி, ஜெசிகா, ஆதித்தியன், அன்யுகா, பாரதி, அபிநயா ஆகியோர் 
            யூனியசிங்கர் கனடா நிகழ்வில் கலந்து, தங்கள் திறமையை வெளிக்காட்டிச் 
            சிறப்பித்தனர். ஒவ்வொரு பாடகரும் தங்கள் திறமையை வெளிக்காட்டியபோது, 
            மண்டபம் நிறைந்த கரவோசையைப் பெற்றுக் கொண்டனர்.
 
 வருடாவருடம் நடக்கும் இத்தகைய திறன் காணல் நிகழ்வுகள் மூலம் பாரதி 
            கலைக் கோயில் நிறுவுனர் அமரர் திருமதி பவதாரணி மதிவாசனின் கனவுகள் அக் 
            கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நினைக்க 
            எமக்கும் பெருமையாக இருக்கிறது. இது போன்ற இசைக் கல்லூரிகள் 
            தொடர்ந்தும் புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாகச் சேவையாற்றி, எனது மொழி, 
            பண்பாடு, கலாச்சாரம், இசை, நுண்கலை, போன்றவற்றைப் பேணிக்காக்க வேண்டும் 
            என்று மனதார வாழ்த்துகின்றோம்.
 
 maliniaravinthan@hotmail.com
 |