கனடா: நட்சத்திர இரவு – 2007 
              -  குரு அரவிந்தன் -
              
              
              பாரதி கலைக்கோயில் பெருமையடன் 
              வழங்கிய மூன்றாவது நட்சத்திர இரவு – 2007, 18-08-2007 சனிக்கிழமை 
              மாலை 6.00 மணியளவில் கனடா பிராம்டனில் உள்ள பவரேட்சென்ரரில் மிகவும் 
              கோலாகலமாக நடைபெற்றது. பிரபல கலைஞரும், நகைச்சுவை எழுத்தாளருமான 
              கதிர் துரைசிங்கம் அவர்கள், இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளராகக் 
              கடமையாற்றினார். முதலில் நடந்த பாரம்பரிய நிகழ்வான மங்கல 
              விளக்கேற்றும் வைபவத்தில் கமலாசினி சந்திரசாகரா, தையல்நாயகி 
              ராமநாதன், நாகேஸ்வரி சேனாதிராஜா ஆகியோர் பங்குபற்றினர். தொடர்ந்து 
              மாலினி பரராசசிங்கமும் அவரது மாணவிகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு 
              நடனமாடி, வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைத்தனர். 
              பாரதியாகப் பாத்திரமேற்று முறுக்கு மீசையோடு வந்த மாலினி 
              பரராசசிங்கத்தின் அபிநய, முகபாவம் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது 
              மாணவிகளும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அந்த மேடையில் 
              நிரூபித்துக் காட்டினர். 
              
              அடுத்து தமிழ்வாழ்த்தும், கனடிய தேசிய கீதமும் இடம் பெற்றன. அபிஷா, 
              வினுஷா, யாழினி, சாளினி ஆகியோர் இசைத்ததைத் தொடர்ந்து, தாயகப் 
              போராட்டத்தில் எம்மினம் காக்கத் தம்முயிர் துறந்தவர்களுக்காக ஒரு 
              நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
              
              தென்னிந்திய இசைக்கலைஞர்களுக்கு இணையாக, இசைக்கும் பாரதி ஆட்ஸ் 
              வழங்கிய மிகப்பிரமாண்டமான இசை மழையில் நனைய ஆயிரக்கணக்கானோர் 
              மண்டபத்தில் காத்திருக்க, சுமார் நாற்பத்திநாலு இளம் 
              இசைக்கலைஞர்களும், பாடகர்களும் மேளதாளத்துடன் மேடைக்கு அழைத்து 
              வரப்பட்டனர். பார்வையாளர் எழுந்து நின்று கரகோஷம் செய்து அவர்களை 
              வரவேற்றது உணர்வு பூர்வமான நிகழ்வாக இருந்தது மட்டுமல்ல, வருங்கால 
              இசை மேதைகளை அலட்சியம் செய்யாது, அடுத்த தலைமுறையான எம்மவரையும் 
              கௌரவிக்கும் பாரதி கலைக்கேயிலின் அந்த நற்பண்பு பார்வையாளர்களைப் 
              பெருமைப்படவும் வைத்தது. 
              
              எஸ்.ரி.செந்தில்நாதன், கலா கார்த்திக், இலங்கதாஸ் பத்மநாதன் ஆகியோர் 
              மேடை நிகழ்ச்சிகளை மிகவும் விறுவிறுப்பாகவும், பார்வையாளர்களை 
              நன்றாகக் கவரக் கூடியதாகவும் கொண்டு நடத்தினார்கள். சிறந்த கலைஞரும் 
              பாரதி கலைக்கோயில் நிர்வாகியுமான திரு.எஸ்.மதிவாசன் வரவேற்புரை 
              நிகழ்த்தி எல்லோரையும் மனதார வாழ்த்தி, வரவேற்றார். 
              
              நட்சத்திரங்கள் பிரகாசமாய் ஜொலிப்பதை இரவில்தான் நன்றாகப் பார்க்க 
              முடியும் என்பதாலோ என்னவோ, ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த இசைமழை, 
              இனிய அந்த மாலைப்பொழுதில், புதுமைக்கவி பாரதியின் காக்கைச்சிறகினிலே 
              நந்தலாலா என்ற பிரபாவின் பாடலோடு ஆரம்பமானது. தொடர்ந்து பார்த்தி, 
              ராதாவின் மடைதிறந்து என்ற பாடலும், நிர்ஜானியின் கண்ணாளனே என்ற 
              பாடலும் இடம் பெற்றன. முன்பேவா அன்பேவா என்ற பாடலை அனுஷாவும் 
              பிரபாவும் பாடினார்கள். இவர்களோடு இணைந்து பாடிய ரங்கோ ரங்கோலி என்ற 
              கோரசும் நன்றாகவே இருந்தது. அடுத்து ராகவன் சொந்தங்களை வாழ்த்தி 
              சிந்து பாடினார். இதுவரை இதமான தென்றலோடு மெல்லத் தூறிக்கொண்டிருந்த 
              இசைமழை டுசியின் ஆட்தோட்ட பூபதி நானடா பாடலோடு சற்றுநேரம் சூறாவளியாக 
              மாறி, பழைய பாடலான தெய்வேந்திரன், ஹேமதயானியின் சந்திரோதயம் ஒரு 
              பெண்ணானதோ என்ற பாடலோடு சற்று ஓய்ந்தது. 
              
              அடுத்து ராதா, பிரபாவின் உனக்குள் நானே என்ற பாடல் இடம் பெற்றது. 
              தொடர்ந்து ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா என்ற குரு படத்துப்பாடலை 
              அனுஷாவோடு, பார்த்தி, பிரபாவும் இணைந்து பாடினார்கள். எனக்குப் 
              பிடித்த பாடலில் இதுவும் ஒன்று என்பதால், அந்தப் பாடலோடு ஒன்றிபோய் 
              நீண்ட நேரம் கரகோஷம் செய்தது மட்டுமல்ல, வீடு திரும்பிய பின்பும் 
              அவ்வப்போது அந்தப் பாடலை முணுமுணுக்கவும் வைத்தது. அதைத் தொடர்ந்து 
              சின்னக்குயில் பாரதியின் நிலா காய்கிறது என்ற இனிய பாடல் சபையோரை 
              வியப்பிலாழ்த்தியது மட்டுமல்ல, எல்லோரையம் நீண்டநேரம் கரகோஷமும் 
              செய்யவைத்தது. ஆங்காங்கே சபையில் இருந்து இன்னுமொரு தடவை பாடுங்கள் 
              என்ற குரல்களையும் கேட்கட்கூடியதாக இருந்தது. பாரதியும் அவரது 
              குழுவைச் சேர்ந்த மாதங்கி,அபிஷா,யாழினி,சாளினி ஆகியோரும் சேர்ந்து 
              பாடிய அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலும் சிறப்பாக 
              அமைந்தது. 
              
              கர்நாடக இசையோடு சேர்ந்த கண்டநாள் முதலாய் என்ற பாடலை லசாந்தியும், 
              ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் என்ற பாடலை வினுஷாவும், எங்கே 
              எனது கவிதை என்ற பாடலை சங்கீதாவும், அச்சம் என்பது மடமையடா என்ற 
              பாடலை ஆறுமுகம் கதிர்காமநாதனும், பூப்பூக்கும் ஓசை என்ற பாடலை 
              ஹேமதயானியும் பாடினார்கள். அடுத்ததாக வந்த நாவலன், சீ.எஸ்.ஜெயராமன் 
              பாடிய விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலைப் பெண்குரலிலும் பாடி, 
              அனைவரின் பாராட்டையும் பெற்றார். தபேலா வாத்தியத்தில் சிறந்த நாவலனை, 
              பல பார்வையாளர்களுக்கு முன்னால் சிறந்த பாடகனாக்கிக்காட்டிய பெருமை 
              பாரதி கலைக்கோயிலையே சேரும். அடுத்து ராகவன் ராதா இனிமை நிறைந்த 
              உலகம் என்ற பாடலைப் பாடினார்கள். சென்ற வருடம் சட்டத்தரணி மனுவல் 
              ஜேசுதாசனை மேடையில் அறிமுகப்படுத்திய பாரதி கலைக்கோயில், இந்த வருடம் 
              அன்ரன்,சித்திராபிலிக்ஸ் தம்பதியினரை அறிமுகப் படுத்தி இருந்தார்கள். 
              அவர்கள் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பழையபாடலை மிகவும் சிறப்பாகப்பாடி, 
              ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்கள். அனுசியா பிரபாவோடு 
              இணைந்து மின்சாரபூவே என்ற பாடலையும்பாடி சபையோரை மகிழ்ச்சிக் கடலில் 
              மூழ்கடித்தார். மின்சாரப்பூவே பாடலின் இடையே பிரசாந்தின் தபேலா, 
              ரமேஸின் மிருதங்கம் இரண்டும் சேர்ந்த தனியாவர்த்தனம் மிகப்பிரமாதம். 
              அரங்கு நிறைந்த பாராட்டுக் கிடைத்தது. 
              
              தொடர்ந்து பரிசளிப்பும், பாராட்டும் நடைபெற்றன. பாரதி கலைக்கோயிலின் 
              சார்பில் இருபது மாணவர்கள், தமிழ் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களால் 
              தங்கப்பதக்கம் அணிவித்தும், சான்றிதழ் கொடுத்தும் பாராட்டப்பட்டனர். 
              கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்கள் 
              தெரிந்தெடுக்கப்பட்டு, அரங்கத்தில் இப்படிப் பாராட்டப்படுகிறார்கள் 
              என்பது இசை ஆர்வலர்களுக்குத் தெரிந்ததே! 
              
              பாராட்டு நிகழ்வைத் தொடர்ந்து, பாமினி சதீஸின் உருவாக்கத்தில் ஒன்பது 
              வயதிற்கும் குறைந்த பிள்ளைகளின் நடனம் இடம்பெற்றது. இதில் ரவினா 
              சதீஸ், அஞ்சனா பிரதீபன், அபிரா இந்துகமாரன், நிராகுலன் புவனேந்திரன் 
              ஆகிய மழலைப் பட்டாளம் பங்கு பற்றினர். தொடர்ந்து திரை இசை நடனம் இடம் 
              பெற்றது. இதில் யாழினி லோகேந்திரலிங்கம், ஜனனி லோகேந்திரலிங்கம், 
              நிர்ஜானி கருணாகரன், நிஷா சுதந்திரகரன், சரணியா மீனாட்சி 
              சுந்தரலிங்கம் ஆகியோர் பங்கு பற்றினர். இதுவரை இவர்களின் 
              பரதநாட்டியத்தையே பார்த்துப் பழகிப்போன ரசிகர்களின் கண்களுக்கு, இந்த 
              நடனம் வித்தியாசமான படைப்பாக இருந்தது. மொத்தத்தில் பார்வையாளர்களை 
              இருக்கையை விட்டு அசையவிடாமல் இருத்தி வைத்திருந்த நிகழ்ச்சி இது.
              
              
              இடைவேளையைத் தொடர்ந்து. பொத்திவைச்ச மல்லிகை என்ற பாடலை சுகாசினி, 
              ராகவனும், வாஜி வாஜி சிவாஜி பாடலை நிர்ஜானி பார்த்தியும், யம்மாடி 
              ஆத்தாடி பாடலை ராதா டுசியும், வாராய் நீவாராய் என்ற பழைய பாடலை 
              ஸ்ரீமுருகன் அனுஷாவும், ஏன் எனக்கு மயக்கம் என்ற பாடலை நிர்ஜானியும், 
              நிலவே வந்திடு என்ற பாடலை பார்த்தி பிரபாவும், மயக்கம் என்ன என்ற 
              வசந்தமாளிகைப் பாடலை தெய்வேந்திரன் சங்கீதாவம், ஐயாரெட்டு 
              நாட்டுக்கட்டை என்ற பாடலை நிர்ஜானி பார்த்தியும், நன்னாரே நன்னாரே 
              பாடலை அனுஷாவும், இலங்கை என்பது என்ற ஈழத்துப்பாடலை மொன்றியல் 
              பாபுவும், சகானா சாரல் என்ற சிவாஜி பாடலை அனுஷா பிரபாவும், பல்லேக்கா 
              பல்லேக்கா என்ற சிவாஜி பாடலை ராகவன் ராதாவும், இறுதியாக தமிழா தமிழா 
              என்ற எழுச்சிப்பாடலை பிரபா குழுவினரும் சேர்ந்துபாடி சபையோரை 
              மகிழ்வித்தனர். 
              
              சின்னவயதில் தனித்தவில் தட்சனாமூர்த்தியின் தவில் வாசிப்பைக் 
              கோயில்களில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதே போன்ற உணர்வை நட்சத்திர 
              இரவில் தனித்து ட்ரம் வாசித்த பிரவீன் மதிவாசனும் 
              ஏற்படுத்தியிருந்தார். இசை உலகில் நல்லதொரு எதிர்காலம் அவருக்குக் 
              காத்திருக்கிறது. பாராட்டுக்கள். எல்லாத் துறைகளிலும் முன்னேறிவரும் 
              தமிழ் பெண்கள் ஏன் இத்துறையில் முயற்சி செய்யவில்லை என்ற கேள்வியும் 
              எனக்குள் அப்போது எழுந்தது! 
              
              இளம் சந்ததியினருக்கு மேடையில் சந்தர்ப்பம் கொடுத்து, இசைத்துறையில் 
              கனடிய தமிழ்க் குழந்தைகள் எந்தவித தயக்கமும் இல்லாமல், துணிந்து 
              காலடி எடுத்து வைப்பதற்குச் சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் பாரதி 
              கலைக்கோயில் மட்டுமல்ல, இளம் கலைஞர்கள் இசைத்துறையின் சிகரத்தைத் 
              தொடுவதற்கு, தமது பொன்னான நேரத்தைச் செலவிட்டு, கடுமையான உழைக்கும் 
              அதன் நிர்வாகிகளான எஸ்.மதிவாசன், திருமதி பவதாரனி மதிவாசன் ஆகியோரும் 
              பாராட்டப்பட வேண்டியவர்கள். அரங்கமேடையில் இவர்களைப் பாராட்டிய 
              ஏஜியன்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜிம் கரியானிஸ் கனடாவிலே 
              முதற்தரமான இசைக்கல்லூரி இதுதான் என்று குறிப்பிட்டபோது, பெற்றோர் 
              கரகோஷம் செய்து வரவேற்றதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
              பயிற்சியில் மட்டுமல்ல, ஒழுக்கம், பண்பாடு பேணுவதிலும் பாரதி 
              கலைக்கோயில் முன்நிற்கிறது என்றால் மிகையாகாது. இந்தவிழா சிறப்பாக 
              நடைபெற பொருளாதார உதவி செய்தவர்களுக்கும், தொண்டர்களாக மிகவும் 
              சிறப்பாகக் கடமையாற்றியவர்களுக்கும், இந்த முயற்சியில் 
              குழந்தைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கும் பெற்றோருக்கும் 
              கட்டாயம் நன்றி கூறவேண்டும். இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு 
              இல்லாமலே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உள்ளுர் கலைஞர்களால் உள்வாங்க 
              முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மதிவாசன் தம்பதியினருக்குப் 
              பாராட்டுக்கள். மீண்டும் நட்சத்திர இரவு – 2008ல் பிரகாசிக்கும்வரை, 
              அந்த இசை மழையில் நனைந்து மகிழ, அந்த நாளுக்காக நாங்களும் ஆவலோடு 
              காத்திருப்போம். 
              
              kuruaravinthan@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




