பிரான்சு
கம்பன் கழக பொங்கல் விழா, முனைவர் சி.
இலக்குவனார் நூற்றாண்டு விழா!
-ஆல்பர்ட்,அமெரிக்கா
பிரான்சு
கம்பன் கழகத்தின் பொங்கல் விழா ,
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர்
சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
14.02.2010 (திருவள்ளுவர் ஆண்டு 2041 -
கும்பம்- மாசித் திங்கள் 2-ஆம் நாள்) பரி
நகரின் புற நகராம் கார்ழ் லே கொனெசு
(Garges-lès-Gonesse) நகரில் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டன.
திரு மார்க் தம்பி, திருமதி தனசெல்வி
மார்க் தம்பி (இருவருமே பேரா. பெஞ்சமின்
லெபோவின் மாணாக்கர்கள்) மங்கல விளக்குக்கு
ஓளி ஊட்டினர். பிரான்சு கம்பன் கழகத்தின்
நிறுவனரும் தலைவருமான கவிஞர் பாரதிதாசன்
இறை வணக்கம், தமிழ்த் தாய் வாழ்த்து
பாடினார். சிறப்பு விருந்தினர்கள்
திருமிகு பேரா.ப.தசரதன், பரி நகரில் உள்ள
இந்தியத் தூதரக அதிகாரி திருமிகு
நாராயணன், கார்ழ் லே கொனெசு நகரின் நகரத்
தந்தை திருமிகு Maurice LEFEBVRE மேடையில்
அமர்ந்தனர். . பிரான்சு கம்பன் கழகத்தின்
பிரஞ்சுப் பிரிவுச் செயலர் செவாலியே
சிமோன் யூபர்ட் எழுதி அனுப்பிய வரவேற்பு
உரையைக் கம்பன் கழகப் பொருளாளர் திருமிகு
தணிகா சமரசம் படித்து அனைவரையும்
வரவேற்றார். (செவாலியே சிமோன் பரி நகரில்
நடந்த வேறொரு கூட்டத்தில் கலந்துகொண்டு
இங்கு வரத் தாமதம் ஆகிவிட்டது).
தலைமை
தாங்கிய பேரா.ப.தசரதன், நகரத் தந்தையையும்
இந்தியத் தூதரக அதிகாரியையும் பிரஞ்சு
மொழியில் அறிமுகம் செய்தார். பிறகு
பொங்கலைப் பற்றிப் பிரஞ்சிலும் தமிழிலும்
தலைமை உரையாற்றினார். பின், நகரத் தந்தை
கழகத்தை வாழ்த்திப் பிரஞ்சு மொழியில்
பேசினார். அம்மொழி அறியாதோர்
புரிந்துகொள்வதற்காக அதனை மொழி
பெயர்த்தவர் பேரா.ப.தசரதன். நகரத்
தந்தைக்குப் பொன்னாடை போர்த்திப்
பரிசளித்து மரியாதை செய்தார்கள். பிறகு
அவர் விடை பெற்றுச் சென்றார். விழா
தொடர்ந்தது.
அதன்பின் தமிழிசை பொழியத் தொடங்கியது
வசீகரக் குரல் எடுத்து வண்ணத் தமிழ்ப்
.பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் திருமதி
இராதா சிரீதரன். நூற்றாண்டு விழா நாயகர்
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர்
சி. இலக்குவனார் 'புலவரில் சிறந்தவர் '
என்று பாராட்டி எடுப்பு, தொடுப்பு,
முடிப்பு எனச் சிறப்பாக இசைப் பாடல் எழுதி
அனுப்பி இருந்தார் புதுவைக் கவிஞர் தே.
சனார்த்தனன் . இவர் கவிஞர்
பாரதிதாசனுக்குத் தந்தையார். இப்பாடலைத்
திருமதி இராதா பாடிய இனிமையைக் கேட்டு
அவையே கிறங்கிப் போனது! மேலும்,
"திருக்குறள் தெளிவுரை திறம்பட வடித்தார்
- உயர்
தென்மொழி ஆய்வுகள் தேனெனக் கொடுத்தார்!
நெருக்கற நுழைந்திடும் இந்தியைத்
தடுத்தார்! - நம்
நிலத்திடைச செந்தமிழ் நிலவிடத்
துடித்தார்!
என்ற நாலு வரிகளில் பேரா. இலக்குவனாரின்
வாழ்க்கையையே கேட்க முடிந்ததது. சிறப்பாக
இசை விருந்து அளித்த திருமதி இராதா
சிரீதரனுக்குப் பொறுப்பாகப் பொன்னாடை
கம்பன் கழகத்தின் சார்பாகப் போர்த்தியவர்
திருமதி ஜெசிந்தா சந்தானா.
அடுத்துப் பேசிய இந்தியத் தூதரக அதிகாரி
திருமிகு நாராயணன் அத்தூதரகத்தின்
வாழ்த்துகளைத் தெரிவித்தபின் FEDEARTION
DES ASSOCIATIONS FRANCO-INDIENNES (FAFI)
என்ற அமைப்புக்குத் தூதரகம புத்துயிர்
ஊட்ட விரும்புவதை விளக்கி மக்களின்
கருத்துகளை எழுதி அனுப்பும்படிக்
கேட்டுக்கொண்டார். அவருக்குப் பொன்னாடை
அணிவித்தவர் கழகப் பொருளாளர் திருமிகு
தணிகா சமரசம்.
தமிழ்ப் பொங்கல்....
இந்த நாட்டில் வாழும் முது பெரும கவிஞர்
கவிச்சித்தர் கண. கபிலனார். இயேசு
பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக்கி 'இயேசு
காவியம்' என்ற மிகச் சிறப்பான கவிதை
நூலைத் தந்தவர். கவிதை நூல்கள் பலவற்றைப்
படைத்தவர்.. அவர் தமிழ்ப் பொங்கல் என்ற
தலைப்பில் தம் கவிதையை வழக்கம் போல்
மடமடவென மனப் பாடமாகவே பொழிந்து
தள்ளினார். பலவேறு குறள் பாக்கள் அதில்
இடம் பெற்றன. சிவன் கோவில் சிவனருட்
செல்வர் திருமிகு சுகுமாரன் முருகையன்
கவிச்சித்தர் கண. கபிலனாருக்குப் பொன்னாடை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
போட்டிகள்...
குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி,
பெரியவர்களுக்கான கோலப் போட்டி முடிவுகள்
வெளியிடப்பட்டன. கோலப் போட்டியில் முதல்
பரிசை வென்ற திருமதி பூங்குழலி
பெருமாளுக்கு இந்தியத் தூதரக அதிகாரி
திருமிகு நாராயணன் பொன்னாடையும் பரிசும்
அளித்தார். இரண்டாம் பரிசு பெற்றவர்
திருமதி சரோசா தேவராசு. அவருக்குப்
பொன்னாடை, பரிசு அளித்தவர் பேரா. ப.
தசரதன்.
விழா மலர்....
'செந்தமிழ்க்
காவலர்' என்ற தலைப்பில் விழா நாயகர்
பற்றிச் சிறப்புரை ஆற்றத் தென்றலாய்
வந்தார் பேரா. பெஞ்சமின் லெபோ அவர்கள்.
தமக்கே உள்ள பைந்தமிழை இழைத்துப் பகை
இல்லா நகைச் சுவையைக் குழைத்துக்
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க்
கேளாரும் வேட்பப் பேசிய பேச்சால் , அருவி
எனப் பெருகி வந்த அருந்தமிழ்ச சொல்
வீச்சால் அவையைக் கவர்ந்தார். புறநானூறு
ஏன் படிக்க வேண்டும் என்பதை விளக்கிய
அவர், அதே காரணங்களுக்காகவே செந்தமிழ்க்
காவலர், இலக்கணச் செம்மல் பேராசிரியர்,
முனைவர் சி. இலக்குவனார் வாழ்க்கை
பற்றியும் தமிழர்கள்
தெரிந்துகொள்ளவேண்டும் என
வலியுறுத்தினார். இலக்குவனார் ஆற்றிய
அரும் பணிகளைப் பற்றித் தென்றலாய்ப்
பேசினார் ; 'செந்தமிழ்க் காவலர்தம் போர்ப்
பண்புகளை விளக்குகையில் புயலாக வீசினார்.
அருமை அருமை அவர் உரை எனப் பெருமை பேசினர்
அவையோர் விழா முடிந்த பிறகும் கூட!
அவருக்கு,சிவனருட் செல்வர் திரு சுகுமாரன்
முருகையன் பொன்னாடை அணிவித்தார்.
பேரா. பெஞ்சமின் லெபோ. அவர்களைச்
சிறப்பாசிரியராகவும் கவிஞர் பாரதிதாசனை
ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கம்பன்
இலக்கிய, இலக்கணத் திங்கள் இதழ்
செந்தமிழ்க் காவலர், இலக்கணச் செம்மல்
பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார்
நூற்றாண்டு விழா மலர் ஒன்றை வெளியிட
ஏற்பாடு செய்து இருந்தது. அந்த மலரை
கம்பன் கழகச செயற்குழு உறுப்பினர்
திருமிகு அசோகன் (இவரும் பேரா. பெஞ்சமின்
லெபோ அவர்களின் மாணவரே) வெளியிட,
திருவாளர்கள் சிவப்பிரகாசம் , இலங்கை
வேந்தன் பாண்டுரங்கன், ஆதி ஞானவேல்,
குமார் அமல்ராசு, முசாவித் முகமத்,
செயசீலன்... பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 'தைமகள் வருகவே, தமிழ்
நலம் தருகவே' என்ற தலைப்பில் கவிமலர்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கவி மலர்களை
அளித்தவர்கள் : திருமதிகள் சிமோன்
இராசேசுவரி, லினோதினி சண்முகநாதன், சரோசா
தேவராசு, பூங்குழலி பெருமாள், அருணா
செல்வம், திருவாளர்கள் பாரிசு
பார்த்தசாரதி, பாமல்லன், தேவராசு ஆகியோர்.
செல்வி சார நாயகி கோபாலக்கிருட்டிணன் பரத
நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. கம்பன்
கழகத்தின் பிரஞ்சுப் பிரிவுச் செயலர்
செவாலியே சிமோன் யூபர்ட், செல்வி சார
நாயகி கோபாலக்கிருட்டிணனுக்குப் பொன்னாடை
அணிவித்தார்.
பட்டி மன்றம்.....
பின்னர் பிரான்சு கம்பன் கழகத்தின்
நிறுவனரும் தலைவருமான கவிஞர் பாரதிதாசன்
நடுவராக அமரப் பட்டி மன்றம் தொடங்கியது.
தலைப்பு : "தமிழர், தமிழ்ப் பண்பாட்டை
வளர்க்கின்றார்களா ? குலைகின்றார்களா?"
வளர்க்கின்றார்கள் என்ற அணியில்
திருமதிகள் சிமோன் இராசேசுவரி, சரோசா
தேவராசு, எலிசபெத் அமல்ராசு வாதிட்டனர்.
குலைக்கின்றார்கள் என்ற அணியில்
எதிர்வாதம் செய்தவர்கள் : திருமதிகள்
லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால்,
பூங்குழலி பெருமாள். நடுவர் கவிஞர்
பாரதிதாசன், பண்பாடு என்றால் என்ன,
தமிழ்ப் பண்பாடு என்பது என்ன என்று நன்கு
விளக்கினார். பின் இரு தரப்பும் சூடும்
சுறுசுறுப்புமாக நகைச் சுவை கலந்து
வாதிட்டார்கள்.
இறுதியாக, சில பல காரணங்களைக் காட்டி,
தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டை
வளர்க்கத்தான் செய்கிறார்கள் என்று
தீர்ப்பு கூறிக் கைத் தட்டல்களை அள்ளிச்
சென்றார் கவிஞர் பாரதிதாசன்.
கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா
சமரசம் நன்றி நவில விழா நிறைவெய்தியது.
இறுதி நிகழ்ச்சியாகக் குலுக்கல்
நடைபெற்றது. வெற்றி பெறாதவர்கள் கை தட்ட
வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியோடு
பரிசுகளை வாங்கிச் சென்றனர். முன்னின்று
குழலுக்கலை நடத்தித் தந்த பேரா. பெஞ்சமின்
லெபோ. முதல் பரிசு தங்கக் காசு. என்று
அறிவித்துவிட்டு உடனடியாக இல்லை இல்லை அது
தங்கக் காசு இல்லை என்று சொன்னதும் அவை
கப்சிப் ஆனது! ஒரே அமைதி. அவர்
தொடர்ந்தார் : "ஆம் அது தங்கும் காசு
இல்லை. விற்பதற்காகக் கடையில்
வைத்திருந்தவரிடம் அது தங்கவில்லை, அதனை
வாங்கி வந்தவரிட்மும் அது தங்கவில்லை,
பரிசு பெற்றவரிடமும் அது தங்கப் போவது
இல்லை ... அப்படி இருக்கையில் அதனைத்
தங்கும் காசு, தங்கக் காசு என்று எப்படிச்
சொல்வது? எனவே அது எங்கும்
தங்காக்(Thangaak) "தங்கக்" காசு! "
என்றவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது.
விழாவும் இனிதே நிறைவடைந்தது. புதுவை
எழில் , பிரான்சு,நிகழ்வைத் தொகுத்து
வழங்கினார்.
'தூங்கும் புலியைப் பறைகொண்டு
எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
விழா
பற்றி திண்ணை இணைய இதழில்.....
உள்ளே
படங்கள்:-புதுவை எழில் , பிரான்சு.
albertgi@gmail.com