கனடா: எமக்கென்றோர் சினிமா!
      
         -அருண் -
      
        அமர்வு நடைபெறும் காலம், இடம்:
      
        காலம்: 01-யூலை-2006 பகல் 10 மணி முதல் 
        மதியம் 12 வரை
இடம் :
        80 Nashdane Road 
      இடம் :
        இப்போது இங்கு திரையிடப்படும் ஈழத்துத்தமிழ்ப்படங்கள் 
        கலியாணவீடு, பிறந்தநாளுக்கு அழைப்பில் வருவதுபோல் அழைப்பால் வரவழைக்கப்பட்ட 
        கூட்டத்தை பெருமளவில் கொண்டதாகவே இருக்கிறது. அது மாறவேண்டும். வருந்தி 
        அழைக்காமல் தானாய் தேடிக்கூடும் இரசிகர்களைக் கொண்டதாக மாறவேண்டும். அதற்கு 
        எமது படைப்புகள் தரமாய் இருக்கவேண்டும். எமது தமிழர்களிடம் போய்ச்சேர 
        வழிசெய்யவேண்டும். இதற்கு எமது சினிமா முயற்சிகளையும் சினிமா 
        ஆர்வலர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர, மக்களை சென்றடைய எமக்கானதொரு 
        சினிமா சஞசிகை  தேவை! இதை இங்கு வெளிவரும் “சினித்திரன்” சஞ்சிகை செய்து 
        வருகின்றதெனினும், இது மக்கள் எல்லோருக்கும் போய்ச் சேரக்கூடியதாய் 
        அதிகதொகையில் அச்சாவதாய் தெரியவில்லை. எனினும் இது அச்சாகுந்தொகை 
        அதிகரிக்க  சினிமா தயாரிப்பாளர்கள், ஆர்வலர்கள் அனுசரனை வழங்கவேண்டும். 
        அடுத்து கனேடிய தமிழ்த்திரைப்பட வளர்ச்சியின்  அத்திவாரமாகவும், கனேடிய 
        ஈழத்தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைக்கவும், வழிகாட்டவும் ஆதரவளிக்கவும், 
        ஒத்துழைப்பு பெறவும், தயாரிப்பை சிக்கனமாக்கவும், ஒன்றுபட்ட உதவியுடன் 
        படைப்பை தரமானதாக்கவும், இவை எல்லாவற்றுக்கும் ஒரு நலன்செய் சினிமா 
        அமைப்பொன்று தேவை! 
      
      
        இப்படி ஒரு அமைப்பை உருவாக்க பலரும் பலவருடங்களாக 
        மனத்தளவில் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். சிலரோ எல்லோரையும் சேர்க்கவேண்டும் 
        என்ற பரந்த மனப்பான்மை இல்லாது தானும் தான் அபிமானிகள் எனச் சிலரையும் 
        சேர்ந்து ஏதோ ஒப்புக்குக் கூடி பரவசப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 
        இதேபாதையில் தனித்தனிக் குழுவாக கூடிப் பரவசப்பட ஆயத்தம் செய்கிறார்கள். 
        இத்தகைய தனிக்குழு ஒன்று கூடல்களைவிட்டு எல்லா கனேடிய தமிழ்சினிமா 
        ஆர்வலர்களையும் ஓரணியில் சேர்த்துக்கொள்வது எப்போது? பூனைக்கு மணி கட்டுவது 
        யார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி! இது யாராக இருந்தாலும் இந்த முயற்சியை 
        செய்வதில் இன்னும் தாமதிக்கக்கூடாது. ஏனெனில் கனடாவில் ஈழத்துத் 
        தமிழர்களின் சினிமா முயற்சி இப்போது கூர்மையான முனைப்பாக கனிந்திருக்கிறது. 
        அதற்காக அவசரப்படவும் கூடாது. ஏனெனில் அது வெண்ணெய் திரள்கையில் தாழியை 
        உடைத்த கதையாக முடிந்துவிடவுங்கூடும். நிதானமே பிரதானம். சங்கம் ஆரம்பிக்க 
        பிரயத்தனப்படுவோருக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து ஆர்வலர் எல்லோரையும் 
        அரவணைப்பதாயும ஆதரிப்பதாயும் இருக்கக்கூடியதாக சினிமா சங்கத்தை நிறுவ 
        முனையுங்கள்.
      
        அண்மையில் இத்தகையதோர் திரைப்படச்சங்கம் அமைக்கும் நோக்கோடு 
        கூட்டப்பட்ட ஆவர்வலர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டு 
        அங்கு சென்றிருந்தேன். கனேடிய தமிழ் சினிமா ஆர்வலர் பலர் வந்திருந்தனர். 
        பலர் சமூகமளித்திருக்கவில்லை. எல்லோருக்குமே வாய்மொழியாகவே தொலைபேசியில் 
        அழைப்பு விடுத்திந்தார்கள். ஈழத்து பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான 
        ரகுநாதன் அவர்கள் பிரதம அபிமானியாக கலந்து கொண்டிருந்தார். கனேடாவில் தமிழ் 
        திரைப்பட முன்னோடிகள், ஆர்வலர்கள் என இருக்கும் 99%மானவர்களுக்கு அழைப்பு 
        விடுக்கப் பட்டதாக அமைப்பாளர்கள் சொல்லிக் கொண்டார்கள். இருந்தும் கூட்டம் 
        முடிந்தபின் பலருடன் கதைத்தபோதும், பின் பலரை தொலைபேசியில் அழைத்துக் 
        கேட்டபோதும் பலர் தவற விடப்பட்டார்கள் என்பது தெரியவந்தது. இந்தக் கூட்டம் 
        குறுகிய கால அவகாசத்தில் நடத்தப்பட்டதால் பலர் கலந்துகொள்ள வாய்ப்பாய் 
        அமையவில்லை என்பதுடன் பலரும் அழைப்பில் தவற விடப்பட்டிருப்பதும் நேர்ந்து 
        விட்டது. பொதுவாக இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் கூடுகையில் மக்கள் தொடர்பு 
        ஊடகங்கள்மூலம் திறந்த அறிவிப்பை அதுவும் நன்கு கால அவகாசத்துடன் கூடியதாக 
        அறிவிப்பதே சாலச்சிறந்தது. அக்கூட்டத்தில் இதனைக் கேட்டபோது அதன் 
        அமைப்பாளர் ஆட்களின் தொகை கூடினால் குழப்பமும் கூடும் எனப் பதிலளித்தது 
        சரியான நோக்கம் கொண்டதை உறுதிசெய்யவில்லை. இத்தகைய அமைப்பின் முக்கிய 
        நோக்கம் ஆங்காங்கே சிதறிப்போயிருக்கும் ஆர்வலர் அனைவரையும் இணைப்பதே. 
        எவருக்கும் பாதகமில்லாது எல்லோருக்குமே நல்லதுசெய்ய எண்ணும்போது குழப்ப 
        எவர் வருவார்கள்? ஆதலால் அந்த அமர்வின் முடிவில் இன்னொரு அமர்வுக்கு 
        முடிந்தளவு அதிகஆர்வலர்களை அழைத்துவர ஐவர் முன்வந்தார்கள். அது 
        ஆரோக்கியமானதே. அந்த ஆர்வலர்கூடலின் வேளை, இடம் என்பன சகல பத்திரிகையிலும் 
        அறிவிக்கப்படவுள்ளது.
      
        இப்படி உருவாக்கப்படும் திரைப்படச் சங்கம் என்ன 
        செய்யப்போகிறது என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்கு பதில் அளிப்பதும் 
        ஆர்வலர் வரவை அதிகரிக்கும் என எண்ணுகின்றேன். இவமைப்பு என்ன செய்யும் என்ன 
        செய்வதை தவிர்க்கும் என்பது யாவருமே அறிய வேண்டியதுதான். பொதுவாகச் 
        சொல்லப்போனால் இது திரைப்பட ஆர்வலர்களுக்கு அனுசரனையாக இருக்குமேயல்லாமல் 
        அவர்களைக் கட்டுப்படுத்தாது. வழிகாட்டியாக இருக்குமேயல்லாமல் குந்தகம் 
        செய்யாது. படைப்பு வெளிவர முடிந்தளவு உதவுமேயல்லாது ஆர்வலர்களின் 
        வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் தலையிடாது.
      
        பொதுவாக இங்கு ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகையில் பல 
        சிக்கல்கள் இடையூறுகள் ஏற்படுவதுண்டு. இவற்றை தீர்க்க அல்லது தவிர்க்க 
        அல்லது ஒத்தாசை செய்ய எம்மிடையே அமைப்புகளில்லை. உதாரணமாக இங்கு திரைப் 
        படம் எடுக்கின்றபோது காட்சி அமைப்புக்கு ஏற்ற இடத்தில் படமாக்க அரச அனுமதி 
        பெறவேண்டியிருக்கும். இதைப் பெற்றுக்கொள்ள தனியாளாய் சென்று பெறுவதிலும் 
        இத்தகைய அமைப்பினூடாக சென்றால் அனுமதிபெறுவது இலகு. திரைப்படம் எடுக்க 
        வருபவர்கள் சரியான நடிகர்களையோ, தொழில்நுட்பவாளர்களையோ இவ்வமைப்பினூடகாகப் 
        பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எவரையும் சிபாரிசு செய்யாது. கடனுதவி, மானியம் 
        பெறுவதற்கான வழிகளைச் சொல்லுமேயல்லாமல் பெற்றுத்தராது. 
        ஆர்வலர்களுக்கிடையேயான பிணக்குகளை தீர்த்துக்கொள்ள சமரசம் செய்யும் ஆனால் 
        சட்ட நடவடிக்கை எடுக்காது. ஆர்வலர்களுக்கிடையேயான ஒப்பந்தங்களுக்கு 
        சாட்சியாக இருக்கும் ஆனால் தீர்ப்புச் சொல்லாது. குறைந்த செலவில் 
        விளம்பரங்கள் செய்ய வழி சொல்லும். ஆனால் எவரையும் சிபாரிசுசெய்யாது. ஊடக 
        அமைப்புகளுடன் தொடர்புகொள்ள முடிந்த உதவிகள் செய்யும். ஆனால் எவரையும் 
        சிபாரிசு செய்யாது. திரைப்பட மாளிகைக்கான காட்சி ஒழுங்குகளுக்கு 
        உதவிசெய்தாலும் படமாளிகை உரிமையாளரை எவ்வகையிலும்  நிர்ப்பந்திக்காது. 
        இப்படிப்பல... இவற்றுள் பல அன்றைய அமர்வில் ஆர்வலர்களால் 
        முன்வைக்கப்பட்டது. இன்னும் நல்ல செயற்பாடுகளை, முன்னெடுப்புகளை மேற்கொள்ள 
        ஆர்வலர் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றன. அதற்கு நீங்கள் அடுத்த 
        அமர்வில் சமூகமளிக்கவேண்டும். 
      
      
        திரைப்பட முயற்சிகளில் பங்குகொண்ட, பங்குகொள்ளும், 
        பங்குபெறவுள்ள ஈழத்தமிழ் ஆர்வலர் எல்லோரும் அடுத்த அமர்வுக்கு 
        வரழைக்கப்படுகின்றார்கள்.
      
          அமர்வு நடைபெறும் காலம், இடம்:
        
          காலம்: 01-யூலை-2006 பகல் 10 மணி முதல் மதியம் 12 
          வரை
இடம் :
          80 Nashdane Road 
 இடம் :
        தொடர்புகளுக்கு: 
      
      
        திவ்ஜராஜன்- (416) 832-5230
இந்திரசித்து- (416) 939-7058
      இந்திரசித்து- (416) 939-7058
        arun_s@journalist.com 
    


 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

